நேற்றைய காந்தி

( பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைகள் – 01)

நேற்றைய காந்தி

       –   பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

   முதல் பகுதி

  gandhij

தன்னை உருவாக்கிய கொள்கைகள் பழமைவாதமாக மாறிவிட தற்போதைய இந்தியா அதனுடைய வரலாற்றில் இறந்த போனவற்றின் ஆவிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க அவற்றை ஆற்றுப் படுத்தும் சடங்குகளை தொடர்ந்து செய்த வண்ணம் தன்னுடைய சிந்தனையை வரலாற்றிலிருந்து விடுவித்து அதன் அன்றாடத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்க விரும்புகிறது.

காந்தியின் பிறந்தநாள் அப்படி ஓர் ஆற்றுப்படுத்தும் சடங்கு.

ஒரு தேசம் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப தனது iconகளை மாற்றிக் கொள்ளும். சமீப காலங்களில் எல்லைகள் கடந்த iconகளையும் ஏற்றுக் கொள்ளும் சமூகமாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு சிந்தனையும் அதன் காலம் கடந்தபின் தூக்கிப் புதைக்க வேண்டிய உயிரற்ற சுமையாகிறது. சமூகக் கூட்டு மனதிலும், பொருள் உற்பத்தியிலும் (வளங்களை கட்டுப்பாடின்றி சுரண்டுதல்) வெளிப்படும் abusive nature வளர்ச்சி என்னும் கருத்தோடு இணைந்து செல்லும் சமகால இந்திய வாழ்வில் எதிலும் கட்டுப்பாட்டையும், தியாகத்தையும் வலியுறுத்திய ஒரு சிந்தனை பழமைவாதமாகவும், கடந்தகாலத்திற்கு உரிய ஒன்றாகவும் ஆதல் தவிர்க்க முடியாமல் ஆகும் பட்சத்தில் அந்தச் சிந்தனையின் துரதிஷ்டம் சுதந்திர இந்தியாவை உருவாக்கி அளித்த மூலச்சிந்தனைகளில் பிரதானமாக இருப்பது.

அதனாலேயே முதலில் கடந்து போக வேண்டிய ஒன்றாகவும் ஆனது. காந்தியத்தை சுதந்திர இந்தியா கடந்து போவதின் குறியீட்டு நிகழ்வின் உச்சங்களை WallMartன் நுழைவிற்கு எல்லா நுழைவாயில்களையும் திறந்துவிட நினைக்கும் பொருளாதாரக் கொள்கைகளும், பிரதமாரகத் துடிக்கும் மத அடிப்படைவாதியான மோடியின் மீதான கவனத்தையும் உடனடி உதாரணங்களாகச் சொல்ல முடியும்.  இந்த இரண்டு நிகழ்வுகளும் காந்திய சொல்லாடல்களுக்கு எதிரானவை. காலனியாதிக்க விடுதலைக்குப் பிறகு இந்திய சமூகம் எப்படித் திகழ வேண்டும் என காந்தி சிந்தித்தாரோ அதற்கு எதிராக வெகு தூரம் வந்துவிட்டோம்.

பொருளியல் தளத்தில் நினைவுக்கு வரும் இன்னொரு குறியீடு கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் திட்டத்திற்கு சூட்டப்பட்ட காந்தியின் பெயர். நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஜவகர்லால் நேருவை பெயரைச் சூட்டினர்.  இதன்வழி நேருவை நவீனத்தோடும் காந்தி பழமையோடும் தொடர்புடைய சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள் என்பதனை வெளிப்படையாக பிரித்தல் நடந்தது. ”தங்கநாற்கர” சாலை அமைத்து இந்தியா ”ஒளிர்கிறது” என பெருமிதம் கொண்டவர்கள் தங்களது திட்டங்களுக்கு பெயர்வைக்க “கோல்வால்கரையோ”, “சியாமபிரசாத் முகர்ஜியையோ” உபயோகிக்காமல் இருந்ததின் பின்னால் நோக்கச் சுத்தத்திற்கு வாய்ப்பில்லை, மாறாக மையநீரோட்டத்தில் அவர்களது பங்கு ஏற்றுக் கொள்ளப்படாது என அறிந்திருந்ததே.

