ஜீ முருகன் பதிவுகள்

விஷால் ராஜா ஆர்வமுள்ள சிறுகதை எழுத்தாளர். நுட்பமான வாசகர், கவிஞர். அசோகமித்திரன் பற்றிய அவருடைய அவதானிப்பு வியக்க வைத்தது.

‘எனும்போது உனக்கு நன்றி’என்ற சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். கவனிக்க வேண்டிய தொகுப்பு இது. தமிழ் சிறுகதை வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கிருக்கும் என்ற நம்பிக்கையை இதில் உள்ள கதைகள் ஏற்படுத்துகின்றன.

அவரிடம் அலைபேசியில் பேசும்போது கேட்டார், தற்போது எழுதுபவர்களின் கதைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று.

கே.என்.செந்தில், கார்த்திகைப் பாண்டியன், ஜீவ கரிகாலன், குமார நந்தன், அகரமுதல்வன், விஷால் ராஜா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் எனத் தொடர்ந்து வாசிக்கிறேன். இன்றைய இவர்களின் பங்களிப்பு கவனிக்கத் தக்கது.

தமிழ் சிறுகதை மரபின் தொடர்ச்சியில் வைத்தோ, உலக சிறுகதைப் போக்கின் தொடர்ச்சியில் வைத்தோ இந்த புதிய படைப்பாளிகளின் படைப்புகளை எவ்வாறு மதிப்பிடுவது?

கொஞ்சம் ஏமாற்றம் இருக்கிறது. முக்கியமான ஏதோ ஒன்றை இவர்கள் இழந்திருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு உணர்வு. சிறுகதை என்ற புதிரான வடிவம் குறித்த புரிதல் மங்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்.

ஒரு அரூப ஓவியத்தை கைக்கொள்வது போலத்தான் இது. யாராலும் அதை இதுதான் என்று வரையறுத்துவிடமுடியாது. ஆனால் தொடர்ந்த வாசிப்பின் மூலம் எழுதிப் பார்ப்பதன் மூலம் அதை அடைந்துவிடலாம். முக்கியமாக வாழ்க்கையின் மீது நுட்பமான பார்வை வேண்டும்.

கால்வினோவின் ஒரு கதையை படித்துவிட்டு இந்த வடிவத்தில் நாமும் ஒரு கதையை எழுத வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அது ஒரு ஆர்வம். ஆனால் அதற்காக மெனக்கிட்டு எழுதுவது சிறுபிள்ளைத்தானமான காரியம்தான். வடிவ பரிசோதனை என்றும் கதையாகிவிட முடியாது.

அதே போல எதார்த்தம், வட்டார வழக்கு என்ற பெயரில் ஆவணத் தன்மை கொண்ட தட்டையான கதைகளை எழுதுவதும் இங்கே நடக்கிறது. படைப்பின் வழி அவர்கள் எதையும் அடைவதில்லை. தொடங்கிய இடத்துக்கே அவர்கள் வந்து சேர்கிறார்கள்.

நாம் நம் வாழ்வில் உணர்ந்த ஏதோ ஒன்றுக்கு வடிவம் கொடுக்கும் செயல்தான் சிறுகதை. அந்த X தான் வடிவத்தை நிர்ணயிக்கிறது. உயிர்புலம் உடலை நிர்ணயிப்பது போலத்தான் இது. உடலில் கை எங்கே இருக்க வேண்டும் கால் எங்கே இருக்க வேண்டும் செடி கொடிகளில் கிளை எங்கே இருக்க வேண்டும் வேர் எங்கே இருக்க வேண்டும் என்று உயிர்புலம் நிர்ணயிப்பது போல சிறுகதையை அந்த X தான் நிர்ணயிக்கிறது, வடிவம் கொடுக்கிறது. அந்த X நமக்குள் தோன்றும் வரை நாம் காத்திருக்க வேண்டும். நம் பிரக்ஞையை ட்யூன் செய்துகொள்ள வேண்டும், பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த X ஐ பொறி என்றும் வெளிச்சம் என்றும் தரிசனம் என்றும் பல விதமாக அழைக்கிறார்கள். வாழ்க்கை தன் நிஜ முகத்தைக் காட்டும் அபூர்வ கணம் அது. பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவர்களுக்கோ, எழுத்து மேஜையின் முன் உட்கார்ந்து யோசிப்பவர்களுக்கு இது கைகூடுவதில்லை.

– ஜீ முருகனின் ஃபேஸ்புக் பகுதிகளிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*