கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 12

தனிமை நுதம்பி..
*
மண்டைக்குள் தலைகீழாய் இரவு நெடுகத்
தொங்கும்
 
லை
யா           ஒன்றும் செய்வதற்கில்லை
ரை
 
துணையற்ற படுக்கையின்
கலைந்த விரிப்புகளின் மடிப்புச் சிக்கல்களை
வெட்டாத நகம் கொண்டு நீவி
விடுதல்
 
ஆறுதலாயிருக்கிறது
 
எழுத நினைத்த இவ்வரிகளை
விட
 
***
 
கனலாற்றி..
*
நீறு பூத்த அஸ்தமனத்தின் சாம்பல் நிறச்
சுவை
சொற்கள் மடியும் நாக்கின் அடியில் கரைந்திடாத
அர்த்தமொன்றை திரளத்
தூண்டியே
 
மிச்சமாகிவிட்ட வெளிச்சத் துணுக்கை
உள்ளங்கையில் பூசி
 
காகிதச் சுருளாக உருட்டிப் பொருத்திய உதட்டு திமிரில்
எரியத் தொடங்குகிறது
 
யாருக்கும் பயன்படாத இளமைக்கால சத்தியத்தின்
நகல் என
 
***
 
உப்பிச் சிதறும் பசலைக் குமிழி
*
பயணக் களைப்பில் அருந்த
காத்திருக்கும்
தேநீர் கோப்பையின் விளிம்பில்
மெல்ல நகர்கிறது இந்த சாயங்காலம்
 
உதடு பட்டு இடம் மாறும் அந்தி வெயிலின்
இனிப்பைச் சுவைக்க
பின்னிரவில் தான் வருவாய்
முதுகில் கொஞ்சம் நிலவைப் பூசிக்கொண்டு
 
அதுவரை
 
கொஞ்சம் இசையும்
இந்தப் படிக்கட்டும் போதுமானது
 
***
 
நுழைவாயில்
*
நகரும் நிழல் விளிம்பைப்
பார்த்தபடி
அசை போடும் ஆட்டின் கண்ணொளியில்
புத்தப் புன்னகை
 
சாயல்களை
கண்டு வியக்கும் வாழ்வின் பழக்கத்தில்
நனவிலியினூடேதோன்றும் பிம்பத்தின் பிரதியை
அபகரித்துக்கொள்கிறது இரவு
 
கனவில்
புன்னகை விளிம்பும் புத்தனின் நிழலும்
அசை போடுகின்றன
 
ஆட்டின்
கண்ணொளியை
 
***
 
ஆதி டி.என்.ஏ வை ஆராயத் தொங்கும் வரைபடம்
*
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிற அது
கொடுத்தது ஒலியை
எழுத்தல்ல
 
கூடி இணைந்தவைகளில்
கூட்டி எழுப்பிய பொருள் சந்தையில்
 
மதிப்பின் ஈடு நிர்ணயித்தல்
கை குவிப்போ பேரத்தின் சாட்சியோ நீங்கி
இருப்பின் அழுத்தம் துடிப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறது
 
காட்சித் தோற்றப்பிழையைமாயமாக்கும் தொடர் புள்ளி
இணையக் கூடுவது ஒளியால்
 
மொழியல்ல பிம்பமல்ல
மனமல்ல
 
அது அஃது
…..து
 
புறம் வீசும் புராதான வாசத்தின் மறந்துவிட்டதாக நம்பும்
ஞாபக மிச்சம்

 

***

-இளங்கோ
 
சென்னை
28-DECEMBER-2016