நகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்

– சீராளன் ஜெயந்தன்

15420774_10211644878703762_706978988398794306_n

விஜய் மகேந்திரன் என் கையில் தனது நகரத்திற்கு வெளியே நூலை கொடுக்கவும், நான் உடல் நலம் சரியில்லாமல் படுக்கவும் சரியாக இருந்தது. நல்ல வேளையாக ஒரு ஐந்து கதைகளை படிக்க நேரம் கிடைத்தது. வாசிப்பை பொறுத்தவரை நான் ரொம்ப குறைந்த வேகம்தான். ஒரே மூச்சில் படித்து கீழே வைத்தேன் என்ற பெருமையெல்லாம் எனக்கு கிடையாது. விஜய் மகேந்திரன் என்றதும், ‘அந்த நகரம் பற்றிய கதை உங்களுடையதா?’ என்று திரு பரிக்ஷா ஞாநி கேட்டார். எனவே தொகுப்பைத் திறந்ததும் முதலில் அந்தக் கதையைத் தான் படித்தேன்.

விஜய் மகேந்திரனிடம் பேசிக்கொண்டிருப்பது போலவே, அவர் நேரில் கதை சொல்வது போலவே, சிக்கலற்ற தெளிவான நடையில் கதை போகிறது. சின்ன சின்ன வாக்கிய அமைப்புகள் என்றே சொல்லலாம். நான் இதைத்தான் சொல்கிறேன் என்று எங்கும் ஒரு சிறு துப்பு கூட கொடுத்துவிடாமல் கடைசி வரை கதைபோகிறது. ஆனால் பழைய கட்டிடத்தின் செங்கல் ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகிறது. அதிலும் கண்ணகி கால்பட்ட நகரம். எல்லா கட்டமைப்புகளையும் புறந்தள்ளிவிட்டு தன் கதையை தான் சொல்கிறார். மற்ற சிந்தனையை நமக்கு விட்டுவிடுகிறார். அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஒரு சுத்தீகரிப்பு நிலையம் நகரத்திற்கு வெளியே. ஒரு சரியான சிறுகதைக்கான அமைப்பு.

‘கூட்டத்துல கல் எறிஞ்சா அது சனியன் பிடிச்சவன் தலையில விழுமாம்’ என்பது நமது சொல்வழக்கு. ஒரு நேர்மையான, அதாவது சில தார்மீக நியாயங்களும் கோபமும் கொண்ட, ஒரு கல்லூரி பேராசிரியர் அவ்வாறு இருப்பதால் எதிர்கொள்ளும் சிராய்ப்புகள் பற்றிய கதைதான் ‘சனிப் பெயர்ச்சி’. சனிப் பெயர்ச்சியையும் இடர்பாடுகளையும் சுவைபட கோர்த்து எழுதியுள்ளார். ஏழரை சனி இவரை படுத்தும்பாடு சுவாரஸ்யமானது.

அடுத்த கதை இருத்தலின் விதிகள். ஒரு காதலியின் கடைக் கண் பார்வைக்காக அவள் வசிக்கும் தெருவில் அடிக்கடி சென்று வருகிற (அந்தக் கால) மகிழ்ச்சிக்கு அடுத்தது, பழைய புத்தகக் கடையில் புத்தகங்களை மேய்வதுதான். அப்படி மேய்கிற இருவரின் கதை. இனிய அனுபவம் (மீண்டும் அப்படி வாய்க்காது). தேடிக் கொண்டிருக்கிற பல அரிய புத்தகங்கள் திடீரென்று வந்து மொத்தமாய் கொட்டுகிறது. காரணம் இறந்து போன ஒரு எழுத்தாளர். புத்தகங்களையே தேடிக் கொண்டிருப்பவனுக்கு தனது இருப்பை குறித்து அப்போது கவலை வருகிறது. இந்த இடத்தில் எங்கள் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சியை சொல்லியே ஆக வேண்டும். 1990 களில், வேளச்சேரியில் வாடகை வீட்டில்தான் குடியிருந்தோம். வீட்டுக்காரர்களின் விதிகள் காரணமாக அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டே இருப்போம். சொல்லவா வேண்டும் என் தந்தையிடம் இருந்த புத்தங்களின் எண்ணிக்கை குறித்து! ஒரு முறை வீடு மாற்றும் போது ஒரு நான்கு சக்கர (சென்னை) மாட்டு வண்டியின் மீது புத்தகங்களை ஏற்றினோம். வண்டிக்காரன் சொன்னான், ‘இவரு வாழ்க்கையில பாதிய புத்தகம் படிச்சே வீணாக்கியிருப்பார் போல’ என்று.

‘சிரிப்பு‘ என்ற கதை முதல் முக்கால் பங்கு, இந்த தொகுப்பிலேயே இதுதான் சிறந்த கதையாக இருக்கும் என்று எண்ண வைத்தது. மற்ற கதைகளிலிருந்து வேறுபட்ட நடை, அழுத்தமான எண்ணங்கள், தீவிர சிந்தனை என்று போய் கொண்டிருந்தது. ஏனென்று தெரியவில்லை, ஒரு அமானுஷ்ய விஷயத்தை கொண்டு வந்து, கதை தடம் புரண்டு, மையம் தவறிவிட்டதாக நினைக்கிறேன். ஒரு வேளை இக்கதையை அனுபவிக்க எனக்கு போதவில்லையோ என்னவோ?

‘ராமநேசன்‘ ஒரு அருமையான characterization. இப்படி நிறைய பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். முதலில் வெறுப்பேற்படுத்தும் அந்த குணாதிசயம், பின்னால் புரிந்துகொள்ளப்பட்டு, நட்பு ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு சரியான புரிதலும் விவரணையும் ஆகும். நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதாக அமைகிறது.

அடுத்த கதை, மழை புயல் சின்னம். மழையும், காதலும், காமமும் எப்போதும் ஒன்றோறொன்று ஊடாடி வேதிவினைகள் புரிந்துகொண்டேதான் இருக்கிறது. எங்கே எப்படி என்ன வினை நிகழும் என்பதுதான் மானிடத்தின் புரியாத புதிர். அப்படியாக இந்தக் கதையில் ஒரு வினை நிகழ்ந்து போகிறது. நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (விஜய் மகேந்திரன், ஜெயந்தனின் வெள்ளம் சிறுகதை கிடைத்தால் படித்துப் பாருங்கள்)

(நகரத்திற்கு வெளியே, சிறுகதைகள், யாவரும் வெளியீடு, விலை ரூ.80/-)

– சீராளன் ஜெயந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*