நாக்குட்டி – பாகம் -1

நாக்குட்டி                                (தொடர்)

 

கால் பெருவிரலால், தனக்கடுத்திருக்கும் மெட்டி விரலின் மேலேஅழுந்தி அழுந்தி இறக்கிக் கொண்டிருந்தாள். இவ்வளவு வெளிச்சம் வேண்டாம் என்றிருந்தாள்.தலை கவிழ்ந்திருக்கும். ஒரு மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. வாட்ஸ் குறைந்த பல்ப் போதும் என்றதும் துளசியின் விருப்பம்.

மஞ்சள் விளக்கோடு, TV Mode-ல் இருந்து AV Mode-ற்கு மாற்றி நீல நிறத்தையும் சேர்த்து அறையில் ஒளிர விட்டிருந்தேன். இடதுகாலை நீட்டாமல் முக்கோணத்திற்கானஅளவில் நிறுத்தியிருந்தாள். மடக்கியிருந்தக் காலுக்கும், கிடத்தியிருந்த காலுக்கும் நடுவில்கிடந்த ஸ்கர்ட் ஒரு தொட்டில் போலிருந்தது. என் காமத்தைக் கிடத்தி ஊஞ்சலாட்டுவாள். “ஆணுக்கு காமம் என்பது பெண் ஆட்டிவிடும் தொட்டிலாகவே இருக்கிறது.” சோபாவில் சாய்ந்துக்கொண்டு இடது கையை அதில் நிறுத்தி விசிறி போல விரித்திருந்த பதினான்கு கார்டுகளில், நான் அவளைக் கவனிக்கிறேனா என்று வேண்டுமென்றே அவள் முட்டைக்கண்ணை உருட்டி, தாமதமாக்கி பின் ஓரு கார்டை உருவித் தரையில் விரித்திருந்த குளிர்காலக் கம்பிளியில் போட்டாள்.

என் ஆட்டம் முடிந்திருந்தது.

விழுந்த கார்டை எடுக்கும் சாக்கில் ஸ்கர்ட் அகன்று அவளது உள் தொடையைக் காட்டிக் கொண்டிருந்ததை நான் ரசித்துக் கொண்டே அவளை நோக்கி மேலெழுகையில் கண்களைக் கண்டுவிட்டாள், குட்டி ராட்ச்சசியின் உடல் நோக்கி முன்னேறி, முத்தமிட தலை சாய்த்தேன். என் நுனி மூக்கினை அழுந்தக்கடித்து நெஞ்சில் உள்ளங்கை வைத்து நிறுத்தினாள்.

அவளின் இடையொட்டி வெளிப்பக்கமாய் ஊன்றிய கைகளும், தாங்கி நின்ற பெருவிரல் நுனியும் வலுவிழந்து துளசியை “விடுடி விடுடி” காலைல வரைக்கும் வெயிட் பண்றேன்” என்று என்னைச் சொல்ல வைத்துத்தான் விட்டாள். பல் தடம் பதிந்திருக்கும் என்கிற உற்சாக மிகுதியில் ஒருவழியாக விடுவித்தாள்.

டீஷர்ட்க்கு வெளியே தெரிந்து கொண்டிருந்த சிகப்பு நிற ப்ரா பட்டையில் விரல் நுழைத்து “அத்துடுவேன்” என்று மிரட்டியும் விடாமல் கடித்துக்கொண்டிருந்த அவளின் காதல் திமிருக்குக் காற்றில் முத்தமிட்டேன். தோள் அழுந்தியப்பட்டை, தசையில் கோடு கண்டிருந்தது. மெல்லிய வெளிச்சத்தில் எனக்குத் தெரியாதென்பதால் சொல்லிக்காட்டினாள். தேய்த்து விடவா என்ற கேள்விக்குச் சிதறியச் சீட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

எனக்குத் தோளில் தொடங்கிப் பின் பக்கப் பட்டை வரை நாவால் தொட(ர)வேண்டும் போலிருந்தது. கத்துவாள் என்று அமைதியாக இருந்துவிட்டேன்..

 நிறங்களின் அரசி போல்  தன்னை நினைத்துக் கொள்வாள்.

ஆடைத் தேர்வுகளில், அறையில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்லாபில் கம்பிகளின் ஊடே வட்டமிடும் வளையல்கள்காணும்போது, கபோர்டில் இடைவெளி விட்டுத் தொங்கும் உள்ளாடைகள் பார்க்கும் போது, நகப்பூச்சுப் பூசிக்கொள்ள விரும்பாமல், ஆனால் மார்கெட்டிற்கு வரும் வர்ணங்களில் எல்லாம் ஒன்றை வாங்கி வைத்து அழகு பார்க்கும் போது, என அவள் தன்னைப் பெருமிதமாய் நினைத்துக் கொள்வதற்கென்று விஷயங்கள் உண்டு.

அவளது உள்ளாடைகள் வெய்யில் பார்த்தது இல்லை.

காமத்திற்குச் சீட்டு விளயாட்டு, கடவுச்சீட்டாகும் என்பது சீட்டுக்கட்டு வாங்கி வரும்வரை எனக்குத் தெரியாது.

எந்தச் சிந்தனையுமற்று புணர்ந்து கிடக்கும் வெற்றுடல் போல எடையின்றி இருந்தது மனது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தனக்குத்தானே “லவ் யூ டி” என சொல்லிக் கொண்டு எழுந்தாள். உள்ளுக்குள் பேசிக்கொள்கிறாள் கிராதகி; முகபாவனையில் அப்படி மலர்ந்து கிடந்தாள். படிக்கட்டுகளில் மேல் நின்று தாவுவதற்குத் தயாராக இருக்கும், குழந்தையின் விளையாட்டுத் தனத்தைத் கவனிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் தான் வாங்கி வரச்சொன்னாள். “ம்ம்ம்” என்றேன். அவளின் தீர்மானத்தை உடைக்கமுடியாது என்று தெரிந்ததே.

“ஏன் வெயிட் பண்ண முடியாதா உனக்கு?”

“முடியாதுன்னு சொல்லிட்டா மட்டும்” வாய் திறந்து சொல்லவிரும்பாமல் உள்ளுக்குள் கேட்டதோடு நிறுத்திக் கொண்டேன்..

உடலைவிட,உயரம் அதிகம் துளசியின் கால்கள். இடுப்பிலிருந்து ஒரு இஞ்ச் அகலத்திற்கு இடவலமாக நீல நிற மடிப்புகள் கணுக்கால் நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஸ்கர்ட். இதர இரு வர்ணங்களில் நேர்கோட்டில் சிறு சிறு கோடுகள்.படுக்கிடையாக வட்டமிடும் பெயரிட்டு அழைக்கமுடியாத டிசைன் கொண்ட பார்டர். சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த என் பைக்கில், காலை பின்னலாகப்போட்டுக் கொண்டு உடலை நிறுத்தி கால்களை வளைத்து சீட்டில் உட்காந்திருந்தாள் .

பாதம்வரை உரசிக்கிடக்கும் ஸ்கர்ட்டை கொஞ்சம் தூக்கினாற் போல ஒய்யாரமாய் நடப்பது அவளாது இயல்பு. அப்படித்தான் வீட்டிற்குள் திரிவாள். இழுத்துப்பிடித்து கடிக்க வேண்டும் போலிருக்கும்.

பின்பாக்கெட்டில் சிக்கிக்கொண்டு வரமறுக்கும் பர்சை நான் நாசூக்காக  எடுக்கப்போராடிய விதத்தைஅலைபேசியில் ரோட்டிற்கு எதிர் பக்கம் நின்று, சூம் செய்து வீடியோ ரெக்கார்டிங் செய்து வைத்திருந்தாள். லாரிகளுக்கு வைக்க வேண்டிய ஹார்ன்; பைக்கில் சென்றவன் அடித்துச் சென்றிருக்கிறான் திட்டிக் கொண்டிருந்தாள். முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள். சிக்னல் விழவும்கேமராவை அணைத்துவிட்டு நான் வருவதற்குச் சிக்னல் விழவேண்டுமே!. பைக் சாவியை இடவலம் திருப்பிக் கொண்டிருந்தாள். சொல்லச் சொல்ல கேட்க மறுக்கும் சேட்டை அது.

நான் பைக்கிற்கு வரவும்  “N” எரிந்து கொண்டிருந்தது.

அருகிலிருந்த மெடிக்கல் கடையைப் பார்த்ததும், வேண்டுமென்றே கண் காட்டினேன்..

என்ன என்று புருவத்தையும், தலையையும் ஒருசேர உயர்த்தியவளிடம், கீழ் தாடை பிடித்து முகத்தை முன் கொண்டுவந்து திருப்பிக் காட்டினேன்.

சண்டையிழுப்பதற்கான பாவனை. “என்ன என்றாள்”.- நேப்கின் வாங்கனுமா?

சாவியை எறிவதுபோல வீசிக்காட்டி “காரியத்துல கரெக்டா இரு நீ… வந்து தொலை” என்றாள்.

அவளுடன் ஆடை எடுக்கச் செல்லும்போது அவளின் உள்ளாடைத் தேர்வுகளில்,. நிறங்கள் உண்டு பண்ணும் கவர்ச்சி பற்றி, அதன் உட்பக்கங்களை வருடிக்கொண்டே அந்த நிமிடத்திற்கான கிளர்ச்சியைப் பந்தி வைத்துக் கொண்டிருப்பாள். கூச்சப்பட வைப்பாள். நெளியவிட்டு ரசிப்பாள். BRA பற்றிப் பேசும் அளவிற்கு “PANTY” பற்றிப் பேச மாட்டாள். உள்ளாடையில் முலைகள் தாங்கும் ‘கப்’. அதற்கு மேல் வரும் வளையம் எந்த இடத்தில் நிற்க வேண்டும். முதுகில் பட்டை எந்த இடத்தில் இருக்க வேண்டும். ஓர் உள்ளாடையை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் அது ஒரு பெண்ணிற்கு எப்படி இலகுவாக உணர வைக்கும் என்று சொல்லிக்கொடுப்பாள்.

“இப்படி ஒருதடவ மெடிக்கல் ஷாப் கூட்டிட்டு போகலாம்ல” என்பேன். முடியாது என்று கூட சொல்ல மாட்டாள். பருவத்தை குறுக்கி முறைப்பாள். அவள் பயன்படுத்தும் பிராண்டின் பெயர் கூடத் தெரியாதவாறு பார்த்துக்கொண்டாள்.

துளசி சுடிதார் அணிந்து வருகிறாள் என்றால் புரிந்துவிடும். எந்தக் கேள்வியும் கேட்காமல்,. இடையின் ஓரம் வெட்டுப்படாத நீண்ட சுடிதாரில், என் கண்ணுக்கு மட்டும் கண் கொடுப்பாள். எந்தக் கேள்வியும் கேட்கத் தோன்றாது. அவளுக்கு  கரிசனம் பிடிக்காது. அதை தொந்தரவு என்பாள். அவளை அவள் போக்கில் விட்டுவிடுவேன்.

இது ஒருவகையில் அவள் எனக்கு பழக்கப்படுத்தி விட்டது என்று தான் தோன்றுகிறது. இயற்கையாகவே இந்த மனநிலை எனக்கு வாய்த்திருக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இது நான் உனக்கு அளித்த சுதந்திரம் என்று எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய வைத்தாள். அன்பினை வெளிக்காட்டாமல், அன்பு வெளிக்கொணரும் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்க கற்றுக்கொடுத்தாள். அன்பின் எதிர்வினைகளைக் கையாளும் சூட்சமத்தை புரிந்துகொள்ள அனுமதித்தாள்.

அப்போது நாங்கள் நண்பர்கள் என்று என்னை நம்ப வைப்பாள்.

அதிகபட்சமாய்ப் போனால், பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருப்பதாய், மாதத்திற்கு ஒரு நாள் எடுக்க அனுமதிக்கும் “CL” விடுப்பை எடுக்கச் சொல்வேன். இதையுமே அவள் முகத்தைப் பார்த்துச் சொல்ல வராது. “பொண்ணுங்க அந்த அளவுக்குத் தெம்பு இல்லாதவங்கனு நெனச்சிகிட்டியா” அவள் இதுவரை அப்படிக் கேட்டதில்லை. கேட்டுவிடுவாளோ என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் ஒன்று.

முன்னெச்சரிக்கையாய் உள்ளுக்குள் கேட்கும் சொல், அல்லது குரல், துரோகத்தின் இயலாமையோடு, வெற்றிக்களிப்பின் கூச்சலோடு உள்ளிருக்கும். அது நிகழும் வரை.

We are just friend இதையே தினமும் சொல்லிப்பழகச் சொல்லியிருக்கிறாள் அவளாக என்னைத் தேடும் பொழுது, தீண்ட நினைக்கும் சமயங்களில், அவளை என் மூலம் கட்டுப்படுத்திக்கொள்ளக் கையில் எடுத்த அங்குசம் “We are Just Friends” என்பது பின்னாட்களில் தெரிந்த ஒன்று.

அவளது தொடுதல் விரும்பும்போது மதியம் சாப்பாட்டு வேளையில் தலையை வருடிக்கொடுப்பேன். கொஞ்சம் அகன்று சுருக்கிக்கொள்ளும் உதட்டின் அளவே இருக்கும் அவளின் சிரிப்பு. தலையைத் தோளில் சாய்த்துப்பின் எடுத்துக்கொள்வாள். என்னைத் தாண்டி இருக்கும் ஏதோ ஒரு பொருளை எட்டி எடுப்பது போலிருக்கும் தோள் சாய்தல். இந்த நாளில் மட்டும் எனக்கு அவளை “டி” போட்டு அழைக்கவோ பேசவோ வராது. சொற்ப ஆயுள் கொண்ட சந்தேகம் அது. தேவைக்கும், அன்றாடப் புழக்கத்திற்கும் தாக்குபிடிக்குமா என்ற சோதனையில் எனக்கே வெற்றி. அதற்குக் கரிசனம் என்று பெயரிட மறுத்தாள். அனுமதித்தாள். ஏற்றுக்கொண்டாள். அப்படித்தான் நம்ப வைத்திருப்பாள்.

பேச்சினூடே “டா” என்று பின்னால் சேர்த்துக் கொள்வேன். இல்லையெனில் கேள்விக்கான பதில் போலச் சொல்வேன் அல்லது பேசுவேன்.சிடுசிடுவென இருப்பது போலவே எனக்குத் தோன்றும்.

துளசியின் மார்பு உரசாதொரு அரவணைப்பு. நான் மாலையில் தேடுவது. எத்தனையோமுறை முயன்றுத் தோற்றிருக்கிறேன்.. Iam alright என்பது போலிருக்கும். அந்த அணைப்பு. அன்று இருவருமே ஒரே நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவோம்.அல்லது ஒன்றாகச் செல்வதற்காக என்னைக் காத்திருக்கச் சொல்வாள். “ஆண் என்பவனின் தேவை அழிந்து சகமாய் நிற்கும் உன் கண்கள்”

எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அவள் டைரியில் எழுதப்பட்டிருக்கும் மாதம், தேதி; அன்றவளுக்கு முதல் நாள்.உடலின் சூட்டினை அந்த வார சனி, ஞாயிறு  மதியத்தில் தூங்கப்போவதாய் இருவரும் குறுஞ்செய்தியில் சொல்லிக் கொண்டபின், அவளது உஷ்ணம் அறையெங்கும் பரவிக்கிடப்பதாய் எண்ணத் தோன்றும்.

எழுச்சியுறாது கடத்திவிடும அந்த நாளின் இயல்பு எங்கிருந்து வந்தது என்று மாதாமாதம் குழம்பியிருக்கிறேன்.

7-Up என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.Windows+L . ஒரு நாக்குட்டி போல எண்ணத் தோன்றும். சில நேரம் என்னை. சில நேரம் துளசியை.

வெளியில் நிற்பதாய் மெசேஜ் அனுப்புவேன். அவள் வரும்போது கதவிற்கு நேர் நிற்காதே என்று திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறாள்.தொடக்கத்தில் முடியாதென்று முகத்திற்கு நேராகவே நான் சொன்னது இதில் மட்டும் தான் இருக்கும். இரு பக்க கேபினுக்கு நடுவில் நடந்து வருவாள். நெருங்க நெருங்க கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விடத்தோன்றும்.

“ஒரு மடக்கு குடிச்சிட்டுத் தா” என்பாள். அவள் முன்னால்தான் பாட்டிலை ஓபன் செய்து குடிக்கவேண்டும் என்பது குட்டிமாவின் விருப்பம். எதற்கென்று காரணம் கேட்கத் தோன்றும். தொண்டை எலும்பு ஏறி இறங்கும் போது பார்த்துக் கேட்பாள்.

“ஏன் எதுக்குன்னு கேட்காம குடிக்றியே”. அவளால் அவளை, அவளின் ஆர்வத்தை, காட்டிக்கொடுக்கத் தயாராக இல்லை. எல்லா இடத்திலும் தான். பாட்டிலை வாங்கிவிட்டுச் சென்று விடுவாள்.

1f7050be0bf28c892d64f6eca5f0de1a

இவ்வளவு தான் நான் என்று தன்னை ஒப்புவிப்பதற்கான காலத்தை ஒர் ஆண் எப்போதுமே பெண் இனத்திற்கு உருவாக்கிக் கொடுக்கத் தெரியாதவனாகவே படைக்கப்பெற்றிருக்கிறான். நகுல்! நீயும் இப்படித் தான். உனக்கான காலம், உன்னிடம் இல்லை.

“ஒரு Hug, ஒரு முத்தம் அப்டி இப்டி ஏதும் கிடையாதா?”

தன்னைச் சுயநலவாதி என்று சொல்லிவிடக்கூடாது என்பது தொடக்கத்தில் முதல் யோசனையாக இருந்ததாம் அவளுக்கு. அதனாலேயே தோன்றியதைக் கேட்கத் தயங்கிஇருக்கிறாள்.

அவளோட பீரியட் டைம். லாஸ்ட் டே. பெட் ரூம்ல இது தான் முதல் தடவை.

அவளை நெருங்கி நின்றேன். நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு, ஹாலைப் பெருக்கி சுத்தம் செய்தாள். மீண்டும் விரிப்பை விரித்து அமர்ந்து கொண்டாள். இரண்டு ஆட்டங்கள் வரை எதுவுமே பேசவில்லை. அவளாகவே பேசத் தொடங்கினாள்.

“நான் Beginning-ல என்ன எதிர் பார்ப்பேன் எப்படி நடந்துப்பேன்னு உனக்குத் தெரியும் தானே?”

