சிதைந்த கூடு

நாக பிரகாஷ்

Alley9 - Deviant Art
Alley9 – Deviant Art

பள்ளி முடிந்தவுடன் இவன் வழக்கம் போல மெதுவாகத்தான் கிளம்பினான். ஹரி வராததால் லேகாவும் குருவும்தான் வெளியே காத்திருந்தார்கள். ‘ஏண்டா இன்னிக்குமா லேட்டா வருவ?’ குரு தன் கேள்விக்குப்பிறகு உதட்டைச் சுழித்துக்காட்டினான், நியாயமான கேள்விக்கான அடையாளம். நவீன் தன்னுடைய பதிலிலே கிளம்புவதை மட்டும் குறியாகக்கொண்டிருந்தான் ‘நேரமாச்சு போலாம்’. வகுப்பில் முதல் என்பது பெரியதாக இவனால் ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு முன்னூற்றுக்கும் குறைவான மதிப்பெண்கள் தள்ளியிருந்தது, ஆங்கிலத்தில் இவன் கொண்ட வெறும் ஐம்பது மதிப்பெண்கள்கூட சதிசெய்து பாடத்தில் முதலிடம் தந்திருந்தது.

இந்த தேர்வுக்காக அவன் அம்மா உயர்ரக பேனா வாங்கித்தந்திருந்தாள். அவளுடைய ஒருநாளைய சம்பளம் அது. அந்த கடையிலேயே வேலை செய்யும் காரணத்தால் அவளுக்கு தள்ளுபடியில் கிடைத்ததே அந்த விலை. அதை வாங்கும் போது நடந்த அந்தச்சின்ன விவாதம்தான் நவீனோடு இந்த நொடி மல்லுக்கு நிற்பது ‘அஞ்சாவது படிக்கிற பையனுக்கு எதுக்கம்மா இந்த பேனா?’ ‘இல்லைங்கண்னா நல்லா படிக்கிறவன், இதுகூட செய்யாட்டி எப்படி. இந்த பரிச்சையிலே பாருங்க கண்டிப்பா முதல் ரேங்க் எடுப்பான்’. அவன் எப்போதும் ஊன்றிப்படிப்பவன், அதிக மதிப்பெண் எடுப்பவன். ஆனால் முதலிடம் மட்டும் இரண்டு எட்டு முன்னாலேயே இருந்துவிடும்.

இந்த முறை அந்த விவாதத்தை மனதில் வைத்துப் படிக்கவேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் அம்மாக்களுடைய தன் தேவை மறைத்து மகனுக்கு செய்யும் அந்த பண்பினால் ஏறும் அவளுடைய சுமைகள் இப்போது அவன் கண்களுக்குத் தெரியத் தொடங்கியிருந்தது வேறு ஒன்றைச் செய்யச் சொன்னது ‘எதையும் நம்ம போக்குலயே விட்டுட்டு வேணுங்கிறதெல்லாம் கேக்காம செய்யிற இந்த அம்மாகிட்ட நமக்கு வேணாங்கிறது இந்த கேக்காம செய்யறதுதான். கெட்டதா இல்லைன்னாலும் அதால இருக்கிற பணக்கஷ்டம் அம்மாக்கு ஏறிட்டே போகுது. இந்த முறை பரிட்சையிலே மார்க்கு கம்மியா எடுத்தா இந்த மாதிரி வாங்கித்தர்றதெல்லாம் நிறுத்துவாங்களா பாக்கலாம்’. சோதனை முயற்சிதான், ஆனால் அதைத்தான் செய்தான்.

தினந்தோரும் கணவனின் ஊதாரித்தனத்தை நினைத்து அழும் அவன் அன்னையின் அழுகைகளின் ஆசியா தெரியவில்லை அவன் இந்த முறை வந்து சேர்ந்திருப்பது புதிய நாடு, இவனுக்கான கொட்டுக்களை மட்டும் பலமாகக்கொடுக்கும் வகுப்புத்தலைவன் அவனாக வந்து வாழ்த்து சொல்லிச் சென்றதிலேயே புரிந்து கொள்ளும்படி எளிமையானதாக இருந்தது. லேகாவின் வாழ்த்துகள் எல்லாமே அவள் ஒரு குதியலோடு பேசியதால் ஒரு கீச்சுத்தன்மையுடன் கூடியதாக அமைந்தது, வீட்டிலிருக்கும் நெல்லி மரத்தில் அவளே ஏறி நிறைய பறித்துத் தருவதாக வேறு வாக்களித்தாள். மரத்தைப் பார்க்க வருவதற்க்கே நேற்று தடை சொன்னவள் இவளா என்று அவன் யோசிக்கவேண்டி இருந்தது.

