Thursday, March 28, 2024
Homesliderபரு

பரு

சக.முத்துக்கண்ணன்

ஒன்பதாம் வகுப்புலேயே எங்களுக்கு முகமெல்லாம் பரு போட்டிருந்தது. பத்தாம் வகுப்பு வந்தும் கூட நிறைய பசங்க பச்சமொகம் மாறாமல் வழுவழுப்பாக இருந்தார்கள். ஒருவேளை வளத்தியாருந்தால் வருமா? என்று பார்த்தால் அப்படியுமில்லை. அதிலும் சிலர் மிச்சமிருந்தனர். இந்த பரு மேட்டர் எங்களை ஏதோ அயோக்கியன் போல காட்டி விட்டது. யாரோ ‘அந்த’ மாதிரி செய்யும் பசங்களுக்குத்தான் பரு வருமென கிளப்பி விட்டிருந்தார்கள். பதினோராம் வகுப்பு வந்ததும் பரு வந்தவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதால்  ஈசியாக யோக்கியனாகிட்டோம். முகம் நிறைத்த பருக்களோடும் அகமது அழகாகத்தான்  இருந்தான்.

அகமது நல்ல உயரம். செவச்செவன்னு இருப்பான். ‘இந்த அல்லாக் காரெங்கெ மட்டும் எப்றா வெள்ளவெளேர்னு இருக்காய்ங்கெ?’ என மொத்த மதத்துக்கும் வெள்ளைச் சாயம் பூசிவிட்டிருந்தோம். அகமதுக்கு நல்லா நடிக்க வரும்.  எல்லா சார் மாதிரியும் செய்து காட்டுவான். நடை, உடல்மொழி, குரல் என தூள் கிளப்புவான். ஓரளவு படிப்பான். நாங்க ஏ-ஒன் குரூப். எல்லாமே நல்லா படிக்கிற கேஸ்தான்.

பதினோராம் வகுப்பு வந்த புதிதில் பயாலஜி சார் போல நடித்துப் பழகினான். பயாலஜி சார் சின்னதா துண்டு ஒன்னு வச்சிருப்பார். வெள்ளை டர்கி துண்டு. எடுத்து கைல பிடிச்சிருக்கிறதும் உதறி தோள்ல போட்டுகிறதுமாவே இருப்பார். அவரை நினைத்தால், அந்த துண்டுதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். துண்டைக் கையாளுவதை, அவரைப் போலவே செய்துகாட்டி எங்களிடம் கைதட்டு வாங்கினான் அகமது. 

காப்பரிச்சையெல்லாம் முடிந்த பிறகு நியூ அட்மிசனாக மெர்லின் வந்து சேர்ந்தாள். கல்வித் துறையில் இப்போதிருக்கிற கெடுபுடி ரூல்ஸ்செல்லாம் அப்போ இல்லை. ஹெச்சமா பாத்துச் சொல்லிட்டா சரித்தான். மறுநாள் ஹெச்சம் வகுப்புக்கு வந்தார். அதட்டலாய் மெர்லினை அறிமுகம் செஞ்சிட்டுப் போனார். பிள்ள சூப்பராருக்கு. பிரச்சன வரும்ன்னு முன் எச்சரிக்கை.

எங்களுக்கு முளைத்த பருக்களை அர்த்தமுள்ளதாக்கினாள் மெர்லின். பூர்வீகம் கேரளா. அப்பாவின் வேலை நிமித்தமாய் கம்பம் வந்திருக்கிறார்கள். வந்த பிறகு பிறந்த கடைக்குட்டியிவள்.

மெர்லின் வருவதற்கு முன், மெர்லின் வருவதற்கு பின் என எங்களது ஹையர் செக்கன்டரி காலகட்டத்தையே ரெண்டாக பிரிக்கலாம். மெ.மு-வில் ஹிஸ்ட்ரி குரூப்பில் இருந்த தனலச்சிமி தான் பள்ளி தேவதை. அடுத்த பத்து இடங்களைப் பிடித்தவள்களைச் சங்கத்தலைவன் லிஸ்ட் போட்டு வைத்திருந்தான். இதெல்லாமே ஆவணமாக எழுதிக் கொள்வதில்லை. புங்க மர நிழலில் கூடி அரட்டையடிக்கையில் ரசிக்கத் தெரிந்த சிலர் சொல்லி வைத்த லிஸ்ட். மெ.பி. காலத்தில் மெர்லின் ஒன்லி தான். அவளை அடித்துக்கொள்ள ஆளில்லை. சொல்லப்போனால் ஆசிரியர்கள் சிலரே அவளை வளைப்பதாக ப்ரவீன் தகவல் சொன்னான்.

மெ.மு-வில் போட்டு வைத்திருந்த தேவதை லிஸ்ட்டெல்லாம் சும்மா. வேறுவழியில்லாமல் போட்டு வைத்தது. பட் மெர்லின்!…  ப்ச்.. அவ்ளோ அழகு. சுருள் சுருளான அவள் கேசத்தில் எப்போதும் ஈரம் படிந்தேயிருந்தது. ஒருநாள் பீட்டி பீரியடு முடிந்து வரும்போது அவள் நெற்றியைப் பார்த்தேன். வேர்வை வழிந்து காதோரமிருக்கும் குறுமயிர்களை நனைத்திருந்தது. புங்க மரத்தை அவள் கடக்கும் போது படிந்திருந்த ஈரத்தின் மீது பட்ட இளங்காற்றில் அவள் சுகப்பட்டதை அகமதிடம் சொன்னேன். அவன் அதையே கவிதையாக பேப்பரில் எழுதி வந்து மறுநாள் சங்கத்தில் காட்டினான். சங்கமென்றால் வேறொன்றுமில்லை. அப்படியான சொற்பிரையோகம் நிஜமாகவே அப்போது இருந்தது. ப்ரவீன் பேச்சை எல்லோரும் மறுக்காமல் கேட்டதால் அவனைச் சுற்றி அப்படி அமைப்பு உருவாகியிருந்தது.  அவன் இப்போது சீட்டுக்கம்பெனி நடத்துகிறான்.

மெ.பி. காலத்தில் பசங்க நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள். இதை பயாலஜி (சார்) தவறாக புரிந்து கொண்டார். ஏதோ அவர் திறமையால் பசங்க பயாலஜியில் மார்க் வாங்கியதாய்ச் சொல்லிக் கொண்டார். சரி விடு என சங்கத்தில் தீர்மானம் போட்டு லூஸில் விட்டோம்.

அகமது கூடுதலாய் மெனக்கட்டான். வகுப்பறையில் முதல் ஆளாய் எழுந்து நின்று பதில் சொல்ல ஆரம்பித்தான். ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் சிட்டிசன் அஜித் போல பேசிக்காட்டி அசத்தினான். துண்டை எடுப்பது போல் வெறுங்கையில் பாவனை காட்டி ஒரு உதறு உதறி பயாலஜி (சார்) போல நடந்து காட்டினான். மெர்லின் மலர்ந்து சிரித்தாள். அகமது நடிக்கும் போது நான் மெர்லினைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்றம் ஒரு பூ பூப்பது மாதிரியான அவளது எக்ஸ்பிரசன்களை நான் சொல்லச்சொல்ல  அகமதுக்கு றெக்கை முளைத்துக் கொண்டிருந்தது.

வெள்ளைநிறத் துண்டைச் சட்டென உதறிவிட்டுத் திரும்பிக் கத்தினார். “ரிபோசோம் ஒட்டிருந்தா அது சொரசொரப்பான எண்டோ பிளாஸ்மிக் வலை பின்னல். ரிபோசோம் அங்க இல்லீன்னா வழவழப்பான எண்டோபிளாஸ்மிக் வலைபின்னல். பரு இருந்தா சொரசொரப்பா இருக்கும்ல கன்னம். பரு மாதிரி தான் ரிபோசோம்” என்றார். எங்களுக்குப் புரிந்தது. அவர் விடவில்லை.   மேலும் புரிய வைக்க பரு முகத்துப் பசங்களையும், பொண்ணுங்களையும் எழுப்பினார். சொரசொரப்பான முகம், வழுவழுப்பான முகம் வகுப்பையே ரெண்டாகப் பிரித்தார். அகமதுவும் மெர்லினும் ரிபோசோமால் பிரிந்தார்கள்.

அன்றுதான் பரு முளைத்ததிற்காக அகமது அவ்வளவு சங்கடப்பட்டான். மறுநாள் எல்லா பருவையும் கண்ணாடியில் பார்த்துக் கிள்ளிக் கிள்ளி முகம் பூராம் சிவந்து வந்திருந்தான். இடது கன்னத்திலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. பீட்டி சார் பாத்துட்டு திட்டினார். எங்களையும் உக்கார வச்சு கிளாஸ் எடுத்தார். அவனுக்கு மருந்து சொன்னார்.

‘காயம் தான் ஆறும். பரு வரத்தான் செய்யும். குளுச்சியான தண்ணில பொழுதன்னைக்கும் கழுவிக்கிட்டே இரு. முடிஞ்சவரைக்கும் எதையும் போட்டு இழுகாத. அப்டியே விடு. தானா சரியாகிடும்.’

மெர்லின் பரிதாபப்பட்டாளா? தெரியவில்லை. பார்த்து எழுத பிராக்டிக்கல் நோட்டை அகமதுக்கு  கொடுத்தாள். வாழ்வின் பூரணத்துவம் அடைந்த ஞானி மாதிரி  கிடந்தான். நானும் அந்த நோட்டை வாங்கித் திறந்தேன். ஓரளவு நன்றாக வரையப்பட்ட படங்கள். எழுத்தையும் படங்களையும் விட அவள் கேசம்தான் நல்லாருக்கென அவனிடம் சொன்னேன். ஆமான்டா என்றான்.

அடுத்த வகுப்பிலிருந்து பசங்க மெர்லினை சைட் அடிக்க எங்கள் வகுப்புக்கு வந்து போனார்கள். ஒருநாள் லஞ்ச் அவரில் எங்களுக்கும் அந்த பசங்களுக்கும் தகராறு வந்தது. யாரும் வெளியில் சொல்லக் கூடாதென சங்கம் முடிவெடுத்தது. தலைவன் சொன்னா கேக்கணும். அதற்குதான் கூறான ஒருவனைப் போட்டு வைத்திருந்தோம். அவன் எங்களை விட மூன்று வயது மூத்தவன். அப்றம் பருவ விசயத்தில் சந்தேகம்ன்னா சொல்வான். பயாலஜிக்கு சொந்தக்காரன். அவங்கப்பாவும் பயாலஜியும் சேந்து தண்ணியடிப்பார்கள். அதான் அவனப் போட்டது. அவனோடு ஒருமுறை தனியே பேசிக்கொண்டிருந்த போது சொன்னான்.

‘அகமது லவ் பண்ணிக்கிறட்டும், கல்யாணம் நா முடிச்சாலும் முடிச்சிருவேன்’ என்றான்.

‘இப்டி எத்தன பேர்டா?’

அகமதிடம் சொல்லவும் இல்லை. கஷ்டமாக இருந்தது.

லஞ்ச் அவரில் வகுப்பில் மெர்லின் தனியே இருந்தப்போ அகமது நுழைந்திருக்கிறான். மெர்லின் வெட்கப்பட்டுச் சிரித்திருக்கிறாள். பின்பக்கம் இருந்த மறைப்புத்தட்டிக்கு பக்கத்தில் போய் நின்று இங்க வா என்பது போல் சைகை செய்திருக்கிறாள்.  அவ்வளவுதான் சறுக்கி விழுந்து நெஞ்சு படபடக்க எடுத்த ஓட்டம் எங்களை அடைந்ததும் தான் நின்றது. மூச்சிரைக்க உள்ளங்கைகளைக் காட்டினான். வேர்த்த விரல்கள் லேசாக நடுங்கின. வருடம் முடிந்து போகிறவரை ஒரு வார்த்தை கூட அவன் பேசியதாகத் தெரியவில்லை. தனிமையில் அவளைப் பார்த்தாலே வேர்த்துக் கொட்டுவதாகச் சொன்னான். இவனது பாடுகளை, நாங்கள் ஏதோ காதல் வயப்பட்டது போல் உணர்ந்தோம்.

அதுவொரு வெள்ளிக்கிழமை. கெமிஸ்ட்ரி பிராக்டிக்கல் கிளாசில் எனக்கு எதிர்புறமிருந்த இருக்கையில் மெர்லின் உக்கார்ந்திருந்தாள். தலைக்கு ஊத்தி மல்லியப்பூ வைத்து வந்திருந்தாள். நெற்றியில் விழுந்து சில முடிகள் பறந்தன. வழக்கத்தை விட தூக்கலான அழகு. அப்போதுதான் மெர்லினை ரொம்பக் கிட்டத்தில் பார்க்கிறேன். இடது கன்னத்தில் உதட்டுக்கு கொஞ்சம் கிட்டத்தில் சின்னதாய் ஒரு பரு போட்டிருந்தது.

‘ஏய் ஒனக்கும் பரு வந்திருச்சு மே’

‘இல்லப்பா இது பருல்ல வேறெதோ. போயிரும்.’

சொல்லிட்டு மெர்லின் உதட்டைப் பிதுக்கிக் கொண்டதைப் பார்க்க அழகாக இருந்தது. அந்த பருவையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மெர்லினுக்கு வந்த முதல் பருவை அகமதிடம் சொன்னேன்.

நைட் ஸ்டடியில்  உக்கார்ந்து கவிதை எழுதினான். ஜானி மாஸ்டர் கையும் களவுமாக பிடித்து மிரட்டினார். மறுநாள் ஹெச்.செம்மைப் பார்க்க வரவேண்டுமெனச் சொல்லி அனுப்பினார்.

நல்லவேளையாக மறுநாள் அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஈவினிங் ஸ்டடிக்கு பயந்து கொண்டே வந்தான். மாஸ்டர் வரவில்லை. ராதாக்கா வந்திருந்தது. ஏதும் சொல்லவில்லை. ஸ்டடி முடிந்து போகும்போது  சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைகை காட்டி அழைத்தது. நாங்களும் அவனோடு போனோம். அவனைக் கண்டித்தது. ராதாக்கா கண்டித்தால் எங்களுக்கு வலிக்காது. நல்ல அக்கா.

‘மாஸ்டர் எல்லாத்தையும் சொன்னார். ஏன்டா இப்டி?.. அப்றம் உன் கவிதையெல்லாம் படிச்சுப் பாத்தேன். நல்லாருஞ்ச்சு. யாரவ? மெர்லின். எத்தன பேர் தான்டா அவள வளைப்பீங்க…?’ பாக்குறதோட விட்ரணும். இப்டி சிக்கிக்கிட்டு முழிக்காத. சூதானமாரு. சரியா?’

‘அக்கா… மாஸ்டர்..?’

‘அத நான் பாத்துக்கிறேன்.’

இது போதும் என்றிருந்தது. அக்கா சொன்னா மாஸ்டர் அடங்கிருவார். ரெண்டு பேரையும் வைத்து பள்ளியில் கிசுகிசு இருந்தது.

அகமதுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்த போது நான் ராதாக்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். கன்னம் நிறைய பருக்கள். கிட்டத்தில் நின்றிருந்ததால் பான்ஸ் பவ்டர் வாடை தூக்கியது. வரும்போது அகமதிடம் சொன்னேன். என்னைத் திட்டினான். ஒன்பதாப்பில் ராதாக்காவிடம் தான் டியூசன் போயிருந்தோம். குளிச்சிட்டு ஈர ஜட்டில மூஞ்சியத் தொடச்சா பரு வராதுன்னு எங்கிட்ட சொல்லுச்சு. அத இவன்ட்ட சொன்னப்ப சிரிச்சான். இப்ப வைறான். வெண்ண.

ப்ராக்டிக்கல் எக்ஸாம் தொடங்க இருந்தது. மாற்றி மாற்றி  ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தோம். பள்ளிக்கூட வழக்கப்படி கேள்ஸ்ட்ட வாங்கக்கூடாது. அகமது மெர்லினிடம் டைரியைக் கொடுப்பதை முருகன் சார் பாத்திட்டார்.  அவனை வராண்டாவில் வைத்து சாத்து சாத்தென சாத்திட்டார். அப்படியே செய்தியை கூட்டாளி வாத்தியார்களுக்கும் கொண்டு போனார். அவர்கள் கூடி அரட்டையடிக்கும் பீட்டி ரூமில் அகமதை  மதியத்திலிருந்து சாயந்தரம் வரை நிற்க வைத்தார்கள். மெர்லினை ஆபீஸ் வரச்சொல்லி ஒரே கேள்விதான்,

‘டைரி கொடுத்தானா ?’

‘ஆமா சார்.’

‘நீ போ..’

அவ்ளோ தான்

பீட்டி ரூமில் வைத்து அகமது பலரால் தாக்கப்பட்டான். வசைகளால் காயம்பட்டு மறுநாள் அப்பாவோடு வந்து ஹெச்சம் சாரிடம் சம்பிரதாய அடிகளோடு பிராக்டிக்கல் எழுத அனுமதிக்கப்பட்டான். பிசிக்ஸ் பிராக்ட்டிக்கல்  முடிந்து கிரவுண்டில் வைத்து அவன் சட்டையைக் கழற்றிக் காட்டியபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. நெடுக்கும் குறுக்குமாய் காயத்தின் தடங்கள். வெள்ளைத் தோலுக்கும் அதுக்கும் நல்லா செவந்து வார் வாராகத் தடித்திருந்தன. ரணத்தால் முதுவே நடுக்கத்திலிருந்தது. அவனும் எல்லாப் பரிச்சையும் எழுதி ஏதோ பாசாகி காலேஜ் போயி இப்ப சென்னையிலொரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.

இந்த சம்மரில் ஊருக்கு வந்திருந்தான். நானும் அவனும் தேட்டருக்கு நடந்து போகும் வழியில் ராதாக்காவைப் பார்த்தோம். வாசப்படியில் உக்கார்ந்திருந்தது. கையழைத்து கூப்பிட்டது.

‘ஏய்  கண்ணா நல்லாருக்கியா?

அகமது நீயெப்டிருக்க?’ 

முகமெல்லாம் சதைபோட்டு அக்கா அழகாய் புசுபுசுவென இருந்தது. அவனும் அப்பாவானதைச் சொல்லிக் கொண்டான். நானும்.

வீட்டுக்குள் அழைத்தது. 

‘படம் போட்ருவாங்கக்கா போணும்’ என்றேன்.

‘ரெண்ரைக்குதான் போடுவாங்க. தேட்டருக்குக் கிட்டத்துலயே இருக்கேன் எனக்குத் தெரியாதா?’

நல்லா பெரிய சைஸ் சோபா. உட்கார்ந்ததும் புசுக்கென உள்ளே போனது. உள்ரூம் வாசலில் நின்று நாங்க வந்திருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தது. பேசுவதிலேயே  வீட்டுக்காரர் எனத் தெரிந்தது.

‘நம்ம ஜானி மாஸ்ட்ரா இருக்குமோ..?’ அகமதிடம் மெல்லமாய் கேட்டேன். அவன் மறுத்து தலையாட்டினான். எனக்கெதிர் பக்கம் உக்கார்ந்திருந்ததால் ரூம் உள்ளே தெரியும்படி அவனுக்கு வாட்டமாக இருந்தது. அவர் வருவதைப் பார்த்து லேசா எழுந்து உக்கார்ந்தான். நானும் திரும்பினேன். நிலைப்படியில் குனிந்து ஒசரமான ஒருத்தர் வந்தார். மாநெறம். கண்ணாடியை நெற்றிமேல் ஏற்றி விட்டிருந்தார். லேசான தாடி. முக்கா பேண்ட் போட்டிருந்தார். அவர் ஒசரத்துக்கு அது அசிங்கமாக இருந்தது.

‘வாங்கப்பா..’  தலையாட்டினார். நாங்களும்  கூச்சப்பட்டுக் கொண்டு அசைந்து கொண்டோம். என் கிட்டத்தில் உட்கார்ந்தார். அவர் முகமெல்லாம் பருக்கள் வந்த தடம். கொத்துக் கொத்தாக போட்ருக்கும் போல. சொள்ளை சொள்ளையாக இருந்தது. அக்கா ஜூஸ் போட்டுக் கொடுத்தார். தொடக்கத்திலேயே அவர் ஓவியரெனவும், ஒரு வாரப்பத்திரிக்கையிலிருந்து சர்ச்சையாகி இப்ப வெளியே வந்துவிட்டதாகவும் சொன்னார். அக்கா மெல்ல மெர்லின் மேட்டருக்கு வந்தது. ராதாக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அக்கா அது அப்டில்லக்கா’ என நான் குறுக்கிட்டு கதைக்குள் புகுந்தேன். அந்த விசயத்தைச் சொல்லி முடித்ததும். அவருக்கு என்ன தோனியதோ? அக்காவைச் சும்மாருக்கச் சொல்லிட்டு என்னையே தொடரச் சொன்னார். நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என்னையே ஊன்றி கவனித்துக்கொண்டே வந்தார். என் கண்கள் வழியாக பாய்ந்து உள்ளிருப்பதை காணும் பார்வை. அவருக்கு லேசா நீலம் பாரித்த கண்கள்.  இடையிடையே அவரது எக்ஸ்பிரசன் வேறு மாதிரி இருந்தது. உள்ளுக்குள் நகைத்துக்கொண்டே கேட்பதாகவும், ரசிப்பதாகவும் பட்டது. ஒருகட்டத்தில் அந்த ஊடுருவும்  பார்வையைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் சட்டென நிறுத்தினேன். என் தேக்கத்தை உணர்ந்து  சரி என்பதை போல அவர் நார்மலாகி என்னைத் தொடரத் தூண்டினார்.

இதற்கிடையே அகமது வெக்கப்பட்டுக் கொண்டதாகவும், சில இடங்களில் சங்கடப்பட்டது போல அவன் நெளிந்து கொண்டதாகவும் பிறகு அக்கா சொல்லிச் சிரித்தது.

‘நீ சொல்லச் சொல்ல அகமது மூஞ்சப் பாக்கணுமே!’

சொல்லி முடித்த பிறகும் அந்த ஓவியரின் நீலக்கண்கள் எதையோ கண்டுவிட்ட தொனியில் என்னையே  திரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன. அதென்ன இந்தாளுக்கு மட்டும் இப்படி கண்ணு பளீர்ன்னு இருக்கு. யோகா பண்றவங்களுக்கு இப்டி இருக்குமென கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கொஞ்சம் பொறுங்க’ என உள்ளே போனார். அக்கா கொஞ்சம் காராச்சேவை எடுத்து வந்து தட்டில் வைத்தது. இனியெங்க படத்துக்கு போக நைட் சோ போகலாமென முடிவெடுத்தோம்.

எதையெதையோ தேடி ஒரு பண்டலை எடுத்து வந்தார். ஏ4 சைசில் அவர் வரைந்த ஓவியத்தாள்கள் இருந்தன. அதில் கொஞ்சத்தைப் பிரித்து எடுத்தார். மீதத்தை அக்காவும் நாங்களும் ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தோம். தத்ரூபமான ஓவியங்கள். பார்த்துவிட்டு ‘பயங்கரம்க்கா’ என்றான் அகமது. வியந்து ரசித்துக் கொண்டிருந்தோம். அவர் தேடியது கிடச்சிட்டது போல. அதைமட்டும்  ஸ்பெஷலாக அக்காவிடம் காட்ட, ‘சூப்ராருக்குங்க’ என்றது.

அகமது வாங்கிப் பத்துட்டு அவனும் சூப்பர் சார் என்றார். அடுத்து என் கைக்கு வந்தது. பார்த்து அதிர்ந்து போனேன். அது மெர்லின். அவரை நிமிர்ந்து பார்த்தேன். லேசாக சிரித்தார். கரெக்ட்டா..? என்பது போல் இருந்தது. நானும் எஸ் சார் என்பது போல தலையாட்டிக் கொண்டேன். அந்த இடத்தில் வாயைத் திறந்து நல்லாருக்கு சார் என சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு பிறகு அவரை என்னால் பார்க்க முடியவில்லை. பயமாக இருந்தது. அகமதைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அக்கா போன் நம்பர் வாங்கிக்கொண்டது. வருகிற வழியில் ‘ஏன்டா.. அந்த மேட்டர இன்னுமாடா வச்சு ஓட்டுவீங்க. அதெல்லாம் லவ்வே இல்லடா! அந்த ஏஜ்ல வர்ற ஒரு அபெக்சன்’ தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். எனக்கு அவரது கண்கள் அகலாமல் ஞாபகத்திலேயே இருந்தது.

இரவு பதினோரு மணியிருக்கும் ஸ்டாக் ரூமில் மர பீரோ மேல் அடுக்கி வைத்திருந்த பச்சை அட்டை போட்ட லாங் சைஸ் நோட்டைத் தேடி எடுத்தேன். பக்கம் பக்கமாய் எழுதிவைத்திருந்த கவிதைகளில் அவள் பெயர் வந்த இடமெல்லாம் சரியாக கருப்பு மையில் கிறுக்கி, அழித்திருந்தேன். அழித்தது தெரியாமல் இருக்க பூ மாதிரி வரைந்திருந்தேன். பக்கம் தோறும் கருப்பு பூக்கள்.  எங்காவது அவள் பேரை மறைக்காமல் விட்டிருக்கேனா தேடினேன். ஒரே ஒரு இடத்தில் மட்டும்  விடுபட்டிருந்தது.

மெர்லின்….

அந்த பக்கத்திலிருந்த கவிதைக்கு ‘பரு’ என தலைப்பிட்டிருந்தேன். பழுப்பேறிய அந்த தாளைத் தடவிப்பார்த்தேன். சுகப்படும் சொரசொரப்பு. இடது கன்னத்தில் உதட்டுக்கு கொஞ்சம் கிட்டத்தில் முளைத்த முதல் பரு கண்ணில் வந்து நின்றது. மர பீரோவிலிருந்த ரசமிழந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன்.  புள்ளிப் புள்ளியாக பருக்களின் தடம். மெர்லின் மீது கருப்பு மையில் கிறுக்கி ஒரு பூ வரைந்தேன்.

***

சக.முத்துக்கண்ணன், தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.தற்போது அரியலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். சிலேட்டுக்குச்சி எனும் ஆசிரிய அனுபவ நூல் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. மிக அருமை. எனது பள்ளிக் காலங்களை பல இடங்களில் ஞாபகப் படுத்தியது…. பாரு – நல்லது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular