பேன்ஸ்பெர்மியா

 

இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்வதுதான் பேன்ஸ்பெர்மியாவின் கோட்பாடு.

சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் எண்ணற்ற விண்கற்கள் தாக்குதல்கள் நடைபெற்றன என்றும், அதில் ஒரு விண்கல்லில் இருந்த பாக்டீரியா வளர்ந்து அதன் தொடர்ச்சியாக உயிரினங்கள் உருவாகத்தொடங்கின என்றும் இது சொல்கிறது. எங்கிருந்து வந்திருக்கும் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  15 மில்லியன் வருடங்களுக்கு முன் செவ்வாயில் இருந்து சிதறிய விண்கல் 1984 யில் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Allan Hills 84001 (ALH84001)   என்று பெயர் சூட்டி அதனை ஆராய்ந்ததில் அதில் நுண்ணியிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் செவ்வாயில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராயப்போவதாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.

செவ்வாயில் முன்பு நீர் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வியாழனின் அருகில் உள்ள யூரோப்பா என்ற நிலவில் கீழுலகக் கடல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நீர் மட்டுமே ஒரு உயிர் உருவாகக் காரணமில்லை. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கார்பனோடு தொடர்புடையவை. விண்கற்களில் சோதனையிடுபோது அதில் கூட்டுப் பொருட்களில் உள்ள கார்பன் மற்றும் அமினோ அமிலங்கள் ( புரோட்டின் அடுக்குகளை உருவாக்கும் ) இருப்பது தெரியவந்தது.  இந்தப் புரோடீன்களே உயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவை .

சில பாக்டீரியாக்கள் + 115 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திலும் சில நுண்ணுயிரிகள் – 18 டிகிரி செண்டிகிரேடு வெப்ப நிலையிலும் வளர்வதைப் பார்க்கும்போது, நுண்ணயிரிகள் எந்தச் சூழலிலும் வாழும் திறன் கொண்டவை என்று தெரிய வருகிறது.

எங்கும் பரவி உள்ள பாக்டீரியாக்கள் பூமியில் வாழ்வதைப் போல விண்வெளியில் உயிர் வாழ முடியுமா என்றும் ஆராய்ச்சி செய்தது ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். களிமண், செம்மணற்பாறை, வடிவமைக்கப்பட்ட விண்கல் ஒன்றில் ஒரு குவியல் போல செய்து பூமிக்கு வெளியே உள்ள ஒரு வெளியில் விண்கோள் மூலம் கொண்டு வந்து வைத்தனர். இரண்டு வாரங்கள் கழித்து சோதனை இடுகையில் செம்மணற்பாறையில் கலந்த பாக்டீரியாக்கள் தொடர்ந்து உயிரோடு இருப்பது தெரிய வந்தது. Extraterrestrial solar UV radiation    பாதுகாப்பு செய்யப்பட்டால் பாக்டீரியாக்கள் ஆறு வருடங்கள் கூட வெளியில்(SPACE ) வாழும் என்றும் ஆராய்ச்சி தெரிவித்தது.

பேன்ஸ்பெர்மியா தியரியில் வெளியில் இருந்து உயிரின் விதை பூமிக்கு வந்தது என்று சொல்லப்படுகிறதே ஒழிய அது எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தற்போதைய சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே உயிர் வாழும் சூழல் கொண்ட இடம் என்று சொன்னாலும் முழுக்க ஆராயாமல் சொல்ல முடியாதல்லவா? உலகெங்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்ப்போம் அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதன் வேறு கிரகத்தில் வாழும் சூழல் அமைக்கிறானா என்று?

 

சாத்தப்பன் நா

 

 

சென்னையின் நிலையும் சீனத்து விலையும்

ஜீவ.கரிகாலன்

 

முதல் தகவல் :

ஒரு இணைய இதழில் வந்த செய்தி – உலகில் உள்ள நாடுகளில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான் என்றும், இந்தியாவில் நகரமயமாக்கலில் முதல் இடத்தில் இருப்பது நம் சென்னை தான். நம் நாட்டில் 30௦% மக்கட் தொகை வசிக்கும் மக்கட்தொகை 2030க்குள் நாற்பது சதவீதம் அளவிற்கு போய்விடும் என்றும் , சென்னையிலோ மக்கட் தொகை தமிழகத்தின் தமிழகத்தின் தற்போதைய மக்கட்தொகையில் 53% இருக்கிறது என்றும், அதுவும் கூட 2030இல் 67 % ஆகிவிடும் – என்ற செய்தி உள்ளது.

இரண்டாம் தகவல்: CNN money – “Beware of China’s Epic Property Bubble ” எனும் கட்டுரை சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வீழ்ச்சியைப் பற்றிய தகவல்களை எச்சரிக்கையாக அளித்துள்ளது. இதில் “சீனாவில் அசுர வளர்ச்சி அடைந்த கட்டுமானம், அசையா சொத்துகள் , ரியல் எஸ்டேட் , ஹவுசிங் என எல்லாத் துறைகளிலும் பெருத்த சரிவு ஒன்று வரும் என்று எதிர்பார்ப்பதா

ல் சீனாவை அடிப்படையாய் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று சொல்கிறது.

மேலே சொன்ன இரு தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறதா ?? தொடர்ந்து படியுங்கள்

*****

மூன்றாம் தகவல்: தேசியக் குற்றப் பதிவேடுகளில் இருந்து ஒரு புள்ளிவிவரம் கடுமையான அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அது என்னவென்றால், தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை தான், இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்று தமிழகத்தில் தான் நடப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. அதில் பெரும்பான்மையான தற்கொலைகள் வறுமையின் காரணமாய் நிகழ்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.தமிழகத்தில் அதிகமாக தற்

கொலைகள் நிகழும் இடம் கூட சென்னையே என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

ஒருபக்கம் விவசாயிகள் தற்கொலை, தினக்கூலிகள் தற்கொலை என்று கிராமங்களில் இருக்க மற்றொரு புறம் நகரத்தின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு, சிக்கனமாய் எளிய வாழ்க்கை நடத்தினாலும் நிம்மதியாய் வாழ முடியாமல் தினம் தினமும் செத்துப் பிழைக்கும் எதோ ஒரு நடுத்தரக் குடும்பம் பற்றிய செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. அவற்றின் சோகச் சித்திரங்கள் நம் நகரத்தின் வரலாற்றில் அழிக்க முடியாதது.

தற்கொலை நிகழ்வதற்கு முன்னர் ஒரு மனிதன் வாழ்வின் தன் வாழ்வில் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுகிறான், அவனது கனவுகள் , நம்பிக்கை, ஆசைகள் ஆகியன எல்லாம் அவனை விட்டு வெளி சென்று மடிந்த பின்னர் தான், அவனும் தற்கொலைக்கு முயல்கிறான். இந்தப் புள்ளிவிவரம் சொல்லிய விஷயத்தை கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் புலப்படும் பொருளாதாரத்தில்

பின் தங்கியிருக்கும் பீகார்,ஒரிசா போன்ற சில வட கிழக்கு மாநிலங்களைக் காட்டிலும் சென்னையில் தற்கொலை எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன காரணமாக இருக்கும்??

நகரமயமாதல் (நரகமயமாதல் )

வேகமாக மாறி வரும் கலாசாரத் தேவைகளுக்கும்,கல்வித் தேவைகளும், கிராமப் புறங்களில் அழிந்து வரும் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களும் நகரமயமாதலை நியாயப் படுத்துகின்றன. ஏன் ?? ஒரு நல்ல விவசாயக் குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் கூட தன் கல்வியைக் காரணம் காட்டி விவசாயத்தை புறக்கணித்துவிட்டு நகரம் நோக்கி தான் பயணிக்கிறான். ஆனால்  அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகத் தான் நகரத்தில் அவனுக்குத் துயரங்கள் நேர்கிறது. நகரத்தின் செலவீனங்களை அடக்கத் தெரியாமல், அவசியத்திற்கு அப்பாற்பட்ட செல்போன், டிவி, ஃ பிரிட்ஜ், ஏ.சீஎன எல்லாமும் அவனுக்கு தேவைப் படுகின்றன.

