நீர் – (நாவல் ஒரு பார்வை)

விநாயக முருகனின் ‘நீர்’ நாவல்

-கண்ணதாசன்

         59

ஒரு தவிர்க்க இயலாத சூழலில் நீண்ட பயணம் நானும் ஜேகே வும் (ஜீவகரிகாலன்) மேற்கொண்டிருந்தோம். (ஆண்ட்ராய்டின் கதை நூல் வெளியீட்டுக்கு விநாயக முருகன் டிஸ்கவரி படிக்கட்டுகளில் ஏறும்போது இனிமேல் உன்னை ஜீவ கரிகாலன் என அழைக்க மாட்டேன், ஜேகே என தான் கூப்பிடுவேன் என கூறியது ஞாபகம் வந்தது  இந்த நாவலை வாசிக்கும்போது  தான்  இதனுள்ளும் ஒரு ஜேகே எனும் நண்பன் இருக்கிறார் என்று).எப்போது பகலில் பயணம் மேற்கொண்டாலும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களாவது எடுத்து செல்வேன் . ஆனால் இன்று அவசரத்தில் கிளம்பியதால் எதுவும் எடுத்து செல்லவில்லை . அருகில் இருந்த ஜேகே வை முறைத்து பார்த்தேன் . அவர் எந்த கண்ணம்மாவோடு சாட்டிங்கில் இருந்தார் என அறிய விரும்பவில்லை. இருந்தாலும் உனக்கு புத்தகம் தானே வேண்டும். நான் தருகிறேன் என்று தற்போது வெளிவந்த நண்பர் விநாயகமுருகனின் ‘நீர்’ நாவலை கொடுத்து வாசித்து பார்க்க சொன்னார்.

ரயில் பயணத்தில்,அதுவும் முன்பதிவு செய்யாத லக்கேஜ் வைக்கும் இடத்தில்  அமர்ந்துக்கொண்டு இந்த நாவலை வாசிக்க தொடங்கினேன். தொடங்கும் முன் சந்தோஷ் நாராயணன் வரைந்த இந்த அட்டை கடந்த ஆண்டு இயற்கை , செயற்கை இரண்டும் சேர்ந்து  ஏற்படுத்திய வெள்ளப் பேரழிவை என் கண்முன் வந்து காட்டியது. இந்த வருடமும் டிசம்பரில் தான் பிரச்சினை. கடந்த வருடத்தை புரட்டி பார்க்க எதுவாக விநாயக முருகன் ஒரு நாவலை நமக்கு சமர்ப்பணம் பண்ணிருக்கார் . அதை வாசித்து பார்ப்போம். ஒருவேளை  இவ்வாண்டில் நான் வாசிக்கும் கடைசி நாவலாகக் கூட இது இருக்கக்கூடும் என்கிற நினைப்பில் நீர் நாவலை கையில் எடுத்தேன்.

2015 டிசம்பர் சென்னை மக்களால் மறக்கமுடியாத சம்பவமாக வெள்ளம் மாநகர் முழுவதும் சூழ்ந்திருந்தது . அதை கருவாகக் கொண்டு அதன் மூலம் தான் சந்தித்த அனுபவங்களை விரிவான  நாவலாக எழுத்திருக்கிறார். சென்னை வளசரவாக்கம் பகுதி நான் அறிந்த பகுதிதான். சின்ன மழை பெய்தாலே தாங்காது. அதுவும் 80 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பேரிழப்பை சந்திக்க கூடிய மழை பெய்தால் என்னாகும்? இந்த பேரிழப்பை நானும் சந்தித்திருக்கிறேன் என்பதால் இந்த நாவலை ஆவலோடு வாசிக்க நேர்ந்தது.

