‘பொம்மியின் பென்சில்’

0

தயாஜி

பொம்மி தன் கையில் அந்த பென்சிலுடன் இருக்கிறாள். அவளின் உள்ளங்கைப் பிடிக்கு அது தோதாக இருக்கிறது. அவளுக்கு பிடித்த மாதிரி அதன் வண்ணங்கள் இருந்தன. கைப்பிடியில் ஊதாவும், மேலே பச்சையும் கொண்ட நீலநிற பென்சில்.

ஆமாம் நீலநிற பென்சில்தான். அதைவிட ஆச்சர்யங்கள் நிறையவே  உண்டு. அதுவும் பொம்மிக்கு  நன்றாகவேத் தெரிந்திருந்தது. பொம்மிக்கு ரொம்பவும் பசி, வெளியில் சென்ற அப்பா இன்னும்  வரவில்லை.  அவர் வரவேண்டும். அவர் வந்தால்தான் சமைக்க ஏதாவது அம்மாவிற்கு கிடைக்கும். பிறகுதான் எங்களுக்கு சாப்பிட ஏதாவது அம்மா செய்வார். அதுவரை அம்மாவும் வாசலிலேயேதான் அமர்ந்திருப்பார்.  பொம்மிக்கு ஏனோ இன்று பசி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிடுவதாக நினைத்து வாயில் சுரக்கும் எச்சிலையே எவ்வளவு நேரம்தான் அவள் உறிஞ்சிக் கொண்டிருப்பாள். இம்முறை நிஜமாகவே சாப்பிட வேண்டும்.  வயிற்றைத் தடவியபடியே எதையோ யோசிக்கலானாள்.

நல்ல கண்டுபிடிப்பு. பசியில் இதனை மறந்து விட்டதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறாள்.  தான் பிடித்திருந்த பென்சிலை  ஆழ்ந்துப் பார்க்கலானாள். அந்நேரம் வித்தியாசமான வாசனையை அவள் உணர ஆரம்பித்தாள். என்ன வகை சமையல் வாசனை என அவளால் யூகிக்க முடியவில்லை.  ஆழ்ந்து  மூச்சை இழுத்துக் கொண்டாள். அந்த வாசனை அவளுக்கு  ஒரு  பூரிப்பைக் கொடுத்தது. இழுத்த  மூச்சை வெளியேற்ற மனசில்லை. வாசனைக் காற்று வாய்க்குள்ளேயே இருந்து விட்டால் எப்படி இருக்கும். பசிக்குமா பசிக்காதா.  கண்களை சிமிட்டிக் கொண்டாள்.  மெல்ல அம்மாவை எட்டிப் பார்க்கிறாள். அம்மா இன்னமும் வாசலில் அப்பாவிற்காக காத்திருக்கிறார். இன்னும் எத்தனை நேரம் வரை அப்பாவிற்காகக் காத்திருப்பது எனபது ஒரு புதிர்தான். ஏனோ அம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஒருமுறை அம்மாவின் தலையில் யாரோ அடித்து விட்டார்கள். அம்மாவின் தலை மட்டுமல்ல, என்னுடன் விளையாடும் நண்பர்கள் அம்மாக்களையும் யாரோ சில பேர் அடித்து என்னென்னமோ பேசினார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று கூட அம்மா அழுவில்லை. தலையில் அடிபட்டால் வலிக்காது என அம்மா சொன்னார். ஆனால் இப்போது அப்பாவுக்காக காத்திருக்கும் போது மட்டும் அம்மா அழுது கொண்டே இருக்கிறாள். அதற்காகவே நான் வாசலுக்கு இந்நேரம் வரக்கூடாது என்பார்.

பொம்மி, மெல்ல சமையலறைக்குச் செல்கிறாள். அடுப்படியில் உள்ள தட்டுகளை வரிசையாக  கீழே அடுக்கினாள். முதல் தட்டு அப்பாவிற்கு அடுத்த தட்டு அம்மாவிற்கு என வரிசைப்படுத்தினாள். அட தனக்கொரு  தட்டு எப்படி இல்லாமல் போனது என குழப்பமடைந்தாள். தேடலானாள்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே தட்டுதான் உள்ளதென தாமதமாகப் புரிந்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு தட்டையும் தனக்கு ஒரு தட்டையும் பிரித்துக் கொண்டாள்.

கையில் பிடித்திருக்கும் பென்சிலை பார்க்கலானாள். இப்போது சாப்பிட என்ன செய்யலாம். ஒருமுறை தொலைக்காட்சியில் ஆப்பிள் பழத்தை பார்த்திருந்தாள். அதனை சாப்பிட பல நாளாய் ஆசை இருந்தது. ஆப்பிள் பழத்தின் ருசியை தெரிந்துக் கொள்ள நினைத்தாள். தரையை சுத்தம் செய்தாள். பென்சிலை எடுத்தாள். தரையில் கோணல்மாணலான வட்டம் வரைந்து மேலே ஒரு கொம்பையும் இலையும் வரைந்தாள்.

சட்டென அது ஆப்பிளாக மாறியது. கைத்தட்டிக் கொண்டாள். ஆப்பிளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். இனிப்பாக இருந்தது. கண்களைச் சிமிட்டிக்கொண்டே சாப்பிட்டாள்.  ஆனாலும் அவளின் பசி அடங்கிய பாடில்லை. இன்னொரு ஆப்பிளை வரைந்து கொண்டாள். இரண்டாவது ஆப்பிள் தோன்றியது. சாப்பிட ஆரம்பித்தவளுக்கு,  பெரிய ஆப்பிளாக வரைந்திருக்கலாம் என்கிற யோசனை  வந்தது. ஆப்பிள் பெரிதாக இருந்தால் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். இல்லையில்லை. வேண்டாம். பெரிய ஆப்பிளை நண்பர்களுடன்  சேர்ந்துச் சாப்பிடலாம்.  அவர்களும் ஆப்பிளை சாப்பிட்டிருக்க மாட்டார்கள். பாதி தின்ற ஆப்பிளை தட்டில் வைத்தாள்.

பின்னர் பெரிய வட்டம் வரைந்தாள். அவளின் கை எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம் வரை அவள் வட்டத்தை வரைந்து முடித்தாள். தொடர்ந்து பெரிய கொம்பொன்றை வரைந்துக் கொண்டாள். இலையையும் பெரிதாகவே போட்டாள். எதிர்ப்பார்த்தது போலவே பெரிய ஆப்பிள் தோன்றியது. சிரமப்பட்டு அதனை கட்டிப்பிடித்த வாக்கிலேயேத் தூக்கினாள். எந்த பக்கத்தில் இருந்து கடித்துத் தின்பது என அவளுக்குத் தெரியவில்லை. அதனை அப்படித் தடவிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து போனது.

பொம்மிக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி மறைந்திருக்கும். ஒரு கடி கூட கடித்துப் பார்க்கவில்லையே. ஆனால், அவள் பாதி தின்ற ஆப்பிள் அப்படியே தட்டில் இருக்கிறது. அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எடுத்தாள். இம்முறை சாப்பிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அந்த ஆப்பிளும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. மறைந்தேப் போனது.

அவள் அந்த மாய வித்தையைப் புரிந்துக் கொண்டாள். பென்சிலில் வரைந்ததை தட்டில் வைத்தால் மறையவில்லை. எடுத்து சீக்கிரம் சாப்பிட்டு விடலாம். ஆனால் தட்டில் வைக்காமல் இருந்தால், மாயமாக மறைந்து விடுகிறது.

தன்னிடம் இரண்டு தட்டுகள்தானே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல என்ன வரைவது. யோசிக்கலானாள். கடைசியாக என்ன சாப்பிட்டோம் என நினைக்கிறாள். ஆப்பிள். ஆமாம் ஆப்பிள்தானே சாப்பிட்டேன் என நினைத்துக் கொண்டு சிரிக்கவும் செய்கிறாள்.

‘அம்மா கடைசியாக என்ன சமைத்துக் கொடுத்தார்?, தட்டு? அது முழுவதும் தண்ணீராய் இருந்தது. நடுவில் ஆங்காங்கு வெள்ளையாய் ஏதோ  இருந்தன. அதிலொன்றை ரொம்ப நேர நீச்சலுக்குப் பின் பொம்மி வெளியில் விரல்களை எடுத்து அம்மாவிடம் காட்டினாள். அம்மா அதுதான் சோறு, நாளைக்கு அப்பா வந்ததும் தண்ணிய குறைச்சி சோறு நிறைய இருக்கற மாதிரி சமைக்கலாம் என்றார். ஆனால் அம்மா சொன்ன அந்த ‘நாளை’ இன்றுவரை பொம்மிக்கு வரவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதாவது சாப்பிடக் கொடுக்கலாம் என எண்ணினாள்.

பென்சிலில் சின்ன சின்னதாய் வட்டங்களை வரைய ஆரம்பிக்கின்றாள். எல்லாம் சோற்றுப் பருக்கைகளாக  மாறிக்  கொண்டிருந்தன. அப்படியே எடுத்து ஒரு தட்டு நிறைய போட்டுக்கொண்டாள். கீழே விழும் சோற்றுப் பருக்கைகள் எல்லாம் மறைய ஆரம்பித்தன. இம்முறை விழுந்தவுடன் உடனடியாக அவை மறையத் தொடங்கின. பொம்மி ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் ஒரு தட்டு முழுக்க சோற்றை போட்டு நிரப்பினாள். அடுத்த தட்டு…..

“பொம்மீ… பொம்மீ…”

வாசலில் இருந்து அம்மா அழைக்க ஆரம்பித்தாள். அப்பா வந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பொம்மி புரிந்து கொண்டாள்.

சோறுக்கு ஏற்றதாய் என்ன வரைந்து எடுக்கலாம் என பரபரப்பானாள். ஒரு குட்டி வட்டம் அதன் கீழ் பெரிய வட்டம்….

“பொம்மீ… பொம்மீ…”

பெரிய வட்டத்தின் கீழ், இரண்டு குச்சி கால்கள்….

“பொம்… பொ..ம்மீ…..”

குச்சி கால்களுக்கு மேலே சிறகுகளை வரைந்தாள். நினைவில் இருக்கும் கோழி அவளின் விரலில் வந்திறங்கவில்லை….

“பொம்மீ…….!!”

அம்மா வேறு இப்படி கத்துகிறாரே என போட்டதைப் போட்டபடியே எழுந்து ஓடுகிறாள்.  கீழே எதையோ மிதித்து கால் வழுக்கியது. அப்படியே தலைகீழாக விழுந்தாள். ஆனாலும் அவளின் கை அந்த பென்சிலை இருக்கமாகவே பிடித்திருந்தது. சட்டென அவள் மீது மழை.

“பொம்மீ.. பொம்மீ…..”

அம்மா கதறி அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள். பலர் தலையில் எதையோ கட்டிச் சுமந்து, நடந்து கொண்டிருந்தார்கள். வியர்வையிலும் வெயிலிலும் அவர்களின்  உடல்கள், நனையவும் காயவும் செய்துக் கொண்டிருந்தன. நடை பிணங்கள் போல எந்த உணர்ச்சியும் இன்றி நடந்து கொண்டிருக்கிறார்கள். சாலையின் இடையிடையில்  மயங்கி  விழுந்தவர்களை தூக்கி விட தெம்பும் இல்லை. முகத்தில் தெளிக்க தண்ணீரும் இல்லை. பசி. ஏமாற்றம். துரோகம்.  அழுகை.  இழப்பு.  இருள்.

நாம் ஏன் இத்தனை இழிவான மனிதர்களாக  பிறந்தோம். யாருக்குப் பிறந்தோம். எங்கே பிறந்தோம். ஏன் விரட்டுகிறார்கள். எங்கே விரட்டுகிறார்கள். பதில் தெரியவில்லை.  கிளம்பியவர்களில் எத்தனைப்பேர் தத்தம் தாய் நிலத்தை அடைவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. தாய் நிலமா அப்படியொன்று இருக்கிறதா என்ன? . பூமி பிளந்து எங்களைத் தின்றுவிட்டால் எத்தனைப்பெரிய பாக்கியம் கிடைக்கும்.

“ஐயோ… பொம்மி.. பொம்மி…… நீயும் என்னை விட்டு போய்ட்டியே…..”

 அம்மா கதறினார். அசைவற்ற பொம்மியின் உள்ளங்கை, அம்மாவின் கிழிந்துப் போயிருந்த முந்தானையை இறுக்கமாய் பிடித்திருந்தது. அவளின் உள்ளங்கை வியர்வையில் அந்த முந்தானையின் நிறம் ஒட்டிக்கொண்டிருந்தது. இன்னும் பலர் இவர்களை வெறுமனே கடந்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அழுவதற்கு கண்ணீர் யாரிடமும் மிஞ்சியிருக்கவில்லை. இருந்திருந்தால், அதைக் கொண்டாவது வாய் நனைத்திருக்கலாம்.

தூரத்தில் ஈசல்கள் போல நீண்ட சங்கிலியாய் ஏதோ ஊர்ந்து கொண்டிருக்கிறது. பாதி திறந்த ஜன்னலில் தெளிவாகத் தெரியவில்லை.  ஜன்னல் திரையை விலக்கியப்படி ஒரு சிறுவன் எட்டிக் பார்க்கிறான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் கையில் இருந்த பாதி கடித்த ஆப்பிளை அந்த ஈசல் கூட்டத்தின் மீது வீச முற்படுகிறான். அவன் உள்ளங்கையிலும் சில வண்ணங்கள் ஒட்டியிருந்தன.

***

தயாஜி

மலேசியாவில் வசிக்கிறார். தொடர்ந்து கதைகள், நூல் விமர்சனம் என இயங்கி வருகிறார். இவரது வலைப்பூ – https://tayagvellairoja.blogspot.com , இவரது மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here