லேகாவின் வீட்டில் நெல்லிக்காய்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதாக அவன் திட்டம், உதவிக்கு குரு இருக்கிறான். நவீனின் அம்மாவிற்கு நெல்லிக்காய் பிடிக்கும். உப்புக்காரம் போட்டு வைத்து அவ்வளவையும் தின்ன அவளால் முடியும், ஆனால் எப்போதும் போல நவீனுக்குப் பிறகுதான் அவள் அதைத்தொடுவது. ஐந்து நிமிட நடையில் வருகிற லேகாவின் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் நாற்பது முறை தன் மதிப்பெண் அட்டையை நவீன் சரிபார்த்துக்கொண்டான்.

நவீனுக்கு அந்த வீட்டு வாசலுக்கு வந்தபிறகுதான் இரண்டு மாதம் முன்புவரை அந்த வீட்டுத்திண்னையின் அலங்கார பொம்மையாய் அவள் வீடு வைத்திருந்த லேகாவின் பாட்டியின் நினைவு வந்தது, லேகாவின் அம்மாச்சி. அவள் இருந்த வரை நெல்லிக்கும், குளிர்பதனப்பெட்டியில் வைத்த நீருக்கும் இவன் லேகாவிடம் கெஞ்சவேண்டியது இல்லை, சில நாட்களில் வீட்டுத்தயாரிப்பு குல்பிக்களும். லேகா இவன் கெஞ்சுவதை பார்ப்பதில் ஆர்வமுள்ளவள், இவனிடம் மட்டும் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அது. தில்லியில் உள்ள தன் மூத்த மகன் வீட்டுக்கு போய்விட்டாள் அந்த அம்மாச்சி.

திண்னையில் இவன் உட்கார்ந்திருந்த அந்த நிமிடம் எதிர்வீட்டு மாடியில் சமீபத்தில் அழிக்கப்பட்ட தேனிக்கூட்டின் மிச்சமிருந்த எச்சம் இவனை சிரிக்க வைத்தது. அது நம்முடைய வீட்டில் கட்டப்பட்ட கூடு அல்ல, அதனால் விளையும் பலன் நமக்கானது கிடையாது என்று தெரிந்தாலும் அது நம்முடையது என்ற எண்ணம் விடாமல் துரத்தியதால் ஆரம்பகாலத்தில் இருந்தே ஏதோ பயம் இருந்தது. குருவும் ஒன்றும் புரியாவிட்டாலும் சிரித்தான். நவீனுக்கு அந்த கூட்டைப்போல இன்று தன்மனதிலும் ஏதோ ஒன்று முற்றிலுமாக ஒன்று அழிக்கப்பட்ட உணர்வு இருந்தது, அந்த நினைப்பு இந்த நாளில் விடாமல். அது தேவையற்ற அதிகமான நகம்போல் அல்லாமல் விரலாகவே தோன்றியதுதான் சிரிப்பை தந்தது.

லேகா அதற்க்குள்ளாக உள்ளேயிருந்து வந்தாள். கையில் நெகிழிப் பை அது நிறைய நெல்லிகள், குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்ட காரணத்தால் நீராவி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு. ‘அடிப்பாவி, பறிச்சி வைச்சதைத்தான் நீ பறிக்கப் போறேன்னு சொல்லி சீன் போட்டியா?’ எப்போதுமான நவீன் இந்த கேள்வியில்தான் எட்டிப்பார்த்தான். ‘ஆமான்டா, சரி கிளம்பு நாளைக்கு நான் உன் வீட்டுக்குவறேன்’ எதற்கென்று நவீன் கேட்கவில்லை, அவள் எப்போதும் விடுமுறையன்று அவன் அம்மாவிடம் கதைபேச வருவதுதான். அவனுக்குவிட அவன் அம்மாவிற்க்கு லேகா அதிகம் நெருக்கம். அவன் அம்மாவின் ஓரே தோழமை. குரு நெல்லியில் பங்கு கிடைத்தவுடன் பறக்கத் தொடங்கிவிட்டான். இவன் இவனுக்கான திசையில் நடக்கத் தொடங்கினான்.

