நாக்குட்டி 10

உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லத் தோணிருக்கு. ஆனாலும் சொல்லாமலே இருந்திருக்கேன். சொல்றதுனா இதோ இது மாதிரி எழுதி வைக்கிறது Do you know the freedom of possessiveness? பின்னாடி போய் எந்த தேதில இதப்பத்தி சொல்லனும்னு எழுதி வச்சேன்னு கூட பார்க்கத் தோணல. காதல் அவ்வளவு சோம்பேறியா ஆக்குமான்னு எனக்குத் தெரியல. அன்னைக்கு இப்படித்தான் கேள்வி கேட்டு, அப்புறம் எழுதிக்கலாம்னு mood இல்லன்னு, எனக்கு நானே சொல்லிகிட்டு மூடி வச்சிட்டேன். இன்னைக்கு சும்மா எழுதி பார்க்கலாம்னு தோணுது. காமமே ஒரு fantasy தான்டா அப்படின்னு உன்கிட்ட சொன்ன மாதிரி இருக்கு. ஆனாலும் நான் உன்கிட்ட சொல்லிக்கல. I mean இந்த அளவுக்கு Discuss பண்ற அளவுக்கு போகல. நீ இப்பவும் எனக்கு Friend தானே? அப்புறம் எப்படி Discuss பண்ணிருப்பேன். No way. பொண்ணுங்க கிட்ட ஒரு ஆண் வாசனை இருக்கு. எல்லாருக்கும் அவங்க வாழ்நாளுக்குள்ள அந்த வாசனைய சுவாசிக்க வாய்ப்பு கிடைக்கிறது இல்ல. சிலர் தேடுறாங்க சிலர் கிடைக்கிறதா எடுத்துகறாங்க. சிலர் சகிச்சிக்கிறாங்க. ஒரு ஆண் அவனோட ஆண் தன்மைல இருந்து விடுபட்டும் அதே மாதிரி ஒரு பெண் அவளோட பெண் தன்மைல இருந்து விடுபட்டும்,  பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும், இத சொல்ற நானே நம்புவனான்னு தெரியலை. ஒரு பொண்ணு அவளோட துணைக்கு, அவனோட பெண் தன்மையை வெளிப்படுத்த உதவி பண்ணனும். அதுலையும் சிலருக்கு வெளிப்படையா பேசணும். சிலருக்கு எதுவுமே தெரியாத மாதிரி காட்டிகிட்டு Under Play பண்ணனும். அவனோட பெண் தன்மை வெளிப்படுச்சின்னா ஒரு பொண்ணு அவளோட பெட்ரூம்ல ஆம்பளையா மாறிக்கலாம். நான் என்ன பேசுறேன்னு எனக்கே குழப்பமா இருக்கு. இது எல்லாம் உனக்கு புரியுமாடா? அப்போ தான் ஒரு பெண் இயங்க முடியும். உன் விசயத்துல இன்னும் குழப்பமாவே இருக்கு. ஆனாலும் வெளிப்படையாவே சும்மா நீ அப்படியே பாத்துகிட்டு இருக்கிற மாதிரியும் இருக்கு. நீ காதலிக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் இல்ல நிறையவே மாறியிருக்க. நிறைய உரிமை எடுத்துகிட்ட மாதிரி இருக்கு. என்னோட ஈகோ தடுக்குது. நான் உன்ன அனுமதிக்கல. இந்த confusing state நல்லா தான் இருக்கு. அப்புறம் இந்த உரிமை எடுக்குறவங்களோட எதிர் பாலினம் தான் முதல்ல இந்த Possessiveness மேல விழுவாங்க அப்படின்னும் தோணுது. எனக்கு நானே போட்டி போடுற மாதிரி இருக்கு. ஞாபகம் வந்துடுச்சி. இப்பவே சொல்லிடுறேன். ரெண்டுல எதுன்னு நான் Disclose பண்ண மாட்டேன். 

 1 Freedom of Possessiveness

2 Edge of Possessiveness  

 எழுதவா வேணாமான்னு இருக்கு. இவ்ளோ தகவல் ஒரு ஆணுக்குத் தேவையான்னு யோசிக்கவும் தோணுது. நீ எனக்கு ஆண் மட்டுமா என்ன? உன்னை ஒரு ஆணாகவும் என்னை ஒரு பெண்ணாகவும் முன்னிறுத்தத் தொடங்கிட்டா நம்மளோட வாழ்கை கேள்விக்குறியாகும் தானே? தப்பா யோசிக்கிற மாதிரி இருக்குல்ல? உன்கிட்ட நான் என்னவா இருக்கேன்னு யோசிச்சிப் பாக்குறேன். அதான். என்னோட ஆண் தன்மை எவ்வளவு சதவீதம் உன்கிட்ட ஓட்டிகிட்டு இருக்கு? தேவை இல்லாம நிறைய பேசுற மாதிரி இருக்கு. எனக்கு என்னவோ இதப்பேசினாலே நான் யாருன்னு உன்கிட்ட ஒப்படைச்சிருவனோன்னு பயமா இருக்கு. அதுனால தான் இப்ப கூட அடிச்சி அடிச்சி எழுதிட்டு இருக்கேன். இந்த டைரில இருந்து ஒரு பேப்பர் கூட கிழிக்கக் கூடாதுன்னு என்னைக்கு உன்னப் நம்ம பத்தி முதன் முதலா எழுதத் தொடங்கினனோ அப்பவே முடிவு எடுத்திருந்தேன். என்ன குருட்டு தைரியம்னு தெரியல. நானும் கட் பண்ணி எழுதிட்டு இருக்கேன். இதெல்லாம் நீ படிக்கும் போது உனக்கு நான் வில்லியா தெரிவனா இல்ல குழந்தை பெண்ணா தெரிவனா? கொஞ்சம் இந்த இடத்துல இடம் விட்டு அப்புறம் எழுதவா? நீ வந்து நிரப்பிக் கொடுன்னு? பன்னுவியாடா? பொசசிவ்னெஸ் எட்டிப்பாக்குற மாதிரி இருக்குடா இப்பவே. சரி அந்த டைம்ல என்ன தோனுதுன்னு பார்க்கலாம் உனக்கு. உனக்கு தனியா படிக்க கொடுப்பானா இல்ல சேர்ந்து படிப்போமான்னு கூட முடிவு பண்ண முடியல. அதுனால இடம் விடுறேன். Four Lines?

