Monday, June 5, 2023

நீர்ப்பறவை

சுஷில்குமார் பாரதி

மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டேயிருக்க முடியும். நீரில் நீராக, மீனாக, பற்றற்று மிதந்தலையும் பூஞ்சையாக, எங்கோ உடைத்தெறியப்பட்ட கட்டுமரத்தின் செல்லரித்த துண்டுப்பலகையாக. கடந்த பல மணி நேரங்களாக, பல நாட்களாகக் கூட இருக்கும், அடியில் இருந்து மேலெழுந்து என்னை மெல்லத் தீண்டிச் சென்ற பல்லுயிர்களும், மொத்த நிலப்பரப்பிலிருந்து விலகித் தனியுலகமாகக் கிடக்கும் இந்த மொத்த நீர்ப்பரப்பும், மேலிருந்து சாரலாகவும், ஊசி முனைக் காற்றெனவும் என்னைப் பரிசோதித்துப் பார்க்கும் இந்தப் பெரிய வான்வெளியும் என்னை முழுதாக ஏற்றுக்கொண்டு விட்டன. அதிலும் என் பாதங்களில் மணிக்கொரு முறை வந்து விளையாட்டாகக் கடித்து விளையாடும் அந்தச் சின்னஞ்சிறு மீன்கள், என்னை தங்கள் இரையென ஆக்கிக்கொள்ள விருப்பமின்றி பிழைத்துப் போக அனுமதித்திருக்கும் பெரும் சுறாக்கள், இந்த எளிமைக்கும் வலிமைக்கும் இடையே முதல் சில மணி நேரங்கள் போராடி, தத்தளித்து தான் கிடந்தேன். முடிந்த மட்டும் வேகமாக நீந்தி இவற்றிலிருந்து தப்பி விட முயன்றேன். கைகால்கள் வலியில் பிய்த்துக்கொண்டு போய்விடும் கணத்தில் மொத்த உடலும் நீண்ட பெருமூச்சு விட்டு ஓய்ந்து நின்றது. உள்ளிருந்து வெளிவந்த இதயத்துடிப்பின் கனத்த சத்தம் எனைச் சுற்றிய தண்ணீரில் வெளிநோக்கிய அலைகளை உருவாக்கியது. விரிந்து சென்ற அலைகளின் தூரத்து முடிவில் தெரிந்த ஒற்றைச் சிறு புள்ளி வெளிச்சம். அதைக் கண்ட நொடியில், எனக்கான முடிவு தெளிவாகத் தெரிந்தது. செய்வதற்கு ஒன்றுமில்லை. செய்வதற்கு ஒன்றுமேயில்லை. சற்று நேரம் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிணுங்கினேன், கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன், என்னை நானே அடித்துக் கொண்டேன், தலை முடியைப் பற்றி இழுத்தேன், மேலாடையைக் கிழித்து எறிந்தேன், முடிந்த மட்டும் ஓங்கிக் குரலெழுப்பி ‘கடவுளே’ எனக் கத்தினேன். அப்போது கழுத்தில் ஒட்டிக் கிடந்த சிலுவையை எதேச்சையாகப் பற்றினேன். சமீர் கொடுத்தது. சட்டென அவனது கைகளின் வெம்மை என் உடல் முழுதும் பரவியது. முதல் பறத்தலின் பயத்தினூடே என்னைப் பற்றிய அவன் கைகள் கொடுத்த வெம்மை. என்னையறியாமல் ஒரு மெல்லிய புன்னகை என் உடலெங்கும் பரவியது. நீர்ப்பரப்பு முழுவதும் நீல நிற ஒளிபெற்று மிளிர்ந்தது. உள்ளிருந்த ஜெல்லி மீன்களெல்லாம் என்னோடு சேர்ந்து மின்னின. மேலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவுக்கு அதுவொரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதன் உச்ச கணத்தில் என் இடப்புறமிருந்து பாய்ந்து மேலெழுந்த ஒரு பெரிய டால்பின் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டிப் பாடியபடி மறுபுறம் விழுந்தது. அடுத்த நொடி அத்தனை சொலிப்பும் அடங்கி நீர்ப்பரப்பு சலனமற்று உறைந்த பனித்தரையென ஆனது. என்னால் செய்யக்கூடியதெல்லாம் இதோடு ஒன்றிக் கிடப்பது மட்டும்தான். நீரோடு நீராக, மீனோடு மீனாக, என்னால் எதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதைச் செய்வது தான். அந்த கணத்திலிருந்து இதோ இப்போது வரை துளியும் வலியின்றி சிறு முயற்சியுமின்றி மிதந்து கொண்டிருக்கிறேன். மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டேயிருக்க முடியும்.
சமீரை சந்தித்ததைப் பற்றி சொல்ல வேண்டும்தான். ஆனால், அதைப் பிறகு சொன்னால்தான் சரியாக இருக்கும். இப்போது நம் உரையாடலில் ஒரு புரிதல் உருவாகுவது அவசியம். என்னால் எதெல்லாம் சாத்தியம் என்பதைப் போகிறபோக்கில் மிகைப்படுத்தி விடவும் கூடாது. இன்னும் எவ்வளவு நேரம் என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் முக்கியம். Bygones are bygone. சரியான சொற்கள்தானா என்றும் யோசிக்கிறேன்.

எங்கள் பயணம் மிக மகிழ்ச்சியாக ஆரம்பித்தது. ஒரு வாரம் முன்பு. சமீரைச் சந்தித்து இரண்டு மாதங்களில் மேற்குக் கடற்கரையோர கப்பல் பயண நிலையத்தை வந்தடைந்தோம். உடன் வந்தவர் யார் யார் என்பதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்கிறேன். அதி நவீன மீன்பிடிக் கப்பல். ஏறிய சில மணி நேரங்களில் மொத்தக் கப்பலின் செயல்பாடுகளை விளக்கி, துடிக்கத் துடிக்க ஒரு செந்நிற மீனைப் பிடித்து என் கைகளில் கொடுத்தார் ஒருவர். பிடித்தால் விலைக்குக் கூட கொடுக்காமல் தங்கள் வீடுகளில் மட்டுமே சமைக்கும் உலகின் உச்சகட்ட சுவையுடைய மீன் என்றார். எனக்காக அங்கேயே அப்போதே அதை சமைக்கவும் ஆரம்பித்தார். இரண்டு இரவுகள் அந்தக் கப்பலில் பயணம் செய்வது திட்டம். இலக்கற்ற பயணமாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் இந்தக் கடல் பகுதியில் எழுந்து மூழ்கிக் கிடப்பதாக நம்பப்படும் நல்லதிருஷ்டம் கொடுக்கும் பவளத்தீவுகளில் ஒன்றையாயினும் பார்த்துவிட வேண்டும் என்றும் சிறு ஆசை. அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே எல்லாரும் சொன்னார்கள். ஆனால், நான் அத்தீவுகளில் ஒன்றில் இறங்கி நிற்பதை தேஜாவு போலக் கண்டிருந்தேன். சரி, பார்க்கலாம் என்கிற முடிவு. சமீர் சொன்னதைப் போல நடப்பது நடந்தே தீரும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அரை நாள் பயணத்தில் கடலும் கடல் காற்றும் பழகிப் போன மாதிரியிருந்தது. உடன் வந்தவர்களில் சிலர் குமட்டிக்கொண்டு தங்கள் அறைகளுக்குள் ஓய்ந்துவிட, நான் மட்டும் அக்கப்பலின் முனையில் நின்று என் முன் விரிந்து விரிந்து சென்ற நீலப் பெருவெளியில் கைவிரித்து முடிந்த மட்டும் அதைப் பருகிக் கொண்டிருந்தேன்.

“இந்தப் பகுதியில் உங்களுக்கு ஒன்றை காட்டித் தருகிறேன் மேடம். நீங்கள் அதை வேறெங்கும் பார்க்கவே முடியாது.”

“அப்படியா? அப்படியென்ன அதிசயம் வைத்திருக்கிறீர்கள்? கடல் கன்னியா? நீரில் நடக்கும் முனிவரா? இல்லை, மிதக்கும் நிலாத் துண்டா?”

“கொஞ்சம் பொறுங்கள். அதையெல்லாம் விட உங்களுக்குப் பிடித்ததாகப் போகும் ஒன்று. அது வருவதற்கான அறிகுறி தெரிகிறது. நீங்கள் அதிருஷ்டசாலிதான்.”

ஆர்வம் மேலிட கைகாட்டிய திசையில் வானை வெறித்திருந்தேன். கப்பலின் இயந்திரத்தை நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு அமைதியாக நின்றார். சற்று நேரத்தில் சிறு சத்தமுமின்றி அசைவின்றி மொத்தக் கப்பலும் உறைந்து நின்றது. மிக மெதுவாகத் தன் கைகளை நீட்டினார் அவர். பச்சைப் பசேலென்ற சிறு பூஞ்சையை கைவிரல்களில் பிடித்தபடியிருந்தார். குழப்பமாகப் பார்த்ததும் கண்ணிமை அசைத்துப் பொறுமையாக இருக்கச் சொன்னார். விரிந்த கடலையும் பொதிந்த வானையும் நோக்கிப் பெருமூச்சுகளின் இடையே ஏதேதோ யோசித்தபடி நின்றேன். சமீர், அவன் கைகளின் வெம்மை. அந்தப் பறத்தலின் அழுத்தம். என் அப்போதைய இதயத் துடிப்பு, முடித்துவிட நினைத்திருந்த என்னென்னவோ, சமீரின் அன்றைய வார்த்தைகள்.