நவீனுக்கு கொஞ்சமாக நடுக்கம் வந்தது, எதிரில் லேகாவின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போலீஸ்காரர். சிவப்பு நிற டிவிஎஸ் உறும அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் வகுப்புத்தோழன் ஹரியின் அப்பா என்பதைவிட காவல்துறை அதிகாரி என்பதுதான் சரியாகப் பட்டது தான். பயப்பட வைக்கும் உயரம், இதற்காகவே வேலை கொடுக்கலாம் என்பதுபோல. ஆட்காட்டி விரல் அசைத்து நவீனைக் கூப்பிட்டார். அவர் அன்பாக அழைக்கும் முறை அது என்று ஹரி ஒரு முறை சொல்லியிருக்கிறான். போய் பேசித்தான் ஆகவேண்டும், ஏதாவது விபரீதமாகச் சொல்ல மாட்டார் என்று போனான். ‘உங்க அப்பனுக்கு கன்பெசன் எட்டு மாசந்தான்டா’ நடுவில் அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தை புரியாவிட்டாலும் அவனால் யூகிக்கமுடிந்த சின்ன சங்கதிதான் அது. தலையாட்டிவிட்டு இவன் பேசயத்தனிக்க அதற்குள் அவர் தலைமேல் கைவைத்து கலைத்துவிட்டுக் கிளம்பினார். இன்றைய ஹரியின் விடுமுறையைப் பற்றிய கேள்வியைத்தான் அவன் கேட்க நினைத்தது.

அந்த தெருவோடு தார்பூச்சு முடிந்துபோயிருக்க மண்சாலையின் இடது பிரிவைப்பிடித்து இறங்கினான். தூரத்தில் தெரிந்த தென்னந்தோப்புகளுக்கு ஒட்டி நாட்டு ஓடுகள் நாற்பது வருடகாலத்துக்கு முன்பு வேயப்பட்ட ஒற்றையறை வீடு. பலமான நடுப்பனைமர தூண் ஒன்றை கொண்டதினாலேயே இன்னமும் வீடு என்ற பெயருடன் காற்றுவாங்கியபடி, களிமண் பூச்சுக்களுடன். என்னிடம் பலமானது கதவுமட்டுமே என்று கொக்கரித்து.

செருப்பை வீசியெறிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மா தூக்கத்தில் இருந்தாள். வாசலுக்குள் நுழையும்போதே போடும் சத்தம் வழக்கம் போல அவள் தூக்கத்தை கலைக்கவில்லை. நேற்றெல்லாம் தூக்கமில்லை அவளுக்கு. நெல்லியை அவளருகில் வைத்துவிட்டு சத்தமில்லாமல் கைகால் முகம் கழுவச்சென்றான். கிழிசல் துண்டைத்தேடி முகம் துடைத்தபின்தான் தன் தந்தை தண்டனை பெற்ற மனைவியை கொல்ல முயற்சி செய்த வழக்கை கொலை வழக்காக மறுபதிவு செய்யவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தான். நெல்லிக்காய் பையிலிருந்து வழிந்த ஈரத்தை மதிப்பெண் அட்டையிலிருந்து அவன் துடைக்கவேண்டிய அவசியம் இல்லை. அதிலிருந்து மை கரைந்து வழியத் தொடங்கியது.

– நாக பிரகாஷ்

 nagaprakash@outlook.com

சாமியாடி சேகர்

 ரமேஷ் ரக்‌ஷன் கதைகள்-10

“சேகர் வீட்டுக்குப் பின்னாடி ஒரு கோயில் இருக்குலா அங்க தான் வெளாடப்போறோம்”

உடை மரங்களும், ஊமத்தங்காய் செடியும், பூனைக்குட்டிப் பழங்களும் நெருக்கமாய் இருக்கும், பராமறிக்கப்படாத சுடலைமாடன் கோவில், அதனையொட்டியிருக்கும் சுவற்றோரமாய் ஓடும் சாக்கடையும், அந்த ஈரத்தை ஒட்டினார்போல ஐந்தாறு ஆமணக்குச்செடிகளும் நிற்கும்.

சேகரும், சேகரின் கூட்டாளிகளும் அங்கு தான் சனி ஞாயிறு என்றால் சோறு பொங்கி விளையாடுவார்கள். படையலும், சாமியாட்டமும், படிக்கட்டுகளில் கம்பால் அடிக்கும் மேலமும் ஊழியெறியும் சத்தமும் வாராவராம் சுடலைமாடனுக்குக் கொண்டாட்டம் தான்.

எல்லாருமே ஐந்தாம் வகுப்பிற்குள் படிக்கும் பொடிசுகள் என்பதால், எல்லோரும் ஒரே இடத்திலிருந்து விளையாடுகிறார்கள் என்ற திருப்தி, பொடிசுகளின் அம்மா அப்பாவிற்கு உண்டு.

முக்கு மடங்கிய “ட” வடிவிலிருக்கும் சாலை கொஞ்சம் நீளமாய் இருக்கும். அங்கு டீக்கடை பலசரக்குக்கடையென மொத்தம் ஏழு கடைகள் உள்ளன. சேகரின் கூட்டாளிகளுக்கு வேலை என்னவென்றால் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியிலேயே கண்ணில் படும் கலர் பாட்டில்களின் மூடியையும், முடிந்த சிகரெட்டுகளின் அட்டையையும் சேகரிக்க வேண்டும். திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிவரை இது தான் சேகருக்கும் சேகரின் கூட்டாளிக்கும் வேலை.

“உங்கிட்ட எவ்ளோ ருவால இருக்கு?”

இந்தக் கேள்வி அவரவர் கைகளில் இருக்கும் சிகரெட் அட்டைகளின் மதிப்பைக் கொண்டு கேட்கப்படுவதாகும். அதை வைத்து தான் சாமியாடி அதிகப் பணம் கொடுத்தவருக்கு மரியாதை செய்வார். அந்த கோவிலும் அதனைச் சுற்றியிருக்கும் மரங்களும் செடிகொடிகளும் இணைந்தது தான் ஊர் அவர்களுக்கு.

  • கொகோகோலா மூடி 5ரூபாய்
  • காளிமார்க் கலர் 2 ரூபாய்
  • சிஞ்சர் மற்றும் சோடா மூடி 1 ரூபாய்
  • 1 ரூபாய் சிகரெட் சிகப்புக்கோடு நேராக இருந்தால் அது 10 ரூபாய்
  • அதுவே அந்தச் சிகப்புக்கோடு கொஞ்சம் சாய்வாக இருந்தால் அது 20 ரூபாய்
  • கோல்டு ப்ளாக் 50 ரூபாய்
  • கோல்டு பில்டர் 100 ரூபாய்

டவுசர் பாக்கெட்டிலிருக்கும் பை, டவுசரை விடக் கீழே தொங்கும் அளவிற்கு, ரூபாய் நோட்டுகளைத் திணித்து வைத்துவிட்டுவருவார்கள் சேகரின் கூட்டாளிகள். முதலில் அவரவர் கொண்டு வந்த பணத்தை எண்ண வேண்டும்.

பின்பு சாமியின் முன் வைத்து “சாமி இன்னைக்கு நம்ம “மூக்குறிஞ்சான்” தான் நெறய ருவா கொண்டு வந்துருக்கான் அவனுக்குத் தான் மாலை போடனும்” என்று சாமியாடுவதற்கென இருக்கும் சேகரிடம் பணத்தைச் சரி பார்த்து கணக்குச் சொல்லிவிடுவார்கள்.

சாமி கொஞ்ச நேரம் சுடலையைப்பார்த்து நிற்பார் உடனே அருள் வந்துவிடும். மூக்குறிஞ்சான் தலையில் கொஞ்சம் திருநீரு அள்ளிப்போட்டு திருநீரு பூசி, “உன்ன நல்லாக்கி வைக்கேன் கவலப்படாத என்ன மக்கா” என்று சாமியாடி அருள் வாக்குச் சொன்னதும், பக்தனும் தலையசைப்பான். சேகரின் உடலில் இருந்து சாமி இறங்கிவிடுவார்.

காலை எட்டு ஒன்பது மணிக்குள்ளாக இந்த வேலை முடிந்துவிடும். அடுத்து மாலை தாயார் செய்ய வேண்டும். இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு குழு உடைமரக்காடு வழியே சென்று ஆற்றங்கரையோரமிருக்கும் செடிகளும் அதில் கிடைக்கும் அத்தனை வகைப் பூக்களையும், அரளிப்பூ வரைக்கும் கசங்காமல் பறித்துவிட்டு வர வேண்டும்.

அடுத்ததாக இருக்கும் பொடிசுகள் டெய்லர் கடைக்குச்சென்று முந்தைய இரவு ஒதுக்கிய வெட்டுத்துணிகளையும் கடைக்குப்பினால், ஒரு பெட்டியில் குவித்து வைத்திருக்கும் வெட்டுத்துணிகளில் மாலைக்குச்சொந்தக்காரரான “மூக்குறிஞ்சான்” என்னென்ன கலர் வேண்டுமென்று கேட்கிறாரோ அந்த வெட்டுத்துணிகளைப் பொறுக்கிக்கொண்டு , கொஞ்ச தூரம் நடந்தால் சலூன் கடை வரும் அங்கு ஒன்றிரண்டு துண்டு ப்ளேடுகளை வாங்கிவிட்டு கோயிலுக்கு வந்து சேர வேண்டும்.

