The Argumentative Indian – ஒரு அலசல்

1

அமர்த்தியா சென் நடப்புச் செய்திகளில் அதிகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. நோபல் பரிசு வென்ற இந்தியர் என்ற முறையில் நம்மவர்கள் அவருக்குச் செய்த மரியாதை அது. அப்படியான காலத்தில் அவரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப்போட்டுவிட்டு அதன் பின்பு பல ஆண்டுகள் அட்டையைக்கூடத் திறந்து பார்க்கவில்லை. 2010-இல் படித்தது. இப்போது மீண்டும் எடுத்துப் படித்தால் அப்போதைவிடப் பலமடங்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் போலத் தெரிகிறது. பொருளியல் மேதை என்றால் ஏதோ உற்பத்தி, பயன்பாடு, வளம் என்று மட்டுமே பேசத் தெரிந்தவராக இருப்பார் என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அப்போதைய அறிவு இருந்தது. “என்னைப் போல் உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் இந்தியர்கள்” என்று நக்கலடித்திருப்பார் என்றுதான் நூலை வாங்கும்போது எண்ணினேன். நாம் நினைப்பது போலவே நினைப்பவராக இருந்தால் அவர் எப்படி நோபல் பரிசு பெற்றிருக்க முடியும்! நூல் முழுக்க இந்தியர்களின் உரையாடல் மரபு பற்றிப் பேசுகிறார். அதாவது, இந்தியர்களின் மக்களாட்சி மீதான மரியாதை பற்றியும் மூடிய மனதோடும் சொந்தக் கருத்துகளில் பிடிவாதத்தோடும் இராமல் எதையும் வெளிப்படையாக உரையாடுகிற பண்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்தியர்களின் மதச்சார்பின்மை பற்றிய நீளமான – ஆழமான அலசல். சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் என்று பலர் பயந்து தவிர்ப்பவற்றை அச்சமின்றியும் வெளிப்படையாகவும் கையாண்டிருக்கிறார். இந்த மரபு இந்தியா முழுமைக்குமானதா என்றும் தெரியவில்லை. அது வங்காளத்துக்கானதாக இருந்திருக்கலாம். பெரும்பான்மை இந்தியாவினுடையதாகக் கூட இருந்திருக்கலாம். இப்போதைய இந்தியாவைப் பார்க்கும்போது, உரையாடலுக்கு இடமளிக்காத ஒரு மரபும் இந்தியாவுக்குள் இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நூல் முழுக்க இந்திய வரலாற்றைப் பற்றிய பல சுவாரசியமான பார்வைகளைக் கொண்டு வந்து வைக்கிறார். இந்து மதத்தைப் பற்றிய பாரபட்சமற்ற ஆய்வு செய்திருக்கிறார். நம் இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி அவர் பேசிய விதத்திலிருந்தே இந்து மதத்தின் மீது அவருக்கிருக்கும் மரியாதையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையில் இந்து மதத்துக்கு அவருடைய தாத்தாவின் பங்களிப்புகள் பற்றியும் பேசுகிறார். ஒரு வடமொழிப் புலவரின் பேரன் என்ற முறையில் அதுவே அவருக்கு இந்து மதம் பற்றி விமர்சிக்கும் அருகதையைக் கூடுதலாகக் கொடுத்துவிடுகிறது. “என்னைக் கோவிலுக்குள் விடவில்லை”, “கருவறைக்குள் விடவில்லை”, “நான் தீண்டப்படாதவனாக நடத்தப்பட்டேன்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிற பாதிக்கப்பட்ட ஒருவரின் சொற்களை வெற்றுப் புலம்பலாகக் கடந்துவிடக் கூடியவர்கள்கூட இதை நின்று கவனிப்பார்கள். அவர்களுக்காகவும் உள்ளிருந்தே கலகம் செய்யும் ஒரு சிலர் வந்துக்கொண்டே இருக்க வேண்டுமே! அதில் ஒருவர்தான் டாக்டர் சென்.

அவருடைய தாத்தா பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் மூலம் அவரும் ஒரு மேற்தட்டுப் பின்னணியிலிருந்து வந்து வென்றவரே – அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவரில்லை என்பது தெரிகிறது. கொட்டாம்பட்டியிலிருந்து நேரடியாக நோபல் மேடையில் போய் உட்காருவது அவ்வளவு எளிதில்லை, தந்தையோ தாத்தாவோ பெருநகரத்துக்குக் குடியேறிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அடுத்த தலைமுறையில்தான் பெரிய உயரங்களை எட்ட முடியும் என்று சொல்கிற கதையாகத்தான் அமர்த்தியா சென்னின் கதையும் இருக்கிறது.

பகவத்கீதை பற்றிய உரையாடல் நேர்மையானதாக இருக்கிறது. எது சரி-தவறு என்பதற்கும் எது கடமை என்பதற்கும் இடையிலான போராட்டம் பற்றிய உரையாடல் தெளிவாக இருக்கிறது. அதே வேளையில் இந்து மதத்தை அவர் எங்குமே சிறுமைப்படுத்திப் பேசவில்லை. தன்னுடைய தாத்தா இந்து மதத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தும் இவர் எப்படி நாத்திகரானார் என்பது பற்றியும் தாத்தா எப்படி இவரை இவர் போக்கிலேயே சுதந்திரமாகச் சிந்திக்க விட்டார் என்பது பற்றியும் அவர் விளக்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய நாத்திகர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போலச் சொல்வதுதான் இது – “என் வீட்டுப் பெரியவர்கள் எனக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்கினார்கள்.”

மதவாத அரசியல் ஏன் நமக்குக் கேடு விளைவிக்கும் என்பதை உறுதியாக எடுத்துச் சொல்கிறார். இதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மதவாதம் பற்றிச் சொன்னது. இப்போதைய மதவாதம் பற்றிய அவரின் பார்வை அதைவிடப் பலமடங்கு கூர்மையான விமர்சனங்கள் கொண்டது என்பது அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அப்போதைய மதவாதிகளின் ஆட்சியில் அவர்கள் வரலாற்றை மாற்றி எழுத முயன்ற ஒவ்வொரு திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கோட்சே காந்தியைக் கொன்ற வரலாற்றையே அகற்றுகின்ற அளவுக்கு அவர்கள் எப்படித் தரம் தாழ்ந்து போனார்கள் என்கிற நம்மால் நம்பவே முடியாத பின்னணிக் கதைகளைப் பேசியிருக்கிறார். இந்திய வரலாற்றில் அவர்கள் செய்ய முயன்ற மற்ற பல தில்லுமுல்லுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்த நூலைப் படிப்பதற்கு முன்பே, “அமர்த்தியா சென்னெல்லாம் ஒன்றுமில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளைப் போலவே இன்னுமொரு போலி மதச்சார்பின்மைப் பேர்வழி. அவ்வளவுதான்” என்று வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பேற்பட்ட பெரிய மனிதரைப் போய் ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று அப்போது அது முழுமையாகப் புரியவில்லை. இந்த நூலைப் படித்த பின்பு அதற்கான விடை கிடைத்தது. அதன் பிறகு வாயைத் திறந்தாலே காங்கிரஸ் கைக்கூலி, கிறிஸ்தவக் கைக்கூலி, பாகிஸ்தான் கைக்கூலி என்ற பட்டங்கள் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் வயதான காலத்தில் பெரியவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது என்று வேண்டிக்கொள்கிற மாதிரி ஆகிவிட்டது.

ஒவ்வொரு நூலிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்று ஓரிரு சொற்கள் இருக்கும். அந்தச் சொற்களைத் தெரிந்து கொண்டால் அந்த நூல் எதைப்பற்றி அதிகம் பேசுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் வரும் அப்படியொரு சொல் ‘heterodoxy’ (மரபு மறுப்பு). அதாவது, ஆச்சாரம் மற்றும் வைதீகங்களுக்கு எதிரான கொள்கை. ஒரு சமூகத்தின் இந்தப் பண்புதான் அவர்களை எல்லைகளைத் தாண்டிச் செல்ல வைப்பது என்கிறார். இந்தியர்களுக்கே உரிய நம்பிக்கைகள் மற்றும் பொதுப்பண்புகளால்  தான் எந்தவிதமான சாய்வுக்கும் ஆளாக விரும்பவில்லை என்று வாதிடுகிறார். உண்மையான அறிஞன் என்பவன் தன் பெற்றோரும் பெரியவர்களும் சொல்வதைக் கேட்டு அதன் மேல் தன் நம்பிக்கைகளைக் கட்டுபவனா அல்லது மொத்த அறிவுத் தேடலையும் பூஜ்யத்திலிருந்து தொடங்கி தன் நம்பிக்கைகளைக் கட்டியமைப்பவனா? நீங்கள் இரண்டாம் வகையினரே உண்மையான அறிஞர்கள் என்று நம்புபவராக இருந்தால் உங்களுக்கு சென் ஓர் உண்மையான அறிஞராகத் தெரிவார்.

தற்கால நாகரிகங்களுக்கும் பெண்ணிய இயக்கங்களுக்கும் முன்பாகவே – வரலாற்றின் ஆதியிலேயே தம் பெண்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கிற பழக்கம் கொண்டிருந்த இந்தியச் சமூகம் எப்படி மேற்கத்திய சமூகங்களைவிட மேலானது என்பது பற்றியும் பெருமையோடு பேசுகிறார். ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களும் எப்படி நம் உரையாடல் மரபுக்குப் பங்களித்திருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசியிருக்கிறார். வலதுசாரி அரசியல்வாதிகளை அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முழுக்க முழுக்க நியாயமானவை போலத்தான் தெரிகிறது.

“இதே தைரியத்தை அவர் மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது காட்ட முடியுமா?” என்ற பழைய கேள்வி ஒன்று உள்ளது. அதற்கான பதிலும் ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டுவிட்டது. ஒன்று, எனக்கு எது பெரிய அச்சுறுத்தல் என்று படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பேசுவேன் என்பது. இன்னொன்று, எது என்னுடையது என்று என்னிடம் சொல்லப்பட்டதோ அதைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்பது. சென் வைக்கும் வாதங்களும் அப்படியான நம்பிக்கைகளின் அடிப்படையில் வைக்கப்படுபவை போலத்தான் தெரிகிறது.

