நாக்குட்டி – 9

எனக்குத் தோணிச்சி அந்த சின்ன தொடுவுணர்வுலநீ normal ஆகிடுவனு. இங்க crimeதொடுவுணர்வு இல்லாம தான் அதிகம் நடக்குது.& love is the best punishment of crime. உன்ன punish பண்ண time இருக்கு டா.

துளசி என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. எனக்கும் கூட எதற்கு பார்ட்டி வைக்கிறேன் என்று சொன்னாள் என்று கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை நான் தைரியமாய் காதலைச் சொன்னதற்காக இருக்கலாம்.ஆனால் நான் அவளிடம் அவள் எதிர் பார்த்த மாதிரியே காதலைச் சொன்னதற்கா என்று கேட்டு விடலாமேன்றுத் தோன்றியது. சாப்பிட்டு முடிக்கும்வரை தான் அந்த எண்ணம் மனதிலேயேஇருந்தது.அவளுக்கும் சேர்த்து என்ன சாப்பிட வேண்டுமென்று தேர்ந்தெடுக்கச் சொன்னாள். ரெகுலர் கோர்ஸ் வேண்டாம் என்றாள். மூன்று கடைகள் மாறியிருந்தேன். எனக்குக் கடையைத் தேர்ந்தெடுப்பதே பெரும் பாடாக இருந்தது.அவள் என்னை சோதிக்கிறாள் என்ற எண்ணம் எழாமல் எனக்கு வாய்ப்பளிக்கிறாள் என்றே தோன்றியது.நான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். எப்படி அவளால் எனக்கு இவ்வளவு பாசிடிவ் எனர்ஜி கொடுக்க முடிகிறது? அது அவள் சார்ந்ததா நான் சார்ந்ததா?சிரிப்பு வெளியே தெரியாதபடிக்கு வேண்டுமென்றே என் முகத்தைப்பார்த்துக்கொண்டே வந்தாள். கடை முன் நின்று மெனுவை பார்க்கச் சொன்னால், மறுத்தாள். என் முகம் அவளுக்கு எதை வெளிப்படுத்தியது என்று தெரியவில்லை.அறையில் வந்து கன்னாடியில் நெற்றி சுருக்கிப் பார்த்தேன்.அவள் அதைத்தான் கவனித்திருப்பால் என்று ஒருமனதாக முடிவுக்கு வந்திருந்தேன். அடுத்தடுத்து அலுவலகத்தில் வேலை செய்கையில், கொஞ்சம் பதற்றத்தில் வேலை பரபரப்பில் என்னையறியாமல் நெற்றியை தொட்டுப் பார்த்திருக்கிறேன். புருவங்களின் நடுவே மேல் நோக்கிச் செல்லும் சுருக்கம். வேண்டுமென்றே சுருக்கிச் சுருக்கிப் பார்த்திருக்கிறேன். நிகழ்ந்ததற்கும், நிகழ்ந்தது மாதிரி தோன்றுவதும், எனக்கு பெரும் குழப்பமாகவே இருந்துவருகிறது. அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் நடந்ததா இல்லை நடக்கவேண்டுமென்று நான் விரும்பினேனா, நடந்ததிலிருந்து நான் நீட்டித்துக் கொண்டதா என்றால்,நான் தடுமாறிப் போகிறேன்.இருவருக்குமான உணவை தேர்ந்தெடுத்ததும்,அவளுடைய ஏ.டி.ம் கார்டை கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு அதற்கான எண்களை என்னை அழுத்தச் சொன்னாள். இருவருக்கும் பொதுவில் தான் இருந்தது.பர்ஸை நோண்டிக்கொண்டே தான் அந்த நான்கு இலக்க எண்ணைச் சொன்னாள்.

அவளை நான் அதுவரைகேள்வி கேட்டதே இல்லை.முதல் இரண்டு எண்கள்தேதி போலவும், அடுத்த இரண்டு எண்கள்மாதம் போலவும் தோன்றியது.ஒருஉத்வேகத்தில் நேற்றா உனக்குப் பிறந்த நாள் என்றேன். உதட்டை ஒதுக்கிச் சிரித்தாள். அன்று இரவு, நான் அவளுக்கு எவ்வளவு முக்கியமானவனாய் இருந்திருந்தால், அவளது பிறந்த நாள் அன்று என்னைக் காதலைச் சொல்ல வைத்திருப்பாள் என்று மகிழ்ந்து கிடந்தேன்.திரும்பத் திரும்ப யாருமே இல்லாத அறையில் யாரோஎதிரில் நிற்பது போல் நினைத்து அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தேன்.நான்குஇலக்க எண்ணில், இரண்டிரண்டாய் பிரித்தால் இரண்டுமே பன்னிரெண்டுக்குள். அவள் சிரிப்பு வேறு ஒரு அர்த்தத்தைகற்பித்தது. மாதம் தேதி என்று வைத்திருந்தால்? எனக்கு விழிப்பு வந்திருக்கக் கூடாது, வந்ததும் இப்படித் தோன்றியிருக்கக் கூடாது.சமாதானம் செய்வதும் கேள்வி எழுப்புவதுமாய்அறையிலிருந்துவெளியேறியிருந்தேன்.Belated wishesஎன்றேன். அவள் அருகில் இல்லை என்று உறுதி செய்த பின்னே என்னால் அதையும் சொல்ல முடிந்தது.வாழ்த்தை விரும்புகிறவளா? எதுவும் முயற்சி செய்யாதே என்று முந்தைய நாள் சொன்னது ஞாபகம் வந்தது.கிப்ட் வாங்கத் தோன்றியதை தவிர்த்தேன்.“சிரிப்புக்கு என்ன அர்த்தம்” என்று அவளைக் கேட்பதே அவளை நச்சு செய்வதாய் நினைத்துக் கொள்வாள் என்று தவிர்த்தேன்.ஐந்து வாய் சாப்பிடுகிறாள் என்றால் ஒரு வாய்க்கு ஆள்காட்டிவிரல் உயர்ந்தது.காதலைச் சொல்வதற்கு முன் இதெயெல்லாம் கவனித்தேனா என்றால் நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை.

உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து ஒன்று இரண்டு என்று பன்னிரெண்டு வரையில் மேலிருந்து கீழாக எழுதி, பின்பு பன்னிரண்டு, பதினொன்றுஎன்று ஒன்று வரை கீழ் நோக்கி வந்தேன்.என் முந்தைய அலுவலகத்தில் மாதத்தில் ஒரு நாள். கடைசி வெள்ளிக்கிழமை மாலை அந்த மாதத்தில் பிறந்தவர்களுக்குகேக் வெட்டும் பழக்கம் இருந்தது.அது பள்ளியில் சேர்ப்பதற்கு என்றுகொடுத்த மாதம் தேதி என்று கேக் வெட்ட மறுத்துவிட்ட பெண்ணொருத்தி அப்போது இருந்தாள். இவளுடைய பிறந்த நாளுக்கு இவளுடைய டீமிற்குள் மெயில் அனுப்பியிருப்பார்கள். பெரிய கம்பெனி.யாரிடம் கேட்பது? யாரையும் தெரியாது.இந்த அளவுக்கெல்லாம் துளசி என்னிடம் விளையாட மாட்டாள் என்று மீண்டும் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

என் கேள்விகளுக்கு பதில் சொல்வது போலிருந்தது கண்கள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் விரல்கள் உயரவில்லை.ஒதுக்கிச் சிரித்த புன்னகையிளிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவரத் தொடங்கினேன். அவள்என்னிடம் அப்படியெல்லாம் விளையாட்டுக் காட்டமாட்டாள் என்று முழுமையாய் இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல்நான் அவளிடம் பேசுவது சம்பிரதாயம் போல் தோன்றியது.வலுக்கட்டாயமாக சிரிக்கிறேனோ என்று நினைக்கத் தொடங்கினேன்.அவள் அதை கண்டு பிடித்திருக்கலாம். பின்பொருநாள், அவளை கைப்பையில் இருந்து ஒரு சின்ன டைரிக் குறிப்பை விரித்து எழுதுவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள். டைரியின் உள்பக்க வடிவம் கடிதம் போலிருந்தது.நான் சுமந்துத் திரிந்த எரிச்சல், இந்த செய்கையால், அவளின் விளையாட்டென ரசித்துக் கிடந்த எனக்கு அது அவளின் ஈகோ எனப்பட்டது.என்னையறியாமல்அவள் மேல் கோபம் கொண்டிருந்தேன்.அவளுக்கு அதுவும் தெரிந்திருக்கும். சாப்பிட்டுவிட்டு இருவருமே சீக்கிரமாக அவரவர் இடத்திற்குத் திரும்பியிருந்தோம்.

அறைக்கு வந்ததும் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். எனக்கு கடிதம் சுத்தமாய் பிடிக்கவில்லை, ஏற்கனவே கொடுக்க வேண்டாமென்று தீர்மானித்திருந்த மனநிலை இப்போது கிழித்துப்போடு என்றது. என் ஒட்டு மொத்தத்தையும், அவளிடம் விட்டுக்கொடுப்பது போல, என் சுயம் என்னை சோதித்தது.தூங்குவதற்காக போராடிக் கொண்டிருந்தேன் என்பது நினைவிருக்கிறது. காலையில் கண்களைக் கசக்கி, கசக்கி தூக்கக்கலக்கத்திலிருந்துவெளியேறியிருந்தேன்.சிவந்திருந்தததைப் பார்த்து மதியம் கேட்டாள். கண் உறுத்தி கசக்கியதாகச் சொன்னேன்.திறந்திருந்த பையில் அந்த டைரி இருந்தது. டைரியைப் பார்க்கவும், இறங்கியிருந்த கோபம் எட்டிப் பார்க்க தொடங்கியிருந்தது.மடியிலிருக்கும் பையை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவச் செல்பவள், என் மடியில் வைத்துவிட்டுச் சென்றாள். அவளின் வலப்பக்கம் இருந்தேன்.தோள் ஓட்டிச் சென்றாள்.அவள் என்னை சமாதானப்படுத்திவிட்டாள். துளசி அப்படிச் சென்றதும் என் ஒட்டுமொத்த மனநிலையும் அதற்கு முன்னதாக என்னவாய் இருந்தது? எப்படி மாறினேன் என்று யோசித்தே அன்றைய நாளை முடித்திருந்தேன்.இரவு மீண்டும் கடிதத்தை படித்துப் பார்த்தேன்.

காதல்ஒரு வகைல கொரில்லா போர்முறை தான். நான் தான் தாக்கும்போது நீ தற்காக்கணும். நீ தாக்கும்போது நான் தற்காக்கணும்… that’s all.

துளசி தங்கியிருக்கும் விடுதியின் முன் நின்று அவளுக்கு மெசேஜ் அனுப்பும்போது இரவு இரண்டு மணி.இன்னுமொருமுறை சத்தமாக அவள் முன்னின்று காதலைச் சொல்ல வேண்டும்போல் இருந்தது.அவளிடம் கொடுக்கும்விதமாக ஒரு கடிதம் எழுதிட வேண்டுமென்று நினைத்துத் தோற்றதன் விளைவு. அவள் ஒருமுறை சொல்லியிருக்கிறாள். வார இறுதியில்காசு கட்டி சீட்டு விளையாடுவதையும்,அவள் அருகில் இருந்து வேடிக்கைப் பார்ப்பதையும்.சட்டென்று அவள் முன் நிற்பது சரியென்றே பட்டது.அவள் இறங்கி வருவாள். மெசேஜ் பார்ப்பாள் என்று நம்பினேன்.அவ்வளவு எளிதில் யாரயும் துளசி அனுமதிக்கமாட்டாள் என்ற கர்வமே அவளுக்கு மெசேஜ் அனுப்பத் தூண்டியது.டைப்பிங் என்று வந்தது. நிச்சயம் அவள் அனுப்பமாட்டாள் என்று நம்பினேன்.பால்கனியில் காற்றாட வந்ததது போல வந்து நின்றாள். துளசிக்கு நீளக்கூந்தல். மொத்தத்தையும் சுருட்டி தலையில் பென்சில் போல எதையோ செருகி வைத்திருந்தாள்.நீண்ட ஸ்கர்ட்டை எத்திக்கட்டியிருந்த கால்களோடு, ஒரு காலை சற்று தூக்கி வைத்து நின்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் தலைக்கு நேர் மேலே தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவள் உடலைப் பார்ப்பது போலிருந்தது.அவள் விரல்களை கவனித்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் பிடிபடும் தூரத்தில் தான் துளசி இருந்தாள். வலது ஓரத்தில் மொபைலில் நடுப்பகுதியில் பெருவிரல் அழுந்தியிருந்தது.எழுதியதை அழுத்திவிட்டாள். என் மொபைல் ஸ்க்ரீன் பார்க்கத்தோன்றியதைகட்டுப்படுத்தி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்னடா” என்று அனுப்பியிருந்தாள். துளசி தன்னை ஒழித்து வைக்கிறாள் what என்று தானே அனுப்புவாள்?

“என்னால எழுத முடியல இந்த மாதிரி எந்த ராத்திரியா இருந்தாலும், உன்னநெனச்சிகிட்டு உன்னத்தேடி வரமுடியும் என்னால பேனா எல்லாம் பிடிக்க முடியல.எனக்கு இப்படி முன்னாடி வந்து நிக்குறதுக்குத் தான் வருது. நீ அன்னைக்கு லெட்டர்வேணும்னு  கேக்கல தான். ஆனாலும் எனக்கு எழுதி கொடுக்கணும்னு தோணிச்சி முயற்சி பண்ணி பார்த்தேன். முடியல அதான் கிளம்பிவந்துட்டேன்.நீ சொன்ன மாதிரி புதுசா ஏதும் ட்ரை பண்ணல.எனக்குள்ள இருந்ததத் தான் வெளிப்படுத்திருக்கிறேன்.”

“Patrolவருவாங்க தேவை இல்லாம கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டியிருக்கும் கிளம்பு.”

ஏற்றிக் கட்டிய ஸ்கர்ட் இறங்கியது.அவள் கணுக்காலை தொட்டதும் உணர்ந்திருப்பாள் போல. கீழே பார்த்துக் கொண்டாள். நான் கிளம்பும்வரை எல்லாம் அவள் நின்றிருக்கவில்லை.அவளின் அந்த அவசரம் என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது.அவள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்,அவள் விரும்புவதின் அடையாளமாக எடுத்துக் கொண்டேன்.சனி ஞாயிறு விடுமுறை என்ற துணிச்சலில் அன்று சொல்லியிருப்பேனோ என்று இப்போது யோசிக்கிறேன். அறைக்குத் திரும்பியதும் அந்த விளக்கு வெளிச்சத்தில் உடலொட்டிக்கிடந்த டி-ஷர்ட்டை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன். எதுவுமே எழுதாமல் இருந்தது. சம்மந்தமே இல்லாமல் அவள் சொல்லிய பதில், அவளால் வேறேதும் யோசிக்க முடியாதபடிக்கு நான் பேசிவிட்டேன் என்று நினைக்க வைத்தது.அவள் அறையில் இப்போதது என்ன செய்து கொண்டிருப்பாள்?ஏதேனும் டைப்பிங் என்று வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒருமுறை அவள் விடுதி வாசலின் முன் போய் பார்க்கலாம் என்றுத் தோன்றியது.என்னைப் போகச் சொல்லிவிட்டு, அவள் பால்கனியில் நின்று கொண்டிருப்பாள் என்று நம்பினேன்.

உனக்குத் தெரியுமா ஆண்கள் எப்பவும் ஏதோர் ஒரு வகைல தன்னை ஒரு பொண்ணுகிட்ட ஒப்புக்கொடுத்துகிட்டே இருப்பாங்க. நேரடியா சொல்றதா இருந்தா அடிமை சாசனம்னு வச்சிக்கோயேன். இத முதன் முதலா ஒன்னு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லும்போது தான் கண்டுபிடிக்கிறான். புரியுதுல?

– தொடரும்

ரமேஷ் ரக்சன்

email : talk2rr@yahoo.com

 

நாக்குட்டி – 8

துளசியின் ஸ்க்ரிப்ளிங் பேர்டை பார்த்திருக்கிறேன் நான். எதையாவது எழுதி எழுதி எழுத்துக்களை வடிவமைத்து, அதை சீவி சிங்காரித்து எதையாவது பண்ணி வைத்திருப்பாள் நிறங்களின் ராணி. அவளுக்குத்தான் கிடைக்கும் அத்தனை நிறங்களில் பேனாக்கள். அவளுக்கு நிறங்களைப் போலவே தன் கையெழுத்தையும் பிடித்திருக்க வேண்டும். ஸ்கேல் வைத்துக் கோடு போடுவது போலில்லை. விரல்கள் வளைய மறுக்கின்றன. முதன் முறையாக துளசி பெயரை எப்போது எழுதினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த “முதலாவது: என்பதை நினைவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனதையும், நியாபகம் இருக்குமென்று கடந்து போகும் மனதையும், ஒருசேர நிறுத்துகையில் எனக்கு நானே குற்றவாளி ஆ(க்)கிவிடுகிறேன். கொசு அடிப்பது போல் சில நேரங்களில் கன்னத்தில் அடித்துக் கொள்வேன். எனக்கு “துளசி” என்ற பெயரை அப்படியொன்று அழகாய் எழுதிவிட வேண்டுமென்று தோன்றவில்லை. அதன் வடிவங்களை என் விருப்பத்திற்கு ஏற்றார்போல வளைக்க முடியுமென்றும் தோன்றவில்லை, மனதிற்குள்ளே வரைந்து பார்த்துக் கொண்டேன். எனக்குத் திருப்தியாகவே வரவில்லை. கூகுள் செய்து தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களையும் ஒரே புகைப்படமாகக் கொண்ட இமேஜை தரவிறக்கம் செய்து கொண்டேன். ஒவ்வொரு எழுத்துக்களையும் கண்களால் வரைந்து பார்த்துக்கொண்டே வந்தேன். எனக்கு எல்லாமுமே துளசி போலத் தான் தோன்றியது. எப்போதோ வாங்கி வந்திருந்த இருநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில எழுத்துருக்களை, இன்ஸ்டால் செய்து ஒவ்வொன்றாய் மாற்றிக் கொண்டிருக்கையில் தமிழுக்கு எப்படியும் ஐம்பது எழுத்துருவாவது வித்தியாசமானதாய் கிடைக்காதா என்று தேடத் தொடங்கியிருந்தேன். எனக்குக் கடிதம் எழுதுவதைவிட அவள் பெயரை அழகாய் வரைந்துவிட வேண்டுமேன்றுத் தோன்றியது. கையெழுத்து மொழியில் சேராமல், புகைப்படத்தில் சேருவது போல அவள் பெயரும் மொழியிலிருந்து புகைப்படத்திற்குத் தாவிக் கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு மொழி வேண்டியிருந்தது. இதெல்லாம் வரையும் அவள் கையெழுத்திற்குச் சொன்ன விளக்கம். சொந்தமாய் சொல்வது போல் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு அந்தக் கேள்வி இப்போதுவரை கிடைக்கவில்லை. யாரிடம் சொல்வது? பெண்களின் விரல்கள் கவனிக்கப்படுமா இல்லை, எழுத்து கவனிக்கப்படுமா? இரண்டுமே செய்து பார்க்காத அலட்சியம், தூங்கவிடாமல் வைத்திருந்தது. “சி” –யில் ஒரு கொடி வரைந்து துளசி இலையை படரவிட்டேன். “து” அருவாலாகவே வந்து கொண்டிருந்தது. து-வின் நுனியை வளைத்து கழுகின் கண் பொருத்திப் பார்த்தேன். பிடிகொடுக்காமலிருந்தாள். நத்தையின் ஓடு வரைந்து யானையின் கால் இட்டேன். “ள்”-ற்கு. பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்று தெரியாதொரு மனநிலையில் இருந்தேன். அடித்தல் திருத்தம் இல்லாமல் காதல் கடிதம் அவளுக்கு எழுத வேண்டும். யோசனை தான்.

எழுதுவதற்கு முன்னே துளசி என்னை எப்படியெல்லாம் கேலி செய்வாள் என்றுதான் கண்முன் திரை ஓடுகிறது. அன்புள்ள என்றால் “எங்க அன்பு இல்லாம ஒரு லெட்டர் எழுது” என்று அவள் சொல்லிவிடுவாள் என்றே தோன்றியது. எனக்குத் தொடக்கம்  பெரும் பிரச்சனையானது..

எனக்கு எங்க இருந்து தொடங்குறதுன்னு தெரியல. அதே மாதிரி எப்படி தொடங்குறதுன்னும் தெரியல. முதல் தடவை நீ முறைச்சத பார்த்து தப்பு பண்ணிட்டமோ அப்படிங்கற நினைப்புல இருந்து மீண்டு, மறுபடியும் அதே மாதிரி ஒரு  மனநிலைக்கு திரும்பிட்ட மாதிரி இருக்கு. ஒருமாதிரி பாரமா கண்ணு ரெண்டும் இருட்டிகிட்டே வர்ற மாதிரி இருக்கு. அவ்வளவு நெருக்கமா எரிச்சிடுற மாதிரி பார்த்த. அது மட்டும் தான் திரும்பத் திரும்ப எழுத நினைக்கும் போதெல்லாம் வந்துட்டே இருக்கு. அதுனால அப்படியே என்ன நினைப்புல வருதோ அதையே எழுதிட்டு இருக்கேன். நீ ரொம்ப நேரம் வாசிக்கிற மாதிரி ரொம்ப பெருசா எழுதி கொடுக்கணும்னு தோணிட்டே இருக்கு. இது வரைக்கும் உன்கிட்ட என்ன கவனிச்சிருக்கேன்னு யோசிச்சி பார்த்தா ஒண்ணுமே இல்லாத மாதிரி தோணுது. சில  செய்கைகள் மட்டும் தான் கவனிச்சிருக்கேன். அதையும் என்னனு நான் எழுதுறதுன்னு தெரியல. உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் என் உடலும் மனமும் என்ன மனநிலைக்கு ஆச்சுன்னு இப்போதைக்கு சொல்ல முடியும்னு தோணல. இப்போ சொன்னாலும் சரியா வராது. இது எல்லாம் என் நினைப்பு தான். நீ என்னைவிட நூறு மடங்கு தெளிவான பொண்ணா இருக்க. இத்தனைக்கும் நீ என்கிட்ட ஏதும் பெருசா சொல்லிக்கிட்டது இல்லதான். ஆனாலும் இந்த எண்ணம் எனக்குள்ள ரொம்ப முன்னாடியே வந்துருச்சி.

எனக்கு உன்ன பிடிச்சிருக்கு அப்படிங்கறத தாண்டி என்னனு சொல்லன்னு எனக்கு சரியாத் தெரியல. நான் பின்னாடி அலையல. நீ பார்ப்பியானு உன்னையே பார்த்துட்டு இருக்கல. உன்னோட அட்டேன்சன் என்மேல இருக்கணும்னு நான் ஏதும் புதுசா பண்ணிக்கல. அப்படியே பேசினோம். ஒரு கட்டத்துல பிடிச்சுது. அப்புறம் உன்ன கவனிச்சேன்னு நினைக்கிறேன். காதல சொல்லனும்னு ஒரு எண்ணம். ஆனா உன்கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லிட்டு, அப்புறம் நீ கிளம்பினதும் உன்ன மிஸ் பண்ணேன். அது என்ன மாதிரியான மிஸ்ஸிங்க் அப்டின்னு எனக்குத் தெரியல. உன்னோட, உடம்போட அவுட் லைன் நோட் பண்ணினேன்னு நினைக்கிறேன். அப்படி இல்லனா உன்ன பாத்துட்டு இருந்தேன். இந்த லைன எழுதினதும் எதோ தைரியம் வந்துட்ட மாதிரி இருக்கு. ஆனா நான் உனக்கு பயப்படலையே. ரூம்க்கு வந்து எழுதும்போது இப்படியெல்லாம் தோணுது. எது உண்மைன்னு வேற எனக்கு பிரிச்சி பார்க்கத் தெரியல. ஆனா ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. எல்லாம் நடந்து ஒரு நாள் கூட, ஏன் பாதி நாள் கூட ஆகல. அதுக்குள்ள உள்ளுக்குள்ள வர நினைப்புல எது உண்மை எது எனக்கா தோணின ஒண்ணுனு பிரிச்சிப் பார்க்க முடியல. இல்லனா தெரியல.

எனக்கு இந்த மனநிலை ரொம்பவே பிடிச்சிருக்கு. எழுதிட்டே இருக்கும்போது ஸ்ட்ரக் ஆகுது. இப்படி ஆகும்போதெல்லாம், நமக்குள்ள நடக்கவே நடக்காத ஒன்னு, அப்புறம் நான் நினைச்சி கூட இதுக்கு முன்னாடி பார்க்காத ஒன்னு எல்லாம் வருது. அதுக்குள்ளயே வேற எது மேலையும் கவனம் போகாத மாதிரி இருக்கு. ஒரு மாதிரி நல்லா இருக்கு. இன்னும் ஒன்னு சொல்லட்டுமா? நீ லவ் அக்செப்ட் பன்னால, அக்செப்ட் பண்ண மாட்ட இந்த மாதிரிலாம் எந்த யோசனையும் எனக்குள்ள வரவே இல்லை. ஆனாலும் நீ நம்ம வெறும் நண்பர்கள் தான் அப்படின்னு சொல்லிட்டு இருக்க. அத தாண்டி உன் கண்ணுல நான் பார்த்தேன் அப்டிலாம் சொல்ல வரமாட்டிக்குது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் உன் கண்கள் சிரிச்ச மாதிரி இருக்கும். எப்பவும் கண்ணுல ஈரம் இருந்த மாதிரி இருக்கும். அது உன் கருவிழியும், மிச்சம் வெள்ளை பகுதியும் பளீர்னு காட்டும். அது தான் நான்உன்கிட்ட அதிகமா பார்த்திருக்கலாம். பார்க்குறதுக்கும், கவனிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

நகம் கடிக்கிற பழக்கம் இருக்றவங்க, இந்த மாதிரி நேரத்துல நகத்த கடிச்சி துப்பிட்டே இருப்பாங்கள்ல? என்னால இவ்ளோ நேரம் எப்படி தரைல உக்கார முடிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கு.எல்லாம் நிறைய பக்கம் எழுதி அத நீ ஒரே மூச்சுல என் முன்னாடி படிச்சி முடிக்கிற அந்த காட்சி தான், இந்த மாதிரி இருக்க வச்சிருக்கு. கூடவே இந்த லெட்டர அவ கிட்ட கொடுத்துராதடானு உள்ளுக்குள்ள கேட்டுகிட்டு இருக்கு. இது என்ன மாதிரியான மனநிலைன்னு கூட என்னால யூகிக்கவோ, சோதிக்கவோ முடியல. உன்பேர டிசைனா எழுதினத பார்த்துட்டு இருக்கேன். எனக்கே என்ன பிடிச்சிருக்கு. நான் சிரிக்கிறது எனக்குத் தெரியிற மாதிரி இருக்கு. காலேஜ் படிக்கும்போது டூர்ல பொண்ணுங்க பார்க்கனும்னு சத்தமா கத்தினது விசலடிச்சது எல்லாம் ஞாபாகம் வருது. அப்படிகத்திடலாம்னு தோணுது. எழுதினத மேல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன். என்னோட எழுத்த அப்படியே font மாதிரி டிசைன் பண்ணிடணும்னு தோணுது. அப்படியே உன்னோட கையெழுத்தையும். பெருவிரல் அதுக்குள்ள வலிக்குது. அப்படி பண்ணிட்டா லேப்டாப்ல  லெட்டர் எழுதலாம். நீ எழுதுறதுக்குனு பார்த்து பார்த்து க்ரிப் செட் ஆன பேனா வாங்கி வச்சித்தான் எழுதுவேன்னு நீ சொன்னத நமக்கும் பொருத்திப் பார்க்கிறேன். அது என்ன நமக்கும்னு நீ படிச்சிட்டு வந்து என்கிட்ட கேக்குற மாதிரி கூடவே ஒரு காட்சி வருது.

முன்முடிவு இல்லாம தான் அப்படியே ப்ளாங்கா உன்கிட்ட இருக்கணும்னு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சம்பவமும் நடக்கும்போது நடந்துக்கணும்னு என்னை நானே தயார் படுத்திகிட்டே இருக்கறேன். ஆனாலும் காதலை சொன்னதுல இருந்து எல்லாமே என் வரம்பு மீறி போயிட்டு இருக்கு. ஆனா எனக்கு என்னையவே எச்சரிக்கத் தெரியல. ரொம்ப சந்தோசமா எழுதிட்டு இருக்கேன். நிறைய விஷயம் நீ என்கிட்ட சொன்னதில்ல. ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு நீயே என்கிட்ட கொண்டு சேர்த்த மாதிரி இருக்கு.நீ எவ்ளோ அழகா இதெல்லாம் எனக்கு சொல்லிருக்கல்ல? கண் நிறைஞ்சி போகுது. உனக்கு குடுக்கனும்னு எழுதின மாதிரியே தெரியல. எனக்கு எனக்கு எண்ண தோனுதுன்னு உன்கிட்ட நேரடியாவே சொல்லிடறது உனக்கு பிடிக்கும்னு தோணுது. இப்படி தோணுறத எப்படியும் நீ தான் நிறுத்தனும். எனக்கு இப்படி தோணுறத ஒரு நாள் எங்கையாவது நான் கோபப்படுவேன். நீ கண்டு பிடிப்ப. அப்புறம் எனக்கு சொல்லிக் கொடுப்ப. எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் சந்தோசமா இருக்கேன் துளசி. முதன் முதலா காதலை ஒரு  பொண்ணுகிட்ட சொல்லிருக்கேன். வாழ்க்கையே முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கு. ரொம்ப பலமாவும் தெரியுது. மொத்தமா என்னோட பலவீனமும் நீ மாதிரி இருக்கு. என்னால இத என்ஜாய் பண்ண முடியும். நீ அக்செப்ட் பண்ணுற வரைக்கும் என் இஷ்டம் போல ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டே இருக்க முடியும். நீ நம்ம நண்பர்கள் அப்படின்னு சொல்லி சொல்லியே என்ன நிதானமாவும் நிறைய கத்துக்கவும் வைப்ப.

இத எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உன்ன மனசுக்குள்ள திட்டிட்டேன். ஆள் நடமாட்டம் இல்லன்னு தெரிஞ்சதும் ஒரு தாய் நாய் தன் குட்டிகளை இடம் மாத்துறதுக்கு மும்மரமாஇருந்துச்சி. எனக்கு பாட்டு ஓடுறதே இடைஞ்சலா தெரிஞ்சது. வெளிய வேடிக்கைப் பார்த்துகிட்டு நின்னேன். அந்த குட்டிகள் மாதிரி நான்  உன் பின்னாடி வரதும், நீ என்னை கவனமா பாத்துக்குறது மாதிரியும் நினைச்சிப் பார்த்துக்கிட்டேன். அப்புறம் சரி எழுதிடலாம்னு அறைக்குள்ள வந்ததும்  ஏனோ என்னோட ஜாயினிங் லெட்டர் பார்க்கனும்னு தோணிச்சி எடுத்து பார்த்துகிட்டே, அன்னைக்கு தானே முதல் முதலா உன்ன நான் பார்த்தேன். எப்படியும் இரண்டு வருஷம் குறையாம வேலை தேட மாட்டோம்னு பெட்டிக்குள்ள போட்டது. தேடி எடுத்தேன். “உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? கேக்கவும் இல்லையாம் படிக்கணுமாம்?” மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். உன்ன எப்படி திட்டணும்னு வேற தெரியலையா… எப்படியாவது எழுதிடணும்னு முடிவு பண்ணி அதுக்கு அப்புறம் தான். உன்னோட பெயர் எழுதி என்னலாமோ பண்ண ஆரம்பிச்சேன்.

என் உடலிலா உயிரிலா என்று கண்டறியமுடியாத படிக்கு பற்றி எரியும் நகுலனுக்கு….

– தொடரும்

(ரமேஷ் ரக்சன்)

email id : talk2rr@yahoo.com

நாக்குட்டி – 7

னக்கு இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியமாக என்று சொல்வதைவிட, இது எப்படி என்னையறியாமல் நிகழ்ந்தது என்று திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு உடைப்பு மாதிரி இருக்கிறது. அல்லது விடுபடல் என்றும் நினைத்துக் கொள்கிறேன். நெருஞ்சிப் பூக்கள் விரிந்துக் கிடக்கும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். இனிமேல் கூடவே கூடாது என்று, வெளிச்சம் இருட்டிய கண்களோடு மைதானத்தில் நூறு மீட்டர் தொலைவிருக்கும். நடக்க நடக்க தெளிந்து தளர்ந்து போன மனநிலையைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு இப்போது உற்சாகமாகத் தெரிகிறது. மனதின் பாரத்தை உடலா சுமக்கிறது? இல்லை உடலை மனம் சுமக்கிறதா? காமத்தின் எடை உடலைவிட பெரிதாக இருக்குமோ? எடை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அலைபேசியில் விருப்பத்தைச் சொல்லியிருந்தால் இவ்வளவு எடையை உணர்ந்திருக்க மாட்டேன். ஆனாலும் அவள் எதிரில் நிற்பதைத்தான் துளசி விரும்புவாள். அவளைக் கைகாட்டுவதில் என்ன இருக்கிறது? அவள் எதிரில் நிற்க வேண்டுமென்று விரும்புவது அவளின் அடிப்படை குணமா இல்லை என் பயணத்தின் வழியே அதனைக்கண்டு கொண்டாளா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. துளசியிடம் காதலைச் சொல்லும்வரை என் சார்ந்து யோசிக்க மனம் மறுத்தது. அவளுக்கான அவகாசம் கொடுத்தது போலிருந்தது. பொறுமையாக நகர்ந்தது போலத்தான் இருக்கிறது. அவள் பேசிப் பேசித்தான் என்னை இவ்வளவு தூரம் நகர்த்தினாள். பார்த்தவுடனே காதலா என்றால் என்னால் சரியாக நினைவு படுத்த முடியவில்லை. காதலைச் சொன்ன அன்று வெளிச்சம் அத்தனைப் பிடித்தமானதாக இல்லை. கண்களை மூடியிருந்தேன் அவ்வளவு தான். இருட்டு மீது ஒரு ஈர்ப்பு ஒட்டிக் கொண்டது. அறையில் வெள்ளை நிற பல்பை கழற்றிவிட்டு வெளிச்சத்தைக் குறைத்திருந்தேன். என் காமம் நிர்வாணத்திற்கு அலைந்தது. கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் கழட்டியிருந்தேன். வலது கை மோகம். அலுவலகம் திரும்பி வந்ததும் ஆடை மாற்றினாலும், கடிகாரத்தை கழற்றுவதற்கு மனம் ஒத்துக்கொள்ள கொஞ்சநாள் ஆயிற்று. வெற்று உடலில் கைக்கடிகாரத்தை மட்டுமே கட்டி நெஞ்சுவரைத் தெரியும் கண்ணாடியில் கையை நெஞ்சில் வைத்துப் பார்த்திருக்கிறேன். ஏனென்றேத் தெரியாமல் செவ்வரளிப் பூக்களை நினைத்துக் கொண்டிருப்பேன். உதிரிப் பூக்கள். அவளிடமிருந்து உடனே எந்த பதிலும் வரவில்லை. சொல்லவைத்தவள் போல காட்டிக்கொண்டாள். எனக்கு அப்படி ஒரு நினைப்பு. அவள் சாப்பிட அழைத்து நான் பதில் சொல்வது போன்ற உரையாடல். எனக்கும் கூட அவள் பதில் தேவையானதாய் இல்லை. சொல்லிவிட்டு சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டால்  போதுமென்று தான் இருந்தது. வெள்ளை நிறம் மறைந்து தண்ணீர் வடிவத்தில் மாறி, எறும்பு ஊர்ந்து கொண்டிருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை நினைத்துத்தான் நிகழ்த்தப்பட்ட சுயமைதுனமா என்று திடிரென யோச்கிக்கத் தொடங்கியிருந்தேன். அப்படி யோசனை வரவேண்டிய அவசரம் என்ன வந்தது?

காதலைச் சொன்ன மனநிலையை தப்புவதன் நிமித்தம் மீள் வடிவம் செய்ய முயன்று கொண்டிருந்தேன். அது ஒழுங்கற்று இருந்தது. கொஞ்சம் ஓடுகலான பின் பக்கம் திரை உள்ள, கை கழுவுமிடத்தில் என் இடப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். பாதி கை கழுவிய நிலையில் என் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகுட்டை எடுக்க முயற்சித்தபோது, தொங்கிக் கொண்டிருந்த அவளின் வெள்ளை நிறத் துப்பட்டாவோடு கை நுழைய தோளைப் பிடித்துக் கொண்டு முறைத்தாள். கொஞ்சம் கருப்பேரிய உள்ளங்கை. அழுக்காக்கி விட்டோமோ என்று தான் முதலில் தோன்றியது. “ஸாரி கவனிக்கல என்றேன். ம் என்றாள்” அவ்வளவு வேகமாக நாசி ஏறிவிட்டது கோபம். பார்த்தவுடனே காதல் எப்படி வரும்? நான் பயப்படுகிறேன் என்று தெரிந்தது. பயம் காதலைச் சொல்வதிலா இல்லை துளசியிடம் சொல்வதிலா என்று தெளிவு படுத்திப் பார்க்கிறேன். அப்படியெனில் இதற்கு முன் ஒரு பெண்ணிடம் கேட்டிருக்கிறேன். காதலைச் சொன்ன ஒரு பெண்ணையும் நிராகரித்திருக்கிறேன். நான் கேட்டது காதலின் அடிப்படையில் இல்லை என்பது ஞாபகத்திற்கு வருகிறது. பிடித்தத்தின் பேரில் நிகழ்ந்த ஒன்று. அப்போதெல்லாம் இந்த மூச்சு முட்டல் இல்லை. அப்போதெல்லாம் இந்த விடுதலை தேவைப்படவில்லை. அவளின் உடல் மீது விருப்பற்று இருந்தது, காதலின்றி சொன்னதால் கூட இருக்குமா என்று துளசின் நினைவிலிருந்து வேறு எங்கெல்லாமோ தாவிக் கொண்டிருந்தேன். உண்மையில் சொல்லப்போனால், காதலைச் சொன்னதிலிருந்தே எனக்கு அவள் மேல் காமம் தொற்றிக் கொண்டது. அவளின் விருப்பம் தெரியவில்லை தான். ஆனால் அவள் வேண்டுமென்று மறுக்கிறாள் என்று நான் பிடிவாதமாய் நம்பியதும் ஒரு காரணம். அதுவே அவளின் உடல் நோக்கி நகர்த்தியிருக்கிறது. அதுவே என்னை உற்சாகத்திற்குத் தள்ளியிருக்கிறது. நாளையிலிருந்து மதியம் சாப்பாட்டிற்கான மெசேஜ், அழைப்பு வருமா என்ற எண்ணம் ஒரு பக்கம் யோசனையிலும், மறுபக்கம் பேசாமல் அவள் எதிரில் இருக்கப்போகிறோம் என்ற பிம்பமும் குதூகலமாக்கியது. அவளுக்குத் தெரிந்து தானே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அவள் எப்படி என்னை நிராகரித்துவிட்டு தனியே சாப்பிடுவாள்? நாம் நண்பர்களாக இருப்போமென்று மிளிரும் கண்களோடு சொல்வாள் என்ற விசுவல் கொண்டாட்டமாக இருந்தது. இதையெல்லாம் தாண்டி, புதிதாய் ஒரு ஆணைக் கொண்டு நிறுத்துவற்கு வாய்ப்பே இல்லை என்று துளசியிடம் பேசியவரை அவள் கொடுத்த நம்பிக்கையும், பதிலற்றுக் கிடக்கும் இந்தக் காதலின் கொண்டாட்டத்திற்கு ஒரு காரணம்.  “ப்ரப்போஸ் பண்ணப்போறியா” அவளிடம் கொஞ்சம் பேச வேண்டுமென்று சொல்வது போன்று நினைக்கும் போதெல்லாம் என்னை மீறி அந்தக் குரல் வெளிப்படும். அவள் அப்படியானவள் தான். என் கிறுக்குத்தனங்கள் அவளிடமில்லை எழவில்லை என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தவள். அதுவே அவள் பயமற்று என்னிடம், என்னுள் வெளிப்பட காரணமாகவும் இருக்கலாம். என் பயத்தைப் போக்கியிருக்கிறாள். அல்லது அவள் என்னிடம் தைரியமாக இருக்கிறாள். அவள் என்னை முற்றிலுமாய் துண்டிப்பாள் என்ற நினைப்பு எழாமல் இருக்கவே, படிக்கட்டில் நடக்கத் தொடங்கினோம். அவளுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும். அது அவள் தேர்ந்தெடுத்த நாள் போலவே அலைபேசியை எடுத்ததும் “வெளியதான் வந்துட்டு இருக்கேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள். லிப்டில் சென்று, கேப் நிற்கும் இடத்திற்குச் செல்லும் இடைவெளியில் சொல்லிவிடலாம் என்று நினைத்திருந்தேன். “ஸ்டெப்ஸ்ல போவோம் வா” என்றாள். ஒருப்போலவே படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தோம். எனக்கு நகரும் படிக்கட்டில் நிற்பது போன்று தான் இருந்தது. சொல்லுவதற்கான பிரயர்த்தனம் அவள் உடலைப் பார்க்க வைத்தது. அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். பக்கவாட்டில் பார்த்து நேரானேன். அக்குளை ஒட்டிய கை. அவள் உள்ளாடை தசை இறுக்கி முதுகிற்குத் திரும்பியிருந்தது. மணிக்கட்டில் கொஞ்சமே கொஞ்சமாய் கருப்பு. பெருவிரலை மடித்து ஒரு சொடுக்கு. அவளை முதன் முதலாய் அளந்து கொண்டிருந்திருக்கிறேன். ஆறாவது தளத்திலிருந்து ஒரு மாடி இறங்கியதுமே “என்ன?” என்று கேட்டுவிட்டாள். அவள் செருப்பு நான் கிராமத்தில் போட்டுத் திரிந்ததை நினைவு படுத்தியது. இன்னும் கொஞ்சம் இறங்கிக் கொள்ளலாமே என்று சொன்னதும் சிரித்துக் கொண்டாள். அவள் தோளில் போட்டிருக்கும் பையில் பிங் நிறத்தில் ஒரு இதயம் தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கேட்டு வாங்கி அவளிடமே கொடுத்து விடலாமா என்று தோன்றியது. இப்போது நினைக்கையில் என் இதயத்தை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாயா என்று அங்கலாய்ப்பாள். நடந்து நடந்து விரல்கள் அகன்று போன கால்கள். தெருவில் நடக்கும்போது பாதம் பட்டு எழும் மிதியடி ஓசை. முருங்கைக்காய் நிறைந்த வொயர் கூடை ஒன்றை மத்தியான வெயிலுக்கு முன் சுமந்து வரும் என் பாட்டி எதற்கு நினைவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. பின்னாட்களில், துளசி கால்மேல் கால்போட்டு அமர்ந்து, குதிங்காலில் விரல்களின் துணையோடு, செருப்பை டப் டப் என்று எப்போதாவது அடித்துக் காட்டுவாள். அலைபேசியின் முன் பக்கக்கேமராவில் அறையில் இருந்து வரும் பொழுது ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொண்டேன். வழக்கத்திற்கு மாறாக நீர்த்தன்மை கூடியிருந்தது. மதியம் அவள் எதிரில் அமரும்போது, கண்களைப் பார்த்து அவளே கேள்வி கேட்டு என்னைச் சொல்ல வைத்துவிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன். மனதிற்குள் அப்படிச் சொன்னது ஒரு வேண்டுதல் போலத் தான் எனக்குக் கேட்டது. அவளுக்குத் தெரிந்திருக்கிறது. நிறையமுறை சிரித்தாள்.

காதலில் நிதானம் அப்டிங்கறது பசங்களுக்கு 24 மணி நேரம்னா பொண்ணுங்களுக்கு 48 மணி நேரம். You Know! நிதானம்னா தாக்குப் பிடிக்கிறது.”

இரண்டாவது மாடி இறங்கிக் கொண்டிருக்கும்போது ஹெட்போனை எடுத்து தெத்தெடுப்பது போல பாவ்லா செய்து கொண்டிருந்தாள். வேண்டுமென்றே என்னை நுனிக்குத் தள்ளுகிறாள் என்று தெரிந்து கொண்டேன். நீட்டிய கையில் ஹெட்போனைக் கொடுத்துவிட்டு என்னைவிட ஒருபடி முன்னே இறங்கிக் கொண்டிருந்தாள். மேலிருந்தே சொல்லிக் கொண்டு வந்த “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு” என்பது காற்றில் “லவ் யூ” என்று மாறியிருந்தது. எனக்கே கேட்கவில்லை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு என்று எழுதிப் பார்த்திருக்கிறேன். ஐ லவ் யூ என்று சொல்லிவிடக் கூடாதென்று தீர்மானமாக இருந்தேன். அவளுமே ச்ட்டென துப்புவதை விரும்ப மாட்டாள் என்று மதியமெல்லாம் சொல்லிப் பார்த்திருந்தேன். “இந்தா” என்ற குரலுக்கு திரும்பி கை நீட்டினாள். ஹெட்போனை வைத்தபடி கையைப் பற்றி “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு” என்று விடுவித்தேன். ஏதுமற்றக் கைகளை பிசைந்துகொண்டே நடந்தேன். விரலைப் பற்றுவேன் என்று நிச்சயம் எதிர் பார்த்திருக்க மாட்டாள். உள்ளங்கைப் பற்றிய திருப்தியில் அவள் பதில் தேவையற்றவனாய் அவளைத் தொடர்ந்தேன். திரும்பிப் பார்க்கவில்லை. 

கூட கூட பேசுறவன கூட விட்டுடலாம். ஆனா நீ அமைதியா இருக்கியே 

மாடிப்படிகள் தீர்ந்து வராண்டாவிலிருந்து வெளியேறுகையில், “தொந்தரவு பண்ணாம லவ் பண்ணனும் சரியா? ஆனா எனக்கு நீ நண்பன் தான் நண்பா நாளைக்கு லஞ்ல பார்ப்போம் ட்ரீட் எந்து” என்றாள். அவள் என்னை வேட்டைக்குப் பழக்குகிறாளா இல்லை தொட்டி மீன்களுக்கு இது தான் கடல் என்கிறாளா என்ற குழப்பம் வேறு. இரவு கடற்கரையில் அமர்ந்திருக்கும்போது இதே யோசனை. இதே சொல் திரும்பத் திரும்ப என்னைச் சொல்ல வைத்துக் கொண்டிருந்தது.

எதையும் யோசிக்காமல் வேலை பார்க்கச் சொன்னாள். காலம் பதில் சொல்லட்டும் என்றாள். என்னிடம் எதுவும் முயற்சிக்காதே என்று கேட்டுக் கொண்டாள்.  எப்போதும்போல பேசிக் கொள்வோம். “don’t change your body language” என்றாள். எனக்கோ நான் இப்படியெல்லாம் நடந்து கொள்வேனா என்றிருந்தது. எல்லாவற்றிற்கும் சிரித்து வைத்தேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது. எல்லாம் முடிந்து மீண்டும் கொஞ்ச தூரம் அமைதியான நடைக்குப்பின், “எனக்கு லவ் லெட்டர் படிக்கணும்னு ஆசை. ஆனா உன்கிட்ட நான் ரிக்வெஸ்ட் பண்ணவோ இல்ல வேணும்னோ கேக்கல” என்றாள்.

காதலே சுயநலம் தான். காதல்ல இல்லனா எப்படி?

தொடரும்

ரமேஷ் ரக்சன்

talk2rr@yahoo.com