பிரார்த்தனை

2

நசீமா

ந்த காம்பவுண்டுக்குள் இருந்த முதிர்ந்த ஆலமரத்தின் பக்கவாட்டில், நடந்து முடிந்த ஒரு பெருங்கலவரத்தில் சிந்திய இரத்தம்போல செந்நிறத்தில் உறைந்து நின்று கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம். மக்கள் அழும் சத்தமும், கதறல்களும் எங்கு திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே வந்த கான்ஸ்டபிள், அந்த மரத்திற்கு கீழே உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை நோக்கி வந்தார்.

“ஏம்பா! உன் பெயர் என்ன சொன்ன??”

“பஷீர் சார்…”

“சரி, உன் பையன் நீலநிற சட்டை தானே போட்டு இருந்தான்.”

“ஆமா! சார்..”

“கொஞ்ச நேரம் ஆகும், நானே வந்து உன்னை கூப்பிடுறேன்” என்று சொல்லி அந்த காவல் நிலையத்திற்குள் கரைந்து போனார்.

பஷீர் கண்கள் இருண்டுக் கொண்டு இருந்தது. அந்த மரம் தாங்கிக் கொள்ள, அப்படியே சாய்ந்து உட்கார்ந்தார். அவர் நினைவலைகள் சென்ற வாரத்திற்கு இழுத்துக்கொண்டு சென்றது. என்றைக்கும் போலவே அன்றும் விடிந்தது. சூரியனுக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தால்…

பஷீர் வசிக்கும் மொஹல்லாவுக்கு பக்கத்தில், ஒரு பஜார் இருக்கிறது. காலையில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் எப்போதும் போலவே இருந்தது. பள்ளிச் செல்லும் வண்டி, மஞ்ச நிறத்தில் வந்து நிற்க, மகன் சாபுவை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த பஷீரின் மனைவி சல்மா, சூடாக ஒரு காபி போட்டுக் கொண்டு வந்து பஷீரிடம் கொடுத்தார். காபியை கையில் வாங்கிக் கொண்டபடி தொலைக்காட்சியை இயக்கினார்.

தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாக அவர்கள் ஊரில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

“என்னங்க இது, பாவம் எவ்வளவு அப்பாவிங்க மௌத்தானாங்களோ? அல்லா தான் லேசாக்கி வைக்கணும்” என்று முடிப்பதற்குள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் இருந்ததைப் பார்த்து சல்மாவுக்கும் கோபமும் கண்ணீரும் ஒன்றாய் வந்தது. மேலும் இசுலாமியர்கள் வாழும் பகுதியில் அவர்கள் இன்னும் தங்கியிருக்கலாம் என்று ஒளிபரப்பினார்கள்

“இந்த டிவிக்காரங்களுக்கு புத்தி இருக்கா?, இல்லையா?” என்று கோபமானவளைப் பார்த்து, “கொஞ்சம் இரு என்னன்னு கேட்கலாம்” என்று கூறினார்.

ஆனால் அவள் மனமோ ஏதோ ஒன்றை முன்கூட்டியே உணர்ந்ததாய் புலம்ப வைத்தது.

“தீவிரவாதி பெயரை, இப்பெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்கிறார்கள். அவன் வீட்டுக்கு வந்தா எந்த இஸ்லாமியனும் கட்டிப்புடிச்சி பிரியாணி போட மாட்டாங்க,. செருப்பாலே அடிச்சி, ஒரு வழி பண்ணிருவாங்க ஏன் இவனுங்களுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது.”

“இப்ப நீ சொல்லி இவனுங்களுக்கு கேட்கவா போகுது. பைத்தியக்காரி! அல்லா இருக்கான் நீ போய் என் சட்டையையும் சாவியும் கொண்டு வா.. சவாரிக்கு போகணும் நேரம் ஆகிவிட்டது.”

“அது சரி ஆனா, இவனுங்க எப்ப பார்த்தாலும் இஸ்லாமிய தீவிரவாதம்ன்னு சொல்றத பார்த்தா, ஏதோ நம்மள பத்தியும் இப்படி நினைச்சிடுவாங்களோன்னு பயமாக இருக்கு”

“பக்கத்து வீட்டு கோபால் எப்பவாவது அப்படி பார்த்து இருக்காரா?” என்று பஷீர் கேட்க

“இல்லை..”

“இது போதும், விடு கழுதையை எவனோ சொன்னான்னு எங்கையோ நடந்ததை வச்சி, உன் நாளை வீணாக்கிக்காத..!”

ம்ம்ம்.. என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, பஷீரின் காக்கிச்சட்டையையும், ஆட்டோ சாவியையும் எடுத்துக் கொடுத்து “அஸ்லாம் அலைக்கும்” என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள். ஆனாலும் பதட்டம் குறையாதவளாகவே தென்பட்டாள்.
சல்மாவும் வீட்டு வேலையில் பரபரப்பாகிப் போக, அங்கே இருந்து வெளியே வந்த பஷீர், தெருவின் இருபுறமும் குடைகளுக்கு கீழ் விரிந்து கிடந்த பஜாரைப் பார்த்தார். எப்போதும் இருப்பதைவிட கூடுதலான பதட்டம் அப்பிக்கொண்டு இருந்தது. அவருக்கும் ஏதோ மனதில் பட்டாலும் அவ்வாறெல்லாம் இருக்காது என்று தொடர்ந்தார்.

அறுபது வயதான பேகம் பீ, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்ற பச்சைநிறக் கீரைகளை விற்றுக்கொண்டு இருந்தாள். பஷீரைப் பார்த்தவுடன், “பசீர், டிவில என்னன்னவோ சொல்றாங்களாமே, ஒன்னும் புரியல, நீயாவது சொல்லிட்டு போ” என்றாள் .

“டிவிக்காரங்க அப்படிதான் பயங்காட்டுவானுங்க, பயப்படற மாதிரி ஒன்னுமில்ல, நீ வியாபாரத்த பாரு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பக்கத்து தெரு லட்சுமி அக்கா, “பீ, பசலக்கீர ரெண்டு கட்டு கொடுங்க” என்றார் .

“புதினா இன்னைக்கு தான் வந்துச்சி, ரெண்டு கட்டு போடட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே ஒரு கட்டு கறிவேப்பிலையும், கொத்தமல்லியையும் பைக்குள் வைத்தாள்.

“சரி பீ, நான் கிளம்பறேன்” என்று ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி சென்றவருக்கு ஒரு அலைபேசி வந்தது..

“அஸ்லாம் அலைக்கும், பஷீர் பாயா?”

“ஆமா.. அலைக்கும் சலாம்! சொல்லுங்க”.

“பாய், பஜாருக்கு முனையில இருக்கற பிஸ்மில்லா கறிகடைக்கு சீக்கிரம் வாங்க” என்று சொல்லியவாறு படப்படப்புடன் அந்த கால் துண்டிக்கப்பட்டது.

“சவாரிக்கு ரொம்ப அவசரம் போல, ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருந்தது நல்லதா போச்சி” என்று எண்ணிக்கொண்டு ஆக்ஸிலேட்டரை வேகமாகத் திருக வண்டி பறந்தது.

கடைக்கு வெளியில் ஒரே கூட்டம், என்னவாக இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள் “கறிக்கடை அஸ்லாம் பாயை யாரோ மாட்டுக்கறி விற்பனை செய்றாருனு சொல்லி இரும்பு கம்பியால் அடிச்சிருக்கானுங்க” என்று அங்கு கூடியிருந்த மக்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

பஷீர் வண்டியில், அஸ்லாம் பாயை ஏற்றிக்கொண்டு சிலர் மருத்துவமனையை அடைந்தார்கள். .

ஆட்டோவுக்கு பின்சீட்டில் எல்லாம் இரத்தக்கறை. பஷீருக்கு பதற்றம் அதிகரித்தது. சீக்கிரமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

“சல்மா…. சல்மா” என்று அவரின் சத்தம் பயத்தின் அலறலாக இருந்தது.

“என்னங்க இவ்வளவு பதட்டத்தோட இருக்கீங்க?? என்னங்க சட்டையில ரெத்த கற??”

“ஒன்னுமில்ல, அங்க ஒருத்தருக்கு அடிபட்டுடிச்சி, நம்ம வண்டில தான் ஹாஸ்பட்டலுக்கு கூட்டிக்கிட்டு போயிருந்தேன்” என்று சமாளித்தார்

“அல்லாவே! யாரு புருஷனோ! பிள்ளையோ பிழைக்கணும்” என்று வேண்டிக் கொண்டாள். சல்மாவுக்கு இப்படித் தான் ஒன்று புலம்பனும் இல்லை வேண்டிக் கொள்ளனும் என தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் பஷீர்

“காய் பஜார்ல யாரும் காணோம்” என்று குழப்பத்துடன் கேட்டவனுக்கு..

அது சரி மணி பதினொன்னு ஆயிடுச்சி, பத்தரை மணிக்கே எப்பயும் போல கட சாத்திட்டாங்க” என்றாள்.

“சாபு ஸ்கூலில் இருந்து எப்போ வருவான்”.

“இன்னும் அரை மணிநேரத்தில் வண்டி வரும்” என்று பதில் அளித்தாள்.

மகன் வரும் வரை இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார் பஷீர். பாம்… பாம்.. என்று வண்டி சத்தத்தை கேட்டவுடன் ஓடிப்போய் சாபுவை அழைத்துக் கொண்டு, வீடு வந்த பின்பே மனசு லேசானது.

“அப்பா சவாரிக்கு போகலையா? எப்பவும் நைட்டுக்கு தானே வீட்டுக்கு வருவீங்க” என்ற சாபுவின் கேள்விகளுக்கு, “இன்னைக்கு உன் ஞாபகமா இருந்துச்சி அதான் சீக்கிரம் வந்துட்டேன்” என்று சாபுவை அணைத்து உச்சி முகர்ந்தார்.

டிவியை ஆன் செய்ய வேண்டாம் என்ற முடிவோடு இருந்தாலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாமல் மனது இறுக்கமாக இருந்தது.

அன்றைக்கு சாபுவுக்கு பிடித்த சிக்கன் 65, சிக்கன் சாலன் ஆகியவற்றை தயாரித்திருந்தார் சல்மா. அந்த வாசனையை இழுத்துக்கொண்டு “மம்மி எனக்கு பிடித்ததை செஞ்சிருக்காங்க” என்ற குஷியோட அப்பாவையும் கூட்டிக்கொண்டு சீக்கிரம் சாப்பிட உட்கார்ந்தான்.

நிலநடுக்கத்தால் அதிரும் பூமி போல, கதவை யரோ வேகமாக தட்டும் சத்தம் வர, சல்மா கதவை திறக்க எழுந்திருக்கும் முன் பஷீர் “இரு.. இரு” என்று கையால் காட்டி விட்டு கதவை திறந்தான். “கோபால் நீங்களா? வாங்க! வாங்க!.. என்றான்.

கோபால் மிகவும் படபடப்புடன் பஷீரை வாசலுக்கு இழுத்து “பஷீர் சிக்கிரம் இங்கிருந்து போயிருங்க” என்றார்.

“என்னாச்சி கோபால்! ஏன்? இப்படி சொல்ரீங்க?”

“பஜாருக்குள் ஒரே கலவரமாக இருக்கு. யாரும் நம்ம ஊரு ஆளுங்க போல தெரியல. என்னை இழுத்து பேண்டை கழட்டி பார்த்துட்டானுங்க.. பரதேசி பயலுக.. சீக்கிரம் பாபியையும், சாபுவையும் கூட்டிக்கிட்டு இங்கிருந்து போங்க” என்றான்.

“எங்க போவேன் கோபால், எனக்கு ஒன்னும் புரியல. இது தான் என் ஊரு. அப்போ நீங்க என்னைய காப்பாத்த மாட்டிங்களா”

“அதற்காக தான் நான் சொல்றேன் இங்க இருந்து போயிருங்க பாய்”என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பெட்ரோல் நிறைந்த தீ வைத்த பாட்டில் ஒன்று இருவருக்கும் இடையில் வந்து விழுந்தது.

பஷீர் சாபுவையும், சல்மாவையும் இழுத்துக்கொண்டு ஓடினார். அந்த மொஹல்லா மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்தார்கள். நெரிசலும் புகையும் ஒன்றும் தெரியவில்லை. திடீரென்று சாபுவின் கை, மெல்ல மெல்ல நழுவியது, திரும்பி பார்த்தால் சாபுவின் “பப்பா… பப்பா..” என்று சத்தம் தூரமாகிப் போனது. மக்கள் அலை பஷீரையும் சல்மாவையும் எங்கோ இழுத்துக் கொண்டு சென்றிருந்தது. பஷீர் மயங்கிக் கொண்டிருந்தார்.

கண் விழித்துப் பார்த்தால் மொஹல்லாவே அங்கங்கே நெருப்பில், எரிந்து கொண்டிருந்தது. “அல்லாஹ்வே.. என் சாபு” என்று கதறி இருவரும் தேடிக்கொண்டு இருக்கும் போது , ரத்தத்தில் தோய்ந்து போய் கிடந்தாள் பேகம் பீ, அவள் கண்களை மூடிவிட்டு திரும்பும் திசையெல்லாம், இதுபோல பல சடலங்கள், சிதறிக் கிடந்ததைக் கடக்க முடியாமல் தேடினான். சாபுவை எங்கு தேடியும் பயனில்லை. ஒரு வாரமாக பல இடங்கள், முகாம்கள் என்று தேடியும் விடையில்லாமல் ஒரே இடத்தில் கரைந்துபோய் நின்று கொண்டிருந்தார்.

நேற்று போலீஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. இங்கே ஒரு நீலநிற சட்டை போட்டப் பையனின் சடலம் கிடைத்துள்ளது என்று.. அதை உறுதி செய்ய காத்துக் கொண்டிருந்த கணங்களில் மீண்டும் ஒருமுறை எல்லாமும் நடந்தது போல் இருந்தது

“பஷீர்..பஷீர்” என்று அழைத்த கான்ஸ்டபிளின் குரல் அவரை மீண்டும் அந்த இறுக்கமான இடத்திற்கு கொண்டு வந்தது…

வாங்க, நீங்க சொன்ன வயசுல, புளு கலர் சட்ட போட்ட பையன் சடலம் என்று அவர் சொல்லும்போதே, அவன் நுரையீரலும், இதயமும் பதட்டத்தில் இடத்தை மாற்றிக்கொண்டது போல், அவன் உடம்பும் மனதும் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டது.. அவன் கால்களின் ரத்த ஓட்டம் உறைந்துப் போனது…
எப்படியோ அவரை, உடல் இழுத்துக்கொண்டு சடலத்தை நோக்கிச் சென்றது, மூடி இருந்த உடலுக்கு வெளியே சட்டையின் நிறமும் மங்கலாகவே தெரிந்தது.

அவனுடன் வந்த கான்ஸ்டபிள் மூடியிருந்த துணியை எடுக்க.. அதைப் பார்த்ததும், “அல்லாஹ்வே” என்ற கதறினார்.. பின்னர் மெதுவாக முகம் சிதைந்திருந்த அப்பிணத்தின் கைகளைத் தொட்டுப் பார்த்தவர். இறுதியாக தன்னை பற்றியிருந்த சாபுவின் கைகள் ஞாபகம் வந்தது

“என் புள்ள இல்ல சார்.., ஐயோ இது என் புள்ள இல்ல சார்.. அல்லாஹ்வே சாபுவை பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

“பாய் சரியா பார்த்து சொல்லு, இல்லன்னா நாங்க பாடிய அநாத பொணம்னு எரிச்சுடுவோம்”

“அல்லாஹ்!! என் புள்ள கைய வச்சே சொல்லிடுவேனே சார். அந்த கைய தான் பிடிக்காம விட்டுட்டேன் ” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை தரையில் விழுந்து அழ ஆரம்பித்தார்.

உடன் சென்றவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

“என் புள்ள இல்லல்ல..” என்று சல்மா அவனைப் பார்த்தவுடன், அவன் சட்டையை பிடித்து அழ ஆரம்பிக்க..

“இல்ல மா, நம்ம புள்ள இல்ல” என்று பெருமூச்சுவிட்டது அவன் நுரையீரல்கள்.

“என் புள்ள எங்கயோ இருக்கான், கண்டிப்பா ஒருநாள் நம்மள தேடி வருவாங்க” என்று விம்மினாள் ..

அவளின் ஆசைக்கு ஆறுதல் சொல்வதுப் போல், சுவற்றில் இருந்த அந்தச் சின்ன பல்லி “உச் உச்” என்ற சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

இன்ஷா அல்லா என்று சொல்லிவிட்டு, தொழுதுட்டு வரேன் என்று வுளூஉ செய்யப் போனவருக்கு பின்னாடியே சாபுவின் அம்மாவும் தயாரானாள்.

நமாஸ் செய்ய விரிப்புகளை எடுத்து தனித்தனியாக இருவரும் தொழுது கொண்டிருந்தார்கள்.

பஷீர் துஆ கேட்கும் போது கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக கண்ணீர் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. “யா அல்லாஹ், சாபு இல்லை என்று என் மனதுக்கு ஆறுதல் தந்தாய் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் சாபுவின் வயதுடைய அந்தப் பிள்ளையை அனாதை பிணமாக விட்டு வந்துட்டேனே என்று என் மனம் பதைக்கிறதே என்னை மன்னித்துவிடு”

“இறைவா, தன் மகன் இல்லை என்று விட்டு வந்த பிள்ளைக்கு, சொர்கத்தில் மேலான இடத்தைக் கொடு, அவனைப் பெற்ற அந்த தாய்க்கு, இதைக் கடந்து செல்ல தைரியத்தைக் கொடு” சல்மாவும் அழுது கொண்டிருந்தாள்.

ஒரு தாயின் பிரார்த்தனையை நிறைவேற்றுவேன் என்று இறைவன் கூறியுள்ளான் என்பதை அவர்கள் இருவர்களும் உணர்ந்தபோது இன்னொருமுறை உறுதி செய்ய முடியுமா என்று அழைப்பு வந்திருந்தது பஷீருக்கு.

***

நசீமா – துபாயில் வசிக்கும் இவர் ஒரு மெந்திறன் பயிற்சியாளர். சமீபத்தில் என்னைத் தேடி என்கிற குறுநாவல் வெளியானது. மனநலம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

2 COMMENTS

  1. “நடந்து முடிந்த ஒரு பெருங்கலவரத்தில் சிந்திய இரத்தம்போல செந்நிறத்தில் உறைந்து நின்று கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம். மக்கள் அழும் சத்தமும், கதறல்களும் எங்கு திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருந்தது. //
    நல்ல தொடக்கம். சாத்தான்குளம் சம்பவம்தான் கண்முன்னே விரிந்து சென்று கொண்டு இருக்கிறது. வாழ்த்துகள் நசீமா தொடர்ந்து எழுதுங்கள்.

  2. தோழர் நசீமாவுக்கு வணக்கம்
    பிரார்த்தனை கதை படித்தேன் .சிறுபான்மையினர் என்றாலே தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் இந்திய சமூகத்தில் ஏன் இஸ்லாமியர் அல்லாத ஏகாதிபத்தியங்களின் பரப்புரை இந்த உலகத்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது .எப்போதும் பாதுகாப்பற்ற சூழலில் ஒரு சமூகத்தை வைத்திருப்பது வெட்கப்படவும் வேதனைப்படவும் வைக்கிறது. பஷீர் பாயை நீங்கள் ஓடிவிடுங்கள் என்று அந்த இந்து நண்பர் சொல்லும் வேளையில் ஏன் ? நான் இங்கு தானே பிறந்தேன் ? இதுதானே என் ஊர் நீங்கள் என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா ? என்ற ஞாயமான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கூனிக் குறுகுகிறேன . தன் குழந்தை இல்லை என்றாலும் அந்தக் குழந்தைக்கும் வேண்டும் தாய்மை நெகிழ வைக்கிறது .மொத்தத்தில் கதை தொடக்கத்தில் இருந்து பதட்டமாகவே செல்கிறது. இந்த உலகத்தின் குழந்தைகள் அனைவரும் பயமில்லாமல் சுதந்திரமாக வாழும் நிலை உறுவானால் மட்டுமே மனதில் நிம்மதி நிலைக்கும் .அதற்காகவே மனம் ஏங்கி வேண்டுகிறது .நன்றி நசீமா
    மு.பாலசுப்பிரமணியன்
    புதுச்சேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here