கூடலுக்கான வேட்கை தற்காலிகமாய் விடுபட்டிருந்தது. என் மடியில் அவளது கால்களை இழுத்துப் போட்டிருந்தேன். கால் விரல்களின் அடிப்பக்கத்தில், மெட்டி தாங்கும் பள்ளத்திற்கு மேலே தனித்து நிற்கும் மொட்டினை வருடிக்கொண்டிருந்தேன். இரு கால்களையும் நீட்டி கால் மேல் கால் போட்டு, பின் பக்கம் இரு கையூன்றி அமர்ந்து கொண்டாள்., தன்னைப் பார்த்துப் பேசச் சொன்னாள். உள்ளாடையின் வளையம் தெரிந்தது. “இப்போ பிடிச்சி இழு.. வா” என்றாள்.

எத Mean பண்ற? என்ன Beginning?  அவள் விரல் நுனியைப் பார்த்துக்கொண்டே கேட்டேன்.

“ஒரு லிமிட்டுக்கு மேல உன்ன ­Allow பண்ண முடியாது. என் அவஸ்தை என்னனு புரியுதாடா உனக்கு” என்றாள்.

பார்வையை மட்டும் உயர்த்தினேன். எப்போதும் கண்ணும் கண்ணும் பார்க்க நேர்ந்தால் ஓர் அலட்சியப் புன்னகையினூடே பார்வையைத் தட்டிவிடுவாள். ஆனால் அப்போது தீர்க்கமாக இருந்தது பார்வை. அந்தத் தொனி, அதனூடாக வெளிப்பட்டக் குரல் என்னை சட்டெனத்திணற வைத்தது. அழுகைக்கும், தவிப்பிற்குமான அந்தக் குரல், ரம்மிக்கான களிப்புகளின் மேலேறி அவளது கைப்பற்றி இழுத்தேன். மடியில் தலை சாய்ந்து கொண்டாள். என் கால்களின் ஆடுதசை ஒட்டிய மயிர்களை நிதானமாய் மேலும் கீழும் உருட்டிக் கொண்டிருந்தாள். அந்த அழுத்தம் அவள் மனதை லேசாக்கிக் கொண்டிருந்தது. இடையைச் சுற்றி கைபோட்டிருந்தாள்.

என்னால முடிஞ்ச அளவுக்கு மாத்திக்கிறேண்டா 

முடியலனா என்ன கொஞ்ச நேரம் அமைதியாவிடு போதும். 

அதுக்காக தள்ளில்லாம் போயிடாத 

என்ன கவனிச்சிட்டே இரு. 

சண்டை எல்லாம் போட்டா சண்டையோடையே திரும்பிப் போற மாதிரி இருக்காத 

என்னால அதெல்லாம் தாங்க முடியாது.

 தலைவருடலற்ற ஒரு மடி சாய்தல். அந்த மெளனம் எங்கள் இருவருக்குமே தேவையானதாய் இருந்தது.

 

 *துளசியின்  டைரிக் குறிப்புகள்

 

(தொடரும்…. )

 

ரமேஷ் ரக்சன்

தொடர்புக்கு – talk2rr@yahoo.com

 

 

 

ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

– கண்ணன் ராம்சாமி

“எங்கள் ஊரில் தனது திருவடிகளைப் பதிக்க வரும் அண்ணன் ராஜேந்திரன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கும் அன்பு நெஞ்சங்கள்” என்று எழுதியிருந்த வாசகத்தின் கீழ் கை கூப்பியபடியும், கறுப்பு மூக்குக்கண்ணாடியை ஒரு கையால் பிடித்தபடியும், பாக்கெட்டில் மினிஸ்டர் ஒயிர் துணியின் பின்னால் தெரியும் ராஜேந்திரனின் புகைப்படத்தை கேமராவின் முன் காட்டியும் போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்த மூன்று அல்லக்கைகளின் முகத்திலும் கழுவி ஊற்றினான் ராஜேஷ்.

கடைக்கு வந்திருந்த இரண்டு வறண்ட நாக்குகளுக்குச் சாத்துக்குடி ஜூசும், எலுமிச்சை சோடாவும் போட்டுக் கொடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் எச்சில் கிளாஸ்களை முக்கி எடுத்தான். மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான். ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கைகூப்பி அல்லக்கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.

வழிந்தது போகத் தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஓர் ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப்பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாகப் பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப்படுத்துக்  கொண்டிருந்தது.

ராஜேஷ், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டத்தில் இருந்து அவன் அப்பாவுக்குத் தான் செய்து கொண்டிருக்கும் சிறு தொழிலுக்கு கிளை அமைக்க யோசனை பிறந்துவிட்டது.

’இனி இவனை படிக்க வைத்து, இருக்கும் பணத்தையும் வீணடிப்பதை விட, சிறு தள்ளு வண்டிக் கடையை வைத்துக் கொடுத்து விட்டால், ஒரு வருமானமாவது கிடைக்கும்’ என்று சிந்தித்தார். அவர் இப்படி யோசிக்க இதை விட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது.

முந்தையை நாள் அதிகாலை பழங்கள் வாங்கி வர ரயில் ஏறி வெண்டர்ஸ் பெட்டியில் உட்கார்ந்தவுடன், வேலூரில் இருந்து பால் குடங்களை ஏற்றிச் செல்லும் பல நாள் நண்பர் சேகரை சந்தித்தார். அப்போது இருவரின் ஊரிலும் நடக்கும் சிறு வியாபாரங்களைப் பற்றிய பேச்சு எழுந்தது.

“வேலூரில் வெயில் அதிகம். அங்கே ஜூஸ் கடை திறக்கலாம்” என்றார் சேகர்.

“நீயும் தான் இதை எல்லா நேரமும் சொல்லிக் கிட்டே வர்ற. அங்கே உள்ள நிலைமை எப்படி-ன்னு தெரியலையே!”

“அட என்னப்பா இப்படி பயந்துக்கிட்டு! கரையைத் தாண்டாமலே ஆழம் எவ்வளவு இருக்கும்-னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தா எப்படி? துணிஞ்சு இறங்கு. கால் வைக்கக் கல் கிடைக்கும்”

“கல்லு கிடச்சா பரவாயில்லையே பா! பொத குழியில மாட்டிக்காம இருக்கணுமே. உங்க ஊர் வியாபாரிங்களோட நமக்கு ஒத்துப் போகணும். மாமூல் அது இது-ன்னு நிறைய தலை வலி இருக்கு. பால் குடம் சுமக்குற கதையில்ல இது”

“என் மகனும் சீசனுக்கு ஏத்தபடி வாழைப்பழம், மாதுளை, கொய்யா, வேர் கடலை, ஆரஞ்சுன்னு கூவி கூவி விக்கிறவன் தான் அப்பு! நீயாவது ஒரு இடத்துல நின்னு விக்கிறே. அவன் தினமும் ரயில் ஏறி வித்துட்டு வர்றான். எவ்வளவு பேரை பாத்திருப்பான்?”

“யோவ்! வண்டியில விக்கிறவனைப் பத்தி எனக்குத் தெரியாது? பெரும்பாலும் ஒருத்தன் வித்தான்-ன்னா இன்னொருத்தனை தொழில் கத்துக் கொடுத்து கை தூக்கி விடுவான். ஓர் ஊர் காரப் பயலுங்களுக்குள்ள என்ன சண்டை சச்சரவு வந்துடப் போகுது? நான் ஏறின பெட்டியில நீ ஏன்டா ஏறின-ன்னு கேக்குறதோட சரி” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு, சேகரின் காதுக்கருகே சென்று,

“உன் மகனுக்குத் தொழில் கத்துக் கொடுத்ததும் உன் சாதிக் காரப் பயதானே?” என்று சொல்லி சிரித்தார் ராஜேஷப்பா. சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதால் வெறுப்பாகிப் போன சேகர்,

“அப்படிப் பாத்தீன்னா, பானி பூரி விக்கிற இந்திக் காரன் எல்லாம் யார் தயவால இங்கே வந்து கடை போட்டிருக்கான்?”

இந்தக் கேள்வி ராஜேஷப்பாவை கொஞ்சம் புரட்டித் தான் போட்டு விட்டது. தண்டவாளத்தின் இணைப்பில் ரயில் ஏறி இறங்கும் போது ஏற்படும் அதிர்வை அவர் தன் மனதிலும் உணர்ந்தார்.

“சேகர், எதைப் பத்தி வேணாலும் பேசு. அவிங்கள பத்தி மட்டும் பேசாதே” சிடு சிடுவென்று எறிந்து விழுந்தார் ராஜேஷப்பா.

“ஏன்? ஏன்?” அவரை மடக்கி விட்ட மகிழ்ச்சியில் சேகர் பதில் அறிய அவசரப் பட்டார்.

“என் பையன கெடுக்குறதே அவங்க தான். கொஞ்ச நாள்-ல ஊருக்குள்ள வந்து அவங்க பண்ற அட்டூழியம் தாங்கல”

“அப்படி என்ன கெடுத்துப் புட்டாங்க?” பால் டின்னின் வாயில் திணித்திருந்த வைக்கோல் மூடியில் இருந்து ஒன்றை உருவி வாயில் அதக்கிச் சப்பிக் கொண்டே கேட்டார் சேகர்.

