துளசியின் டைரி

நாக்குட்டி -2

துளசியின் டைரி

இது முழுக்க முழுக்க என்னோட சுயநலம். எனக்குத் தேவைங்றத உங்கிட்ட இருந்து எடுத்து திருப்தி அடைஞ்சிக்கிற ஒரு கொடூர புத்தி. இது ஒரு வித போதை இல்லைன்னா பசி. எனக்கு ஏத்த மாதிரி உன்ன டிசைன் பண்றது இல்லனா உனக்கு ஏத்த மாதிரி என்ன நான் ரெடி பண்ணிக்கிறது. இதுல எது எப்படி நடந்திட்டு இருக்குன்னு என்னால சொல்ல முடியல. எனக்கு அப்படித்தான் தோணுது.

ஆனா இதெல்லாம் செய்யக் கூடாதுனு நெனைக்கிறேன். ஆனா தோற்கிறேன். எனக்கு இது பிடிச்சிருக்கானு கேட்டா பிடிச்சிருக்கு. ஆனா இத செய்றமேன்னு எனக்கு கோவம் வந்திருக்கு.

என்னோட நகத்த வச்சி நக இடுக்கில் தசையை அழுத்திப் பார்க்கிறேன். வலிக்கும் அளவுக்கு என்னால அழுத்த முடியல. எனக்கு என்னலாமோ ஞாபகம் வருது. பள்ளிக்கூட மரத்தடியில், டியூசன் படித்த வீட்டு முற்றத்தில், விடுதி வராண்டாவில், இருந்து எழுதியது எல்லாமே தரைல தான். மேசை இருந்தாலும் என்னால எழுத முடியாது. தரையின் மீதான இந்த ஒட்டுதல் தான் என் மனதை, பாரத்தை நான் இழுக்கும் இழுப்பிற்கு கொண்டு செல்ல அல்லது எழுதிச் செல்ல முடியுதுன்னு நெனைக்கிறேன்.       

என்னால முடியல

இப்டி இல்லாம இருக்க நெனைக்கிறேன் அதுவும் முடியல. சரி உன்னவிட்டு போயிடலாம்னு நெனைக்கிறேன் அதுவும் முடியல. சரி உங்கிட்ட வந்துடலாம்னு நெனைக்கிறேன் அதுவும் முடியல.

பார்க்றது, பேசுறது, பழகுறது, லவ் சொல்றது, அப்றம் கல்யாணம், இந்த மீல்ஸ் சிஸ்டம் என்னால ஏத்துக்க முடியல.

ஆமா இது தான் என் பிரச்சனை.  இத பிரச்சனைன்னு மட்டும் சொல்லிட முடியல. இது ஒரு வகைல Nature தானே. எனக்கு இது தப்பா தோனல. இதெல்லாம் பேசிப் புரியவைக்கக் கூடிய மனநிலை அத அக்செப்ட் பண்ணிக்ற பக்குவம் கண்டிப்பா உனக்கு கிடைச்சிருக்காது. I Know It.  என்னெப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுன்னு சொல்றது எல்லாம் முட்டாள் தனம்னு நேனைக்றேன்.

அக்செப்ட் பண்ணிக்றதும், புரிஞ்சிக்றதும் ஒன்னா?  

உங்கிட்ட லவ் ஓக்கேன்னு  சொல்லும்போது நான் எல்லாத்துக்கும் ரெடியா இருப்பேன். அப்படி இல்லனா உன்ன, உனக்கு உறுத்தல் இல்லாம ரெடி பண்ணிட்டு சொல்வேன். இது பயம்லாம் இல்ல. ஆனா என்னால கொஞ்சம் கொஞ்சமா நெருங்கவோ எதுவுமோ பண்ணமுடியாது. 

எனக்கு எல்லாமே ஒரே நேரத்துல வேணும். எனக்கு அப்படித்தான் இருக்கு? நான் என்ன செய்ய? இப்ப கூட கைலாம் நடுங்குது. இது பயத்துனால வர நடுக்கம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். நிதானமா இருக்கேன். நிதானமா இருன்னு நானே அடிக்கடி மனசுக்குள்ள சொல்லவும் செஞ்சிருக்கேன். ஆனா இப்போ நிதானமா தான் இருக்கேன். இந்த நடுக்கம் என்ன தெரியுமா நீ பக்கத்துல இல்லைங்கற நடுக்கம். வேணுங்கிற போது, வேணும்ங்ற மாதிரி இல்லைங்கற நடுக்கம். கைக்குள்ள தேடும்போது கிடைக்காம அடையிற ஒருவித எரிச்சல் இல்லனா அழுகை. 

இதெல்லாம் உங்கிட்ட சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஏன்னா எனக்கு மொதல்லயே அப்படித் தான். ஆமா மொதல்லயே கொஞ்ச நாள்ளயே. அப்டித்தான் ஸ்டார்ட் ஆச்சிது. இதுக்கு உன்னையோ என்னையோ குறை சொல்ல விரும்பல. நீ ஆசைப்படுற மாதிரி தான் நானும். உன்மேல இல்ல என்மேல எனக்கு பயம் இருக்கு. எனக்கு அந்த உரிமையும் இருக்குனு நம்புறேன். அதான் இப்டி செய்றேன்.

என்னால நான் எப்டின்னு இப்போதைக்கு ஜஸ்ட் செக்ஸ்ல மட்டும் தான் என்னோட லவ்வ சொல்ல முடியும்னு நெனைக்கிறேன். காதல்ல தன்ன மறக்றது காமத்துல தான்னு நம்புறேன். உடல் வழியா கண்டடையும் மெய்; எனக்கு அப்படித்தான் இருக்கு. நினைச்சி பாக்றதுக்கும், நினைவுக்குமான இடைவெளில தான் இந்தக் காதல் முள்வேலியா படர்ந்து கிடக்றதா தோணுது. 

அதனால தான் தப்ப முடியாதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன். ஆனா இதோட லென்த் என்னங்குறதுல டவுட் இருந்துட்டே இருக்கு இது தான் எனக்கு பிரச்சனை. எனக்கு உன்ன பிடிக்கல அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. எப்படி பிடிச்சிருக்குன்னு ஒன்னு இருக்குல்ல. கொஞ்சம் நியாயமா இருக்க விரும்புறேன். உங்கிட்டேயும் சரி எனக்கு நானே அப்டினாலும் சரி. நான் இதுக்கு சமரசம் செய்றதா இல்ல. 

நம்பிக்கையிருக்கு. நீ அவ்ளோ சீக்கிரம் எந்த முடிவுக்கும் வர மாட்டனு என் மனசு சொல்லிட்டே இருக்கு. ஆமா நீ என்ன தொரத்திட்டு தான் இருப்ப அப்டினு இருக்கு. அது கூட நான் உங்கிட்ட இப்டி நடந்துக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். ஒருவேளை விட்டா நீ போயிடுவ அப்டிங்ற நிலை இருந்துருந்தா நான் வேற மாதிரி யோசிச்சிருப்பேனோ என்னவோ. சொல்லத்தெரியல. 

you know one thing..
am safe now. 

இப்படி தோண ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி. நீ கட்டாயப்படுத்தல ஆனா இதெல்லாம் எனக்கு நானே புகுந்து பாக்குறேன். 

நீ சொல்வியே ரகசியமாய் ரகசியமாய் பாட்ல ஜோதிகா சிரிச்சிட்டே ரோட்ல நடந்து போற மாதிரி நீ எங்கையோ நடந்து போற மாதிரி பாக்றேன்னு… இது மாதிரி உனக்கும் எனக்கும் பொதுவா சொல்ல எவ்வளவோ இருக்கு.

உன்னால என்ன மட்டும் பாக்க முடியுது. ஆனா என்னால உன்ன மட்டும் பாக்க முடியல. கூட நானும் இருக்கேன். ஆமா அந்த கனவு நெஜமாகி அதுல நான் இருக்க விரும்புறேன். எங்க அப்பாவ பத்தி யோசிக்கவோ, சின்ன சின்ன விசயங்கள நினச்சி பாக்கவோ பெருசா என் லைப்ல ஒன்னும் நடந்துடல. பின்னால உங்கிட்ட இந்த உண்மையெல்லாம் சொல்வேன். அதுனால எனக்கு ஆண்கள், காதல் இப்படி எந்த அபிப்ராயமும் எந்த காலத்துலையும் வந்ததில்லை. 

உங்கிட்ட வந்திருக்கு அத தக்க வைக்கனும்னு நெனைக்கிறேன். எனக்கு இது தப்பா தெரியல. ஒரு லிமிட்க்கு மேல என்ன உங்கிட்ட ஓபன் பண்ண முடியல. முடியவும் முடியாது. நீ உன்னோட கிராமம் நீ பார்த்து வளந்த பொண்ணுங்க, இதெல்லாம் வச்சி என்னோட தாட்ஸ் எல்லாம் மொத்தமா இறக்கினா நீ தாங்குறவன் இல்ல நகுல். எனக்கு அழப்பிடிக்காது. ஆனா நீ தவிக்கிறது பிடிச்சிருக்கு அதுனாலயான்னு தெரியல. ஆனா அழுறேன். 

என்ன ஒட்டு மொத்தமா சுமக்குறவனா நீ இருக்கனும். this is not dependent. ஆனா எனக்கு இந்த shadow பிடிச்சிருக்கு.  நான் அத முழுக்க முழுக்க அனுபவிக்க விரும்புறேன். அதனால காத்துட்டு இருக்கேன். உன்னையும் காக்க வைக்கிறேன். உனக்கு இதெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமா தருவேன். எனக்கு நம்பிக்கை என்மேல இருக்கு. 

நான் என்ன  சில சமயம் travel guide மாதிரி இருக்கேனு நெனச்சிருக்கேன். நெறய புக்ஸ் படிக்கிறதால கூட இருக்கலாம். நான் என்ன குழப்பிக்கிறேன். ஆனா உங்கிட்ட சரியா தான் வந்துட்டு இருக்கேன். இந்த குழப்பம் உன்னையும் டார்ச்சர் பண்ணக்கூடாதுனு பாத்துக்க விரும்புறேன். ஆமா இது தான் நான். 

என்னால எழுத முடியல என்னோட fingers எல்லாம் வலிக்குது. நேத்து நைட் இப்டி உக்காந்து அழுவேனு எதிர் பாக்கல. உன்னவிட நான் தான் பலவீனமா இருக்கேனு நேத்து நைட் எனக்கு காட்டிட்ட thanks for that. ஏன் எதுக்குனு நீ கேள்வி கேட்டிருந்தா நான் இவ்ளோ தூரம் வந்துருக்க மாட்டேனு நெனைக்கிறேன் நகுல். 

ஒன்னு உன்னவிட்டு போயிருப்பேன். இல்லனா accept பண்ணிருப்பேன். என்ன இந்த ரெண்டுக்கும் நடுவுல நிக்க வச்சி வேடிக்கை பாக்ற நீ. ஆமா டா. நீ இவ்ளோ அமைதியா எனக்கு ஏத்த மாதிரி நடந்துக்குறத என்னால தாங்க முடியல. நான் இந்த ஸ்டேஜ்க்கு வர first reason இதான்.  இல்லனா எத்தனையோ பசங்க மாதிரி நீயும் போயிருப்ப. 

Yes உன் மேல தான் தப்பு. 

உதடு நடுங்குது எப்படி, எதுக்குன்னு எனக்குத் தெரியல. கண்ணாடியை பார்க்கிறேன் எனக்கு சித்திரவதை செஞ்சிக்கனும் போல இருக்கு. என்னை அறியாமலே கதவு சத்தியிருக்கானு பார்க்கிறேன். சட்டுனு பேனாவ கீழ விட்டுட்டேன். பயம்னு எல்லாம் இத ஒத்துக்க நான் தயாரா இல்ல. எனக்கு காயங்கள் வேணும் அது உங்கிட்ட இருந்து. அத நான் எஞ்சாய் பண்ணனும். எப்பவுமே! ஆமா எப்பவுமே உன்ன விட்டுக்கொடுக்க முடியாது தான். எனக்கு உன்னவிட நான் முக்கியம்.

– (தொடரும்)

ரமேஷ் ரக்சன்

talk2rr@yahoo.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*