இன்று இந்துவாக இருக்கும் எல்லோருமே அடிப்படையில் இந்துவாக இருந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றொரு வாதத்தை நீண்ட காலமாகவே நம்மூரில் திராவிட இயக்கத்தினர் வைத்து வருகிறார்கள். அவருக்கே உரிய பாணியில் அவரும் இதுபற்றிப் பேசுகிறார். இதில் ஒரு சாராரே இந்து மதத்தை ஆதி முதல் பின்பற்றியவர்கள் என்றும் மற்ற எல்லோருமே வேறு எதை எதையோ அவர்களுக்குரிய பாணியில் வணங்கினார்கள் என்றும் வாதிடுகிறார். இந்து மதம் என்ற ஒற்றைப் பதாகையின் கீழ் ஏன் யாரோ ஒருவர் 80% இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கவே முடியாது என்று சொல்கிறார். இந்து என்று அழைக்கப்படுகிற பலருக்கு அதன் பொருள் என்ன என்றுகூடத் தெரிவதில்லை. அதற்கு என்ன காரணம்? அது அவர்களின் அறியாமையா அல்லது ஆதியில் இருந்து அது அவர்களின் நம்பிக்கையாக இருக்கவில்லை என்பதனால் வரும் அலட்சியமா? நம்மில் சிலர் ஆச்சாரமாக இருக்கிறோம். அதை நம்மோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோருமே நம்மைப் போலவே சடங்குகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் போதுதான் ஏமாற்றம் வருகிறது. எல்லோருமே இந்து என்பதன் பொருள், எல்லோருடைய சடங்குகளும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்பதில்லையே!

அப்படியே அந்தப் பக்கம் சென்று, முகலாயர்களின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் பற்றியும் நேர்மையாக உரையாடுகிறார். ஔரங்கசீப்தான் முகலாய மன்னர்களிலேயே கொடுங்கோலன் என்கிறார். அதே வேளையில் அக்பரைத் தவிர வேறு எவரையுமே அந்த வரிசையில் சகிப்புத்தன்மை கொண்ட நல்லரசனாகப் பேசவும் இல்லை.

காந்தி மற்றும் தாகூர் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் தாகூர் ஒரு பெரும்புள்ளி என்று நமக்குத் தெரியும். ஆனால் காந்தியோடு ஒப்பிடும் அளவுக்கு அவர் பெரிய ஆளா என்று தெரியவில்லை. தாகூரையும் பாரதியாரையும் ஒப்பிட்டுப் பழக்கப்பட்ட பின்னணியில் வளர்ந்த நமக்கு அவரை ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே தெரியும். கர்நாடக சட்டமன்றக் கட்டடமான விதான் சவுதா உட்கட்டடத்தின் முகப்பில் இரண்டு புகைப்படங்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்று காந்தி; இன்னொன்று தாகூர். இந்த நூலைப் படித்துவிட்டு, அந்தக் காட்சியைக் கண்டபோது, ஒருவேளை தாகூரும் உண்மையிலேயே அந்த அளவு பெரியவர்தானோ என்று தோன்றியது. தென்னிந்தியாவில் பிறந்ததால் பாரதியை இந்திய வரலாறு மதிக்கவில்லை என்று சொல்வது போலவே, அவர் ஒரு கவிஞராக இருந்ததால் தாகூரை ஒரு ‘தலைவராக’ இந்திய வரலாறு ஏற்றுக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. அதுபோலவே, மற்றவர்களை விட நாம் பாரதியாரை அதிகம் பேசுவது போல, ஒரு வங்காளி என்ற முறையில் டாக்டர் சென் தாகூர் பற்றி அதிகம் பேசுகிறாரோ என்றும்கூடத் தோன்றியது.

சிலைகள், மதம், தேசியம், தேசப்பற்று போன்ற விஷயங்களில் காந்திக்கும் தாகூருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிய உரையாடல் மிகவும் பிடித்தது. போகிற போக்கில், குஜராத் எப்போதுமே ஒரு மதவுணர்வுள்ள (மதவெறி என்றில்லை) பகுதியாகவும் வங்கம் எப்போதுமே பரந்த நோக்குடனும் இடதுசாரிச் சிந்தனையுடனும் இருந்திருக்கிறதோ என்றொரு சிந்தனை வருகிறது. எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், அவர்களுடைய கொள்கை நிலைப்பாட்டில் மண்ணின் உள்ளார்ந்த ஈடுபாடு எதுவோ அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்கிறது! அதனால்தானோ என்னவோ குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கூட வலதுசாரிகளாகவும் வங்கத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் கூட இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது!

எங்கெல்லாம் காந்தியும் தாகூரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள் என்கிற விரிவான ஆய்வு நன்றாக இருக்கிறது. அதுவே சில நேரங்களில் தேவைக்கும் மேலான அலசல் போலவும் தெரிகிறது. ஒரு தேசத்தின் விடுதலை என்கிற மாபெரும் குறிக்கோளோடு போய்க்கொண்டிருக்கையில், ஒரே நற்காரியத்துக்காக உழைக்கும் இரு தனி மனிதர்களின் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை இவ்வளவு எண்ணெய் போட்டு விளக்க வேண்டியதில்லையோ என்றும் தோன்றுகிறது.

பிரித்தானியப் பத்திரிகையாளர்கள் காந்தியிடம் “மேற்கத்திய நாகரிகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘என்னது?! மேற்கத்தியர்களிடம் நாகரிகமா?!’ என்கிற தொனியில் “அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் போலத் தெரிகிறதே!” என்று அவர் நக்கலாகச் சொன்ன பதிலை தாகூர் ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியைப் போலல்லாமல் தாகூர் மேற்கத்திய நாகரிகம் பற்றிப் பாரபட்சமற்ற பார்வை கொண்டிருந்தார் என்பது ஆசிரியரின் கருத்து. இதையெல்லாம் இந்தத் தாகூர் ஏன் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாரோ! காந்தி அப்படிச் சொன்னதன் காரணமே, ‘எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் சிறிது உங்கள் கோளாறுகள் பற்றியும் சுய விசாரணை செய்து பாருங்கள்’ என்று நினைவூட்டுவதே.

அதுவும் சர்வதேசக் கவனம் கிடைத்திருக்கும் வேளையில் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உத்தியாகக்கூட வைத்துக்கொள்ளலாம். அப்போது அப்படிச் சொன்னதன் மூலம் அவருடைய நோக்கம் ஓரளவு வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும். அன்று அவர் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால், இன்று வரை அவர்களும் நாமும் இந்த அளவு அதுபற்றிப் பேசியிருக்க மாட்டோமே! இதே காந்திதான், “இரண்டாம் உலகப்போரில் நமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க உதவுவது யாராக இருந்தாலும் அவர்களே நம் நண்பர்கள், நம் ஒற்றைக் குறிக்கோளான தேச விடுதலைக்காக ஹிட்லரோடு கூடக் கூட்டணி வைக்கலாம், ஆனால் ஆங்கிலேயர்கள்தாம் நம் எதிரிகள், அவர்களுக்காகப் போய் போரில் நம் இளைஞர்களைக் காவு கொடுக்க முடியுமா?” என்று கேட்ட சுபாஷ் சந்திர போஸிடம் சர்வாதிகாரமா மக்களாட்சியா என்ற வாதத்தை வைத்து இங்கிலாந்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

காந்தியின் தேசியம் மற்றும் தாகூரின் மனிதம் பற்றிய கருத்து மோதல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அதில் நமக்குத் தாகூரின் வாதமே வலுவாக இருப்பது போலப் படுகிறது. அதே வேளையில், “போர் எப்படி அமைதிக்கு வழியோ அது போலவே தேசியம்தான் மனிதத்துக்கு வழி!” என்று சொன்ன காந்தியின் கருத்தும் புதுமையாகத்தான் இருக்கிறது. இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கண்டிப்பாகத் தாகூரின் சொற்கள்தாம் பொருத்தமாக இருக்கும்.

வங்கதேசத்திலும் தாகூரின் பாடல்தான் தேசியகீதமாக இருக்கிறது என்பதும் தாகூர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதற்கான இன்னொரு சான்றுதான். பிரிவினைப் பேச்சு எழுந்த ஆரம்ப காலத்திலேயே வங்கத்தைப் பிரிக்கும் கருத்தைத் தீவிரமாக எதிர்த்த தாகூருக்கு இதைவிடப் பெரிதாக என்ன மரியாதை செய்துவிட முடியும்!

சென்னும் கூட இன்றைய வங்கதேசத்தில் இருக்கும் பல பகுதிகளில் தன் இளமைக்காலத்தைச் செலவிட்டிருக்கிறார். மேற்குப் பகுதியில் பஞ்சாபிலும் குஜராத்திலும் வாழும் எவ்வளவோ பேருக்கு பாகிஸ்தானில் பல தொடர்புகள் இருப்பது போல, கிழக்கே மேற்கு வங்கத்தில் வாழும் நிறையப் பேருக்கு வங்கதேசத் தொடர்புகள் இருக்கும் போலத் தெரிகிறது. நமக்கு ஈழத்தில் இருப்பது போல. இதைப் படிக்கும் போது ‘லஜ்ஜா’ நாவலில் தஸ்லிமா நஸ்ரின் வெளிப்படுத்தி உள்ள பல உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தாகூருக்குப் பிறகு வங்கத்தில் பிறந்த இரு பெரும் அறிஞர்களான சத்யஜித் ரே, அமர்த்தியா சென் ஆகிய இருவருமே சாந்திநிகேதனில் தாகூர் நிறுவிய பள்ளியில் படித்தார்கள் என்பது வியப்பான தகவல். இந்திரா காந்தியும் சாந்திநிகேதனில் படித்தாராம். ரே பற்றியும் இந்த நூலில் நீளமாகப் பேசியிருக்கிறார். திரைப்படம்தான் நம் காலத்தின் தலைசிறந்த கலை வடிவம் என்றாகிவிட்ட போது, அதில் வென்றவர்கள் பற்றியும் பேசுவதுதானே நல்லது! இதுவரை இந்த நாட்டில் தோன்றிய திரைப்பட இயக்குனர்களிலேயே ரேதான் தலைசிறந்த இயக்குனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்தான் ஆஸ்கார் விருது வாங்கிய முதல் இந்தியர்.

