Thursday, March 28, 2024
Homeஇலக்கியம்ரக்த மணம் - சுரேஷ் பிரதீப்

ரக்த மணம் – சுரேஷ் பிரதீப்

1

புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. பழைய அரசாங்கத்தை எதிர்த்து நடந்த நீண்ட கிளர்ச்சியின் போது இந்த அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்றிந்த அவரை பாராட்டி நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரைகள் காரணமாக எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது. நான் நினைத்துக் கொண்டிருந்த அளவு அவர் ஒன்றும் நல்லவரில்லை என்று தெரிந்து நான் விலகிவிட்டாலும் அவரைப் பற்றிய என் சொற்கள் ஒரு வலி நிவாரணியாக அவருக்குள்ளே தங்கிவிட்டிருந்தன என்று நினைக்கிறேன். கிளர்ச்சி வென்ற மறுநாள் வேலை இல்லாமல் விட்டேற்றியாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு புதிய அரசாங்கத்துக்கான பணத்தினை அச்சிடும் தொழிற்சாலைக்கு மேலாளராக நான் நியமிக்கப்பட்டிருக்கும் பணி ஆணை வந்தது.

2

பணம் அச்சடிக்கும் பணிகள் அதன்போக்கில் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் எவ்வளவு நோட்டுகள்  அச்சிடப்படுகின்றன என்ற கணக்கு அன்று மாலை எனக்கு வரும். அதில் எந்த நோட்டுக்கட்டையும் பிரித்துப் பரிசோதிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தது. நான் அமர்ந்திருக்கும் விசாலமான அறைக்குள் இருந்த தடித்த கதவுகள் கொண்ட மிகப்பாதுகாப்பான அறையில் பணக்கட்டுகளை வைப்பார்கள். இரவுப்பணிக்காக வரும் இன்னொரு மேலாளரிடம் நான் பொறுப்பினை ஒப்படைத்து புறப்பட வேண்டும். பணத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பது அவரது பணி. எனக்கு பகலில் பெரிதாக வேலை ஒன்றும் இருக்காது. நோட்டுகள் அச்சடிக்கும் இந்த கட்டிடம் புது அரசாங்கம் கிளர்ச்சி குழுக்களில் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடமாக இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் பழைய அரசின் தலைவருடைய ஆசிரியரின் முகத்துடன் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைய தலைவரின் ஆசிரியர் என்று நம்பப்படுகிறவரின் முகத்துடன் புது நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நாடு முழுவதும் தொடங்கின. தலைநகரின் மையத்திலும் அதேநேரம் புழக்கம் குறைவாகவும் இருந்த இந்த கட்டிடம் நோட்டுகளில் பெரும்பகுதியை அச்சடித்தது என்றாலும் மேலாளரான நான் பகல் முழுக்க வெறுமனே அமர்ந்திருந்தேன். ஒரு வாரத்திலேயே என் வேலை வெறுமனே அதிகாரம் செய்வதுதான் என்று தெரிந்துவிட்டது. ஆனால் அந்த அறிதல் ஏற்பட்ட மறுநாளில் இருந்து மனதில் சஞ்சலம் கலந்த பயம் ஏற்படத் தொடங்கியது. கனத்த மௌனத்துடன் நிலைத்திருக்கும் என் அலுவலக அறை என் பயத்தை பல மடங்கு உயரச் செய்தது. கட்டிடத்தைவிட்டு நான் வெளியேறிச் செல்ல யாரிடமும் அனுமதி கேட்க வேண்டாம் என்றாலும் பயத்தின் காரணமாக நான் வெளியே செல்லவில்லை.

3

மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாள் அரசின் தலைவர் மறுநாள் என் அலுவலகத்தை பார்வையிட வரப்போவதாக எனக்கு தகவல் வந்தது.   தகவலைச் சுமந்து வந்த கடிதம் விலையுயர்ந்த வழவழப்பான பொன்னிற உறையில் போடப்பட்டிருந்தது. கடிதம் எழுதப்பட்டிருந்த தாளும் அதுவரை நான் தொட்டறிந்திராத மென்மையை கொண்டிருந்தது. தலைமைச் செயலகத்தின் அரக்கு முத்திரை தாளில் புடைப்பாகத் தெரிந்தது. அந்தப் பொன்னிற உறையை உதவியாளனிடமிருந்து வாங்கியபோது எங்கள் அரசின் தலைவரையே கையில் வாங்குவதாக உணர்ந்தேன். அந்த உறையின் மறுமுனையில் உதவியாளன் இருந்தான். உதவியாளனிடம் நான் எதையும் எழுந்து பெறக்கூடாது. அவன் அமர்ந்தபடி எதையும் என்னிடம் கொடுக்கக்கூடாது. ஆனால் அவன் கையில் இருந்த உறையின் முன் எனக்கு அமர்ந்திருக்கத் தகுதியில்லை. அவன் உறையை நீட்டியபடி “நம்முடைய அளவற்ற வளமும்  உயர்ந்த லட்சியங்களும் நிறைந்த சமத்துவம் உறுதிப் பட்டுவிட்ட தேசத்தின் மேதகு  தலைவர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கொரு கடிதம் வந்திருக்கிறது அய்யா” என்று வழக்கமாக என் முன் காண்பிக்க வேண்டிய பணிவுடன் கூடுதலாக உறைக்கு கொடுக்க வேண்டிய பணிவினையும் இணைத்துக் கூறினான். நான் தத்தளிப்பு அடங்காதவனாக இருந்தேன். எழுந்து வாங்கிக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்வது இந்த உதவியாளனால்  வெளியே பரப்பப்படலாம்.

“நம்முடைய மேலாளர் ஒரு கோழை” என்று அவன் சக ஊழியர்களிடம் சொல்லலாம்.

தன் மனைவியிடம் “அந்தப் பேடி மகன் என்னைப் பார்த்து எழுந்து நின்றான் தெரியுமா” என்று அந்தரங்கமான ஒரு நேர்த்தில் சொல்லலாம். அவள் அவன் கணவனுக்கு கிடைத்த அங்கீகாரத்துக்காகவும் கணவனின் தைரியத்துக்காகவும் அவனுக்கு கூடுதலாக ஒரு முத்தம் தரலாம்.

என் உடல் எரிந்தது. நான் உட்கார்ந்தபடியே கடிதத்தை வாங்கினால் அது சாதாரணமானதாக கடந்து செல்லப்படும். இந்த உதவியாளனின் சீரான மன அலையில் அது எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணாது. முன்னதை அவன் வெளியே சொல்வதற்கான வாய்ப்பினை விட பின்னதைச் சொல்வதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் அந்த உறையை உட்கார்ந்தபடி வாங்குவது மிகப்பெரிய குற்றமெனத் தோன்றியது. அந்த உறையின் மேலே பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரையிடம் மானசீகமான மன்னிப்பை கேட்டுக்கொண்டு அமர்ந்தபடியே அதனை வாங்கினேன். மனதளவில் நான் உண்மையாக மன்னிப்பு கேட்ட கணம் பெரும் விடுதலை உணர்வை அடைந்தேன். அரசாங்கம் என்னிடம் கனிவுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை மீண்டது. தலைவரின் புன்னகை தவழும் முகமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையூட்டும் அவரது தீர்க்கமான கண்களும் என் தேசத்தை உலகின் அத்தனை துறைகளிலும் முதலாவதாக கொண்டுவந்து நிறுத்த கண் துஞ்சாது அவர் உழைப்பதும் என் நினைவுக்கு மீண்டன. அவரை இதயமென்றும் மூளையென்றும் கொண்டு இயங்கும் ஒரு அரசாங்கத்திடம் என்னை சரணாகதியென முன்வைப்பது எனக்கு அளவற்ற பெருமிதத்தை கொடுத்தது.

உதவியாளனை வெளியே அனுப்பிட்டு நிசப்தமான என் அறையில் நடுவே போடப்பட்டிருந்த என் மேசையின் மையத்தில் அந்த உறையை வைத்தேன். மையத்தில் இருப்பதற்கென்றே பிறந்தது போல என் மேசையின் மத்தியில் அது இருந்தது. என் கைகளில் ஏதும் அழுக்கு தங்கி இருக்கிறதா என்று பார்த்து இல்லையென்று உறுதி செய்து கொண்ட பின் அந்த உறையை மரியாதையுடன் கையில் எடுத்தேன். உறையின் மேல் முனையை என்னிடம் இருப்பதிலேயே தூய்மையான சிறு கத்தியால் மிகுந்த துல்லியத்துடன் பிரித்தேன். அழகிய தங்க மீனைப் போல பளபளப்பான உறை வாய் திறந்தது.  நீண்ட முத்தினை போல அக்கடிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

‘பழமையின் மிடிமைகள் ஒழிந்தன
புத்துலகம் பிறந்தது…’ என்று தொடங்கும் பதினான்கு வரிப்பாடலுடன் கடிதம் தொடங்கியது.

‘அளவற்ற வளமும்  உயர்ந்த லட்சியங்களும் நிறைந்த சமத்துவம் உறுதிப்பட்டுவிட்ட தேசத்தின் மேதகு  தலைவர் நாளை உங்களது அலுவலகத்திற்கு ஒரு பார்வையிடலுக்காக வருகிறார். தேசத்தின் எத்தனையோ நிறுவனங்கள் அளவற்ற வளமும்  உயர்ந்த லட்சியங்களும் நிறைந்த சமத்துவம் உறுதிபட்டுவிட்ட தேசத்தின் மேதகு  தலைவரின் வருகைக்காக காத்திருக்க அவர் உங்கள் நிறுவனத்தை தேர்வு செய்திருப்பது பெருமைக்குரியது. தலைவரின் வருகைப்பொழுதை மகிழ்ச்சியுடையதாக வைத்திருப்பீர்கள் என்று தலைமைச் செயலகம் நம்புகிறது’. தூய வெள்ளைக் காகிதத்தில் அழுத்தமான கருப்பெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த சொற்களுக்கு கீழே ரத்தச்சிவப்பில் முத்திரை குத்தப்பட்டு அதன்மேலே பச்சை நிறத்தில் தலைமைச் செயலக அலுவலரின் கையொப்பம் இருந்தது. கடிதத்தை வாசித்து முடித்ததும் என் இருக்கையில் மீண்டும் அமர்ந்தேன்.

அன்றுமாலையே தலைமைச் செயலக ஊழியர்கள் என் அலுவலகத்தை பார்வையிட வந்தார்கள். இறுகிய முகமும் கூரிய பார்வையும் கொண்ட அவர்கள் மறுநாள் அளவற்ற வளமும்  உயர்ந்த லட்சியங்களும் நிறைந்த சமத்துவம் உறுதிபட்டுவிட்ட தேசத்தின் மேதகு  தலைவர் வரும்போது அலுவலகத்தில் இருக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து பட்டியலிட்டனர். அளவற்ற வளமும்  உயர்ந்த லட்சியங்களும் நிறைந்த சமத்துவம் உறுதிபட்டுவிட்ட தேசத்தின் மேதகு  தலைவர் மறுநாள் காலை முதல் மாலை வரை உண்ண இருப்பவற்றை பட்டியலிட்டனர். அவற்றின் விலை என் உத்தேச மதிப்பீட்டில் என் மூன்றுமாத சம்பளம். என்னிடம் இருந்த தங்கம் மொத்தத்தையும் விற்று அந்த உணவினை ஏற்பாடு செய்தேன். ஆனால் மறுநாள் மிகச்சரியாக பதினோரு மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்த தலைவர் அவற்றில் எதையுமே உண்ணவில்லை. மேலும் என் அலுவலகத்துக்கு வந்த அவர் பதினைந்தே நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டும்விட்டார். முதல்நாள் இரவு முழுக்க பயத்தின் அலைகள் மனதில் மறிந்து மறிந்து எழுந்து கொண்டிருக்க என்னை நானே வெறுத்துக் கொண்டு தூங்காமல் கிடந்தேன். தலைவரின் வருகையன்று வழக்கத்தைவிட இரண்டு மணிநேரம் முன்னதாக அலுவலகம் வந்திருந்தேன். என் உடலை ஒரு பழைய துணியைப் போல உணர்ந்து கொண்டிருந்தேன். என் மூன்று மாத சம்பளத்துக்கு இணையாக செலவு செய்து நான் ஏற்பாடு செய்திருந்தவற்றை தலைவர் பொருட்படுத்தாதது எனக்கு நிம்மதியைத்தான் தந்தது.

4

‘உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுடைய அதிகாரத்தை காட்டுவதற்காக தங்களுக்கு தங்களினும் கீழிருப்பவர்களைவிட சற்று கூடுதலாக தெரியுமென்று காட்டிக் கொள்வதற்காக அவர்கள் மனம் பூரண இணக்கத்தையே உணர்ந்தாலும் கூட ஒரு குறை சொல்லல் வழியாகவே அந்த இணக்கத்தை வெளிப்படுத்துவார்கள்’ என்று என் ஆசிரியர் எனக்கு சொல்லித் தந்திருந்தார். அவர் என் பள்ளி ஆசிரியர் அல்ல. எனக்கு கதைகளும் கட்டுரைகளும் எழுதக் கற்றுக் தந்தவர். பழைய அரசாங்கத்தில் கீழ்நிலை ஊழியராக இருந்து மெல்ல மெல்ல முன்னேறியவர். அவர் அந்த ஏணிகளில் பாதி தூரத்தில் இருந்த போது எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல்கதை கல்வித்துறை இலாகா அமைச்சரின் மனைவியை அமைச்சரின் உதவியாளர் பாலியல் அடிமையாக வைத்திருப்பதை பற்றியது. நான் இப்படி நேரடியாக எழுதுகிறேன். ஆனால் என் ஆசிரியர் அக்கதையை மிகுந்த கலை நேர்த்தியுடன் எழுதி இருப்பார். உதவியாளனைவிட பதினான்கு வயது மூத்த அந்த பெண் அவனுக்கு பாலியல் அடிமையாகும் சந்தர்ப்பங்களையும் அவளிடம் அவன் எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல கூடுவதையும் அவளது உடலின் வலியும் அவன் மீதான காதலும் அவனது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் விகிதத்துக்கு நேர்த்தகவில் உயர்வதையும் நேர்த்தியாக எழுதி இருப்பார். அந்தக்கதை ஒரு இரண்டாந்தர வாரப்பத்திரிகையில் வந்திருந்தது. அப்பத்திரிகையின் தரத்துக்கு அக்கதையின் தரம் பலமடங்கு கூடுதலாக இருந்ததால் நான் அக்கதை ஆசிரியரைப்பற்றி தேடத் தொடங்கி பின்னர் அவரை சந்தித்தேன்.

தலைவர் என் அலுவலகம் குறித்து எந்த அபிப்ராயமும் சொல்லாமல் சென்றது எனக்கு பெரும் விடுதலையாக இருந்தது. அந்த வாரத்தின் தொடர்ந்த தினங்கள் ஒரு இனிமையான அலுப்பில் கழிந்தன. மேலும் அதே வாரத்தில் தலைவர் சென்ற பிற அலுவலகங்களில் பல ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என் இனிமையையும் அலுப்பினையும் மேலும் கூட்டியது.  ஆனால் தொடர்ந்த வாரத்தில் அந்த அலுப்பு ஒரு களிம்பாக என் மீது படிந்தது. அலுப்பினை போக்கிக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. அந்த பரபரப்புக்கான தீர்வு ஒரு மதிய இடைவேளையின் போது வந்தது. என்னுடைய உதவியாளன் என் உணவு மேஜையின் மீது எனக்கான உணவு வகைகளை பரப்பி வைக்கத் தொடங்கினான். சற்று எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் கொண்ட கூட்டினை மேசைவிரிப்பினை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காக ஒரு செய்தித்தாளினை விரித்து அதன்மேல் வைத்தான். சாப்பிட்டு முடித்தபிறகு அவன் அதை எடுக்க மறந்துவிட்டான். அனிச்சையாக செய்தித்தாள் பக்கம் திரும்பிய என் கண்கள் ஒரு கணம் நின்றன. என் ஆசிரியரின் பெயர் செய்தித்தாளில் இருந்தது. அது பழைய அரசாங்கத்தின் குரலாக செயல்பட்ட செய்தித்தாள். என் ஆசிரியர் பணி ஓய்வு பெற்றபின் அந்த அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத பிரச்சாரகராக மாறியிருந்தார். நான் அவரை விட்டு விலகியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். கிளர்ச்சி வெற்றி அடைவதற்கு ஒரு மாதம் முன்னதாக அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அக்கட்டுரையில் பழைய அரசாங்கம் எவ்வளவு ஸ்திரத்தன்மை உடையது என்றும் ஏன் அந்த அரசாங்கத்தின் நடைமுறைகளை இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு பொருத்தமானவை என்றும் மிக விரிவாக காரணாகாரியங்களுடன் விவரித்திருந்தார்.

உதவியாளனை அழைத்து அந்த பழைய செய்தித்தாள் கட்டினை மொத்தமாக எடுத்து வரச் சொன்னேன். கிளர்ச்சிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலான செய்தித்தாள்களை அவன் கொண்டு வந்தான். என் ஆசிரியரைப் போல பழைய அரசாங்கத்தின் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி இருந்தனர். நாளிதழின் தலையங்கம் பழைய அரசின் முக்கியத்துவத்தை தினம் தினம் விதந்தோதியது. பெண்களின் கல்வியறிவு உயரும் விதத்தையும் குடிமக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும் விதத்தையும் புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு நிபுணர்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன. கிளர்ச்சி வெல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்த தலையங்கம் கூட கிளர்ச்சியாளர்கள் குழந்தைகள் என்றும் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்தாலே கிளர்ச்சி அடக்கப்பட்டுவிடும் என்றும் தலையங்கம் வெளியாகி இருந்தது. அன்றைய நடுப்பக்கத்தில் இளைஞர்களின் பாலுறவு விழைவு எப்படி லட்சியவாதமென்ற பாவனையாக திரிகிறது என்று இன்றும் புகழுடன் விளங்கும் ஒரு உளவியல் மருத்துவர் கட்டுரை எழுதி இருந்தார்.

எனக்கு அந்த கட்டுரைகள் முதலில் கேலியாகத் தோன்றின. அனைத்தும் மாறிவிட்ட காலத்தில் நின்று கொண்டு பழமையும் மிடிமையும் நிலவிய ஒரு காலத்தின் மூடநம்பிக்கைகளை வாசிப்பது  குழந்தை செய்யும் கோமாளித்தனங்களை ஏளனத்துடன் ரசிக்கும் வளர்ந்தவனைப் போல என்னை உணரச் செய்தது. தினமும் பதினோரு மணியிலிருந்து மூன்றுமணி வரை அந்த செய்தித்தாள்களை வாசித்தேன். அந்த பத்திரிகை நிறுவனம் தன்னை நவீன உலகத்தின் வழிகாட்டியாக அறிவித்துக் கொண்டது என்பதால் உலக அரசியல் தொடங்கி சுற்றுச்சூழல் பிரச்சினைகள்வரை கட்டுரை தலைப்புகள் ரகப்பட்டிருந்தன. ஆனால் பத்திரிகையின் ஆசிரியர் மிகுந்த பொறுப்புணர்வும் நாட்டுப்பற்றும் மிக்கவராக இருந்திருக்க வேண்டும். அத்தனை கட்டுரைகளும் அன்னை மடி தேடும் பிள்ளைகள் போல அரசாங்கச் சாய்வு கொண்டிருந்தன. ஆசிரியரின் குடும்பத்தில் பலரும் அரசாங்கத்தின் உயர்மட்டங்களுடன் தொடர்பில் இருந்ததும் சாய்வுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கிளர்ச்சிக்கான காலம் நெருங்க நெருங்க பத்திரிகையின் கற்பனாவாத சாயல் அதிகரிக்கத் தொடங்கியது. கிளர்ச்சியாளர்கள் குறித்த கட்டுக்கதைகளும் அவர்களின் கோரச் செயல்களும் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டிருந்தன. புதிய அரசாங்கத்தின் பத்திரிகையும் அதேபோன்ற செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. கிளர்ச்சி வெல்வதற்கு சரியாக ஒரு மாதம் முன்னதாக கிளர்ச்சியாளர்களின் குற்றங்களை ஆதாரத்துடன் விளக்குகிறவர்களை கிளர்ச்சியாளர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொன்றனர்  என்பதை சொல்லும் ஒரு கட்டுரைத் தொடர் வெளியாகத் தொடங்கியிருந்தது. துன்புறுத்தல் நடைபெறும் இடத்தின் அமைப்பு மிக விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

விசாரணை அறையும் தண்டனை அறையும் அடுத்ததாக இருந்திருக்கின்றன. விசாரணை அதிகாரி குற்றங்களின் தன்மைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்குவார். அவருக்கு எதிரே மூடியிருக்கும் ஒரு அறையில் தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால் விசாரணை அதிகாரி அந்த தண்டனையை பார்க்க நேராதபடி தண்டனை அறை இறுக்கமாக பூட்டப்பட்டிருக்கும் என்று வாசித்தபோது நான் அதிர்ந்து போனேன். இவ்வளவு நேரமாக நான் வாசித்து வந்த துன்புறுத்தும் கட்டிடத்தின் விசாரணை அறை இப்போது நான் பணம் அச்சடிக்கும் பிரிவின் மேலாளராக அமர்ந்திருக்கும் இந்த அறை தான்.

தண்டனை அறை மிகத் தூய்மையாகவும் அனைத்து வசதிகளும் கொண்டதாகவும் இருக்கும்.   தண்டனையின் முதல் நாள் தண்டனைக்கைதியின் இரண்டு தோள்களிலும் ஒரு அங்குலம் அளவுடைய ஆணியை அடித்து உடனடியாக அதைப் பிடுங்குவார்கள். அன்று முழுவதும் அவர்களுக்கு நல்ல உணவளிக்கப்படும். அறையில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் அங்கிருக்கும் ஒரு காவலருடன் தண்டனைக்கைதி வெளியே சென்று வரலாம். காலையில் தோள்களில் அடிக்கப்பட்ட ஆணியால் காய்ச்சல் ஏதும் கண்டால் மருத்துவர் வந்து காய்ச்சலைப் போக்க மருந்து கொடுத்துச் செல்வார். மறுநாள் ஆணி பிடுங்கப்பட்ட தோள் குடைவுகளில் இரண்டு அங்குலம் அளவுடைய ஆணி அடிக்கப்படும். உடனேயே பிடுங்கப்படும். ஆனால் அன்று மருத்துவ உதவிக்கான வசதி மட்டும் ரத்து செய்யப்படும். ஆணியின் நீளம் மெல்ல மெல்ல அவர்கள் இறக்கும் வரை உயர்த்தப்படும்.

ஏறக்குறைய இதேபோன்ற பெரிய வன்முறைகள் இல்லாத ரத்தத்தை அதிகமாக சிந்த வைக்காத தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கின்றன. என் எதிரே பணத்தாள்கள் நிரப்பப்பட்டு மூடப்பட்டிருக்கும் அறையில் இவை நடந்திருக்கின்றன என்பது தொடக்கத்தில் பயத்தை கொடுத்தாலும் நாளாக நாளாக மனக்கிளர்ச்சி தருவதாக இருந்தது. ஆனால் பணியில் சேர்ந்து ஒரு மாதமாகியும் நான் அந்த அறைக்குள் செல்லத் துணியவில்லை. ஒவ்வொரு நாளும் ஊழியர்கள் என்னிடம் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் கணக்கை ஒப்படைத்துவிட்டு அந்த அறைக்கு பணத்தை ஒரு சக்கரப்படுக்கையில் வைத்து தள்ளிச்செல்லும் போது தடிமனான அந்த எஃகு கதவு திறக்கும். பற்கள் முழுவதும் உதிர்ந்த ஒரு அரக்கனின் வாய்போல திறக்கும் கதவின் வழியே இருட்டு மட்டுமே தெரியும். ஒவ்வொரு நாளும் மானசீகமாக எழுந்து சென்று அந்தக்கதவின் வழியாக நானும் உள்ளே நுழைந்து அங்கு தோள்களில் ஆணி அறையப்பட்டவர்களையும் சமைக்கப்பட்ட தங்களுடைய விரல்களை மென்று தின்று கொண்டிருந்தவர்களையும் பார்த்தேன். முதலில் அந்த தண்டனை அறை குறித்து எனக்கு மட்டுந்தான் தெரியும் என்ற இறுமாப்பு என்னிடமிருந்தது. இரவில் என்னிடம் பொறுப்பினை பெற்றுக்கொள்ளும் மேலாளரும் முகமாற்றமே இல்லாமல் தினம் தினம் தண்டனை அறைக்குள் பணத்தினை வைக்கச் செல்லும் ஊழியர்களும் அந்த அறையின் வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்று நம்பினேன். ஆனால் போகப்போக எனக்கு மட்டுந்தான் எதுவும் தெரியவில்லையோ என்று எண்ணுமளவு செயல்கள் நடக்கத் தொடங்கின.

5

இரண்டாவது மாதத்தின் இரண்டாவது வாரத்தின் இரண்டாம் நாள் பொறுப்பினை வாங்க வந்த மேலாளரிடம் ‘நானும் பண அறைக்குள் வந்து உங்கள் வேலைகளை கற்றுக் கொள்கிறேன்’ என்று சிரித்துக்கொண்டு சொன்னபடி அவருடன் தண்டனை அறைக்குள் நுழைய முயன்றேன். அவரும் சிரித்துக் கொண்டே ‘உங்களுக்கு அந்த சிரமம் தேவையில்லை’ என்று சொன்னாலும் அலைகளின் அடியில் தட்டுப்படும் பாறைபோல அவர் குரலில் அதிகாரம் இருந்தது. மறுநாள் அச்சடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் வந்தபோது அவர்களிடமும் நான் உள்ளே வரப்போவதாக சொன்னேன். அவர்களும் மிகுந்த பணிவுடன் என்னை மறுத்தனர். நான் நிலைகொள்ளாதவன் ஆனேன். ஊழியர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கும் மிகக்கடுமையான தண்டனைகளை வழங்கினேன். பலரை வேலையைவிட்டு நீக்கினேன். பலருக்கு சம்பளத்தை குறைத்தேன். ஆனால் ஊழியர்களும் நிர்வாகமும் என் செயல்கள் எதையும் எதிர்க்கவோ கேள்விகேட்கவோ இல்லை. தண்டனை அறைக்குள் நுழைதல் என்ற சலுகை மறுக்கப்பட்டதற்காக என் அத்தனை செயல்களும் பொறுத்துக்கொள்ளப்படுவதாக எனக்குத் தோன்றியது. இரண்டாவது மாதத்தின் நான்காவது வாரத்தின் இரண்டாம் நாள் நான் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஒரு ஊழியன் மிகுந்த பணிவுடன் என்னைக் கடந்து சென்று தண்டனை அறையைத் திறந்தான். என் நாசியில் சற்றுமுன் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தின் சூட்டையும் நறுமணத்தையும் உணர்ந்தேன். என் உடலின் வெப்பம் பல மடங்கு உயர்ந்து காதுமடல்கள் சிவந்தன. நான் உணர்ந்தது உண்மைதானா என்று அறிந்து கொள்வதற்காக என் புறங்கையை உணவு மேஜையில் இருந்த கத்தியால் லேசாகக் கிழித்து நுகர்ந்தேன். அதே மணத்தையும் சூட்டையும் தான் சற்று முன்னர் நான் உணர்ந்தேன்.

விரும்பிய பெண்ணை புணராது பிரியும் ஏக்கத்துடன் அன்றுமாலை என் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். மனம் முழுக்க சுயவெறுப்பும் தன்னிரக்கமும் நிரம்பியிருந்தன.  அன்றிரவு பெண்ணில்லாமல் தூங்க முடியாது என்று தோன்றியது. எனக்கு இந்த வேலை கிடைத்ததும் என்னை தொடர்பு கொண்ட ஒரு வேசியர் தரகனை தேடிப்பிடித்தேன். என் முகம் அவனுக்கு எதை காட்டித் தந்தது என்று தெரியவில்லை. என்னை ஒரு பணக்கார வேசியிடம் கூட்டிச் சென்றான். என் நிலைகொள்ளாமையின் காரணங்களை கேட்காமல் அவள் என்னை சமாதானம் செய்யத் தொடங்கினாள். முதலில் அவள் தொடுகையும் அவள் மடியின் நறுமணத்தில் புதைந்து கிடப்பது பிடித்திருந்தாலும் அவள் என்னை தேற்றும் விதத்தில் இருந்த தொழில் நேர்த்தியும் அந்த நேர்த்திக்கு பணியும் என் மனதின் கூர்மையின்மையும் என்னை வெறுப்படையச் செய்தன. அவளை அடித்தேன். பின்னர் துளியும் காதல் இல்லாமல் அவளைப் புணர்ந்தேன். அவள் எதிர்வினை புரியமாட்டாள் என்று தெரிந்தும் என் மனம் சீற்றம் கொண்டது. வெளியே வந்து அந்த தரகனை அடித்தேன். அவன் என்னை இன்னொரு பெண்ணிடம் கூட்டிச் சென்றான். அவள் தொழிலுக்கு புதிது என்பது போலத் தெரிந்தது. அவள் மீது இரக்கம் பிறந்தாலும் உடல் அவளையும் கேட்டது. ஆனால் இயக்கம் அவள் புதிது என்பதாக பாவனை செய்ததை காட்டிக் கொடுத்தது. அவளையும் அடித்தேன். மூன்றாவது பெண்ணிடம் அவன் கூட்டிச் சென்ற போது நான் சோர்ந்து போயிருந்தேன். அவள் வீட்டிலேயே தூங்கியும் போயிருந்தேன்.

எரியும் கண்களுடன் களைத்துப்போன உடலுடன் மறுநாள் அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு நொடியும் நொடிமுள்ளின் கூர்நுனி என்னை குத்துவதாக உணர்ந்தேன். அன்றிரவும் வேசிகளுடன்தான் கழிந்தது. அவர்களை அடித்தேன். அவமானப்படுத்தினேன். அழவைத்தேன். நானும் அழுதேன். ஆனால் காகிதத்தின் மீது வைக்கப்பட்ட எடைக்கல் போல அந்த ரத்த நறுமணம் என்னுள் தேங்கியிருந்தது. அறைக்குள் செல்லும் துணிவு என்னில் கூடாதிருந்தது.

இரண்டாவது மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வேலையில் இருந்து சீக்கிரம்  திரும்பிவிட்டேன். நான்கு நாட்களாக பெண்களுடனேயே கழித்து விட்டதால் உடல் ஓய்வினை விரும்பியது. ஆனால் மனதிற்கு அப்போதும் பெண் தேவைப்பட்டது. மனதின் வேகம் உடலுக்கு பரவவில்லை. வந்தவள் என் முகத்தில் உமிழ்ந்துவிட்டு எழுந்து சென்றாள். அந்த எச்சிலின் நாற்றம் மனதை நிரப்பியிருந்த குருதியின் மணத்தை மட்டுப்படுத்துவதாக இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு உறங்கத் தொடங்கிய நான் ஞாயிற்றுக்கிழமை காலைதான் எழுந்தேன். என் வீட்டு ஜன்னலின் ஒரு கண்ணாடி உடைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான் எனக்கு விழிப்பு வந்தது. இரண்டாவது மாடியில் இருந்த என் அறையில் இருந்து வீதியைப் பார்த்தேன். புயல் புகுந்து சென்றது போலக் கிடந்தது. வீதியின் மையத்தில் இருந்து தலைவரின் சிலை உடைக்கப்பட்டிருந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டேன். அன்று முழுவதும் சாலையில் தொடர்ந்து கூச்சல்கள் கேட்டவண்ணமிருந்தன. ஒரு தீப்பந்தம் என் சோபாவில் வந்து விழுந்து அதனை எரித்தது. நான் வீட்டினை பூட்டிக்கொண்டு காதுகளை பொத்திக்கொண்டு அமர்ந்திருந்தேன். மாலையில் உச்சம்பெற்ற கலவரம் இரவில் குறைந்தது. மறுநாள் வீதியில் எந்த சத்தங்களும் இல்லை. முழுமையான அமைதி திரும்பியிருந்தது. கடைகள் திறக்கப்பட்டிருக்கவில்லை. பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. என்றாலும் வீதியில் வன்முறையாளர்கள் யாரும் தென்படவில்லை. என் அலுவலகம் சில கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்ததால் நான் நடந்தே அலுவலகம் சென்றேன். வீதிகள் அலங்கோலமாகக் கிடந்தன. வீதிக்கு இரண்டென ராணுவ வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஆனாலும் ராணுவத்தினரை வீதியில் காண முடியவில்லை. என் அலுவலகம் எந்த சேதமும் இன்றி தப்பித்திருந்தது. அலுவக முகப்பில் அரசாங்கத்தினை எதிர்த்த கிளர்ச்சி குழு ஒன்றின் கொடி பறந்தது. வாயிற்காவலன் மாற்றப்பட்டிருக்கவில்லை. அவன் எப்போதும் போல என்னைப் பணிந்து வணங்கினான். நான் உள்ளே நுழைந்ததும் என் பின்னே அவனும் வந்ததுதான் நான் அலுவலகத்தில் உணர்ந்த இரண்டாவது வித்தியாசம். என் அறைக்குள் நான் நுழைவதற்கு ஒரு விநாடி முன்னே அவன் நுழைந்து ‘மேலாளர்’ என்று அறிவித்தான். என் இருக்கையில் இணக்கமான புன்னகையுடன் ஒரு ராணுவ அதிகாரி அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே இரவுப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் மேலாளர் அமர்ந்திருந்தார்.

“உள்ளே வாருங்கள். தயங்க வேண்டாம்” என்று ராணுவ அதிகாரி என்னை அழைத்தார். நான் அவரின் முன்னே சென்று அமர்ந்தேன்.

“நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள். இனி நீங்கள் அலுவலகத்துக்கு வரவேண்டாம்” என்று அவர் பணிநீக்க உத்தரவை என் முன்னே நீட்டியபோது நான் ஆசுவாசமாக உணர்ந்தேன். என்னை அவர் வெளியேறச் சொல்லாததால் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

அவர் இரவு பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் மேலாளரை நோக்கி “நீங்கள் உள்ளே செல்லலாம்” என்று பணம் வைக்கும் அறையை நோக்கி கைநீட்டினார். என்னை வெளியேறலாம் என்பது போல சைகை செய்தார். அறைக்கதவு மூடப்படுவதற்கு முன் இரண்டு ஓரங்குல ஆணிகள் தரையில் விழுந்து ‘க்ளிங்’ என ஓசை எழுப்புவதை கேட்டேன். நான் அதன்பிறகு எந்த அரசுப்பதவியும் வகிக்கவில்லை. அந்த தேசத்தில் இருக்கவும் விரும்பவில்லை. தப்பி வந்து விட்டேன்.

***

(சுரேஷ் பிரதீப் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். ஒளிர் நிழல்கள் எனும் நாவலும், நாயகர்கள் நாயகிகள் மற்றும் எஞ்சும் சொற்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன)

(ஓவியம் – ஜியோகொமொ பாட்ரி )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular