ஜீ முருகன் பதிவுகள்

விஷால் ராஜா ஆர்வமுள்ள சிறுகதை எழுத்தாளர். நுட்பமான வாசகர், கவிஞர். அசோகமித்திரன் பற்றிய அவருடைய அவதானிப்பு வியக்க வைத்தது.

‘எனும்போது உனக்கு நன்றி’என்ற சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். கவனிக்க வேண்டிய தொகுப்பு இது. தமிழ் சிறுகதை வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கிருக்கும் என்ற நம்பிக்கையை இதில் உள்ள கதைகள் ஏற்படுத்துகின்றன.

அவரிடம் அலைபேசியில் பேசும்போது கேட்டார், தற்போது எழுதுபவர்களின் கதைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று.

கே.என்.செந்தில், கார்த்திகைப் பாண்டியன், ஜீவ கரிகாலன், குமார நந்தன், அகரமுதல்வன், விஷால் ராஜா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் எனத் தொடர்ந்து வாசிக்கிறேன். இன்றைய இவர்களின் பங்களிப்பு கவனிக்கத் தக்கது.

தமிழ் சிறுகதை மரபின் தொடர்ச்சியில் வைத்தோ, உலக சிறுகதைப் போக்கின் தொடர்ச்சியில் வைத்தோ இந்த புதிய படைப்பாளிகளின் படைப்புகளை எவ்வாறு மதிப்பிடுவது?

கொஞ்சம் ஏமாற்றம் இருக்கிறது. முக்கியமான ஏதோ ஒன்றை இவர்கள் இழந்திருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு உணர்வு. சிறுகதை என்ற புதிரான வடிவம் குறித்த புரிதல் மங்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்.

ஒரு அரூப ஓவியத்தை கைக்கொள்வது போலத்தான் இது. யாராலும் அதை இதுதான் என்று வரையறுத்துவிடமுடியாது. ஆனால் தொடர்ந்த வாசிப்பின் மூலம் எழுதிப் பார்ப்பதன் மூலம் அதை அடைந்துவிடலாம். முக்கியமாக வாழ்க்கையின் மீது நுட்பமான பார்வை வேண்டும்.

கால்வினோவின் ஒரு கதையை படித்துவிட்டு இந்த வடிவத்தில் நாமும் ஒரு கதையை எழுத வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அது ஒரு ஆர்வம். ஆனால் அதற்காக மெனக்கிட்டு எழுதுவது சிறுபிள்ளைத்தானமான காரியம்தான். வடிவ பரிசோதனை என்றும் கதையாகிவிட முடியாது.

அதே போல எதார்த்தம், வட்டார வழக்கு என்ற பெயரில் ஆவணத் தன்மை கொண்ட தட்டையான கதைகளை எழுதுவதும் இங்கே நடக்கிறது. படைப்பின் வழி அவர்கள் எதையும் அடைவதில்லை. தொடங்கிய இடத்துக்கே அவர்கள் வந்து சேர்கிறார்கள்.

நாம் நம் வாழ்வில் உணர்ந்த ஏதோ ஒன்றுக்கு வடிவம் கொடுக்கும் செயல்தான் சிறுகதை. அந்த X தான் வடிவத்தை நிர்ணயிக்கிறது. உயிர்புலம் உடலை நிர்ணயிப்பது போலத்தான் இது. உடலில் கை எங்கே இருக்க வேண்டும் கால் எங்கே இருக்க வேண்டும் செடி கொடிகளில் கிளை எங்கே இருக்க வேண்டும் வேர் எங்கே இருக்க வேண்டும் என்று உயிர்புலம் நிர்ணயிப்பது போல சிறுகதையை அந்த X தான் நிர்ணயிக்கிறது, வடிவம் கொடுக்கிறது. அந்த X நமக்குள் தோன்றும் வரை நாம் காத்திருக்க வேண்டும். நம் பிரக்ஞையை ட்யூன் செய்துகொள்ள வேண்டும், பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த X ஐ பொறி என்றும் வெளிச்சம் என்றும் தரிசனம் என்றும் பல விதமாக அழைக்கிறார்கள். வாழ்க்கை தன் நிஜ முகத்தைக் காட்டும் அபூர்வ கணம் அது. பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவர்களுக்கோ, எழுத்து மேஜையின் முன் உட்கார்ந்து யோசிப்பவர்களுக்கு இது கைகூடுவதில்லை.

– ஜீ முருகனின் ஃபேஸ்புக் பகுதிகளிலிருந்து

நகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்

– சீராளன் ஜெயந்தன்

15420774_10211644878703762_706978988398794306_n

விஜய் மகேந்திரன் என் கையில் தனது நகரத்திற்கு வெளியே நூலை கொடுக்கவும், நான் உடல் நலம் சரியில்லாமல் படுக்கவும் சரியாக இருந்தது. நல்ல வேளையாக ஒரு ஐந்து கதைகளை படிக்க நேரம் கிடைத்தது. வாசிப்பை பொறுத்தவரை நான் ரொம்ப குறைந்த வேகம்தான். ஒரே மூச்சில் படித்து கீழே வைத்தேன் என்ற பெருமையெல்லாம் எனக்கு கிடையாது. விஜய் மகேந்திரன் என்றதும், ‘அந்த நகரம் பற்றிய கதை உங்களுடையதா?’ என்று திரு பரிக்ஷா ஞாநி கேட்டார். எனவே தொகுப்பைத் திறந்ததும் முதலில் அந்தக் கதையைத் தான் படித்தேன்.

விஜய் மகேந்திரனிடம் பேசிக்கொண்டிருப்பது போலவே, அவர் நேரில் கதை சொல்வது போலவே, சிக்கலற்ற தெளிவான நடையில் கதை போகிறது. சின்ன சின்ன வாக்கிய அமைப்புகள் என்றே சொல்லலாம். நான் இதைத்தான் சொல்கிறேன் என்று எங்கும் ஒரு சிறு துப்பு கூட கொடுத்துவிடாமல் கடைசி வரை கதைபோகிறது. ஆனால் பழைய கட்டிடத்தின் செங்கல் ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகிறது. அதிலும் கண்ணகி கால்பட்ட நகரம். எல்லா கட்டமைப்புகளையும் புறந்தள்ளிவிட்டு தன் கதையை தான் சொல்கிறார். மற்ற சிந்தனையை நமக்கு விட்டுவிடுகிறார். அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஒரு சுத்தீகரிப்பு நிலையம் நகரத்திற்கு வெளியே. ஒரு சரியான சிறுகதைக்கான அமைப்பு.

‘கூட்டத்துல கல் எறிஞ்சா அது சனியன் பிடிச்சவன் தலையில விழுமாம்’ என்பது நமது சொல்வழக்கு. ஒரு நேர்மையான, அதாவது சில தார்மீக நியாயங்களும் கோபமும் கொண்ட, ஒரு கல்லூரி பேராசிரியர் அவ்வாறு இருப்பதால் எதிர்கொள்ளும் சிராய்ப்புகள் பற்றிய கதைதான் ‘சனிப் பெயர்ச்சி’. சனிப் பெயர்ச்சியையும் இடர்பாடுகளையும் சுவைபட கோர்த்து எழுதியுள்ளார். ஏழரை சனி இவரை படுத்தும்பாடு சுவாரஸ்யமானது.

அடுத்த கதை இருத்தலின் விதிகள். ஒரு காதலியின் கடைக் கண் பார்வைக்காக அவள் வசிக்கும் தெருவில் அடிக்கடி சென்று வருகிற (அந்தக் கால) மகிழ்ச்சிக்கு அடுத்தது, பழைய புத்தகக் கடையில் புத்தகங்களை மேய்வதுதான். அப்படி மேய்கிற இருவரின் கதை. இனிய அனுபவம் (மீண்டும் அப்படி வாய்க்காது). தேடிக் கொண்டிருக்கிற பல அரிய புத்தகங்கள் திடீரென்று வந்து மொத்தமாய் கொட்டுகிறது. காரணம் இறந்து போன ஒரு எழுத்தாளர். புத்தகங்களையே தேடிக் கொண்டிருப்பவனுக்கு தனது இருப்பை குறித்து அப்போது கவலை வருகிறது. இந்த இடத்தில் எங்கள் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சியை சொல்லியே ஆக வேண்டும். 1990 களில், வேளச்சேரியில் வாடகை வீட்டில்தான் குடியிருந்தோம். வீட்டுக்காரர்களின் விதிகள் காரணமாக அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டே இருப்போம். சொல்லவா வேண்டும் என் தந்தையிடம் இருந்த புத்தங்களின் எண்ணிக்கை குறித்து! ஒரு முறை வீடு மாற்றும் போது ஒரு நான்கு சக்கர (சென்னை) மாட்டு வண்டியின் மீது புத்தகங்களை ஏற்றினோம். வண்டிக்காரன் சொன்னான், ‘இவரு வாழ்க்கையில பாதிய புத்தகம் படிச்சே வீணாக்கியிருப்பார் போல’ என்று.