அதுவும் ஆயுட்காலச் சாதனைக்காக ஆஸ்கார் விருது பெற்றவர். “தாகூருக்கும் ரே-க்கும் ஓர் ஒற்றுமை இருந்தது; அவர்கள் இருவருமே வேற்றுக் கலாச்சாரங்களைத் திறந்த மனதோடு நோக்கினார்கள்; மேற்குலகின் எந்த நல்லதையும் தத்தெடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த மனப்புழுக்கமும் இருந்ததில்லை” என்கிறார். திறந்த மனமும் பாரபட்சமின்மையும் சிறந்த பண்புகள். அதுவும் கவிஞருக்கும் கலைஞருக்கும் இவை கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்புகள். ஆனால் காந்தி ஒரு தலைவர். அவர் வெள்ளையர்களிடம் செய்தது அரசியல். தம் எதிரிக்கெதிரான கோபத்தை வெளிக்காட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதுதானே தலைவனுக்கு அழகு! போராட்டக்களத்தில் உட்கார்ந்துகொண்டு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்க முடியுமா?

ஒரு விஷயத்தில் நிறையப் பேர் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருக்கும் போது, அவர்கள் எல்லோரையும் மேலோட்டமாகச் சில குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவின் நல்லவை, தீயவற்றைப் பாரபட்சமில்லாமல் ஆய்வது நல்லது. ஒருவரைச் சரியானவர் என்றும் மற்ற எல்லோரையும் தவறென்றும் முடிவு கட்டுவதைவிட இதுவே சிறந்த முறை.

டாக்டர் சென் இந்தியா பற்றிய அனைத்து ஆய்வுகளையும் ஆர்வ முறை, ஆதிக்க முறை, அந்நிய முறை (curatorial, magisterial and exoticist) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். மூன்று பிரிவினரும் என்ன சொன்னார்கள் – எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். மூன்று அணுகுமுறைகளும் அவற்றுக்கென்று குறிப்பிட்ட நோக்கங்களும் சில உள்நோக்கங்களும் கொண்டிருந்தன.

ஆர்வமுறை தான் எல்லாவற்றிலும் பாரபட்சமற்ற – யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு கூடிய உள்நோக்கமில்லாத முறை. நாம் கீழானவர்கள் என்றும் நாம் நம்முடைய நல்லதுக்காகவாவது அவர்களால் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு வந்தவர்கள் ஆதிக்க முறை ஆய்வாளர்கள். அவர்களாலேயே அனுப்பிவைக்கப்பட்டவர்கள் என்றும்கூடச் சொல்லலாம். அந்நிய முறை ஆய்வாளர்கள் என்பவர்கள், இந்தியாவுக்கே உரிய – அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கத்தக்க விஷயங்களை எல்லாம் தேடித்தேடி எழுதியவர்கள். இத்தகைய வகைப்படுத்துதல், நிராகரிக்க வேண்டிய அல்லது வேடிக்கைக்குப் படிக்க வேண்டிய ஆட்களை அடையாளம் காணப் பெரிதும் உதவும்.

இரானிய அறிஞர் அல்பெரூனி திறந்த மனதோடு இந்தியாவுக்கு வருகிறார், வடமொழி கற்கிறார், அனைத்துத் தகவல்களையும் தானே நேரடியாகக் களத்தில் இறங்கிச் சேகரிக்கிறார், தான் புரிந்து கொண்டதை உலகிற்கு உரைக்கும் முன் இந்தியர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். வெளியுலகுக்கு இந்தியாவைப் பற்றி விளக்கிச் சொன்ன வெளியாட்களில் மிகச் சிறப்பான சிலரில் அவரும் ஒருவர். ஆனால், ஆதிக்க முறை ஆய்வாளரான ஜேம்ஸ் மில் என்பவரோ இந்தியாவைப் பற்றி மூட்டை மூட்டையாக எழுதிக் குவிக்கும் முன் இந்தியாவுக்கும் வந்ததில்லை; வடமொழியோ வேறு ஏதேனும் இந்திய மொழியோ கற்றதும் இல்லை. அத்தகைய ஆட்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கணிதம், அறிவியல், வானவியல், தர்க்கவியல் போன்ற இந்தியர்கள் சாதித்த அனைத்தையும் இருட்டடிப்பு செய்தார்கள். இந்தியர்களை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாக மட்டுமே கண்டார்கள். இந்தியாவுக்குள்ளேயும் இப்போதும் இது போன்ற ஆய்வுகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன! நம்முடைய சார்புகளை நியாயப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில மாநிலங்களின் சாதனைகளைப் பற்றியோ தோல்விகளைப் பற்றியோ வண்டி வண்டியாகப் பரப்பிவிடப்படும் பொய்களும் இந்த வகைதானே!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான தொடர்பு காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் முதல் நூற்றாண்டில் இருந்து இருக்கின்றன. சீனா எப்போதுமே அவர்களின் புதுமையான பொருட்களின் மூலம் இந்தியாவை வளப்படுத்தி இருக்கிறது; அதே வேலையை இந்தியா தன் வேத இலக்கியங்கள் மூலமும் சமயக் கருத்துகள் (பெரும்பாலும் புத்த சமயக் கருத்துகள்) மூலமும் செய்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனப்பட்டு இந்தியாவில் பிரபலமாக இருந்தது பற்றிப் பேசுகிறார். எண்பதுகளில் நம் கிராமங்களில் ‘சைனா சில்க்’ என்ற மினுமினுக்கும் துணி அணிந்து திரிந்த இளைஞர்களுக்கும் அவர்களைப் பார்த்தவர்களுக்கும் இது நன்றாகப் புரியும். இரு திசைகளிலும் ஏகப்பட்ட அறிஞர்கள் பயணித்திருக்கிறார்கள்; தங்கள் அறிவைப் பரிமாறி இருக்கிறார்கள். தாய்நாட்டுக்குத் தம் பாடங்களை எடுத்துச் செல்லும் முன் சிலர் வந்த நாட்டில் 10 – 12 ஆண்டுகள் தங்கியே இருந்தும் இருந்திருக்கிறார்கள். இதில் சிலர் தம் இருப்பிடத்தை வந்த நாட்டுக்கே மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படி மிகப்பரிச்சயமாக இருந்த ஒரு பெயர் யுவான் சுவாங் (Xuanzang). பள்ளியில் படித்ததில் யுவான் சுவாங் மீசை நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் என்பது மட்டுமே நினைவிருக்கிறது. யுவான் சுவாங் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதும் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள மக்களிடம் எவ்வளவு நெருக்கமாகவும் அன்போடும் அவர் நடந்து கொண்டார் என்பதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

இந்த மொத்த இந்தோ-சீனக் கதையும் நாம் ஆழமாகப் படிக்க வேண்டிய – மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய வரலாறு. வரலாறு நெடுகிலும் நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து வந்திருக்கிறோம். சீனா எப்போதுமே உலகத்தின் மையமாக இருக்கவே விரும்பியிருக்கிறது என்கிறார். இப்போதுதான் பக்கத்து நாடுகளுக்கும் உலகுக்கும் பிரச்சனையாகத் தொடங்கிவிட்டது. மையமாக இருப்பதற்கும் பிரச்சனையாக இருப்பதற்கும் வேறுபாடு இருப்பதை அவர்களுக்கும் யாரேனும் நினைவுபடுத்த வேண்டுமே! இந்தியாவையும் மேற்கு நாடு என்று சொல்லி சீனா எப்படித் தன்னை உலகின் மையமாகக் காட்டிக் கொள்கிறது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல புத்த மதம் மட்டுமே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றதில்லை, இன்னும் ஏதேதோ சென்றிருக்கின்றன, மொத்த உலகத்துக்குமே இங்கிருந்து நிறையப் போயிருக்கிறது, இந்தியாவைப் பிரபல மதங்களின் பிறப்பிடம் என்று மட்டும் சுருக்கக்கூடாது, இப்போது மறக்கப்பட்டுவிட்ட எத்தனையோ மற்ற கண்டுபிடிப்புகளுக்கும் இது பிறப்பிடமாக இருந்திருக்கிறது என்கிறார்.

தொடக்க காலத்தில் அடுத்த நாட்டில் இருந்து வந்த ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வது நம் மேன்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படுமோ என்கிற பய உணர்வில் சீனா புத்த மதத்தை நுழையவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இது போன்ற தேசியவாதம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதுதானே! மற்ற பண்பாடுகளைப் பற்றி என்னவென்றுகூடப் புரிய முயலாமல் தன்னுடையதே உயர்ந்த பண்பாடு என்று கூச்சல் இடுவது எந்தப் பண்பாட்டிலுமே எளிதில் ஈர்க்கக்கூடிய கருத்துதான். என்னுடைய மொழிதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்கிற எல்லோருமே இருபத்தைந்து மொழிகளில் ஆராய்ச்சி செய்துவிட்டு வந்தா சொல்லிக்கொண்டு இருக்கிறோம்! என்னுடைய நாடுதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்லும் முன் எத்தனை நாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டுச் சொல்கிறோம்! பின்னர் அதையும் மீறித்தான் புத்த மதம் உள்ளே நுழைந்து ஆழமாக வேரூன்றுகிறது.

சீனா எப்போதுமே ஒரு சிறந்த உற்பத்திக் களமாக இருந்திருக்கிறது. இந்தியா எப்போதுமே அவர்களுக்கு ஒரு நல்ல சந்தையாகவும் மத்திய மற்றும் மேற்காசியப் பகுதிகளில் விற்பனை செய்து கொடுக்கும் முகவராகவும் இருந்திருக்கிறது. மக்களாட்சியற்ற ஓர் அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம் நம்மைவிடப் பலமடங்கு பலன்களை அவர்கள் சாதித்துவிட்டார்கள்; நாமோ எல்லாத் தடங்கல்களையும் மீறி மக்களாட்சி நடைபெறும் நாடாக இருப்பதே ஒரு முதிர்ச்சியின் அடையாளம் என்று காட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்போதும் அதுவே நமக்குச் சீனாவைக் கீழாகப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.

