நிலைக்கண்ணாடி – 1

தமிழ் இலக்கியச் சூழலை சிலாகித்தல் என்கிற பெயரில் புகழ்பாடிக் கெடுப்பதற்கு ஆயிரங்கைகள் கொண்ட கார்த்தவீர்ய அர்ஜூனனாய் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், கவிஞர்களும் புகழ்பாடிக் கொன்று வருகின்றனர், பத்திரிக்கைகளோ மற்ற ஊடகங்களோ கேட்கவே வேண்டாம். இங்கே வெளியாகும் செய்திகளை விட வெளியாக்காத செய்திகளுக்கு தான் மதிப்பு அதிகம். ஆனால் நிலைக்கண்ணாடி வேறு எந்த கோணத்திலும் செய்திகளைச் சொல்லாது, அது பிம்பமாக இருந்தாலும் இதன் கோணம் என்றைக்கும் மாறாதது. 

புத்தகக்கண்காட்சிக்கு ஆள் வரவில்லை என்று ஒருவரோடு ஒருவர் குறைபட்டுக் கொண்டிருகையில், நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலை எத்தகைய போலியானது என்பதைத் துகிலுரித்துக்காட்டுகிறது. இந்த முகநூல் பதிவு, மலையாள எழுத்தாளர் திரு.அசோகன் சருவில் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் அளிக்கப்படும் மரியாதையை அப்பட்டமாக முன் வைத்திருக்கிறார்.

அசோகன் சருவில் – முகநூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - 

பிரபல மலையாள எழுத்தாளர் அசோகன் சருவில் அவர்களின் சென்னை புத்தகவிழா அனுபவம் .. அவர் முகநூலில் பதிவிட்டது (1 /08 /2017 ).

மிகவும் ரசிக்கத்தக்க ஓர் அனுபவம் . துளிகூடக் கற்பனையைக் கலக்காமல் எழுதுகிறேன்.
சென்னை புத்தக விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்னை மஹாநகரத்தில் சென்றேன் . வெளியே நல்ல சூடு . பகல் முழுதும் எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வாசித்தும் முகநூலைப் பார்த்தும் நேரம் கழித்தேன்.  நம் முதலமைச்சர் திரு.பிணறாயி விஜயன் மஸ்கட் ஹோட்டல் அறையில் இருந்தும் ஊடக ஒளிப்பதிவாளர்களிடம் ” வெளியே போ” என்று ஆணையிட்டதுதான் நேற்றைய முக்கியச் செய்தி .

சாயங்காலம் ஐந்து மணிபொழுதில் புக் ஃபெயர் நடக்கும் ராயப்பேட்டை “வொய்.எம்.சி.எ” மைதானத்தைச் சென்றடைந்தேன். நூற்றுக்கணக்கான ஸ்டாலுகள் அணிவகுத்த மிகைவார்ந்த கலை-இலக்கிய உற்சவம். தமிழ் இலக்கியம் புத்தக-வெளியிடுதல் சிறப்பான ஓர் எதிர்காலத்தின் திருப்புமுனையில் என்பதை உணர்ந்தேன். “பாரதி புத்தகாலயம்” என்ற பதிப்பகம்தான் முன்னிலையில்.

நிகழ்ச்சி இனிதே தொடங்கியது . நிறைந்த அரங்கு . ஏராளமான எழுத்தாளர்கள் அரங்கில் கௌரவிக்கப்பட்டனர் . நாவலிஸ்ட் பிரபஞ்சன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர். அவர் என் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துபேசினார். தமிழில் மொழிபெயர்த்த என் சிறுகதைத்தொகுப்பு “இரண்டு புத்தகங்கள் ” அவரிடமிருந்தது .மலையாளமும் தமிழும் கலந்து நானும் கொஞ்சம் நேரம் உரையாடினேன். அதாவது பேசினேன் .

ஓ… இவரோட வீர சூரசெயல்களைச் சொல்லத் தொடங்கிட்டாரே .. என்று நினைத்து வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள். இனிமேல்தான் சுவையான அந்நிகழ்வு வருகிறது.