ஆனால் நகரத்தில் மத்திய தர வர்க்கம் இன்று படும் இன்னல்களில் முதன்மையானது அவர்களுக்கான இருப்பிடம். ஒரு நபர் வருமானத்தில் சாதாரணமாக 50 %வரை குடியிருப்பதற்கான வாடகையாக ஒரு நடுத்தர வர்க்க மனிதன் கொடுக்கிறான். கல்வியிலிருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள் வரை நமக்கு செயற்கையாக, ஆடம்பரமாக நம்மை ஆட்டுவித்து செலவுகளுக்கு ஈடு செய்ய முடியாமல் ஒவ்வொரு மாதமும் இது தவிக்கும் தொடர்கதையாகச் செல்கிறது.

இதில் இப்பொழுது, வாடகை வீட்டில் வசிப்போர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் . ஒரு மனிதனுக்கு குடியிருப்பதற்கான இடம் என்பது ஒரு அடிப்படை உரிமை ஆகும், உலக சுகாதார அமைப்பு இதற்கான குறைந்தபட்ச தரத்தை நிர்ணயித்துள்ளது, அதில் பிரதிநிதி நாடுகள் (இந்தியா உட்பட ) கையெழுத்திட்டன. ஐ.நாவின் சட்டங்களில் ஆர்டிகிள் 25 விவரிக்கும் அடிப்படை மனித உரிமையில் வரும் Minimum space for Dwelling , “ஒரு மனிதன் வசிப்பதற்கு குறைந்தபட்ச இடமாக முன்னூற்றைம்பது சதுர அடிகளாவது (350 sq feet ) இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே போல சுகாதர்ரம், குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் எல்லோருக்கும் அடிப்படை உரிமை என்றும் சொல்லியுள்ளது. இந்த ஊரில்(சென்னையில் ) வாடகைக்கு இருப்போரின் நிலைமையைப் பாருங்கள் எட்டுக்கு பத்து அடிகொண்ட ஒரே ஒரு ரூமில் ஒரு

குடித்தனத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் (குறைந்தபட்சம்) கொடுக்க வேண்டிய கொடுமை , இதில் பல குடித்தனங்களுக்கிடையே பங்கிடப்படும் மின்சாரம் , தண்ணீர் என்று 200 -இலிருந்து 500 வரை வாங்கிக் கொண்டு , எல்லாவற்றிற்கும் மேல் மின்சாரத்திற்கு என இப்பொழுது ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் வாங்குகிறார்கள்.

மின்சாரம் திருடுவது குற்றம் என்று சொல்லும் நம் அரசாங்கங்கள், இதுபோன்ற மின்சாரக் கொள்ளையினை கண்டு கொள்ளாதது ஏனோ ? சட்டம் இருப்பதை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை(Sections 142 and 146 of the Electricity Act 2003, இதன் படி மின்சாரக் கட்டணம் அதிகம் வசூலிப்பவர்களிடம் ஒரு லட்சம் அபராதமும் மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும்). ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு வீட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடும் தைரியமும் , நேரமும் , வசதியும் இருக்கின்றது ?? எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தோ அல்லது தற்பொழுது குடியிருக்கும் வீட்டை விட தொலைவிலோ அல்லது வசதிக் குறைந்த வீட்டிற்கோ இடம் பெயருகின்றனர்.

சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்காத , அன்பு வைக்காத மனிதர்கள் வாழும் பணத்தை மட்டுமே அளவுகோலாய் கொண்ட சமூகம், இந்த நகரத்தை நாம் வாழத் தகுதியற்றதாக்கி விடுகிறது.. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஒரு தலையங்கம் , “கட்டிற்கடங்காத உயரத்தில் செல்லும் தொழில் முன்னேற்றமும் , நகரமயமாதலும் , சுற்றுப் புற சீர்கேடும் சமீபத்தில் வாழும் தகுதியை இழந்துக் கொண்டிருக்கும் பெங்களூரு” என்று ‘பசுமை நகரத்தையே’ சாடியது. இன்று பெங்களூரில் முன்பு போல மிதமான தட்ப வெப்ப நிலை இருப்பதில்லை, கணக்கிலடங்கா வாகனக் கூட்டம் கார்டன் நகரத்தை, கார்பன் நகரம் ஆக்கிவிட்டது.

பொருளாதரத்தில், வணிகத்தில் , அறிவியலில் ஒரு விதி ஒன்று இருக்கிறது அதற்குப் பெயர் “லைஃப் சைக்கிள்”. எந்த ஒரு ஏற்றத்தையும் தொடர்ந்து ஒரு இறக்கமும் வரும் எனபதுதான் அது, அதுவே கட்டுக்கடங்காத ஏற்றம் உள்ள சந்தையில், சரிவும் மிகப் பெரியதாகவே இருக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் நடந்துக் கொண்டிருக்கும் அபார்ட்மென்ட் புரட்சி மிகவும் அசுர வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கிறது, அதுவும் மெட்ரோ ரயில் திட்டம் போன்ற உயர்வசதி உள்கட்டமைப்புகள் எல்லாம் நகரத்தில் உள்ள நடுத்தர மற்றும் பாமர மக்களை வெகுவாக பாதித்து நகரத்தில் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது, வங்கியில் கடன் பெற்று வாங்கும் அதிக மதிப்புடைய அப்பார்ட்மென்ட்டுகள் கடனை கட்ட முடியாத சூழ்நிலைக்கு பலர் தள்ளப் படுகின்றனர்.

நகரவாழ்க்கை தாக்குபிடிக்காமல் கிராமங்களுக்குத் திரும்ப அவர்களுக்கு விவசாயம் செய்யும் சூழ்நிலையும் இல்லை, ஏன் விவசாய நிலங்களும் பிளாட்களாக ஆரம்பித்துவிட்டன.எங்கும் நகர முடியாத சூழ்நிலைக் கைதி தன் வாழ்வை முடித்துக் கொள்ள யத்தனிக்கிறான். சமூகத்தின் ஒரு நடுத்தர வர்க்கம் முழுதமாக பாதிக்கப் படும் பொழுது, அந்தப் பாவம் நகரத்தின் அடுக்குமாடிகளையும் குறிவைக்கும்.

******

சீனாவிலுள்ள காலியாக இருக்கும் ஒரு வணிக வளாகம்: விக்கிபீடியா

2 . உலகப் பொருளாதரத்தில் அசுர வேகத்தில் முன்னேறிய மாபெரும் சக்தி என வரலாறு படைத்த சீனா, தன்னை கம்யுனிச நாடாக அரிதாரம் பூசிக் கொண்டாலும், அது ஒரு உலகமயமாக்களில் உருவான மாபெரும் வணிகப் பிரதேசமாய்,

தன் நாட்டிற்குள் அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அமெரிக்காவின் நுகர்வு சந்தைக்கான உற்பத்தியும்,அவர்கள் நுகர்விற்கு மூலாதாரமான சேமிப்பும் சீனாவிடம் இருந்தே பெருமளவு பெறப்பட்டன, அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் போதே சீனாவும் ஆட ஆரம்பித்தது. ஆனால் உலக அரங்கில் அதன்உற்பத்தியை மேற்கோளிட்டு தன் விற்பனை குறைந்து வருவதை சிவப்புத் துணிக்குள் மறைத்து வைத்திருந்தது.

ஆனால் இன்றோ கட்டுமானத் துறையில் உயர்-விலை – வருமானம் விகிதமும் (high price -income ratio), விலை – வாடகை விகிதமும்(price – rental ratio) கட்டுக்கடங்காத உயரத்தில் சென்று ஆறு கோடியே நாற்பது லட்சம் அபார்ட்மேன்டுகள் காலியாக உள்ளன.இது ஒன்றே அந்த நாட்டின் முழுக் கட்டுமானத் துறையினையும் வலுவிழக்கப் போதுமான சவாலாகும். இது மிகப் பெரிய பொருளாதாரப் பாடமாக உலக அரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இதற்கு தொடக்கப் புள்ளியாய் அமைந்தது ஒரு எளிய காரணமே, அது கீழே தரப்பட்டுள்ளது.

*******

நம் நாட்டிலும் இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் நகர வாழ்க்கையில் தாக்குப் பிடிக்க தற்கொலையைத் தாண்டும் வாழும் வைர நெஞ்சங்கள் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் வசிக்கும் ஓரளவு அடிப்படை வசதி கொண்ட இடத்தை விட்டுப் புலம் பெயர்வார்கள். அந்த மத்திய வர்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் , இன்று டெல்லி,பம்பாய்,கொல்கத்தா,சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் சபிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளான பல்லாயிரம் மக்கள் வாழும் இட

ங்களான தாராவி(மும்பை), பால்ஸ்வா(டெல்லி),நொச்சிக்குப்பம்(சென்னை),ராஜேந்திரநகர் (பெங்களூரு) , பாசந்தி (கொல்கத்தா) போன்ற இடங்களில் இடம்

பெயரும் நிலைக்கு ஆளாவார்கள்.. குடிசை ஒழிப்பு வாரியம் என்பது அமைச்சருக்கான ஒரு பதவி வாய்ப்பாக மட்டுமே இருக்கும்.

*******

நம் நாட்டின் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் வளர்ச்சி ஒரு நீர்குமிழியைப் போலே பெரிதாகிக் கொண்டிருக்க, சீனாவைத் தொடர்ந்து நம் நாட்டிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக மையங்களும், மால்களும் காற்றுவாங்க ஆரம்பிக்கும், ஆனால் அதன் விலையோ அல்லது வாடகையோ மட்டும் குறையவே குறையாது. ஒரு அரசாங்கம் நாட்டின் விளிம்பு நிலை , மத்திய வர்கத்தின் கவலைகளை பார்வையிடாமல் (அக்கறை கொள்ளாமல்), ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானச் சந்தையின் அசுர வளர்ச்சிக்கு உதவி புரிந்ததால் தான் இந்த தேக்க நிலை உருவானது என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஏற்கனவே நான் சொன்னது

போல,இந்த மிகப் பெரிய பொருளாதார சிக்கல் அடிப்படையில் ஒரு எளிய காரணத்தை பின்புலமாக கொண்டது.

ஒரு உதாரணத்திற்காக சென்னையில் ஒரு சதுரஅடியின் விலை 700 ரூபாயிலிருந்து, 3000, 3500 ரூபாயிலிருந்து எனப் புறநகர் பகுதியிலும், 10000 /- 12000 /- என நகரத்தின் முக்கியமான இடங்களில் ஏறிக்கொண்டே போகிறது. இது அதிக எண்ணிக்கையில் நாள் தோறும் மக்கள் குடியேறும் ஒரு மாநகரத்தின் நிலை என்று ஏற்றுக் கொண்டாலும். சில சிறு நகரங்களில் கூட இது போன்ற நிலை இருப்பது நம்மை எல்லாம் தலை சுற்ற வைக்கும், ஆம், கரூர் நகரத்தில் மையப்

பகுதியில் சதுர அடி ரூபாய் 10000இலிருந்து 20000வரை வரை போகின்றது என்ற தகவலை ஒப்பிட்டு பாருங்கள், செயற்கையான ஏற்றம் தான் இந்த சந்தையினை கட்டுக்கடங்காத உயரத்தில் கொண்டு போய்விட்டது.

காரணம் :

தன் சக மனிதனை வாழ விடாமல் தடுக்கும் எந்த ஒரு சமூகமும்,அதே காரணத்தால் தான் மிகப் பெரும் பின் விளைவுகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதே அந்தக் காரணம் ஆகும். அன்று சீனா செய்த தவறுக்கு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்று நம் ஊரிலும் அளவிற்கு அதிகமாய் வீட்டு வாடகை வசூலித்து, அடிப்படை வசதிகளை பலபேருக்கு எட்டாக் கனியாக்குபவர்களுக்கும் , வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட, குளிரூட்டிய ஷாப்பிங் மால்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நகரத்தில் வசிக்க ஒருவனுக்கு அடிப்படை வசதி கூட தர மறுக்கு
இந்த மாதிரியான சூழ்நிலையில் யாரும் நகரத்தை விட்டோ, அல்லது செய்கின்ற தொழிலை விட்டோ உடனடியாக வேறு எதுவும் செய்ய முடியாது. நாட்டின் பொருளாதராக் கொள்கைகளும் ஒரே நாளில் மாற்றி அதனால் பலன் பெற முடியாது. ஆக, இதைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் கடன் கிடைக்கிறதே என்று சொல்லி அதிக தொகை கொடுத்து பிளாட் வாங்குவதை யோசிக்க வேண்டும். அளவுக்கதிகமான செலவீனங்களைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் சகமனிதர்களையும் அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எந்த மாற்றமும் ஒரு புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது, அது தொடங்கட்டும்.ம் சமுதாயத்தில் இப்படிப் பட்ட நீர்க்குமிழிகள் வந்து தான் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் .இது மாற்றுப் பொருளாதாரத்தின் தேவையை உணரச் செய்யும்.இரண்டு செய்திகளுக்கு உள்ள சம்பந்தம் இப்பொழுது தெரிகிறதா ???

 

ஜீவ.கரிகாலன்

(சுதேசி இதழில் வெளிவந்த கட்டுரை)

சொக்கத் தங்கம்

–  ஜீவ.கரிகாலன்

 

  தங்கம் – உலகம் முழுமைக்கும் தேடித் தேடி சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு உலோகம். அது சமூகம், நாடு, குடும்பம், தனி மனிதன் என எல்லா அமைப்புகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 18ஆம்  நூற்றாண்டு வரை இந்தியாவின் சிக்கலற்ற பொருளாதார வாழ்விற்கு தங்கம் தான் காரணமாக இருந்து வந்தது. ஏன் இன்று வரை ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளிலும், மந்தத்திலும் கூட நம்மை மீண்டும் எழ வைக்க இருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை நம் வீட்டு குடும்பப் பெண்களின் கைகளிலும் , கழுத்திலும் இருக்கிறது. ஏழையோ, பணக்காரனோ தங்கத்தை விரும்பாதோர் யாரும் இலர்.தங்கம் நமது பண்டையக் காப்பீட்டுப்(இன்சூரன்ஸ்) பொருளாய் இன்றும் திகழ்கிறது. நம் தங்கத்தை அகபரிக்கத் தான் பல்வேறு நாடுகளில் இருந்து படையெடுப்புகள் நடந்தன, இருப்புப் பாதைகள் வந்தன.

இன்றும் கூட உலகத்திலேயே நம் நாடு தான் மிகப் பெரிய அளவில் தங்கத்தை நுகர்வு செய்யும் சந்தையைக் கொண்டுள்ளது. இது ஒன்றும் அரசின் திட்டங்களின் மூலம் உருவாகிய சந்தை அல்ல, நமது கலாச்சாரத்தில் ஊறிய சேமிக்கும் பண்பின் வெளிப்பாடு தான் இது.

 முன்பெல்லாம் பொருளாதாரத்தில் கடை நிலையில் இருப்பவர்கள் கூட தங்கத்தை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள், குண்டுமணி அளவிலாவது சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். என்றும் மதிப்பு குறையா தங்கம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அசூர வேகத்தில் நடுத்தர மக்களுக்கே எட்டாக் கனியாக மாறி வரும் தங்க ரகசியத்தை பற்றி கொஞ்சம் அலசுவோம்.
1991 வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த பொழுது, தனது அயல்நாட்டு வர்த்தக பாக்கியை செலுத்தமுடியாமல் 67000 கிலோ தங்கத்தை அடகு வைத்தது. அன்று நம் நாட்டின் மதிப்பு மீது எத்தகைய அளவு குறைந்திருக்கும்? ஆனால் உண்மை நிலைமையோ வேறு கடந்த ஆண்டு நமது நாடு இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பு என்ன தெரியுமா? 615 கோடி அமெரிக்க டாலர்கள். சில ஆண்டுகளுக்கு முன் உலகமே ஸ்தம்பித்த பொருளாதார மந்தத்தில் கூட இந்தியா எளிதாக மீண்டு வரமுடிந்தமை எப்படி? நமது சேமிக்கும் பண்பு இன்னும் நம்மிடம் பலப்பட்டிருப்பதே.
ஆனால் நம் நாட்டில் தங்கம் இப்பொழுது எல்லோராலும் வாங்க முடிகிறதா என்ற கேள்விக்கு பதில் தேடும் அவசியம் இல்லை. இதற்கு என்ன காரணம் இது வெறும் சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு தானா? அப்படியென்றால் சந்தையில் நாம் ஒரு பொருளை அதிக அளவு நுகர்வு செய்யும் பொழுது அதன் மதிப்பு உயரும் என்பது எல்லாரும் அறிந்ததே அதனால் தான் நாம் தங்கத்தை நுகர்வு செய்கிறோம். ஆனால் அந்த விலை உயர்வு நியாமான முறையில் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
தங்கத்தின் மதிப்பு உயரப் பல காரணங்களைச் சொல்லலாம், சர்வேதச அளவில் gold pool எனப்படும் அமைப்பில் தினமும் நடைபெறும் தங்கவர்த்தகத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப் படுகிறது,
ஆனால் அங்கு வெறும் சந்தை பரிவர்த்தனை மட்டும் தங்க விலையினை நிர்ணயம செய்து விடுவதில்லை. அது பெரும்பாலும் கம்மாடிட்டி ட்ரேடிங் எனப்படும் ஆன்லைன் சரக்கு வர்த்தகம் தான் தீர்மானிக்கிறது, இதில் தங்கத்தை கண்ணால் பார்க்கும் அவசியம் கூட கிடையாது அதுவும் தங்கத்திற்கான தொகையில் ஐந்து அல்லது பத்தில் ஒரு பகுதி கட்டினால் போதும் நாம் வாங்கிவிடலாம் வாங்கிய மறுநிமிடமே அதை சொற்ப லாபத்தில் விற்று விடலாம். ஆனால் வீட்டு உண்டியலிலும், சமையலறை டப்பாக்களிலும் பல நாட்களாக சேமிக்கப் படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிக் கொண்டிருந்த நடுத்தர குடும்பங்களுக்கு இன்று எட்ட முடியா உயரத்தில் சென்றுக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை?
உண்மையில் சேமிக்கும் பண்பைக் கொண்ட நமது கலாசாரத்தில் தங்கம் மகாலட்சுமியாக, ஒரு புனிதப் பொருளாக வாங்கப் படுகிறது. சில இடங்களில்  – தங்கம் சில வினாடிகளில் பணம் ஈட்டித் தரும் அற்பப் பொருளாக சில ஆன்லைன் வணிகர்களுக்கு பயன்படுகிறது. ஆனால் இன்றைய அரசும், தங்க நகை விற்கும் நிறுவனங்களும் யாருக்கு சாதகமாய் நடந்து கொள்கின்றன என்று பார்த்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது .

இந்த பட்ஜெட்டில் மரியாதைக்குரிய பிரணாப் அவர்கள் விதித்த சில திருத்தங்கள் என்னவென்றால் தங்கம் இறக்குமதி செய்யவும், இரண்டு மடங்கு கலால் வரி செலுத்த வேண்டும் என்பதும், இரண்டு லட்சத்திற்கு மேல் ரொக்கத் தொகை கொடுத்து நகை வாங்கும் ஒருவரின் நிரந்தர வரி கணக்கு என்னை சமர்பித்து அதில் ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும், அன்பிராண்டட்(unbranded) நகைகளுக்கும் வரி விதிக்கப் பட்டது. 

 இந்த விதி கொண்டு வந்ததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள்
1 . நம் அரசின் வணிகப் பற்றாக்குறை (trade deficit ) பெரும்பாலும் தங்கம் , கச்சா எண்ணை ஆகியவற்றை சார்ந்து தான் இருக்கும். அதனால் இறக்குமதியை குறைக்கும் திட்டங்கள் அரசிற்கு தேவைப் பட்டது
2 . நம் நாட்டில் கருப்பு பணத்தை பெரும்பாலும் தங்கமாக மாற்றி பதுக்கும் வழக்கம் உள்ளதால், அதை மேற்பார்வை செய்ய ஒரு நிரந்தரத் தீர்வு தேவைப்பட்டது.
இதற்காக மேலே சொன்னவாறு சில விதிகளை வித்திட்ட மத்திய அரசு வரலாற்றிலேயே ஆச்சரியப்படும் வகையில் பட்ஜெட் முடிந்த ஒரு மாதத்திற்குள் இந்த விதி அமலுக்குள் வராமல் மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது . இத்தனைக்கும் அரசிற்கு இந்த முடிவால் 600 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும். எதனால் பின் வாங்கியது நம் அரசு ??
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம், விதைகள் திருத்த சட்டம், பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றல், எல்லாவற்றிற்கும் மேலாக பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தனியார் கையில் ஒப்படைத்தல் போன்ற விசயங்களில் பொது மக்களிடமோ அல்லது மற்ற எதிர் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுடன் என்று யாருடைய எதிர்ப்பையும் , போராட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு தன் முடிவில் மிகக் கடுமையுடனும், அக்கறையுடனும் இருக்கும் நடுவன் அரசு நகைக் கடை உரிமையாளர்களின் போராட்டத்திற்கு மட்டும் உடனடியாக செவி சாய்த்தது ஏனோ?? வியாபாரிகள் கூறிய காரணமான தங்கம் வாங்கும் சிறு நுகர்வோர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்று சொல்லும் வாதம் ஏற்புடையதா ?
இப்பொழுது ஏற்றப்பட்ட கலால் வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட, நகைக் கடையில் ரொக்கம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கு விதிக்கப்படும் TDS எனும் முறைக்கான வரம்பு இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை உயர்த்தப் பட்டுள்ளது. உண்மையில் இது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் செயலா ?அல்லது கறுப்புப் பண ஆதிக்கத்தை பாதுகாக்கும் செயலா ? என்று நமக்குப் புரிவதில்லை.
அப்படி தங்க விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முயலும் அரசுஎன்றால் முதலில் என்ன செய்யவேண்டும் ? ஆன்லைனில் தங்க வணிகப் பரிவர்த்தனைகளை அல்லவா முடக்கிய இருக்க வேண்டும்? மாறாக அரசிற்கு நஷ்டம் தரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருப்பது கருப்பு பணம் ஒழிப்பதில் அரசிற்கு முழு அக்கறையும் இல்லை என்று தானே காட்டுகிறது.
பெட்ரோலில் விலையேற்றத்திலோ, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் எந்த அளவிற்கு மக்கள் விரோத கொள்கையைக் கடைபிடித்த இந்த அரசு, இதில் மட்டும் பொது மக்களின் நலன் கருதி குறைக்கப் பட்டது என்று சொல்வது கேலிக்கூத்து அல்லவா ? “என் தங்கம், என் உரிமை” என நமது கலாசாரத்தை முதலீடு செய்து நகைகளில் ஏய்ப்பு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு புறம், தங்கத்தை ஒரு சூது விளையாட்டுப் பகடையாக நிமிடங்களில் வாங்கி விற்கும் வியாபாரிகள் ஒரு புறம் , கருப்பு பணத்தை முடக்கும் கோடீஸ்வரர்கள் ஒரு புறம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் அரசு ஒரு புறம் என்று சூழ்ந்திருக்க, இவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கோ, தங்கைக்கோ சேர்க்கும் தங்கத்திற்க்காக ஒவ்வொரு சராசரி மனிதனும் தன் வாழ்நாளின் பாதி சந்தோசங்களை துறந்து விடுகிறான். பொது மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாத அரசு தனது ஆட்சியைப் பொற்காலம்  என்று பறை சாற்றிக் கொள்ளட்டும்.