“பின்ன என்னப்பா? முதல்ல ஒரு சின்னக் கடையை கொண்டு வந்து விரிச்சான். சாயந்திரம் நாலு மணிக்கு கடைய போட்டான்னா இரவு பத்து, பத்தரை வரைக்கும் கூட்டம் அள்ளுது. ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்க பஸ்சை விட்டு இறங்குற இடமா பாத்து விரிச்சான். இன்னைக்குச் சோத்துப் பருக்கைய மோச்ச ஈயாட்டம் வதவதன்னு ஊருக்குள்ள பத்து கடைங்க அவனுக்கு. குடிச்சிட்டு பிரியாணி கடையில கூடுற கூட்டமாட்டும் இல்ல இருக்குது! வெளி ஊர்-ல இருந்து அவன் இங்கே வந்து சம்பாதிக்கிறான். எம்மகன் பழக்கத்துக்காக அவன் கடையில சேர்வா கவர் கட்டுறான். ஷேய்!!”

“அவனுக்கு எதுல நாட்டம் போகுதோ அதையே அவனுக்குக் குடுக்க வேண்டியது தானே? நீ சொல்லுறதையே தான் நானும் சொல்றேன். பானி பூரி கடைக்காரனை பாரு. இங்கே வந்து கடை விரிச்சுக் கல்லா கட்டினதும், அவனைப் போலவே நாலு இந்திக் காரங்களை வரவழைச்சான். ஊர்-ல முக்கியமா மக்கள் கூடுற நாலு இடத்தைப் புடிச்சி தள்ளு வண்டி போட்டு இப்போ கலக்ஷனுக்குப் போய் சம்பாதிக்கிறான்.

இன்னைக்கு மக்களை ஏமாத்திக்கிட்டு திரியிற பாதி கம்பெனிங்க இவன் செய்றதை தானேய்யா செஞ்சுக்கிட்டு இருக்கு? உலகத்துலேயே குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ற ஆளுங்க நம்ம பசங்க தான்-ன்னு சரியா கண்டு புடிச்சு ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு கம்பெனியை தொறந்து விட்டானுல்ல? அவன் உன்னைய மாதிரியா யோசிச்சுக்கிட்டு இருந்தான்?”

சேகர் சொன்ன வார்த்தை ராஜேஷப்பாவுக்குச் சுருக்கென்று உறுத்தியது.

“அப்போ என் மகன் படிப்பு?”

“என்ன படிக்க வெச்சு இஞ்சினியர் ஆக்கப் போறியா? ஹீ..ஹீ…இன்னைக்கி இஞ்சினியரிங் படிச்ச பாதிப் பசங்க நீ சொன்ன அந்தப் பானிப் பூரி கடையில அரட்டை அடிச்சுக்கிட்டு தான் இருக்கான்.

இதோ பாரு! படிப்புங்குறது ஏட்டுக் கல்வி மட்டுமில்ல. எந்தத் தொழிலும் கேவலமில்லை-ன்னு நினைக்காதவன் எத்தனை புஸ்தகத்தை படிச்சாலும் வீணாத் தான் போவான். இந்தியாவுல பாதிக்குப் பாதி சனங்க தொழில் செஞ்சு தான் பிழைப்பை ஓட்டுறாங்க. அவங்களுக்கும் படிப்பு தேவை தான்! ஆனா சம்பாதிக்க மட்டும் இல்லை.

எனக்குத் தெரிஞ்ச ஒரு காய்கறிக் கடைக்காரன் அற்புதமா கணக்குப் போடுவான். இப்போ போடுற மாதிரி மொபைல்-ல இல்ல! மனக் கணக்கு…முக்கியமா, பிழையில்லாம! அவன் படிச்சவன் இல்லையா? நீ ஏன் உன் மகன் மத்தவங்க படிக்கிற அதே படிப்பை படிக்கணும்-ன்னு நினைக்கிறே? ஒவ்வொருத்தனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி வித்யாசமானது இல்லையா? உன் மகன் வாழ்க்கையைக் கத்துக்கட்டும்! அது தான் இருக்குறதுலேயே ரொம்பக் கஷ்டமான கல்வி”

சேகர் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தோன்றியது ராஜேஷப்பாவிற்கு. அவர் பேச்சுக் கொடுத்த தைரியத்தில் வட்டிக்குப் பணம் பெற்று ஒரு தள்ளு வண்டிக் கடையை கட்டித் தர முடிவெடுத்தார். அவருடைய நண்பரான சைக்கிள்கடை பாய் இந்த வேலையில் கை தேர்ந்தவர்.

விஷயம் கேள்விப்பட்ட பாய் ராஜேஷப்பாவுக்கு உதவ முன்வந்து, செலவை குறைக்கத் தானே ஒரு வண்டியை தயார் செய்து கொடுத்தார். அதன்படி முதலில், தன்னிடம் இருந்த பழைய சைக்கிள்களின் வீல்களை எடுத்து, ஓட்டுவதற்கு ஏற்றபடி பென்ட் எடுத்து, ஒன்றாகக்  கம்பிகளோடு சேர்த்து வெல்ட் வைத்தார்.

தனக்குத் தெரிந்த ஆசாரியிடம் சென்று பழைய மரக் கட்டில்களின் நான்கு கால்களைப் பெற்று வந்து, அதை பழைய இத்துப் போன மரத் தகடுகளோடு மேலும் கீழுமாக இணைத்து, அடியில் குப்பை சேகரித்து வைக்க, ஐஸ் பெட்டி எடுத்துச் செல்ல இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, ஒரு பக்காவானத் தள்ளு வண்டிக் கடையைத் தயார் செய்து விட்டார் பாய்.

தள்ளு வண்டியைப் பார்த்ததும் குதுகலம் அடைந்த ராஜேஷ் தானே அதற்கு வண்ணம் தீட்டி அழகு பார்த்தான். அவன் முதன் முதலாக ஒரு வேலையில் ஈடுபாடு காட்டியதை அன்று தான் ராஜேஷப்பா பார்க்கிறார். அவருடைய முகத்தில் குடி கொண்ட சந்தோஷத்திற்குத் திருஷ்டி கழிக்கும் விதமாக வண்ணம் தீட்டிய ராஜேஷ் முடிவாக தள்ளு வண்டியின் முன்னால், “மகிழ்ச்சி” குளிர்பான நிலையம் என்று எழுதி ரஜினியின் போட்டோவை ஓட்டினான்.

“அப்பன் கஷ்டப்பட்டுக் கடன் வாங்கித் தொழில் செய்ய வழி காட்டிக் கொடுக்குறான். இவன பாரு! சினிமா வசனத்தை வண்டியில எழுதுறான்” முகம் சுளித்தார் ராஜேஷம்மா.

“ஆரம்பிச்சிட்டியா? நம்ம கடையில ஜூஸ் குடிக்க வர்றவங்க எல்லாம் யூத்-மா! அவங்களுக்கு இப்படிப் பேரு வெச்சாத் தான் புடிக்கும். கருப்ப சாமி துணை எல்லாம் பழைய ட்ரெண்டு” என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராஜேஷ். தொங்கிப் போன முகத்தோடு நிற்கும் மனைவியிடம் சாந்தமாக எடுத்துரைத்தார் ராஜேஷப்பா.

“உனக்கு இதன் பின்னால் இருக்கும் அரசியல் புரியலைடி. சினிமாவும் ஒரு வியாபாரம் தான். அதுவும் சில நுணுக்கங்களை மனசுல வெச்சே எடுக்கப் படுது. யாருக்கு பொழுது போக்கு மிக அவசியம்? கஷ்டப்படும் ஜனங்களுக்குத் தான்! நம்மள மாதிரி ஜனங்களுக்கு இருக்கும் கஷ்டத்தைத் திரையில காட்டி தானே நடிகர்கள் எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க? அன்னைக்கி ஆட்டோக்காரனா நடிச்சா சக்கைப் போடு போட்டிச்சு! இன்னைக்கு எல்லா நடிகனும் ஐ.டி கம்பெனியில வேலை செய்ற மாதிரி படம் எடுக்குறான். இது இப்படித் தான் இருக்கும்! ஒரு கட்டத்துல எது வாழ்க்கை-ன்னு அவனே புரிஞ்சுக்குவான்”

அவர் பேசி முடிப்பதற்குள் வாசலைத் தாண்டி விட்ட வண்டியை நிறுத்தி அம்மா ஏதோ மறந்து விட்ட எண்ணத்தில் உள்ளே போய் வெளியே வந்தார். நான்கு எலுமிச்சை பழங்களை வண்டியின் சக்கரங்களுக்கு அடியில் வைத்து மிதிக்கச் சொல்லி, நான்கு தூண்களிலும் மஞ்சள் தேய்த்து மங்களகரம் ஆக்கினார்.

“உஹும்! இது அதை விட டேஞ்சர்” என்று ராஜேஷப்பா சிரிக்க, அவர் குமட்டில் மஞ்சள் கையால் ஒரு குத்து விட்டார் அம்மா. இருவரும் மனதில் நம்பிக்கையோடு வியாபாரத்திற்குப் போகும் தன் மகன் போகும் திசையைப் பார்த்து பெருமூச்சு விட்டனர்.

வண்டி வைத்த முதல் வாரம் வியாபாரம் டல் அடித்தது. ராஜேஷப்பாவிற்குத் தேர்வு செய்த இடம் சரியில்லையோ என்று சந்தேகம் எழத் தொடங்கியது.

“காலை எட்டு மணிக்கி போறே. சாயந்திரம் ஏழு மணிக்கு வர்ற. பத்தில் இருந்து அஞ்சு மணி வரை பத்தே பத்து பேர் தான் லெமன் சோடா வாங்கிக் குடிச்சிருக்கான். இப்படித் தினம் நூறு ரூவா சம்பாரிச்சு நீ என்னைக்கி முன்னேறிப் போறது?” என்று கேட்டார்.

“ஐயோ! அப்பா, இருப்பா…இப்போ தானே கடை போட்டிருக்கோம். இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வரும். அதுக்குள்ளே முன்னேறிப் போறதைப் பத்தி பேசாதே”

ராஜேஷிற்கு அந்த ஊரின் பானிபூரி விற்பனையாளர்களை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்கள் இவனைக் கவர்ந்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. பானி பூரி விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல என்று அவன் எப்போதும் நினைப்பான். அவர்களோடு எப்போதும் காலம் கழிப்பதால் அவனுக்கு இப்படித் தோன்றி இருக்கலாம். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு வீட்டை வாடகை எடுத்துத் தங்கி வருகின்றனர். அந்த வீட்டில் எட்டு வண்டிகளை வைக்கப் போதிய இடம் இருப்பதால் அதிக வாடகைக் கொடுத்து குடி பெயர்ந்திருந்தனர்.

தினமும் காலை எழுந்தவுடன் வெங்காயம் வெட்டுவதற்கும், கேரட் துருவதற்கும், சேர்வா செய்வதற்கும், சுண்டல் வேக வைப்பதற்கும் மூன்று பேர் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். வேலை முடிந்ததும் அவர்கள் சென்ற நாளின் பாத்திரங்களைக் கழுவுதல், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள இந்தி பேசும் நண்பர்களிடம் இருந்து குறைந்த விலைக்குப் பூரிகளை வாங்கி வருதல் ஆகிய வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவர்.

மற்ற எட்டு பெரும் ஒவ்வொரு வண்டியிலும் அன்றைக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, மாலை நான்கு மணி அளவில் வியாபாரத்திற்குச் செல்வர். லாபத்தைப் பதினோரு பங்காகப் பிரித்துக் கொண்டு, தங்களுடைய தினச் சாப்பாடு மற்றும் இதரத் தேவை போக மீதத்தை பீகாரில் உள்ள தங்களுடையக் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பார்.

இவர்களுடைய வாழ்க்கையை ஒரு ஓரத்தில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் ராஜேஷிற்கு வாய்த்ததனால், தனக்கென்று தனி வியாபாரம் வந்த பிறகும் அவர்களுடைய பணியை ரசிப்பதற்காகவே பானி புரி கடைக்கு அருகிலேயே தன்னுடைய கடையையும் நிறுவி கொண்டான்.

அவனுக்கு அப்பாவின் சந்தேகம் புரியாமல் இல்லை. ஆனால், அதற்கு அவனிடம் தீர்வும் இல்லை. அந்த இடத்தில் பானி பூரி வியாபாரம் பிய்த்துக் கொண்டு போவதற்கும், தன்னுடைய வியாபாரம் டல் அடிப்பதற்கும் என்ன காரணம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அப்பா மெதுவாக அவனுடைய நடவடிக்கைகளை நோட்டம் விடத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு விவரம் புரிந்தது.

ராஜேஷ் கடை விரித்திருக்கும் இடம் ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியின் அருகில் இருந்தது. அந்தப் பள்ளியை சுற்றி உருவான புதிய குடியிருப்புப் பகுதியாக அது வளர்ந்து நிற்கிறது. அங்கு வசிப்பவர்களில் பலர், வீட்டில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையை/பதின்பருவப் பிள்ளையை வைத்திருக்கின்றனர். அதனால் தான் அங்கே பானி புரி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. அங்கு வரும் பிள்ளைகள் எல்லோரும் மாலை நான்கு மணிக்கு மேல் அங்கு கூடுவது வழக்கம். வீடுகளின் ஆண்கள் அதிகாலை வேலைக்குச் சென்று விட்டு இரவு சாய்ந்த பிறகே வீட்டிற்கு வருவார்கள். இல்லத்தரசிகள் கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டிலேயே அடைந்துக் கிடப்பார்கள். அதனால் வெயில் நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் ஆட்கள் குறைவு. அந்தக் குடியிருப்பைத் தாண்டி வழிப்போக்கர்களாகச் செல்லும் ஆட்களும் இல்லை என்பதாலும், மக்கள் கூடும் அலுவகங்களோ, மருத்துவமனைகளோ கிடையாது என்பதாலும் ஜூஸ் கடைக்கு அங்கு வேலை இல்லை.

இதை அறியாத ராஜேஷ் வாரங்கள் தாண்டி வியாபாரம் சூடுபிடிக்கக் காத்துக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டார் ராஜேஷப்பா.

விவரத்தை சொல்லி, “அரசு ஆஸ்பத்திரி பக்கமா ஓர் இடம் பாத்து வெச்சிருக்கேன். பிரசவ வார்டும் அங்கே தான் இருக்கு. எதிரிலேயே தாலுக்கா ஆபீசும் இருக்கு. அதனால நிறைய வியாபாரம் ஆகும்” என்று ராஜேஷிற்கு அறிவுரை சொன்னார்.

அப்பா சொல்வது சரி என்று பட்டாலும் சிடு மூஞ்சியுடனேயே அவன் ஒப்புக் கொண்டான். தன்னுடைய சந்தோசம் பறிபோய் விட்டதே என்று அவன் கவலை கொண்டான். ஆனால், கூடியவிரைவிலேயே எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடிய பேச்சுத் திறமையின் காரணமாக ராஜேஷின் கடையில் டேரா போட்டு அரட்டை அடிக்க வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது.

ஆஸ்பத்திரியில் அடிபட்டு, நோய்வாய்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் கணவன்கள், தாலுக்கா அலுவலகத்தில் காத்திருக்கும் போது கூடும் கூட்டம் என அவனுடைய கடையில் தினசரி வந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமானது. கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பதில் இருந்து எழுபது பேர் சாத்துக் குடி சாறும், சுமார் நூறு பேருக்கும் அதிகமானோர் எலுமிச்சை சாறு/சோடாவும் குடித்துச் சென்றதால் நல்ல வருமானம் பார்க்க முடிந்தது. ராஜேஷின் கடினமான உழைப்பை மெச்சி பாராட்டிய அப்பா கூடவே ஒரு வியாபார யுக்தியையும் கற்றுக் கொடுத்தார்.

“நீ எப்போதும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கணும். நம்ம கிட்ட வியாபாரம் செய்ய வர்றவங்க, அவங்க குடுத்த காசுக்குக் கொஞ்சம் கூடுதலா பொருள் எடுத்துட்டுப் போனா சந்தோஷப்படுவாங்க. தன்னுடைய வாடிக்கையான கடையையும், புதுசா போட்டிருக்கு உன்னுடைய கடையையும் ஒப்பிட்டு எது சிறந்தது-ன்னு எடை போடுவாங்க. அதனால, நீ பத்து ரூபாய்க்கு கொடுக்குற ஜூஸாக இருந்தாலும், இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கிற ஜூஸாக இருந்தாலும் யோசிக்காம ஒரு கால் கிளாஸ் அதிகம் கொடுக்கப்பழகிக்கோ! உண்மையில் உனக்கு அதிக செலவினம் தண்ணீரிலோ, ஐஸ் கட்டியிலோ தான் ஆகப்போகுது. ஆனாலும் அது அவங்களுக்குக் கொடுத்த காசுக்கு ஏமாறாம வியாபாரம் செஞ்ச திருப்தியை கொடுக்கும்”

அப்பாவின் இந்த அறிவுரையை ராஜேஷ் கடைபிடித்தான். அவன் காதுபடவே சிலர் நண்பர்களுடன் பேசும் போது,

“இங்கே ஒரு கிளாசுக்கு மேல வந்தா எடுத்து தனியா வெச்சுக்காம நமக்கே குடுத்துடுவான். நல்ல பையன்! அதனால தான் இங்கே அடிக்கடி வர்றது” என்று குறிப்பிடுவதைக் கேட்டு அப்பாவின் அனுபவத்தை மெச்சினான்.

மேலும் தன்னுடைய ஈடுபாட்டின் பேரில் மேல் தட்டு வர்க்கத்தினரின் வருகையை அதிகரிக்க சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்தான். தன்னுடைய தலைக்குப் பொருந்தும்படியாக ஒரு சமையல்கார தொப்பியை தைத்து, மேலங்கியும் கையுறையும் வாங்கி அணிந்து கொண்டு ஜூஸ் போடத் தொடங்கினான். மேலும், மேற்கத்திய பாணியில் உடை அணிந்து வந்தால் அவர்களுக்கு பேப்பர் கப்பில் ஜூஸ் கொடுக்கத் தொடங்கினான். தனியாக ஸ்டூல் போட்டு அவர்களை உட்கார வைத்தான். இதனால் காரில் செல்பவர்களும் இறங்கி இவன் கடைக்கு வந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

தன்னுடைய மகனின் இத்தகைய சமயோசித புத்தியைப் பார்த்து ராஜேஷப்பா நெகிழ்ந்து போனார். அவனுடனான முட்டல் மோதல் போக்கை சற்று தளர்த்திக் கொண்டு வீட்டில் மரியாதையாக அவனை நடத்தத் தொடங்கினார். ஞாயிறுகளில் அவன் வீட்டில் தங்கும்படியாக ருசியாக சமைத்து அவனுக்கு பரிமாற தானே மெனக்கெட்டு கடைக்குச் சென்று கறி வாங்கித் தந்தார். இதனால் ராஜேஷும் அப்பாவுடன் நெருக்கமானதோடு அவர் மீதிருந்த பயத்தை போக்கிக் கொண்டான்.

பயம் குறைந்ததோடு வீட்டிற்கு அவன் தரும் பணமும் குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் தனக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டான்.

“நான் தான் அவனுக்கு எதுவும் வாங்கித் தரலை. அவனாவது வாங்கிச் சந்தோஷமா இருக்கட்டும்” என்று விட்டு விட்டார் அப்பா.

ஒரு நாள், செல்போன் வாங்கி வந்து ஆசையாக அப்பாவிடம் காட்டினான்.

“கடையில சும்மா இருக்கும் போது போர் அடிக்கிது பா. கடைக்க வர்ற பசங்க நிறைய படம் ஏத்திக்கிட்டு வர்றாங்க. நானும் வாங்கிப் பாத்தேன்-ன்னா கொஞ்சம் பொழுது போகும்” என்றான்.

“அதுக்காக பத்தாயிரத்துக்கு செல்போன் வாங்கனுமா?” என்று கேட்க வாய் எடுத்தவர் அப்படியே வார்த்தைகளை அமுக்கி விட்டார்.

அடுத்தபடியாக, “என்னோட ஃப்ரென்ட் ஒருத்தன் புது வண்டி வாங்கப் போறான். அதனால அவன் கிட்ட இருக்குற பழைய பல்சரை விக்கப் போறானாம். நமக்கும் ஐஸ் கட்டி எடுத்து வர, கடைக்குப் போய் வர, தண்ணிக் கொடம் தூக்க எல்லாம் வண்டி தேவைப் படுதுல்ல? இருபதாயிரம் தானாம். வாங்கிக்கவா?” என்று கேட்டான்.

எங்கே வேண்டாம் என்று கூறினால் மறுபடியும் சண்டை ஆரம்பித்து விடுமோ என்று யோசித்தவர்,

“உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை. உங்க அம்மாவுக்கு செக் அப் பண்ணலாம்-னு பாத்தேன். மூணுமாசமா நீ நிறைய செலவு பண்றதால தள்ளிப் போகுது. வெய்யில் போன பிற்பாடு வியாபாரம் டல் அடிக்கும். சரி உன் விருப்பப் படி செய்! நாம வேற ஏதாச்சும் வித்து வைத்தியம் பார்த்துக்கலாம்” என்று சூசகமாகச் சொல்லி விட்டார்.

தான் அப்படிச் சொன்னால் அவன் நிச்சயமாக அம்மாவின் மருத்துவ செலவைத் தான் கவனிப்பான் என்று அவர் நினைத்தது தவறாகப் போய் விட்டது. சந்தோஷமாக வண்டியை வாங்கி வந்து அப்பாவிடம் சாவியைக் கொடுத்து ஓட்டச் சொன்னான்.

“கொஞ்ச நாளைக்கு இருந்த நிம்மதி போயிடும் போல இருக்கே” என்று மனம் கோணத் தொடங்கினார் ராஜேஷப்பா. தன்னுடைய குறையை ரயிலில் போகும் போது மறுபடியும் சேகரிடம் சொல்லி வருத்தப்பட்டார். சேகர் எதுவும் சொல்லவில்லை. தலை ஆட்டிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவனை சந்திக்க ராஜேஷப்பாவிற்கு தெரியாமல் கடைக்கே சென்று விட்டார்.

அவர் ராஜேஷின் கடைக்குச் சென்று மூன்றாமவர் போல ஜூஸ் குடிக்க தன்னுடைய நண்பரோடு நின்றிருந்தார்.

“ஒரு சாத்துக் குடி ஜூஸ். ஒரு லெமன் சோடா” என்று அவனிடம் சொல்ல, ராஜேஷ் போட்டுக் கொடுத்து விட்டு எச்சில் கிளாஸ்களை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் முக்கி எடுத்தான்.

“சாவு கிராக்கிங்க…” என்று திட்டி விட்டு மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான்.

“சோத்துக்கு எவன் கால்ல வேணாலும் உழுவானுங்க..ஒரு சாத்துக்குடி ஜூசுக்கு காசு கொடுக்க வக்கக் காணும்” என்றவன்,

ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக்கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.

வழிந்தது போகத் தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒர் ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.

அந்த நாயின் முதுகில் பலமாக ஓர் எத்து விட்டான் ராஜேஷ். அது, ‘கை…கை…கை…” என்று கத்திக் கொண்டே பூக்கட்டும் அம்மாவின் பக்கமாக சென்று முனகியது.

“அட ஏம்பா! இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம்?” என்று பேச்சுக் கொடுத்தார் சேகர்.

“பின்ன என்னங்க? இந்த நாய்க்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?”

“எவங்களுக்கும்?”

“உங்களுக்கு முன்னாடி ஜூஸ் குடிச்சிட்டு கடன் வெச்சிட்டு போனானுங்களே! அவங்க தான். மூஞ்சியும் கண்ணாடியும் அவனும். ஒரு கிழிஞ்ச பேனரை இலவசமா கை நீட்டி அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கு பாருங்க. ஒவ்வொரு முறையும் வந்து ஜூஸ் குடிச்சிட்டு போறானுங்க. காசு கேட்டா அப்புறம் தர்றேன்”

“அவன் அரசியல்வாதி. அதிகாரத்தை இப்படிப் பட்ட அற்ப காரியங்களுக்குப் பயன்படுத்துறான். நீ நல்லவன் தானே? அம்மாவோட சிகிச்சைக்குப் பணம் கொடுத்தியா?”

ராஜேஷிற்கு தூக்கிவாரிப் போட்டது. இவர் அப்பாவிற்கு தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். தலை குனிந்து நின்றான்.

“நீங்க யாருங்க சார்?”

“நான் யாருங்குறது இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே? கொஞ்சம் யோசிச்சு சொல்லு?”

“ஜூஸ் போட்டுக் கொடுத்தேன்”

“திட்டிகிட்டு இருக்கும் போது என்ன செஞ்சே?”

“க்ளாஸ் கழுவி வெச்சேன்”

“எப்படிக் கழுவுனே?” ராஜேஷ் யோசித்தான்.

“முதல்-ல ஒரு பாத்திரத்தில் க்ளாசை முக்கிக் கழுவிட்டு, அதன் மேல நல்ல தண்ணீர் ஊத்தி கழுவும் போது, ஒரு குவளை நீரையே அத்தனைக்கும் பயன்படுத்தலாம்-னு உனக்கு சொல்லிக் கொடுத்தது யாரு?

சேமிப்பு நம்ம நாட்டு மக்களுடைய ரத்தத்துல ஊறின விஷயம். அது அவர்களுடைய எல்லாச் செய்கைகளிலும் இருக்குது. ஒரு கதை கேள்விப் பட்டிருப்பியே! மூணு பெண்களைச் சேத்துல நடக்கச் சொன்னாங்க. ஒரு குவளை நீர் கொண்டு யார் அந்தச் சேற்றை முழுமையா கழுவுறா-ன்னு பார்த்தாங்க-ன்னு. அந்தச் சேமிப்புப் பழக்கம் பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களுக்கும் வேணும்.

“சட்டை வாங்குறது, பைக் வாங்குறதெல்லாம் தப்பா? எல்லாரும் தான் செய்றாங்க”

“தப்பில்லை. உன் அம்மாவோட உடம்பைக் காட்டிலும் அது முக்கியம்-னு நீ நினைக்கிறது தான் தப்பு. நான் அதிகம் பேச விரும்பலை. இந்தா புடி..”, முப்பத்தி ஐந்து ரூபாயை சில்லரையாக நீட்டிய சேகர் வணக்கம் சொல்லி விட்டுச் சென்றார்.

ராஜேஷ் அவர் போகும் திசையையேப் பார்த்துக் கொண்டு நின்றான். மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்கிற அவனுடைய தள்ளுவண்டியின் பெயரை உடனடியாக மாற்றவேண்டும் போல இருந்தது அவனுக்கு. ரஜினியின் போட்டோவை கிழித்துவிட்டு அப்பாவின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்படியே இன்னும் மூன்று நாட்களுக்குத் தோன்றுகிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டவனாக அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டான்.

கண்ணன் ராமசாமி

writer.kannan@gmail.com

முத்தமிடும் ஸ்மைலிகள்

 – ரமேஷ் ரக்சன்

[spider_facebook id=”1″]

“என்னை மாதிரி ஒரு சோம்பேறி இந்த உலகத்துலேயே கிடையாது” என்று நீ சொன்னதும், “செக்ஸ்ல கூடவா?” என்று எள்ளலாக நான் கேட்டிருக்கக் கூடாது.

மைதிலிக்கு, எப்போதிருந்து தன் புன்னகை பிடிக்காமல் போனது என்று தெரிந்து கொண்ட தேதியை எதன் பொருட்டும் எண்ணத்திலிருந்து மழுங்கடிக்கச் செய்ய முடியவில்லை. தாமதமானதற்குக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தான். சென்னை சிட்டிக்குள் ஆக்சிலரேட்டரை முன்னும் பின்னுமாக திருகித் திருகி வலித்துப் போன மணிக்கட்டை இடது கையால் பிடித்துக் கொண்டு விரல்கள் மூடியபடி இட வலமாக வட்டம் போட்டுக் கொண்டேதான் காபி கடைக்குள் நுழைந்தான். ஒரு மாலில் இருக்கும் காபிக்கடை அல்லது “காஃபி டே”. உர்ர்ர்ர்ர் என்று இருப்பவளைச் சமாதானம் செய்பவனாய் உள்ளங்கைக்குள் சுற்றியிருந்த கைக்குட்டையை அவிழ்த்து, இந்த நிறம் வேண்டாமென்று அவள் மறுத்த ஹெல்மெட்டிற்குள் கைக் குட்டையை வைத்துவிட்டு, உதட்டுக் குவியல் போலத் தன் ஐ விரல்களைக் குவித்து அவளின் சுண்டுவிரலைப் பற்றி, எழுப்பிவிட்ட பிறகும் தூங்கியதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு.

“ஷர்ட் கூட நான் சொன்னத போடல” மைதிலி பார்த்துக் கொண்டிருந்த திசையில் இருந்த காதல் ஜோடி அவள் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு தன் கண்களுக்குள் கோபத்தை சுழல விட்டிருந்தாள். அவன் முகபாவனை கெஞ்சல் தொனியில் இருக்கிறதா, கொஞ்சல் தொனியில் இருக்கிறதா என்று தற்செயலாய் திரும்புவது போல முகத்தைப் பார்க்கும்போது, “எதுக்கு இப்படிச்சொன்ன? வா ப்ரூப் பண்றேன்” மைதிலி வாங்கிக் கொடுத்த மூன்று கீ செயின்களுக்கு நடுவே தொங்கும் சாவியை எடுத்தான் பிரபு. மூடியபடி இருந்த கையை எடுக்கவிடாமல் அவன் மொளி அழுந்த மேசையோடு அழுத்திப் பிடித்தாள் மைதிலி.

கிஃப்ட் ரேப்பர்களில் விருப்பம் இல்லாதவன் பிரபு. பெரு விரல்களின் அழுத்தத்தில் இருந்து ஒவ்வொரு பேப்பராக விடுவித்தாள். வெற்று டைரி என்று உறுதி செய்தவள், “இத என்னனுடா புரிஞ்சிக்கிறது” என்று பேசியபடியே பெயராவது எழுதியிருக்கிறானா? மனதிற்குள் முணுமுணுத்தபடியே முதல் பக்கத்திலிருந்து  புரட்டியவள் பொறி தட்டியவளாய் தன் பிறந்தநாள் பக்கத்தை வேகமாகப் புரட்டினாள். அந்தப் பேப்பர் மட்டும் விடுபட்டிருந்தது.

“ஐடியாமணி யாரு என்றாள்… சாரி சாரி இனி பேச மாட்டேன்” என்று மழலைப் புன்னகையில் அவனை வென்றுவிட்டிருந்தாள். அப்படித்தான் நினைத்திருந்தாள்.

நாம் சந்தித்துக் கொள்ளும் சொச்ச நேரத்தில் அப்பா அம்மா எப்படி இருக்காங்க? அம்மா கிட்ட பேசினியா? என்ற கேள்வி கூடக் கேட்கக்கூடாது என்ற கண்டிசன் இருந்தது மைதிலிக்கும் பிரபுவிற்கும் நடுவில். மெளனம்கூட இருக்குமே தவிர வேறு யாரைப் பற்றியும் பேசிவிடக்கூடாது என்று தீர்மானமாய் அவளையும் வைத்திருந்தான். மைதிலியை வந்தடைந்ததும் அலைபேசியை ஃப்ளைட் மோடில் போட்டுவிடுவான். அவளுக்கு வரும் அழைப்பைக் கூட, தன் பார்வையாலையே எடுக்கவிடாமல் செய்துவிடுவான். வீட்டிலிருந்து என்றால் “அப்றமா பேசுறேன்”.

 மெனு கார்டை மைதிலி பக்கம் பிரபு திருப்பிய விதத்தில் விளையாட்டாகச் சொன்னது விபரீதமாகிப் போனதை நினைத்து உள்ளுக்குள் நொந்து கொண்டாள். மன்னிப்புக் கேட்டால் இன்னும் பெரிதாக ஊதிவிடுவான் என்பது மைதிலிக்கு ஒன்றும் தெரியாதது இல்லை. “கிஸ் மீ” என்று மைதிலி தான் கேட்டிருக்கிறாள். கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவுக்கு தன் காதலை, தேவையை, அன்பை வெளிப்படுத்தத் தெரியாவன் என்பதை, ஐந்துவருடக் காதலில், முதல் ஆறு மாதத்திலேயே புரிந்து கொண்டாள்.

பிரபுவைப் பழக்குதல், மைதிலிக்குக் கொஞ்சம் சிரமான காரியமாகப்பட்டது. தன்னைச் சோதிக்கவிட அனுமதிக்காத அளவிற்கு அவனுக்கு ஏற்ப பழகிக் கொண்டாள். பின் அதுவே அன்றாடமாகிவிட்டது.

மைதிலி தன் கைகளில் அடுக்கியிருந்த வளையல்களில் ஒன்றைக் கழற்றி அவன் முன் சுழலவிட்டாள். அவன் தேர்வு செய்த சிகப்பு நிறத்திற்கு, சிகப்பு நிறத்திற்குள்ளே வேறு ஒரு பெயர் இருந்தது. நிறம் பிரபுவின் தேர்வு. சுடிதாரும், சுடிதாருக்கு ஏற்றச் சிகப்பு நிற வளையலும். எதிலும் கவனம் செலுத்தாதவனாய் காட்டிக் கொண்டான். காபி நிறமும், மஞ்சள் நிற விளக்குகளும் அடர்த்தியாய் நிறைந்த அந்தக் கண்ணாடி அறையில் சிகப்பு நிறம் எடுபடாமல் போயிருந்தது.

தன் முதுகை நிமிர்த்தி “டேய்” என்று அதட்டிப் பார்த்தாள். “ஷோல்டர் பின் ரிமூவ் பண்ணிட்டு ஷால ரெண்டு பக்கமும் போடு” என்று சிரிக்க முயன்று தோற்றான் பிரபு. மைதிலி விரும்பி உண்ணும் சூடான கேக்கும், கூடவே நுரையில் வரைந்த இதயம் தாங்கிய காபி கோப்பையையும், மேஜையில் வைக்கும் ஓசை கேட்காது வைத்துச் சென்றான் ஒருவன். பிரபுவைப் போலவே மைதிலிக்கும் காபியின் கசப்பு பிடிக்கும். மணி பார்க்கத் தோன்றிய எண்ணத்தை தவிர்த்துக் கொண்டான் பிரபு.

இதயங்களால் நிறைந்த கண்ணாடிக்கதவை பிரபு திறந்து வரும்போது இரு கைநீட்டி கட்டிப்பிடித்து, எதிர் எதிரே அமர்ந்து கொள்வது போன்ற பிம்பம் காபியின் கசப்போடு தொண்டையில் உருண்டு உருண்டு இறங்கிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளாலும் கோப்பையை ஏந்தி காபி குடித்துக் கொண்டிருந்தாள். கைக் கடிகாரத்தைப் பார்ப்பதை கவனித்தவள, தன் அண்ணனின் ஆன்லைன் ஆர்டர் மூலம் வந்த சர்ப்பரைஸ் கிஃப்ட் என்றாள்.

“உங்க அண்ணிக்கு பயந்தா ஆன்லைன் ஆர்டர்”?

பிரபுவின் காபி ஆறிக்கொண்டிருந்தது.

இரு உதடுகளையும் உள் பக்கமாய் மடித்து கசப்பின் மிச்சச் சுவையையும் விட்டுவைக்காமல் சுவைத்துவிட்டு, தான் கொண்டுவந்திருந்த பர்சில் இருந்து பிரபு வாங்கிக்கொடுத்த வாட்சைக் கொடுத்து மைதிலி கை நீட்டினாள். கழிப்பறை செல்வதாய் எழுந்து சென்றான் பிரபு. பிறந்த நாள் வாழ்த்தாகத்தான் இருக்கும். எதற்கும் மெசேஜ் யாருடையது என எடுத்துப்பார்க்கத் தயங்கியபடி ஒருமுறை திரும்பிப்பார்த்தாள். கண்ணுக்கெட்டும் தூரம்வரை பிரபு இல்லை.

“ஹெல்மெட்ட சீட்டுக்கு கீழ வச்சிக்க சாயங்காலம் ரூம் கிட்ட வந்து வாங்கிக்கிறேன். என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. கிளம்பிட்டேன்”

மைதிலி ஃபோன் பேசும்போது சத்தமாக சிரிப்பதை தவிர்த்திருந்தாள். பிரபு, மைதிலி பிறந்த நாளில் எழுந்து சென்ற அன்றிலிருந்து, அடுத்த சந்திப்பு நிகழுவதற்காகப் பேசிச் சிரித்த இரவில் தான், எரிச்சல் அடைவதை உணர்ந்தாள் மைதிலி. அந்த மெளனத்தை அனுமதித்தாள். மொபைல் ஹோம் ஸ்க்ரீனை, அழைப்பைத் துண்டிக்காமல் இடவலமாய் மூன்று பக்கங்களையும் மாற்றிக் கொண்டிருந்தாள். ஷேர் இட் ஆப் மூலம் பிரபு இன்ஸ்டால் செய்து கொடுத்த டெலிகிராமில் தான் காண்டக்ட் லிஸ்டில் டெலிகிராமில் இருப்பவர்களை ப்ளாக் செய்தது போக பிரபுவும் மைதிலியும் மட்டுமே.

“கட் பண்ணவும் முடியாம பேசவும் முடியாம, எதுக்குடா இந்த பைத்தியக்காரண காதலிச்சோம்னு யோசிச்சிட்டு இருக்கியா?”

“நீ செல்லப்பேர சொல்லிக் கூப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சுன்னு தெரியுமா உனக்கு”

-விசும்பல்

மைதிலியின் தோழியிடம் “ஹெல்மெட்டை கொடுத்துவிடு” என்றனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, எதுவாக இருந்தாலும் மைதிலிக்கு அழைத்துதான் பேசியிருக்கிறானே தவிர அவளோடு மெசேஜில் உரையாட அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு விதத்தில் மைதிலியின் குரல் பிரபுவிற்குத் தேவையாக இருந்தது. வலியைக் கடத்துவதாக இருந்தாலும் தேவையாய் இருந்தது அவனுக்கு. இது தான் பிரபு பழகியது. மைதிலியின் குரல் அவளின் உச்சக்கட்ட கோபமாகவோ, மனுசனா நீ எனும் வெறுப்பாகவோ, விசும்பலாகவோ தேவை.

-அது ஒரு அடிக்சன். எஸ் ஐயம் இன்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட பின் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வான். எஸ் ஐ நீட் இட். பலி கொடுக்குற ஆட்டோட இரத்தத்தைச் சாமியாடி குடிக்கிற மாதிரி. விரும்பியோ விரும்பாமலோ. பிரபுவிற்கு அவனது குரல் அவனைப் புதிதாக அறிமுகப்படுத்திய இரவில் தான் மைதிலியையும் கொன்றுவிட்டு தானும் செத்துப்போய் விடலாமா என்று யோசித்தான். Mad on You என்று குறுஞ்செய்தி அனுப்பினான் பிரபு. கூடவே ஒரு இதயம், முத்தமிடும் ஸ்மைலி.

என்றுமில்லாத விசித்திர பயம் மைதிலியை தொற்றிக் கொண்டது. காதலின் தொடக்கத்தில் அனுப்பிய நோக்கியா போன் குறுஞ்செய்திகளை எக்செலில் கன்வெர்ட் செய்து வைத்திருந்த மொத்த மெசேஜில் பிரபுவின் அன்பை பைத்தியக்காரத் தனத்தை, ஒப்புக்கொடுக்க முன் வந்ததை, மன்னிப்பு கேட்டிருக்கும் விதத்தை, ஒரு முத்தத்தை அடைய விரும்பிய விதத்தை, இனிய இரவு சொல்லி தோற்று, நீண்து கொண்டே போன தொடர் செய்திகளை, நூறு மெசேஜ் கணக்கிற்காக 160 எழுத்துக்களையும் ஒரு மெசேஜில் அடக்க முனைந்திருக்கும் பேராசை, பேச்சை நீட்டிக்க வேண்டுமென்ற தவிப்பு, அவளுக்கான வர்ணங்களை அப்படியான குறுஞ்செய்திகளை பில்டர் செய்து பிரபுவிற்கு மெயில் அனுப்பி வைத்தாள்.

Send this message without a subject or text in the body?

மைதிலிக்குள் கேட்டுக்கொண்டிருந்த குரல், அவள் அனுமதிக்காக எல்லாம் காத்திருக்கவில்லை. அந்தக் குரலை தடுப்பதற்காக வாய்விட்டு எதை எதையோ பேசிப்பார்த்தாள். பாட்டுப்பாடிப் பார்த்தாள். அந்தக் குரல் தான் வென்றது.

“எனக்கு தெரிஞ்சி இந்த 5 வருசத்துல நம்ம பண்ணினது, நம்மனு எப்படி முடிவுக்கு வரத்து? நான் பண்ணின ரெண்டே தப்பு. உன்ன, நம்மோட காதல மீட்டெடுக்கத்தான் இந்த மெசேஜ் எல்லாம் எடுத்து படிச்சேன். உன்மேல இருக்கிற தீவிரம் குறைஞ்சிட்டதா தான் தோணுது. சம்பிரதாயம். ஏதோ ஒரு பாண்டிங். கண்ணுக்குத்தெரியாத ஒரு செயின். செயின்னு எப்டி சொல்றது? விலங்கு. விலங்குனு உணர வச்சது நீயா நானா?”

“என்னோட காதல் குருட்டுத்தனமான காதல்னு நீ அடையாளம் காட்டினதுல இருந்து தான் வீரியம் கம்மியாகிடுச்சி. இல்லனா அந்த நிமிசமே முடிஞ்சிருச்சி. யார் தப்பு?”

தன்னை ஒரு சர்கஸ் கோமாளி போன்று உணர்ந்தாள் மைதிலி.

உள்ளங்கை வியர்வை, பிசுபிசுப்பு என்கின்ற மனநிலையை எட்டியும் கூட கோர்த்த கைகளை விடாது நடந்துகொண்டே இருந்தார்கள் மைதிலியும் பிரபுவும். விவேகானந்தர் இல்லத்திற்கும் கண்ணகி சிலைக்குமான இடைவெளியை திரும்பிச் செல்வதற்கு ஆட்டோ தேவையாய் இருந்தது இருவருக்கும். இருவருமே விரும்பி உடுத்திக்கொண்ட மெளனம்.

ஆட்டோவில் வைத்துதான் பிரபு பேசினான். பைக் சாவியில் கிடந்த மூன்று கீ செயின், அது வாங்கிக் கொடுத்த காரணம், அப்போதைய பேச்சுக்கள், சந்திப்பு நிகழ்ந்த இடங்கள், மங்கலாகத் தெரியும் ஒரு முதியவரின் பார்வை போல நினைவூட்டிக் கொண்டிருந்தான். தன் பைக் சாவியையும் கையில் கொடுத்தாள் மைதிலி. ஐந்து சம்பவங்கள். ஐந்து கதைகள். பிரபுவின் கால் பெருவிலைப் பார்த்தாள். ஆட்டோ டிரைவர் இருக்கைக்குப் பின் கால் தூக்கி வைத்திருந்தான் பிரபு.

தன் பிடியிலிருந்து பிரபு தளர்வை உணர்ந்தாள் மைதிலி. தனக்கு யாருமே இல்லாத உணர்வு மேலோங்குவதை உணர்ந்தவளாய், ஆடுதொடையை அழுந்தப்பிடித்து நான் உன் கூடத்தான் இருக்கிறேன் என்பது போன்ற செய்தியை, செயலில் கடத்த முயன்றாள் மைதிலி. இருவருக்குமே குரல் தேவையற்று இருந்தது. உடல் துடித்து, மழைக்கால புழுக்கம் போல மைதிலிக்கு நசநசத்தது. ஆடைகளை கிழித்தெறிய வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“இரு நானே கொடுக்கிறேன்” என்று பிடிவாதமாய் மீட்டரை கட் செய்தாள் மைதிலி. பைக் இருக்கைக்குக் கீழ் இருந்த பர்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுக்கும்வரை ஆட்டோக்காரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பிரபுவும் தான்.

கட்டிவிடாமல் விட்டுச்சென்ற வாட்சை எடுத்து மீண்டும் கையை நீட்டினாள் மைதிலி. பூனைக்குட்டியை வருடிக் கொடுப்பதைப்போல மென் அழுத்தத்தில் அவள் கைப்பற்றி கைக்கடிகாரத்தை கட்டிவிட்டான் பிரபு.

“வண்டலூர்ல அந்த சிங்கத்த பார்த்து நீ சொன்னது ஞாபகம் இருக்கா?” மைதிலியைப் பார்த்து கேட்டான். இருவர் சார்பாகவும் சிரித்து வைத்தாள். அதில் ஒரு பைத்தியக்காரத் தனம் வெளிப்பட்டிருக்கும் என்று மைதிலி நம்பினாள். மைதிலி கேட்டுக் கொண்டதன்படி, பிரபு கிளம்பிச் சென்றான். சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் அறை நோக்கி நகர்ந்தாள்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே”

பிரபுவின் குரலில் இந்த ஒருவரி மட்டும் ரிப்பீட் மோடில் அறைக்கு வரும்வரை கண்ணீராகவும், ஸ்பீடா மீட்டரில் ஏறி இறங்கும் வேகத்தின் முள்ளாகவும், ஒரு விபத்திற்காக ஏங்கித் தோற்றிருந்தது.

பிரபு அடியோடு வெறுத்த வாட்சப்பில், “இனிமேல் நாம பேசிக்கவோ பாத்துக்கவோ வேண்டாம் பிரபு. டேக் கேர்.” என்று அனுப்பிவிட்டு அறையில் இருந்த ஷிவானியை கண்கள் பொங்கிநிற்க, புன்னகைத்தாள்.

காதலிக்கான தயக்கத்தோடு, இருட்டில் ஷிவானி கை நீட்ட, “நீ ரெண்டு வருசமா ஆசைப்பட்ட மைதிலி” என்று மெத்தையில் அமர்ந்திருந்த ஷிவானியின் முன் சற்று உடல் மடித்து அணைக்கையில் ஷிவானி உதட்டில் தட்டுப்படுவது ஏதுவென புரியாமலில்லை.

விசும்பல்…

 – ரமேஷ் ரக்சன்