அங்கு மீதமிருக்கும் சாமியாடியும் பூசாரியும், படையல் வைக்குமிடத்தையும், அனைவரும் இருந்து வேலை பார்க்கும் இடத்தையும் சுத்தம் செய்துவைத்துவிட்டு, சமையலுக்குத்தேவையான உடைமரப்பூக்களையும், அதன் காய்களையும், சாமிக்கு மாமிசம் பிடிக்குமென்பதால், அருகருகே தேடி ஊமத்தங்காய்களையும் பறித்து வைக்க வேண்டும். ஊமத்தங்காய்=முட்டை.

யார் முதலில் கோயிலுக்கு வருகிறார்களோ அவர்களில் இரண்டு பேர் மீதமிருப்பவர்களை டெயிலர் கடையோ ஆற்றங்கரையோ, சென்று வரச்சொல்ல வேண்டும். பின்பு கோவிலுக்கான திருப்பணிகளைத் துவங்கிவர். சாமியாடிக்கு அடுத்தபடியாகப் பூசாரி இருப்பார் பூசாரி தான் மாலையும் கட்ட வேண்டும் மாலை கட்டும் வேளையில் அனைவரும் உதவ வேண்டும்.

வட்டமாக, சதுரமாக, கட்டமாக, முக்கோணமா, கைக்கு வந்த வடிவங்களையெல்லாம் முதலில் வெட்டிவிட்டு, பூக்களையும் வெட்டிய டிசைன் துணிகளையும் பூசாரியிடம் கொடுத்துவிட வேண்டும் பூசாரி, பொறுமையாக முடிச்கிட்டு முடிச்சிட்டு மாலை கட்டத் துவங்கிவிடுவார்.

ஏற்கனவே மண்ணைக்குழைத்து தீப்பட்டிக்குள் நுழைத்து காய வைத்துச் செய்து வைத்திருந்த செங்கற்கள் கொண்டு அடுப்புச் செய்ய வேண்டும். அடுப்பின் மேல் சிரட்டை^ வைத்து நீருற்றி உடைமரக் காய்களையும், அதன் பூக்களையும் உதிர்த்துப்போட்டு ஒரு குழம்பு தயார் செய்ய வேண்டும். பக்கத்தில் உடைமரப்பூக்கள் எல்லாம் ஒரு கூட்டாகவும் காய்கள் ஒரு கூட்டாகவும், கற்களின்றிப் பொடி மணலாக வைத்திருந்தது சோறாகவும் தயார் ஆகிடுவிடும்

பக்தர்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் ஆமணக்கு இலை ஒடித்துச் சுடலை மாடன் முன்பு படையல் வைத்துவிட வேண்டும்.

சாமிக்கான மாலையும், அதிகம் பணம் கொடுத்தவருக்குப் போட வேண்டுமெனப் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட மாலையும் சாமிக்கு முன் வந்ததும், பலி கொடுப்பதற்கென, பூப்பறிக்கையில் சிக்கிய தட்டான், தவளை, ஓணான், இந்த மூன்றில் தவளை அல்லது ஓணான் இரண்டிலொன்று கட்டாயமாகப் பலி கொடுப்பதற்கென இருக்க வேண்டும். கால் ஒடிக்கப்பட்டுக் கிடக்கும் ஓணானும் சாமிக்கு முன் வந்ததும் சாமியாட்டம் ஆரம்பமாகும்.

“ஏலு நம்ம கமலா அக்கா அவிய அப்பா நம்ம கோயில்ல ஆடும்போது சுருட்டு குடிப்பாவ பாத்திருக்கியா நம்மளும் அது மாதிரி வைப்புமா இந்தத் தடவ?”

“சுருட்டா? வேணாம்பா நான் குடிக்க மாட்டேன்”?

“காஞ்ச ஆமணக்கு கட்ட இருக்குலா அத சும்மா ஓடிச்சி, முன்னாடிய மட்டும் தீல வச்சிட்டு சும்மா ஊது…”

“எங்க அண்ணன் இப்டி குடிச்சிருக்கான் நான் பாத்துருக்கேன்”

மாயாண்டியின் அண்ணன் அவனின் நண்பர்களோடு புகைப்பதைப் பார்த்து சொல்லவும் அந்த வாரம் சுருட்டும் ஏற்பாடாயிற்று,

படயலுக்கென அனைத்து சாமான்களும் வந்து சேர்ந்தது. பூசாரி சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டினார். சிரட்டையில் கொஞ்சம் தீக்கங்கு எடுத்து பச்சையிலைகளைப் போட்டு அதிலெழும் புகையில் சாம்பிராணி காட்டியதும், மேளத்தோடு ஊழியெறியும் சத்தத்தில் சேகருக்கு ஆராதணை வந்தது.

மூக்குறிஞ்சான் சட்டை தலைப்பாகையானது. மாலையிடப்பட்டது. சாமி ஓணானின் நெஞ்சில் கீறி இரத்தத்தைப் பொட்டாக்கினார். ஆமணக்கு சுருட்டு புகையாய் சாமியின் வாயிலிருந்து கக்கியது.

“ஒன்ன கணக்கு டீச்சர் ஓயாம அடிக்காவ என்ன மக்கா… நான் பாத்துகிடுதேன் என்ன? கவலப்படாத அவள…

சாமியாடிக் கொண்டிருந்த சேகரின் பொடனியில் மடேறென அடி விழுந்தது. சேகரின் நண்பர்கள் எல்லாரும் திக்குத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சேகர் தரதரவென வீட்டிற்கு வரவழைக்கப்பட்டான்.

“நான் மட்டும் தான் குடிக்கனா? அப்பாவும் தான்குடிக்காவ”

“தாத்தா இருந்தா நானும் சொல்லிக்குடுத்துருப்பேன்”

“என்ன மட்டும் எதுக்கு அடிக்காவ?”

தன் அம்மாவின் மடியில் கிடந்து முகமெல்லாம் வீங்கியிருந்த சேகர் அழுதழுது சொன்னது, சேகரின் அப்பாவின் காதிலும் விழுந்தது.

தண்ணீர் குடிக்கச்செல்லும் சாக்கில் உலை கொதித்துக்கொண்டிருந்த அடுப்பில் ஒரு ஸ்பூனை வைத்தார்.

“என்ன பண்றது ஊர்காரன் வந்து சொல்ற அளவுக்கு இருக்கு. ஓன் அம்மகாரி மட்டும் இல்லனா என்னைக்கோ போய்ச் சேந்துருப்பேன்” தன் அப்பா சொன்ன வார்த்தை சேகரின் அப்பாவிற்குச் சுட்டது. வாயூட்டும் பக்கத்தை ஒரு துணியால் இடது கை கொண்டு எடுத்தார். நன்கு பழுத்திருந்தது

ஆள் காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே ஸ்பூனை நிறுத்தி தனக்குத்தானே இழுத்தார். ஆறுதலாய் இருந்தது சேகரின் அப்பாவிற்கு.

1

–  ரமேஷ் ரக்சன்

(rameshrackson@yahoo.com)

 

^  செரட்டை  : கொட்டாங்குச்சி

45 நாட்கள்

இன்னையோட நாற்பத்தைந்து நாளாயிடுத்து. திவ்யா பெருமையோடு கணவனுக்கு இட்லி பரிமாறியபடி சொன்னாள்.

“நெசமாவா சொல்றே” இட்லியை வாயில் போடப்போன மகேஷ் வியப்பும் சந்தோஷமுமாகக் கேட்டான். ஆம் என்பதற்கு அடையாளமாக தலையாட்டிவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள் திவ்யா. அவளுக்கே பூரிப்பாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. அப்பப்பா இத்தனை மாதங்களாக எவ்வளவு கஷ்டம்.

“இன்னும் அஞ்சாறு நாள் தள்ளினா கம்பர்ட்டபிளா இருக்கலாம் இல்ல” கையைக் கழுவிக்கொண்டே கேட்டான் மகேஷ்.

“எனக்கென்னவோ நம்பிக்கையிருக்கிறது.” திவ்யா.

“ஆமாமாம் ஐம்பது நாளுக்கொருமுறைதான் கேஸ் சிலிண்டர் கொடுப்பேன்னு ரூல் வந்ததிலிருந்து இந்த தடவைதான் நாம சிக்கனமா செலவழிச்சிருக்கோம் போலிருக்கு” என்றபடி ஆபீசுக்குக் கிளம்பினான் மகேஷ்.

-அன்பு சிவன்