‘சிரிப்பு‘ என்ற கதை முதல் முக்கால் பங்கு, இந்த தொகுப்பிலேயே இதுதான் சிறந்த கதையாக இருக்கும் என்று எண்ண வைத்தது. மற்ற கதைகளிலிருந்து வேறுபட்ட நடை, அழுத்தமான எண்ணங்கள், தீவிர சிந்தனை என்று போய் கொண்டிருந்தது. ஏனென்று தெரியவில்லை, ஒரு அமானுஷ்ய விஷயத்தை கொண்டு வந்து, கதை தடம் புரண்டு, மையம் தவறிவிட்டதாக நினைக்கிறேன். ஒரு வேளை இக்கதையை அனுபவிக்க எனக்கு போதவில்லையோ என்னவோ?

‘ராமநேசன்‘ ஒரு அருமையான characterization. இப்படி நிறைய பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். முதலில் வெறுப்பேற்படுத்தும் அந்த குணாதிசயம், பின்னால் புரிந்துகொள்ளப்பட்டு, நட்பு ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு சரியான புரிதலும் விவரணையும் ஆகும். நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதாக அமைகிறது.

அடுத்த கதை, மழை புயல் சின்னம். மழையும், காதலும், காமமும் எப்போதும் ஒன்றோறொன்று ஊடாடி வேதிவினைகள் புரிந்துகொண்டேதான் இருக்கிறது. எங்கே எப்படி என்ன வினை நிகழும் என்பதுதான் மானிடத்தின் புரியாத புதிர். அப்படியாக இந்தக் கதையில் ஒரு வினை நிகழ்ந்து போகிறது. நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (விஜய் மகேந்திரன், ஜெயந்தனின் வெள்ளம் சிறுகதை கிடைத்தால் படித்துப் பாருங்கள்)

(நகரத்திற்கு வெளியே, சிறுகதைகள், யாவரும் வெளியீடு, விலை ரூ.80/-)

– சீராளன் ஜெயந்தன்

பேசி நகரும் பிரியங்கள்…

பேசி நகரும் பிரியங்கள்… (நூல் விமர்சனம்)
ந.பெரியசாமி

10665216_796378980414764_5920695690612374333_n

கடவுளல்ல நான் எனும் பிரகடனம் உங்களுக்கான கடவுள் அல்ல என்பதாகவும் கொள்ளலாம். நான் எனக்கான கடவுள். என் மொழியால் சுமையற்றவனாகி காற்றாய், நதியாய் , மழையாய் மாறும் வல்லமை கொண்டவன் என்பதைக் கூறும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் தொகுப்பின் துவக்க கவிதையே நம்பிக்கையோடு தொடரச்செய்கிறது. இக்கவிதையின் நிழல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் படிந்திருக்கிறது.

அகத்தில் அறம் அழித்து புறத்தே அறம் பேசித் திரிவோரின் வாழ்வில் பறவையாகி எச்சமிட்டு, கூழாங்கற்கள், மீன்குஞ்சுகளோடு குளிர்ந்த நீராக ஓடி சர்க்கரை கடலாகிறார்.

 ‘ச்சீ’ எனும் சொல்லில் மௌனத்தின் கலகம் உடைத்து, பசி ஏப்பத்தை புளிச்ச ஏப்பமென நினைக்கும் கடவுளை ஏசி, எப்பொழுதும் எந்த நிலம் சுதந்திரம் அளிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, பட்டாம்பூச்சியாகி மூத்திரம் பெய்து, எது கருணை என்பதை கேள்விக்குட்படுத்தி அதிகாரத்தை மண்ணுளியான் பாம்பாக புறந்தள்ளி, ராதையின் மார்பில் உறைந்திருக்கும் இரத்தத் துளிகளில் கண்ணன்களின் வஞ்சகங்களை காட்சிபடுத்தி, சாதும் மிரளக்கூடும் தருணத்தை நினைவூட்டி, அழிக்க நினைப்பவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஆலோசனைக்கூறி, புத்தனோடு நீச்சலடித்து, சமணனோடு குகை அடைந்து கற்சிலைப் பெண்ணின் கதை கூறி வாழ்வையும் மரணத்தையும் இரு உதடுகளாக்குகிறார்.

சமகாலத்தின் வன்முறை நெருக்கடிகளினால் துயரத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் வேறு வேறாக கூடுபாய்ந்து எதிர்வினையாற்றி அவ்வப்போது சமநிலையற்று தத்தளிப்போடு யாருமற்ற வீட்டில் இருந்தவரிடம் அதுவும் வெள்ளிக்கிழமையில் ரிது வந்திட வாசிப்பில் நமக்கும் இசை பற்றிக்கொள்கிறது. ரிதுவின் இடத்தில் நான் மதுவாகினியை வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான ஆன்மாவை வைத்துக்கொள்ளலாம். இனி நாம் பிரியங்களாலும், முத்தங்களாலும் நிறையப் போகிறோம். நம் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

கருநீலப்புடவையில் அரக்கு மணத்தோடு தேவதையாக வலம் வரும் ரிதுவின் காதலை இதழ்களால் வேட்டையாடுகிறார். தப்படிகளின் பின்னோக்கிச் சென்ற காலங்களின் குறியீடாக இருக்கும் பொம்மையை தீயிலிட அதன் ஆன்மாவை மழைத்துளியாக்கி பருகும் காட்சி ரசித்து, கனவில் வந்த கருநிலப்புடவை ரிது குறித்து புகாரிட்டு பொறாமையைத் தூண்டி, ரிதுவின் ஆசிபெற்ற ரிது நீ மட்டும்தான் என தன் நதியின் கடைசி மீன் இதுவென நம்பிக்கையூட்டி, மீதமிருக்கும் வெள்ளிக்கிழமையையும், உள்ளங்கை வெப்பத்தையும் நினைவூட்டி தன்னுள் நிகழும் மாற்றங்களுக்கு ரிதமானவள் நீதானென் எதிர்பார்ப்பைச் சொல்லி, இன்பதுன்பங்களின் வடிகாலாக இருக்க சிறு மணல்வீடு போதுமெனும் எளிய மனசுக்காரனாக மாற்றம்கொண்டு, உன்னில் இருந்து வரும் நாகம் கூட ரோஜாக்களை மட்டுமே தந்து செல்லும் உண்மை கூறி, இரவாக மாற்றம்கொள்ளும் ரிதுவின் ஆடல் பாடலில் தகிக்கும் வெப்பம் உணரும் கனவைச்சொல்லி, தன்னில் படிந்து கிடக்கும் வெக்கை நினைவுகளை கொலை செய்து ரிதுவின் குளிர்ந்த கரம் பற்ற நாளாக நீடிக்கும் ஒத்திகைப் பார்த்து, யாருக்கும் புலப்படாமல் அகவாழ்வில் நிரம்பியபடியே இருக்கம் பழச்சாற்றின் ருசி காட்டி, பிரியங்கள் பேசி நகர உண்டாகும் சில்லிடலை சிலாகித்து. விடியலுக்குப் பின் நிற்கும் நிர்வாண உண்மையின் பொதுபுத்தியை கிண்டலடித்து, வாழத் தகுதியற்ற சமதளம் நீக்கி ரிதுவை வானில் நீந்தச்செய்கிறார்.

மூத்திரத்தை தங்கக்கிண்ணத்தில் ஏந்தச்சொல்லும் கோபம், காமத்தை கையில் பிடித்தபடி உபதேசித்துத் திரியும் மிஸ்டர் எக்ஸ்-கள் மீதான எரிச்சலை நாமும் உணரச் செய்திடுகிறார்.

தொகுப்பில் கீற்றாக ஒரு குழந்தை புகார்களோடு வந்துபோவதும், எல்லாகாலங்களுக்கும் நாயகனாக கொண்டாடக்கூடியவர் சே எனும் உண்மையையும் கூறும் கவிதைகள் புன்னகைக்க வைக்கிறது. வேறு நாயகன் வராது போன துயரமும் தொடரச்செய்திடுகிறது கவிதை. சிறுசிறு தெறிப்புகளில் மின்னலாக மனம்வெட்டும் கவிதைகளோடு வந்திருக்கும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் எல்லோருக்குள்ளும் அலைவீசும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு
புதுஎழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.