கலையும் அறிவியலும்

                                                                                                               கலையும் அறிவியலும்
 
ரு மாலைப் பொழுதில் ராஜிவ் காந்தி சாலையில் ஒரு அற்புதக் காட்சி, ஒரு ஐரோப்பியக் குடும்பம், ஒரு இளைஞன், அவளின் ஐரோப்பிய மனைவி அவர்களின் மகள்கள் (இரட்டை), ஒருத்தியை தன் தோளில் சுமந்து கொண்டும் மற்றவள் கீழே நடந்தபடியும் வருகிறாள். அந்த தகப்பன் ஏதோ ஒரு கதை சொல்ல அதைக் கேட்டுக் கொண்டே மொத்த குடும்பமுமாக சிரித்துக் கொண்டு வருகிறது. அவனது மனைவி இந்திய பாணியிலான உடையாக அதிகம் ஆடம்பரம் இல்லாத ஒரு சுடிதாரும், அந்தக் குழந்தைகள் தலையில் மல்லிகைப் பூவுமாக பொலிவோடு இருந்தனர். இருவேறு கலாச்சாரங்களை தங்கள் வாழ்வியல் முறைக்கேற்ப அவர்கள் ADOPT பண்ணியிருக்கும் விதமே அந்தக் குடும்பத்தின் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது.
 
அந்தப் பகுதியில் மொத்த மக்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம், குடும்பம் சகிதமாக ஒரு மனிதன் இத்தனை சந்தோஷமாக வாழ முடியுமா? அதுவும் ஒரு மேலை நாட்டுக் குடும்பம் இந்த நாட்டில் நம் மக்களோடி சகஜமாகப் பழகியபடி என்கிற ஆச்சரியம் கலந்த புன்னகை எங்கள் எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது. அந்தக் குடும்பத்தின் பாந்தத்தில் ஐரோப்பியக் கொண்டாட்டமும், இந்தியக் குடும்பம் போன்ற தோற்றமும் ஒரு சேரத் தென்பட்டது. இரு வேறுபட்ட தத்துவங்களின் கலப்பாக எனக்குத் தோன்றியது. உண்மையான மகிழ்ச்சிக்கு நிலம், கலாச்சாரம் என்பனவெல்லாம் ஒரு தடையே அல்ல என்று அக்காட்சியில் லயித்தேன்.
 
அக்காட்சியை நிறைய பேர் தங்கள் போனில் அவர்களை படமெடுத்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்க்கும் பொழுது, அந்த படத்தை அவர்கள் வீட்டில் காண்பித்து எந்த மாற்றத்தை முன்னெடுப்பார்களோ தெரியவில்லை. அடிப்படையில் நான் ஒரு எழுத்துக்காரன் என்னால் எழுதத் தான் தெரியும். குடும்ப உறவு, அதற்கு அடிப்படையில் இயங்கும் எல்லையற்ற அன்பு தான் ஒரு மனிதனின் சந்தோஷத்தின் எல்லையை தீர்மானிக்கும் கோடுகளாக மாறுகிறதா என்று அந்தக் காட்சியை முப்பட்டகத்தில் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
 
அண்மையில் வெளியான THE MAN WHO KNEW INFINITI எனும் கணித மேதை ராமானுஜமின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்று, அந்தப் படத்தை பார்த்ததை ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அறிமுகப்படுத்திய இன்னொரு திரைப்படமான THE THEORY OF EVERYTHING(2014) என்கிற திரைப்படம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
இரண்டு திரைப்படங்களும் ஆங்கிலேய பயோபிக் (BIOPIC)எனப்படும் வகைமையைச் சேர்ந்த நாடகப்பாங்கிலான திரையாக்கம் (drama). ஆனால் மிக முக்கியமான திரைப்படங்களாக இவற்றை ஒருசேர பார்ப்பது, PARELLEL READING(அம்பேத்கர் ஏன் மதம் மாறினார் என்று பிரச்சாரம் செய்யும் தி.கவின் பதிப்பும், விஜயபாரதத்தின் பதிப்பையும் வாசிக்கும் போது இரண்டு அம்பேத்கர்கள் இந்தியாவில் வாழ்ந்த தோற்றத்தை உருவாக்கிய குழப்பம் போன்று இல்லாமல்)   செய்யும் அனுபவமாக இருந்தது.
 
*
பிரபஞ்சம் குறித்து மனிதனின் தொன்மப் பதிவுகளில் இருந்து தேடல் இருந்து வருவதை குகை ஓவியங்கள், பிரமிடுகள் போன்ற சாட்சியங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம், இத்தோற்றம் குறித்து சிந்தித்தவன் தான் அறிவியலாளனாகிறான். அறிவியலாளனாக முதன்முதலில் அறியப்பட்ட மனிதன் தான் மற்ற மக்களால் வணங்கப்படுகிறான். மற்ற மக்களால் வணங்கப்படுபவன் சொல்ல இயலா விளக்கங்களுக்குத் தான் கடவுள் கற்பிக்கப்படுகிறான். கடவுளை கற்பித்த பின் அவனுக்குத் தெரிந்த அறிவியலே மதக்கொள்கை ஆகின்றது. வேறு யாரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் கொள்கை அவனைத் தடுக்கிறது. ஒருவேளை மற்றவன் ஜெயித்துவிட்டால், உலகம் ஏற்றுக்கொள்ளும் முன்பாக அவனையும் அந்தக் கூட்டில் ஏற்றிக் கொண்டு அவன் சொல்வதையும் அதுவும் மதச் சிந்தனைகளில் ஏற்றிக் கூறப்படுகிறது, அதற்காகவே கலைஞர்கள் அரூபமானவற்றை படைத்து வருகிறார்கள். கலை வழியாகப் பிரச்சாரம் செய்து அவர்கள் கடவுளை உணர வைக்கிறார்கள் இதை அறிவியல் என்கிறார்கள்.
 
ஆனால் மனிதன் வானத்தைப் பார்ப்பதை நிறுத்தவில்லை, புதிய தேற்றங்கள் அதுவரை இருந்த அறிவியலையே பொய்யாக்கி வருகின்றன. கடவுளும் அந்தக் கடைசித் தேற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ?
 
*
5இரண்டுத் திரைப்படங்களும் பெரும்பான்மையாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் எடுக்கப்பட்டது தான். நிறைய ஒற்றுமைகள் இத்திரைப்படங்களின் ஆக்கத்தில் இருக்கின்றன. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை படமாக்கும் போது சுவாரசியமாக இருக்கமா என்று கேள்வியை முன்வைப்பது அபத்தம் என்று நினைத்தேன். ஆனால் இத்திரைப்படங்கள் அந்த எண்ணத்தை பொய்பித்தது.
 
The man who knew infinity – இராமானுஜம் மெட்ராஸ் பலகலைகழகத்தில் படிப்பைத் தொடர முடியாமல் போனாலும், குமாஸ்தாவாக ஒரு வேலையில் சேர்ந்து தனது கணித ஆய்வுகளைச் செய்து வருகிறான். அதுவரை கோயில் வளாகத்தில் தான் தனது தேற்றங்களை எழுதிப்பார்த்தவன் கைகளில் காகிதம் கிடைக்கின்றது, தனது ஆய்வுகளை பிரசுரிக்க விரும்பி அதை கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கிறான்.
 
முதலில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அந்த கடிதத்தையே வாங்க மறுக்கும் பிரபலமான கணித ஆய்வாளர் ஹார்டி, ராமானுஜத்தின் ஆய்வு முடிவுகளைக் கண்டு வியந்து போகிறார், அவரை கேம்ப்ரிட்ஜ் வளாகத்திற்கு அழைக்கிறார். தன் காதல் மனைவியைப் பிரிந்து செல்லும் ராமானுஜம், அங்கே தன் ஆய்வுகளை பிரசுரம் செய்ய முனையும் போது.
அவரது ஆய்வுகள், தேற்றங்கள், முடிவுகள் ஆகியவற்றை கணித முறைப்படி நிரூபணம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார் ஹார்டியும் மற்ற பேராசிரியர்களால். விடை கண்டுபிடிக்கவியலா பல தேற்றங்களுக்கும், புதிர்களுக்கும் முடிவினைச் சொல்லும் இராமானுஜம் கல்வியலாளர்களுக்கு ஏற்ப அதை நிரூபணம் செய்ய, அந்த அந்நியச் சூழலில் இனவெறிக்கு ஆளாகி, தன் காதல் மனைவியைப் பிரிந்து (ஒருபுறம் மனைவி அனுப்பும் கடிதங்களையும், அவருக்கு வந்த கடிதங்களையும் ராமானுஜத்தின் தாயார் மறைத்து வைக்கிறார்), தன் உடல் வியாதிகளை சமாளித்துக் கொண்டு, ஒரு பிராமிணனாக மரக்கறி உணவு மற்றும் மது அருந்தாமல், தன் வழிபாட்டு முறைகளில் குறை வைக்காமல், அதிலும் முதலாம் உலக யுத்தக் காலத்தில். தனது ஆய்வுகளையும், முடிவுகளையும் நீரூபணம் செய்யும் போராட்டமும், அதற்கு ஆதரவாக ஹார்டி மற்றும் லிட்டில்வுட் ஆகிய பேராசிரியர்கள் பல்கலைகழகத்தில் போராடி ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பெற்றுத் தருகின்றனர்.
 
தன் நாட்டிற்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள்ளேயே இராமனுஜனின் மறைவு குறித்து செய்தி வருகிறது ஹார்டிக்கு. லியனார்ட்ய் ஆய்லர், கார்ல் ஜாகோபிக்கு இணையாகப் பேசப்படும் ராமானுஜனின் வாழ்க்கை இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது
 
*
The Theory of Everything  – மேற்சொன்ன படம் எடுக்கப்பட்ட அதே கேம்ப்ரிட்ஜ் வளாகம், ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னான காலக்கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கேம்ப்ரிட்ஜில் ஆஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் மாணவனாகக் கல்வி பயிலும் ஹாக்கிங், இலக்கியம் பயிலும் ஜேன் வைல்டுடன் காதல் கொள்கிறார். தனது கல்வியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீவிர ஆய்விலிருக்கும் அவருக்கு மிகவும் கொடியவகை நரம்பு நோய் வந்துவிடுகிறது. அவரது வாழ்நாள் அதிகப்பட்சம் இரண்டு வருடங்களே இருக்குமென மருத்துவர்கள் சொல்லப்படுகிறது. ஜேன் வைல்ட், தன் காதலின் காரணமாக ஹாக்கிங்குடன் பயணித்திட விரும்புகிறாள்.
 6
 
இருவருக்கும் திருமணம் நடக்கின்றது, குழந்தைகள் பெறுகின்றனர். ஆய்வு ஏற்கப்பட்டு முனைவர் ஆகிறார். நோயின் தீவிரம் கூடிக்கொண்டே போகின்றது. ஜேன் வைல்ட் எல்லாவற்றையும் சமாளிக்கின்றார். ஆய்வுகளில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் ஹாக்கிங்கிற்கு தன் உடல் மிகவும் சுகவீனம் அடைகின்றது. தனது மனைவியின் அன்பைப் புரிந்து கொள்ளும் கணவனாக, அவர்களது நண்பராக குடும்பத்திற்குள் உள்ளே வந்திருக்கும் ஜோனாதனை அனுமதிக்கிறார்.
 
ஒரு கட்டத்தில், தன் மனைவியின் மீது கொண்ட காதலாலே அவளுக்கான தேவையாக ஜோனாதனே இருக்க முடியும் என்று நம்புகிறார். அமெரிக்காவிற்குத் தன் காரியதரிசியுடன் செல்கிறார். தனது கனவுப் புத்தகமான “THE BRIEF HISTORY OF TIME” வெளிவருகிறது. தனது மனைவியுடன் தன் நட்பைத் தொடர்வதாகவே படம் நிறைவுறுகிறது.
*
ஜேன் ஹாக்கிங் எழுதிய – “Travelling to infinity: My life” என்கிற சுயவரலாற்று நூலை ஆதாரமாகக் கொண்டு The Theory of Everything  என்ற பெயரில் திரைப்படமும், 1991ல் ராபர்ட் கனிகல் என்பவரால் எழுதப்பட்ட இராமனுஜனின் சரிதம் “The Man Who Knew Infinity” என்கிற நூலினை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார நூலிலேயே ஒரு ஒற்றுமை இருக்கின்றது.
 
INFINITY எனப்படும் முடிவிலி பற்றி இருவேறு திசைகளில் இருந்து வரும் சிந்தனையை ஆவனப்படுத்தியிருக்கும் படமாக இவற்றைப் பார்க்க முடிகிறது.
 
இராமானுஜனும், ஹாக்கிங்கும் கல்லூரி விடுதியில் தங்கள் ஆய்வுகளை செய்யும் இடம் ஜன்னலின் அருகே எழுதும் காட்சி ஆகட்டும், பிரபஞ்சத் தோற்றம் குறித்தும் அது விரிவடையும் முறை குறித்தும் ப்ளாக்ஹோல் குறித்தும் ஹாக்கிங்கின் ஆசிரியர் வரையும் வடிவமும், ஹார்டி வரையும் கணித ஜாமெட்ரி வடிவமும் ஒன்றாக இருக்கும். முடிவிலியாக ஹாக்கிங் ப்ளாக் ஹோலை சொல்வதும், ராமானுஜன் இறந்த பின்னர் கிடைத்த புத்தகமான ”தொலைந்து போன புத்தகம்” எனும் நூலில் வரும் தேற்றம் ப்ளாக் ஹோல் பற்றியது என்கிற குரலோடு திரைப்படம் முடிகிறது.
 
முடிவிலியில் இருவருக்கும் இருக்கின்ற இருவேறு கண்ணோட்டம் திரையாக்கத்திலும் இருவேறு உளக்காட்சிகளில் (PERSPECTIVE) கையாளப்பட்டிருக்கின்றது.
 
துறை சார்ந்த அவர்களது ஸ்டீஃபன் ஹாக்கிங், ராமானுஜர் இருவருக்கும் இடையே இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் அவர்களது கலாச்சாரமும் வாழ்வியல் முறையும்தான் (life style). அதைச் சார்ந்தே அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வாழ்க்கையை கொண்டுசெல்கின்றன . அதாவது சிறுவயது முதலே இருவரும் அடிக்கடி நோயுறுபவர்களாக இருக்கிறார்கள். ஹாக்கிங்கைப் போலே ராமானுஜத்தால் வேறொரு சூழலில் தன்னை பொருத்திக் கொண்டு வாழ முடியாமல் போனது, சரித்திரத்தில் ஒரு பேரிழப்பாக மாறியது.
 
மேற்சொன்ன காரணத்தால் இரு திரைப்படங்களிலும் நாயகர்கள் தத்தமது ஆய்வில் தங்களது முடிவுகளுக்கு எப்படி வருகிறார்கள் என்பதைக் காட்டும் விதத்தில் வித்தியாசம் வந்துவிடுகிறது.
 
ஒரு கல்வியாளரான ஹாக்கிங் மனதில் கருந்துளை பற்றிய எண்ணம் வருவதை எழுதும் பலகையில் வரைந்த கோடுகளில் இருந்து அடுத்த காட்சியில் ப்ளாக் காஃபியில் ஊற்றப்படும் வெள்ளைக் க்ரீம் கருந்துளை போன்ற ஒரு தோற்றத்தையும் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய காட்சியை குறியீடாகக் காட்டியிருப்பார். இந்த உணர்ச்சி பார்வையாளர்களுக்கு தான், பின்னர் அதே போல் ப்ளாக் ஹோலைப் பற்றி பேசும் போது, அந்தக் கட்டடத்தின் உட்புற மேற் கூரை ஒரு ஸ்தம்பம் (DOOM)மீது காமிரா கோணம் சுழன்று அதே கருந்துளை பற்றிய உணர்வை நமக்கு உண்டாக்குகிறது. சட்டையை பிறர் உதவியின்றி அணியக் கூட இயலாது போன நிலையில் இருக்கும் ஹாகிங்க்ஸுக்கு தன் கண்களை மறைத்த துனியின் ஓட்டை வழியாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்பினை பார்க்கும் காட்சியில் அவருக்கு ஒரு கோட்பாடு உருவாகின்றது.
 
ஆனால் இதே போன்ற காட்சிப்படுத்துதல் ராமானுஜத்திற்கு வைக்கப்படும் போது இந்த பார்வைகளைப் புகுத்த முடியாது, ஏனென்றால் ராமானுஜம் பற்றியக் குறைவான குறிப்புகள் மற்றும் ராமானுஜம் தன் முடிவுகளை அறிவிக்கும் விதமென நாம் அறிந்தது. அவரது இஷ்ட்தெய்வமான தேவி அவரது கனவில் வந்து எழுதிவிட்டுப் போன தேற்றங்களாகத் தான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக அணுகிடக் கூடாது என்பதில் ராமானுஜம் தேற்றங்களை உருவாக்கும் காட்சிகளை இயற்கையை நேசிப்பவனாகவும், பக்திமானாகவும் வெளிப்புறத்திலிருந்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அவை வெற்றிடமாக்கப்பட்டிருப்பது இயக்குநரின் அறிவுப்பூர்வமான செயல்பாடு.
 
இந்த முரணை கவனியுங்கள், ஹாக்கிங் குறித்த காட்சி கலாபுர்வமாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதும், ராமானுஜர் குறித்த காட்சி நம் அறிவிற்கு எளிதாக எட்டப்படும் புரிதலோடும் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தை.
 
*
இந்த இரண்டுத் திரைப்படங்களிலும், கதாப்பாத்திரங்கள் வழியாக முடிவிலி எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தோமேயானால், ஹாகிங் ஒரு முடிவிலியைத் தெரிந்து கொள்ளும் ஒரேயொரு பெரிய கேள்விக்கான் விடையாகத் தெரிந்து கொண்டதை, மறுநாள் மறுத்து வேறு ஒன்றாகத் தெரிந்து கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றான். கடவுள் அவனுக்கு முடிவிலியில் தொலைந்துவிடுகிறது. அவனும் தேடும் நாட்டம் கொண்டவனில்லை. அவனுக்கு முடிவிலி என்பது அடுத்ததாக தான் ஏற்றுக் கொள்ளப்போகும் அல்லது அவனே உருவாக்கப்போகும் அறிவியல் கோட்பாடு.
 
ராமானுஜன் எழுதிய முடிவுகளுக்கு பதிலாக “It arrives on me” என்று பதில் சொல்கிறான். அவன் முடிவிலியைப் பற்றி சிந்திக்கும் முன்னரே, அதற்கு துணையாக அவனது நம்பிக்கையும் இருக்கின்றது.
 
அதனால் தான் அவன் மணல் துகளில் இருந்து, ஆற்று நீரின் ஒவ்வொரு துளியிலும் ஒரு PATTERN இருப்பதாக நம்புகின்றான். அந்தப் பேட்டர்னில் தான் கடவுள் இருப்பதையும் அறிவுப்பூர்வமாக அவன் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.               ( இவற்றை தன் மனைவிக்கு விளக்குவதாய் அமையும் இந்தக் காட்சி கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கும்)கடவுள் அவனுக்கு உலகம் காணத் துடிக்கும் முடிவிலியின் கடைசிப் புள்ளியில் இருப்பதாக நம்ப வைக்கின்றது பக்தி, ஆக அங்கிருந்தே கிடைத்ததாக தான் உணர்ந்ததை அவன் கணிதமாக எழுதும் போது அது முடிவிலியின் தேற்றத்தை நெருங்கியிருக்கலாம், ராமானுஜன் இங்கே சொல்வது கணிதம் என்பது கடவுளின் மொழி என்று. ராமானுஜம் ஒரு முடிவிற்கு வந்துவிட முடிகிறது.
 
ஹாக்கிங்கை தெரிந்து வைத்திருக்கின்ற நமக்கு ராமானுஜனை அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால் தான் ராமானுஜனைப் பற்றித் தமிழில் உருவாக்கிய திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக உருவெடுக்கவில்லை. கீழைத்திய சிந்தனையோடு மேஜிகல் ரியலிஸமாக இதே கதையை ஒரு கலைப்படைப்பாக ஏன் சொல்லமுடியாது என்று எண்ணம் எழாமலில்லை. அப்படிப்பட்ட ஒரு கலைப்படைப்பு தானே இராமனுஜனை இந்தியா போன்ற ஒரு நாட்டில் பிரிவினைகளைத் தாண்டிச் சேர்த்திட முடியும்.
 
*
இப்படங்களில் பிரதான கதாப்பாத்திரங்களுக்கு இணையாக வலிமையான பெண் கதாப்பாத்திரங்களாக ஜேன் ஹாக்கிங் மற்றும் ஜானகி (ராமானுஜத்தின் மனைவி) கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
 
அறிவியல் வெறுமனே அறிவாக இருந்திருந்தால், அழிவுக்கு மட்டுந்தான் பயன்பட்டிருக்கும். அது உணர்வினால் செம்மைப் படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே ஆக்கம் பற்றிய உணர்வோடு அது உருவாக்கப்படும். கலை தான் அப்படி செம்மையான உணர்வுகளை உருவாக்க இயலும் என்பதால் இரண்டும் COMPLIMENTARY WITH EACH OTHER.
 
ஸ்டீஃபன் ஹாகிங்கும், ஜேன் வைல்டும் முதன்முறை சந்திக்கும் பொழுது இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்
 
ஹாகிங்: சைன்ஸ்
ஜேன் : ஆர்ட்ஸ்
 
(இனிமேல் இவர்கள் காதலர்கள் ஆகக்கடவார்கள் என்று நாமும் நம்புகிறோம்)
 3
ஒரு காட்சியில் ஜேன் ஹாக்கிங் சக்கர நாற்காலியில் ஹாக்கிங் முன்னிறுத்திவிட்டு, அந்த ஃப்ரேமை விட்டு விலகி ஓடிவிட. அந்த நாற்காலியைப் பார்த்த அதிர்ச்சியோடு மெல்ல நகர்ந்து அதில் அமரும் ஹாக்கிங், அழுது சமாதானமடையும் போது, காமிரா தன் ஃப்ரேமை பின்னே சென்று அகலப்படுத்தும் போது சற்றுத் தள்ளி நின்று அழுது கொண்டிருக்கும் மிக வலியமையான கதாப்பாத்திரத்தைப் பார்க்கும் போது நாமும் நிலை தடுமாறுவோம்.
 4
இராமனுஜரிடமிருந்து எந்தக் கடிதமும் வராமலிருக்க ஜானகி கடற்கரையில் புலம்புவதும், கோயிலில் அவன் எழுதிய எழுத்துகள் மீது விழுந்து அழுவதுமாக, அவள் தன் கணவன் தன்னை மறந்து விட்டான் என்று நம்புகிறாள்.
 
ஒருபக்கம் தாம்பத்யம் முதலான பல அடிப்படை எதிர்ப்பார்ப்புகளை தன் காதலிக்கு கொடுக்க முடியாத ஹாக்கிங், அவள் நண்பனாக வீட்டிற்கு வரும் ஜோனாதனை எந்தத் தடையும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான், அவனது காதல் unconditionalஆக இருக்கிறது. ஹாக்கிங் பேசமுடியாமல் போகுமளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல, முழுமையாக மீண்டும் ஹாக்கிங்கிடமே அவள் தன் நேரத்தை செலவழிக்கிறாள். இந்த எதிர்பார்ப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுமற்ற காதலைச் சுமந்து வரும் ஜேன் ஹாக்கிங்கின் காதலினால் மட்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு வருடமே அவன் ஆயுட் காலம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் 75 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்க காரணமாகிறது.
 
ஆனால் ராமானுஜத்தால் தன் மனைவியின் அன்பைப் பெற முடியவில்லை, துயரத்தில் தோய்ந்த அறிஞனைப் பாதுகாக்க அந்தக் காதல் துணையாக இல்லை. இருவரும் ஏமாற்றப் படுகின்றனர். இருவரும் தொடர்பு கொள்ள முடியா நிலையிலும், இருவரும் தம்மை மறந்து விட்டிருப்பர்களோ என்று ஒருவருக்கொருவர் அஞ்சுகின்றனர். இராமனுஜன் இறந்து போகின்றான் 32 வயதிலேயே. ஆனால் அவன் உருவாக்கியதும் ஹாக்கிங் உருவாக்கியதற்கு நிகராக மிகவும் அரிய தேற்றங்கள். அது உலகமே இன்று வரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை
 
ஹாக்கிஙை காதல்(unconditional love) INCUBATE செய்திருக்கிறது, அதனால் அவரால் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதனைகள் செய்துவர முடிகிறது. இராமனுஜன்.- அவன் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவனால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவனது காதலில் தடை இருந்திருந்த்து. அவன் ஏமாற்றப்பட்டிருந்தான், ஜானகியும். ஆனால் அந்தக் காதலும் வலிமையானதே அவன் வலிமையானவனாக இல்லாமலே அவமானங்களைக் கடந்தும் வெற்றி பெற்றவனாக, தன் வெற்றியைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிட ஒரு காரணம் இருந்தது. அது அவன் காதலாக, ஜானகியாக இருந்தது.
 
காதலால், அன்பால் வளர்க்கப்படாதவர்கள் தான் இந்த உலகில் அபாக்கியசாலிகள் என்று ஜானகியை நினைக்கும் போதும், ஜேன் ஹாக்கிங்கை நினைக்கும் போதும்,  கண்ணம்மாவை நினைக்கும் போதும் எழும்பிய உணர்வில் உருகிக் கசிந்த கணம்.. நானும் அந்த பூச்சூடிய ஐரோப்பியக் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் செல்போனில் படம் பிடித்திருக்கலாமே என்று தோன்றியது.
 
 
நன்றி : கணையாழி
 

 ஜீவ கரிகாலன்

மோட்டார் சுந்தரம் பிள்ளை /ஐயப்ப மாதவனின் திரை மொழி-2

சிவாஜி – சுந்தரம் கதாபாத்திரத்தின் குணாம்சம் புரிந்து நடித்திருந்த விதம் அருமை. இரு மனைவிகளின் கணவனாக பதற்றம் துளியும் காட்டாமல் நடித்து அசத்தியிருந்தார்.

ரங்கூன் யுத்தகால கதை ரத்த திலகம்போல. சுந்தரமும் அக்காவும் அநாதைகள். இருவரையும் நல்லவுள்ளம் படைத்த பணக்காரர் எடுத்து வளர்க்கிறார். அக்காவிற்கு திருமணம் செய்து வைத்து கணவனுடன் ரங்கூனுக்கு அனுப்பி வைக்கின்றார். சுந்தரத்திற்கு ரங்கூனில் அக்காவின் மூலம் வேலை கிடைக்கின்றது. இதற்கிடையில் பணக்காரரின் இரண்டு பெண்பிள்ளைகளில் இளைய பெண்ணைக் காதலிக்கின்றார் சுந்தரம்.

          ஆனால் விதியோ மூத்தவளை மணக்கச் செய்கின்றது. சுந்தரம் வளர்ப்பு அப்பாவிற்காகவும் தங்கையோ அக்காவிற்காகவும் காதலைத் தியாகம் செய்கின்றனர். திருமணம் முடிந்து ரங்கூன் செல்கின்றார் சுந்தரம். பிறகு ஜப்பான் ரங்கூனின் மீது படையெடுக்க. தப்பித்துப் பிழைத்து ஓடும் பொழுது தன் மனைவியை தொலைக்கின்றார் சுந்தரம். வீடு வந்து சேர்ந்து தங்கையை மணம் முடிக்கும் நிர்பந்தத்திற்கும் ஆளாகிறார். இச்சூழ்நிலையில் மூத்த மனைவி உயிரோடிருக்கும் விசயம் தெரிய வளர்ப்பு அப்பாவின் விருப்பப்படி இரு மணைவிகளுடனும் இருவருக்குமே தெரியாமல் குடும்பம் நடத்தி வதவதவென்று குழந்தைகள் பெற்றுத் தள்ளிவிடுகின்றார்.மூத்த மனைவியின் பெண்பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கவிருந்த சமயத்தில் இளைய மனைவியின் பையன் அப்பாவைத் தேடி அங்கு வந்துவிட உண்மையைச் சொல்லும் கட்டாயம் சுந்தரத்திற்கு வந்துவிடுகிறது.  நடந்துமுடிந்திருந்த தன் விதியை உலகிற்குச் சொல்ல திருமணம் நடத்த மறுத்த மாப்பிள்ளை வீட்டார் சுந்தரத்தின் நல்ல மனதை உணர்ந்து கல்யாணத்திற்கு சம்மதிக்க படம் சுபமாகி முடிகின்றது.

இந்தப் படத்தின் கதாபாத்திர தேர்வு வியக்க வைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மை அறிந்து அற்புதமாக நடித்திருந்தனர். சிவாஜிதான் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுகிறார். அப்புறம் முதல் மனைவியாக செளகார், இளம் மனைவியாக வெண்ணிறாடை மூர்த்தியின் மனைவி மணிமாலா, அக்காவாக பண்டரிபாய் சுந்தரத்தின் மகள்களாக ஜெயலலிதா காஞ்சனா மற்றும் சிறு குழந்தைகளின் முகத்தேர்வும் அற்புதம்.  குறிப்பிட்டுச் சொன்னால் இரு மனைவிகளின் முகச்சாயலுக்கேற்றாற்போல் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் முகச்சாயலைக் காட்டியிருப்பது கவனிக்கப்படவேண்டியது.

பழைய படமென்றால் பாடல்கள் நிறைய இருக்கும். இதிலும் அதேபோல்தான். மற்றபடி நாகேஷ் சிவக்குமார் இந்தப் படத்திலிருக்கின்றனர். கதையின் துணைக்கு வந்துபோகின்றார்கள். ஆனால் சுந்தரத்திற்கு ஏன் இந்தப் படத்தில் இவ்வளவு குழந்தைகள் இருப்பதுபோல் காட்டியிருக்கின்றனர் என்று யோசித்தபோது அந்தக் காலத்தில் பணம் படைத்தவர்களென்றால் பிள்ளகுட்டிகளை கணக்குவழக்கற்றுப் பெற்றுக்கொள்வார்களென்ற காரணத்தில்தான் இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தேன். மூத்த பெண்ணிற்கு திருமணம் முடித்தபிறகும் சிவாஜிக்கு மேலும் ஒரு குழந்தை பிறக்கும். இதே போல் என் குடும்பத்திலும் நடந்ததை ஒத்துக்கொள்ளவேண்டும். இயக்குநர் நடைமுறையை திரைப்படத்தில் காட்டியிருப்பது சரியானதுதான்.

இந்தப் படத்தில் வளர்ப்பு அப்பாவை நல்லவராக இருக்கச்செய்து அதன் மூலமே திரைக்கதையை நகர்த்தியிருக்கும்விதத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். கதைதான் கதைக்குள் கதையின் போக்கில் வில்லன்களை உருவாக்கியிருக்கின்றது. வில்லனென்று நம்பியார் போன்றோ அசோகன் முன் தீர்மானிக்கப்பட்ட பாத்திரங்களெதுவும் இதிலில்லை. கதையில் ஏற்படும் திருப்பங்களால் படத்தின் முடிவில் திருந்தும் வில்லகள் உருவாகின்றார்கள். பாக்யராஜ் இதுபோன்று திரைக்கதைகளை உருவாக்கியிருக்கின்றாரென்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

இருமனைவிகள் இருக்கின்ற உண்மை தெரிகின்றபோது சம்மந்திகளாய் வரவிருப்பவர்கள் மூலக்கதைக்கு வில்லன்கள் ஆகின்றார்கள். அதே போல் சிவகுமாரின் ( சுந்தரத்தின் மூத்த மகள் காஞ்சனாவின் கணவன் ) அப்பா மேஜர் சுந்தரராஜன் மகனாலேயே கர்ப்பமாகும் உண்மை தெரியாமல் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வில்லனாகிறார். பையனின் படிப்பு கெட்டுவிடும் என்பதால் மனைவியைப் பார்க்க தடை விதிக்கிறார் மேஜர். திருட்டுத்தனமாகப் போய்ப் பார்த்து மனைவியை கர்ப்பமாக்கும் சிவகுமார் அப்பாவிடம் உண்மையை மறைத்து அப்பாவை வில்லனாக மாற்றுகிறார். இப்படித்தான் இந்தப் படத்தில் சிறு சிறு வில்லன்கள் கதையின் போக்கிடையே தோன்றி மறைகின்றார்கள்.

வளர்ப்பு அப்பா கொஞ்சம் மிகை நடிப்பு சிவாஜியின் முன்னாலேயே. சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒரே வீட்டிற்குள் அதவாது ஒரே செட்டிற்குள் நடக்கும் குடும்ப நெகிழ்ச்சி நாடகப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. ஒரு மாற்றத்திற்காய் பழைய படமொன்றை எழுதிப்பார்த்தேன்.

இயக்கம் : பாலு/ வெளியான வருடம் / 1966

 

ஐயப்ப மாதவன்

 

திரைப்படம் பற்றிய தகவல்

“The remarkable Mr.penny packer ” என்னும் புகழ்பெற்ற ஆங்கில நாடகம், பின் திரைப்படமாகி வெற்றி பெற்றது.


அதைத் தழுவி ‘ஜெமினி’ s.s.வாசன் அவர்களும், வெப்பத்தூர் கிட்டு அவர்களும் இணைந்து அமைத்த திரைக்கதையில் முதலில் திரு.சிவாஜி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். காரணம், வயது முதிரந்த, பல குழந்தைகளுக்குத் தகப்பன் கதாபாத்திரம் என்பதால் . உடனே வாசன் அவர்கள் ஹிந்தியில் திரு. அசோக்குமாரை வைத்து “GRIHASTI” என்று எடுத்து அது 1963 ல் வெளிவந்து சூப்பர்ஹிட்.

 

சிவாஜி அவர்கள் பம்பாய்க்கு நாடகம் போடச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, திரு.வாஸன் அவர்களைத் தொடர்புகொன்டு உடனே நடிக்க சம்மதித்தார். அதன்பின் வாசன் அவர்களின் புதல்வர் பாலு அவர்கள் இயக்க, மோட்டார் சுந்தரம்பிள்ளை உருவானது. ( மறைந்த ‘கலைமாமணி’ திரு. எஸ்.ஏ. கண்ணன் ஐயா சொல்லிக் கேட்டது)

 

ஐயப்ப மாதவனின் திரை மொழி (புதிய பகுதி)

திரை மொழி  –  POETRY

Chang-dong Lee யின் பொயட்ரி படம் பார்த்தேன். கொரியன் இயக்குநர். மிக எளிய கதையை திரைக்கதையின் வடிவத்தில் ஓவியமாக்கியிருக்கிறார்.  படத்தை முழுதும் பார்த்துவிட்டுத்தான் என்னால் கணினியைவிட்டு எழுந்திருக்க முடிந்தது.  55வயது பாட்டி மகளின் பேரனை அவளுடன் வைத்துப் படிக்க வைக்கிறாள். கணவனை விவகாரத்து செய்த மகள் வெளி ஊரிலிருந்து வேலை செய்கிறாள்.

பேரன், தன் பள்ளியில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கூடப் படிக்கும் ஒரு பெண்ணை கும்பலாகக் கற்பழித்து ஆற்றில் உடலை வீசிவிடுகின்றனர். இந்த விசயம் அந்தப் பெண்ணை சீரழித்த கும்பலில் உள்ள மாணவர்களின் குடும்பங்களுக்குத் தெரிய வர அவர்கள் அந்த விசயத்தை பணத்தைக் கொண்டு கொல்லப்பட்ட பெண்ணின் அம்மாவை  சரிகட்ட முயல்கிறார்கள்.  இதற்காக நடக்கும் பேரத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 டாலர் என பங்கு நிர்ணயக்கப் படுகிறது.

பாட்டி அந்த 5000 டாலருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தினறுகிறாள்,  ஒருவழியாக அப்பணத்தைக் கொண்டு வந்து பேரனைக் காப்பாற்றிவிட்டதாக நினைத்த வேளை போலீஸ் பேரனை கைது செய்கிறது. அவளால் அதைத் தாங்கிட முடியாது கவிதையை எழுத ஆரம்பிக்கிறாள். அதுவரை கவிதை எழுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவள் கடைசியாய் தன் முதல் கவிதையை கவிதைப் பள்ளியில் சமர்ப்பித்துவிட்டு இறந்துபோகிறாள்.

அவசியம் ஒவ்வொருவரும் ஒரு வயதான பெண்ணின் வாழ்வின் போராட்டத்தை நெகிழ்வுகளை வேதனைகளை வலிகளைக் காணத்தான் வேண்டும்.  அவள் அழுதபோது நானும் அழுதுகொண்டிருந்தேன். இன்னும் அந்தப் பெண்மணியின் உருவம் என்னைவிட்டு அகலமாட்டேன் என்கிறது. நடிப்பென்றால் நடிப்பில்லை அது. அப்படியே ஒரு பெண் திரைப்படத்தில் வாழ்ந்திருந்தாள். அவளுக்கு என் எண்ணற்ற மலர்களை அவள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். அந்த இயக்குநரை என்ன பாராட்டினாலும் தகும். படத்தின் வசனங்களும் காட்சிக்கோர்வைகளும் இசையும் நம்மை ஆட்கொள்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் வன்முறையும் இல்லாத படம். கண்களில் நீர் ததும்ப வைக்கிறது. ஒரு திரைப்படம் இதைச் செய்தால் போதும். வேறென்ன வேண்டும் படம் பார்ப்பவனுக்கு ?

 

ஐயப்ப மாதவன்

 

தகவல் :-

படம்   : பொயட்ரி (POETRY)

நிலம் :கொரியன்

இயக்குனர் : லீ சாங் டாங்