உங்கள் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றால், நீங்கள் எவ்வளவு வளர்ந்து என்ன பயன்? மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் பஞ்சம் அடிக்கடி வருவதில்லை என்றோர் ஆய்வறிக்கை வாசிக்கிறார். அப்படியானால் மக்களாட்சி உண்மையிலேயே மேலானதுதானோ என்றொரு மகிழ்ச்சி வருகிறது நமக்கு. எல்லோரையும் அனுசரித்துப் போவது, அதுவும் பிரச்சனைக்குரியவர்களையும் சேர்த்து அனுசரித்துப் போவது என்பது லேசுப்பட்ட வேலையா? இது எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கவலை எல்லாம்.

பஞ்சத்தைக் கட்டுப்படுத்துதலுக்கும் பசியை ஒழிப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பஞ்ச விஷயத்தில் சீனா பெரிதளவில் வெற்றிபெற முடியவில்லை என்ற போதிலும் பசி விஷயத்தில் இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தியா அதற்குத் தலைகீழ். நாட்டின் பெரும்பகுதி மக்களுக்குப் பசியை இன்னும் ஒரு பெரும் பிரச்சனையாகவே வைத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அளவிலாத உணவுப் பொருட்கள் யாருக்கும் பயனில்லாமல் கெட்டு வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் உலகமகா ஏழை நாடுகளை விடவும் இந்தியா மோசமாகச் செயல்படுகிறது என்கிறார். கேவலம்! கேவலம்!!

ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அவருடைய பார்வை பேசப்பட வேண்டியது. அது ஒரு தனிப்பிரச்சனை அல்ல; பல்வேறு மற்ற ஏற்றத்தாழ்வுகளோடு தொடர்புடைய பிரச்சனை; கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே அது இருக்கிறது; மேற்தட்டு மக்களிடம் அது இல்லை என்கிறார். இது ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு வர்க்கப் பிரச்சனையோடு தொடர்புடையது என்கிற இடதுசாரிகளின் பார்வையோடு ஒத்துப் போகிறது. பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் பெண் பிரதமர்களைக் கொண்டிருந்திருக்கிறோம். இன்னமும் அது நன்கு வளர்ந்த பல மேற்கு நாடுகளில் சாத்தியமாகவில்லை.

ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு என்பது நம் மேற்தட்டில் ஒரு பிரச்சனையே இல்லை என்பதற்கு அதுவே போதும் என்கிறார். பிரதமரான எல்லாப் பெண்களும் மேற்தட்டில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமில்லை; அவர்கள் அனைவருமே அவரவர் நாட்டில் இருந்த வானளாவிய அதிகாரங்கள் பெற்றிருந்த அரசியற் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இதைச் சொன்னாரா என்று தெரியவில்லை. இங்கே எந்த மேற்தட்டுப் பெண்ணும் அடிமட்ட அரசியற் பொறுப்பில் இருந்து உயர்ந்து அவ்வுயர் பதவிகளை அடைந்ததில்லை. அவர்கள் எல்லோருமே பின்வாசல் வழியாக வந்தவர்கள் (மாநில அரசியலில் இப்போது சில விதிவிலக்குகள் உள்ளன என்ற போதும்). எனவே கதையை அவ்வளவு எளிதாக முடித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

அணுகுண்டு விவகாரத்தில் ஆழமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார். வளர்ந்த நாடுகள், அவர்கள் மட்டும் அணு ஆயுதங்களைக் குவித்துவைத்துக் கொண்டு நம்மைப் போன்றவர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் இருக்கும் நியாயம் என்ன என்பது பற்றி விளக்குகிறார். மிக எளிய காரணம், அவர்களிடம் இருக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகள் நம்மிடம் இருப்பதை விடப் பன்மடங்கு உயர்ந்தவை. அவ்வளவுதான். இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லும் போதுதான், “ஏ, மேற்குலகின் கைக்கூலியே!” என்று நம்மவர்கள் முத்திரை குத்தத் தொடங்கி விடுவது. ஐந்து முன்னணி ஆயுத வியாபாரிகள் மட்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கம் வகிக்கும்வரை அணு ஆயுத ஒழிப்பு என்பது ஏன் சாத்தியமில்லை என்பது பற்றியும் சொல்கிறார். இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு தயாரித்த செய்தியை வெளியில் சொன்ன அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானால் நாங்களும் தயாரித்துவிட்டோம் என்று சொல்ல முடிகிறது என்றால், அதைப்பற்றி இங்கு மட்டும் ஏன் அத்தனை ஆண்டுகளாக ஏதோ பெரிய கம்ப சூத்திரம் போலப் பேசிக் குதித்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் பற்றியும் சிறிது பேசியிருக்கிறார். “அவ்வளவு மென்மையான ஒரு மனிதர்கூட எப்படி அணுகுண்டின் பிரம்மாண்ட சக்தியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்!” என்கிறார். அந்த ஈர்ப்பு தேசியவாதத்தோடு கலந்து விற்கப்படுகையில் இன்னும் அதிகமாகிறது.