2015 டிசம்பர் 1,மழை வெள்ளமாக மாறும்  நேரத்தில் நாவல் தொடங்குகிறது (இதற்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அன்று தான் எனது பிறந்த நாளும் என் வாழ்வில் இந்த பிறந்த நாளை மறக்கவே முடியாது). அப்போது அங்கிருக்கும் அவர் தொடர்ந்து பெய்யும் மழையால் கவலைப்படும் தன் அம்மா, மனைவியை எதுவும் பாதிப்பு ஏற்படாது என தேற்றுவதில்  தொடங்கி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து மழை நீரை வெளியேற்றவும் செய்கிறார். இருப்பினும் அன்றிரவே நீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. என்ன செய்வதென புரியாமல் முக்கியமான பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்தி விட்டு மேலே உள்ள ஜேகே வீட்டிருக்கு  அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. எல்லாருக்குமே இந்த தயக்கம் இருக்கும் தான் .தான் சொந்த வீட்டில் இருப்பதில் உள்ள சுகம்  எப்படி இன்னொருவர் வீட்டில் கிடைக்கும் என யோசிப்பில் கவலையடைகிறார். இருப்பினும் ஒரு கட்டத்தில் வேறு வழியே இல்லாமல் மேலே உள்ள வீட்டில் தங்க சம்மதிக்கிறார். அவர்களும் நன்கு உதவுகிறார்கள். இப்படி ஒரு சில நாட்கள் மழையை வெறித்து பார்ப்பது. மொட்டை மாடிக்கு சென்று  கழிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கையில் இன்னும் எத்தனை நாட்கள்  தான் பவர் இல்லாமல், தண்ணிர் இல்லாமல் காலத்தை கடத்துவது என பயந்த இவர்களின் மனைவிமார்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என திட்டமிடுகிறார்கள். ஆனால் அவருக்கு சொந்த வீட்டை விட்டுவிட்டுச்  செல்ல மனமில்லாமல் அவர்களை மட்டுமே அனுப்பி வைக்கிறார். அதன்பின் இவரும், ஜேகேவும் மட்டும் தங்குகிறார்கள். சில நாட்களில் ஜேகே வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் இவரால் செல்லமுடியாமல் தனிமையாக வாழ்கிறார். மெயின் ரோட்டிற்கு செல்லும் வழியில்  சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு  காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், பாய் கடைக்கு சென்று நாளிதழ்களைப் புரட்டிப்பார்த்து வெள்ள செய்திகளை அறிவதும், மொட்டை மாடிக்கு சென்று தம் அடித்துக்கொண்டு நீரினை வெறித்துப்பார்ப்பதும், நீரின் அளவை ஒவ்வொரு நாட்களும் அளவிடுவதும், இரவினில் தனிமை கொடுக்கும் பயம், கனவு, காமம், வெறுப்பு, கோபம் என எல்லாத்தையும் அனுபவிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கேயான நடையில் வெள்ளத்தை பார்த்தவன், பார்க்காதவன் மனதில் ஒரு வித பயத்தினையும், அனுதாபத்தையும் இவரது எழுத்து ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை.

இந்நாவலில்  பின்பக்கத்து வீட்டு சந்திரா, தன் குடியிருப்பில் மேல் தளத்தில் வசிக்கும் ஜேகே, பக்கத்து வீட்டுக்காரர்களான ஆர்.வி, கணேசன், குயில், ஜிம்பாய் மற்றும் வெள்ளநிவாரண குழுவில் இடம் பெற்ற பாண்டி என பாத்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வதும், பின்பக்கத்து வீட்டு சந்திரா மீதான மோகப் பார்வை வீசுவதும், அவளைப் பற்றி அறிந்துகொள்வதும், அவளின் நினைப்பில் இரவினில் கனவினில் காமம் கழிப்பதும் சுவாரஸ்யம். தனிமையில் இருக்கும்போது  அவரது நினைவுகள் நீரினை பற்றியும், அது ஏற்படுத்திய விளைவுகளையும், மாற்றத்தையும், பாதிப்புகளையும்  கண்டு மிகவும் வேதனைப்படுவதாக வரும்வரிகள் வாசிக்கும்போது ஒருவிதக் கலக்கத்தையுணர வைக்கிறது. இந்நாவலில் இரு முக்கிய பாத்திரங்களாகக் கருதுவது ஜேகே மற்றும் சந்திரா.

நிறையபேர் வெள்ள பாதிப்பில் சிக்கிய அனுபவங்களை முகநூலிலும், அச்சு ஊடகம் வாயிலாகவும் பதிந்திருந்தார்கள்  ஆனால் தான் சந்தித்த அனுபவங்களைக் கொண்டு இவ்வளவு விரிவாக ஒரு நாவலை படைத்திருக்கும் விநாயகமுருகனைப் பாராட்டியே ஆகவேண்டும். இன்னும் சில பக்கங்களைக்  குறைத்தும், சில வார்த்தைகளைத் திரும்ப திரும்ப வராமல்  கட்டுப்படுத்தியிருந்தால் நாவல் இன்னும் அருமையாக வந்திருக்கும். இறுதியில் நீர் வடிந்தும் அதனால் ஏற்பட்டத் துயரங்களும் வலிகளும் வடியாமலேயே நாவல் முடிந்திருப்பது கொஞ்சம் சற்று இருப்பினும் தன்னையே நாவலின் நாயகனாகக்கொண்டு சுவாரஸ்யமான நடையில் அனைவரின் கவனத்திற்கும் ஆவணப்படுத்தியிருப்பதில் நீர் நாவல் வாசிக்க வேண்டிய நூலாக அமைகிறது. அதை இந்த புயலுக்கு பின்பான காலத்தில் வாசித்தாலும், நீர் வற்றிப்போகும் கோடையில் வாசித்தாலும் வலி தரும் என்பது நிச்சயம்.

 
உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் : விநாயகமுருகன்
விலை :ரூபாய் -150/-
 
கண்ணதாசன்
kannadhasan.thangarasu83@gmail.com

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 10

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 10

 
 
ஆட்காட்டி
*
பிஞ்சுவிரல் நுனியொற்றி
 
என்
முக வளைவுகளை
வரைந்து பழகுகிறாள்
 
முகத்தின் மீதே
 
***
 
விரையும் நாயின் வேட்டைக் கால்த்தடம் உலர்ந்தபடி..
*
விடுவித்தலின் கோடை
உந்துகிறது நடையை
 
திசைகளின் பாராமுகம் தண்டனைக்குரியது என்றே
சபிக்கிறான்
 
கவணிலிருந்து விடுபடும் நகலின் பதம்
இலக்கைத் தொடும்போது சாட்சியாகப் பரிணமிக்கிறது
 
விவாதத்துக்கான குறிப்புகளை
நான்கு வெவ்வேறு வண்ணங்களில்
பிட் நோட்டீஸாக அடித்து விநியோகிக்கும் சாலை
வடக்கிருந்து தெற்கை நிராகரிக்கிறது
 
நீங்கள் சொல்ல நினைப்பதை அவன் தன்
கவலையாக வரித்துக்கொள்கிறான்
 
விடுவித்தலின்
நிமித்தம்
அனுமதிப்பதில்லை மழையை
 
யுத்த டாங்கியின் பல்சக்கர டிஸைனை புற்கள் மீது
நிகழ்த்திப் பார்ப்பதை
சுழன்று சுழன்று நீரைப் பீய்ச்சியபடி சபிக்கிறான்
 
வெயில் பற்றி எந்தக் கோடையிலும்
பேசத் துணியாத ஒருவன்
 
***
 
 
இருட்பள்ளம் மீந்த விண்மீன்களின் வெளிச்சம் பட்டு..
*
கடலில் வளரும் ஃபீனிக்ஸ் செதில் இவ்விரவு
கரை நீண்ட மதில் மேல் புதையும் கண்ணாடிச் சில்லுகளில் வியர்க்கும்
வெயிலின் உப்புச் சுவை நம் அகாலம்
 
கழுதைக்குட்டியின் பிளந்த குளம்பில் துள்ளும்
நடனமென
ஈரம் சிதறும் சொற் துகள் உன் பேச்சு
 
ஒரு கையள்ளும் நீரில் தளும்பும் துளி வானத்தை
அளக்கும் ரேகைகளாகிறோம்
ஏனோ
 
அதனதனைக் கவ்வும் கலக்கத்தில்
திமிரும் முகச்சுடரை ஏந்தி விலகுகிறது
தயக்கத்தோடு பிரித்த
பழைய கடிதத்தின் நான்கு மடிப்புக் கோடுகளின்
வேறுபட்ட நிழல்
 
காற்றுக்குதிரையின் பிடரி அலைய சீறும் திசைக்கு எதிராய்
இறுகப் பிடிக்கும் பாய்மரத்தின் வேர்
இவ்விரவின்
செதிலில் வளர்வதாக நம்பும் ஃபீனிக்ஸ்
குடிக்கிறது
 
உப்பற்ற என் கடலை
 
வெயில் நடனத்துளி திவளைகளாய் உடையும் அகாலம்
கொண்டிருக்கிறேன் எப்போதும்
 
நீ வா
 
செதிலிரவு
உதிர
உதிர
சொல்லில் மிச்சமிருக்கும் உப்பு சுவைப்போம்
 
***
 
வந்துசேரா வரையறையில்..
*
குரலாகித் ததும்பும் சொற்கள்
எனதல்லாத உத்தரவை எழுதித் தீர்க்கிறது காலத்தின் முதுகில்
 
நீயென்ற பதம் உனதல்ல
 
மனமென்ற நான்
யாரோ
 
இருந்தும் இல்லாமல் போகும் இன்மையின் கறை
காற்றில் கலக்கிறது எரியும் திசையென
 
தத்துவக் கவண் சுண்டும் மண்டைக் கனம் மோதும் பகலில்
சுக்கலாய் நொறுங்குகிறது
பொறுமையாய் திரளும் இரவின் திடம்
 
யாசிக்கும் மௌனம் பிச்சையிடுவதற்கு
புறவாசலில் வளர்கிறது
கவனிப்பற்ற சொல்லாகி
 
***
 
முளை கட்டும் த்வனியின் அசை
*
இசையலை துடிக்கச் செய்யும்
நுண்ணதிர்வின் தந்தியில் முளைக்கிற
 
பச்சை நிறம்
 
தொடரிசையால்
பழுக்க
     உ
        தி
            ர்கிறது
 
              லை
   யா
           க
 
சொடுக்கோடு அங்குமிங்கும்
அலகு மோதி
நெல்மணியில் சேகரமாகும் தாளத்தைக்
 
கொப்புளிக்கிறது
 
குமிழ்
உடைய உடைய
 
ஓர்
உலை
 
***
-இளங்கோ
 
சென்னை
20-DECEMBER-2016

வேல்கண்ணன் கவிதைகள்

Designer: Milan van de Goor
Designer: Milan van de Goor

 

வேல்கண்ணன் கவிதைகள்

 
1. செயலிழக்காத காலம் 
      —————————– 
 
உன் 
சுவற்றில் தினமும்  வில்லையிட்டுக்  கொண்டும்
சுறுசுறுவென ஊர்ந்து கொண்டும் இருக்கும் ஏதேனும் ஓர் எலி.
சுயவிவரப் புகைப்படம் ஓராயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கும்.
உள்பெட்டி  இந்நேரம்  நிரம்பியிருக்கும்.
இன்றைய பிறந்த நாள் வாழ்த்து இணைப்பில் 
உன் விருப்பமிடுதலை தேடிக்கொண்டிருக்கிறேன். 
உன் அகாலத்தை அறியாமலேயே..
 
2. நிலை வந்து சேராத தேர்
    ——————————— 
 
பளுவேறிய வண்டியை இழுகின்றேன்
சேருமிடம் சேர்ப்பிக்க
பெறப்போகும் கூலி கால்கட்டை அவிழ்க்கிறது
 
கரடுமுரடுற்ற அந்த நீண்ட சாலையில்
கனவுகள் மலிந்து கிடந்தன
இசை சல்லிசாக கிடைத்து
குறுக்கும் நெடுக்குமாய் குழந்தைகள் பொங்கினார்கள்
திரும்பும் போது இளைப்பாறி 
இசைக் கனவுகளை ஏற்றி செல்ல வேண்டும்
முடிந்தால் குழந்தைமைகளையும்
 
எதிர் திசையிலிருந்து ஒருவன்
என்னைப் போலவே
வண்டியை இழுத்து வருகிறான்
 
சில தூரங்களுக்கு பின் 
அவனை மீண்டும் 
நேர்க்கொண்ட கணத்தில்
பளுவுணர்கிறேன் மேலும்
 
3. நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன 
   ———————————————- 
 
என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன 
பூரண அமைதியைப் எப்பொழுதும் காணுற்று நிற்கிறது
ஒரு கரும்புலி 
உதயத்தின் தளிர்மஞ்சளை விழுங்க காத்திருக்கிறது
பருவம் கடத்துகிறது மழை
வேட்கையின் நடனம் ஓலமிடுகிறது
அதற்கு தெரிந்திருக்கும்
சிதறுண்ட சிற்பங்களின் இறுதிகீதம்
இவ்வோலம் மென்று.
 
என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன
நூற்றாண்டுகள் கடந்து
கொப்பளித்து கொப்பளித்து
ஓடும் அந்த நதியிலிருந்தே
இன்றும் எழுந்தான் கதிரவன்
பறவைகளின் பாடலை அணில் தத்தும் மரங்கள் பாடுகின்றன   
காற்று உதிர்ந்த முல்லை பூக்களை
தொடுத்துக் கொண்டு இருக்கிறாள் நிம்மி.
 
உதய காலத்தில் ஒரு மண்புழு நெளிதலையும்
காணக் கிடைக்காதப் முப்பாட்டனின் எஞ்சிய நிலம்
என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன.
 
வேல் கண்ணன்
  rvelkannan@gmail.com