சமகால இந்தியாவின் சொல்லாடல்களில் அனைத்து மட்டங்களிலும் முன்னுரிமை கொடுக்கப்படும் பொருளாதார “வளர்ச்சி”யின் வழிகள் அனைத்துமே காந்தியத்திற்கு எதிரானவையாக இருக்க இன்றைக்கு காந்தியின் இடம் எதுவென விவாதிப்பது ஒரு பிரதிக்கான விசயமேயன்றி இந்திய சமூக, பொருளியல் வாழ்வின் நடப்போடு தொடர்புடைய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் பிளவுண்டுவிட்ட இரு சமூகங்களின் குணாம்சங்களை வரையறுக்க முனைந்தால் முதலாவதும், அதிகாரம் செலுத்துவதுமான சமூகம், உலகோடு தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்ட, தனது மூலதனத்தை மின்னணுச் சாதனங்களில் ஒளிரும் புள்ளிகளில் கணக்கிட்டுக் கொள்கிற, பொருட்களின், சேவைகளின் பெருக்கத்தினால் தன் முன் குவிந்திருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளில் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிற, சமூக பங்களிப்பை, கூட்டுச் செயல்பாட்டை மறுதலிக்கிற தன் மீதே ஓயாது அக்கறை கொள்ளும் மன அமைப்பையும் கொண்டது.

இரண்டாவது மேற்சொன்னதின் வளர்ச்சிக்கு தனது வளங்களை வழங்குவதும், அதிகாரம் செலுத்தும் பிரிவிற்காக தனது வாழ்வெளியை இழப்பதுமான இரண்டாம் சமூகப் பிரிவு. நிலத்தை SEZகளுக்காக இழக்கும் விவசாயிகளும், வளங்களுக்காக காடுகளை இழக்கும் பழங்குடிகளையும் சொல்லலாம்.  இதற்கு வெளியே சிறப்புக் கவனத்தோடு வினையாற்றப்படுவது மதச் சிறுபான்மையினர் குறித்தது, இந்த இரு பிரிவுகளிலும் காந்தியின் இடம் என்ன என்பதை எளிதல் அறிந்து கொள்ள முடியும். முதலாவது பிரிவில் காந்தி நினைவுக்கும் வரத் தேவையில்லாத ஒருவர். காந்தியிடமிருந்து மேலாண்மைக்கான சிந்தனைகளை எடுத்துக் கொள்வது இந்தப் பிரிவினரின் மத்தியில் நிகழ்ந்தது. அவரது நேரந் தவறாமை, முடிவுகளில் உறுதியாக இருப்பது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வது, தேவைப்படும் போது சமரசத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவது போன்றவற்றை மேலாண்மைத் துறைகளில் இருப்பவர்கள் வேண்டுமானால் பின்பற்றலாம். எல்லை கடந்த iconஆக திகழும் ஸ்டீவ் ஜாப்ஸை பின்பற்றத்தக்க உதாரணமாகக் கொண்டவர்கள் காந்தியின் பெயரை அறிந்திருப்பதே பெரிய விசயம்.

இந்தச் சமூகப் பிரிவுதான் 21ம் நூற்றாண்டில் இந்தியாவை வழிநடத்துகிற, ஆதிக்கம் செலுத்துகிற விசையாக பொருளாதார வளர்ச்சி மட்டுமே நோக்கமாகவும் மற்றவை அனைத்தும் அந்த வளர்ச்சிக்கு ஏதுசெய்வதாக மட்டுமே இருக்க வேண்டுமேயன்றி அதற்கு எதிரானதாக இருக்கக் கூடாது என விரும்பும் சமூகம். காந்திய பொருளுற்பத்தி முறையை இப்பிரிவு பழமைவாதத்தில் மட்டும் சேர்க்காது மாறாக அப்படி ஒன்று இருப்பதின் தடத்தையே அழிக்க முனையும்.  இந்த வகையிலும் காந்திய பொருளாதார சிந்தனைகள் இப்பிரிவினருக்கு சவால் விடும் விசையாக இல்லாமல் சில பத்தாண்டுகள் முன்பே காணாமல் போய்விட்டது.

இரண்டாம் சமூகப் பிரிவு முதலாவதை எதிர்க்கும் வல்லமையை மெதுவாக இழந்து இடப்பெயர்வின் மூலம் தனது நினைவுகளை அழித்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. வாழ்வெளிகளுக்கான போராட்ட வடிவங்களை இடதுசாரி வழியி்ல் மேற்கொண்டாலும், காந்திய வழியில் மேற்கொண்டாலும் முடிவு ஒன்றுதான். காந்தியத்தால் உயிரிழப்பு மிச்சமாகுமே ஒழிய உடைமையிழப்பும், வெளியிழப்பும் நிகழவே செய்யும்.

கொல்லும் நாஜிக்களின் முன் யூதர்கள் தங்களை தத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றார் காந்தி.  அப்படி நடந்திருந்தால் இலட்சக்கணக்கான இயேசு கிறிஸ்துக்கள் கிடைத்திருப்பார்கள். வாழ்வெளியை இழந்து கொண்டிருக்கும்  இந்தியச் சமூகத்தில் உருவாகிவிட்ட இரண்டாம் சமூகப் பிரிவினரை காந்தி நிச்சயம் தத்தம் செய்துகொள்ளச் சொல்ல வாய்ப்பில்லை. அதற்கு இடம் கொடுத்தால் காந்தியத்தின் கட்டுமானமே காணாமல் போய்விடும். மாறாக இந்த அதிகாரங்களை எதிர்க்கவே சொல்லியிருப்பார் கோடிக்கணக்கான காந்திகளை உருவாக்கும் நோக்கத்தில்.

காந்தியச் சொல்லாடல்களில் ஒன்றான கிராமப் பொருளாதாரத்தை இனி ஒருபோதும் பழமைவாத, காலத்திற்கு ஒவ்வாத அடையாளம் கிடைத்துவிடும் என்பதனாலேயே ஒரு இயக்கமாகக் கூட வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க வாய்ப்பில்லை.

உலகு முழுதும் அதிகார எதிர்ப்பரசியல் ஆயுத போராட்டத்தின் வழியாக மட்டுமின்றி காந்திய வழியிலும் நிகழ்த்த முடியாத வண்ணம் உலகளாவிய அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ஆயுதப் போராட்டம் அதன் ஈர்ப்பை இழந்து விட்ட தருணத்தில் காந்திய வழி அகிம்சைப் போராட்டங்களுக்கு கவனம் கூடியுள்ளது.  இதனை பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மார்க்ஸின் மீது கவனம் குவிந்ததோடு ஒப்பிடலாம் (உயிர்த்தெழுதல்களின் மீதான ஆர்வம்). அப்படி நிகழும் போராட்டங்களுக்கு ஒருவேளை கிடைக்கும்.  “அனைவருக்குமான பங்கில்” கூட ராயர்களுக்கு உரியது ராயர்களுக்கு போயே சேரும். அவர்கள் பார்த்து ஏதாவது அளித்தால் ஜனங்களுக்கு உரியதல்ல குறைந்தபட்சம் மீதமாவது கிடைக்கும்.

 

(தொடரும்………)

– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

 

bala

 

———————————————————————————————-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

வலைப்பூ :

மின்னஞ்சல் :

  •         tweet2bala@gmail.com

அகரமுதல்வன் கவிதைகள்

ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தப்தி
ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

அஞ்சற்க

1.

எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை
சொந்தமான மண் என்னிடமில்லை
படுகொலைக் களத்தில்
பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க
அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது
புலப்படாத மலை அட்டையென
ரகசியமாய் ஊர்ந்து
இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம்
என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட
இன்பங்கள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில்
குரூர வலியையும் வெறுமையையும்
போரில் தோண்டிய
பதுங்குகுழியில் மறைத்து வைத்து
அழிக்கப்பட்டவற்றை கட்டியெழுப்ப
முனைகிறேன்
வெளிப்படையாகச் சொன்னால்
குருட்டு இராச்சியம்
என் கண்களுக்கு ஒளியெனத் தெரியாது
மீண்டும்
பருமனான எனது தேசம் நோக்கி நடந்து
மகிழ்வாக வீழலாம்.
 

2.
துயரங்களுக்கு சொந்தமான
தீவொன்றில் பிறந்தது பற்றி
கவிதையெழுதுவது
தனது இதயத்தைதானே சுடுவதேயாகும்
அல்லது கண்களை பிதுக்கி தின்பதுபோல
மரண விரல்கள் மேயும்
ஏதுமில்லா சூனிய வெளியில்
பரவி வீழும் எறிகணையிலிருந்தும்
உடல் பிரிக்கும் தோட்டாக்களிலிருந்தும்
தப்பிப்பது பற்றி சிந்திக்கும்
குருதி தவிர வேறேதும் கண்டிராத
புதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கெனும் வாழப் பழகி
குழம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டொலருக்குள் மறைகிறோம்
இதனால் தான்
கவிதையில் தொடரும் அமைதிக்குள்
தொடர்ந்து முற்றும் வன்மத்தினால்
ஒரு மரண ஓசை ஒலிக்கிறது
எனக்கானதாகவும்
என் பிள்ளைகளுக்கானதாகவும்.

3.
இந்தக் கவிதை
தலைகீழாக தொங்கியபடி எழுதப்பட்டது
நீங்கள் நினைப்பது போன்ற
தலைகீழானது அல்ல
மிகத்துவக்கத்தில்
என் மூத்தோனின் கண்களை
தரையில் சிதைத்த வன்மம்
வதையின் கூடாரத்திற்கு
வெள்ளை வான் ஒன்றில்
என்னைக் கடத்தியிருந்தது
ரத்த நெடில் வீசும்
மானுட வதையின் கூடாரத்தில்
சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பி
மூக்கின் துவாரங்களிற்குள் புகுத்தப்பட்டு
என்னை உயிரோடு புதைத்துக்கொண்டிருக்க
எலும்புகளையும் நரம்புகளையும்
மொழிபெயர்க்கவியலாத கவிதைகளுக்கு உரமாக்கி
வௌவால் வடிவில் தொங்கியிறக்கிறேன்
போரில் தொலைத்த பிள்ளையை
தேடியலைந்து
களைப்புற்ற பறவையாகி
வீடு போய் சேருகிற
அம்மாவைத் தவிர
நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பற்றது
தேசத்திற்கான ஜீவிதத்தையும் அந்திமத்தையும்.

4.
எமக்கென வரைந்த அனுகூலங்களில்
போர்கள் பிரகடனமாவது தவிர
வாழ்வு வேறொன்றும் பரிசளித்ததில்லை
வெளிச்சம் ஓடிப் பதுங்கிய ராத்திரியொன்றில்
மனிதமற்ற ஆயுதங்கள் முன் நகர
பனங்குத்திகளின் காப்போடு
மோசமான காலங்களை தகர்த்திருந்தான்
போர்க்களத்தில் எனது அண்ணன்
அவனது மரணத்தை மிஞ்சி
களத்தில் நேராது எந்தச் சோகமும்
தேச உணர்ச்சியின் அபரிமிதத்தால்
விழுப்புண்களை
தன்னுடலில் உலவவிட்டு
தேச வரமொன்றை வேண்டியிருந்தான்
கனவுத் தடாகத்தின் பாசிச் சேற்றில்
வழுக்கி வீழ சித்தமின்றி
என்னைக் குழைத்து இரவில் பூசி
அஞ்சற்கவென்று
அவனை நகலெடுத்து விரைகிறேன்
மனவெளியில் விரியும் போர்க்களத்திற்கு.

அகரமுதல்வன்

 

குறிப்பு: ஈழக்கவிஞரான அகரமுதல்வனின் முதல் கவிதைத் தொகுப்பு “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” இந்த வருடம் 2013ல் வெளி வந்தது. இப்படைப்பிறகாக செயந்தனின் படைப்பிலக்கிய விருதும், சிறந்த தமிழ் கலை இலக்கிய கலைஞர்கள் விருதும் கிடைத்துள்ளது.