நம்பிக்கையா, பகுத்தறிவா என்பது பற்றிய உரையாடலும் நன்றாக உள்ளது. இன்றைக்கு நம் நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கும் திருமறைகளைப் படைத்த தீர்க்கதரிசிகளும் நம்மைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட – நடைமுறையில் இருக்கிற நம்பிக்கைகளை மட்டும் கடைப்பிடித்திருந்தால் இத்தகைய தலைசிறந்த புனித நூல்களை வருங்கால சந்ததிகளுக்குப் படைத்திருக்க முடியுமா என்கிறார். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், எவ்வளவு உண்மை!

இந்திய அடையாளம் பற்றிய உரையாடலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையிலான மற்றப் பிரிவினைப் பார்வைகள் பற்றியும் பேசியிருக்கிறார். இந்த நூல் இப்போது வெளிவந்திருந்தால் இன்னும் விரிவாகப் பேசியிருப்பாரோ என்னவோ!

இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொண்ட மிக முக்கியமான – சுவாரசியமான இன்னொரு விஷயம், இரண்டு இந்துக்கள் மற்றும் இரண்டு முஸ்லிம்கள் பற்றிய ஒப்பாய்வு. ஒவ்வொரு நாளும் ஒரு நிறைவான இந்துவாக வாழ்ந்தவர் காந்தி. அவர் மதச்சார்பின்மையை வலியுறுத்தினார். இந்து தேசியவாதத்தில் பிடிவாதமாக இருந்த சாவர்கரோ கடவுளின் இருப்பிலேயே நம்பிக்கை இல்லாதவர். அவரை எப்படி இந்து மகா சபை தலைவராக ஏற்றுக்கொண்டது என்று தெரியவில்லை. அதுபோலவே, முஸ்லிம்களுக்குத் தனிநாடு கேட்ட ஜின்னா ஆன்மீக ஈடுபாடற்றவர். தினசரி வாழ்வில் முழு முஸ்லிமாக வாழ்ந்த ஆசாத் முஸ்லிம்களுக்குத் தனி நாடு என்ற கொள்கையையே எதிர்த்தார். மதவாதியாக இருப்பதற்கும் ஆன்மீகவாதியாக இருப்பதற்குமான வேறுபாட்டையும் அவையிரண்டும் ஏன் ஒன்றோடொன்று இணைந்து போக வேண்டியதில்லை என்பதையும் இதைவிடவா சிறப்பாகச் சொல்லிவிட முடியும்! தனிப்பட்ட முறையில் ஆன்மிகம் வேறு மதவாதம் வேறு என்று எண்ணுகிற – பிரித்துப் பார்க்கும் எவருக்கும் இந்த ஒப்பீடுகள் சுவாரசியமானவையாக இருக்கும்.

நூலை முடிக்கும் போது, வங்காளத்துக் கதைகளைப் பற்றிப் பேசுவதில் கூடுதல் நேரம் செலவிட்டிருக்கிறாரோ என்று இயல்பாகவே நமக்கோர் எண்ணம் தோன்றலாம். வங்காளத்தில் பிறந்த ஒருவர் மற்றவற்றை விட வங்காளத்துக் கதைகளை அதிகம் பேசுவது இயல்பானதே. மற்றவர்களை விட அது பற்றி அவருக்கு அதிகம் தெரியும் என்பதால் அதில் தவறேதும் இல்லை. மற்ற பகுதிகளைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் அதிகம் பேசியிருந்தால் அது ஒரு சமச்சீரான உரையாடலுக்கு உதவியிருக்கும். நூலில் பல இடங்களில் இதை உணர்வதால் இது பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவை இந்தியாவைவிட வங்கத்தைப் பற்றி அதிகம் பேசுகின்றன. நூலின் இறுதியில் இருக்கும் அகரவரிசை அட்டவணையில் பார்த்தால் கூட, தாகூர்தான் அதிகம் பேசப்பட்டிருக்கும் நபர். காந்தி, நேரு, அக்பர், அல்பெரூனி… எல்லோரையும் விட! இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பணியில் வங்காளிகளுக்கு இருக்கும் பங்கை நாம் மறுக்கவே முடியாது என்பதாலும் நூலின் ஆசிரியர் வங்காளி என்பதாலும் இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

நிறைவாக… யாரை எதற்காகப் பிடித்தாலும் அவரை முதல் அமைச்சர் ஆக்கிப் பார்க்கும் அல்லது அரசியலுக்கு வரச்சொல்லும் கூட்டம் அல்லவா நாம்! எனவே அமர்த்தியா சென் விஷயத்திலும் நமக்கு அந்தக் கேள்வி வரத்தான் செய்கிறது – ‘பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரை அவரது நாடு எப்படிப் பயன்படுத்திக் கொண்டது?’

பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு [email protected]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here