இன்பா சுப்ரமணியன் கவிதைகள்

 

நிர்வாணக் கவிதை
.

என் கவிதைக்கு சட்டையொன்று தைத்தேன்
வண்ணப்  பூக்களும்
பச்சைக் கிளிகளும்
குட்டிப் பூனையும்
அதில் பின்னி வைத்தேன்

ஊவா முள்ளாய் குத்தும்
கிசுகிசுக்கப்பட்ட  வார்த்தைகளில்
ரணப்பட்ட மனசை
தேனில் குல்கந்து கலந்து
சரிபடுத்தினேன்

ஆளுக்கொரு அம்பெய்தி
சட்டையை கிழித்தெறிய

எல்லோரையும் உற்சாகப் படுத்தி
முழு நிர்வாணமாய்த் திரிகிறது
எனது கவிதை ..
*

மழை நீரின் சுவை
.
பால்ய கால நாளொன்றில்
ஈர மண்ணில் கால் புதைய
நடந்தேன் வனமெங்கும்
தட்டாம் பூச்சி
செடிக்கு செடி பறந்தது

வண்ணத்துப்பூச்சி
மேகமென தரையில் மிதந்து சென்றது
முதிய மரங்களில் இலைக்கொன்றாய்
பூத்து கிடந்தன பறவைகள்

எல்லா மரத்துப்பரவைகளிடமும்
கொஞ்சிப் பேசி
களித்துத் திரிந்தன மந்திக்கூட்டம்

வனத்தின் பேச்சரவம்
சொல்லாடத்துவங்கியது
அவ்வனத்தின் மொழியை
மொழி பெயர்க்க துவங்கினேன்

பறவைகள்
மந்திகள்
மரங்கள்
கொடிகள்
இலைகள்
மலர்கள்
கனிகள்
கரையில்லா களிப்பு மொழி பேசியது

பின் வந்த முது கோடை நாளில்
ஊழியில் பிடுங்கி எறியப் பட்டன  மரங்கள்
கோடரி கொண்டு வெட்டப்பட
பயமும் வலிகளும்  ..

மரணத்தின் நிறத்தோடு இருந்தது வனம்
கழைத்து சோர்ந்தது தனிமை

பிறிதொரு நாள் மழைக்காய்
வேப்பமரத்தடியில்  ஒதுங்கிய பொழுது
அருந்திய மழை நீர்
மழை நீரின்
சுவையோடு தான் இருந்தது…

*
புது இசையாய்
.

பாதியாய் மூடிய கண்களை
சோம்பலாய் வீசிய காற்று
திறக்க முயன்றது
பிரித்து குப்புற கவுத்திக் கிடந்த புத்தகத்தின்
ஏழாவது  அத்தியாயத்தில்
உடை களைந்து கூடிக்கொண்டிருந்த இணை
கெக்கலித்து விமர்சித்தக்  காற்றை
அணிந்து கொண்டனர்
கதிரவனும் சந்திரனும் இணைந்த
ஒளி ஓவியத்தை
இருள்  போர்த்தி மறைத்தது அமாவாசை

தவிட்டுக் குருவியும்
கரிச்சான் குஞ்சும்
என் கணவைக்  கடந்து பறந்தது

உருளையாய் உருளும்  உணர்வுகள் மீது
சிலிர்த்தும் உரத்தும் பெய்தது மழை

கனத்த இமைகளுக்குள்
ஒளிந்து கொண்டது உறக்கம்

இசைக்கப்படா புது இசையாய்
புதிய கணவுகள் …..
*
இறந்த மீன்களின் கண்களென
.
குஞ்சுகள் பின்தொடர
குப்பையில் இறை தேடிய
கோழியின் கழுத்து
மளுக்கென  திருகப் பட
சின்ன உடலில் ஒளிந்திருந்த
உயிர் கண்வழியே வெளியேறியது
தழைகளை அசைபோட்டபடி இருந்த ஆடு
ஒரே வீச்சில் கழுத்து அறுபட ,
நிலைத்த கண்களின் வழியே
உயிர் பயம் காட்டி அடங்கியது

றெக்கை முறிபட்ட பறவை
ஒருவர் கையிலும் சிக்கிவிடாமலிருக்க
இலைகளினூடே மறைந்து கொண்டது
சில நினைவுகளையும்
நெகிழ்ந்த காமத்தையும்
உயிரினுள் பொதித்து
மறைத்து வைத்தேன்

இறந்த மீன்களின் கண்களென
துருத்தி இருந்தது
காலம்

*


இன்பா சுப்ரமணியன்

1

1 thought on “இன்பா சுப்ரமணியன் கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*