அருகே அசைந்து நின்ற அவரின் கை மெல்ல நளினமாக கொடி போல அசைந்தது. அவர் முகம் சட்டெனப் பிரகாசம் கொண்டது. ஒரு நொடியில் அத்தனை அழகான ஓர் ஆணாக மாறி நின்றார். என் எண்ணத்தைத் திசை திருப்பி அவர் கையைக் கூர்ந்து கவனித்தேன். பிடித்திருந்த பூஞ்சை மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்க, கண்களால் கை முனையைச் சுட்டிக் காட்டினார். அப்பூஞ்சையின் இடையிலிருந்து மெல்லிய கீச்சுச் சத்தம் வந்ததை அப்போதுதான் கவனித்தேன். கூர்ந்து பார்த்தபோது உடல் புல்லரித்துப் போனது. என்னையறியாமல் கண்கள் கண்ணீர் விட்டன. பச்சைப் பூஞ்சையின் நடுவே ஒற்றை அலகொன்று அதைக் கொத்திக் கொத்தி தின்று கொண்டிருந்தது. அலகு மட்டுமேயான அந்தச் சின்னஞ்சிறு பறவை. நம்ப முடியாமல் கை நீட்டி அதைத் தொட்டு விட நினைத்தேன். தலையாட்டி வேண்டாமென்றார். அப்போது அது தன் மெல்லிய இறகுகளை அசைத்தது. அந்தச் சத்தம் எனக்கு நிச்சயம் கேட்டது. வெறும் அலகாலான அந்தப் பறவையின் சிறகெங்கே எனக் கூர்ந்த போது, அதுவரை கவனிக்காமல் விட்ட அதன் நிறமற்ற ஒளி ஊடுருவும் சிறகுகள் எனக்குப் புலப்பட்டன. அந்த ஒரு நொடியில் அப்பறவையைப் போலவே நானும் ஆகிவிட்டேன். சுற்றியிருந்த வெளியும், காற்றும், நிறமும் எல்லாமும் அப்பறவையின் உடலில் நுழைந்து வெளியேறியது. அந்த அலகுகள் பூஞ்சையோடு விளையாடிக் கொத்தித் தின்பதை மட்டுமே மொத்த வாழ்வின் செயலெனச் செய்தன. எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என நினைவில்லை. மீண்டபோது செந்நிற மீன் குழம்பும் சுடு சோறும் எனக்காகக் காத்திருந்தன.

நான் மிதந்து கொண்டிருக்கும் பகுதி அதிருஷ்ட பவளத் தீவுகளின் அருகே இருக்கலாம், அதற்குச் சாத்தியமே இல்லாமலும் இருக்கலாம். ஆனால், என் உடல் நினைவிற்கு வரும்போதெல்லாம் அந்த நிறமற்ற பறவையும் கண்முன்னால் வந்துவிடுகிறது. மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டிருக்க முடியும். என்னால் இப்படிப் பறந்து கொண்டிருக்க முடியும். அந்த நிறமற்ற பறவை ஒருவேளை சமீர்தானோ?
அப்படியொரு புயலும் மழையும் வருவதற்கான சாத்தியமே இல்லாத காலம் தான். ஆனாலும் அப்படியொரு புயலும் மழையும் வந்தது. கப்பலிலிருந்த ஒருவர் முகத்திலும் திரும்பிச் செல்வதற்கான நம்பிக்கை தெரியவில்லை. ஒவ்வொரு அலையிலும் வானில் பாய்ந்து மீண்டும் நீரைத் தொடுவதற்குள் அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது. பலர் தங்கள் கடைசி ஜெபத்திற்குள் மூழ்கிவிட்டிருந்தனர். அதுதான் சரியான காரியமாக இருந்தது. அது மட்டுந்தான் செய்யக்கூடிய காரியமாகவும் இருந்தது. ஆனால், என் மனம் முழுக்க சமீரும் அந்த நிறமற்ற பறவையும் தான். ஆச்சரியம், பவளத்தீவுகளைப் பற்றி நான் சிறிதும் நினைக்கவில்லை. நீண்ட நெடும் அலைகளின் ஒரு கணத்தில் எங்கள் கப்பல் ஒரு பெரிய பாறையில் மோதியது. அது பாறை மாத்திரமா என்ன? ஒரு பெரும் மலையின் கண்ணுக்குத் தெரியும் வெறும் முனைதானே ஒட்டு மொத்த வேறுலகின் துவக்கமாக இருக்கும். அந்த முனை எங்கள் கப்பலைச் சிதைத்தெறிந்தது. ஜெபங்களை மறந்து தெறித்த ஓலங்களைக் கேட்பதற்கு எவருக்கும் நேரமில்லை. அடுத்த சில மணி நேரங்கள் மூழ்குவதும் மிதப்பதுமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்தேன். சமீரின் சொற்கள் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தன. நிறமற்ற பறவை கீச்சுக் குரலில், ‘சமீர் சொல்வதைக் கேள், அதுதான் சரி’ என்றது. அதன் நிறமற்ற சிறகுகள் சிறிது சிறிதாக விரிந்து பெரியதாகி என்னைத் தாங்குவதை உணர்ந்தேன். சற்று நேரத்தில் என்னை மொத்தமாகச் சூழ்ந்து ஒற்றைப் பந்தென ஆகி மிதக்கச் செய்தது. கைகளும் கால்களும் கரைந்து இல்லாமலாகி அப்பறவையின் சிறகென மாறின. நானே அப்பறவையென ஆனேன். உடல் முழுதும் உப்புநீர் நிறைந்து, உள்ளே கொள்ளமுடியா கணத்தில் வெடித்துச் சிதறினேன். நீண்ட உறக்கத்திற்குப் பிறகு சூரியனின் சுட்டெரித்த ஒளியில் கண்விழித்த போது இதோ இப்போது மிதப்பதைப் போல மிதந்து கொண்டிருந்தேன்.

அதென்ன? மீண்டும் ஒரு பாறையின் உச்சியா? பச்சையாகத் தெரிகிறதே! சற்று நீந்தினால் அடைந்து விடலாம். இல்லை, வெறும் கானல் நீரா? நீரின் மேல் கானல் நீர் தோன்றுமா என்ன? ஒருவேளை தொலை தூர நாடொன்றின் கரையாக இருக்குமோ? நீந்தித்தான் பார்ப்போமே என்று கைகளை நீட்டி அசைத்த நொடியில் பின்னிருந்து ஒரு விசித்திர சத்தம். உறுமல் போன்ற சத்தம். மீன்கள் உறுமுமா என்ன? ஒருவேளை ஏதும் ஆட்கொல்லி மீனாக இருக்குமோ? எத்தனையோ சுறாக்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்ட பிறகு இதென்ன புதிதாக? பயப்படுகிறேனா? சமீரும் நிறமற்ற பறவையும் இந்த உறுமலில் காணாமல் போய்விட்டார்களா என்ன? உறுமல் இன்னும் இன்னுமென நெருங்கி வந்தது. இந்த உடலின் மாமிச வாடையென்ன அதை அப்படி இழுக்கிறதா? என்னைத் தின்று அதன் பசி எவ்வளவுதான் அடங்கி விட முடியும்? ஏன் இப்படி நடுங்குகிறேன்? கைகளையும் கால்களையும் அதிகபட்ச உழைப்பில் அடுத்த சில நிமிடங்கள் வைத்திருந்தால் ஒருவேளை பிழைத்து மிதப்பேன். அல்லது விட்டுவிடவா? சமீர் அதை ஒத்துக் கொள்ளவே மாட்டானே!

எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த அந்த நாள் என்னை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். என்னை நானே அழித்துக் கொள்ள என்னவெல்லாம் வழிகள் என்று ஆராய்ந்து அறிந்தேன். அம்முடிவின் விளிம்பில் சட்டெனக் கிளம்பி எங்கென்றில்லாமல் எங்கேயோ சென்றேன். ஏதோ ஒரு இரயில். பின், ஏதோ ஒரு பேருந்து. எங்கோ உண்டு எங்கோ படுத்துறங்கி மூன்று நாட்களுக்குப் பிறகு கண் விழித்த போது அந்தச் சிறிய குன்றின் உச்சியிலிருந்த ஒரு நாடோடியின் குடிலில் கிடந்தேன். அவ்விடம் வயநாடு என்றார்கள். அவர்கள் உச்சரித்த மலையாளம் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. பலர் கன்னடா பேசினார்கள், பலர் தமிழர்கள். அந்த நாடோடி அவசர அவசரமாக ஓடி வந்து வெளியே அழைத்தான். முடித்துக் கொள்ளலாம் என்பதே எண்ணமாகக் கொண்டு கடைசி இரவைக் கழித்திருந்த நான் அவன் அழைத்ததில் ஆர்வமாகி துள்ளிக் குதித்து வெளியே சென்றேன். காற்றைக் கிழித்தபடி எங்கள் தலைக்கு மேல் விர்ரென்று பறந்தது ஒரு சிறிய விமானம். இவ்வளவு சிறிய விமானமா என்று வியந்து பார்த்தபோது, அது ஒரு மனித விமானம் என்றான் அந்த நாடோடி. பின், கூர்ந்து கவனித்தபோது தான் அது ஒரு கிளைடர் வகை விமானம் என்று கண்டேன். இரண்டாம் கிளைடர் வந்தபோது ஊ, ஊ-வென அலறியபடி பறந்தாள் ஒரு பெண்மணி. அவளோடு சேர்த்துக் கட்டப்பட்டு கிளைடரைச் செலுத்தினான் ஓர் இளைஞன்.

“என்ன, உனக்கும் இப்படிப் பறக்க வேண்டுமா?”
வெகு சீக்கிரம் மொத்தமாகப் பறக்கத்தானே போகிறேன் என்று தோன்ற சிரித்தபடி, “ஆமாம், நீயும் வருகிறாயா?” என்று கேட்டேன்.
“நான் தினமும் பறக்கிறேனே. சரி, உனக்காக வருகிறேன், வா, அதோ அந்த குன்றின் உச்சிக்கு நடக்க வேண்டும், முடியுமா? மேலே தூக்கிச் செல்ல கிளைடரெல்லாம் வராது..” என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.
உச்சியை அடைந்ததும், ‘நான் எப்படிப் பறக்கிறேன் பார்’ என்று விறுவிறுவென்று அங்கிருந்த கிளைடரில் தன்னைப் பொருத்திக்கொண்டு நின்றான்.
“அய்யோ, நான் என்ன செய்வது?”
“உனக்கு ஒரு நிபுணன் இருக்கிறான். அதோ, அவனிடம் சொல்லி விட்டேன். அவன் உனக்கு வேறொரு உலகத்தைக் காட்டுவான்,” என்றபடி பறந்து போனான்.

உறுமிய மிருகம் என் கால் பாதங்களை பற்களாலோ நகங்களாலோ இறுகப் பிடித்தது. அது ஒரு கூரிய ஊசியைப் போல துளைத்து உள்ளே செல்ல மிதந்தபடி சில நொடிகள் ஒன்றும் செய்யாமல் கிடந்தேன். சமீர் என் இடுப்பைச் சுற்றிலும் பாதுகாப்பிற்கான பட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தான். கால் பாதங்களை அசைக்க முடியவில்லையே. கால்களுக்கும் பட்டைகள் வேண்டுமா? பறக்கும் போது கால்களும் இறக்கைகளாகி விடுமா? மிதந்து மிதந்து மூச்சையடக்கினால் இம்மிருகம் என்னை விட்டுவிடுமா? அந்த மூச்சற்ற நொடிகளைக் கடந்த போது தரையிலிருந்து பல அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தேன். அதுவரை கண்களை இறுக்கமாக மூடியிருந்த என்னைப் பார்த்து சிரித்தபடி, “பறவைகளின் உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்,” என்றான் சமீர். தனது எல்லைக்குள் வந்து மாட்டிக் கொண்ட இந்தச் சிறு இரையோடு சில கணங்கள் விளையாடிப் பார்ப்பதாய் என் கால்களை விடுத்து என்னைச் சுற்றிலும் வட்டமிட்டது அம்மிருகம். திடீரென என் நிர்வாண மேலுடல் நினைவில் வர கைகளைக் கொண்டு மூடிக் கொண்டேன். எதற்காக அப்படிச் செய்தேன் என்று யோசித்து மீண்டும் கைகளை விரித்து மிதக்க ஆரம்பித்தேன். முகத்திலிருந்த வெட்கம் மெல்லக் கீழிறங்கி உடலில் ஒவ்வொரு பாகமாய் சென்று கரைந்தது. மாற்றி மாற்றிக் கூறினால் உங்களுக்குக் குழப்பமாகக் கூட இருக்கலாம். சரி.

சமீர் கேட்டான்,“என்ன நீங்களும் ஒரு நாடோடிதானா?”

“ம்‌ம்.. அப்படியும் சொல்லலாம். ஆனால் இன்னும் மிகக் குறுகிய காலத்திற்குத்தான்..”

“ஓ, அவ்வளவு தெளிவாகத் தெரியுமா என்ன?”

சட்டெனத் திரும்பி அவன் கண்களைப் பார்க்க முயன்றேன். வேண்டுமென்றே தலையைத் திருப்பி கிளைடரை வெடுக்கென திருப்பினான்.

“நீங்கள் இந்த ஊரைச் சார்ந்தவர் போல் இல்லையே? இங்கே எப்படி?”

சமீர் இப்போது சத்தமாகச் சிரித்தான். என் முகம் ஏனோ சற்று கருத்தது.

“ஏன் அப்படிச் சிரிக்கிறீர்கள்?”

“காற்றிருக்கும் இடமெல்லாம் என் ஊர் தான். அப்பா எனக்குச் சொன்ன இரகசியம் அது. அதனால் தான் எனக்குத் தென்றல் என்று பெயர் வைத்திருக்கிறார். சொல்லமுடியாது, அவரும் இங்கு எங்கோ பறந்து கொண்டிருப்பாரோ என்னவோ!”

“என்ன? உங்கள் பெயர் தென்றலா? அப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள்?”
“அதைப் பிறகு சொல்கிறேன். நான் நீண்ட காலம் நேபாளத்தில் இருந்தேன். அங்கே எனக்கு பறக்கக் கற்றுக் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து ஊர் விட்டு ஊர் பறந்து இதோ இன்று உங்களுக்காகப் பறந்து கொண்டிருக்கிறேன்.”
“குடும்பம்?”

“அதெல்லாம் இல்லாமலா? நான் என்ன துறவியா? பறப்பதைக் கூட துறக்க முடியாமல் அலைகிறேன். அப்படி வேண்டுமானால் சொல்லலாம்.”

“நன்றாகக் குழப்புகிறீர்கள்? ஆமாம், எத்தனை வருடமாக இப்படிப் பறக்கிறீர்கள்?”
“பத்தாம் வகுப்பிலிருந்து ஓடி வந்ததிலிருந்து…”

“ஹாஹாஹா, அது சரி. அதனால்தான் தத்துவமெல்லாம் வருகிறதா? ஆமாம், தொடர்ந்து இதையே செய்வதற்கு சோர்வாக இல்லையா?”

“ஏன் சோர்வாகப் போகிறேன்!”

“என்ன தான் பறப்பதென்றாலும் இதுவும் ஒரு வேலைதானே?”

அவன் அமைதியாக இருந்தான். பறப்பதில் கூர்ந்து கவனம் செலுத்துகிறானோ என நினைத்தேன். மீண்டும் கேட்கலாமா? கேட்டதில் ஏதும் தவறாக நினைத்து விட்டானோ? சற்று நேரத்தில் கிளைடரை வேகம் குறைத்து நிலையாக ஓரிடத்தில் மிதக்கச் செய்தான்.

தயங்கியபடி, “நான் கேட்டது…” என்று ஆரம்பிக்கவும், “அங்கே, அதோ அங்கே.. அங்கே பாருங்கள்…” என்று என் காதுகளுக்குள் சொல்லியபடி ஒரு திசையில் சுட்டிக் காட்டினான்.
அவன் சுட்டிக் காட்டிய திசையில் பெரியதொரு வெண்மேகத்தின் மத்தியில் கரும்புள்ளியொன்று தெரிந்தது.
“அது ஏதோ பறவை தானே?”

“அதை கவனித்துப் பாருங்கள்.”

“அதில் என்ன கவனிக்க இருக்கிறது, இன்னும் கொஞ்சம் அருகே போகலாமா?”

“ஒவ்வொரு நொடியும் அதை நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்தப் பறவை என்ன செய்கிறது பாருங்கள்.”

சொல்லிவிட்டு தனக்குள் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தான். ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தான். ஒரு கழுகு பறந்து கொண்டிருப்பது தெளிந்து வந்தது. இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்ற எச்சரிக்கை உணர்வு. அதை இன்னும் கூர்ந்து கவனித்தேன்.

“என்ன? என்ன பார்க்கிறீர்கள்?”

“ஒரு கழுகு பறக்கிறது. ஏதும் இரை தேடிப் பறக்கிறது போல.”

திடீரென தன் கைகளைத் தாறுமாறாக ஆட்டினான். கிளைடர் காற்றில் நிலையற்று பறந்தது. எந்த நொடி வேண்டுமானாலும் என்னை விட்டுப் பறந்து விடுவான் போல. நான் அலறியே விட்டேன். மீண்டும் வேகமாக மேலெழுந்தான். கீழே சென்றான். சட்டென மொத்தமாகச் சுழற்றியடித்து ஒரு கரணம் போட்டான். நான் அலறி ஓய்ந்து அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன். கிளைடர் அமைதியடைந்தது.

“அந்தக் கழுகு நம்மைப் போல இல்லை, இல்லையா?” என்று சிரித்தான்.

ற்றும் எதிர்பாராத கணத்தில், என்னைச் சுற்றிக்கொண்டிருந்த அம்மிருகம் நீருக்குள் ஆழ்ந்து சென்று மறைந்தது. நான் கைகளை மெல்ல அசைத்து அப்பவளத் தீவை நோக்கி நகர ஆரம்பித்தேன். இன்னும் சில அடிகள் தான். ஒதுங்கி விடுவேன். என்ன, இந்த மிருகத்தின் இரையாகி விடாமல் இன்னும் நீட்டித்துக் கிடக்கப் போகிறேன். ஆனாலும், இந்த ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் என்ன? மேலிருந்து இப்போது என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கழுகிற்கு அல்லது கிறிஸ்துவுக்கு நான் என்னவாகத் தெரிவேன்? அந்த நிறமற்ற பறவை தாவரங்களை மட்டுமே உண்ணுமா, இல்லை நானும் அதற்கு உணவாகக் கூடுமா? கீழே சென்ற மிருகம் விருந்திற்காக தன் குடும்பத்தை அழைத்து வரச் சென்றிருக்குமோ? சமீர் என்னிடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பான்?

அப்போது என்னைச் சுற்றிலுமிருந்த நீரில் மெல்லத் தொடங்கிய சலசலப்பு எனக்குள் பயத்தின் அதிர்வைக் கடத்தியது. கால்கள் விரைந்து அடித்தன, கைகள் பதறி சீரற்று ஏதேதோ செய்தன. இன்னும் சில அடிகளில் கரை சேர்ந்து விடுவேன். கப்பலில் இருந்தவர்கள் இப்போது என்ன ஆகியிருப்பார்கள்! செந்நிற மீனை எனக்காக சமைத்துக் கொடுத்தவர்…என்ன ஒரு ருசி.. அற்புதம்…

பலத்த உறுமலோடு கீழிருந்து என்னைத் தூக்கியடித்து அகன்ற வாயைத் திறந்தது அம்மிருகம். நான் ஒரு நொடி பறந்து கீழிறங்கிக் கொண்டிருந்தேன். இதயம் நின்றே விட்டது. சமீர். சமீர்….

“அந்தக் கழுகு பெரும்பாலும் அசைவதேயில்லை… வெறும் வேலை இல்லை, இல்லையா?” என்று மீண்டும் சிரித்தான் சமீர்.

“அட, ஆமாம்,” என்று வியந்து அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடியபடி பறந்தான். என்னோடென்றில்லாமல் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப் போல பேசினான்.

“பறத்தல் அதன் இயல்பு. பறத்தலே அதன் மொத்த வாழ்வு. பறத்தலே அதற்கான தியானம். பறப்பதற்காகவே இப்பூமியில் வந்ததுதான் அது.”
எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. பெரிய தத்துவவாதி. கீழே விழுந்து நொறுங்கினால் தெரியும்.
“பறத்தல் நீங்கிய கணம் அது விழும். விழவேண்டும் இல்லையா? இறகுகள் நிலைத்த இந்தப் பறத்தல் நீங்கிய கணங்களில் அது விழாமல் மிதக்கிறதே! எப்படி?”

‘அறிவியல் முட்டாள், அறிவியல், பத்தாம் வகுப்பிலிருந்து ஓடி வந்தவன் தானே.’ என்று நினைத்துக் கொண்டேன்.

“அதன் பறத்தல் அதன் செயல் மட்டுமேவா என்ன?” என்று மெல்லக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். அப்போது அவன் கண்களில் நீர் வழிந்தது. அவன் காணாத எதையோ கண்டவனாக மிளிர்ந்தான். முகமெங்கும் புன்னகை. நீங்கா புன்னகை.

“இந்தக் காற்றிற்கும் கழுகிற்கும் என்ன உறவு! அது தானே இப்போது நமக்கும்?” என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தவன் சட்டென கிளைடரைத் திருப்பி கீழிறக்கினான். கிளைடர் வேகம் கொள்ள எனக்கு அடிவயிறு சில்லிட்டது. கால்களை அசைக்க முடியவில்லை. கைகள் அவன் கட்டுப்பாட்டில். அவன் கேட்டது எனக்குள் திரும்பத்திரும்ப வந்து கொண்டேயிருந்தது. ‘காற்றிற்கும் கழுகிற்கும் என்ன! நமக்கும்…’

கீழிறங்கியதும் யாரோ ஒருவன் போல என்னிடம் கைகுலுக்கி அடுத்த வாடிக்கையாளரிடம் சென்றான்.
“ஒரு நிமிடம்..”

“என்ன? நேபாளத்திற்கு வரப் போகிறீர்களா? முகவரி வேண்டுமா? நான் தான் திருமணம் செய்துகொள்ள முடியாதே!” என்று சிரித்தான்.

“எனக்கு இதை மட்டும் சொல்லுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் உங்களை ஒரு கழுகென நினைத்துக் கொள்வீர்களா?”

“ஓ, சரியான கேள்விக்கு வந்து விட்டீர்களா?”

“பதில் சொல்லுங்கள்..”

“கழுகு நானல்ல, என் கிளைடர் தான்,” என்று கைகளை விரித்தான்.

“அப்படியென்றால், நீங்கள்?”

“நானா? நான்… ஓர் இயந்திரம்… சரிதானே? இயந்திரமற்ற அந்த கிளைடரின் இயந்திரம்…” என்றான்.
ஒரு சில அடிகள் சென்றவன் நின்று திரும்பிப் பார்த்து,“நான் என் கிளைடரின் இதயம்…அந்தக் கழுகின் இதயம்…வெறும் வேலைதான், என்ன?” என்று கத்திக்கொண்டே ஓடினான்.

..
அன்றிலிருந்து சில நாட்கள் அக்காட்டில் சுற்றியலைந்தேன். ஒவ்வொரு மரமும் செடியும் குரலும் அறிந்துகொள்ளும் வரை சுற்றினேன். பின், ஊர் ஊராகத் திரிந்தேன். என் முடிவு அதுவாகவே நீங்கிச் சென்றுகொண்டிருந்தது. என்னைப் பற்றியிருந்த ஒவ்வொன்றாய் விலக்கினேன். ஒவ்வொரு கணமும் சமீரின் பறத்தல் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இந்த மொத்த வாழ்வும் ஒற்றைப் பறத்தல்தான், என்ன?

அம்மிருகத்தின் வாய்க்குள் தான் நான் சென்று விழுந்தேன். அப்போது என்னைச் சுற்றியிருந்த மொத்த வானும் அலையடித்ததைப் போல சுழன்றது. ஒன்று, இரண்டு, மூன்று.. பல பல சுற்றுக்கள். நான் அந்தரத்தில் கரணமடித்துக் கொண்டிருந்தேன். நீரும் வானும் காற்றும் மாறி மாறி என் உட்சென்று வெளிவந்தன. சமீர். நிறமற்ற பறவை. கழுகு….

நான் எங்கிருக்கிறேன், என்ன வெம்மை இது? ஒருவேளை சுனாமிக்குள் மாட்டிக் கொண்டேனோ? இல்லை, சுனாமியால் தப்பித்து விட்டேனா? இதென்ன பச்சை வாசம். மெல்லிய குளிர் தென்றல்.. நன்றாகப் பசிக்கிறது. கைகால்களை மெல்ல அசைத்துப் பார்த்தேன். இன்னும் இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லையே. கூச்சம். மெல்லக் கைகளைத் தேய்த்து கண்கள் சூடாக, இமைகளைத் திறந்தேன். சுட்டெரிக்கும் வானம். கைகளை ஊன்றி எழுந்து நின்றேன். அப்பவளத் தீவின் பாறையொன்றில் பச்சைப் பூஞ்சைகளின் நடுவே நின்று கொண்டிருந்தேன். அப்பூஞ்சைகளில் சலசலக்கும் கீச்சுச் சத்தத்துடன் பல அலகுகள் வந்து இறங்கின. நிறமற்ற இறகுகளின் படபடப்பு. என் தலைக்கு மேல் வெகு உயரத்தில் ஓர் ஒற்றைக் கரும்புள்ளி மிதந்து கொண்டிருந்தது. சமீர்…

நான் ஓடிச் சென்று கடலில் குதித்தேன். மீண்டும் மிதக்க ஆரம்பித்தேன்.

***

சுஷில்குமார் பாரதி – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நாஞ்சில் நாட்டை கதைகளமாகக் கொண்டு அதன் மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள், தொன்மங்கள் பற்றிய சிறுகதைகளை எழுதி வருகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், கல்வித்துறை சார்ந்து நிகழும் நுட்பமான கூறுகளைச் சார்ந்தும் கதைகளை எழுதுகிறார்.

சுஷில்குமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு “மூங்கில்” ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “சப்தாவர்ணம்” 2021 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இவருடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தமிழினி, யாவரும், கனலி, வனம், பதாகை போன்ற தமிழ் மின்னிதழ்களில் வெளிவந்துள்ளது. ராகுல் ஆல்வரிஸின் “Free From school” புத்தகத்தை தமிழில் “தெருக்களே பள்ளிக்கூடம்” என்ற பெயரில் தன்னறம் பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments