Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

நாக்குட்டி – 4

December 19th, 2016 | Posted by admin in கதை | தொடர்

நாக்குட்டி – 4

ந்தப் புள்ளியில் காதலைச் சொல்ல வேண்டுமென்றுத் தோன்றியது என்று சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. எல்லாம் அந்த ஹெட்போனுக்குப் பிறகுதான் என்பது மட்டும் தெளிவு. மனதின் இன்னொரு பரிமாணத்திலிருந்துச் சொல்வதானால், அவள் நட்புடன் தான் பழகுகிறாள் என்று என்னை எண்ண வைத்ததும் அந்த ஹெட்போன் தான். மறுநாள் முகத்தைக் காட்டுவாள் என்று மதிய உணவின்போது நினைத்துக் கொண்டுப் போனால், மிகச் சாதாரணமாக சிரித்தாள். கெஞ்சவிடவோ, தாங்கவோ அவள் விடவில்லை. எனக்கு அதுவேறு கூடுதல் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது. அவள் என்னிடம் பேசத் தொடங்கியது முதலே இவளுக்குத் தோழி என்று ஏன் யாருமே ஒட்டிக்கொண்டு வரவில்லை என்ற குழப்பம் வேறு அப்போது தோன்றியது. கோபப் படமாட்டாளா? இப்படித்தான் கேஷுவலா இருப்பாளா என்று அவளிடம் கேட்டுவிடும் அளவிற்கு அவள் என்னைப் பழக்கப் படுத்தவில்லை. பழகுதலின் மூலம் பழக்குதல் தானா காதல்?.

அடிப்படையாவே பசங்க, நீங்க எல்லாம் ரொம்ப பயப்படுறவங்கடா. அதுனால தான் ஒரு பொண்ணோட movement என்னனு யூகிச்சாலும் உங்களால சொல்ல முடியாது. You know! இது தான் காதலோட முதல் சாபம். lets play.”

நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். ஒருவேளை அவள், முகம் சுண்டும்படி ஏதும் சொல்லிவிட்டாலும், மதிய ஷிப்ட் என்பதால் அடிக்கடிப் பார்க்க நேரிடாது. கொஞ்சநாள் அவள் முன் குற்றவுணர்ச்சியோடு நிற்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற எண்ணம் வேறு என்னைச் சொல்லச் சொல்லித் தூண்டிக் கொண்டிருந்தது. தைரியமாகச் சொல்லிவிடுவதைவிட முக்கியம், சொல்லிவிட்டு அவளை எதிர் கொள்வதுதான் என்ற பயம். வேண்டாம் என்றுச் சொல்லிவிட்டால் “சரி” என்று ஏற்றுக் கொண்டு செல்லும் பக்குவம் இல்லாததாலா இந்த பயம் என்னை ஆட்கொள்கிறது என்றும் யோசிக்கத் தொடங்கியிருந்தேன். தனக்குச் சாதகமான பதில் இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணமே பயத்தை உண்டு பண்ணிச் சொல்லாமல் தடுக்கிறதா என்று யோசனை, “பூவா தலையா” போட்டுப் பார்க்கலாமா என்பது வரை கொண்டு விட்டிருந்தது.

அவளோடு பேசிக் கொண்டிருப்பது மாதிரிதான் தோன்றும், அறையிலிருந்து அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டேன், காபி குடிக்க வரியா? தூங்கிட்டியா? இப்படி என் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிட்டது போன்றே நினைக்கத் தொடங்கிய நாளில் இருந்து தான் காதலிக்கிறேன் என்று நம்பத் தொடங்கினேன். நடந்து செல்லும்போது, லிப்டில் இருக்கும்போது, cab-ல் செல்லும் போது அவளுக்கு மெசேஜில் சொல்லிவிட்டு இருப்பதாய் ஒரு பிரம்மை. எனக்கு அதுவேறு பிடித்துத் தொலைத்திருந்தது. என் எதிரில் தான் இருப்பாள். தைரியமும் பயமும் ஒருசேர வேலை செய்யும். ஐ லவ் யூ என்று சொல்லலாமா, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு என்று சொல்லலாமா என்ற யோசனையின் ஊடே “மன்னிப்பு” கேட்பதற்கும் “sorry” என்று சொல்வதற்குமான மதிப்பீடுகள் ஞாபகத்தில் வரத் தொடங்கியிருந்தன.

துளசியின் கண்கள் நீரோட்டம் நிறைந்தது. அவள் கண்களை எதிர் கொள்ளும்போது ஒரு குளிர்ச்சித் தொற்றிக் கொள்ளும். பசுமையாய், பார்வையை வேறெங்கும் திருப்பாமல் பேச நிறுத்தியது போலிருக்கும். எல்லாம் என் நினைப்பு தான். எனக்கு மட்டும் தானா? மணியைப் பார்த்தேன். DSR (daily status report) போட்டுக் கொண்டிருப்பாள். இன்று மட்டும் என்னோடு ஆறு மாடியும் படிக்கட்டில் இறங்கி வா என்று அழைத்து  படிக்கட்டில் வைத்துச் சொல்லிவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, படிக்கட்டுகளும், குளிர்கால இருட்டும், தனிமையும் காட்சியாய் விரைந்து கொண்டிருந்தது. ஆனால் டயல் செய்ய காண்டக்ட் கூட போக வில்லை. வாட்சப்பில் டைப் செய்து அழிக்கவும் இல்லை. அதையும் மனமே செய்து கொண்டிருந்தது. அவளின் அலைபேசி எண் நினைவில் இருக்கிறதா என்று என்னையறியாமல் எழ, சொல்லிப் பார்க்க  முயற்ச்சிக்கிறேன்  நினைவில் இல்லை.

மூளை எதையோ யோசித்துச் சொல்லிக் கொண்டிருந்தது. அதன் வேகம் கட்டுப்படுத்தும் தன்மையில் இல்லை. “Minutes of meeting” பாயிண்ட்ஸ் குறித்து வைக்கும் ஸ்க்ரிப்ளிங் பேடில் ஒரு பேப்பரைக் கிழித்து வைத்துக் கொண்டேன். அது கோடு போட்ட நோட்டு. வரையறையற்று அலையும் மனநிலைக்கு, கோடு போட்டத்தாள் என்பது முதல் தடையாக இருந்தது. சட்டென்று எழுத முடியவில்லை. என் கையெழுத்து மட்டுமே விதம் விதமாய் போட்டுப்பழகிய எனக்கு, கூடுதலாய் என்ன எழுத?. பணத்திற்கான உள்ளங்கை அரிப்பு என்பது போல, என் மூளை என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தது. இருக்கையின் உயரத்தை ஏற்றுவதும், இறக்குவதுமாய் நிலையின்றி இருந்தேன்; இருந்தது. மனது நமக்குச் சொந்தமான பொருளில்லையோ என்றும் நினைத்துக் கொண்டேன். இத்தனையும் அவள் வெளியேறி இருப்பாள் என்று மணி பார்த்த 5 நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.

 “பயப்பட பயப்படத்தான் காதல் இன்னும் தீவிரம் ஆகும். நிறைய visuals mind-­load  ஆகும். சீக்கிரம் சொல்லிடாதடா பாவி…

ஒருவேளை அவள் நிராகரித்துவிட்டால் சகஜமாகச் சிரித்துப்பேச எவ்வளவு நாள் பிடிக்கும் என்று மீண்டும் தோன்றியது. கூடவே, அவள் உதாசினப்படுத்தினால் தாங்கும் திறன் எனக்கிருக்கிறதா என்ற யோசனையும் வலுப் பெற்றிருந்தது. காதலைச் சொல்லாமலே இருந்தாள் பேசிக் கொண்டாவது இருப்பாள் என்றும் தோன்றியது. அவ்வளவு பலகீனமானவனா நான்? முந்தைய நிறுவனத்தில், என்னைக் கடக்கும் பெண் ஒரு சம்பிரதாயப் புன்னகை வீசிச் சென்று, மறுநாள் அதே போல் பார்க்க நேர்ந்து அவள் சிரிக்கவில்லை எனில் எனக்குச் சிரிப்பு வராது. என்னால் சட்டென சிரித்துவிடவும் முடியாது?. இந்த யோசனை ஓடிக் கொண்டிருக்கும் போதே பொறி தட்டியது. துளசியிடம் நானாக வலிய பேசவில்லை. அவள் தான் பேசுகிறாள். அவள் பேசாமல் இருந்தால், நானும் பேசப்போவதில்லை. “முடியலனன்னு தான லவ்வ சொல்லலாமானு பொலம்பிட்டு இருக்க?” எங்கிருந்தோ என்னை வந்தடைந்திருந்தது.

