நேர்காணல் – கடங்கநேரியான்

நீங்கள் தமிழ் தேசியவாதியா?

பொருளாதாரமயமாக்கல் தனித்த தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து தனக்கான சந்தையை நிர்மாணிக்கும் திட்டத்தோடு ஒற்றை உலகை நிர்மாணிக்க முயற்சிக்கிறது. அதன் பொருட்டு பூர்வகுடிகளின் மீது பண்பாட்டு ரீதிரியாகவும் பொருளாதார ரீதியாகவும் போர் தொடுக்கின்றன. உதாரணமாக ஜல்லிக்கட்டு மீதான தடை , கள் இறக்குவதற்கு தடை விதித்திருக்கும் அரசு தான் டாஸ்மாக் நடத்துகிறது. மீத்தேன் , நியூட்ரினோ , அணு உலைகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். என் நிலத்தையும் அதன் மீதான மனிதர்களின் உரிமையையும் காக்கவே போராட வேண்டிய சூழலில் தமிழ்த் தேசியவாதியாக செயல்படுவதுதான் நியாயமாகும்.

Continue reading “நேர்காணல் – கடங்கநேரியான்”

நேர்காணல் – அகரமுதல்வன்

எமது தேசத்தை நாங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும்?

–  சு.அகரமுதல்வன்

நேர்கண்டவர்கள் – தி .பரமேசுவரி , யுவபாரதி மணிகண்டன்

1

தங்களின் பூர்வீகம் கிளிநொச்சி பகுதி என்றும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று குறிப்பிடப்படுவதும், ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பல்லாயிரம் தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதுமான மே 2009 சமயத்தில் அங்கிருந்தவர் என்றும் அறிந்திருக்கிறேன். கையறுநிலையில் தகவலாகக் கேட்கிறோமே என்ற குற்றவுணர்வுடன்தான் கேட்கமுடிகிறதுஎனினும் மே 2009 சமயத்தில் அப்பகுதியில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எதிர்கொண்ட நிலை பற்றிச் சொல்லுங்கள்.

எனது அக்கா மாதவிடாய்க் குருதியை பதுங்குகுழிக்குள் இருந்தபடியே  கழித்தாள். பிறந்த குழந்தைகளை இரத்தம் கலந்த தண்ணீரில் குளிப்பாட்டினோம்  இறந்தவர்களுக்காக ஒரு மாதம் துக்கிக்கும் தமிழீழச் சமூகத்தில் இறந்த வர்களை புதைக்க முடியாமல் இருப்பவர்கள் தப்பிக்க ஓடினோம். கஞ்சிக்கு நின்று இரத்தத்தில் மிதந்தோம். இப்படி சொல்லுவதற்கும் அழுவதற்கும் எழுவதற்கும் அந்த நாட்களில் இனப்படுகொலை பரிசளித்த சாவின் வகைகள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டது. நாம் ஏற்றுக்கொண்ட மரணங்களைப் போல இவ்வுலகில் எவரும் சுமந்திருக்க முடியாது என்கிற ஆணவம் எமக்கிருக்கிறது. சாவை காலில் மிதித்து அவமானப்படுத்தினோம்.

நினைத்துப்பார்க்கிறேன் , கோரங்கள் நிறைந்த நாட்கள் அவை, திரும்பிடும் திசை எல்லாம் பெருகி நின்ற காயங்களோடும், மரணங்களோடும் அழுதழுதே களைத்துப் போன அவலம். 5 அடி நீளமும் அகலமும் கொண்ட பதுங்கு குழியிலேயே நான் உட்பட அம்மா, அக்கா,தம்பி ஆகியோர் உண்பதிலிருந்து உடல் உபாதை வரைக்கும் சரி செய்ய வேண்டியளவிற்கு சிறிலங்காப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டது. வானிலிருந்து கிபிர் விமானங்கள், தூரத்திலிருந்து ஆட்லறி மற்றும் பீரங்கி குண்டுகள் எங்கள் கூடாரங்களில் இருந்து 2கிலோ மீட்டர் தூரத்திலிருந்து Ak- 47 தொட்டு அனைத்து வகை கனரக ஆயுதங்களாலும்    பல்வேறு வல்லாதிக்க நாடுகளின் ஆயுதப் பரிசோதனைகள் தமிழீழ மக்களின் சிதைகளில் தானே நிகழ்த்தப்பட்டது. ஒரு நாள் இரவு முழுதும் நாங்கள் இருந்த பகுதியில் எறிகணை தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக இருந்தது.

 அந்த இரவைப் போல இரத்தம் பார்த்த இரவை இனிமேலும் இந்த பூமியே காணமுடியாது. தும்பு தும்பாய் சிதைக்கப்பட்ட எனது உறவுகளின் தசைகள் தான் அந்த இரவின் சுவர் முழுக்க வண்ணங்களாக ஆக்கப்பட்டிருந்தது. அய்யோ எனக் கதறி அழுவதற்கு கூட வாய்ப்பில்லாது இறந்த தனது சகோதரியைக் கூட புதைக்கமுடியாது அடுத்த எறிகணையில் சிதைந்து போன என் நண்பனையும் அந்த இரவுதான் பலியெடுத்தது.                   பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கிளாஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் தாக்குதல்கள் என விடியும் வரை தொடர்ந்த படியே இருந்தது இனப்படுகொலையின் அத்தியாயங்கள்.

விடிந்த காலையில் தாக்குதல்கள் சற்று ஓய்ந்த வேளையில் எங்களின் கூடாரத்திற்கு பக்கத்து கூடாரத்தில் தலை சீவியபடி எனது அம்மாவோடு கதைத்துக் கொண்டிருந்த ஒரு அக்காவின் நெற்றியில் டொப் என்கிற சத்தத்தோடு உள் நுழைந்த Pk ரக சன்னம் பிடரியை பிய்த்துக் கொண்டது போனது. துடி துடித்து செத்துப் போகிற துயரம் அவளுக்கு நேரவில்லை. சன்னம் பாய்ந்தவுடன் சாகிற பாக்கியம் பெற்றவள் என சொல்லிக் கொண்டே அவள் வீட்டின் பதுங்குகுழியில் அவளை புதைத்து விட்டு நாங்களும் வேறு இடம் சென்றோம். இப்படி இப்படியாய் எத்தனை ?   நான் எதிர்கொண்ட நிலையை அங்கு வாழ்ந்தவர்களால் மட்டும் தான் உணர முடியும் ஏனெனில் சாவைச் சந்தித்தவர்களுக்கு தான் சாவின் உருத் தெரியும். இவ்வளவு துயரத்தை தாண்டிய துயரமாக தமிழீழ நிலம் வீழ்ந்தபடியிருப்பது தான் இன்னும் சொல்லமுடியாத துயரமாக இருக்கிறது.

1976-ல் இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் தன்மானத்தோடும் தன்னுரிமையோடும் வாழத்  தனிநாடு ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா வட்டுக் கோட்டை மாநாட்டில் முழங்கினார். அம்மாநாட்டுக்குச் சிலநாட்கள் முன்பே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்ததுஇந்தப் பொருத்தப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

தமிழர்கள் மீதான சிங்கள அரச வன்முறையின் தொடர்ச்சியான வளர்ச்சியின் சாட்சியாகத் தான் இந்த நிகழ்வை நினைக்க முடிகிறது. கடைசி மட்டும் சிங்கள ஆட்சிக் கதிரைகளில் இருந்த கொழும்புவின் ஆட்சியாளர்களோடு அகிம்சை வழியில் உரிமைக்காக போராடிய தமிழீழப் பாட்டன் தந்தை செல்வா கடுமையான தொனியில் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். எமக்கு பின்னால் வருகிற தலைமுறை எம்மைப் போல வாயால் கதைக்கமாட்டர்கள் என்று பாராளுமன்றத்திலேயே சூளுரைத்தார்.

எப்பொழுதுமே தமிழர்களை கொல்வதிலும், புறக்கணிப்பதிலும், விரட்டுவதிலுமிருந்த சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்  தந்தை செல்வாவின் கூற்றை செவிமடுக்காது தொடர்ந்து தமிழீழ ஆக்கிரமிப்பையும் தமிழர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை முன் எடுத்தது தான் வரலாறு.               மிதவாத அரசியல் அமைப்பு முறையில் இருந்தாலும் தனி நாட்டுக் கோரிக்கையை அறைகூவிய தந்தை செல்வாவின் தனித்துவத்தை நாம் போற்றவேண்டும். மிதவாதிகள் தமிழீழம் என்கிற இலக்கிற்கு வருவதற்கு முன்னமே தமிழீழ இளைஞர்களை சிங்கள இனவாதம் ஆயுதம் ஏந்தச் செய்து தமிழீழத் தாகத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்தி விட்டது. அகிம்சை எல்லாப் பொழுதுகளிலும் செல்லுபடியாகாது என்கிற வாசகத்தை தந்தை செல்வாவின் இறுதிப் பேச்சுக்கள் உலகிற்கு உணர்த்தியதை நாம் மறந்துவிடக் கூடாது. சிங்களர்களோடு ஒருமித்து வாழமுடியாததை அகிம்சையை பின்பற்றிய தந்தை செல்வாவே ஒத்துக்கொண்டதன் பிறகு அங்கு வன்முறை தாங்கிய போராட்ட வடிவம் வருவது கால நிர்ப்பந்தம்.

ஆனாலும் ஒரு நூற்றாண்டு கால தமிழ்த் தலைவர்களின் ஏமாற்று வேலையின் அடித்தளத்தில் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சிங்கள தேசத்தினால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை மிகுந்த அவமானத்தோடு கூறிக்கொள்கிறேன்.        

தமிழ்த் தலைவர்களின் பொழுதுபோக்கு அரசியல் செயற்பாடுகளை சரிவர கணித்துக் கொண்ட சிங்கள சூத்திரதாரிகள் ஏற்படுத்திய  சூழ்ச்சிகள் ஏராளமானது, 1956ல் கொழும்பு தங்கக் கடற்கரையில் தந்தை செல்வா நிகழ்த்திய பட்டினிப் போராட்டத்திற்கு பின் சொல்லும்படியாக 1961ல் தான் அடுத்த பட்டினிப்போராட்டம் மட்டுமே இலங்கை முழுதும் கவனத்தை குவித்தது.

ஆக திட்டமிடல் நிறைந்த நேர்த்தியான அரசியல் செயற்பாடுகளை தந்தை செல்வா உட்பட அவரின் முன் பின் வந்த ஏனைய மிதவாத தமிழ் தலைவர்கள் தமது முழுப் பணியாக செய்ய  எத்தணிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை நான் வரலாற்றில் பதிய விரும்புகிறேன்.  

இலங்கையின் விடுதலைக்காக இலங்கை தேசிய காங்கிரசைத் தொடங்கிய சர் பொன்.அருணாசலம் ஒரு பத்தாண்டுக்குள்ளேயே அதிலிருந்து வெளியேறி தமிழர் மகாஜனசபை தொடங்கும் நிலை வந்துவிடுகிறது. அதற்கான நிர்ப்பந்தம் எப்படி ஏற்படுகிறது? 

பிரித்தானிய காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான முதலாவது தேசிய விடுதலை இயக்கத்தை 1919 ல் ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்ட அருணாச்சலத்தினால் சிங்கள மேலாதிக்கவாதத்தோடு இணைந்து செயற்பட முடியாமல் வெளியில் வந்தமை தான் தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழமுடியாது என்பதை சொல்லிய முதல் அரசியல் நிகழ்வு.

பல்லினத்தன்மை கொண்ட ஒரு ஐக்கிய இலங்கையை அமைத்துக் கொள்ள சிங்கள இனவாதம் ஒரு போதும் விரும்பாது என்பதனை தாராண்மைவாத தமிழ்ச் சமூகம் கண்டுவிட்டதன் எதிரொலியே அவரின் வெளியேற்றம். அன்றைய தமிழ் அரசியலாளர்களில் இவரது சகோதரரான சேர். பொன் இராமநாதன் தொட்டு பல்வேறு செயற்பாட்டாளர்கள் பல்லினத்தன்மை கொண்ட இலங்கையை கட்டியமைக்க முடியாமல் தனிச் சிங்களத் தன்மையோடு கசப்பான அனுபவங்களை பெற்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் மூலமாக பிளவுண்டு போவதைத் தவிர தமிழ் தாராண்மைவாதிகள் இடது சாரிகள், வலது சாரிகளுக்கு வேறு வழி  இருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பண்டாரநாயகாவும், இன்றைய அதிபரின் தந்தையான ராஜபக்சேவும் சேர்ந்து உருவாக்கியதுதான் சிறீலங்கா சுதந்திரக் கட்சி. சிங்கள மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள இவ்விரு கட்சிகளுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான பார்வையிலும் அணுகுமுறையிலும் வேறுபாடுகள் உண்டா?

சிறிலங்காவின் சுதந்திரத்திற்கு பின்னான வரலாறு என்றாலே அது தமிழ் மக்களிற்கு எதிரானவையாகவே இருக்கிறது. சிறிலங்காவின் இருபெரும் கட்சிகளான சுதந்திரக் கட்சியாயினும், ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சிங்கள இனவாதத் தன்மையில் ஒரே புள்ளியில் நின்று ஒன்றாய் இயங்குபவை. சொல்லப் போனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பதே இவ்விரு கட்சிகளும் சேர்ந்து நிகழ்த்தியதே. தமிழீழ இனப்படுகொலையின் அனைத்து வெற்றியையும் சொந்தம் கொண்டாடுகிற அருகதை ராஜபக்சவுக்கு இல்லை.                           தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை காலங்களில் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இணைத்தலைமை நாடுகளோடு சேர்ந்து  திட்டமிட்ட இனப்படுகொலையே ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எல்லாத் திட்டங்களையும் வகுத்து பல்வேறு நாடுகளின் ஆதரவுகளையும் பெற்றதன் பின்னர் ராஜபக்ச அதை சரிவர நிகழ்த்தி தனது கட்சிக்கு அமைவாக சமநிலைப் படுத்தியுள்ளார் என்பது தான் உண்மை. தமிழர்களை படுகொலை செய்யவேண்டும் என்பதைத் தாண்டி இவ்விரு சிங்கள கட்சிகளின் தலைவர்களுக்கும் மகாவம்ச மனவுலகின் அறிஞர்களுக்கும் அணுகுமுறையோ பார்வையோ இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை என்பது தான் திண்ணம்.

தொடக்க காலத்தில் ஈழப் போராளிக் குழுக்களுக்கு  இந்திரா காந்தி ஆயுதப் பயிற்சியளித்தது, எம்ஜிஆர் ஈழவிடுதலை சார்ந்து அக்கறை கொண்டிருந்தாலும்  பின்வந்த இந்தியதமிழக ஆட்சியாளர்களிடம் ஈழம் குறித்த அக்கறையில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. இவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழீழ விடுதலைக்காக எழுந்த அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியளித்த அம்மையார் இந்திராகாந்தியின் குறித்த செயற்பாடுகள் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மிக்கது, இந்த முடிவிற்கு அன்றைய இந்திய அரசு வந்து  சேர வேண்டிய நிர்பந்தத்தை சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் நேரடி இந்தியப் பகைமை தான் ஏற்படுத்தியதே தவிர .                     தமிழீழ மக்களின் அறம் கொண்ட விடுதலைக் குரலை மக்களின் நோக்கு நிலையிலிருந்து அம்மையாரும் பார்க்கவில்லை என்பது அரசியல் உண்மை. அய்யா எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலையின் மீது கொண்டிருந்த பார்வையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மீது கொண்டிருந்த மரியாதையுடனான நம்பிக்கையும் தான் அவரின் அக்கறைக்கு காரணமாக விளங்கியது. வாத்தியாரின் உதவியும் அவரின் அணுகுமுறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் தூணாக விளங்கியது அனைவரும் அறிந்த ஒன்று.

பொதுவாக இந்த மாதிரியான நிலைப்பாடுகள் காலம் சார்ந்து அரசியல் சூழ்நிலை சார்ந்து தான் பெருமளவில் எடுக்கப்படுகின்றது.               இந்திய தமிழக ஆட்சியாளர்களிடம் மட்டுமல்ல உலகப் பொதுப் பரப்பில் கூட அப்படித் தான் இருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக துணிச்சலுடன் பலர் இன்னும் தான் தமது பலத்திற்கு அமைவாக போராடிக்கொண்டிருப்பதை  தமிழ்நாட்டில் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் இந்திய ஆட்சியாளர்களுக்கு  இந்த விடயத்தில் அக்கறையில்லை என்று சொல்லுவதை விடவும்  அவர்களுக்கு இன்னும் அதற்கான அவசியம் இலங்கைத் தீவு முழுதும் சிங்கள மயமாக்கலின் ஊடாக சீனமயமாக தொடங்கியிருக்கிற இந்த வேளையில் ஏற்பட்டிருக்கிறது. இந்து சமுத்திர புவிசார் அரசியலின் நாயகமாக விளங்கும் தமிழீழத் தேசத்தை அங்கீகரிக்கிற இந்தியாவின் சகோதர சக்திகளான தமிழீழத் தமிழர்களை ஏற்றுக் கொள்கிற அனைத்து அரசியல் சூழலும் கனிந்து கொண்டிருக்கிறது.

ஈழ விடுதலையாயினும் ஈழத் தமிழ் மக்களின் உரிமை வாழ்வாயினும் இந்தியாவின் உதவியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று அன்றும் இன்றும் பல தலைவர்கள் பேசி வருகிறார்களே இதன் சாத்தியப்பாடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய எதிர்புணர்வின் மத வடிவத்தில் போருக்கு பிறகான இலங்கை சீன சார்பு இலங்கையாக உருத்திரண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வி மிக முக்கியமானது.  சிறிலங்காவின் சிங்கள பவுத்த மதவாதத்தின் இந்திய எதிர்ப்புணர்வின் விளைவாகத் தான் தமிழர்கள் இன்றும் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்கிற வரலாற்று உண்மையை இந்திய துணைக்கண்ட அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது. சிங்கள பவுத்தத்தின் சிந்தனை வரலாறு இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் நோக்கித்தான் இன்று வரை தமிழீழத் தமிழர்கள் மீது படுகொலைகளை செய்து வருகிறது. அதனால் தமிழீழத்தில் உள்ள மிதவாத அமைப்புக்கள் அன்று தொட்டு இன்று வரை இந்தியாவிடமிருந்து தான் எமக்கொரு தீர்வு என நம்பிக்கை கொண்டிருப்பதில் குற்றம் ஏதுமில்லை. தமிழீழ மக்கள் சந்தித்த யுத்தம் என்பது இந்தியாவிற்கு எதிரான இலங்கையின் யுத்தம். இந்து மதத்திற்கு எதிரான தேரவாத பவுத்தத்தின் யுத்தம் என்றபோதிலும் தமிழீழ விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஒரு புறத்தில் இந்தியர்களாக நோக்கி  அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சிங்கள அரசு அதே இந்திய அரசிடமே ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்றொழித்தது தேர வாத பவுத்தத்தின் ராஜதந்திரமே. பல்தேசிய இனங்களின் ஒன்றியமாக ஆசியாவில் விளங்குகிற இந்திய அரசு தமிழீழ விடுதலைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது என்கிற கருத்து இருந்தாலும் அதை முன் நின்று அமைத்து தரவேண்டிய இறுக்கமான அரசியல் சூழல் கனியத்தொடங்கியிருக்கிறது. இப்போது மீண்டும் மீண்டும் ஜே.ஆர் –ராஜீவ் ஒப்பந்தத்தை செவிடன் காதில் ஊதிய சங்கு போல இந்திய அரசு சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தியபடியே இருக்கிறது.

                ஆனால் அதே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட பல்வேறு சரத்துக்கள் சிறிலங்கா அரசினால் மீறப்பட்டு வருவதை இந்திய தேசியவாதிகளே அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 2.2 திருகோணமலை மற்றும் சிறிலங்காவின் இதர துறைமுகங்கள் இந்தியாவின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் எந்த ஒரு நாட்டின் இராணுவ வசதிக்காவும் அளிக்கப்படமாட்டாது. என்கிற சரத்து மீறப்பட்டு சீனாவின் போர்க்கப்பல்கள் தங்கி நிற்கிற இடமாக இலங்கையின் எல்லாத்துறைமுகமும் மாறியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைகிறது. இவ்வாறான சூழல்கள் பல்கிப் பெருகுகிற பொழுது தான் இந்தியா தமிழீழ தமிழர்களுக்கு உதவ ஓடோடி வரும். அதற்கான அனைத்து நம்பிக்கைக்குரிய மீறல்களையும் அச்சுறுத்தல்களையும் சிங்கள அரசு நிகழ்த்தி வருகிறது ஆக இதற்கான சாத்தியப்பாடுகளும் தமிழர்களின் எதிரிகளான சிங்களத் தலைமைகளிடமே வாய்த்து நிற்கிறது.    

மிக இளம்வயதில் இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு கவனிக்கப்படுபவராக இலக்கியக்களத்தில் நிற்கும் நீங்கள்அடுத்து குறும்படம் எடுப்பதில் ஏதேனும் தனித்த காரணங்கள் உள்ளதா?

நேற்றுவரை மக்களுக்காக களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளின் இன்றைய நிலை குறித்த பதிவை ஒரு உண்மைச்சம்பவத்துடன் இணைத்து குறும்படமாக உலகம் முழுதும் பரவி வாழும் புலம்பெயர் தமிழீழத்தமிழர்களிடமே கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற கொதிப்போடும் கோபத்தோடும் தெளிவோடும் அதில் களமிறங்கி இருந்தாலும் போதிய பணம் இல்லாமல் இழுவையில் நிற்கிறது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருகிற தமிழீழத்தவர்கள் தமிழ் திரைப்பட நடிகர்களை பார்வையிடுவதற்கும், ஆலயங்களில் விசேட உள்நுழைவை பெறுவதற்கு செலவழிக்கும் பணத்தொகைகள் பல லட்சம் என்கிற போது இது சோகம் நிறைந்த அவமானம் தான்.

பெண் போராளிகளின் இன்றைய துயரம் மனதை படபடக்க செய்யும் வதைகள் நிறைந்தவை, பலாத்காரங்களாலும்  இராணுவ அச்சுறுத்தல்களாலும் உளவியல் ரீதியாக எத்தனையோ அக்காக்கள் இன்று மனநோயாளிகள்.                 மண்ணின் விடுதலையை  பிரசவிக்கத் துடித்த அவர்களின் இன்றைய வாழ்வு கொடூரங்களின் அரவணைப்பில் சிக்கி இருக்கிறது. இதனை கண்டிப்பாக பதிவு பண்ண வேண்டும் என்பதன் முடிவுடன் தான் இந்த களத்தில் காலை ஊன்றினேன்.

மேலும் எந்தெந்த வழிகளில் எல்லாம் எனது இனத்தின் அவலத்தை வெளியில் கொண்டு வரமுடியுமோ அவ்வழி எல்லாவற்றிலும் பயணிக்க தயாராகவிருக்கிறேன்,எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது எந்த வழிகளில் சென்றாலும் எனது இலக்கை நான் சென்றடைவேன் என்கிற காரணம் மட்டும் தான்.

இலக்கியத்தளத்தில் கவனிக்கப்படுகிறேன் என நீங்கள் சொல்வதை இப்படிச் சொல்லுவது தகுமென எண்ணுகிறேன். என்னுடைய பாடு பொருள்களும் கவிதையில் உள்ள கருத்துருவாக்கமும் காலத்துடன் சேர்த்து கண்காணிப்புடன் கவனிக்கப்படுகிறது.

தமிழீழ அகதி என்று சொல்லிக் கொள்கிற பொழுது உளம் மகிழ்ந்து கொள்கிற நான் கவிஞர் என்கிற அடையாளத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். தமிழீழத்தவனாகவும் உத்தியோகபூர்வ அகதியாகவும் இருப்பதனால் மட்டுமே என்னால் கவிதைகள் எழுதமுடிகிறதென்றால் நான் அகதி அல்லது தமிழீழத்தவன் என்று அழைக்கப்படுவது தானே அறமிக்கது. ஆக என்னுடைய கவிதைகளை இனப்படுகொலையின் சாட்சியாக ஒட்டுமொத்த உலகிடமும் சமர்பித்திருகிறேன். என்னுடைய புலம்பெயர்ந்து வாழும்  நாட்களில்  வெறுமை நிறைந்த அதலபாதளங்கள் உருவாகிவிடக்கூடாதென                    நான் இயங்கிக் கொண்டிருக்கும் பூரண களமாக எழுதுதலை கொண்டிருக்கிறேன். ஆகையால் கவிதை எனும் வடிவமே வலுமிக்க  ஆயுதம் என்பதை  எனது கவிதைகள் வழி உணர்வதற்கு  எந்த மெனக்கெடல்களும் யாருக்கும் தேவையில்லை என்பதை என்னால் சொல்லமுடியும்.

சமகால சர்வதேசச் சூழல் மற்றும் நிலைப்பாடுகளை சரிவரக்  கணித்து கையாளாததே 2009ல் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்  எனப் பலரும் கூறி வருகிறார்கள். ஆண்டன் பாலசிங்கத்திற்குப்  பிறகு சர்வதேச அரசியல் தொடர்பும் தெளிவும் கொண்ட ஆலோசகர் இல்லாததும் ஒரு காரணம் என்று  சொல்கிறார்களே?

தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்திருக்கிற வீழ்ச்சியென்பது இராணுவ ரீதியிலானதே தவிர அரசியல் ரீதியானது அல்ல, புலிகள் அரசியல் ரீதியாக ஒரு எழுச்சியை ஏற்படுத்தித் தான் சென்று இருக்கிறார்கள். புலிகளின் அரசியல் என்பதும் எழுச்சி என்பதும் தமிழீழ மக்களின் தாகமாக தாயகமாக உருத்திரண்டிருக்கும் தேச விடுதலை என்பதை முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சர்வதேச அரசியல்  சூழலுக்கு அமைவாக விடுதலைப் போராட்டத்தை கொண்டு நகர்த்தியதன் விளைவாகவே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் ஆதிக்கம் கொள்ளுகிறதென்பதை விளங்கிக் கொள்ள மறக்கிறவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.                       நோர்வே முகமூடியை போர்த்திய படி வன்னிக்குள் களமிறங்கிய அமெரிக்காவின் மத்தியஸ்த்துடன் சிறிலங்கா அரசுடனான சமாதான உடன்படிக்கைக்கு கைச்சாத்திட்டதிலிருந்து முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணம் வரைக்கும் தமது தந்திரோபாய அரசியல் மூலம் சர்வேதச அரசியலின் நகர்வுகளை கையாண்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சர்வதேச அளவில் எமது போராட்டத்தின் அவசியத்தையும் அறத்தையும் கொண்டு சேர்த்த சிங்கள தேசத்தின் அரசியல் சூழ்ச்சிகளை, தந்திரோபாயங்களை பேச்சுவார்த்தை மேசைகளில் முறியடிக்கிற அசாத்தியம் மிக்க ஒருவர் என்பது உலகிற்கு தெரிந்த விடயம். அவரின் இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வில் ஈடுசெய்ய முடியாதது. ஆனால் நாம் மிகக் குறிப்பாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அவரிற்கு பிறகு ஆலோசகர் என உத்தியோபூர்வமாக நியமிக்கும் சூழல் வன்னிக்கு அவசியமில்லாது போனது. குறிப்பிட்டு சொல்லுவதென்றால்                   அங்கு யுத்தம் மட்டும் தான் அவசியமென்றானது. சில வல்லாதிக்க நாடுகள் தாம்  நினைத்தது போல தமிழீழ விடுதலைப் புலிகளை கையாள முடியவில்லையே தவிர புலிகள் சர்வதேசத்தின் ஒவ்வொரு அணுகுமுறையும் நகர்வுகளையும் சரியாக கையாண்டார்கள் என்பது தெளிவானது.

இரணில் விக்கிரம சிங்கேவுக்கும் மகிந்த ராஜபக்சேவுக்குமான  கடந்த காலத் தேர்தல் போட்டியில் வடக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் தேர்தல் புறக்கணிப்பை  மக்கள் மீது திணித்ததால்தான்இராஜபக்சே வெற்றி பெறமுடிந்ததென்றும் ரணில் வென்றிருந்தால் முள்ளிவாய்க்கால்  படுகொலை நடந்திருக்காது என்று பேசப்படுகிறதே?

தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பை மக்கள் மீது திணித்தார்கள் என்கிற சொற்பிரயோகத்தை மறுப்பது எனது தார்மீகம்.                        இந்த நிகழ்வு வெறும் தேர்தல் புறக்கணிப்பு மட்டுமல்ல – தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய நகர்வு. இதற்கு முந்தைய கேள்விக்கு சொல்லப்பட்ட பதிலுக்கும் இந்த பதிலுக்கும் மிகப் பெரும் உறவே இருக்கிறது. 2005 ம்  ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக மகிந்த ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிறுத்தப்பட்டார்கள். பொதுவாக சிங்கள ஆட்சியாளர்களிடம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்கவேண்டும் என்கிற எத்தணிப்பு ஒரு பொழுதும் இருந்ததில்லை என்கிற பாடத்தின் வழியாக தமிழர்கள் எவரையும் நம்புவதற்கு தயாராக இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை.

சிங்கள இனவாதத்தின் அசல்  பிரதிநிதியாகவும் அமெரிக்கா தவிர ஆசியாவில் வல்லரசாக எழும் சீனாவை அரவணைக்கும் அடிப்படை எண்ணத்தோடும் குறித்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச களமிறங்கிய அதே நேரத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இலங்கையின் பொம்மையாகவும், சிங்கள உயர்நிலை வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினார். குறித்த தேர்தல் என்பதே வல்லரசுகளின் பிராந்தியச் சுரண்டல்களின் இயங்குநிலையை தீர்மானிக்கும் தேர்தலாகவே இருந்தது தான் உண்மையே தவிர அது தமிழர்களுக்கு ஒரு சின்ன வெளிச்சத்தை கூட  ஏற்படுத்தும் தேர்தல் அல்ல என்பதை புலிகள் சரியாக தீர்மானித்திருந்தார்கள். தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் இந்தச் சூழலில் அமெரிக்காவுடன் நேரடியாக போரிடுகிற சந்தர்ப்பத்தை விரும்பாததே ரணிலின் தோல்வியை தமிழர்கள் நிர்மாணிப்பதற்கு மிக முக்கிய காரணம். இந்த நடவடிக்கையின் மூலம் புலிகள் மீது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ஆத்திரமும் கோபமும் இறுதிப் போரில் இனப்படுகொலைக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களாக உரு மாறியிருந்தது. தேர்தலில் ரணில் வெற்றி பெற்று சிறிலங்காவின் சனாதிபதியாக வந்திருந்தால் இனப்படுகொலை என்கிற தடயமே தெரியாமல் தமிழர்களாகிய நாம் கொல்லப்பட்டிருப்போம்,மஹிந்த ராஜபக்ச கொண்டாடுகிற இனப்படுகொலை வெற்றியில் பெரும்பான்மை உரித்து ரணிலுக்குத் தான் உண்டு என்பதை பல்வேறு மேடைகளில் அவரே சூசகமாக கூறியிருப்பதிலிருந்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் வீரச்சாவு அடைந்தார் என்றும் உயிரோடுதான் இருக்கிறார் – வருவார் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இக்கருத்துகள் ஏற்படுத்தியஏற்படுத்தும் விளைவுகள் என்ன? 

தமிழீழர்கள் உண்மையின் பக்கம் நின்றால் தான் வெற்றியின் அருகில் செல்லமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன். உண்மையை  ஒத்துக்கொள்வதன் மூலம் எமது அடுத்த கட்ட தோல்வியை தடுத்து நிறுத்த முடியும்.

இந்த கருத்துக்கள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட வீச்சை முனை மழுங்கச் செய்து வருகிறது. இது வீர வராலற்றின் அத்தியாயங்களில் அழுக்குகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.             களத்தின் தன்மையும் பண்பும் தெரியாதவர்களால் தான் கற்பனாவாத கதைகளை புதிது புதிதாக உருவாக்க முடியும்.

பிரபாகரன் என்கிற ஒரு புரட்சியாளனை சரிவர புரிந்து கொண்ட ஒருவனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார்-வருவார் என கட்டுக்கதையை அவிட்டு விட முடியாது. என் தலைவன் களத்தில் போரிட்டு மடிந்தான் என்பதை ஏற்றுக் கொள்ளுகிற பண்பு எனக்கு இருக்கிறது. நான் ஒரு பொழுதும் பிரமைகளை விரும்பிக்கொண்டது கிடையாது ஏனென்றால் அது அரசியல் போராட்டத்த்திற்கு அப்பாற்பட்டது.

இருக்கிறார் வருவார் என சொல்லுகிற பெரும்பாலான குரல்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் வருகிறது, இவ்வாறு சொல்லுகிறவர்களுக்கே தாம் சொல்வது பொய்யெனத் தெரிந்தும் மேடைகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இவர்கள் என்ன பயன் அடைகிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் இவர்களுடைய அரசியல் வரலாற்றில் இந்த நிலைப்பாடு அருவருப்பும் சுயநலமும் கொண்டது.

எனது இயங்குவிசையாக இருக்கிற பிரபாகரன் எனும் புரட்சியாளனை நான் கண்மூடிக் கொண்டு பார்க்க விரும்பவில்லை அது அவருக்கே பிடிக்காத பண்பு எனது தலைவன் மண்ணுக்காக பெருவிருப்போடு தன்னுயிரையும் தன் குடும்பத்தையும் விதைத்தான் என்பது தான் தமிழீழப் போர்க் களத்தின் அதியுச்ச உண்மை. இந்த உண்மையில் இருந்து புதிய மனம்,புதிய எண்ணம்,புதிய சிந்தனையை ஏற்படுத்தி தமிழீழர்கள் இன்னும் செறிவான போராட்டங்களை முன் எடுக்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னான இலங்கையில்            தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன?

தமிழீழ நிலப்பரப்பில் ஒரு இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருப்பதை சர்வதேசம் தடுத்து நிறுத்த மறுக்கிறது. தமிழீழ மக்களை தொகை தொகையாக கொன்றொழித்த சிறிலங்கா அரசாங்கம் இன்று வெவ்வேறு வகைகளாக தமிழர்களாகிய எம்மை அழித்துக் கொண்டிருக்கிறது. வெறும் ஆயுதங்களின் மூலமாக மட்டும் தான் இனப்படுகொலையை நிகழ்த்தவேண்டும் என்றெல்லாம் இல்லை என்கிற இனப்படுகொலைக் கலாநிதி அரசாக சிங்கள அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாடசாலை தொட்டு ஆலயங்கள் வரைக்கும் ஆயுதம் தாங்கிய சிறிலங்காப்  படைகளின் ஆக்கிரமிப்பு தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மீள்குடியேற்றம், யாழ் தேவி தொடரூந்து இயக்கம், என அபிவிருத்தி ஜொலிப்புக்களை சர்வதேசத்திற்கு மினுங்க விட்டு தமிழர்களை ஏதுமற்றவர்களாக்கி கொண்டு சிங்கள தேசம் இனப்படுகொலையை தொடர்கிறது, இனப்படுகொலைக்கு பின்னான காலம் என்பது இன்னும் எங்களுக்கு நேரவில்லை நாம் இப்போதும் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். 

முன்னாள் போராளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஆயினும் அமைதியான வாழ்வை மேற்கொள்ளும் நிலை அங்குள்ளதா?

அங்கு பொது மக்களுக்கு நேர்கிற இராணுவ கெடுபிடிகளே சொல்லி மாளாதது, இதில் போராளிகளாக இருந்தவர்கள் எதிர் கொள்ளுகிற அதிலும் குறிப்பாக பெண் போராளிகளின் அவலங்கள் சொல்லி மாளாதது.                           எந்த அதிகாரத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்களோ அதே அதிகாரமும் ஆக்கிரமிப்பும் அவர்களை இன்று அவலத்திற்குள்ளாக்கிறது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் பெரும் விழுப்புண் அடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்த போராளி அக்காக்கள் பாக்கியம் பெற்றவர்கள், நாங்கள் தான் மரணம் தழுவும் அதிஸ்டமற்று உழன்று கொண்டிருக்கிறோம் என பலர் சொல்லி கண்ணீர் விடும் கதை அகலத் துயரமானது.

புனர்வாழ்வு எனச் சொல்லி தடுப்பு முகாம்களுக்குள் கொண்டு சென்று வதைப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரின் உடலில் உள்ள காயங்கள் மட்டும் தான் சாட்சி. தொடர்வதைகளின் மூலம் உளவியல் சிதைவை ஏற்படுத்தி வாழ்வின் இருப்பு மீது வெறுப்பையும் கோரத்தையும் ஏற்படுத்தி புனர்வாழ்வுக்கு பின்பான விடுதலை என சமூகத்தின் உதிரிகளாக முன்னாள் போராளிகளை வாழ இனப்படுகொலை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. இன்னும் இன்னும் வதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்களால் வாழ்வின் மீது சலிப்புத் தான் ஏற்படுமே தவிர அமைதியான வாழ்வை நினைத்துப்பார்க்க கூட  உரிமையில்லாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.  .

புலம்பெயர் தமிழர்கள் கணிசமான பேர் தமிழீழம் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்அவர்களின் நம்பிக்கையையும் நிதிவுதவியையும் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு என்ற பெயரில் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் சிலர்  தத்தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவர்களை
 எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழீழம் என்கிற தேசத்தை பெற்றுக்கொள்ளுகிற போராட்டத்தை தமிழர்கள் நடாத்தியது கிடையாது தமிழீழம் என்கிற தேசம் எங்களோடு தான் இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நம்பிக்கை என்று நீங்கள் சொல்வது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் நம்பிக்கை தான். ஆனால் பெற்றுக் கொள்கிற என்கிற பதம் முட்டாள்தனமானது. தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கத் தான் போராடினமே தவிர இல்லாத  ஒன்றை பெற்றுக்கொள்வதற்கில்லை.                எமது தேசத்தை நாங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும். பிரான்ஸ் எனும் தேசத்தை ஜெர்மெனி ஆக்கிரமித்த பொழுது பிரான்ஸ் தேசம் இருந்ததைப் போல, ஆக்கிரமிப்பாளர்களால் போலந்து எனும் நாடு அற்றுப் போன போது போலந்து இருந்ததைப் போல தமிழீழம் என்பது எங்களோடு தான் இருக்கிறது.

அப்படியான தமிழீழ மீட்பு போராட்டம் இன்று பெருத்த இராணுவ பின்னடவை சந்தித்து நிற்கிற வேளையில்  தமிழீழ ஆதரவுக் குரல்களாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் என்றுமில்லாதவாறு இயங்கி வருகின்றமை வரவேற்கவேண்டிய ஒன்று. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ அமைப்புக்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கும் உள்ள உறவு ஆரோக்கியம் மிக்கது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.                              ஆனால் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு அரசியல் என்பதை எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதிலிருந்து தான் அரசியல் கருத்து முரண்பாடுகள் எமக்குள்ளேயே ஏற்படத்தொடங்குகிறது.

தலைவர் பிரபாகரனும் தமிழீழமும் என்கிற சொல்லாடல் தமிழ்நாட்டில் விற்பனை பண்டமாகவும் ரசிக மனப்பாங்கோடும் நின்று விடுகிறது. ஆரோக்கியம் நிறைந்த கருத்து நிலைகளோடு தமிழீழத்தின் அவசியத்தை இங்குள்ள அமைப்புக்கள் இந்தத் தலைமுறையிடம் கொண்டுசேர்க்கவில்லை. இங்கு பெரும் தமிழீழ உணர்ச்சிவாதத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கவர்ச்சி அலையை மட்டும் கட்டியமைத்து கொண்டிருக்கும் அமைப்புக்கள் சமநிலையாக  அறிவார்ந்த தளத்தில் தமிழீழ கருத்தியலையும்  கொண்டு சேர்க்குமாயின் அவர்களின் அரசியல் செயற்பாடு வணக்கத்திற்குரியது.

ஆனால் தமிழ்நாட்டில் தமிழீழ தமிழர்களுக்கு நேருகிற துயரம் சிறிலங்கா அரசாங்கத்தின் முள்வேலி முகாம்களுக்குள் நடப்பதை விட அதிகமானது அதை ஒருமித்து நின்று சரிப்படுத்தக் கூட இவர்கள் திராணியற்று இருக்கிறார்கள் என்று சொல்லுகிற இந்த இடம் எனக்கு வருத்தமானது. தமிழீழத் தமிழர்களுக்கான போராட்டம் என்பதற்கான களம் தமிழ்நாட்டில் உள்ள முகாம் மக்களுக்கான விடுதலையில் இருந்து தான் எழவேண்டும். அது தான் ஆரோக்கியமிக்க அடிப்படை.

மீண்டுமொரு எழுச்சி, போருக்கான சாத்தியப்பாடிருப்பதாகக் கருதுகிறீர்களா? அல்லது இனி செல்ல வேண்டிய பாதையென்று ஈழத்தமிழர் யாது கருதுகின்றனர்? 

நாம் எந்த ஆயுதத்தை போராட்ட களத்தில் ஏந்தவேண்டும் என்று தீர்மானிக்கிற ஒட்டுமொத்தமான பொறுப்பையும் எமது எதிரிகளிடமே கொடுத்திருக்கிறோம்.              அது தான் தமிழீழத்தவர்களின் தந்திரோபாய பலமும் கூட. இராணுவ ரீதியிலான எங்கள் இனத்தின் தோல்வியை பின்னடைவு எனச் சொல்லுவதையே நான் ஏற்றுக் கொள்வது கிடையாது. முள்ளிவாய்க்காலில் நாம் சந்தித்தது இனப்படுகொலை இன்னொரு பக்கத்தில் படையியல் தோல்வி.

இந்துசமுத்திர புவிசார் அரசியலின் கைதிகளாக இன்று வரை தமிழீழத் தேசிய இனம் தான் பல இன்னல்களை சந்திக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான  பிரச்னையாக மட்டுமே இந்தப் பிரச்னையை நோக்குவது கவலை தரக்கூடியது.            இது சர்வதேச வர்த்தக மற்றும் புவிசார் அரசியலின் அவ்வளவு ஆதிக்கத்தையும் ஆசியாவில் நிலை நிறுத்துவதற்கான போட்டிகளில் ஈடுபட்டிருக்கும் ஏகாதிபத்தியங்களின் முடிவிற்கு ஏற்ப அசைக்கப்படும் பிரச்சனையாக இருக்கிறதென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கொல்லப்பட்டிருக்கிறோம், வகை தொகையின்றி வதைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம், போர் என்கிற சொல் எம் மீது 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் விளைவும் 18ம் நூற்றாண்டில் கறுப்பினம் அழிக்கப்பட்ட போது இருந்ததை விட , 2ம் உலகப் போரில் யூத இனம் அழிக்கப்பட்ட போது இருந்ததை விட பயங்கரமானது. இனப்படுகொலையின் வீழ்ச்சியிலும் தாக்கத்திலும் இருந்து வெளிவந்து நாம் மானுடத்தின் அறத்தை, நீதியை, விடுதலையை சர்வதேச அரசியல் ஒழுங்குக்கு அமைவாக கொண்டு சென்று  நிலை நாட்டவேண்டியவர்களாக காலத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

தற்போது இப்பொருள் குறித்து தாங்கள் செய்து வரும் பணிகள் என்னென்ன?

மரணத்தால் வழிநடத்தப்பட்டு இரத்தமும் தசைகளும் நிறைந்த இனப்படுகொலை களத்தில் இருந்து எனக்குள் மூண்ட புது நெருப்பின் எழுதலோடு அரவணைப்பை கொண்டிருக்கிறேன்.

இனப்படுகொலைக்கு பின் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையான துயரத்தில் இருந்தபடியே              கடந்து வந்த சாவின் வெக்கை குறித்தும் ஆயுத வதைகள் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கிறேன். வாழ்தலின் நிமித்தம் மிதித்து வந்த மரணத்தையும் பிரிந்து வந்த மண்ணையும் எழுத்தின் வழி பழி தீர்த்தும், முத்தமிட்டும் கொண்டிருக்கிறேன்.

நன்றி

*

நேர்கண்டது– தி .பரமேசுவரி , யுவபாரதி மணிகண்டன்

         

பிரிந்து கிடப்பதால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்து விட முடியாது

                – சு .அகரமுதல்வன்

 2
சு .அகரமுதல்வன் சமகால இளம் ஈழக் கவிஞராக மட்டுமன்றி பெரும் இனப்படுகொலைக்கு பிறகான காலத்தை வடிக்கும் படைப்பாளியாகவே என்னுள் அடையாளப்படுகிறார். கவிதைகளை விட மேலாக இவர் நந்திக்கடல் கடந்து வந்த நினைவுகள் ஆழப் பதிந்துள்ளது. மே 2009 இறுதிக்கட்டத்தின் கொடூர நாட்களை கடந்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.  இவரின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி , அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைத்தொகுப்புகள்,போர் நிலத்தின் இலக்கியம் அடக்குமுறை அரசியலின் வேர்களில் எழுகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த நினைவோடு அவரிடம் சில கேள்விகள். ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன்

மனிதத் தன்மையற்ற ஓர் பெரும் போரை கடந்து வந்தவராய் உள்ளநீங்கள் , வன்னியின் நிலைமையை இன்று எப்படி உணர்கிறீர்கள் ?
மனிதத் தன்மையற்ற போர் என்று சொல்வதை விட போர்த் தன்மையற்ற போர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும், போர் நடந்த காலத்தில் சாவினால் வழிநடத்தப்பட்ட வன்னிச் சனங்கள் இன்று பல்வேறு அடக்குமுறைகளையும் இராணுவத்தின் அதிகார பலாத்காரங்களையும் எதிர்நோக்கி வாழவேண்டியவர்களாக திக்கற்று நிற்கிறார்கள். வன்னி என்பதை சிங்கள இனவாத அரசின் அதிகார துஸ்பிரயோகங்கள் நிகழ்ந்தபடியிருக்கும் ஒரு நிலத்தின் அடையாமளாக தெரிந்து கொள்ளலாம் மேலும் சொல்லப்போனால் இனப்படுகொலையின் பின்னரான வன்னி இன்னுமொரு தடவை இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்திலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலோங்கத் தொடங்கிவிட்டன என்ற கருத்து உள்ளது, அது இன்றைய சூழலில் எவ்வாறு உள்ளது?

இந்தக் கூற்று மிகவும் அபத்தமானது, மரணம் வழிநடத்திச் சென்ற மக்களின் வாழ்வில் சாதி மேலோங்கியது என்கிற கருத்தே அருவருப்புமிக்கது. வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் மேலோங்கத்தொடங்கியது அவலமும் கோரங்களுமே தவிர சாதி அல்ல. அடிப்படையில் தமிழீழச் சமூகத்திடம் பெருத்து நின்ற சாதிய விகாரங்களை எல்லாம் அழித்தொழித்தது இனவிடுதலை என்கிற தமிழர்களின் ஒன்றுபட்ட பயணம். குறிப்பாக ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்புக்களின் வருகைக்கு பின்னர் தமிழீழச் சமூகத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகள் முனை மழுங்கத்தொடங்கியது தான் வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாதிரி அரசு நிகழ்ந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் எல்லோரும் தமிழர்கள் என்கிற ஒற்றை அடையாளத்தோடு தான் இருந்தார்களே தவிர அங்கு சாதி முளைவிடுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இனவிடுதலை வேண்டி செருக்களத்தில் நின்று போராடிய தலைமுறையிடம் சாதிய உணர்வுகள் ஒரு பொழுதும் இருக்கவில்லை, எனது அண்ணன் களத்தில் விழுப்புண் பட்டு வீழ்ந்த போது அவனை தூக்கியவர்களை போராளிகள் என்று தான் சொல்லிக்கொள்வேனே தவிர என்ன சாதி என்று இழிகுணத்தோடு அவர்களை வினவ மாட்டேன். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் சமூக சீர்த்திருத்தங்களையும் தன் அகத்திலும் புறத்திலும் என்றுமே கொண்டிருக்கும் வன்னி எப்போதோ சமூக விடுதலையை அடைந்த மண் சாதி என்கிற சொல்லைக் கூட சொல்லுவதற்கு அருவருப்பபடைகிற மானுட நிலம். யாழ்ப்பாணம் என்பது தான் இன்னுமே சாதிய கட்டமைப்புக்களோடும், பெண்ணடிமைத்தனங்களோடும், சைவத்தின் அதிகாரத்தோடும் இயங்கிக்கொண்டிருக்கிறது அதுவும் புலிகளுக்கு பிறகான இன்றைய காலம் என்பது சொல்லி மாளாத சமூக பின்னடவை மிகத் துணிச்சலாக யாழ்ப்பாண உயர் சாதிச் சமூகத்தினர் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இன்றைய நிலவரமும் எனது கவலையும்.

இனப்படுகொலையை எண்ணமாக கொண்டு 2009 போரை இலங்கை அரசு மேற்கொண்டிருந்தாலும் , இதற்கு பின்னே தமிழீழத்தை வியாபார நிலமாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் இருந்ததாக எண்ணுகிறீர்களா ?

 
ஓம் அதில் எந்த அய்யமுமில்லை , அந்த எண்ணம்மட்டுமில்லாது இருந்திருந்தால் இவ்வாறான ஒரு இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்திருக்காது. கொழும்பின் அதிகார வர்க்கத்தின் மூளையில் நெடுநீண்ட காலமாக உருத்திரண்ட தமிழர் நிலங்களை வியாபாரமாக்கும் திட்டத்திற்கு தான் கிழக்கில் உதயம் ,வடக்கில் வசந்தம் என பெயர் சூட்டப்பட்டது. தமிழர்களின் அனைத்து விதமான வளங்களையும் சுரண்டி அவர்களை நாதியற்றவர்களாக ஆக்கிவிட வேண்டும் என்கிற சிங்கள இனவாதத்தின் திட்டமிடலில் முன்னுரிமையாக இந்தத் நோக்கம் இருப்பது என்பது ஆச்சரியம் இல்லை. இந்த திட்டத்தின் ஊடாகவே  சமாதான காலத்தில் இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பெரும் வல்லரசு நாடுகளை இனப்படுகொலை யுத்தத்திற்கு ஆதரவாக ஒன்று திரட்ட முடிந்து என்பதும் முக்கியமானது.

 
ஈழத்துக்கு அரவணைப்பு சக்தியாக தமிழக மக்களிடம் ஈழப்போர் இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா ?

 
இல்லை என்று உண்மையைச் சொல்லி தோல்வியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், தமிழ்நாடு தமிழீழ மக்களுக்கு அரவணைப்பு சக்தியாக என்றுமே விளங்கி வந்தாலும் அது இனம் சார்ந்த உணர்வின் அடிப்படையில் தான் தொடர்கிறது என்பது கவனிக்கவேண்டிய விடயம், ஈழப் போர் இலக்கியங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்காத அனைத்து குற்றங்களையும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்களே ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகம் புனைவிலக்கியத்தின் தத்துப் பிள்ளைகளாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டதன் விளைவே இதற்கு காரணமெனச் சொல்ல முடியும். கஸ்தூரி, செல்வி, மலைமகள்,ஆதிலட்சுமி,சிவரமணி புதுவை இரத்தினதுரை, அம்புலி என நீண்டு கொண்டு போகும் ஈழப் போர் இலக்கியவாதிகளின் பெயர்களை இலக்கிய மேடைகளில் சில எழுத்தாளர்களேனும் பேசுவது ஆறுதலளிக்கிறதே தவிர நிறைவல்ல. குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிருக்கும் இலக்கிய சூழல் மக்களிடமிருந்து விடுபட்டு விட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். வாசித்தலும் இலக்கியம் படைத்தலும் மேதமைகளின் அதிகாரப் பொழுது போக்கு போலான பிம்பம் ஒன்று கட்டப்பட்டிருப்பதை தமிழ்நாட்டில் காணக்கூடியதாகவுள்ளது. ஈழப் போர் இலக்கியங்களுக்கு பதிப்புரிமை வாங்கும் பதிப்பகங்கள் அதனை ஒரு சாதாரண வாசகன் வாங்குகிற விலைக்கு கூட போடுவதில்லை என்பதும் இந்தத் தோல்வியில் இன்றுவரை பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் பங்கு அரசியல் தீர்வை ஈட்டுவதில் மிக முக்கியமானது என எண்ணும் தமிழீழத் தமிழர்கள் இந்திய அரசை நெருங்க முயற்சிப்பது போல இந்திய மக்களை நெருங்க முயற்சிக்கிறார்களா ?
 
அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவை முக்கிய காரணியாக எதிர்நோக்கும்  தமிழீழத் தமிழர்களின் நிலைப்பாடு மிகச் சரியானதா இல்லையா என்கிறதைத் தாண்டி அவ்வாறான அணுகுமுறை தவிர்கமுடியாததாய் இருக்கிறது என்பது தான் உண்மை. பவுத்த மதவாத மற்றும் சிங்கள இனவாத சக்திகள் அங்குள்ள தமிழர்களை இந்தியர்களாக நினைத்து தான் அழிக்கிறார்கள் என்கிற உண்மையை உண்மையான இந்தியர்களே அறியாதிருப்பது தான் அரசியல் வினோதம். சிங்கள இனவாதம் என்கிற பெரும் அரக்கனையே மதவாதம் என்கிற இன்னொரு அதிதீவிர பயங்கரவாதம் தான் இயக்குகிறது என்கிற விடயத்தை இந்திய அரசியல் அவதானிகள் கவனிக்க மறுக்கிறார்கள்.

மகாவம்ச மனவுலகோடு  இயங்குகிற தேரவாத பவுத்த பயங்கரவாதம் அங்குள்ள தமிழர்களை தமிழர்களாக பார்ப்பதைப் பார்க்கிலும் சைவர்களாகவும் இந்துக்களாகவும் பார்க்கிறது என்பது தான் மிக ஆழத்தில் மறைந்து போயிருக்கும் புத்தனின் மவுனம். மேலும் இந்திய மக்களை நெருங்குவதற்கான அரசியல் சூழல் இன்னுமே தமிழீழ மக்களிடம் ஏற்படவில்லை என்று  கூட சொல்லமுடியும். இந்திய மக்களின் உள்ளத்தில் தமிழீழ மக்கள் பயங்கரவாதிகளாக உருவகப்படுதப்பட்டிருப்பது அவர்களை நெருங்குகிற நடைமுறைக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது. ஏன் இந்திய மக்களிடம் போகவேண்டும் தமிழ்நாட்டு மக்களிடமே அப்படியான பார்வை தான் இருக்கிறது என்பதை நான் இதில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 
பயங்கரவாதம் என்று நீங்கள் சொன்ன வகையில் கேட்கிறேன்…புலிகள் மீதான ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் ஈழ மக்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுகிறீர்கள்என்பதை எப்படி அணுகுகிறீர்கள் ?

துன்பியலின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கமுடிகிறது . . . இதிகாசங்களிலிருந்து நேரடியாக இந்த நூற்றாண்டிலும் அனுமன்களால் தான் எமது நாடு எரிக்கப்பட்டிருப்பதாக எனது அம்மம்மா ஒரு முறை பம்பலாக சொன்ன வசனத்தை உங்களுக்கும் சொல்லுவது மன நிம்மதியைத் தருகிறது . தமிழீழ மக்களாகிய நாம் ஒரு பொழுதும் இந்தியாவிற்கு எதிராக எம்மை நிலை நிறுத்திக் கொண்டதில்லை என்பதை வலியுறுத்துவதை விட  வேறு எந்த அணுகுமுறையும் பதிலாக இருக்கமுடியாது.

2009 போர் சொந்த நிலத்தில் புலிகளுக்கு அழிவை கொண்டு வந்தது மட்டுமின்றி புலம்பெயர் சமூகத்திலும் சிதறலை உருவாக்கியிருக்கிறது, புலம்பெயர் அமைப்புகள் பல்வேறு அரசியல் பணிகளை செய்து கொண்டிருந்தாலும் பல கூறுகளாக பிரிந்து இருக்கும் நிலையை எப்படி அணுகிறீர்கள்?
 

இது மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என உணர்ந்துகொள்கிற காலம் புலம்பெயர் அமைப்புக்களிற்கு நேரப்போகிறது, களத்தில் புலிகள் அமைப்பின்  இராணுவத் தோல்விக்கு பின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வடிவம் மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழீழ மக்களிடம் இந்த அமைப்புக்களின் மீது பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருக்கிறது. இவர்கள் தேசிய நாட்களை கோலாகலமாக கொண்டாடும் சடங்குப் போராளிகளாகவே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ உலக நீரோட்டத்திற்கு அமைவாக தமிழர்களின் போராட்டத்தை முன் எடுக்கவேண்டுமென்பது தான் சரியான தெளிவு நிலையாக இருக்கமுடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வருகிற அமைப்புக்களுக்கிடையே சாதனைவாதப் போட்டிகள் அதிகரித்ததனால் தேசிய நலன் சார்ந்து இயங்கும் பண்புகள் இல்லாமல் போய்விட்டதை பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக காணமுடிகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த இன்றைய தமிழ் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியத்தையும் அறத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாததோடு புகலிடம் அடைந்துள்ள அந்த நாட்டின் சொந்தப் பிரஜைகளுக்கு எமது இனத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளை தெரியப்படுத்தாததே  புலம்பெயர் அமைப்புக்களின் பலவீனமாகத் தான் பார்க்க முடிகிறது.

இப்பொழுது புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சில அமைப்புக்களிடம் ஒரு வண்ணமயமான விழாக்கோல அரசியல் செயற்பாடுகள் தான் முன் நிற்கிறதே தவிர இரத்தச் சகதியின் ஈரம் காயாமல் அல்லற்படும் களத்து மக்களின் கண்ணீர் குறித்து அவர்களிடம் கவலைகள் இருப்பதில்லை.

பிரிந்து நின்று செயற்படுதல் என்பதே நமது பொது எதிரிக்கு பலமான விடயம் என்பதை உணர்ந்து கொள்கிற அளவுக்கு கூட இவர்களிடம் அரசியல் கூர்மை இல்லாதிருப்பது வருத்தமான விடயம். நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென வாழ் என்கிற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூற்றுக்கு முரணாக நடந்து கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களால் மக்களுக்கான எந்தவொரு அரசியலையும் செய்துவிடமுடியாது என்பது சிலர் உணர மறுக்கும் உண்மை. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன காரணத்திற்காக நாளை எனக்குத் துரோகியென பட்டமளிக்கும் போலியோ செயற்பாடுகளைத் தான் புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சில அமைப்புக்களால் ஆரோக்கியமாக செய்யமுடியும்.

இயக்கங்களுக்கு உள்ளேயான மோதல்- முஸ்லீம்களை வெளியேற்றியது – கொரில்லா முறையில் இருந்து  புற ராணுவ அமைப்பாக மாறியது என புலிகள் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களோடுஇப்போது இது மேற்குலக பாணியிலான விமர்சனங்களாக தமிழ் சமூகத்துக்கு உள்ளயே எழுவதை பற்றி ?
எந்தவொரு இயக்கமும் செயற்பாடும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டிருக்க முடியாது, ஆனால் அதனை சரியான அறம் கொண்ட விமர்சனப் பாங்கோடும் சொல்லுதல் வேண்டும். ஆயுத அமைப்புக்களின் மோதலிலிருந்து இன்று வரை வைக்கப்படும்  பல்வேறு விமர்சனங்கள் இந்தப் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளிகளை தொட்டிருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும். முள்ளிவாய்க்காலுக்கு பிறகு  புலிகளை விமர்சித்தலும் ஆதரித்தலும் கண்மூடித்தனமாகவே இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டுமே கூர்மையற்றது. முஸ்லிம் வெளியேற்றத்தில் இருந்து கொரில்லா முறையில் இருந்து  புற ராணுவ அமைப்பாக மாறியது வரை பேசிக் கொண்டே இருத்தலை தம் தலையாயக் கடமையாக வைத்திருக்கும் புலிஎதிர்ப்பு வாதிகளிடம் அறத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரு ஆயுதப் போராட்ட இயக்கத்தின் போக்கு இவ்வாறு தான் அமைய வேண்டும் என எவரும் தீர்மான முன்வரைவுகளை கொடுத்துவிடமுடியாது. அது ஒரு சிறுகதையையோ, நேர்காணலையோ வடிவமைக்கும் இலகுவென்று அவர்கள் நினைத்திருக்க கூடும்.

இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிக் கொண்ட என் சகத் தமிழ்ச் சகோதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட யாழ் வெளியேற்ற நிகழ்வு அன்றைய களச்சூழலில் தவிர்கமுடியாததாய் இருந்திருக்கிறதென்றாலும் அதன் பிறகான நிகழ்வுகளில் அதற்கான தார்மீக மன்னிப்பை புலிகள் இயக்கமே கேட்டுக்கொண்டமையை இவர்கள் பேசமறுப்பது தான் இவர்களின் விமர்சனத் தோல்வி.

மானுடப் போராளிகளாக தம்மை நிலை நிறுத்த முனையும் இவர்கள் செஞ்சோலையில் கொல்லப்பட்ட  அறுபதுக்கு மேற்பட்ட சிறார்கள் குறித்து ஒரு பதிவையேனும் இதுவரை பதிந்துள்ளர்களா என்றால் இல்லை என்று சொல்ல முடியும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை கருத்து ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் எதிர்ப்பதாக நினைத்து ஒரு இனப்படுகொலையை விமர்சனங்களின் ஊடாக சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். மேற்குலகப் பாணியில் புலிகள் மீதான விமர்சனங்களை எழுதுவது அவர்களின் எழுத்துலக அடையாளமாக இருக்கிறதே தவிர இவர்கள் எந்தவொரு சமூகத்தின் அடையாளமும் இல்லை.
இனப்படுகொலை அரசியல் பலவிதமான கூறுகளாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ?


இனப்படுகொலை அரசியல் பலவிதமான கூறுகளாக உருவெடுத்திருக்கின்றமை என்பது உண்மைதானென்றாலும் இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களுக்கு அதிலிருந்து என்ன ஆகியது என்றால் எப்போதும் போல வெறும் கையைத் தான் விரிக்க வேண்டியுள்ளது. எங்களையும் எங்கள் அறம் கொண்ட விடுதலைப் போராட்டத்தையும் அழித்துக் கொண்டாடிய சர்வதேசமே இனப்படுகொலை அரசியலிலும் பயன் அடைந்துவருகிறது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கைத்தீவை தமது பொருளாதார சுரண்டல்களுக்கு பயன்படுத்த நினைக்கும் ஓவ்வொரு முதல் தர நாடுகளும் இனப்படுகொலை அரசியலை கையில் எடுத்திருக்கின்றதே உண்மை. வடமாகாண சபையிலிருந்து அ.நா வரை நீண்டு போயிருக்கும் இனப்படுகொலை அரசியலால் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு இதுவரை ஆறுதலாகக் கூட எதுவும் நேரவில்லை. அமெரிக்கத் தீர்மானம், சர்வதேச போர்குற்ற விசாரணை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் என சொல்லிக்கொண்டே போகிற கால போக அரசியல் நிகழ்வுகளால் எங்களுக்கு எதிர்காலமிருப்பதாக நாம் ஒரு போதும் நம்புவதற்கில்லை.

சர்வதேச சக்திகளின் நோக்கு நிலையில் மாற்றம் ஏற்படுகிற வகையில் வலுவான போராட்டங்களை புலம்பெயர் மக்கள் கையில் எடுத்து பொது வாக்கெடுப்பு என்கிற சனநாயக விதி வரைக்கும் சர்வதேசத்தை மிக வேகமாக அழுத்துவதன் மூலமே  எமது எதிர்காலம் சனநாயகப் பாங்குடன் ஆரம்பிக்கும், இதுவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து அடக்கப்படுகிற தேசிய இனத்தின் உலகளாவிய இறுதிச் சனநாயக அணுகுமுறையாகவும் இருக்கமுடியும் இதுவும் தவிர்க்கப்படுமிடத்தில் வன்முறையினூடாகத் தான்  அரசியல் எதிர்காலம் இருக்கும். அது அரச அதிகாரத்தின் வன்முறையால் அடக்கப்படுகிற இனத்தின் இரண்டாம் கட்ட அறம் கொண்ட வன்முறையாகக் கூட இருக்கலாம்.

வெளிப்படையாக சொல்லுங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் ஈழ அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
இதை முக்கியமானதொரு கேள்வியாக பார்ப்பதோடு இதற்கு முந்தைய பதில்களையும் வெளிப்படையாக தான் சொன்னேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு எமக்கு ஆதரவாக,உறவாக,சகோதரனாக இருந்து வருவது புதியதல்ல. அந்த உறவில் எந்தக் களங்கமுமில்லை. ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கு அவ்வளவு துணை நின்ற தாய் தமிழ்நாட்டின் மீது இன்றும் எங்கள் சனங்களுக்கு மிகப் பெரும் மரியாதை உண்டு.நான் தமிழ்நாட்டின் தமிழீழ சார்பு அரசியலை முள்ளிவாய்க்காலுக்கு முதல் முள்ளிவாய்க்காலுக்கு பிறகு என நோக்குவதோடு மு.பி குறித்து பேசுவது தான் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முள்ளிவாய்க்காலுக்கு பிறகு “ஈழம்” என்கிற வார்த்தை காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்து கட்சி அரசியல் வரை வியாபர கவர்ச்சியாக மாறிவிட்டது அது போக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனை ரசிக மனப்பாங்கோடு பேசித்திரிவதுமே இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையை சனல் –4 ஊடகம் திரையிட்டதன் பிறகே கணிசமான தமிழ்நாட்டு உறவுகளுக்கு தமிழீழ  மண்ணில் என்ன நடந்தது என்று ஒரு உண்மையே கிடைத்தது. சாதாரண மக்களிடத்தில் இறங்கி தமிழீழ மண்ணில் என்ன நடக்கிறது என சொல்லிக்கொள்கிற பரப்புரை அரசியலை கூட இங்குள்ள தமிழ் தேசிய அமைப்புக்கள் கையிலெடுக்க தவறிவிட்டார்கள். இது அவர்களின் தார்மீகக் கடமை.

ஏன் இன்னும் கூட தமிழ்நாட்டு மக்களிடம் அங்கு  நடந்தது இனப்படுகொலையே இறந்து போவது தமிழர்களே என்று வீடு வீடாகச் சென்று சொல்லிக் கொள்கிற பரப்புரை அரசியலை எந்த தமிழ்தேசிய அமைப்பும் முன்னெடுக்கவில்லை என்பதை நான் கதைக்கிற தமிழீழத் தமிழை கேட்டுவிட்டு ஒரு தமிழ்நாட்டு தமிழர் ஏன் சிங்களத் தமிழ் பேசுகிறீர்கள் எனக் கேட்பதிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது. இவர்கள் தமிழீழ சார்பு அரசியலையே முன்னெடுக்கவில்லை என்று கூட சொல்ல முடியும்.

தமிழீழ மக்கள் குறித்துமேடைகளில் முழங்கி கரகோஷம் வாங்கிக் கொள்வதையே அவர்கள் தமிழீழ சார்பு அரசியலாக எண்ணுகிறார்களோ என்று எனக்கு இன்றுவரை சந்தேகம் உண்டு.தங்களைத் தாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளாக  உருவகித்துக்கொள்ளும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழீழ மக்களின் மனத்தில் பிரபலங்களாக உருவாகியிருக்கிறார்களே தவிர ஒன்றித்த தேசிய உணர்வோடு இயங்கிக் கொள்ளுகிறவர்களாக களத்தில் இல்லை.

இவை யாவற்றையும் கடந்து தான் மாணவர் போராட்டத்தை பார்க்கவேண்டும் அதுவொரு சுய எழுச்சியான போராட்டமாகவே தொடர்ந்திருந்தால் தொய்விருந்திருக்காது ஆனாலும் அவர்களையும் குறித்த அமைப்புக்கள் கபளீகரம் செய்து விட்டமை கவலையளிக்கிறது. மக்களோடு மக்களாக நின்று களத்தில் வேலை செய்கிற எந்தவொரு தமிழீழ சார்பு இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதை வருத்ததோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.
 

பொதுவாக எனது கவிதைகளில் அழகியல் இல்லை என தமிழ்நாட்டின் சில ஜிகினா எழுத்தாளர்கள் தரச் சான்றிதழ் வழங்குவதுண்டு. எனது உடலில் இருந்து வடிகிற குருதிக்கும் கண்ணீருக்கு பவுடர் போட்டு தலை இழுத்து விடவேண்டும் என விரும்புகிற இது போன்ற மனிதமற்றவர்களையெல்லாம் கடந்து மானுடத்தின் உயிர்மூச்சாய் எமது தமிழீழ இலக்கியம் செயற்படுகிறது.

அது போருக்கு பிந்தைய என்றாலும் போர் பற்றியது தான். தமிழ் இலக்கியத்தில் வீரியம் ஏற்றிய படைப்புக்கள் தமிழீழத்தில் இருந்து வெளிவந்தவையே, வாழ்வின் ஆதி தொட்டு அந்தம் வரை போருக்குள்ளும், அழுகுரல்களுக்குள்ளும் ,குருதிகளுக்குள்ளும் வாழ்ந்தவர்களின் வாழ்பவர்களின் நிதர்சனமாக அது காத்திரத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகின் பேரிலக்கியமாக போரிலக்கியமாக தமிழீழ இலக்கியம் தான் இனிவரும் நூற்றாண்டுகளில் இனம் காணப்படுமென்பது திண்ணம்.

நேர்காணல் – ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரன்