சாவுக்குருவி

1

சிந்துஜன் நமஷி

அதிகாலை இருளும் அதனை மீறும் கீழ் வானின் ஒளிக்கதிர்களுமென்று வானம் கென்வசில் வரையப்பட்ட நீர்வர்ண ஓவியம் போலவிருந்தது. அந்த அடர் நிற வானுக்குளிருந்து தான் தவிட்டு நிறத்தில் ஒரு சாவுக்குருவி பறந்து வந்தது. ரொசய்றோவின் வீட்டை மூன்று முறை சுற்றி வட்டமடித்துக் கத்திவிட்டு மீண்டும் ஒரு திசை  முடிவிலியின் வழியில் பறந்து மாயமாகிப் போனது.

மலைமுகடுகள் மீது பட்டுத் தெறித்த சாவுக்குருவியி்ன் சத்தம் கேட்டு ஐன்னல் கம்பிகளுக்கு இடையே முகத்தை புதைத்துக்கொண்டு சாவுக்குருவி தெரிகிறதா ? என்று வானை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிடுந்தார் ரொசைறோ. கொம்புகள் மீது மலைப்பாம்பு நகர்வதைப்போல அவரது வலது கைவிரல்களிடையே ஜபமாலை அசைந்துகொண்டிருந்தது.

படித்துக்கொண்டிருந்த விவிலியத்தின் பக்கங்களுக்கு இடையே சிவப்புநிற வெல்வெட் நாடாவை வைத்து மூடி முக்காலி மீது வைத்தார். எழுந்து போய் சுவரைத் துழாவி ஆழியை போட்டதும் மின்குமிழின் மஞ்சள் வெளிச்சம் வெள்ளைக்காரன் காலத்து சுண்ணாம்புச்சுவர் மீது வடியத் தொடங்கியது.

ரயில் வருவதற்காக எக்ஸ் 2 கடவை மூடப்பட்டு அபாய மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. நேரம் என்ன? ஐஞ்சு மணி இருக்குமா? மனதுக்குள் நினைத்துக்கொண்டே கடிகாரத்தைப்பார்த்தார். அது ஐந்து இருபதைக் காட்டிக்கொண்டிருந்தது. ரொசைறோ ஸ்ரேசன் மாஸ்டராக இருந்து ரிட்ரயர்ட் ஆனவர்.  ரயில் என்ஜின் சத்தத்தை வைத்தே அது ஜெர்மன் மேட்டா இல்லை ரஷ்யன் மேட்டா என்று சொல்லி்விடுவார். நேரம்தான் கொஞ்சம் முன்ன பின்ன ஆகி விடும். கேட்டால் இது என்ன ஜப்பானா ? வெள்ளக்காரன் வந்திருக்காட்டி இண்டைக்கு வரைக்கும் இங்க ரயினே வந்திருக்காது என்பார். அவருக்கு இது சொந்த ஊர்கூட கிடையாது. இங்கு அவரும் மனைவி எஸ்தரும் வந்து பல வருடங்களாகிறது.  உறவு என்று யாரும் வந்து போவதில்லை. பிள்ளைகள் கூட இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.  ஊர் மக்களுக்கும் அவர் மீது பெரிய மரியாதை உண்டு.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். கண்களைச்சுருக்கி வானில் சாவுக்குருவி தெரிகின்றதா என்று நோட்டம் விட்டார் ரொசைறோ.

நீண்ட நாட்களாக எண்ணெய் பார்க்காத இரும்புப்படலை “கிரீச்ச்ச்” சத்தத்தோடு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். செல்வா சைக்கிளோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் .

“சேர் ! குட் மோனிங் சேர்! என்ன? இண்டைக்கு நேரத்தோட எழும்பிற்றீங்களோ?”

பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தார் ரொசைறோ .

“போங்க சேர் போய் பாத்திரம் எடுத்திட்டு வாங்க”

” குட் மோனிங் ”                                                                    

“இண்டைக்கு பால் வேண்டாமடா செல்வா “

“வேண்டாமா ? ஏன் சேர்”

“எஸ்தர் செத்துப் போச்சுடா !

” எப்ப சேர் ??? “

” இண்டைக்குத் தான் சாமம் ரெண்டு மணி போல இருக்கும். மனம் கிடந்து அடிச்சிட்டே இருந்துச்சு. எழும்பி போய் எஸ்தர் பக்கத்திலயே இருந்தன். நான் வந்தது தெரிஞ்சு உடனே முழிச்சிட்டா. பத்து நிமிசமா என்னயே பாத்திட்டு இருந்தாடா அப்பிறம் ஒரு கண்ணில மட்டும் கண்ணீர் வந்துச்சு. அத துடச்சி விட்டன். அப்பவே போய்ட்டா.. “

” யாருக்கும் சொல்லலயா இன்னும்? “

” சொல்லி… சொல்லி என்ன ஆகப்போகுது? எல்லாரக்கும் தெரிஞ்சது தானே. அதுபோக எதுக்கு மத்தவங்களுக்கு அந்த சாமத்தில வீண் தொல்ல அதான் விடியட்டம் எண்டு பாத்தட்டு இருந்தன் “

“சரி நீங்க உள்ள போய் இருங்க.. நான் சொல்லி விடுறன் எல்லாருக்கும்”

அவரின் பதிலுக்காக காத்திருக்காமல் குருளைக் கற்கள் கொட்டிக்கிடக்கும் பாதையில் சைக்கிளை  உருட்டிக் கொண்டு அதன் மீது பாய்ந்து ஏறி வேக வேகமாக உழக்கத் தொடங்கினான். அந்த இடத்திலிருந்து கொண்டு  கொண்டை ஊசி வளைவுகளில் செல்வா மறையும் வரைக்கும் அவன் மீது வைத்த கண்ணை அங்கு இங்கு நகர்த்தாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றார் ரொசைறோ.

 வீட்டின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் திறந்துவிடப்பட்டன. சகல வாயில்களாலும் நுழைந்த மலைக்காற்று புதிதாய் நடை பழகிய குழந்தையாய் அந்த வீடு முழுதும் விளையாடித் திரிந்தது.

அந்த வீட்டிலிருந்து முழுவதுமாய் தொடர்பறுத்தது போல கொல்லைப்புறத்தில் வெளிவாசல் கதவோடு இருந்தது ஒரு தனி அறை. ஒரு காலத்தில் ஸ்ரோர் றூமாக பாவிக்கப்பட்ட அந்த அறையில் தான் இத்தனை நாளும் எஸ்தர் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள். கைகளை வைத்துத் தள்ள அந்த சிறகுக்கதவுகள் திறந்து கொண்டன. திறந்த வேகத்தில் ரொசைறோவின் முகத்திலடித்துக் கடந்து போனது சாதாரண மனிதர்களால் சகிக்கவோ சுவாசிக்கவோ முடியாத வாடை.

அன்றுதான் யாராவது முதன்முதலாக அந்த வாடையை நுகர்வார்களேயானால் அந்த இடத்திலேயே வாந்தி எடுத்து விடுவார்கள் பலவீனமானவர்களாயிருந்தால் மயக்கமே வரும் , அப்படியொரு ரத்தக் கவிச்சியும் , சீழும் கலந்த வாடை அது .

அந்த அறையின் எதிர்ப்பக்கச்சுவரோடு போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் ஈரச்சாக்கைப்போல கிடந்தாள் எஸ்தர் . ஜன்னல்களில்லாத அந்த அறையில் கூரையின் இரண்டு ஓடுகளைக் கழற்றி வெளிச்சம் வருவதற்காக அதே இடத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது .சூரிய ஒளி அந்த சதுரவடிவ கண்ணாடியினூடு ஒரு வெளிச்சத்தூண் போல அறைக்கு மத்தியில் இறங்கிக்கொண்டிருந்தது .தோளில் கிடந்த துண்டால் தரையைக் கூட்டிவிட்டு எஸ்தரின் காலடியில் போய் அமர்ந்து கொண்டார் ரொசைறோ .

இந்த நிமிசம் வரைக்கும் பெயரோ , மருந்தோ தெரியாத வியாதி எஸ்தருக்கு வந்தே கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களிருக்கும் . ஆரம்பத்தில் பிளேடால் கிழித்தது போன்ற கீறல்களே உடல் முழுவதும் தோன்றியது. வெறும் இரண்டு வாரங்களுக்குள் அது என்ன, ஏது என்று தெரிந்து கொள்வதற்குள் அந்த கீறல்கள் வெள்ளரிப் பழம் போல வெடித்து அகலமாகவும், ஆழமாகவும் மாறியிருந்தன . சிலது சதை வரை பரவி உலர்ந்து போன செந்நிறரத்தம் பூவின் நிறத்திலிருந்தது.  அத்தனை ஆழமில்லாத வெடிப்புகள் மெல்லிய மஞ்சள் நிறத்திலும் இருந்தன. நீர் போன்ற நிறமற்ற திரவம் கசியத்தொடங்கி பின்னாட்களில் ரத்தமும், ஊனும், சீழும் அந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அப்போதுதான் எஸ்தரின் உடலிலிருந்து ஒருவிதமான வாடை வெளியேறுவதை அவர்களால் உணர முடிந்தது. அடுத்தடுத்த நாட்களிலேயே யாராலும் அந்த வாடையை சகித்துக்கொள்ள முடியாமல் போனது.

எஸ்தருக்கு வந்திருக்கும் நோய் பற்றியும் அவளது உடலிருந்து வரும் வாடையைப் பற்றியும் வெளியில் ஊர்சனம் அரசல்புரசலாய் கதைப்பவை எல்லாம் தன் காதுபடக் கேட்ட பிறகு அவர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பதை நிறுத்திக் கொண்டார். நாட்கள் போகப்போக அந்த நோய் எஸ்தரின் முள்ளந்தண்டையும் தாக்கி எழுந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள்.

அவர் சக்திக்கு மிஞ்சியும் இந்த தேசத்தின் எந்த மூலை முடுக்கிலெல்லாம் எஸ்தரின் நோயிக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பினாரோ அத்தனை நீள அகலங்களுக்கும் அவளை சுமந்திருக்கிறார் . ஓய்வு பெற்ற பிறகு வங்கியில் இருந்த மொத்த சேமிப்பையும் வெளிநாட்டிலிருந்து வந்த டாக்டர்கள் முதல் பில்லி சூனிய மந்திரவாதிகள் வரைக்கும் கொட்டி, இதற்கும் மேல் எதுவும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்த ஒரு நாளில் இந்த அறை துப்பரவு செய்யப்பட்டு இதே கயிற்றுக் கட்டிலில் கிடத்தப் பட்டவள்தான். இன்று இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக  ஊருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர்வை தாறுமாறாக கலைந்து, கணுக்காலுக்கு கீழே வெளியில் தெரிந்தது. தன் ஆள்காட்டி விரலால் எஸ்தரின் உள்ளங்காலில் கோடு வரைவதைப்போல தடவிப்பார்த்தார். அது நன்கு முதிர்ந்த மலைவேம்பு மரத்தின் பட்டைகளைப் போலப் பாளம் பாளமாக வெடித்துப் போயிருந்தது. அந்த வெடிப்புகளினுள் ரத்தமும், சீழும் காய்ந்து போயிருந்தது. போர்வையின் ஒரு மூலையைப் பிடித்து சுண்டி இழுத்து அதை பந்து போல சுருட்டி தூர வீசினார் . எஸ்தரின் உடையைக் கிழித்தெடுத்தார். அந்த பழந்துணி அடம்பிடிக்காமல் இலகுவாக சரசர வென்று பிரிந்து வந்தது. எஸ்தரின் நிர்வாணம் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து போன காட்டு விலங்கொன்றின் எச்சத்தப்போல இருந்தது  .

கணுக்கால், தொடை என்று நாள்பட்ட காயங்களிருந்தன . மார்பகங்களுக்கு கீழும்  வயிற்றிலும், கழுத்திலும் பெரிய காயங்கள் இருந்தது. அது தவிர சின்னச் சின்ன வெடிப்புகள் அதிக அளவில் இருந்தது. அவள் இடது கையை பிடித்து உடலை குப்புற திருப்பிப்போட்டார். முதுகு முழுவதுமிருந்த காயங்கள் அவிந்து போயிருந்தன. படுக்கைப் புண்களினுள் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.

பாத்திரம் முழுதும் தண்ணீர் கொண்டு வந்து அதில் பஞ்சை நனைத்து உடல் முழுவதுமிருந்த காயங்களினுள் அழுத்தித் தேய்த்து சுத்தப்படுத்தினார் . இதற்குப் பிறகு இந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கப்போவதில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது . ஒரு தேர்ந்த ஓவியன் கண்கள் வரைவதைப்போல அத்தனை நுணுக்கமாய் ஈரப் பஞ்சால் காயங்களை துடைத்தெடுத்தார். தரையில் அவர் காலைச்சுற்றி ரத்தமும், சீழும் ஊறிய பஞ்சுத் துண்டுகள் இறைந்து கிடந்தன. வாசனைப்பவுடரை கைகளிரண்டிலும் கொட்டி அவள் உடல் முழுதும் தடவி விட்டார்.

எஸ்தரின் கூந்தல் காட்டு மரங்களின் கொடி போல முறுக்கி திரண்டுபோய் இருந்தது. முடிந்தவரை சிக்கெடுத்து பின்தலையில் நிற்குமாற் போல் கொண்டை கட்டிவிட்டார். வெள்ளை நிற நீண்ட கவுன் ஒன்றை உடுத்திவிட்டார். கால் கையை நீட்டி கட்டிலில் கிடத்தினார். அங்கிருந்து எழுந்து சில அடி தூரம் போய் எஸ்தரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இத்தனை நாள் தாம்பத்திய வாழ்க்கையின் ஞாபகப் படிமங்கள் கட கடவென்று அவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. மெல்ல ஒரு விசும்பல், தொண்டை  உலர்ந்து உதடுகள் துடிதுடித்துக் கொண்டிருந்தது. வேகமாய் ஓடிவந்து எஸ்தரை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டார். இரண்டு துளி கண்ணீரோடு அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவள் காதுகளுக்குள் முணுமுணுத்தார்.

யு ஆர் எ ஜெம் !

யு ஆர் எ ஜெம் !!

இப்போது மீண்டும்  ஒரு முத்தம் முன்பு தந்ததிலும் அழுத்தமாக .

செல்வா சொன்ன சாவுச்செய்தி கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். வீட்டு விறாந்தையில் அடுக்கி வைக்கப்பட்ட மலர் வளையங்களுக்கும், இறைந்து கிடந்த பூக்களுக்கும் இடையில் எஸ்தர் பேழையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள்

டெட்டாலை வாளி வாளியாகக் கரைத்து எஸ்தரின் அறை முழுதும் ஊற்றி தரை , சுவரை தேய்த்துக் கழுவினான் செல்வா. எஸ்தர் அணிந்திருந்த ஆடையையும், இத்தனை காலமும் கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த போர்வையையும் செத்த பாம்பை தூக்குவது போல நீண்ட தடி ஒன்றில் தூக்கி கொல்லைப்புறத்து வெளி மீது வீசி எறிந்தான். கயிற்றுக் கட்டிலை உடைத்து தீ வைத்தான்.

நண்பர்கள், மிக நெருங்கிய உறவுக்காரர்கள் என்று சொச்ச மனிதர்கள் அந்தச் சிதையை இடுகாடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தார்கள் . பேழை கயிற்றில் குழிக்குள் இறக்கப்பட்டது. குழி மூடப்பட்டு மண்ணை குமித்து அதன் மீது மலர்வளையங்கள் சாற்றி வைக்கப்பட்டன. வானம் இருட்டி தூறல் போடத்தொடங்கியது. யாரோ கொண்டு வந்த மலர்வளையமொன்றில் ஒட்டப்பட்டிருந்த எஸ்தரின் கருப்பு வெள்ளை புகைப்படம் மழைத்துளிகளில் கரைந்து கொண்டிருந்தது .

“சேர்”

“போவமா”

பின்தோளை அழுத்தினான் செல்வா.

“நீ போ நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வாறன்”

“சரி! கவனமா வாங்க நான் வீட்டை போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாறன்”

செல்வா போனபிறகு அங்கிருந்த கல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கல்லறைகளும், நாவல்நிற பூ பூக்கும் ஜகரந்தா மரங்களும் மட்டுமே இருந்தன. அவற்றின் பூக்கள் கல்லறைகளின் மீது கொட்டிக் கிடந்தன. ஆனால் இங்கு எந்த மரங்களும் தம் உதிர்ந்த பூக்களை நினைத்து கவலை கொள்வதாய் தெரியவில்லை மீண்டும் மீண்டும் பல லட்சக்கணக்கான பூக்களை நாளாந்தம் மலர்வித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பூவை எடுத்து நுகர்ந்து பார்த்தார். அது இன்னமும் வாசனை பரப்பிக்கொண்டு தான் இருந்தது. மனிதனும் பூவைப்போல தானே. இறந்த பிறகும் அவன் இந்த பிரபஞ்ச வெளிக்குள் தானே தூவப்படுகிறான்.

எந்த வழியால் எஸ்தர் ஊர்வலம் வந்ததோ மீண்டும் அதே வழியால் வீட்டுக்கு நடந்து வந்தார் ரோசைறோ. தங்களுக்கு என்று பிள்ளைகள் கூட இல்லாத முதுமையை இருவருமே பல வருடங்களாக ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். யார் முந்திக்கொள்ளப் போகிறோம்? யார் தனித்துவிடப்பட போகுறோம்? என்ற திரைமறைவு ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் யார் வென்றவர்? தோற்றவர்? இருப்பவரா இல்லை இறந்தவரா? காலத்திடம் கேட்டால் “இருப்பவன் பாவி” என்று சொல்லும். இப்போது நுழையப் போகும் வீடு தொடங்கி தன் கடைசி நாள் வரைக்கும் பீடிக்கப் போகும் வெறுமை தன் பெருங்கரங்களால் அவரை அழுத்திக் கொண்டது.

யாருமில்லாமல், ஒரு அகல்விளக்கு கூட ஏற்றாமல் வீடு “ஓ” வென்று கிடந்தது. விறாந்தை முழுதும் இறைந்து கிடந்த உதிர்ப்பூக்களை தோளில் கிடந்த துண்டால் கூட்டிவிட்டு கை, காலை நீட்டி குப்புறப்படுத்துக் கொண்டார் .மரணம் போன்றவொரு ஆழ்ந்த தூக்கம் இப்போதைக்கு எல்லா வெறுமைகளையும் அடுத்த ஒரு மணி நேரத்துக்காவது தள்ளிவைக்கும் என்று நம்பினார் ரோசைறோ. ஆனால் மனம் உடலின் எதிர்திசையில் நகர்ந்து கொண்டிருந்தது .

மெல்ல மூச்சு திணறியது, யாரோ கழுத்தை இறுக்குவது போலவொரு உணர்வு. பெரும் சத்தத்தோடு இருமினார். நுரையீரல் பூக்களின் வாசத்தை துப்பித்தள்ளியது. அவர் தேவை அவருக்கு மட்டும் புரிந்தது. எழுந்து எஸ்தரின் அறைக்குள் ஓடினார். டெட்டால் வாசம் நாசியை அரித்தது. அதையும் தாண்டி சுவர்களிலும், தரையிலும் அப்பியிருந்த ரத்தமும், சீழும் கலந்த நெடியை முகத்தை அதன்மேல்  தேய்த்து, தேய்த்து உறிஞ்சத் தொடங்கினார். ஆனாலும் அவர் தேவைக்கு அது போதுமானதாய் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல கொல்லைப் புறத்துக்கு ஓடி வந்தார்.

மாந்திரீகனின் வசியம் போல எங்கோ ஒரு மூலையில் இருந்து அந்த வாடை அவரை ஈர்த்துக் கொண்டிருந்தது. வேலி மீது வீசப்பட்டு கிடந்த எஸ்தரின் போர்வையை கண்டு கொண்டார் . முட்கம்பிகள் கிழிக்காமல் பத்திரமாய் அதை பிரித்தெடுத்து மீண்டும் வீட்டுக்குள் ஓடினார். போர்வையைச் சுருட்டி எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்து ஆழஆழமாக மூச்செடுத்து விட்டார். கல்லறைகளின் மீது கிடந்த பூக்கள் உதிர்ந்த பிறகும் வாசம் பரப்புவது போல, எஸ்தரின் எச்சம் போர்வையில் கசிந்து கொண்டிருந்தது. இப்போது கத்தி அழவேண்டும் போல இருந்தது அவருக்கு. வாயும், மனமும் விலாசமாக திறந்து கொள்ள அழுது தீர்த்தார். பெரும் பாரமிறங்கியது போல இருந்தது.

விறாந்தையில் எஸ்தரின் போர்வையை விரித்தார். தன் சட்டை, வேட்டியை களைந்து அவர் நிர்வாணத்தை போர்வை மீது கிடத்தினார்.

சாப்பாடு கொண்டு வந்த செல்வா கதவை தட்டிக்கொண்டு நின்றான். நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அப்போது அந்த இரவே அதிர, அலறியபடி ஒரு சாவுக்குருவி தாழ்வாகப் பறந்து போனது.

***

சிந்துஜன் நமஷி – கொழும்பூவில் வசித்து வரும். கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார். அண்மையில் இவரது கவிதைத் தொகுப்பு “போர்கால ராஜாளிகள்” எனும் பெயரில் வெளியானது. தொடர்புக்கு – “[email protected][email protected]

1 COMMENT

  1. நல்லகதை
    எஸ்தரின் நோயின் விபரமும் அந்த வாசமும் வாசிக்கும் போதே நம்மைச் சுற்றுவது போலிருந்தது.
    எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here