Friday, March 29, 2024
Homesliderயதிராஜ ஜீவா கவிதைகள்

யதிராஜ ஜீவா கவிதைகள்

பாரதக்கோயிலின் முன்னே
அகன்ற வெறுமையை
சிறிய அசைவுகளால் நிரப்ப முயன்ற வில்வமரத்தில்
அப்போது இருந்தன எனது பட்சிகள்
செத்துப் போனவளைப் போலிருந்த அக்காவும்
செத்துக் கொண்டிருந்த பாட்டியும்
சாகப்போகும் அவனும் அவளும் நானும் நீயுமாய்
பூக்களால் ஆன தேரின் உள்ளே
முதல்முறை திடுமென பார்த்தோம் அவளை
தூண்சாய்ந்து நின்றபடி ஒவ்வொரு
பௌர்ணமியிலும் எதிர்கொள்வேன்
ஒளித்ததும்ப கதிர்வீசும் அவளது மந்தகாசம்..

பழுத்தச் சருகுகள் உதிர
தாயக்கட்டைகள் உருண்டபடி இருக்கும் மத்தியானங்களிலும்
மறக்கும்படி இல்லை அவள் ஒருபோதும்
வெறித்தாண்டவ ஜொலிப்பில் மனங்கசிய நின்றபடி
எண்ணெய் பிசுபிசுக்கும் கருவறையின் முன்னின்று
வீறிட்டு சொல்வேன்
வருவாயாக தேவி
கட்டைகளை நேர்த்தியாக உருட்டுவதை
பயின்று வருகின்றன எனது கைகள்
சாதுர்யமான எனது கணக்கிடல்களை
நீ சமாளிப்பாயா
ஜொலிக்கும் உன் கன்னங்களை
என் சகோதரியின் குழந்தையுடையதைப் போல
ஒருமுறை நான் நிமிண்டுவேன்
உன் சிறியப் பாதங்களை
என் நெஞ்சில் ஏந்துவேன்
தாய்ப்பாலின் மணம்வீசும் பிஞ்சு உதடுகளில் இருந்து
கசியட்டுமே அந்த இசை என் குரல்வளை நனைத்தபடி
பேரரவத்திலும் மீளமுடியா ஆழத்தில்
எல்லோரும் உறங்கும் ஓர் இரவை
எனக்கென நீ அளிக்கையில்
ஒரு கள்வனைப்போல உனைக் கவர்ந்து செல்வேன்
ஒரு தாயாக உனை வருடி
மழலையென மடிபுரண்டு
பேரொளியின் ஒரு துளியாய் உன்னுள் கசிந்து
பெருந்தவிப்பு உள்நிறைய நீயாக கரைப்பேன் என்னை
வெயிலேறிக் காய்ந்த கருவறையின் நேரெதிரே
இன்னும் இருக்கின்றன
எனது பட்சிகள்
சிறிய அசைவுகளை வில்வமரத்தில் நிறைத்தபடியும்
சிறகின் அசைவுகளால் வில்வமரமாய் நின்றபடியும்

*

எல்லாக் குரல்களும்
குதிரைகளின் இயல்பு கூடியவை
எல்லாக் குதிரைகளும்
கனைத்தபடி வருகின்றன
றெக்கையின்றி பறக்கும் அவைகளை
பார் பார் என்கிறாய்
குளம்புகள் ஆழப்பதிந்த தருணங்கள்
மறக்கத்தக்கவை என்கிறாய்
சுனைநீரின் ஜில்லிப்புடன்
வெறுமை அனல்வீசும் உன் தியானப் பெருவெளியில்
பூத்திருக்குதே இந்த யோனிமலர் என்கிறாய்
நிலவொளியால் ஆன கிண்ணத்திலிருந்து
இப்படி கசியும் உனது குரலும்
ஒரு குதிரையின் இயல்பு கூடியதே என்பதை அறியாமல்
தொடர்ந்து ஒலிக்குமாறு
உன்னிடம் கேட்கச் சொல்லி
முறையிட்டு மன்றாடுகிறது ஒரு குரல்
பிறகெப்போதும் கேட்கவியலா எனது கானங்களை
உன் பிரார்த்தனையின் திராவகத்தில்
கரைத்துவிடாதேயென
கதறியழுகிறது இன்னொரு குரல்
கனைப்பொலிகள் நிறைந்துக்கிடக்கும் வெம்பரப்பின் ஓரத்தில்
நிகழ்ந்துக் கொண்டிருக்கும்
நம் முயக்கம்
உதிர்ந்துக் கொண்டிருக்கும்
அந்த இலைகள்
ஒலித்துக் கொண்டிருக்கும்
ஒரு இசை
உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்
வேறுபல குரல்களின்
வருகைக்கான முன்னறிவிப்பை செவிமடுத்தபடி
இம்மரத்தடிவெளியில் மாறத்தொடங்குகின்றன
நம் திசைகள்
ஒன்றையொன்று குரல்களென்றே அறிந்திருக்கும்
இரு குரல்களின் சந்திப்பு
இரு குதிரைகளின் உரையாடல்
ஒரு கவிதையாகவேனும்
அர்த்தப்பாடு உடையதாவெனும் கேள்வி
உன் மடியிலொரு கூழாங்கல்லென
உருண்டபடியிருக்கும் போதே
மண்ணின் சுவை மாறி
விண்ணின் நிறம் மாறி
புத்தம் புதிய குரல்களும்
நவீனரக குதிரைகளும்
வெளிநிறைக்கத் தொடங்கிவிட்டன
ஆயினும்
நிகழ்ந்தவண்ணமாக இருத்தலே சாத்தியம்
அதே மாதிரியான குதிரைகளின் உரையாடல்.

*
ஒரு மழைநாள் நள்ளிரவில்
நம் சித்திரங்கள் துடிதுடித்தன
அறிந்திராத வண்ணங்களின்
ரகஸிய சேர்க்கையில்
ஒளிர்ந்தது நம் வானம்
வேட்கை மீதூறி
தாகித்த பாய்ச்சலில்
செருக்குடன் கைப்பற்றினாய்
ராகங்களின் வனத்தை
நம் காலம் அப்படியாக இருந்தது
நம் ரத்தம் அப்படியாக இருந்தது
நம் பாடல் அப்படியாக இருந்தது
நாம் அப்படியாக இருந்தோம்
எல்லாம் நிறைவுற்று தளும்பின
கரியச் சித்திரமாய் காற்றிலாடிய
சந்தனமரத்தின் மீதிருந்து
சதாயெனை உன்னித்துக் கிடந்த
யட்சிணி ஒருத்தி அன்புடன் சொல்கிறாள்
அந்தக் கோப்பை நிறைதலாயிற்று நண்பனே
பரவசத்தின் ஓர் அற்புத கணம்
ஆலிலைகளின் மீதேறி அருகில் வருகையில்
உள்ளங்கைகளில் தன் முகத்தை பதித்தபடி
மோகினி ஒருத்தி மிருதுவாய் சொல்கிறாள்
அது நல்லதாயிற்று என் இனிய நண்பனே
அந்த மரங்கள் அசையவில்லை
அந்த சருகுகள் சப்திக்கவில்லை
அந்த ஆந்தை அலறவில்லை
செத்துப் போய்விட்ட யாருக்காகவோ
எழும்பிவரும் அந்த பறையொலியும்
நம் செவிகளை வந்தடையவில்லை
தூறலின் மெல்லிய சலனங்கள்
நிசப்தத்தின் திட்டுக்களை மேவி
கூடிக் களித்தபடி இருக்க
கற்கள் அப்படியாக உருண்டன
முகில்கள் அப்படியாக திரண்டன
சாரல்கள் அப்படியாக விழுந்தன
நாம் அப்படியாக கரைந்தோம்
இதே மழைநாள் நள்ளிரவை
வேறுசில வண்ணங்களுடன்
நீ எதிர்கொள்ளக் கூடும் பின்பொருகாலம்
இசைநெய்யப் பிறந்தவன்
இன்னும் வரவில்லையேயென
சந்தனமர யட்சிணி வழிபார்த்திருக்க
அடர்ந்த இருளின் உள்ளிருந்து
பீறிட்டு வருமா அவ்வொளியென
சிள்வண்டுகளின் இறைஞ்சுதல் நிகழ
இதயத்தின் குவிமுனையில்
பிரியத்தின் பால் கசிய
காத்திருப்பாய் நீ
மழையாலும் கவிதையாலும்
நெய்யப்படும் அந்த நள்ளிரவு
நீண்டுகொண்டே இருக்கும்
ஆனால்
இசைநெய்யப் பிறந்தவன் வரப்போவதில்லை
இனியெப்போதும்
அந்த மழை முடிந்துவிட்டதென
அந்தச் சக்கரம் நின்றுவிட்டதென
அந்தக் கவிதை நிறைந்துவிட்டதென
கண்களில் நீர்க்கசிய யாரேனும் வந்து
உன்னிடம் சொல்கையில்
சற்றே நினைவு கொள் பேரழகே
நிலவொளியில் பயணித்த
நம் உதடுகளின் நீச்சலை
ஒரு நீரூற்றென பீறிட்ட
நம் பரவசத் ததும்பலை
விடைபெறுகையில் உணர்ந்த
நம் உள்ளங்கைகளின் ஸ்பரிசத்தை

*

நீ முன்வைத்தாய்
ரத்தத்தின் வெதுமையாலானதை
உயிரணுக்களின் ஸ்பரிசத்தாலானதை
கண்ணீரின் நிறத்தாலானதை
தாய்ப்பாலின் மணத்தாலானதை

நீ வரவேற்றாய்
ஏமாற்றத்தின் முத்துக்கள் தெறிப்பதை
கனவுகளின் சிறகுகள் கூடியதை
கருணையின் போலிமை படிந்ததை

நீ காட்டினாய்
வெறுமையை கனிகளாக தரக்கூடிய மரத்தை
பயத்தால் உரமூட்டப்பட்ட பூச்செடியை
மரணத்தின் குதிரைகள் மேயும் புல்வெளியை

நீ இருந்தாய்
நிறமாக வாசமாக தூண்டலாக
கிளர்ச்சிகளின் மணியோசையாக
பயங்களின் நீரூற்றாக
குதூகலிப்பின் மழையாக
பேதமையின் பனிப்பொழிவாக
யாவும் கூடிய பெரும் வசீகர நீர்ச்சுழியாக

நானோ வானத்தின் பேரமைதியில்
என் கண்களைப் புதைத்து வைத்தேன்
நஞ்சை கதிர்வீசும் கவிதைகளையும்
அவற்றின் முடிவற்ற சுழற்சிகளையும்
தொலைக்கும் பொருட்டு
அடர்ந்த வனாந்திரங்களின் மௌனத்தில்
வெறிகொண்டு அலைந்தேன்

பெருந்துணிச்சலான வரிகளை
இதயத்தின் நரம்புகளில் அதிரவிட்டபடி
நட்சத்திரங்களின் பாலருந்தி
சூன்யத்தின் பேரிருளை
அடர் கருமையின் பெருங்கருணையை
மேனிமுழுக்க பூசிக்கொண்டு
முற்றும் எரிந்த சாம்பலின் வாசம் சூழ
பாடித்திரிகிறேன் பித்தின் பரவசம்

*

நட்சத்திரங்களின் இருள்
தூதுவளை பாவநிலை
அவுரி இலை மோகனம்
ஸ்தம்பனம் அஸ்தமனம்
கருநொச்சி திருநீறு
கிளிகள் புறாக்கள்
கிச்சிலிச் செடிகள்
முடக்கற்றான் முசுமுசுக்கை
முடிந்த இரவுகள்
முடியாத பாடல்கள்
வல்லாரை தீபம்
கற்றாழை சாபம்
சொற்பிறழ்ச்சிகளின் நடனம்
மிதக்கும் படிமங்களின் ஊஞ்சல்
அ ஆ
இ ஈ

*

சாலையோரப் பாத்திகளில்
தக்காளிச்செடி கொத்தும்
விவசாயி.
மாங்கூழ் தொழிற்சாலையின் மணமேந்தி
வீடுதிரும்பும் பெண்களின் பேச்சுடன்
உதிரும் உணிமுள் பூக்கள்.

பள்ளி வாகனத்தின் உள்ளிருந்து
குதூகலம் கொப்பளிக்க
கையசைக்கும் சிறார்கள்

பூஞ்சித்திரங்கள் வெளிரிய பாவாடைகளுடன்
புளியமரக் கிளைகளில்
டயர் ஊஞ்சலாடும் சிறுமிகள்

நுங்குகளாக சிரிக்கும் பனைகண்டு
அலட்டலுடன் தலைசிலுப்பும் தென்னை

வீசும் காற்றில்
சலிப்பின் மாசு கரைய நடக்கையில்
சற்றே சோர்வுற்றக் கால்களை
தனிமையின் பிரகாசத்துடன்
எதிர்கொண்டழைக்கிறது
காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்ததாயிருக்கும்
இந்த அரசமரம்.

*

ஏதோவொரு செடியில் பூத்த
மலர்கள்தான் மயிலிறகுகள் என்றே
நான் நினைத்திருந்தேன் நெடுகாலம்

பிறகொரு சபிக்கப்பட்ட
பங்குனி மாதத்தின் மாலை நேரத்தில்
ஒரு பறவை போன்ற உருவத்தின் பின்னேகி
அவை காட்சியளித்த போது
ஒரு முற்றிய பித்தனின்
கற்பனை என்றே அதை நம்ப விரும்பினேன்…

தொலைதூரம் சென்று
நான் தங்க நேர்ந்த
ஒரு வயலிடை வீட்டின்
ஜன்னல் வழியே
இரு திமிர் பிடித்த பறவைகள்
நடந்துச் சென்ற போது
ரசனையின் விஷமேறி
இருதயத்தின் நரம்புகளில் நீலம் பாரித்த ஒருவன்
எனக்கேயுரிய அப்பூக்களை
இப்படி இவற்றின் பின்னே
வைத்துவிட்டானே என
எதிர்ப்படும் எல்லோரிடமும்
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தேன்

உன் நினைவு ஒரு பெருமழையென ஸ்பரிசிக்க
இத்தியான மண்டபத்தின் பின்புற மரத்தடியில்
நான் தலை சாய்ந்து படுத்திருக்கும் அந்திவேளையில்
மயிலெனும் இப்பறவைகள்
என் கண்முன் ஆடும் நடனம் கண்டு
உளம் சகியாது உடைந்தழுகிறேன் அன்பே…

மஹா கர்விகளாய் திரியும்
இந்த மயில்களை எல்லாம்
பூஞ்செடிகளாய் எனக்காக
மாற்ற மாட்டாயா அன்பே..

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
தலைக்கேறி வழியும்
மனமோக ஓடையின் கரைகளில்
உன்னை பழிவாங்குவதற்காக நிகழ்த்தப்படும்
என் சம்போகங்களை
அப்படியே நிறுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
நச்சுப் பாம்புகள் நெளியும்
என் மொழியின் கூடாரங்களை
தீயிட்டுக் கொளுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
இப்பூமியெனும் கிரகத்தில் நிகழ்ந்து வரும்
எல்லா வன்கொடுமைகளுக்கும்
நானே காரணம் என பொறுப்பேற்று
அழிவறியா என் தனிமையின் வனத்தில்
மொழிப்புற்று ஒன்றிலேகி
தன்னந்தனியனாய் மரித்துப் போகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
உன் வல்லமைக்கு நிகரென
நீ பொறாமை கொள்ளும்
என் எல்லாக் கவிதைகளையும்
இப்பெருமழைக்காற்றில் கைவிட்டுவிட்டு
நான் அறைக்குத் திரும்பி விடுகிறேன்
பிறகு நான் நிம்மதியாகப் புன்னகைப்பேன்
பிறகு நீயும் நிம்மதியாகத் தூங்குவாய்

***

யதிராஜ ஜீவா
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular