Tag Archives: நேர்காணல்

நேர்காணல் – லஷ்மி சரவணக்குமார்

தமிழ்நிலத்தின் பொது பிரச்சினைகளுக்குக் களம் இறங்கும் அறிவுசீவிகளின் எண்ணிக்கை எப்போதும் சொற்பமே, சில விதிவிலக்குகள் உள்ளன. அப்படியான விதிவிலக்கான நம் நண்பர் லஷ்மி சரவணக்குமார். இந்த இளம் வயதில் மிகத்தீவிரமாக எழுத்து, திரைத்துறை சார்ந்த பணிகளோடு மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக்கும் எழுத்தாளனாகவும், அநீதிகளின் பால் குரல் கொடுக்கும் கலகக்காரனாகவும் இருந்துவரும் அவரோடு, இலக்கியத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல்பற்றிய ஒரு சிறு பேட்டி.

  1. முதல்கேள்வியாகவே கேட்டுவிடுகிறோம் இணைய வெளியில் ஏன் இத்தனை கூப்பாடுகள், ஏன் நீங்களாவது அவர்களைப் போல பதில் தாக்குதல் செய்யாமல் இருந்தால் என்ன?

நாகரீகம் தெரிந்தவர்களோடு தானே நாம் நாகரீகமாக உரையாடவோ சண்டையிடவோ முடியும். மனுஷ்யபுத்திரன் மாதிரியான சிலர் ஒருபோதும் நாகரீகமான விவாதாங்களுக்கு தயாராய் இருப்பதில்லை. முக்கியமாக மனுஷ் அரசியல்வாதியாய் மாறின பிறகு இணைய வெளியில் நடந்து கொள்வதெல்லாம் தெருச்சண்டைக்காரர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார். ஒருவேளை முழு அரசியல்வாதியாவதற்கு இதுதான் அடிப்படை தகுதி என  நினைக்கிறாரோ என்னவோ? இயல்பாகவே மற்றவர்கள் எப்போதும் தன்னைக் கவனிக்க வேண்டுமென்பது குறித்த அதீத கவலை அவருக்குண்டு. அதனால் தான் பத்துப் பைசாவிற்கு பெறாத சமாச்சாரங்களைக் கூட அவர் பெரிய சண்டையாக மாற்றுகிறார்.

இதுவொரு விதமான மனநோய். மேலும் இதுமாதிரியான சமயங்களில் அவர் பயன்படுத்துகிற வார்த்தைகள் அருவருப்பானவை. இந்த சமூகத்தில் இருக்கும் எல்லோரைக் குறித்தும்  நான் மிக மோசமான சொற்களால் விமர்சிப்பேன், யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாதென நினைப்பது அவரின் அறம். அதிலும் குறிப்பாக கவனித்தால் நாம் ராயல்டி தொகை குறித்து எதையாவது கேட்டால் ஒருநாளும் பதில் வராது,. அதைத் தவிர்த்து எல்லாவற்றிற்கும் வாந்தியெடுப்பார். அறம் குறித்து எல்லோருக்கும் வகுப்பெடுக்க உரிமையுண்டு, குறைந்தபட்சம் தான் யாரென்கிற சுய விமர்சனத்தோடு அதை செய்தால் நலம்.

மற்றபடி நாம் நாகரீகமாக பதில் சொன்னாலும் பல சமயங்களில் இங்கிருப்பவர்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் சற்றேறக்குறைய தெருச் சண்டைகளுக்கு ஒப்பான வார்த்தைகள் தான்… பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால் அவர்களுக்கு அது கொண்டாட்டம், பிறகு எப்போதெல்லாம் தனது பெயர் தனது ட்ரண்டிங்கில் வர வேண்டுமென விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் இணைய பக்கத்தில் நம் குறித்து வாந்தியெடுக்கத் துவங்குவார்கள்.

  1. உங்கள் இலக்கிய அரசியல் என்று எதைக் கொள்வீர்கள்?

நான் இப்போதும் அமைப்பு சாராத இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன். அடிப்படையில் மார்க்சியத்தின் மீது நம்பிக்கையுள்ளவன். என் இலக்கிய அரசியலும் அதுதான்.

  1. தைப்புரட்சி நடந்து கொண்டிருந்த போராட்டக்களத்தில் உரையாற்றிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தானென நினைக்கிறேன். அந்த தருணம் எப்படியிருந்தது?

கலை இலக்கிய செயல்பாட்டில் உள்ள ஒருவன் தான் நம்பும் அறத்திற்கு குறைந்தபட்சம் நேர்மையாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இந்த சமூகம் குறித்து எந்தக் கவலைகளும் இல்லாமல் குருவிகள் பறந்து கொண்டே இருப்பதைக் குறித்தும், கொஞ்சம் உப்பு குறைந்து போன இடியாப்ப சொதி குறித்தும் தன் வாழ்நாள் முழுக்க கதை எழுதுவது சமூகத்திற்கு ஒரு கலைஞன் செய்யும் துரோகம். எழுத்து, ஓவியம், நாடகமென எந்த வடிவமாகினும் கலைச்செயல்பாடென்பது மக்களைப் பிரதானப்படுத்தி இருக்க வேண்டியது. அத்தோடு கலைஞனும் இந்த சமூகத்தில் ஒருவன்.

தமிழ் சமூகம் கடந்த சில தசம வருடங்களாகவே மத்திய அரசால் துரோகிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நமது அடிப்படை உரிமைகளைக் கூட நாம் போராடி பெறவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் தை எழுச்சியின் போதான மாணவர்களின் கொந்தளிப்பு ஒரு முக்கிய நிகழ்வு. போராட்டம் துவங்கிய முதல் நாளிலிருந்து நான் அந்த இளைஞர்களோடு எந்த அமைப்பாகவும் இல்லாத தனிமனிதனாகவே நின்றேன். விருதைத் திருப்பிக் கொடுத்த தருணம் இன்னும் நிறைய எழுதுவதற்கான உந்துதலை தந்ததோடு மெரினாவில் பெருந்திரளான மக்கள் முன்னால் பேசிய பொழுது அங்கு திரண்டிருந்த அந்த மாபெரும் கூட்டம் வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பால் திரண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புத்தகம் விற்பதில்லை என கவலைப்படும் எழுத்தாளன் இந்த புத்தகத்தில் சமூகத்தை பிரதிபலிக்கிறோமா என்பதையும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளுதல் நலம்.

        4. மெரினா புரட்சிக்குப் பின்னர் தான் லஷ்மிக்கு எதிரிகள் பெருகிவிட்டார்களென்று உணர்கிறேன். பெருகிவிட்ட எதிரிகளின் பொதுப்பண்பு என்னவாக இருக்கிறது? 

26 வயதில் உப்புநாய்கள் நாவல் வெளியானது. இன்று அந்த நாவல் எத்தனை பதிப்புகள் கடந்து எத்தனை ஆயிரம் பிரதிகள் விற்றுள்ளன என்பதிலிருந்து என் மீதான மற்றவர்களின் கசப்பை நான் புரிந்து கொள்கிறேன். எழுத வந்த இத்தனை வருடங்களில் எதிர்ப்பையும் கசப்பையுமே அதிகம் சம்பாத்தித்திருக்கிறேன், அதில் எனக்குத் துளியும் வருத்தமில்லை. மேலும் தமிழ் இலக்கியச் சூழலில் அதிகமும் ஒரு தனிமனிதனின் மீது வரும் கசப்பு அரசியல் ரீதியானதாய் இருப்பதில்லை. அது முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் தான். மெரினா போராட்டத்தில் நான் பங்கு கொள்வதற்கு முன்பும் இதே நிலைமை தான். ஏதாவது காரணம் சொல்லி தூற்றுவது மட்டுமே அவர்களின் வேலையாக இருப்பவர்கள் யாரும் இங்கு தொடர்ந்து எழுதுவது இல்லை. எனக்கு எழுத இன்னும் நிறைய இருப்பதால் அவதூறுகளுக்கு பதில் சொல்வதில்லை.

  1. லஷ்மி, யார் உங்களது நண்பன்?

இலக்கிய சூழலில் எனக்கு நண்பர்கள் இல்லை. இதற்கு முன்பு சிலர் இருந்தனர். இப்போது அப்படி யாரும் இல்லை. யாருக்கும் நண்பனாக இருக்கவும் நான் விரும்பவில்லை.  எழுத்திற்கு வெளியே கொஞ்சமே கொஞ்சமாய் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை நான் எத்தனை கொண்டாடுகிறனோ அத்தனை கொண்டாட்டமான மனிதர்கள் இவர்கள்.

  1. இணையப் பொறுக்கிகள் ஒன்று கூடுவதில் என்ன தான் நிகழ்ந்துவிடக்கூடும்?

எதுவும் நிகழ்ந்துவிடாது, ஆனால் இந்த வார்த்தைகளை உருவாக்குகிற ஆட்களின் மனநிலை மிகவும் ஆபத்தானது. இந்த சண்டியர்கள் பத்திரிக்கை வைத்திருப்பதாலும் பதிப்பகம் நடத்துவதாலும் செய்யும் அதிகாரத்தை பொடனியில் அடித்து கேள்வி கேட்கவேனும் அவர்கள் யாரையெல்லாம் பொறுக்கி என்று சொல்கிறார்களோ அவர்கள் ஒன்று திரண்டு அவ்வப்போது கல்லெறிவது தேவையாய் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் அரசியல் பலத்தை பயன்படுத்தி தனித்து விடப்படும் ஆட்களை இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும். ( அவர் சார்ந்த கட்சி பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்றதோடு அதை பின்னர் எல்லோரையும் மறக்கவும் வைத்ததை நினைவுபடுத்துகிறேன்… அந்த வெறி இவர்களின் ரத்தத்திலும் இருக்குமென்பதால் எச்சரிக்கையாய்த்தான் இருக்க வேண்டும்.)

  1. தமிழில் கவிதைகள் மீது ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமைக்கு யார் காரணமாயிருக்கக் கூடும்?

கவிஞர்கள் தான். கவிதைகளின் மீது கறாரான விமர்சனம் இல்லாமல் போனதுதான் கவிதைகள் மீதான ஒவ்வாமைக்கு முக்கியக் காரணம். அத்தோடு சினிமா பாடல்கள். தமிழ்நாட்டின் 90 சதவிகித ஆட்களுக்கு இன்னும் சினிமா பாடல்கள் மட்டுந்தான் கவிதை என்றிருக்கிறது.

  1. தங்களது சமீபத்திய இலங்கைப் பயணம் குறித்து

இலங்கை சென்றது இரண்டாவது முறை. திலீபன் நாவலை முடிப்பதற்குள் இன்னும் எத்தனை முறை பயணிப்பேன் என்று தெரியாது. கடந்தமுறை சென்ற போது பதிமூன்று நாட்கள் சாலை வழியாக மிக நீண்ட பயணம். நிறைய நண்பர்களோடு உரையாடியது முக்கியமான அனுபவம். யுத்தம் முடிந்த குறைந்த காலத்தில் அந்த நிலத்திலிருக்கும் மக்களை மிக வேகமாக யுத்தத்தை மறக்க வைப்பதற்கான எல்லா வேலைகளையும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் செய்து கொண்டிருப்பது ஒருவகையில் தமது அடிப்படைத் தேவைகளைக் கேட்பதற்காக கூட அம்மக்கள் மீண்டும் ஒன்று திரண்டுவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை தான். இந்த முறை மனைவியோடு சென்ற பயணம் என்றாலும் அடிப்படையில் எனக்கு அந்த நிலம் முழுமையாக பரீட்சயமாக வேண்டுமென்பதற்காகத்தான் இலங்கைக்குத் திட்டமிட்டோம். அடுத்த ஆண்டிற்குள் முடித்துவிட உத்தேசித்துள்ளேன். பார்க்கலாம்.

  1. பதிப்பாளராகும் காரணத்தைச் சொல்லிவிட்டீர்கள், பதிப்புலகில் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

நிதானமாக புத்தகங்கள் கொண்டுவந்தால் போதுமெனத் தோன்றுகிறது. வரிசையாக நாவல் சிறுகதைகள் என குவிக்க விருப்பமில்லை. சூழலியல் சார்ந்தும் குழந்தைகள் சார்ந்தும் புத்தகங்கள் கொண்டு வர விரும்புகிறேன். அதோடு கொஞ்சம் அரசியல் நூற்களும்.

***