Monthly Archives: October 2013

ப.தியாகு – கவிதைகள்

ப.தியாகு – கவிதைகள்

awww !1) கடல் நாணச் செய்துவிடல்

உடைமரங்கள் சேகரித்து
கட்டுமரம் செய்துகொண்ட
சமயோசிதத்தின் முன்
நீண்ட தொலைவு காட்டி
அச்சுறுத்தும் கடலின்
பிரயத்தனம் பலித்துவிடவில்லை

அதன்பின்
வசதியாய்
நழுவிக்கொள்ள விட்டுவிட்டேன்
என் கால்களுக்குக்கீழ்
கடலை..

 

 

2)
தயக்கத்தை
முடிவுக்குக் கொண்டு வருவதென
திறந்து வழிவிடுகிறதிந்த
மின் தூக்கியின் கதவு
கிடைத்த தனிமையில்
தந்து பெறத் தவித்து
நாம் கைவிட்ட முத்தம்
இப்போது
தரைத்தளத்துக்கும்
ஐந்தாம் தளத்துக்குமாய்
அலைந்தபடியிருப்பதன்
துயரத்தை சொல்வதெனில்
அதுவொரு உபகவிதை.

 

 

3) சமாதானத்தின் மடி
catharine la rose

சதா இரையும்
உன் பேத்தல்கள் அனைத்தும்
அடக்கிக்கொண்டுவிட்டன
சிறு முனகலில்

வேட்கையோடு நீ
சரித்துக்கொள்ளும் ‘வோத்கா’
உள்ளத்து ரணங்களின்
சீழோடு வினையாற்றி
இமைப்பீலிகள் நனையப்பொங்கும் கண்ணீராகும்
வேதி விளைவுகளுக்கு
அவசியங்கள் இல்லை இனி

தங்க முட்டைகளென்று பொய்யுரைத்து
வாழ்க்கை உனக்குக் கையளித்த
வெறும் கூழாங்கற்களை
ஒற்றைத் தேகமாக்கி விட்டெறிந்து
பின் எங்குறைவாய் உயிரால்,

ஏமாற்றங்களும் வாதைகளும்
வந்து தீண்டா
மரணத்தின் மடியிலன்றி.

– (நண்பன் ராம்நாத்-ன் நினைவுக்கு)

 

 

4) வல்ல சாத்தான்

சொப்பனத்தில்
அவனுக்கு அவனின்
பத்தினியாயும்
அப்பொழுதின் நிதர்சனத்தில்
அவளுக்கு அவளின்
புருஷனாயுமிருந்து
கூடல் நிகழ்த்துகிறான்
பிசகவே பிசகாத
வியூகங்கள் அமைக்கவல்ல
சாத்தான்

வழக்கம் போலவே
சுவடுகளெதுவும் தென்படாததினிமித்தம்
சந்தேகங்களுக்கு வாய்க்கப்போவதில்லை
சந்தர்ப்பம்
அடுத்து வருவதான விடியலிலும்

கடவுச்சொல்லொன்று
கசிந்துவிட்டிருப்பது
தெரிந்திருக்கவில்லை போலும்
முட்டாள் கடவுளுக்கு.

iyy

 – ப.தியாகு
மின்னஞ்சல்: pa.thiyagu@yahoo.in

கணங்களின் விபரீதங்கள்

அந்தச் சிறுவன் மாடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான் வீட்டிற்கு வெளியில் ஈனில் ஊர்தி வந்து நிற்கிறது அதிலிருந்து ஓர் துணி சுற்றிய உடலை இறக்குகிறார்கள் வீட்டிற்கு முன்னிருப்பவர்கள் முகங்களிலெல்லாம் இறந்துபோனவனின் பற்றிய துக்கங்கள் அந்தச் சிறிய வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்த அந்த உடலை கொண்டு செல்ல முடியவில்லை மிகக்குறுகலான அவ்விடத்தில் மனிதர்கள் வாழ்வதே கடினம் அதற்குள் ஒரு பிரேத்தை நுழைப்பது … read more

தேன்மொழி தாஸ் கவிதைகள்

  காமத்தின் பின் தொடரல் அவள் நடந்துவரும் போதெல்லாம் வீதி அயரும் நாய்குட்டியென படுத்துவிடுகிறது அவளைப் பின்தொடரும் பள்ளிச் சிருவர்களின் கண்களும் பாதத்து விரலில் விழுந்து ,எரும்பென ஊர்ந்து தேக்கிய தமது ஆசைகளை சுவர்கத்தின் அறைக்குள் உடைத்துவிட துடிக்கின்றன அவள் நகரத்தை காற்று புல்லாங்குழலுக்குள் பயணப்படுவது போல் கடக்கிறாள் எதிர்படும் யாவரும் இவளை கனவில் முத்தமிட்ட … read more