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரெண்டுத்துக்குமே சின்னதா தொடர்பும், சின்னதா ஒரு இடைவெளியும் இருக்கிறதா நினைக்கிறேன். சில நேரம் எனக்கே ரெண்டும் வேற வேற நேரத்துல வெளிப்படுறதாவும் நினைச்சிக்கிறேன். காதல்னா உரிமை கொண்டடுறதா என்ன? 

 ஒன்னு பயத்துலையும், இன்னொன்னு நம்பிக்கையிலையும் வருதுன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? பயம் சில நேரம் தைரியத்தை வர வைக்கும். நம்பிக்கை தைரியத்தைக் கொடுக்கும். இது தான் நான் சொல்லவர தொடர்பா இருக்குமா? நீ என் பக்கத்துல வர மாதிரி இருக்கு/

 Freedom of Possessiveness

 நம்பிக்கையின் மேல இருக்கிற தைரியம்

 இந்த தைரியம் தனக்குள்ள இருந்து வரகூடிய ஒன்னா இல்லை தன்னோட காதலின் மூலம் எதிர் பாலினம் தரகூடிய ஒன்னான்னு கண்டு பிடிக்கிறதுதான் மிச்சமிருக்கிற மர்மமே. உன் மேல வந்த love at first sight-ஐ இப்போ நினைச்சிப் பாக்குறேன். அது எங்க இருந்து வந்திருக்கும்? அந்த நம்பிக்கையை நீ அவ்ளோ கொஞ்ச நேரத்துகுள்ள எனக்கு கடத்தியிருக்க முடியுமா? அந்த வகையில யோசிச்சா அந்த தைரியம் எனக்கு நானே சொல்லிக்கிட்டாதுன்னு எடுத்துக்கலாம் தானே? உனக்கு என்ன பிடிக்குமா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கு தானே? இதுக்கு நம்பிக்கைன்னு பேரு வைக்கவா இல்ல தைரியம்னு பேரு வைக்கவா? Possessivenessஅனுமதிக்கிறதா வேடிக்கைப் பார்க்கிறதா? இதுவும் கூட நம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் இருக்கிற Sub text மாதிரி தான் நினைக்கத் தோணுது. எஸ் நானுமே இத ஒத்துக்கிட்டு தான் ஆகனும் இதுக்கு ஏதாவது எடுத்துக்காட்டு சொல்லலாம்னு தோணுது ஆனா எதுமே தோணல. உனக்கு புரியும்ல தானடா? இன்னும் ஏதாவது உனக்கு சொல்லத் தோணுதே...

இதுல முன் முடிவு இருக்குமான்னு பார்த்தா இருக்குற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. முன் முடிவு இருந்தா காதலோட Presence இல்லன்னா எதிர் ஆளோட Presence அத எப்படி அனுபவிக்க முடியும்? நான் சொல்றது Surprise இல்ல. இவன்/இவள் இதெல்லாம் செய்யமாட்டான்னு நினைச்சி அதுல ஏதும் நடந்தா அப்போ அந்த Possessive, Edge of Possessiveness-க்கு மாறிடாதா? என்ன செஞ்சாலும் இவ(ன்)-க்கு அந்த madness இருக்குமா? அப்படிப்பார்த்தா madness என்ன? இங்க “Accept அப்டிங்கற வார்த்தையே அடக்குமுறை தானே? முடியலடா என்னால? Freedom of Possessiveness அப்படின்னு ஒன்னு இருக்கான்னு யோசிக்க வச்சிடடா இடியட். நீ இப்போ இருந்தா எனக்கு Finger பண்ணிவிட சொல்லிடுவேன் போல. எஸ் செக்ஸ் வேணாம். அவ்ளோ டென்சனா இருக்கு.     

 Edge of Possessiveness
 நம்பிக்கையின் மேல இருக்கிற தன் பயம். 

 எனக்கு என்னமோ இதை ஈசியா உனக்கு சொல்லிட முடியும்னு தோணுது. இது ஒரு வகையான சுய சித்திரவதையா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த சித்திரவைதைல காமத்தின் சுவை கொஞ்சம் அதிகமா இருக்கும்னு தோணுது.  இந்த சுய சித்திரவதைக்கான முதல்படி என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன். என்னடா இது இவ்ளோ டயர்டு ஆகுது. I can’t baby. Kiss me.

 இந்த பயம் உருவாகுற இடம் எதுவா இருக்கும்? சந்தேகத்துக்கும், தன் பயத்துக்கும் என்ன வித்தியாசம்? தன் பயம்னு சொல்லுறது தனக்கு சாதகமா பேசி தப்பிக்கிற மாதிரி ஒரு Feel வருது தான? இந்த தன் பயத்தை எப்போ எதிர்ல இருக்குறவங்க கிட்ட Apply பண்ணனும்னு தோணும்னு நீ நினைக்கிற? உனக்கு நான் தான் சொல்லனும்ல? சின்னதா ஒரு Attention போதுமா? இது Importance சம்பத்தப்பட்டதா? அத எப்படி ஒவ்வொரு தடவையும் உணர்த்திகிட்டே இருக்க முடியும்? அப்போ எதிர் பார்க்கக்கூடாதா? Respect? 

 இந்த இரண்டுமே நிகழ்ந்துட்டா காதலோட ஆயுள் என்னவாகும்? அதிக Breakup? அதிக புரிந்துணர்வு காதலுக்கு ஆயுள் இருக்கா? கடந்த காலம் இல்லாதது தானே காதல்? 

 

இந்த Possessiveness மூலமா வர உறையாடல தவிர்க்கவும் முடியாது. பேசியும் தீர்க்க முடியாது. இது ஒரு அவஸ்தை. இங்க Acceptance-ஓட பங்கு இருக்குறதா நான் நினைக்கிறேன். அப்போ காதல் அடி பட்டுப்போகுதான்னு எனக்குள்ளேயும் ஒரு கேள்வி இருக்கு தான். ஏன்னா இத நீ படிக்கும் போது கேப்பன்னு நம்புறேன்.. ஒன்னு சொல்லட்டா?. 

 மனித மனமே, தன்னை யாருகிட்டையாவது ஒப்புக்கொடுத்துட்டு ஒதுங்கிக்கனும்னு படைக்கப்பட்ட ஒன்னு தான். 

 Yes!  அந்த பரிசோசதனை முயற்சி தான் Edge of Possessiveness. Surrender ஆகிட்டதும் மனசு சும்மா இருக்குமான்னு நீ என்னைப் பார்த்து இந்தக் கேள்விய கேக்குறதா இருந்தா அதுக்கு நான் பதிலும் சொல்லிட்டா... 

 அவ்ளோ தான்டா. நிறுத்திக்கிறேன். உனக்கு பாடம் எடுக்க எனக்குத் தெம்பில்லை.rameshrackson@gmail.com

(மீத பாகங்கள்... அச்சில் வெளிவரும்)

நாக்குட்டி – 8

துளசியின் ஸ்க்ரிப்ளிங் பேர்டை பார்த்திருக்கிறேன் நான். எதையாவது எழுதி எழுதி எழுத்துக்களை வடிவமைத்து, அதை சீவி சிங்காரித்து எதையாவது பண்ணி வைத்திருப்பாள் நிறங்களின் ராணி. அவளுக்குத்தான் கிடைக்கும் அத்தனை நிறங்களில் பேனாக்கள். அவளுக்கு நிறங்களைப் போலவே தன் கையெழுத்தையும் பிடித்திருக்க வேண்டும். ஸ்கேல் வைத்துக் கோடு போடுவது போலில்லை. விரல்கள் வளைய மறுக்கின்றன. முதன் முறையாக துளசி பெயரை எப்போது எழுதினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த “முதலாவது: என்பதை நினைவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனதையும், நியாபகம் இருக்குமென்று கடந்து போகும் மனதையும், ஒருசேர நிறுத்துகையில் எனக்கு நானே குற்றவாளி ஆ(க்)கிவிடுகிறேன். கொசு அடிப்பது போல் சில நேரங்களில் கன்னத்தில் அடித்துக் கொள்வேன். எனக்கு “துளசி” என்ற பெயரை அப்படியொன்று அழகாய் எழுதிவிட வேண்டுமென்று தோன்றவில்லை. அதன் வடிவங்களை என் விருப்பத்திற்கு ஏற்றார்போல வளைக்க முடியுமென்றும் தோன்றவில்லை, மனதிற்குள்ளே வரைந்து பார்த்துக் கொண்டேன். எனக்குத் திருப்தியாகவே வரவில்லை. கூகுள் செய்து தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களையும் ஒரே புகைப்படமாகக் கொண்ட இமேஜை தரவிறக்கம் செய்து கொண்டேன். ஒவ்வொரு எழுத்துக்களையும் கண்களால் வரைந்து பார்த்துக்கொண்டே வந்தேன். எனக்கு எல்லாமுமே துளசி போலத் தான் தோன்றியது. எப்போதோ வாங்கி வந்திருந்த இருநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில எழுத்துருக்களை, இன்ஸ்டால் செய்து ஒவ்வொன்றாய் மாற்றிக் கொண்டிருக்கையில் தமிழுக்கு எப்படியும் ஐம்பது எழுத்துருவாவது வித்தியாசமானதாய் கிடைக்காதா என்று தேடத் தொடங்கியிருந்தேன். எனக்குக் கடிதம் எழுதுவதைவிட அவள் பெயரை அழகாய் வரைந்துவிட வேண்டுமேன்றுத் தோன்றியது. கையெழுத்து மொழியில் சேராமல், புகைப்படத்தில் சேருவது போல அவள் பெயரும் மொழியிலிருந்து புகைப்படத்திற்குத் தாவிக் கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு மொழி வேண்டியிருந்தது. இதெல்லாம் வரையும் அவள் கையெழுத்திற்குச் சொன்ன விளக்கம். சொந்தமாய் சொல்வது போல் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு அந்தக் கேள்வி இப்போதுவரை கிடைக்கவில்லை. யாரிடம் சொல்வது? பெண்களின் விரல்கள் கவனிக்கப்படுமா இல்லை, எழுத்து கவனிக்கப்படுமா? இரண்டுமே செய்து பார்க்காத அலட்சியம், தூங்கவிடாமல் வைத்திருந்தது. “சி” –யில் ஒரு கொடி வரைந்து துளசி இலையை படரவிட்டேன். “து” அருவாலாகவே வந்து கொண்டிருந்தது. து-வின் நுனியை வளைத்து கழுகின் கண் பொருத்திப் பார்த்தேன். பிடிகொடுக்காமலிருந்தாள். நத்தையின் ஓடு வரைந்து யானையின் கால் இட்டேன். “ள்”-ற்கு. பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்று தெரியாதொரு மனநிலையில் இருந்தேன். அடித்தல் திருத்தம் இல்லாமல் காதல் கடிதம் அவளுக்கு எழுத வேண்டும். யோசனை தான்.

எழுதுவதற்கு முன்னே துளசி என்னை எப்படியெல்லாம் கேலி செய்வாள் என்றுதான் கண்முன் திரை ஓடுகிறது. அன்புள்ள என்றால் “எங்க அன்பு இல்லாம ஒரு லெட்டர் எழுது” என்று அவள் சொல்லிவிடுவாள் என்றே தோன்றியது. எனக்குத் தொடக்கம்  பெரும் பிரச்சனையானது..

எனக்கு எங்க இருந்து தொடங்குறதுன்னு தெரியல. அதே மாதிரி எப்படி தொடங்குறதுன்னும் தெரியல. முதல் தடவை நீ முறைச்சத பார்த்து தப்பு பண்ணிட்டமோ அப்படிங்கற நினைப்புல இருந்து மீண்டு, மறுபடியும் அதே மாதிரி ஒரு  மனநிலைக்கு திரும்பிட்ட மாதிரி இருக்கு. ஒருமாதிரி பாரமா கண்ணு ரெண்டும் இருட்டிகிட்டே வர்ற மாதிரி இருக்கு. அவ்வளவு நெருக்கமா எரிச்சிடுற மாதிரி பார்த்த. அது மட்டும் தான் திரும்பத் திரும்ப எழுத நினைக்கும் போதெல்லாம் வந்துட்டே இருக்கு. அதுனால அப்படியே என்ன நினைப்புல வருதோ அதையே எழுதிட்டு இருக்கேன். நீ ரொம்ப நேரம் வாசிக்கிற மாதிரி ரொம்ப பெருசா எழுதி கொடுக்கணும்னு தோணிட்டே இருக்கு. இது வரைக்கும் உன்கிட்ட என்ன கவனிச்சிருக்கேன்னு யோசிச்சி பார்த்தா ஒண்ணுமே இல்லாத மாதிரி தோணுது. சில  செய்கைகள் மட்டும் தான் கவனிச்சிருக்கேன். அதையும் என்னனு நான் எழுதுறதுன்னு தெரியல. உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் என் உடலும் மனமும் என்ன மனநிலைக்கு ஆச்சுன்னு இப்போதைக்கு சொல்ல முடியும்னு தோணல. இப்போ சொன்னாலும் சரியா வராது. இது எல்லாம் என் நினைப்பு தான். நீ என்னைவிட நூறு மடங்கு தெளிவான பொண்ணா இருக்க. இத்தனைக்கும் நீ என்கிட்ட ஏதும் பெருசா சொல்லிக்கிட்டது இல்லதான். ஆனாலும் இந்த எண்ணம் எனக்குள்ள ரொம்ப முன்னாடியே வந்துருச்சி.

எனக்கு உன்ன பிடிச்சிருக்கு அப்படிங்கறத தாண்டி என்னனு சொல்லன்னு எனக்கு சரியாத் தெரியல. நான் பின்னாடி அலையல. நீ பார்ப்பியானு உன்னையே பார்த்துட்டு இருக்கல. உன்னோட அட்டேன்சன் என்மேல இருக்கணும்னு நான் ஏதும் புதுசா பண்ணிக்கல. அப்படியே பேசினோம். ஒரு கட்டத்துல பிடிச்சுது. அப்புறம் உன்ன கவனிச்சேன்னு நினைக்கிறேன். காதல சொல்லனும்னு ஒரு எண்ணம். ஆனா உன்கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லிட்டு, அப்புறம் நீ கிளம்பினதும் உன்ன மிஸ் பண்ணேன். அது என்ன மாதிரியான மிஸ்ஸிங்க் அப்டின்னு எனக்குத் தெரியல. உன்னோட, உடம்போட அவுட் லைன் நோட் பண்ணினேன்னு நினைக்கிறேன். அப்படி இல்லனா உன்ன பாத்துட்டு இருந்தேன். இந்த லைன எழுதினதும் எதோ தைரியம் வந்துட்ட மாதிரி இருக்கு. ஆனா நான் உனக்கு பயப்படலையே. ரூம்க்கு வந்து எழுதும்போது இப்படியெல்லாம் தோணுது. எது உண்மைன்னு வேற எனக்கு பிரிச்சி பார்க்கத் தெரியல. ஆனா ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. எல்லாம் நடந்து ஒரு நாள் கூட, ஏன் பாதி நாள் கூட ஆகல. அதுக்குள்ள உள்ளுக்குள்ள வர நினைப்புல எது உண்மை எது எனக்கா தோணின ஒண்ணுனு பிரிச்சிப் பார்க்க முடியல. இல்லனா தெரியல.

எனக்கு இந்த மனநிலை ரொம்பவே பிடிச்சிருக்கு. எழுதிட்டே இருக்கும்போது ஸ்ட்ரக் ஆகுது. இப்படி ஆகும்போதெல்லாம், நமக்குள்ள நடக்கவே நடக்காத ஒன்னு, அப்புறம் நான் நினைச்சி கூட இதுக்கு முன்னாடி பார்க்காத ஒன்னு எல்லாம் வருது. அதுக்குள்ளயே வேற எது மேலையும் கவனம் போகாத மாதிரி இருக்கு. ஒரு மாதிரி நல்லா இருக்கு. இன்னும் ஒன்னு சொல்லட்டுமா? நீ லவ் அக்செப்ட் பன்னால, அக்செப்ட் பண்ண மாட்ட இந்த மாதிரிலாம் எந்த யோசனையும் எனக்குள்ள வரவே இல்லை. ஆனாலும் நீ நம்ம வெறும் நண்பர்கள் தான் அப்படின்னு சொல்லிட்டு இருக்க. அத தாண்டி உன் கண்ணுல நான் பார்த்தேன் அப்டிலாம் சொல்ல வரமாட்டிக்குது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் உன் கண்கள் சிரிச்ச மாதிரி இருக்கும். எப்பவும் கண்ணுல ஈரம் இருந்த மாதிரி இருக்கும். அது உன் கருவிழியும், மிச்சம் வெள்ளை பகுதியும் பளீர்னு காட்டும். அது தான் நான்உன்கிட்ட அதிகமா பார்த்திருக்கலாம். பார்க்குறதுக்கும், கவனிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

நகம் கடிக்கிற பழக்கம் இருக்றவங்க, இந்த மாதிரி நேரத்துல நகத்த கடிச்சி துப்பிட்டே இருப்பாங்கள்ல? என்னால இவ்ளோ நேரம் எப்படி தரைல உக்கார முடிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கு.எல்லாம் நிறைய பக்கம் எழுதி அத நீ ஒரே மூச்சுல என் முன்னாடி படிச்சி முடிக்கிற அந்த காட்சி தான், இந்த மாதிரி இருக்க வச்சிருக்கு. கூடவே இந்த லெட்டர அவ கிட்ட கொடுத்துராதடானு உள்ளுக்குள்ள கேட்டுகிட்டு இருக்கு. இது என்ன மாதிரியான மனநிலைன்னு கூட என்னால யூகிக்கவோ, சோதிக்கவோ முடியல. உன்பேர டிசைனா எழுதினத பார்த்துட்டு இருக்கேன். எனக்கே என்ன பிடிச்சிருக்கு. நான் சிரிக்கிறது எனக்குத் தெரியிற மாதிரி இருக்கு. காலேஜ் படிக்கும்போது டூர்ல பொண்ணுங்க பார்க்கனும்னு சத்தமா கத்தினது விசலடிச்சது எல்லாம் ஞாபாகம் வருது. அப்படிகத்திடலாம்னு தோணுது. எழுதினத மேல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன். என்னோட எழுத்த அப்படியே font மாதிரி டிசைன் பண்ணிடணும்னு தோணுது. அப்படியே உன்னோட கையெழுத்தையும். பெருவிரல் அதுக்குள்ள வலிக்குது. அப்படி பண்ணிட்டா லேப்டாப்ல  லெட்டர் எழுதலாம். நீ எழுதுறதுக்குனு பார்த்து பார்த்து க்ரிப் செட் ஆன பேனா வாங்கி வச்சித்தான் எழுதுவேன்னு நீ சொன்னத நமக்கும் பொருத்திப் பார்க்கிறேன். அது என்ன நமக்கும்னு நீ படிச்சிட்டு வந்து என்கிட்ட கேக்குற மாதிரி கூடவே ஒரு காட்சி வருது.

முன்முடிவு இல்லாம தான் அப்படியே ப்ளாங்கா உன்கிட்ட இருக்கணும்னு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சம்பவமும் நடக்கும்போது நடந்துக்கணும்னு என்னை நானே தயார் படுத்திகிட்டே இருக்கறேன். ஆனாலும் காதலை சொன்னதுல இருந்து எல்லாமே என் வரம்பு மீறி போயிட்டு இருக்கு. ஆனா எனக்கு என்னையவே எச்சரிக்கத் தெரியல. ரொம்ப சந்தோசமா எழுதிட்டு இருக்கேன். நிறைய விஷயம் நீ என்கிட்ட சொன்னதில்ல. ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு நீயே என்கிட்ட கொண்டு சேர்த்த மாதிரி இருக்கு.நீ எவ்ளோ அழகா இதெல்லாம் எனக்கு சொல்லிருக்கல்ல? கண் நிறைஞ்சி போகுது. உனக்கு குடுக்கனும்னு எழுதின மாதிரியே தெரியல. எனக்கு எனக்கு எண்ண தோனுதுன்னு உன்கிட்ட நேரடியாவே சொல்லிடறது உனக்கு பிடிக்கும்னு தோணுது. இப்படி தோணுறத எப்படியும் நீ தான் நிறுத்தனும். எனக்கு இப்படி தோணுறத ஒரு நாள் எங்கையாவது நான் கோபப்படுவேன். நீ கண்டு பிடிப்ப. அப்புறம் எனக்கு சொல்லிக் கொடுப்ப. எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் சந்தோசமா இருக்கேன் துளசி. முதன் முதலா காதலை ஒரு  பொண்ணுகிட்ட சொல்லிருக்கேன். வாழ்க்கையே முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கு. ரொம்ப பலமாவும் தெரியுது. மொத்தமா என்னோட பலவீனமும் நீ மாதிரி இருக்கு. என்னால இத என்ஜாய் பண்ண முடியும். நீ அக்செப்ட் பண்ணுற வரைக்கும் என் இஷ்டம் போல ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டே இருக்க முடியும். நீ நம்ம நண்பர்கள் அப்படின்னு சொல்லி சொல்லியே என்ன நிதானமாவும் நிறைய கத்துக்கவும் வைப்ப.

இத எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உன்ன மனசுக்குள்ள திட்டிட்டேன். ஆள் நடமாட்டம் இல்லன்னு தெரிஞ்சதும் ஒரு தாய் நாய் தன் குட்டிகளை இடம் மாத்துறதுக்கு மும்மரமாஇருந்துச்சி. எனக்கு பாட்டு ஓடுறதே இடைஞ்சலா தெரிஞ்சது. வெளிய வேடிக்கைப் பார்த்துகிட்டு நின்னேன். அந்த குட்டிகள் மாதிரி நான்  உன் பின்னாடி வரதும், நீ என்னை கவனமா பாத்துக்குறது மாதிரியும் நினைச்சிப் பார்த்துக்கிட்டேன். அப்புறம் சரி எழுதிடலாம்னு அறைக்குள்ள வந்ததும்  ஏனோ என்னோட ஜாயினிங் லெட்டர் பார்க்கனும்னு தோணிச்சி எடுத்து பார்த்துகிட்டே, அன்னைக்கு தானே முதல் முதலா உன்ன நான் பார்த்தேன். எப்படியும் இரண்டு வருஷம் குறையாம வேலை தேட மாட்டோம்னு பெட்டிக்குள்ள போட்டது. தேடி எடுத்தேன். “உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? கேக்கவும் இல்லையாம் படிக்கணுமாம்?” மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். உன்ன எப்படி திட்டணும்னு வேற தெரியலையா… எப்படியாவது எழுதிடணும்னு முடிவு பண்ணி அதுக்கு அப்புறம் தான். உன்னோட பெயர் எழுதி என்னலாமோ பண்ண ஆரம்பிச்சேன்.

என் உடலிலா உயிரிலா என்று கண்டறியமுடியாத படிக்கு பற்றி எரியும் நகுலனுக்கு….

– தொடரும்

(ரமேஷ் ரக்சன்)

email id : talk2rr@yahoo.com

நாக்குட்டி – 6அழகுனு வழியிறவன விட, அத கவனிக்கிறவன் கிட்ட தோற்கிறதுனா பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்.”
ம்ம்ம் பொண்ணுங்களுக்கா தெரியல எனக்குப் பிடிக்கும்.

துளசி, என்னை இன்னும் நாம் நண்பர்கள் தான் என்று நம்பவைக்கத் தொடங்கியிருந்திலிருந்து நான்காவது மாதத்தில், என்னோடு வெளியே வரத் தொடங்கியிருந்தாள். என்னோடு என்றால் நான் அழைக்கும் போது இல்லை. நான் அழைக்கும்படி எங்கள் உறவிற்குள்; உறவு என்று எதைச் சொல்வது என்ற குழப்பம் வேறு இருக்கிறது. அவள் இன்னும் என்னை அனுமதிக்கவில்லை. இப்படியெல்லாம் அப்போது கவனித்துக் கொண்டும் இருக்கவில்லை, மாதத்திற்கு ஒன்றிரண்டு கேள்விகள் மட்டும் கேட்பாள். அதுவும் கேள்விகள் போன்று தோன்றாதவாறு பார்த்துக் கொள்வாள். எல்லாம் தற்செயலாய் நிகழ்வது போலிருக்கும். எப்போதும் இருவரும் சாராத ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவள், நான் நேரடியாக அவளிடம் காதலைச் சொன்னபின் நிகழும் முதல் சந்திப்பு என்பதால், அவள் உடல் மொழி, பேச்சு மொழி, பார்வை எல்லாமே எனக்குப் புதிதாகத் தெரிந்தது.

என்னிடம் “நீ ஏன் இன்னும் பைக் வாங்கல” என்று கேட்டவள், நிறுத்தாமல் தொடர்ச்சியாய், எனக்குத் தெரிந்த, நடந்த காதல் சம்பவம் ஒன்றை சொல்லச் சொல்லிக் கேட்டாள். திடிரென்று காதல் பற்றிப் பேசுகிறாளே என்ற யோசனையோடு நில்லாமல், அவள் காதல் பற்றிக் கேட்டது எனக்குள் ஒரு பரவசத்தை உண்டு பண்ணியிருந்தது. நூலகத்தை ஒட்டி இடப்பக்கம் இருக்கும் பார்க்கில் அமர்ந்திருந்தோம் எதிர் எதிர் இருக்கை. காங்கரீட் பெஞ்.மதிய நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவதற்கும் எதுவாக இருக்கட்டுமென கட்டப்பட்டதால், எங்களிருவருக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதிகமாக என்றால், இருவரின் விரலும் தொட்டுக்கொள்ள நினைத்தாலும் எட்டாத அளவிற்கு.எனக்கு அவளை பக்கவாட்டில் பார்க்கத்தான் பிடித்திருந்தது. தொடக்கம் முதலே அவளை ஒரு பக்கமாகவே பார்த்து பதிந்து போனது கூட காரணமாக இருக்கலாம். அவள் கண்களை எதிர் கொள்வது, எப்போதும் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பது போன்று தோன்றும். அது ஒருவகையில் எனக்குத் தொந்தரவு. எதிரில் இருக்கையில் அவள் பேசி நான் பேசாமல் விழிப்பது போன்ற மாயை பெரும் இம்சை. அவள் சார்ந்த யோசனையில் அவள் இருந்தாலும், அவளை எதிர் கொள்வது நான் விரும்பாத ஒன்று. விருப்பமில்லையா என்பதைவிட, எதையாவது பேசத் தூண்டுவது என் அமைதிக்கு எதிரானது. மனம் மிகுந்த ஆர்பாட்டம் அடைந்துவிடும். காதலைச் சொன்னதிலிருந்து அவளின் செய்கைகளை கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்று தான் தெரிகிறது. அவளால் அசைவுகள் இன்றி ஒரு சம்பவத்தைச் சொல்ல முடியாது. சமீபமாய்த்தான் நிறையப் பேசுகிறாள். இப்போதும் அவள் சாராத விசயமாகப் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அதில் அவள் எதுவாக இருந்திருப்பாள் என்று இப்போது யோசிக்கத் தோன்றுகிறது. காதலில் யோசிப்பது, காதலை மீறுவது தானே?

அவளுக்கு வலது கையில் கடிகாரம் கட்டும் பழக்கம் இருக்கிறது. மணிக்கட்டின் மேல்பகுதியில் டயல் இருக்குமாறு வைத்திருக்கிறாள். உறைந்த இரத்தம் நிறத்தில் இருந்தது அந்த ஸ்ட்ராப். துளசி வர்ணங்கள் விரும்பி என்று சமீபத்தில் தான் சொல்லியிருந்தாள். எனக்குச் சட்டென அந்தக் காதல் கதையைத் தொடங்கிவிட முடியவில்லை. அவள் பள்ளி படிக்கும் காலத்தில் பதினொன்றாம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் வலது கையில் வாட்ச் கட்டும் பழக்கம் கொண்டவர் என்பதையும், முதன் முதலாய் வலது கையில் வாட்ச் கட்டும் ஒருவரைப் பார்த்திருக்கிறாள். ஆர்வ மிகுதியால் அவரிடமே அதற்க்கான காரனத்தைக் கேட்டு அவர் விளக்கம் சொன்னது. அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது. அவர் போர்டில் எழுதத் தொடங்கும் போதும், எழுதி முடித்தப் பின்னரும். அவர் மணிக்கட்டை ஒரு சுழற்று சுழற்றி மணி பார்ப்பதை செய்து காட்டி இருக்கிறாள். போர்டில் சாக்பீஸ் வைத்து, முதல் எழுத்து எழுதும் முன் எடுப்பாராம். வெகுநேரமாக சொல்லிக் கொண்டிருந்தாள். யோசித்துப் பார்த்தால் துளசி முதன் முதலில் ஒரு ஆணைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறாள். “சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது என்பதால் வலது கையில் கட்டத் தோன்றியது என்றும் அது ஒரு பாசிடிவ் எனர்ஜி & அட்டேன்சன்” என்றாராம். அவளுக்கு அந்த பாசிடிவ் எனர்ஜி அப்போதிருந்தே அங்கிருந்து கடத்தப் பட்டிருக்கிறது. எனக்கு அந்த பாசிடிவ் எனர்ஜியை உருவாக்குவது தான் இத்தனை நாளாக பெரும்பாடாக இருந்தது. அல்லது நான் முயற்சிக்கவில்லை என்றும் நம்பியிருந்தேன்.

அவள் கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் வெய்யில் விழுந்து வாட்ச் கட்டியிருந்த இடத்தில் வியர்த்திருந்தது. வாட்ச்சை கொஞ்சம் முன் நகர்த்தி வியர்வைத் துடைத்து. மணியைக் காட்டினாள். அவளுக்கு மணி பார்த்துச் சொல்லப் பிடிக்கும். யாராவது மணி கேட்டாள் அவ்வளவு மலர்ச்சியுடன் மணி சொல்லுவாள். இருமுறை பார்த்திருக்கிறேன். நல்ல நேரம் தான் என்றவாறே கதையை சொல்லச் சொன்னாள். விரலால் குறிபார்த்து சுடுவது போல, அவளின் ஆள் கட்டி விரல் கண்களின் இடைவெளி வழியே நெற்றியிலிருந்து மேல் நோக்கி வைத்திருந்தாள். பெருவிரல் கன்னத்து எலும்பை அழுத்திக் கொண்டிருந்தது. மீதிமிருக்கும் விரல்கள். வலது கண்ணை மறைத்திருந்தது. ஒற்றைக் கண் வழியே, புருவத்தை உயர்த்தி என்ன என்றாள். உள்ளங்கை வியர்வையை துடைத்துக் கொண்டேன். இப்போது யோசித்தாலும், அதுதான் நான் முதல் முறையாக என் உள்ளங்கை வியர்த்து துடைத்தது போல் இருக்கிறது. என்னைத் திரும்பிப் பார்க்கச் சொல்லி, பழுதடைந்ததை சைக்கிளின் கைப்பிடியின் வழியே சிலந்திவலை ஒன்று வெய்யிலுக்கு வர்ணங்களில் மினுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டி, “ஒரு கேமரா வாங்கு. ஃபோட்டா எடுக்க கத்துக்கோ; ஒரு டெவெலப்பர், கிரியேட்டருக்கு இப்படி எக்ஸ்ட்ரா ஏதும் வேணாமா?” கருங்கற்களின் குவியலின் ஊடே முளைத்தச் செடியை வளைத்துப் பின்னியிருந்த வலை அது. சிலந்தி வலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கருங்கற்கள். அவள் ஆசைப்படும் ஆணாக இருக்கிறேன் என்று தீர்க்கமாக நம்பினேன். மேலும் நான் இதிலெல்லாம் ஆர்வம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாளோ என்ற யோசனையை உறுதி செய்து கொண்டேன். அவள் கண்களோடு உதடுகளையும் பார்த்த மாதிரி ஒரு ஞாபகம். நண்பனின் காதல் கதையிலும் ஒரு சிலந்தி வலை இருந்தது.

மாவிலைகள் உதிர்ந்து சருகாகிக் கிடக்கும், ஒன்றிரண்டு தென்னை மரத்தை ஒட்டிய அந்த மாமரத்தின், தரைபடர்ந்து கிடக்கும் கிளையில் அமர்ந்திருக்கிறாள் அபர்ணா. மாமரத்தின் மீதும் போடப்பட்டிருந்த தோரண விளக்குகுகள் கொஞ்சமாய் அவள் மேல் ஊடுருவியிருந்தது. முன் கூட்டியே கையில் அலைபேசியை எடுத்துக்கொண்டு வரவேண்டாமென்று தீர்மானித்து மாடி அறையில் விட்டுவிட்டு வந்திருக்கிறாள். காலையில் கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைத் தாண்டி இந்த இரவுச் சந்திப்பு சத்யாவிற்கும் தேவையாகவும், அதே நேரம் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒத்திகையோடும் தான் கல்யாணத்திற்குக் கிளம்பி வந்திருக்கிறான். எப்போதாவது குரல் கேட்டுக் கொள்ளலாம். முதிர்ச்சி அடைந்துகொண்டே வரும் முகத்தை இருவருமே பார்க்க விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் இருவருமே முன்கூட்டியே பேசிவைத்து ப்ளாக் செய்திருக்கின்றனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு நிகழும் சந்திப்பு. சத்யாவின் அலைபேசி எண்ணை அவளுக்கு ஒருபோதும் சேமித்து வைக்கத் தோன்றியது இல்லை. சுடிதார் மாற்றிக் கொண்டு மாமரத்தின் அடியில் காத்து நின்றாள் அபர்ணா. கல்யாணத்திற்கு நிச்சயமாக வரவேண்டுமென்று அவனை வரவைத்ததும் அவளே தான். லுங்கியை மடித்துக்கட்டி, பின்னங்கால்களைக் காண விரும்பும் அவளை நோக்கி மொபைலில் இருக்கும் ப்ளாஷ் லைட்டை முகத்திற்கு நேராக நீட்டியபடி அவளை வந்தடைந்திருக்கிறான் சத்யா.

தன்னருகே கிளையின் அருகில் அமரச் சொன்னதை மறுத்து, நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தான் சத்யா. ஆடை கூட உரசிக் கொள்ளக்கூடாது என்ற மனநிலை அவனை இருக்க அனுமதிக்கவில்லை. சத்யாவிற்கு ஒரு பெண் குழந்தை. பேட்டர்ன் எடுத்துக்கொடுத்த மொபைலை வாங்கி மகளாக நிறைந்துகிடந்த கேலரியைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமலே திருப்பிக் கொடுத்திருந்தாள். இருவரில் யாரவது மெளனம் கலைக்க வேண்டிய நிர்பந்தத்தில், “நீ ஏன் என்ன கூட்டிட்டு போனும்னோ இல்ல எங்க வீட்ல பேசனும்னோ நெனைக்கல” கேட்டுவிடவே கூடாதென்ற வைராக்கியம் தவிடு பொடியாகியிருந்தது. வெள்ளை நிற லுங்கியில் கரும்பச்சைக் கட்டம். நுனி பிடித்து முடிச்சிட்டு அவள் பார்க்க வேண்டுமென்றே நின்றிருந்தான். அந்த ஒய்யாரமும், சலனமற்ற முகமும் அவளை கொதிப்படைய வைத்திருந்தது.

உன் அலைபேசி எங்கே என்ற கேள்விக்கு அவளின் குடும்பத்தை சத்யா பார்ப்பதை விரும்பவில்லை என்று சட்டென கிளையிலிருந்து எழுந்திருக்கிறாள். பேருந்தின் பின்னிருக்கையில் வரைந்த இதயம், உள்ளங்கையில் போட்டுக்காட்டிய அவள் பெயரின் முதல் எழுத்து, அவள் ஆங்கில எழத்துக்கள் நிறைந்த நோட்டினை அவளுக்குத் தெரியாமல் கலர் ஜெராக்ஸ் எடுத்தது, மீன் குஞ்சு ஒன்றிற்கு உன் பெயர் வைத்திருக்கிறேன் என்று சொல்லி திட்டு வாங்கியது,

என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே துளசி குறுக்கிட்டாள். இதயம் முரளி போன்று இருப்பதாகவும், கடைசியில் என்ன தான் நடந்தது என்றாள்.

தன்னை ஒரே ஒருமுறை முத்தமிடு என்று இடது மணிக்கட்டைப் பிடித்து இழுத்திருக்கிறாள். “உன் பொண்ணுக்கும் உன்ன மாதிரி கால் போட்டுத்தான் தூங்கிப் பழக்கமா? கால் தூக்கிப்போட்டு தூங்கிட்டு இருந்தவளுக்கு தலையணை கொடுத்துட்டு வந்திருக்க? ஜன்னல் வழியா பார்த்தேன்” அபர்ணா பிடித்த மணிக்கட்டை விடுவிக்காமல் அவள் பிடியிலேயே இருந்தவனை விடுவித்தாள். அவள் கண்முன்னே விடுவித்துக் கொடுத்த பேட்டர்னை, அவளே மீண்டும் விடுவித்து வேக வேகமாய் அவளின் அலைபேசி என்னை டயல் செய்து பார்த்தாள். பெயரின்றி எண் மட்டும் சேமிக்கப்பட்டிருந்தது.

“என்னைய காயப்படுத்திக்கக் கூட இப்ப என்கிட்ட எதுவுமே இல்ல” என்று உடைந்து அழுதவளின் கண்ணீரைத் துடைத்த பெருவிரலில் முத்தமிட்டுத் திரும்பினான் சத்யா.

துளசி நான் பேசியதை கவனியாது போல், இவ்வளவு தானா என்று என்னைக் கேட்ட போது நிழல் நகர்ந்து முகத்தில் வெய்யில் விழுந்து வியர்த்ததை துடைத்துக் கொண்டிருந்தாள். நான் சிரித்தேன்.

“பசங்களோட வைராக்கியம் ஒரு பொண்ண அழவிடுறதுல இருந்து கூட இன்னும் ஸ்ட்ராங் ஆகுதுல?”

– தொடரும்

(ரமேஷ் ரக்சன்)

talk2rr@yahoo.com