Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 11

December 30th, 2016 | Posted by admin in கவிதை

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 11

 
உச்சத்தில் முகிழும் சயன நீலச் சரிவு
*
கடிகாரச் சுற்றில் நகரும் பேச்சு
கணக்கிடவில்லை அகாலத்தை
காதலின் அடிவாரத்தில் பூப்பதாக வந்த செய்தியை.
மறுக்கிறது நறுமணம் தர விருப்பமில்லா ப்ரியத்தின் மலர்கள்
சின்னஞ்சிறு நம்பிக்கைக்குள் நெய்யத் தொடங்கும்
முத்த இழை
இன்மைகளை மெழுகவும் கூடும்
சந்தர்ப்பங்கள் இனிக்கும் என்பதாக 
வேறெங்கும் பெற்றிட வாய்ப்பில்லாத சத்தியத்தை
ஆரத்தழுவி ரகசியம் போல் உச்சரித்துப் பழகும் அச்சத்தை
எந்தப் பெயர் சொல்லி அழைக்க
மனத்தோடு கரையும் அந்தியின் விளிம்பு கசிய
அனுமதிக்கும் இருளுக்குள் பறிபோகும் உதடுகளின் சுவை
வனாந்திர ஆதிக்குரலென கனவில் திணறுகிறது
மருகும் அர்த்தங்களை விடியலில் ஏந்தும்
கடிகார முட்கள்
அந்தரங்க நிசப்தங்களோடு நகர மறுக்கும் அறையை
விலாவாக்குகிறது
குறையில்லா கனியின் ருசி மணம் கமழ
வழிந்தோடும்
ஆலிங்கன மௌனத்தைக் கணக்கிடவில்லை
சுற்றில் நகரும் பேச்சு அகாலமாகி உறைகிறது
திசைகள் இணையும் சுவரின் கூரில்
***
நீக்கமற
*
நாம்
நிறைய திணறிவிட்டோம்
இத்தனை இறுக்கமான பிடிக்குள்
புது உலகம் வளர்வதாக இதுநாள்வரைச் சொல்லி வந்த
வைகறையின் பாய்மரம்
தாங்கிக்கொள்ள பழகிற்று வீசும்
சொல்லின் வலிமையை
வெப்பம் ஊடுருவும்
பொழுதுகளைக் கொண்டிருக்கிறோம்
திசையை மறந்துவிடு
***
 
மிகைவெளி நீட்சியில்..
*
மிக எளிமையான சொற்கள் போதுமானதாயிருக்கிறது
ஓர் அன்பை ஏற்றுக்கொள்ளவும்
மௌனத்தை புறந்தள்ளவும்
வலியோடு கடந்துபோகப் பழகிக்கொண்ட
தருணங்களில்
அதன் அர்த்தங்கள் துணை வந்தன
இருள் அடர்ந்த தனிமைப் பாதையில்
நட்சத்திரங்களின் வெளிச்சத்தை மொழிபெயர்க்கக்
கற்றுத் தந்த சொற்கள்
ஞாபகத்தின் ஒளிச்சிதறி மின்மினிப் பூச்சிகளாய்
இப்போதும் பறந்துகொண்டிருக்கின்றன
என் வெளியெங்கும்
அந் நீட்சியில்
துரோகத்தின் பின்கதவில் பொருத்தி
திறக்கவே முடியாத
ஒற்றைக் கடவுச் சொல்லாக்கவும்
போதுமானதாயிருந்திருக்கிறது
அவ் எளிமை
 ***
புற ஊதா கதிர்
*
உனது உறவை மீட்டுக்கொள்ள
கடினமாகப் போராடுகிறாய்
அதுங்கால்
பிரத்யேகமாகக் கையாளப்பட்ட
உனது எல்லைகளை
இன்னும் இன்னுமென்று விஸ்தீரிக்கிறாய்
எல்லா முனைகளையும்
நுணுக்கமாகவேனும் விடுபட்டுவிடக்கூடாதென்ற
கடும் அக்கறையோடு
ஓடி ஓடி
இழுத்துக்கட்டுகிறாய்
மூச்சுவாங்க ஓரிடத்தில் உட்காரும் கணத்தில்
மடியில்
மூன்று டபிள்யூக்கள் உதித்தபடி
உன்னைப்பார்த்து சிரிக்கின்றன
அவை
ஸ்மைலி அல்ல
***
ஆழி விரலோடி..
*
இன்னும் தீண்டப்படாத ரகசியமொன்றின் கதவை
உன் உடல் மீது வரைந்து கொள்கிறாய்
போய் சேரும் இடம்தோறும் சேகரமாகும்
அதீதங்களைப் பத்திரப்படுத்துகிறாய்
கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுமியாக
குதூகலிக்கிறாய்
அதிசயிக்க முயலும் உலகின் விளிம்பு
கத்தியின் கூர்மையோடு அழைக்கிறது
கற்றுத் தேர்ந்த அனுபவங்களில் உற்பத்தியாகிற சந்தேகங்களின்
இயந்திரத் தன்மையோடு வாய்த்துவிடும் தனிமை
இயங்க மறுப்பதை
ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாய்
வெளியேற நினைக்கும் சமவெளியின் நீள்__________________ட்டில்
செங்குத்தாய் நடப்பட்டு
ன் உச்சியில் படபடக்கவிருக்கிற புன்னகை
தி
த்
ன
மௌ
வசீகரத்தின் அடையாளமாகி
திறவா உடலின் ரகசியம்
கரையேறா கிளிஞ்சல்களின் கடல் வரிகளாய் வளரும்
காண்
***
-இளங்கோ

சென்னை
26-DECEMBER-2016

You can follow any responses to this entry through the RSS 2.0 You can leave a response, or trackback.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*

Powered By Indic IME