அரங்கிலிருந்தும் நேராகக் கெஸ்ட் ரூமுக்கு சென்றேன். அங்கு நான்கைந்துபேர் என்னருகே வந்து பத்திரிகையாளர்கள் என்று தங்களை அறிமுகம் செய்தனர். எனக்குப் பெருமையாக இருந்தது. அதாவது மோசமல்லாத ஒரு சம்பவம் அல்லவா அது ? என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறினார்கள். பிரபஞ்சன் என்னைப்பற்றிக் கூறியவற்றைச் செய்தியாகப் போடப்போகிறோம் என்றனர். நானும் நன்றி சொல்லி அவர்களை வணங்கினேன்.

அதற்குப் பிறகும் அவர்கள் அங்கேயே தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தனர். என்னிடம் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசவேண்டுமாம். ஒரு விபத்தின் நாற்றத்தை நான் உணரத்தொடங்கினேன். கேரளா முதலமைச்சரின் “வெளியே போ” என்ற விவாத பேச்சைப் பற்றியான கேள்வியோ ? எனக்குள் இருக்கும் அரசியல்வாதி திடீரென்று விழித்துக்கொண்டான். என்ன பதில் சொல்லலாம் ?

ஆனால் அவர்கள் சொன்னது மற்றொரு விஷயம். செய்தி நன்றாகப் போடுவதற்கான பிரதிபலனாக நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டுமாம். இப்படியொரு ஏற்பாட்டைப் பற்றியான விபரத்தை நான் கேட்டதேயில்லை என்பதால் வியந்தேன். மிகுந்த அவமானம். உங்களின் விளம்பரம் எனக்குத் தேவையில்லை என்று கறாராகக் கூறினேன். ஆனால் அதில் ஒருவர் பவ்வியமாக வணங்கி, சொன்னார் “ஏதாவது கொடுங்க சார் , பயணக்கூலியாவது ..”

முன்பு அலுவலகத்தில் வேலைபுரியும் காலத்தில் என்னைப் பற்றித் தெரியாத சிலர் என் மேஜை மீது லஞ்சபணம் வைப்பார்கள். அப்போதெல்லாம் எனக்குப் பாதம் முதல் சிரஸ்ஸு வரை ஒரு நடுக்கம் வரும். வருடங்களுக்குப் பின் அதே நடுக்கம் இப்போது மீண்டும் . உச்சத்தில் அலறினேன் “வெளியே போ”

*

நிலைக்கண்ணாடியிலிருந்து

யுவபாரதி பக்கங்கள் – 13

சுதாகரனுக்குத் தைக்கத் தெரியும்

 -யுவபாரதி மணிகண்டன்

         அன்றைக்கு வேங்கிக்காலில் பேருந்து விட்டிறங்கியபோது பொழுது சாய்ந்து விட்டிருந்தது. காற்றற்று ஆடாமல் விறைத்திருந்த கருத்த மரங்களை எண்ணியபடி மேற்கே நடந்துகொண்டிருந்தேன். மேலும் கீழும் இடமும் வலமுமாக சொற்கள் எப்போதும் உள்ளுக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். யாரோடும் பேச வாய் வராது. புத்தாயிரம் என்று சொல்லப்பட்டது பிறந்து இரண்டு வருடங்களாவது ஆகியிருக்கும்.

இடுக்குப் பிள்ளையார் பக்கம் நடந்துகொண்டிருந்தபோது ‘அண்ணா’ என்ற குரல் கேட்டது. என்னைத்தான் என்று அனிச்சையாய்த் திரும்பினேன். சாலையோரக் கல் ஒன்றிலிருந்து எழுந்து கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு வந்த உருவம் சுதாகரனுடையது. ‘பீடி?’ என்று கேட்டபடி கைநீட்டி பின் உள்ளிழுத்துக் கொண்டவன், நான் கைநீட்டியதும் ஒன்றை எடுத்துத் தந்து கூடவே நடந்தான்.

