மரியதாஸ் 

0

மௌனன் யாத்ரீகா 

1.

மரியதாசுக்கு தூக்கம் வரவில்லை. மளிகைப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் சாமி அன் சன்ஸ் கடையருகே சில்லறை வியாபாரி ஒருவன் போட்டிருந்த பலகையில் கால் முதல் தலை வரை இறுகப் போர்த்தியபடி குறுகிப்போய் உட்கார்ந்திருந்தான். எலும்பை அசைக்குமளவுக்கு குளிரடித்துக் கொண்டிருந்தது. பலகையின் சாய்வான விளிம்பில் கிடந்த சுருங்கிய சிறு எலுமிச்சங்காய்களின் வாசம் காற்றில் கலந்திருந்தது. இருள் அந்தத் தெருவை அழுத்தி மூடியிருந்தது. தெருவின் தொடக்கத்தில் மங்கிப்போய் ஒளிர்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றிருந்த மரியதாசின் சைக்கிள் ரிக்‌ஷாவில் குளிரில் நடுங்கும் இன்னொரு உருவம் அசைந்து கொண்டிருந்தது. உடல் நலிவுற்ற அந்த சந்தை நாய்க்கு அதுதான் போக்கிடம்.

பீடி ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான் மரியதாஸ். ரெண்டு இழுப்பு இழுத்தவுடன் விலா எலும்புகள் உடைந்துபோகுமளவுக்கு ஓர் இருமல் வந்தது. உறைந்த சளியை காறி உமிழும் கடுத்த சத்தம் அந்த இருளை அதிர வைத்தது. அந்தத் தெருவில் தேங்கிக் கிடக்கும் காய்கறி கழிவுகளின் அழுகல் நெடியும், பீடி வாசமும் கலந்து ஒரு புது நெடி அங்குப் பரவியிருந்தது. இரண்டு கடைகள் தாண்டிக் கிடந்த இன்னொரு பலகையில், இருளில் உறைந்துவிட்டதைப்போல் பாண்டி உறங்கிக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து சீரான குறட்டைச் சத்தம் கேட்டபடியிருந்தது.

மரியதாசுடன் கை ரிக்‌ஷா ஓட்டும் பாண்டிக்கு இது இரண்டாம் சாமம். அவன் படுத்திருந்த பலகையில் எஞ்சிக் கிடந்த எலுமிச்சங்காய்களும், அதன் வாசனையும் பாண்டிக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தந்திருந்தன. அவன் படுத்திருந்த பலகையின் ஓரங்களிலும் அந்தக் காய்கள் கிடந்தன. அதன் நிறமும் வாசனையும் கிளர்த்திய போதும் மரியதாஸை துர்நெடிகள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருந்தன. பாண்டியிடமிருந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது குறட்டைச் சத்தம். அவனை இருளில் ஊடுருவிப் பார்த்தான். தூங்கும் பாண்டியைப் பார்த்துக் கொண்டே வாய்விட்டுச் சொன்னான்;

‘‘ங்கோத்தா… கடவுளின் கொழந்தடா நீ’’

நெஞ்சை அடைத்த சளி மறமறவென்று மூளைக்கு ஏறியது. எங்கிருந்தோ வந்து நெஞ்சில் அடித்த கனத்த கல்லைப்போல் கடுத்த இருமல் ஒன்று நெஞ்சை உடைக்க மரியதாசின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. நெஞ்சிலிருந்து உறிஞ்சிய சளியை வெளியே துப்பிவிட்டு, புகையை இழுத்து வெளியே இருளில் பரவ விட்டான். அந்தப் புகையோடு சேர்ந்து அவனது எண்ணமும் இருளில் பரவியது.

பனி காதுக்குள் இறங்கி மண்டையைக் குத்துவது போல் இருந்தது. போர்வையை இழுத்து உடம்போடு அழுத்திக் கொண்டான். கறி உதிர்ந்த வெறும் எலும்பை சாதாரண குளிர் கூட வாட்டி வதைக்கும் என்பது அவனது நடுக்கத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பேச்சுக்குரல் கேட்கிறது. மரியதாஸ் கூர்ந்து பார்த்தான். நல்லப்பன் மெஸ்ஸில் வேலை செய்யும் தனபாலும் பழமலையும் செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு செல்போன் லைட்டை அடித்தபடி பேசிக்கொண்டே வந்தார்கள். இருளில் தன்னைக் கடந்துபோகும் அவர்களை சத்தம் எதுவும் கொடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன படம்’ என்று அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது. அவர்கள் ‘பிட்டு’ படம்தான் பார்த்துவிட்டு வருகிறார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

ரவுண்ட்ஸ் கோவில் தாண்டி இருக்கும் நடராஜா தியேட்டரில் இரவு காட்சி மட்டும் பிட்டுப்படம் ஓட்டுவது மரியதாசுக்கு தெரியும். அவர்களைப்போல் இவனும் எத்தனையோ நாள் இரவு செகண்ட்ஷோவுக்கு அந்த தியேட்டருக்கு போயிருக்கிறான். ஏதாவது ஒரு ஆங்கிலப்படமோ இந்திப்படமோ முதலில் ஓடும். படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே இடையில் ஒரு பத்து நிமிசம் பிட்டுப்படம் ஓடும்.

ஆணும் பெண்ணும் அரை நிர்வாணத்தில் – சில நாட்களில் முழு நிர்வாணத்திலும் – மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவது கேட்கும். கூட இருப்பவர்கள் ஒரு சத்தமும் கொடுக்காமல் ஒரு பத்து நிமிசம் சர்வத்தையும் அடக்கிக்கொண்டு இருப்பதை பார்க்க மரியதாசுக்கு வியப்பாக இருக்கும்.

உடல் இச்சை மனிதனின் அத்தனை ஆக்ரோசங்களையும் தணித்து லேசாக்கி விடுவதை ஆச்சர்யமாகப் பார்ப்பான். பிறகு வரும் படத்தின் காட்சிகளை பார்க்காமல் பலபேர் எழுந்து வெளியே போய்விடுவார்கள். அதற்குமேல் திரைப்படம் மட்டுமே ஓடும் என்று தெரிந்தவர்களும், இன்னும் பிட்டுப்படம் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களும் மட்டும் உட்கார்ந்திருப்பார்கள். மரியதாசுக்கு அங்குதான் லேசாக கண்ணைச் சொக்கும். அந்தத் தூக்கத்துக்காகத்தான் பலநாள் இரவுக் காட்சிக்கு செல்வான்.

தியேட்டரின் இருளை விட்டு வெளியே வரும்போது அவனுக்கு ஒன்று தெளிவாகியிருக்கும். பெண்ணின் இருப்பு ஆணுக்கும், ஆணின் இருப்பு பெண்ணுக்கும் வேறெந்த பிரயாசைகளை விடவும் மனசுக்கு போதுமானதாக இருக்கிறது.

பெண்ணின் இருப்புக்கு மரியதாசின் உடலும் மனமும் எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு. இப்போதும் அந்த பெருமூச்சு நின்றபாடில்லை. அதையெல்லாம் ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்துப் புகையாக்கி வெளியே ஊதிவிடுவான். அந்த புகையில் அவனது காமம் வெளியேறும். பிறகு வெகுநேரம் இருமிக்கொண்டேயிருப்பான்.

படம் பார்க்கப் போயிருக்கலாம் என்று நினைத்தான். உடல் இன்னும் பெண்ணின் தேவையோடு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் போல் இருந்து. அந்த எண்ணம் ஒரு வறண்ட சோகத்தை உண்டாக்கியது. நீண்ட பெருமூச்சோடு கடுத்த இருமலும் வந்தது. வாய் முழுக்க நிரம்பும் அளவுக்கு திரண்ட சளியைக் காறி வெளியே கொண்டு வந்து திரும்பவும் அப்படியே விழுங்கி விட்டால் தேவலாம் என்று தோன்றியது.

தன் முட்டிக்கால்களில் சுரக்கும் கொழுப்பும், தன் விதைப்பையில் ஊறும் விந்துவும்தான் இப்படி சளியாகி, இருமல் வழியே வெளியேறி தன்னை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்தான். திரண்டு வந்த சளியை கையில் உமிழ்ந்து பிசைந்து பார்த்தான். தான் நினைத்தது சரிதானோ என்று தோன்றியது.

தனவள்ளியின் நினைவும், திடீரென ஒருநாள் முற்றும் முழுதாக இவனை விட்டுச் சென்றதும் இதயத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு நெஞ்சில் வெடி வைத்தது. அந்தத் தெருவே அதிருமளவுக்கு கடுமையான இருமல் ஒன்று வந்து திக்குமுக்காடிய மரியதாஸ் ஓர் ஆழமான பள்ளத்தில் விழுந்து உருண்டு போய்க் கொண்டிருந்தான்.  

2.

தனவள்ளியைப் பழைய துருப்பிடித்த டிவிஎஸ் பிப்டியில் கொண்டு வந்து அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனாள் செல்வி. மரப்பலகையில் தகரம் அடித்த வாசல் கதவைத் திறந்தபோது இருமல் சத்தம் கேட்டது. வராண்டாவில் கிடந்த பழைய நார்க்கட்டிலில் உடலை முழுதாகப் போர்த்தியபடி படுத்திருந்தான் மரியதாஸ். திரும்பி வாசலைப் பார்த்தாள். கதவுக்கும் வாசலுக்குமான இடைப்பட்ட தூரத்தை முழுதாக இருள் கவ்வியிருந்தது. விளக்கை அணைத்துவிட்டு இருளில் படுத்திருந்தவனை சோர்வு தட்டிய கண்களால் சோகமாக பார்த்தாள்.

மரியதாஸ் சத்தம் காட்டாமல் படுத்திருந்தான். விளக்கு மாடத்துக்கு மேலே இருந்த ஒத்த லைட்டை போட்டாள். அவன் தலைக்கு நேராக ரீப்பரில் தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்ப் ஒளிர்ந்து அந்த இடத்தை மஞ்சளாக்கியது. வெளிச்சத்தில் அவனைப் பார்த்தாள். ஒன்றுமே நடக்காதது போல் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். அவன் தலைமாட்டில் வண்டுகள் வந்து விழுந்தன,  

‘‘ச்சும்மா தூங்குற மாரி நடிக்காத… இம்மா நேரம் நீ என்னப்பத்தி இன்னா நெனச்சிக்கினு இருந்திருப்பேன்னு தெரியும்” என்றாள்.

மரியதாஸிடம் சின்ன அசைவு கூட இல்லை. உடல் முழுக்க போர்த்திக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குள் சென்று விளக்கைப் போட்டவள் கதவை உள்பக்கமாக தாழிட்டு புடைவையைக் களைந்து தரையில் விட்டுவிட்டு அப்படியே கொஞ்சநேரம் ஃபேன் காற்றில் நின்றாள். உடம்பிலிருந்த பிசுபிசுப்பு லேசாய் கரைந்து உதிர்வது போல் இருந்தது. திமிர்த்த மார்புகளின் இடையில் ஒன்றிரண்டு புளிய இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. முடியை அவிழ்த்து உதறி விட்டாள். தலையில் சாரல் நுழைவது போல் ஃபேன் காற்று நுழைந்தது. கைகளால் உலர்த்தியபடியே சமையல் கட்டுக்குப் போனாள்.

மரியதாஸ் சாப்பிட்டுவிட்டு கழுவி வைத்த ப்ளாஸ்டிக் தட்டு, கழுவும் பீங்கானுக்கு அருகில் இருந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு தனக்கு எடுத்துக் கொண்டு இரண்டு வேளை அவன் சாப்பிடும் அளவுக்கு வைத்து விட்டுப் போயிருந்தாள். குக்கரைத் திறந்து பார்த்தாள். இன்னும் ஓராள் சாப்பிடலாம் அளவுக்கு சோறு இருந்தது. அவன் மதியம் சாப்பிடவில்லை போலும். குக்கர் ஒரு பிரேதத்தைப் போல் குளிர்ந்திருந்தது. குழம்பு சட்டியைப் பார்த்தாள். பாத்திரத்தின் உள் பகுதியில் ஒட்டிக் காய்ந்திருந்த குழம்பு நுரை கண்டிருந்தது. கை பட்டிருக்க வேண்டும். கெட்டுப்போன குழம்பின் வாசம் மூக்கில் ஏறியது. அது அவளுக்கு புளித்த கள்ளின் வாசனையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

3.

‘‘அங்க பாரடி… ஒரு பன மரத்துல எவ்ளோ பெரிய உடும்பு ஏறுதுன்னு”

பனையில் ஏறிக்கொண்டிருந்த சமுத்திரத்தைக் காட்டி இப்படித்தான் சொன்னாள் தனவள்ளி. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அவனும் ஒரு பெரிய உடும்புபோல் தான் தெரிந்தான். சசி சிரித்தாள்.

‘‘புள்ளே… அது உடும்பு இல்ல, மனுசாளு” என்றாள் அவள்.

அது மனிதன்தான் என்று தெரியும். அவன் சமுத்திரம். வேண்டுமென்று தான் தனவள்ளி அப்படி சொன்னாள்.

‘‘இல்லடி…அது உடும்புதான்… வேணும்னா கிட்டப்போயி பாப்பமா?” என்றாள்.

‘‘சரி… பெட்டு. மனுசன்னா நீ எனக்கு ரூவா தரணும். உடும்புன்னா நான் ஒனக்குத் தருவேன். சரியா…”

‘‘சரி… வா”

இருவரும் பனைகள் இருந்த மேட்டை நோக்கி நடக்கும்போது சமுத்திரம் மரத்தின் உச்சிக்கு ஏறியிருந்தான். பச்சை மட்டைகளுக்கு நடுவே உட்கார்ந்து பாளையைச் சீவி அதன் முதல் சொட்டு கள்ளை பானையில் பிதுக்கிவிடும் போது தனவள்ளியும் சசியும் ஒரு பெரிய வரப்பில் ஏறி நின்றனர். மரத்தில் உட்கார்ந்தவாறே அவர்களை கவனித்த சமுத்திரம் பனையோலைகளைப் பிடித்து ஆட்டினான்.   

‘‘புள்ளே… அது உடும்பு இல்ல… முனின்னு நெனைக்கிறேன்”

பயந்து போய் பேசுவதுபோல் தனவள்ளி சொன்னாள். சசி கொஞ்சம் மிரண்டு விட்டாள். தனவள்ளிக்கு உள்ளூற சிரிப்பு. மறைத்துக் கொண்டாள்.

‘‘புள்ளே… சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். முனில்லாம் இல்ல, மனுசாளு தான். வா… கிட்டப்போயி பாக்கலாம்” என்றாள்.

பனையடிக்கு போனபோது சமுத்திரம் மட்டை ஒன்றை பிடித்துக்கொண்டு தன் கால்களின் பாதங்களால் பனையின் கழுத்தைத் தழுவினான். சரசரவென்று சாரையைப்போல் இறங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் தனவள்ளியும் சசியும்.

ஒரு பத்தடி இருக்கும் போதே அங்கிருந்து தரையில் குதித்தவன், குதித்த வேகத்தில் தன் உருமாவை அவிழ்த்து தொடையிடுக்கில் நுழைத்துக்கொண்டு உட்கார்ந்தான். தனவள்ளி அவனுடைய வியர்த்து ஒழுகிய கறுத்த உடலை வெறிக்கப் பார்த்தாள். பனைமட்டையின் கருஞ்சிவப்பு பற்கள் கவ்விக் கிழித்த இடங்களில் மெல்லிய இரத்தக்கோடுகள். காயத்தைப் பார்ப்பதற்கு சங்கிலிப்பூரான் புரண்டிருப்பதுபோல் இருந்தது.

தனவள்ளியின் கண்கள் அவனையே வெறித்திருப்பதை அறிந்த சசி,

‘‘தனம் குட்டி… நீ கள்ள ஆட்டம் ஆடுற. இதுக்குத்தான் இம்மாந்தூரம் கூட்டியாந்தியா?” என்றாள்.

லேசாய் கண்ணடித்து கெஞ்சினாள் தனவள்ளி. சமுத்திரம் உட்கார்ந்து கொண்டே சிரித்தான். அந்தப் பெண்ணுக்கு வெட்கம் தின்றது.

கள் நிரம்பிய மொந்தை ஒன்றை திறந்து அதில் மிதந்த வண்டுகளை வழித்து தூர விசிறிவிட்டு தனவள்ளியிடம் நீட்டினான் சமுத்திரம். முகத்துக்கு நேரே வந்த மொந்தையிலிருந்து புளிப்பு வாடை மூக்கில் ஏறிக் கிறங்கினாள் அவள். கள்ளில் நுரை கோர்த்து இறந்து கிடந்த வண்டுகள் சசிக்கு குமட்டலைத் தந்தன.

‘‘தனம் குட்டி… நீ கள்ளுகூட குடிப்பியா?” என்றாள்.

தனவள்ளிக்கு சிரிப்பாணி கொள்ளவில்லை.

‘‘புள்ளே… இது ஒடம்புக்கு சத்தாக்கும். நான் சின்ன வயசுலேர்ந்து குடிப்பேன். இங்க பாரு… என் ஒடம்புல எம்மாஞ் சத்துன்னு” என்று தன் வலது கையை மடக்கி புஜத்தைக் காட்டினாள். ரவிக்கை இறுக்கி கையின் சதைப் பிதுங்கியது. மாந்துளிர் லேசாய் முத்தி தளிராகும்போது தோன்றும் தோலின் நிறத்துக்கும் அவள் அணிந்திருந்த ரவிக்கையின் மஞ்சள் நிறத்துக்கும் தனவள்ளி மிகுந்த அழகாய் தெரிந்தாள்.

சமுத்திரம் மொந்தைக்கள் முழுவதையும் தலையை அண்ணாந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் ஊற்றினான். கள் இறங்கும் தொண்டையில் வரிசையாக மீன் குதித்து ஓடுவதுபோல் இருந்தது. வாயின் குடங்கில் தேங்கிய நுரையை வழித்து விடாமல் தனவள்ளியை கிறங்க ஒரு பார்வை பார்த்தான். குவிந்து மூடிய அவள் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பு. அதைப் பார்த்து ஒரு திருட்டு முழி முழித்த சசி, பனை மரம் நின்றிருந்த வரப்பில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

தனவள்ளி அவன் வாயில் ஒட்டியிருந்த நுரையைத் துடைத்து விட்டாள். அவள் கழுத்து வியர்வையைப் பார்த்தவன்,

‘‘பூண்டு வச்சி அரைச்ச கார சட்னி இருந்து தொட்டுக்கிட்டா, ச்சும்மா…கும்முனு இருக்கும்” என்றான்.

‘‘போய் அரைச்சி எடுத்துட்டு வரட்டுமா… ஆளையும் மூஞ்சையும் பாரு” என்று பகடி செய்து சிரித்தாள் தனவள்ளி.

‘‘நீயிருக்கும்போது எனக்கெதுக்கு பூண்டு சட்னி” என்று டக்கென்று அவளைத் தாவி அணைத்துக் கொண்டான். சுதாரித்து விலகுவாள் என்று நினைத்தான். தனவள்ளி மலர்ந்து போய் நின்றாள். அவளிடமிருந்து முனகும் ஓசை வந்தபோது சசி பனை மரத்துக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டு காதை பொத்திக் கொண்டாள். அவளைப் பாரு சிரிக்கிறாள் என்று கெஞ்சுவதுபோல் விரலை நீட்டிக் காட்டினாள்.

சமுத்திரம் டக்கென்று அவள் விரலை வாயால் கவ்வி சூப்பினான். அப்போது அவள் செத்துப்போனாள் என்றுதான் நம்பத் தோன்றும். அவளால் ஒரு நிமிஷம் மூச்சுவிட முடியவில்லை. மொந்தையில் விழுந்திருந்த வண்டுகள் நினைவுக்கு வந்தவளாய் அவனை உதறிவிட்டு விலகி நின்றாள். கள் தீர்ந்த வெறும் பானை சமன் இல்லாமல் காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தது.

‘‘சசி புள்ளே, வா… போவலாம்” என்று அவளை துரிதப்படுத்தினாள். சீரற்ற மூச்சில் தப்பித்த பாம்பின் சீற்றம். உட்கார்ந்திருந்தவளின் இடுப்பை உசுப்பியதும் அவள் தடுமாறி வயலுக்குள் விழப்பார்த்தாள். சசியை இழுத்துக்கொண்டு நான்கு பனை தள்ளிப்போய் நின்று சமுத்திரத்தை திரும்பிப் பார்த்தாள். அவன் வாயை சுவைத்துக் கொண்டிருந்தான். வரப்பில் கிடந்த ஒரு மண் கட்டியை எடுத்து அவனை நோக்கி வீசியவள்,

‘‘டாய் பனங்காட்டு நரிப்பயலே… இப்ப வா பாக்கலாம்” என்று கொம்பு சீவினாள்.

ஆட்டம் மறுபடியும் தொடங்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது. ‘ஏய் போகலாண்டி’ என்று அவள் காலில் விழாத குறையாக கெஞ்சினாள் சசி. சமுத்திரமும் தனவள்ளியும் அந்த பனங்காடே அதிர சிரித்தார்கள்.

காய்ந்த பனங்குருத்து ஒன்று அவர்களுக்கு முன்பு விழுந்தது.     

4.

தனவள்ளி கதவைத் திறந்தாள். உள்பக்கமாய் திறந்த அதன் சத்தம் ஒரு பூனையின் குரல்போல் இருந்தது. போர்த்திய போர்வையை மரியதாஸ் நீக்கவில்லை. இன்னும் இறுக்கமாய் மூடிக் கொண்டிருந்தான். தூங்கியிருப்பானோ என்று நினைத்தவாறு அவன் தலைமாட்டுக்கு அருகில் நின்றிருந்தாள். வெளியில் லேசாய் தெரிந்த தன் கால்களை அவன் உள்ளிழுத்து முடக்கினான். அவன் இன்னும் தூங்கவில்லை. திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்த்தாள். சுண்ணாம்பு பூச்சு உதிர்ந்த சுவற்றில் கடிகார முட்கள் ஓடிக்கொண்டிருக்கும் டிக்டிக் சத்தம் கேட்டது. கலங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தாள். நேரம் பதினொன்று காட்டியது. தாழ்வார விளக்கை அணைத்து விட்டு இருட்டில் நின்று மறுபடி ஒருமுறை அவனைப் பார்த்தாள். கட்டில் நாரின் இறுக்கம் தளர்கிற சத்தம் கேட்டது. அவன் கால்களை குறுக்கி வயிறோடு கொண்டு வந்திருந்தான்.

உள்சென்று தாழிட்டபோது அவன் போர்வையை விலக்கி பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. கதவை ஒட்டி சிறிது நேரம் நின்றாள். அவன் வாய்க்குள் ஏதோ முனகும் குரல் கேட்டது. அவளைக் குறித்து ஏதோ சொல்கிறான். ‘கல் நெஞ்சக்காரி’ என்பதாகவும் அச்சொல் இருக்கலாம். அவளுக்கு நேராய் அப்படி சொல்லமாட்டான். அவள் அப்படியில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

சிமெண்ட் தரையில் பாய் விரித்து படுத்து பெருமூச்சு விட்டாள். இருள் சூழ்ந்த அந்த அறையில் சமுத்திரம் நடமாடுவதுபோல் இருந்தது. பனங்காட்டிலிருந்து உயிரற்ற அவன் உடலைத் தூக்கிக்கொண்டு வந்த நாளின் துயரங்கள் மனதைக் கவ்வின. யாரோ அவனை மரத்திலிருந்து கீழே தள்ளி கொன்று விட்டதாக ஊரில் பேச்சு அடிபட்டது. பனை மரத்தை தலைகீழாக கையாளத் தெரிந்தவன் அவன். பனை மரத்தில் வைத்து அவனை எதுவும் செய்ய முடியாது. ஒரு பனையிலிருந்து அருகேயிருக்கும் மறு பனைக்கு பாய்ந்து கவ்விக்கொள்ளும் உடல் அவனுக்கு. தனவள்ளிக்கு ஊர் பேச்சில் உண்மையில்லை என்று தெரியும்.

அவனை யாரோ திட்டமிட்டு சாகடித்திருக்கிறார்கள். யாராக இருக்கும்? தனவள்ளியின் அப்பா ஏற்பாடு செய்த ஆட்களாக இருக்கும். சாதி ஒரு பொல்லாத ஆணவம். அவர் அதற்கு பலியாகிவிட்டார். அவரை வெறியேற்றி வெறியேற்றி கொலைகாரனாக வடிவமைத்த யாரும் அதன் பிறகு அவருடன் இல்லை.

ஒருநாள் தனவள்ளி தொலைந்து போயிருந்தாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காட்டு தெய்வத்தின் காலடியில், அதன் ஓரத்தில் இருக்கும் கல் மறைவில் அணைந்த மண் விளக்குக்கு முன் தனவள்ளி செத்துப்போனவள் போல் கிடந்தாள். அவளைத் தூக்கி வந்து தலையில் தண்ணீரை ஊற்றினாள் அம்மா. இடது கையின் மணிக்கட்டுக்கு மேல் சமுத்திரம் என்று முள்ளால் கிழித்து எழுதியிருந்தாள். அந்த இடத்தில் ஓடிய நரம்புகளை எப்போது வேண்டுமானாலும் அவள் அறுத்துக் கொள்வாள் என்ற அச்சம் கூடி கலவரமடைந்தாள் அம்மா. தனவள்ளியின் அவிழ்ந்த முடியை வாரிக் கட்டிவிட்டபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள். வீட்டில் குற்றவுணர்வு நிரம்பிக் கொண்டது.

சமுத்திரம் இல்லாத ஊரில் தனவள்ளி நடைபிணமாகிப் போனாள். பைத்தியம் என்று சொல்லட்டும் என்று அரை நிர்வாணத்தோடு வீட்டில் திரிந்தாள். பிதுங்கிய மார்புகளையும் வெளித்தெரியும் தொடைகளையும் பார்க்க சகிக்காத அவளுடைய அப்பா தன்னுடைய அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு குடித்து அழிந்தார். தனவள்ளியின் அம்மா அவளை ஓர் அறையில் தள்ளி பூட்டினாள்.

கண்கள் கறுத்து இடுங்கி அதிலிருந்த ஈரமெல்லாம் காய்ந்து வற்றிப்போய் அவலட்சணம் பீடித்துக் கொண்டது. தனவள்ளியின் கழுத்துப்பட்டை எலும்புகளில் தேய்மானம் தெரிந்தது. கைகள் குச்சிகளைப்போல் சூம்பிப் போயின. இதையெல்லாம் பார்க்க சகிக்காத அம்மா ஒருநாள் இரவு படுக்கையிலேயே உயிரைப் போக்கியிருந்தாள். தனது அறைக்குள் இருந்த சாராய போத்தல்களை ஒரு மத்தியான வேளையில் உடைத்து போட்டுவிட்டு தனவள்ளியின் கால்களைக் கட்டிக்கொண்டு அப்பா கேவினார். அந்தக் கண்ணீரில் எந்தவொரு போலித்தனமும் இல்லை. செய்த பாவத்துக்கான உண்மையான மன்றாடுதல் இருந்தது. அந்தக் கண்ணீரை விரக்தியாய் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

கொடும் பஞ்ச காலத்துக்கு ஆளான அடிமாடுகளை அந்த ஊரின் வழியே யாரோ ஓட்டிச்சென்ற நாளொன்றில் ஊர் எல்லையில், வாயில் ஈக்கள் மொய்க்க அப்பா இறந்து கிடந்தார். பங்காளிகள் அவரை அடக்கம் செய்யும் வரைக்கும் அவள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தன்னைவிட்டு எல்லோரும் போய்விட்ட அன்றைய இரவில் தன் துயரங்கள் அத்தனையும் கரைந்து போகுமளவுக்கு ஒப்பாரி வைத்து அழுதாள். ஊரார் ஒருமாதிரி அச்சம் கொண்டு விழித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

5.     

நாலு மணிக்கெல்லாம் தூக்கம் போய்விட்டது. ஒன்றிரண்டு பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. வெந்நீர் வைத்து குளித்துவிட்டு சமைத்து எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது மரியதாஸை படுக்கையில் காணவில்லை. அவன் படுக்கும் கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள். வாசலில் டீவிஎஸ் பிப்டியை நிறுத்திக்கொண்டு ஹாரனை அடித்தாள் செல்வி. அவளுடன் வண்டியில் போகும்போது தனவள்ளிக்கு மரியதாஸின் நினைவாகவே இருந்தது.

மரியதாஸை நினைக்க கவலையாக இருந்தது.

யாரும் இல்லாமல் அனாதையாக நின்ற ஒருநாள் குடியிருந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு கால்போன போக்கில் பைத்தியம்போல் நடக்கத் தொடங்கியவளை ஒரு முட்டுச்சந்தில் வைத்து வல்லுறவு செய்ய முயன்றவனை அடித்துத் துரத்திவிட்டு அவன்தான் ஆதரவு கொடுத்தான்.

தன்னுடைய சிறிய வீட்டில் அவளை உட்கார வைத்துவிட்டு, அந்த நேரத்தில் எங்கோ போய் நாலு இட்லி கட்டிக்கொண்டு வந்து கொடுத்தான். தன்னைப் புணரத் துடித்த ஒருவனோடு கட்டிப்புரண்டு போராடியதில் உடல் வலுவிழந்து பசி உக்கிரமடைந்திருந்தது. அவன் கொடுத்த இட்லியை மறுப்பேதும் காட்டாமல் வாங்கி உண்டாள். அன்று இரவு அவன் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டாள். ரொம்ப நேரம் அவள் தூங்கவில்லை. மரியதாஸ் வாசலில் உட்கார்ந்து பீடிகளை ஊதிக்கொண்டிருந்தான்.

மறுநாள், அந்த நகர வீதிகளிலும் குப்பைகளிலும் சேகரித்த பழைய இரும்பு போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டுபோய் அதற்குரிய சந்தையில் விற்பனை செய்துவிட்டு அவளுக்கு ஒரு புதுப்புடவை வாங்கிக்கொண்டு வந்தான் மரியதாஸ். அருகில் இருந்த பொதுக்கழிவறைக்கு அழைத்துப்போய் குளித்துவிட்டு வரச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பெரிய நகராட்சி குப்பைத் தொட்டி ஒன்றை வெறித்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து அழுகிய ஆப்பிளின் வாசனை வந்து கொண்டிருந்தது.

குளித்துவிட்டு அவன் வாங்கிக் கொடுத்த புடவையக் கட்டிக்கொண்டு வந்தவளை ஆச்சர்யமாக பார்த்தான். அவளுக்குள் அப்படியோர் அழகு குடிகொண்டிருந்தது. எதுவும் பேசாமல் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.

‘‘போய் நாஸ்த்தா வாங்கினு வர்றேன்” என்றான். அவள் அவனைப் பார்க்கவில்லை.

நாலு இட்லி ஒரு வடை கொண்ட ஒரு பார்சலை அவள் முன் வைத்துவிட்டு அவன் போய்விட்டான். மரியதாஸ் திரும்பி வந்தபோது அந்தியாகியிருந்தது. அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு பாதுகாப்பு உணர்வு அவளுக்கு வந்திருந்தது.

இரண்டுநாள் விட்டுதான் அவள் பெயரைக் கேட்டான்.

‘‘தனவள்ளி” என்றாள்.

ஊரைக் கேட்டான். அவள் சொல்லவில்லை. இவன் தானாகவே தன் பெயரையும் சொன்னான்.

‘‘எம்பேரு மரியதாஸ்” என்றான்.

நாட்கள் ஓடின. அவனுடைய கவனிப்பும் அக்கறையும் தனவள்ளியின் உடலில் பழைய அழகை மீட்டுக் கொண்டு வந்தது.

அவனுக்கும் சேர்த்து தனவள்ளி வீட்டிலேயே சமைக்கத் தொடங்கிய ஒருநாள்,

‘‘வெளில எல்லோரும், ‘வீட்ல யாரு… ஒன் சம்சாரமான்னு’ கேக்கறாங்க… என்ன சொல்றதுன்னு தெரில. நான் என்ன சொல்லட்டும்” என்றான்.

தனவள்ளி ஒன்றும் பேசாமல் நின்றாள்.

‘‘சம்சாரந்தான்னு சொல்லட்டுமா” என்றான்.

அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. அவள் அமைதியாக இருப்பதை சம்மதமாக நினைத்து, அவள் தன்னுடைய சம்சாரம்தான் என்று வெளியில் சொல்லத் தொடங்கினான் மரியதாஸ்.

தனவள்ளியின் கன்னக்கதுப்பில் மெல்ல சதைப்பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கழுத்துப்பட்டை எலும்புகள் கூட மெல்ல மூடிக்கொண்டு வந்தன.

மரியதாஸ் ஒருநாள் மதியத்துக்காய் சிரித்தபடியே வந்தான். தனவள்ளி அவன் முகத்தை பார்த்து பேசத் தொடங்கியிருந்தாள். தயங்கித் தயங்கி அவன் சொன்னான்:

‘‘ஒன்னும் விசேசமில்லையான்னு எல்லோரும் கேக்கறாங்க” என்றான்.

அவன் என்ன கேட்க வருகிறான் என்று தனவள்ளிக்கு தெரிந்தது. அமைதியாக இருந்தாள்.

‘‘நாமதான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையே… அப்பறம் எப்படி விசேசம் வரும். அதான்…”

மடித்து வைத்திருந்த உள்ளங்கையைத் திறந்து அவள் முன்னே காட்டி தயங்கிக் கொண்டிருந்தான். அது என்னவென்று பார்த்தாள். மஞ்சள் தடவிய தாலிக்கயிறு. சிறிய தாலி அதில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கிராம் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்திருப்பான் போல. என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். ஒரு கனத்த பெருமூச்சுக்கு பிறகு தாலியை வாங்கி கைகளில் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள். சமுத்திரம் அந்தக் கயிறின் மீது பனையில் ஏறுவதைப்போல் ஏறி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்த சாமி படத்தின் முன் நின்று அதை அவள் கழுத்தில் கட்டினான் மரியதாஸ்.

இதுநாள் வரை வீட்டுக்கு வெளியே கட்டில் போட்டு படுத்துக் கொண்டிருந்த மரியதாஸ் அன்று வீட்டுக்குள் படுத்துக் கொண்டான். தனவள்ளி எப்போதும் முடங்கிக் கொள்ளும் சாமி படத்துக்கு முன்பேயே சுருண்டு படுத்துக்கொண்டாள். வெகுநேரம் கதவருகிலேயே படுத்திருந்தவன், அவளிடமிருந்து குறட்டைச் சத்தம் கேட்டபோது படுக்கையை சுருட்டிக்கொண்டு வெளியே வந்து பழையபடி கட்டிலில் படுத்துக் கொண்டான்.

மரியதாஸ் வெளியே போவதை இருளில் பார்த்தபடியே படுத்திருந்தாள் தனவள்ளி. சமுத்திரத்தின் நினைவு ஆட்கொண்டு அழுத்தியது. இரண்டு பெரிய பனங்காய்களைப் போல் அவன் நெஞ்சின் மீது உருளவிட்ட தன் மார்புகள் தீப்பற்றிக்கொண்டு எரிவதுபோல் இருந்தது.

எப்போதும்போல் எல்லா நாளும் மரியதாஸ் வெளியிலேயே கட்டில் போட்டு படுத்துக் கொண்டான். இந்த மாதிரியான பெண்ணின் இதயத்துக்குள்ள மறந்து தொலைக்க முடியாத ஒரு கதையிருக்கும் என்று பழைய இரும்புக்கடைக்கார அண்ணாச்சி சொன்னது நினைவுக்கு வரவும், மனம் பொறுக்காமல் ஒருநாள் கேட்டான்.

‘‘யாரையாவது மறக்க முடியாம தவிக்கிறியா?”

எப்போது கேட்பான் என்று காத்திருந்தவள் மாதிரி எல்லா கதைகளையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.

அதற்குப் பிறகு மரியதாஸ் அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளாக மனம் மாறுவாள் என்று விட்டு விட்டான். எப்போது வீட்டை விட்டுப் போகிறான் என்றோ, எப்போது வந்து படுத்துக் கொள்கிறான் என்றோ தனவள்ளிக்கு தெரியாது.

கொஞ்சமாக இருந்த குடிப்பழக்கம் அவனிடம் அதிகரித்திருந்தது. சிலநாள் எங்காவது ரோட்டோரத்தில் நிறுத்தி தள்ளுவண்டியின் மீதே படுத்துக் கொள்வான். சிலநாள் குப்பைக் கிடங்கில் கிடந்தான் என்று சொல்லி யாராவது இழுத்துக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டுவிட்டுப் போவார்கள்.

அவன் மீது பரிதாபமாகத்தான் இருக்கும். வீட்டுக்குள் அழைத்து படுக்க வைக்கலாம் என்று எண்ணம் வரும்போதெல்லாம் ரெண்டாகப் பிளந்த சமுத்திரத்தின் தலையும், குற்றவுணர்வுக்கு பலியான தன் வீட்டின் கொடும் பாழும் நினைவுக்கு வரும். அதை அப்படியே கைவிட்டு விடுவாள்.

குடித்துக் குடித்து மரியதாஸை காசநோய் பீடித்தது. இருமலும் சளியும் அவனை உயிரோடு வைத்து கொன்று போட்டது. அவனால் தள்ளு வண்டியை இனிமேல் இழுக்க முடியாது என்று தெரிந்த நாளிலிருந்து தனவள்ளி வேலைக்கு போகத் தொடங்கினாள். மரியதாசுடன் தள்ளு வண்டி இழுத்துக்கொண்டிருந்த பாக்கியராஜின் மனைவி செல்விதான் ஆஸ்பத்திரியில் கழிவுகளை கூட்டி சுத்தப்படுத்தும் வேலைக்கு அவளுடன் அழைத்துப் போனாள்.

‘‘டெம்ப்ரவரி வேலைதான்… இப்டியே இருந்தோம்னா நெரந்தரம் பண்ணிடுவாங்கோ” என்று சொன்னாள்.

‘அதனாலென்ன, ஒன்றும் பரவாயில்லை, நான் வேலைக்கு வரேன்’ என்று சொல்லி அவளுடன் போய்க் கொண்டிருந்தாள் தனவள்ளி.

யாருடனும் எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள விருப்பமற்றவளாய் தன்னை ஆரம்பத்தில் இருந்தே காட்டிக் கொண்டதால் யாரும் எதுவும் அவளைக் கேட்பதில்லை. அதுவொரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது. ஆனால், ரொம்ப நாளைக்கு அப்படியிருக்க முடியவில்லை. செல்வி தன்னுடைய கதைகளை ஒன்றும் மறைக்காமல் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தக் கதையில் சந்தோசம், துக்கம், ஏமாற்றம், துரோகம் எல்லாமே இருந்தது. நம்மைப் போன்றவர்களுக்கு கதைகள் நிறைய இருக்கும். அதைச் சொல்லிவிடுவதன் மூலம்தான் நம்மை ஆற்றிக்கொள்ள முடியும். மறைத்துக் கொண்டு புழுங்குவதால் துன்பம்தான் அதிகமாகும் என்பாள் அவள்.

செல்வியின் கதை தன்னுடையதை விடவும் கொடுமை என்று யோசிக்கத் தொடங்கிய பிறகு, ஒருநாள் ஒட்டுமொத்த பாரத்தையும் அவளிடம் இறக்கி வைத்தாள். அந்தக் கதையைக் கேட்டு செல்வி தேம்பித்தேம்பி அழுதாள்.

6.

மரியதாஸ் கை ரிக்‌ஷா ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான். பாக்கியராஜ்தான் ஏற்பாடு செய்து கொடுத்தான். இப்போது அவனும் கை ரிக்‌ஷாதான் இழுத்துக் கொண்டிருந்தான். பாட்டில்கள், பழைய இரும்புகள், வாகனங்களின் துருப்பிடித்த தகரப் பொருட்கள் முதலானவற்றை சேகரித்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, ஆட்களையும் லக்கேஜ்களையும் வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் வேலை ஈஸியாகவும் டீசண்டாகவும் இருக்கிறதென்று சொன்னான். மரியதாஸ் அவனுடன் சென்றான். ‘இருமலும் சளியும் நெஞ்சில் இருந்த மஞ்சாவை எடுத்துக்கொண்டு விட்டது. இருந்தாலும் யாருடைய உழைப்பிலும் என்னால் சாப்பிட முடியாது’ என்று கூறினான். தனவள்ளியைப் பற்றித்தான் அவன் கூறுகிறான் என்று பாக்கியராஜூக்கு தெரியும்.

செல்வியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டான்.

‘‘பாவம் அந்தாளு… குப்பை வண்டி தள்ளினாலும் எப்டி கெத்தா இருந்தாப்டி. இப்போ… சீக்கு வந்து இப்டி ஆயிட்டாப்ல. இதுக்கெல்லாம் ஒன் ப்ரண்டுதான் காரணம்” என்றான்.

செல்வி, தனவள்ளியைப் பற்றி பாக்கியராஜிடம் சொன்னாள். அவனுக்கு அந்தக் கதையைக் கேட்க வருத்தமாகத்தான் இருந்தது.

‘‘செத்தவன நெனைச்சே…உசுரோட இருக்கிறவன கொல்றது சரியா?” என்றான்.

 ‘‘அவளால சமுத்திரத்த மறக்க முடியலங்கறா…” என்றாள் செல்வி.

‘‘மறந்துதான் ஆவணும். இங்க யாருக்குத்தான் இப்டியான கதையில்ல?” என்றான்.

‘‘நான் நெறைய சொல்லிருக்கேன். சமுத்திரம் கூட சம்சாரம் கெணக்கா வாழ்ந்து தொலைச்சிட்டா போல… அவன் ரத்தமும் சதையுமா இன்னமும் தன் கூட வாழ்றான்னு நெனைக்கிறா” என்றாள் செல்வி.

‘‘இன்னொரு தபா பேசிப்பாரேன்” என்றான். செல்வி தலையாட்டினாள்.  

அன்று மதியம் சாப்பாட்டுக்கு உட்காரும்போது மரியதாஸ் குறித்து பேச்சை எடுத்தாள் செல்வி. தனவள்ளி தன் கலங்கிய கண்களை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள். காலியான குளுக்கோஸ் பாட்டில் ஒன்று அவள் பார்க்கும் திசையில் அசைந்து கொண்டிருந்தது. கழிவுகளை சேகரித்து வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரில் இருந்து எப்படியோ அது பிதுங்கி வெளியே விழுந்திருந்தது.

தனவள்ளியும் அந்த குளுக்கோஸ் பாட்டில் போலத்தான். நிரம்பியிருந்த போது சமுத்திரத்துக்குள் சொட்டுச் சொட்டாக இறங்கி விட்டிருந்தாள். காலியான பிறகே மரியதாசுக்கு கிடைத்தாள். இப்போது அதுவொரு கழிவு. கழுவி சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள பார்ப்பதால் என்ன பிரயோசனம்.

தனவள்ளியின் குரல் உடைந்து கமறியபோது செல்வி அவளின் தொடையில் தட்டி சாந்தப்படுத்தினாள். அவர்கள் மீது புளிய இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

7.

மரியதாஸ் ரெண்டுநாள் கழித்துதான் வீட்டுக்கு வந்தான். அந்த ரெண்டு நாட்களும் ஸ்டாண்டில் கை ரிக்‌ஷாவிலேயே படுத்துக் கொண்டான். தொடர்ச்சியாக புகைத்தும் குடித்தும் இருந்ததால் உடல் பலகீனம் அடைந்திருந்தது. மேற்கே இருக்கும் குப்பை மேட்டிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்த நாயின் நசிந்த தோற்றம் அவனுடைய உடம்பிலும் ஏறியிருந்தது. களைப்படைந்து காணப்பட்டான்.

வீடு பூட்டியிருந்தது. தனவள்ளி வேலைக்குப் போகும்போது பூட்டிவிட்டு சாவியை சுவரில் ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போவாள். சிறிய சில்வர் பூட்டு தொங்கிய தாழ்ப்பாளின் துருவையே கண்ணெடுக்காமல் பார்த்தான். இந்த வீட்டுக்கு முதன்முறையாக பூட்டு என்ற ஒன்று போட்டது தனவள்ளிதான். அவள் வரும் வரைக்கும் அந்த துருப்பிடித்த தாழ்ப்பாள்தான் வீட்டுக்கு எல்லாம். அப்படியே சாத்தி தாழ்ப்பாளை ஒரு துளையில் நுழைத்துவிட்டுப் போய்விடுவான். இப்போது சின்னஞ்சிறிய அந்த சில்வர் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பூட்டு வந்த பிறகு வீடே அழகான மாதிரி இருந்தது.

வாசல் பக்கமாக நின்று இருமிக் கொண்டிருந்தான். தனவள்ளி வர இன்னும் நேரமிருக்கிறது. கதவை ஒட்டி முன்வாசலில் கிடந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தான். நேரம் இருட்டிக் கொண்டிருந்தது. வாசல் ஓரத்தில் தனவள்ளி வைத்து வளர்க்கும் ரோஜா செடியின் சிறிய இலைகள் தெரியவில்லை என்று வாசல் விளக்கைப் போட்டான். அந்த செடியின் இலைகள் அசைவதை அவனால் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு முன்பிருந்த சாலையில் வாகனங்கள் குறையாமல் போய்க்கொண்டு இருந்தன. அவை ஒவ்வொன்றாக குறையத் தொடங்கிய போது செல்வியின் டீவிஎஸ் பிப்டியின் சத்தத்தை கூர்ந்து கேட்கத் தொடங்கினான். அதுவொரு வித்தியாசமான சத்தம். குப்பை லாரிகள் கொட்டும் குப்பைக்குள் மாட்டிக்கொண்டு பன்றிகள் கத்துமே அதுமாதிரி ஒரு சத்தம். அது ஹாரன் சத்தம் கிடையாது. வண்டியின் சத்தம். செல்வியும் தனவள்ளியும் வரும் நேரம் அவனுக்குத் தெரியும். காதை ரோடு பக்கமாக திருப்பி அந்த சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கேட்டான். வருவது போலிருந்தது. வாசல் படலைத் திறந்து ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அங்கே போய் நின்று கொண்டான்.

செல்வி மட்டும்தான் வந்தாள். மரியதாஸ் வாசல் படலுக்கு அருகிலேயே நின்றிருப்பதை சற்று தூரத்திலேயே கவனித்தவள், வாசலில் வண்டியை நிறுத்தினாள். மரியதாஸ் தான் கேட்டான்.

‘‘எங்க… தனம் வர்லியா?”

செல்வி குழப்பமடைந்தாள்.

‘‘தனம் வீட்ல இல்லியா! காலைல வந்தப்ப ஒடம்பு சரில்ல, நீ போ… நாளைக்கு வாரேன்னா. நான் போய்ட்டன்” என்றாள்.

மரியதாஸ் பீடியை ஆழ்ந்து இழுத்துவிட்டபடி செல்வியைப் பார்த்தான்.

‘‘சரி… நீ போ… இங்கதான் எங்காவது போயிருப்பா” என்றான்.  

செல்வி வண்டியை உசுப்பியபோது அதே பன்றியின் உறுமல். அவள் அங்கிருந்து போனபிறகு, கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினான். மரியதாஸ் வந்து கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஆகியிருந்தது. அவள் போய்விட்டாள். இனி வரமாட்டாள் என உள்மனம் சொன்னது.

அந்த துருப்பிடித்த தாழ்ப்பாளில் தொங்கிய சிறிய சில்வர் பூட்டை கொஞ்ச நேரம் நின்று பார்த்தான். அவநம்பிக்கை தரக்கூடிய சின்னமாக அது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அழுகை வருவதுபோல் இருந்தது.

வாசலில் நின்றிருந்த கை ரிக்‌ஷாவை எடுத்துக்கொண்டு காய்கறி கழிவுகள் அழுகி நாறும் மார்க்கெட்டின் கோணல் சந்துக்கு வந்து நிறுத்தியபோது அந்த இருட்டில் தான் மட்டும் நிராதரவாக நின்றிருப்பதுபோல் இருந்தது.

உடலைக் கோடரியால் பிளப்பதுபோல் உள்ளிருந்து ஒரு கடுமையான இருமல் வந்தது. நெஞ்சுக்கூட்டிலிருந்து கிளம்பி தொண்டையை அடையும் அந்தச் சளியை கையில் ஏந்தி அப்படியே முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது மரியதாசுக்கு.  

மௌனன் யாத்ரீகா – மௌனன் யாத்ரீகா – இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான நூல் “பாணர் வகையறா”. தொடர்புக்கு [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here