என் முகம் சீரியசாகத் தெரிகிறதா என்று ஒரு முறை மானிட்டரை ஆஃப் செய்து முகத்தைப் பார்த்துக் கொண்டேன். மிகவும் சலிப்புற்றிருந்தேன். சொல்லாமல் இருப்பதன் செளகர்யம் பற்றி எண்ணத் தொடங்கியிருந்தேன். அப்படியே எந்தன் நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்தாலும் அது அவள் பாடு. பேசாமல் சென்றால் செல்லட்டும். மணி இரவு எட்டரை ஆகியிருந்தது. நான் மணி பார்க்கும்போதா எட்டரை என்று காட்ட வேண்டும்? “மெஸ்-க்கு சாப்பிட வந்திருப்பா” நான் மிகுந்த ஆத்திரம்  அடைந்திருந்தேன். என்னைத் தவிர எல்லோரும் வேலை பார்க்கிறார்கள். ஒருமுறை எழுந்து அமர்ந்தேன். மீண்டும் எழுந்து கழிவறை சென்றேன் யூரிணலில் நிற்கையில்      வேறொரு நாளில் அவள் சொன்னது நியாபகத்திற்கு வந்தது. “இந்த பசங்க ஏன் சினிமா தியேட்டர்லையும் சரி, food court-லையும் தட்தேந்திகிட்டே இருக்றாங்க இவளுகளுக்கு?” சீராகப் போய்க் கொண்டிருந்ததைச் சட்டென்று நிறுத்திக் கொண்டது போலிருந்தது. வாசலருகே சென்று பஞ்ச் பண்ணலாமா என்று யோசித்தப்படி, மீண்டும் உள்ளே சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை மூடிவிட்டு அதன் மேல் அமர்ந்திருந்தேன். இத்தனை நிம்மதியற்றதா இந்த வாழ்வு என்று தோன்றியது. “இதுக்கே இப்படி ஒரு முடிவா”? துளசியிடம் பேச முடியவில்லை என்ற இயலாமை அல்லது பயம் வேலையின் மீது திரும்பியது. இரண்டு மணி நேரம் பெர்மிசன் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்ப முடியலை. என் வேலையின் மீது வெறுப்புணர்ச்சி மேலோங்கியிருந்தது.

எதற்காக, யாருக்காக இப்படி நிர்பந்திக்கப் பட்டிருக்கிறேன்? அறைக்குச் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று வேலை பார்த்தவன் தானே நீ? இந்த வெறுமை எதன் நிமித்தம் ஒட்டிக் கொண்டது? –துளசி –காதல்; நான் என்கிற சுயநலம் மேலோங்கியிருந்தது. இது என் வலி. இதற்கான மாற்று அல்லது தீர்வு காதல் அல்லது துளசி.  என் பலகீனத்தின் வழியே துளசியிடம் பேசாமல் இருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பலகீனம் உண்டு பண்ணிய ஈகோ, ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை, கூடவே அவள் வேண்டுமென்றத்’ தூண்டுதலும் ஒருசேர தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்தது. “U there” என்று என்னை மெசேஜ் அனுப்ப விடாமல் எது தடுத்துக் கொண்டிருக்கிறது? அனுமதிப்பதா காதல்?

காதல் முதன் முதலில் தூக்கமின்மைக்கான சுயமைதுனத்தை நிகழ்த்தியது. இப்போது விரக்தியின் வீரியத்தைக் கட்டுப்படுத்த அழைக்கிறது. இதற்குப் பின் தான் காதலி போல. ஹேங்கரில் கழட்டிப் போட்டிருந்த பேண்டை மாட்டிக் கொண்டு இருக்கைக்கு வந்தேன். இருபது நிமிடம் இருக்கையில் இல்லை. யாருடனாவது பேசிக் கொண்டிருக்க விரும்பினேன். யாராவது வந்து பேசினால் கத்திவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. சிரிப்பு என்னை பயம் காட்டியது. ஸ்க்ரிப்ளிங் பேடோடு அங்குமிங்கும் நடப்பவர்களைப் பார்க்கப் பார்க்க நிதானமிழந்து கொண்டிருந்தேன். “நாசமா போனவகிட்ட சொல்லிட்டு நிம்மதியாகவாது இருக்கலாம்.” தொண்டை வலி எடுத்தது. மீண்டும் மீண்டும் எச்சில் விழுங்கிக் கொண்டே இருந்தேன். வாய் ஊறச் செய்தேன். ஏறி இறங்கும் எலும்பைக் கீழ் நோக்கி அழுத்திக் கொண்டிருந்தேன்.

இத உன்கிட்ட நான் நேரடியா தான் சொல்லணும், ஆனா! இப்பவே சொன்னா மிரண்டு போயிடுவ… இந்த குழுவா வாழுகிற இனங்கள் பார்த்திருக்கியா நீ? பறவைக் கூட்டம், விலங்குக் கூட்டம், மனிதக் கூட்டம். இந்த ஆண் வர்க்கம் எல்லாமே பயந்து போய் தான், தனக்கான துணையைத் தேடி வச்சிக்கிது. இந்தத் “துணை” இது நாங்க உங்கள நம்பி வரதுனால வர்ற வார்த்தை இல்லை. பயத்திலிருந்து காதல் தொடங்கி அந்த பயத்தின் மூலமா ஓரு dependency உருவாகி பெண் இனம் இல்லனா ஆண் இனத்தால வாழவே முடியாதுன்னு ஒரு stage வரும். இந்த பயத்துனால நீங்க பண்ணுற atrocity இருக்கே  Oh God! உங்களோட ego விட்டுக் கொடுக்கிறது இல்லை. தோல் சுருங்கும்போது உங்களுக்கு முன்னாடி பொண்டாட்டி போயிட்டானா வருமே ஒரு open statement! என்ன தவிக்கவிட்டுட்டு போயிட்டாளே அப்படின்னு. இப்போ தான் நீங்க உங்களோட, காதலிச்ச தொடக்க காலத்தை நோக்கி திரும்பி, எப்படி தன்னைத்  தாங்கினானு நினைச்சி உருகி, ஒண்ணுமில்லாம போய்… One more thing! இந்த ஆண் இனம் கூட உருவத்துல மட்டும் தானே தவிர மனசளவுல ஆணும், பெண் தான்னு எனக்குத் தோன ஆரம்பிச்சிருக்கு நகுலன். காதலிக்கும் போது ஒரு பெண் என்னவெல்லாம் எதிர்பார்ப்பானு யோசிப்பானு யோசிக்கிறிங்க. அதேபோல நாங்க எங்களோட ஆண் தன்மைல இருந்து விறைப்பா நிற்போம். நீங்க எங்களுக்கு சேவை செய்விங்க. அதாண்டா தாங்கு தாங்குனு தாங்குறது. அப்புறம் பொண்ணு கை மீறாதுன்னு தோணும்போது, உங்க பெண் தன்மை கொஞ்சம் கொஞ்சமா காணாம போய் மூளைல இருக்கக் கூடிய memories of images தொலைச்சி, உங்க ஆம்பள ego வெளிய எட்டிப்பாக்கும், அப்படியே தான் எங்களுக்கும். முன்னாடி மாதிரி இல்ல. லவ் குறைஞ்சி போச்சி அப்டின்னு நீளும்.. Do you know the freedom of possessiveness? போடா எழுதுற mood இல்ல. 

While we are in love we forgot those images that are stored in our mind. Then the images transform as visuals leading to fight between the Lovers. Crazy “           

 
– (தொடரும்)
ரமேஷ் ரக்சன்
talk2rr@yahoo.com

You can follow any responses to this entry through the RSS 2.0 You can leave a response, or trackback.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*

Powered By Indic IME