அவன் வீட்டுக்குக் கூப்பிட்டான். ஆடையூரை அடுத்திருந்த இலங்கை அகதிகள் முகாமின் கீழ்மூலைக் குடிசை ஒன்றில் குடியிருந்தான். சுதாகரன் அற்புதமான தையல்காரன். சொந்த ஊர் நெடுங்கேணி என்றதாய் நினைவு. பல ஆண்டுகள் முன்பு அம்மையோடு வந்ததாய்ச் சொல்லியிருந்தான். எனக்கு அவனைத் தெரிவதற்கு முன்பே அவன் அம்மை இறந்துவிட்டிருந்தாள்.  அப்போது தனியாகத்தான் இருந்தான்.

அன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கைனடிக் சபாரியில் வந்து அவ்வப்போது புதுத்துணி தைக்கக் கொடுத்து வாங்கிச் செல்வேன். உடுப்பதிலும் உரைப்பதிலும் அலாதி விருப்பமிருந்த காலமது. அதுவெல்லாம் வெறும் சுவாரசியம்தான் என்று தெரிந்திருக்கவில்லை. என்னை உட்காரவைத்து படித்ததையும் சிரித்ததையும் பேசப் பேசக் கேட்டுக் கொண்டிருப்பான். நடுவிலே எழுந்துபோய் தேநீர் போட்டுக் கொண்டுவருவான். தேத்தண்ணி என்பான். தொண்டைக்குழிக்குள் பாகு இறங்குகிறமாதிரி இனிப்பு போடுவான். முகம் சூம்பி ஒரு நாளும் அவனைப் பார்த்ததில்லை.

கிளம்புகையில் என் கூடவே திருவண்ணாமலை நகரத்திற்குள் வருவான். சாமான்கள் வாங்க ஒரு காப்பி நிறத் துணிப்பையை மாட்டிக்கொண்டு ‘நான்தான் ஓட்டுவன் அண்ணா’ என்று சொல்லி வாங்கிக் கிளப்புவான். ‘அண்ணா’வின் கடைசி எழுத்தை பானு மாதிரி நெடித்து உச்சரிக்கமாட்டான். ஆகாரத்துக்கும் ஐகாரத்திற்கும் இடைப்பட்ட ஒரு அழகான ஒலி வரும். சின்னக்கடைத் தெரு மூலையில் இறங்கிக்கொள்வான். ஒரே ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். புத்தகங்கள் சிலதை எடுத்துக் கொடுத்தும் படிக்கிற வழக்கம் இல்லையென்று சொல்லி வாங்கிக் கொள்ளவில்லை.

அன்றைக்குச் சுதாகரனுடைய வீட்டுக்குள் நுழைந்து பாயில் உட்கார்ந்தேன். அவனை நலம் விசாரித்ததற்கு அப்பால் எனக்குப் பேச்சு ஏதும் வரவில்லை. கொஞ்ச நேரம் முகம் பார்த்திருந்தவன் எழுந்தான்.

‘அண்ணா! இத்தனை தூரம் நடந்து வந்திருக்கிறியள். சட்டையைக் கழட்டி வையுங்கோ’ என்றான். அப்படியொன்றும் வியர்த்திருக்கவில்லை. ஆனாலும் கழற்றி கதவுவிளிம்பில் மாட்டிவிட்டு உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்தில் முகத்தில் எந்த பாவனையும் காட்டாது அருகே வந்து இரண்டு பன்களைத் தட்டில்வைத்து தேநீரை நீட்டிச் ‘சாப்பிடுங்கோ’ என்றான். சிரித்தேன். சிரித்தான். சாப்பிட்டேன்.

மனிதரைச் சுமந்தும் வீடு தொலைத்த இழப்பும் துயரமும் தனிமையில் குமையக் குமைய, மாலை தொடங்கி இரவின் உச்சி வரைக்கும் இதே பாதையில் நடந்து, சோர்கிற இடத்தில் உறங்கிவிடுகிற என் அப்போதைய நாட்களை அவன் பார்த்திருப்பான். கண்திறந்திருந்தாரும் காட்சியில்லை. சில சமயம் கண்படுகையில் அவன் புன்னகைக்க நானும் பதிலிட்டு நகர்ந்திருப்பேன். ‘என்ன ஆயிற்று அண்ணா?’ என்று ஒரு நாளும் கேட்டதில்லை.

சிரிக்கத் தொடங்கினால் உலகை நினைக்கவேமாட்டாமல் சிரிப்பதைப் பார்த்தவன், வாய்மூடினால் உலகை மறக்கமாட்டாமல்தான் வாய்மூடியிருப்பான் என்று ஊகித்திருக்கக் கூடும். அன்றும் கேட்கவில்லை. சாப்பிட்டபிறகும் பேச வார்த்தைகளற்று ஆஸ்பெஸ்டாஸில் ஒட்டிக்கொண்டிருந்த என் மௌனம் என்னை உட்கார விடவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டேன்.

‘கிளம்பறேன் தம்பி’

‘இங்கயே உறங்கலாமே அண்ணா’

‘இன்னும் நடக்கணும் தம்பி’

வாசலிறங்கி கொஞ்சதூரம் நடந்தவனுக்கு ஏதோ தோன்ற இடது தோள்பட்டையைத் தொட்டுப்பார்த்தேன். பின்னால் விட்டிருந்த தையல் தைக்கப்பட்டிருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

– யுவபாரதி மணிகண்டன்

era.mainkandan@gmail.com

www.yuvabharathy.blogspot.com

கிளியாந்தட்டு

இன்னும் ஓர் இரவு

ரமேஷ் ரக்சன்

தனக்குள் தேக்கி வைத்திருக்கும் இரகசியங்கள் உண்டு பண்ணும் கிளர்ச்சி, ஓர் படைப்பாளியை எப்படி புத்துணர்வோடு வைக்கிறது என்றும் ஓர் படைப்பாளிக்கு இரகசியம் எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் பேசத் தொடங்கும்போது, பைக் நாற்பதில் சென்றாலும் மனம் நூற்றி இருபதில் சென்று கொண்டிருந்தது. ஏனெனில் அது ஜீவகரிகாலன் பைக். ஏனென்றால் நான் சென்றது ஜீவகரிகாலனுடன்.

1

இரவிற்கென்று சில முடிச்சுகள் இருக்கிறது. அதிலொன்று சுடிதாரின் முதுகிலாடும் முடிச்சு. இந்த ஒப்பீடு ரசனையின் பால்; அதிலிருந்து எழுந்த கிளர்ச்சி, கிளர்ச்சி உண்டு பண்ணிய முடிச்சு. இப்படித்தான் கணையாழியின் மீட்டிங் முடித்துவிட்டு எந்த முன்முடிவும் இல்லாமல், ஒரு திரைப்படம், அப்படியே மகாபலிபுரம் என்று முடிவு செய்து கிளம்பியிருந்தோம் நானும் ஜீவகரிகாலனும்.

எதிர்வரும் வாகனத்தின் மஞ்சள் ஒளியில் குறுக்கிடும் பனியை சிலாகித்தபடி, ஊர் சுற்றுதல் பொருளாதாரம் சார்ந்து ஆனதன் இழப்பு பற்றியும், அதனால் உண்டாகிய தேங்குதல் பற்றியும், பேசிச் செல்கையில், சீரான இடைவெளியில் நண்பர்களும், கூட்டமாகவும், காதலர்களாகவும் கடந்து போன பைக்குகள் ஒருவகையில் ஆறுதல் தான்.

குளத்தில் நீண்ட நேரம் நீந்தவைத்து,  பாதத்தின் மென் தன்மை, இன்னும் இன்னும் மென்மையாக்கி, பின் செம்மண் சரல்கள் நிறைந்த குளத்து மேட்டில் வாயில் எச்சில் ஒழுக ஓடவிட்டு, அதன் பொறுக்குகள் பெயர்ந்து, பாதத்தை கடினமாக்கி வேட்டைக்கு நாயை பழக்குவது போன்று இந்த இரவு கொண்டாடடமானது. அல்லது வதையானது. இன்றைய நாளில் கொண்டாட்டமானது தான்.

பைக்கை நிறுத்துமிடம் எல்லாம் நாய். இரவில் நாய்க்கு “தொந்தரவு” என்று ஒரு பெயர் இருக்கிறது. நாய் நுகரும் அந்த சுரபி அதற்குச் சாதகமாக இருந்திருக்கும் போல. ஈ.சி.ஆர் சாலையில் பேருந்து நிலையத்தில் விடியற்காலை  மூன்று மணிக்கு மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எந்த எதிர்ப்புமின்றி ஒரு நாய், ஓர் குளக்கரையில், குளத்தில் நிழலாடிய கோவிலை புகைப்படம் எடுக்கும்போது, முத்தமிடடபடி ஒரு நாய், யானைச் சிற்பங்களை புகைப்படமெடுக்கும் போது, மேலே எத்து போட்டபடி ஒரு நாய்.

இப்படித்தான் சதுரகிரி மலையிலும் ஒரு நாய்.

சூரியன் எழும் முன், ஏதாவது ஒரு டீக்கடையில் எண்ணெய் சட்டி ஏறியிருக்காதா என்று, வடக்கும் தெற்குமாக அலைந்ததில் சூரியன் முந்திக் கொண்டது. பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பேசி அல்லது திட்டித் தீர்த்து, சுனாமியோடு கடலுக்குள் இருந்து எட்டிப்பார்த்த ஆறு கோபுரங்கள் பற்றி ஜீவகரிகாலனிடம் கேட்டு தெரிந்து கொண்டபின், இடப்பக்கம் குவிந்து கிடந்த கருங்கற்களின் ஊடே இருந்து சூரியன் எழுந்ததும் இரவு முடிவுக்கு வந்திருந்தது.

பைக் ரேஸ், கார் ரேஸ், சைக்கிள் ரேஸ், மராத்தான். என்று தொடர்ந்து நிகழந்த படியே இருக்கிறது. சென்னை நோக்கி நகரத்தொடங்கியிருந்தோம் . முட்டுக்காட்டிலிருந்து,10 கிலோ மீட்டர் தூரம், மராத்தான் ஓடுவதற்கு சாலை ஒதுக்கி, செர்வீஸ் ரோடு எங்கும் காவலர்கள் நிறுத்தி, அந்த கிராமத்திலிருந்து ரோட்டை கடக்க முயல்பவர்களை அனுமதிக்காமல், போலீஸார் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள்.

முட்டுக்காட்டு பாலத்தில் மராத்தான் தொடங்கி வைத்து நின்றவர்களின் முகமெங்கும் அத்தனை அதிகாரத் திமிர். நான்கு வழிச்சாலை 10 கி.மீட்டருக்கு நிறுத்தப்பட்டிருப்பதற்கான எந்த பதாதைகளும், மராத்தான் நடத்தியவர்களிடமிருந்து அச்சிட்டு வாங்கி ரோட்டின் கரையோரம் வைக்கவில்லை. எல்லாம் ஒரு மூன்று மணி நேரத்திற்குத்தானே என்ற மெத்தனம்.

சைக்கிள் வைத்திருப்பது, அதற்கான ஆடைகளோடு ஈ.சி.ஆர்-ல் பவனி வருவது (பவனி சரியான ப்ரயோகம் தான்) எல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பலாகிவிட்ட இன்றைய சூழலில் தன் போக்காக ஒரு படைப்பாளன் அலைந்து திரிவதென்பது இயலாதொன்று தான். சரி நடக்கலாமென்றாலும், வழியில் வீட்டுக்கதவைத் தட்டி தண்ணீர் கேட்கலாமென்றாலும் வீடுகள் காலாவதியாகி, வழக்கொழிந்து வருடங்கள் ஆகிறது.

(தொடரும்…)