Thursday, March 28, 2024

நல்ல பாம்பு

இளங்கோவன் முத்தையா

கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய வாசலில் வந்துநின்ற மதுரை செல்லும் பேருந்தில் முதல் ஆளாக ஏறி இடம் தேடிய பிரபாவுக்கு பேருந்தின் நடுப்பகுதில் உட்கார இடம் கிடைத்தது. மூன்று பேர் உட்காரும் இருக்கையின் ஓரத்திலிருந்தவர் பிரபாவை நடுவில் உட்காரச் சொல்லும்விதமாக லேசாக அசைந்து கொடுத்தார். அமர்ந்தவுடன் சட்டையின் இரு பட்டன்களைத் திறந்து, காலரை பின்பக்கம் இழுத்துவிட்டு, வெக்கையின் கசகசப்பு போவதற்காக காற்று தன் உடலைத் தழுவ அனுமதித்தான்.

நள்ளி தாண்டியபிறகே வந்த நடத்துனரிடம் “மாட்டுத்தாவணி ஒண்ணு” என்று சொல்லி பயணச்சீட்டை வாங்கியவுடன், மொபைலில் ரேணுகா அத்தையை அழைத்து, “பஸ் ஏறிட்டேன் அத்த, மதுரைல எறங்கிட்டு கூப்பிடறேன்” என்றான். சில மணிநேர இடைவெளிகளில் அவனது இருப்பை போன் செய்து அறிவித்தபடியே இருக்கவேண்டும் என்ற அத்தையின் பிடிவாதத்திற்கு கடந்த மூன்று வருடங்களாகப் பழகியிருந்தான்.

அவனிடமிருந்து அழைப்பு வராவிட்டால், அத்தையிடமிருந்து வந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். சற்று நேரத்தில் நான்குவழிச்சாலையின் வெப்பக்காற்று ஜன்னல் வழியாக உள்நுழைந்து இமைகளை அழுத்தியதில் லேசாகக் கண்ணயர்ந்தவன் சாத்தூர் ரிங் ரோட்டில் ஏறியிறங்கிய பயணிகளின் சத்தத்தில் கண் விழித்தான்.

பேருந்தில் வரிசையிலேறி, இடம் தேடியவர்களில் ஒருவனது முகத்தைப் பார்த்ததும் பிரபாவுக்குச் சுரீரென்றது. சட்டென்று முன்னிருக்கையின் முதுகில் தலையைச் சாய்த்து முகத்தை மறைத்துக்கொண்டான். மூன்று வருடங்களில் உதடு, முகமெல்லாம் கறுத்து, கண்கள் பஞ்சடைத்து, ஆளே வற்றிப் போயிருந்தாலும், அவனைப் பார்த்த நொடியில் அவன் சவுந்தர்தான் என பிரபாவால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது.

தலையைக் குனிந்திருந்தவன் சட்டென்று ஏதோ தோன்றியவனாக தனது பேண்ட் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் மாட்டிக்கொண்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தான். தீப்பெட்டி ஆபிஸில் முதலாளியின் ஏசி அறைக்குள் நுழையும்போது மட்டுமே பயன்படுத்துவதற்காக எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கொரோனா மாஸ்க் இப்போது அவனை மறைத்துக்கொள்ளப் பயன்பட்டது. எதிர் வரிசையில் இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் ஜன்னலுக்கு அடுத்த சீட்டில் அமரப்போகும்முன் பேருந்தின் பின் வரிசையிலிருந்த யாரையோ பார்த்து கையசைத்தான் சவுந்தர். அவனும் தன்னைப் பார்த்திருப்பானோ என்று யோசித்து பதற்றமான பிரபாவின் மூளை உடனடியாகப் பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தது. முதலில் தன் கைவசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்றுதான் யோசித்தான். ஒருவேளை வெளியூர்களில் தங்க நேர்ந்தால் அதற்குப் பணம் தேவைப்படும் என்பதுதான் அவனது முதல் எண்ணமாக இருந்தது. மீண்டுமொரு தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியதிருக்குமோ என்பதை யோசிக்கும்போதே பிரபாவுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது. எப்போதும்போல கைச்செலவுக்கு மட்டும் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கிளம்பியது தவறோ என்று யோசித்தான்.

பிரபா நேற்றைக்கே மதுரைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நேற்று அதிகாலை எழுந்ததிலிருந்து ரேணுகா அத்தை பேயடித்தது போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. சாமி படங்கள் வைக்கும் அலமாரியிலிருந்து திருச்செந்தூர் முருகன் படம் கீழே விழுந்து கண்ணாடி உடைந்து நொறுங்கியிருந்ததுதான் அதற்குக் காரணம். “சவுனமே சரியில்லையேய்யா…” என்று அத்தை நிறுத்தாமல் புலம்பிக்கொண்டிருந்தது. ‘சமயலறைச் சன்னலின் கொக்கியைச் சரிசெய்யாததால் அதன் வழியே இரவுகளில் மனம்போல உள்ளே நுழைந்து பாத்திரங்களை உருட்டும் கறுப்புப் பூனையின் வேலை அது’ என்று அத்தையிடம் சொல்ல நினைத்து பிறகு ‘கறுப்பு பூனை வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டுக்கு ஆகாது’ என்று புதிதாக ஒரு ஒப்பாரி வைக்கும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டான்.

முருகன் படம் உடைந்ததால் அத்தை நேற்று அவனை மதுரைக்குப் போக அனுமதிக்கவேயில்லை. ஒருமுறை இதேபோல ஏற்றிவைத்த தீபம் தொடர்ந்து அணைந்துபோகிறது என்று அழுது பிரபாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப மாட்டேன் என்று சின்னக் குழந்தைபோல அடம்பிடித்தது. தீப்பெட்டி ஆஃபிஸுக்குப் போயே ஆகவேண்டும் என்று அத்தையைப் புறந்தள்ளிவிட்டுப் போன பிரபா மாதாகோயில் இறக்கத்தில் வேகமாக வந்த பைக் மோதியதில், கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு திரும்பினான். அதிலிருந்து பிரபாவுக்கும் அத்தையின் சகுனத்தடைகளை எதிர்த்துப் பேசும் மனமிருப்பதில்லை. இன்று காலை மதுரைக்குக் கிளம்பும்போது வழக்கம்போல இந்த முறையும் அத்தை சேலை முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதது. “உனக்கு ஒண்ணும் ஆகாதுய்யா” என்று மந்திரம்போலச் சொல்லியபடியே மாடத்தில் விளக்கேற்றி, திருநூறு பூசி அனுப்பி வைத்தது. அது அவனுக்குச் சொல்லப்படும் வார்த்தைகளில்லை, அத்தை தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொள்வது என்று பிரபாவுக்கு புரியாமலில்லை. ஆனாலும் “போய்ட்டு பத்திரமா வந்திருய்யா” என்று அத்தை அழுதபோது பிரபாவுக்கும் லேசாகக் கண் கலங்கத்தான் செய்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகராட்சியின் ஒரு சின்ன வார்டில் குடியிருந்த மக்கள், அப்போது நடந்த கவுன்சிலர் தேர்தலில் நடந்த சின்னப் பிரச்சனை அரசியல் லாபங்களுக்காக ஊதிப் பெருக்கப்பட்டு, சாதிக்கலவரமாகி, இரு சாதி மக்கள் இரு தரப்பாகப் பிரிந்து வெட்டிக்கொண்டதில் சிறுசும், பெருசுமாகப் பதினோரு பேர் செத்துப்போனார்கள். அதில் பிரபாவின் வீட்டில் தங்கி, பிரபா படித்த அதே இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில், விளையாட்டாகப் பிரச்சார வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருந்த ரேணுகா அத்தையின் மகனும் ஒருவன். இரவு பத்து மணிக்கு மேல் ஊருக்குள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு இருட்டுக்குள் யார், யாரை வெட்டியது என்று புரியாமல் நடந்த கலவரத்தில் அவன் யாரால் கொல்லப்பட்டான் என்பதுகூட பிரபா தரப்புக்கு இன்றுவரை தெரியாமலிருந்தது. அந்தக் கொலைகளில் தொடர்புடைய பலர், இந்த இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஊர்களில் கொல்லப்பட்ட பழிவாங்கும் படலத்தின் ஓலங்கள் அத்தையின் காதுகள் வரை பரவியிருந்தது. பிரபா அவன் முதுகில் ஆழமாக விழுந்த ஒற்றை வெட்டோடு தப்பிப் பிழைத்திருந்தான். அதனாலேயே அவன் வெளியூர் கிளம்புகிறான், அதிலும் மதுரைக்குப் போகிறான் என்றாலே, அத்தை அவனை விட அதீத பதற்றத்திற்குள்ளாகி, அவன் திரும்பி வரும் வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே பெயர் தெரியாத நோய்க்கு கணவனையும், பிறகு வாலிப வயதிலிருந்த ஒற்றை மகனையும் பறிகொடுத்திருந்தாள் அத்தை. அதனால்தான் ‘மதுரையில் இருப்பது எக்காலத்திலும் பாதுகாப்பில்லை’ என்று தன் அண்ணன் செல்வம் தனது மகன் பிரபாவைக்கொண்டுவந்து கோவில்பட்டியில் தனது பொறுப்பில் விட்டபோது, கொஞ்சம் கூடத் தயங்காமல் செத்துப்போன தன் மகனுக்குப் பதிலீடாக பிரபாவைச் சுவீகரித்துக்கொண்டது ரேணுகா அத்தை.

‘சாமிப்படம் கீழே விழுந்து உடைந்தது உண்மையிலேயே கெட்ட சகுனம்தானோ’ என்று யோசித்த பிரபா “ஆண்டவா காப்பாத்து” என்று வாய்க்குள்ளேவே முனகவும் செய்தான்.

முதலில் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று பிரபாவுக்குத் தோன்றியது. ‘முன் வாசல் வழியாக இறங்கினால் சவுந்தரைக் கடந்துதான் போகவேண்டும். எப்படியும் அவன் பார்வையில் பட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால், அடுத்த நிறுத்தத்தில் பின் வாசல் வழியாக இறங்கிவிடலாமா?’ என்று யோசித்தான். நடத்துனர் சவுந்தரிடம் வந்து நின்றபோது அவன் பேருந்தின் பின் பக்கம் திரும்பிப் பார்த்தான். பிரபாவும் தன்னை மறைந்த்துக்கொண்டு பின்னால் திரும்பினான். பின் பக்கம் நான்கைந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு ஆள் தனது கைகளை உயர்த்தி “மாப்ள நான் டிக்கெட் எடுக்கறேன்” என்றார்.

அவர் சவுந்தரின் மாமாவும், தயாநிதியின் அப்பாவுமான வைரவேல்தான் என்ற தகவலை அவன் மூளை அவனுக்குத் தெரிவிப்பதற்கு முன்னதாகவே தலையிலிருந்து கால் வரை நடுக்கம் பரவி, கைகள் உதறலெடுக்க ஆரம்பித்தன. மாஸ்க்கை கண்களின் கீழ் இமைகள் வரை இழுத்துவிட்டுக்கொண்டான். மனம் வேகவேகமாக வெவ்வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்தது. கோவில்பட்டி ரேணுகா அத்தை வீட்டுக்கு வந்த புதிதில் பக்கத்திலிருக்கும் கடைக்குப் போவதாக இருந்தால் கூட, பாதுகாப்புக்காக இடுப்பில் ஒரு கத்தியைச் செருகி வைத்துக்கொண்டு போகும் பழக்கமிருந்தது. சில நேரங்களில் அதை அத்தையே எடுத்துக்கொடுக்கும். பின்னர் போகப்போக அதற்கான தேவை இல்லாமல் போனதால் கடந்த ஒரு வருடமாக அதைத் தொடுவதே இல்லை. அது அத்தை வீட்டுப் பரணில் வைத்த அவனது தோள்பையில் கிடக்கிறது. மதுரைக்குப் போகும்போதாவது அதை எடுத்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி முன் சீட்டில் நெற்றியை முட்டிக்கொண்டான்.

“ரொம்பக் கோவக்காரன்யா அவன், மகன வெட்டுனது நீதான்னு அவனுக்குத் தெரியாமலா இருக்கும், பழி வாங்கற வரைக்கும் அவன் தூங்கவே மாட்டான், என் பயமே அவங்கண்ணுல நீ பட்றக்கூடாதுங்கறதுதான்” என்ற வைரவேலைப் பற்றிய அத்தையின் குரல் காதுகளில் ஒலிப்பது போல இருந்தது. இத்தனைக்கும் சின்ன வயதில் வைரவேலில் பெரிய மீசையையும், அவரது ஓங்குதாங்கான உருவத்தையும், கணீரென்ற குரலையும் பார்த்து, அவர் தூரத்தில் வரும்போதே பயந்து ஓடும்போது இதே அத்தை மட்டும் வைரவேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே கிண்டல் பேசும். பரம்பரையாய் ஊருக்குள் பெரியதொரு ஆட்டுத்தொட்டியும், சில கறிக்கடைகளும், பரம்பரைச் சொத்துகளும், ஊர்ப்பிரச்சனைகள் வரும்போது பஞ்சாயத்து பேசி முடிக்கும் அளவுக்கு செல்வாக்கும் கொண்ட வைரவேல் அத்தையின் கிண்டல்களுக்கு மட்டும் சிரித்தபடியே இருப்பார். “என்னத்தா எப்ப வந்த?” என்பதைத் தாண்டி வேறு வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வராது.

கோவில்பட்டி ரிங் ரோட்டில் பேருந்துக்காக நிற்கும்போது தன்னை யாராவது வேவு பார்த்து வைரவேலிடம் சொல்லியிருப்பார்களோ என்று யோசித்து, தன்னுடன் பேருந்துக்காகக் காத்திருந்தவர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டுவரப் பார்த்தான். எதுவும் புரிபடவில்லை.

பேருந்து ஆர்.ஆர்.நகர் சிமிண்ட் ஃபேக்டரி தாண்டி விருதுநகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பிரபா தலையைக் குனிந்தபடியே அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் யாரைச் சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தானோ அவர் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். யாரைச் சந்திக்கப் பயந்தானோ அவன் முன்னால் உட்கார்ந்திருந்தான். பேருந்து வழக்கத்துக்கு மாறாக மிக மெதுவாக ஓடுவது போலத் தோன்றியது பிரபாவுக்கு.

கண்களை இறுக மூடியவுடன் தயாநிதியின் இடது தோள் பட்டைக்குக் கீழே பிரபா முழு வேகத்தில் இறக்கியிருந்த அரிவாள், தயாநிதியின் இடது கையின் முக்கால் பாகத்தில் எலும்பை வெட்டி இறங்கியதில், வெறும் தோலில் ஒட்டியபடி அவனது கை தொங்கிக்கொண்டிருந்த காட்சியும், அந்த வலி, வேதனையோடு அவன் வலது கையில் பிடித்திருந்த கறி வெட்டும் கத்தியை பிரபாவை நோக்கி வீச நகர்ந்த போது அவனுக்குப் பின்னாலிருந்த யாரோ தயாநிதியின் தலையும், கழுத்தும் சேருமிடத்தில் இறக்கிய கதிரரிவாள் அவனது பாதிக்கழுத்து வரை பாய்ந்த நொடியில் அவன் மயங்கிச் சரிந்ததும், தன்னை நான்கைந்து கரங்கள் கொத்தாக அள்ளித் தூக்கி ஒரு ஆம்னி வேனுக்குள் திணித்து நகர்ந்ததும், தயாநிதியின் விறைத்த கண்கள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததும் பிரபாவுக்கு நினைவுக்கு வந்தது. கடந்த நான்கு வருடங்களாக அவனது கனவிலும், நினைவிலும் அவனால் மறக்க முடியாத, அவனது நிம்மதியைக் காவு வாங்கிய காட்சிகள் அவை. தன் தலையை நிமிர்த்தாமலேயே பயணத்தைத் தொடர்ந்தான் பிரபா.

“விருதுநகர் கலெக்டர் ஆஃபிஸ் எறங்குங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டவுடன் தலையைத் தூக்கிய பிரபா, சவுந்தரையும், பின்னால் திரும்பி வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருந்த தயாநிதியின் அப்பா வைரவேலையும் பார்த்தான். சட்டென்று எழுந்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரை நகரச் சொல்லி பின் பக்கமாக இறங்குவதற்காக நகர்ந்தான். அதே நேரத்தில் வைரவேலும் சட்டென்று எழுந்து நின்றார். பிரபா முகத்தைத் திருப்பியபோது சவுந்தரும் எழுந்து நின்று வைரவேலைப் பார்த்தான். இருவரும் ஒரு சேர பிரபாவையே பார்ப்பது போலிருந்தது. பிரபா மாஸ்க்குக்கு மேலே தன் உள்ளங்கைகளை வைத்து தன் முகத்தை மேலும் மறைக்க முயற்சித்தான். பிரபாவின் தலைக்குள் ரத்தம் அதன் முழுவேகத்தில் பாய்ந்தது.

வைரவேல் பிரபாவின் முகத்தையே பார்த்தபடி முன்னகர்ந்து வந்தார். பேருந்து மெல்லத் தன் வேகத்தைக் குறைத்து நின்றது. அவர் பிரபாவைக் கடந்து போகும்போது அவன் முகத்தை ஒரு தடவை நின்று நிதானமாகப் பார்த்தார். அவர் பிரபாவை விடவும் உயரமாக இருந்ததை அவன் உணர்ந்தான். “ஏய்யா, செல்வம் மவன் பிரபாகரன்தான நீ, இங்கயா இறங்கப் போற?” என்றார். அவரது குரலிலொரு ஆச்சரியத்தொனி இருந்தது.
பிரபாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எதையோ யோசித்த வைரவேல் பிரபாவின் முதுகில் தனது பரந்த உள்ளங்கையை வைத்து லேசாகத் தள்ளி “சரி வா எறங்கு” என்றார். பிரபாவின் கழுத்து சில்லிட ஆரம்பித்தது. பிரபா முன்னால் பார்த்தான். சவுந்தர் முதலில் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தான். பிரபாவுக்கு தான் வகையாகச் சிக்கிக் கொண்டது தெரிந்தது. கீழே இறங்கியவுடன் இருவரது கையிலும் சிக்காமல் தலைதெறிக்க ஓடிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவன் பேருந்துக்கு வெளியே குனிந்து பார்த்து சூழ்நிலையைக் கணிக்க முயன்றான்.

படிக்கட்டில் இறங்கும்போது வைரவேல் தனது கையிலிருந்த ஒரு பையை பிரபாவின் கையில் கொடுத்து “இத வச்சுக்கய்யா, கீழ இறங்கிட்டு வாங்கிக்கறேன்” என்றார். பிரபா அவர் முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் எந்த உணர்ச்சிகளும் வெளிப்படாதது அவனுக்குள்ளிருந்த படபடப்பை மேலும் அதிகமாக்கியது, ஆனாலும் அவர் பையை நீட்டிக்கொண்டே இருந்ததாலும், அவருக்குப் பின்னாலிருந்தவர்கள் அவரை நெருக்கி இறங்க முயன்றதாலும், அவர் கொடுத்த பையை வாங்கிக்கொள்வதைத் தவிர பிரபாவுக்கு வேறு வழி தெரியவில்லை. முதலில் பிரபா இறங்க, படிக்கட்டின் பக்கவாட்டில் இருந்த கைப்பிடிக் கம்பியை இரு கைகளாலும் பிடித்து, ஒவ்வொரு படியாக மெல்ல இறங்கினார் வைரவேல். இறங்கியவுடன் சட்டையை மேலேற்றிவிட்டு வேட்டியை அவிழ்த்து உதறி இறுகக் கட்டினார்.

அவர் கொடுத்த பையைக் கீழே போட்டுவிட்டு ஓடுவதற்காகப் பிரபா தயாரான நொடியில் “உங்க ரேணுகா அத்த வீட்லதான் இருக்கியாம்லய்யா, ஏதோ தீப்பெட்டி ஆஃபிஸ்ல வேல பாக்கறியாமே, நல்லாப் படிக்கற பய, இஞ்சினியரிங்க முடிச்சிருந்தீன்னா இன்னேரம் நல்ல வேலைக்குப் போயிருந்திருக்கலாம், உன் தலையெழுத்து” என்றார்.

பிரபாவையே பார்த்துக்கொண்டிருந்த சவுந்தரின் முகத்திலும் எந்த உணர்வுகளும் வெளிப்படவில்லை. பிரபா தயாநிதியின் தோள்பட்டையில் அரிவாளை இறக்கியபோது பிரபாவை நோக்கி ஒரு பெரிய கட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தவன்தான் சவுந்தர். சேகரண்ணன் மட்டும் அவனை மறித்து அவன் காலில் ஒரு இரும்புக்கம்பியால் அடிக்காமலிருந்திருந்தால் நிச்சயமாகப் பிரபாவின் தலை அன்று இரண்டாகப் பிளந்திருக்கும்.
“ஒரு டீ சாப்பிடுவோமாய்யா?” என்றார் வைரவேல்.

“இல்ல, எனக்கு ஒரு வேலை இருக்கு, அவசரமா போகணும், நான் கிளம்பறேன்” என்றபடியே தன் கையிலிருந்த வைரவேலின் பையை அவரை நோக்கி நீட்டினான் பிரபா.

“அட… பயப்படாதய்யா” என்றார்.

“பயப்படவெல்லாம் இல்ல, வேலையிருக்கு” என்றான் பிரபா. ஆனால் உண்மையில் வெகுவாகப் பயந்திருந்தான்.
“அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் அவருக்குள்ளாகவே மெல்லச் சிரித்தார். பிறகு “சரித்தேன்… உனக்குப் பயமில்லதான், பயமில்லாதவன்தான் மதுரைக்கு டிக்கெட் எடுத்துட்டு, விருதுநகர்ல மொகத்த மறைச்சுக்கிட்டு எறங்குனியோ… வா, வந்து ஒரு டீய சாப்பிடு” என்றார். பிரபா அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான்.

“மாட்டுத்தாவணிக்குதான டிக்கெட் எடுத்த, நீ கோவில்பட்டில பஸ்ஸேறுனப்பவே நான் உன்னைப் பார்த்துட்டேன். நான் திர்னவேலிலருந்து வாறேன்” என்று மெலிதாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிரபாவிடமிருந்து பையை வாங்கிக்கொள்ளாமலேயே பேருந்து நிறுத்தத்துக்கு பக்கவாட்டிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்து போய், அதன் வாசலில் போட்டிருந்த கடப்பா கல் பலகையின் மீது அமர்ந்தார். சவுந்தர் அவர் பின்னாலேயே நடந்து, அவரைக் கடந்து கடைக்குள் போய் நின்றுகொண்டான். பிரபா அவரெதிரில் போய் நின்று பையை அவரது முகத்துக்கு நேரே நீட்டினான்.

“உங்க ரேணுகா அத்தை எப்படி இருக்கா?” என்றார் வைரவேல்.

பிரபா பதிலேதும் சொல்லவில்லை.

“அவ, இவன்னு உங்கத்தைய மரியாதை இல்லாம பேசறேன்னு நெனைக்காத, என்கூடப் படிச்சவ அவ, நாங்க ரெண்டுபேரும் ஒரே வயசுக்காரய்ங்க”

“தெரியும், சொல்லியிருக்காங்க”

“சொல்லியிருக்காளா, வேறென்ன சொல்லியிருக்கா” என்றவர் “சொல்லிக்கற மாதிரியாயா நம்ம பொழப்பு இருக்கு, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்த ஊர்ல நல்லா வந்துச்சுய்யா கவுன்சிலர் எலக்சன்னு ஒரு சனியன், சாதாரண பிரச்சாரம், போஸ்டருக்காக வாய்த்தகராறுல ஆரம்பிச்சு, சாதித்தகராறா மாறி, வெட்டு குத்துன்னு, எத்தன உசுரு போச்சு, போன உசுரு போனதுதான், திரும்பி வரவா போகுது. ஆனா ஒண்ணுய்யா, அன்னைக்கு வெட்டுப்பட்டு செத்தவன் நெலம கூடப் பரவால்ல, உசுரோட தப்பிச்சவனுக நெலமைய யோசிச்சுப்பாரு, நாலு வருசமாச்சு, நெதம் செத்துச் செத்துப் பொழைக்க வேண்டியதிருக்கு, மிஞ்சுனவன்ல எளந்தாரிகள்லாம் உசுருக்கு பயந்து ஊர விட்டு ஓடிப்போய்ட்டான், என்னைய மாதிரி வாழவும் வழியில்லாம, சாவும் வராம கெழடு கட்டைக கொஞ்ச பேரு கோர்ட்டு, கேஸுன்னு கெடந்து அல்லாடுறோம், உங்க அப்பா பேர்லையும் கேஸு இருக்குல்ல” என்றார்.

“ஆமா” என்றபடி தலைகுனிந்து நின்றான்.

“யோசிச்சுப் பாரு, நடந்த கொலைகளுக்கும் உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம், ஒரு ஈயெரும்புக்குக்கு கூட கஷ்டம் வரக்கூடாதுன்னு நெனைக்கற ஆளு அவரு, என்னைய விட நாலு வயசு மூத்தவரு, உம்பேர்ல கேஸு வரக்கூடாதுங்கறதுக்காக தப்பே பண்ணாம கேஸ அவரு ஏத்துக்கிட்டு அலையறாரு. நீ என்னடான்னா இஞ்சினியர் படிப்ப நிறுத்திப்புட்டு தீப்பெட்டி ஆபிஸ்ல வேல பாத்துக்கிட்டு திரியற, இந்தா இருக்கானே சவுந்தரு, இவனும் காலேஜ பாதில விட்டுட்டு திருப்பூர்ல வேலை பார்த்துக்கிட்டுதான் இருக்கான், என் மவன்…” என்றவர் பேச்சை நிறுத்திவிட்டு மூக்கைச் சிந்தினார், தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடியே “தலையில்லாத முண்டமா சாகணும்னு அவன் தலைல எழுதியிருந்திருக்கு” என்றார்.

சவுந்தர் கடைக்குள்ளிருந்து வேகமாக வெளியே வந்து “மாமா, இவன்லாம் ஒரு ஆளுன்னு இப்ப எதுக்கு இவன இங்க நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க, லேய் பிரபா, நீ கத கேட்டது போதும், மூடீட்டு கெளம்பு” என்றான்.
பிரபாவுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து போல இருந்தது. தயாநிதியைத் தான் அவனது கையில் வெட்டிய காட்சி மீண்டுமொருமுறை கண் முன்னால் வந்து போனது.

“தயாவ நான்…” என்று இழுத்த அவனது முகத்தை வைரவேல் ஏறிட்டுப் பார்த்ததும் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்திக்கொண்டான்.

“ம்ம்ம்… என்றபடி அவனது கண்களை உற்றுப் பார்த்தார் வைரவேல். அவன் அமைதியாக இருந்ததும் “பரவால்ல, பயப்படாம சொல்லு” என்றார். பிரபா எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். சற்று நேரம் அவன் பேச நேரம் கொடுத்துப் பொறுமை காத்த வைரவேல், அது நடக்காது என்பதை உணர்ந்தவராக முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு “அத விடு, பிரபா நீ எனக்கொரு உதவி செய்யணும்” என்றார்.

“சொல்லுங்க” என்றான் பிரபா.

“உனக்குத் தெரியுமா, தெரியாதான்னு தெரியல, உங்க ரேணுகா அத்த மவன் நம்ம ஊர்ல நடந்த பிரச்சனைல வெட்டுப்பட்டு செத்தான்ல”

“ஆமா…?”

பிரபாவின் தோளில் கைவைத்தவர் ஒருமுறை செருமி சளியைத் துப்பினார். பிறகு “இது ரொம்ப நாள் உறுத்தல், நீ, ரேணுகா மவன், எம்மவன் தயா எல்லாரும் கூட்டாளிகன்னு எனக்குத் தெரியும், ஒண்ணுமண்ணா சுத்திக்கிட்டு இருந்தவய்ங்க தான, நீங்க ரெண்டு பேரும் படிச்சு இஞ்சினியரிங் காலேஜு வரைக்கும் போனீங்க, ஆனா தயா கொஞ்சம் மொரட்டுப் பய, உங்க அளவுக்குப் படிப்பும் வரல, அரசியல் அது இதுன்னு சுத்திக்கிட்டு இருந்தான். நடந்த பிரச்சனையை ஊதிப் பெருசாக்கி, வெட்டு குத்து வரைக்கும் போனதுல தயாவுக்கும் பங்கிருக்கு, அவனோட ஆளுகதான் மொதல்ல அருவாளத் தூக்குனாய்ங்கன்னும் எனக்குத் தெரியும்” என்றார்.

“நீங்க சும்மா இருங்க மாமா, இவன்ட்ட போய் தேவையில்லாததையெல்லாம் பேசிக்கிட்டு” என்றபடி இருவரது பேச்சுக்கும் இடையே வந்தான் சவுந்தர்.

வைரவேல் சட்டெனத் தன் குரலை உயர்த்தி “நான் பேசி முடிக்கற வரைக்கும் வாய மூடீட்டு இரு மாப்ள” என்றார்.

பிறகு பிரபாவின் பக்கம் திரும்பி “எம்மவன் தயாதான் ரேணுகா மவன வெட்டுனது” என்றார் பளிச்சென்று.
பிரபா அதை நம்ப முடியாதவனாக தலையை இடவலமாக அசைத்தான். பிறகு சட்டென்று சவுந்தரின் பக்கம் திரும்பி “உண்மையாகவா?” என்ற கேள்வியை விழிகளில் தேக்கி அவன் முகத்தையே பார்த்தான். சவுந்தர் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு “உங்களுக்கு லூசு பிடிச்சிருச்சா மாமா” என்று கத்தியபடியே முன்னகர்ந்து வந்தான். அவனைத் திருப்பிப் பார்த்த வைரவேலின் கண்களில் தெரிந்த நெருப்பைப் பார்த்தவுடன் தலையைக் குனிந்து கொண்டான்.

பிரபா வைரவேலைப் பார்த்து “தயா அப்படிச் செஞ்சிருக்க வாய்ப்பில்ல, எங்கத்த பையன் எங்கூட சுத்தறத காட்டிலும் தயா கூடதான் சுத்திக்கிட்டு இருப்பான். என்னையவிட அவன்தான் தயாவுக்கு ரொம்ப ஃபிரண்டு” என்றான்.

“இல்லப்பா, நான் சொல்றதுதான் உண்மை, எம்மவனும் வெட்டுப்பட்டு செத்தாங்கறதுக்காக அவன் ரேணுகாவோட ஒத்தப் புள்ளைய, அதுவும் அவன் ஃபிரண்ட வெட்டனாங்கறது பொய்யாயிராது, எம் மவன் பண்ணுன காரியத்துக்கு நான் என்னைக்கோ உங்க அத்த கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ருக்கணும், ஆனா ரேணுகா மொகத்துல முழிக்கற தைரியம் எனக்கு எந்தக்காலத்துலையுமே இல்ல…” என்றவர் பிறகு “ரேணுகா காலா நெனைச்சுக்கறேன்” என்றபடியே சட்டென்று மண் தரையில் மண்டியிட்டு அமர்ந்து பின் பிரபாவின் கால்களைத் தன் இரு கைகளாலும் பற்றினார்.

பிரபா துள்ளிப்பாய்ந்து இரண்டடி பின்னால் நகர்ந்துகொண்டான். பேருந்து நிறுத்தத்திலும் டீக்கடையிலுமிருந்த மொத்த சனமும் வயதில் மூத்த பெரியவரொருவர் ஒரு இளைஞனின் காலில் விழுவதையும், அவன் பதறி நகர்வதையும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

“எந்திரிங்க, எந்திரிங்க” பதறியபடி பிரபாவும், சவுந்தரும் ஒரு சேர வைரவேலைத் தூக்கி நிறுத்தி, அவரது சட்டை வேட்டியிலிருந்த மண்ணைத் தட்டினார்கள். தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் கடப்பாக் கல்லில் தலைகவிழ்ந்து அமர்ந்தார் வைரவேல். அவரது உடல் மட்டும் சிறிது நேரம் குலுங்கியபடி இருந்து பின் மெதுவாகச் சமநிலைக்கு வந்தது. பிறகு பிரபாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து விட்டேத்தியாகச் சிரித்தார்.

அவரது முகத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பிரபா. பிறகு எதையோ பேச ஆரம்பித்து பேச்சைத் தொடர நினைத்தவனின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. எதையோ சொல்ல ஆரம்பித்து அது முடியாமல் அவன் தவிப்பதை வைரவேல் உணர்ந்து விட்டிருந்தார். அவன் கண்களையே கூர்ந்து கவனித்தபடி அவனது கைகளைப் பிடித்து தனக்கருகில் அமர வைத்துக்கொண்டார்.

“நான் தயாவோட கைலதாம்ப்பா வெட்டுனேன்” என்று மெல்லிய குரலில் சொன்னபடி பேச்சைத் தொடர நினைத்தவனிடமிருந்து ஒரு கேவல் ஒலி மட்டுமே வெளியானது.

வைரவேல் பிரபாவின் தோள்தொட்டு அணைத்துக்கொண்டார். “தெரியும்யா, தெரியும்யா… எதையும் மனசுல போட்டுக்காதய்ய, நீ அவன வெட்டுனதும் தெரியும், அதுக்கும் முன்னாடி அவந்தான் உன்ன மொதல்ல வெட்டுனான்னும் தெரியும், ஆனா நீ தயாவைப் பாத்து ‘வெட்டாத மாப்ள, வெட்டாத மாப்ள’ன்னு சொல்லிக்கிட்டேதான் அருவாள வீசுனியாமே, அது நீ உன்னைக் காப்பாத்திக்கறதுக்காக செஞ்சது, எல்லா உசுருக்கும் தன் உசுரக் காப்பாத்திக்கற உரிமை இருக்கற மாதிரி உனக்கும் இருக்கு, அவனோட மொரட்டுத்தனம்தான் எல்லாருக்கும் தெரியுமே, நீ அவன பதிலுக்கு வெட்டலைன்னா, அவன் யோசிக்காம உன்ன வெட்டீருப்பான்னும் எனக்குத் தெரியும், அப்படி நடந்திருந்தா இன்னைக்கு உன் இடத்துல தயா நின்னுக்கிட்டு இருந்திருப்பான், என் இடத்துல உங்கப்பா நின்னுக்கிட்டிருந்திருப்பாரு, எனக்காவது மூணு பசங்க, உங்கப்பாவுக்கு நீ ஒத்தப் பிள்ளைல, செத்தே போயிருப்பாரு அந்த மனுசன், நடந்தது நடந்து போச்சு, இதையெல்லாம் தூக்கிச் சொமக்காக இத்தோட விடுங்கய்யா, இனிமேலாவது இந்தப் பழிவாங்கற பாவத்துல இருந்து வெளிய வந்து நிம்மதியா வாழ வழி பாருங்கய்யா” என்றார்.

பிரபா அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றான்.

“நடந்த எதையும் மாத்தவோ மறைக்கவோ முடியாதுய்யா, நீ தயாவ வெட்டுனதும் பொய்யில்ல, தயா உன்ன வெட்டுனதும் பொய்யில்ல, உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேங்கறதுக்காக தயாவோ, ரேணுகா மகனோ திரும்பி வரவும்போறதில்ல, ஆனா என் மனசுக்குள்ள இருந்த உறுத்தல இன்னைக்கு கொஞ்சம் கொறைச்சுக்கிட்டேன், அவ்வளவுதான்” என்றபடி “சவுந்தரு, மூணு டீய வாங்கு, குடிச்சுட்டு கெளம்புவோம், எனக்கு இங்க விருதுநகர்ல வேலையிருக்கு, எப்பா பிரபா நீ அடுத்து வர்ற மதுர வண்டில ஏறிப் போ” என்றார்.
பிரபா “சரி” என்பது போலத் தலையசைத்தான். இருவரும் சிறிது நேரம் நான்குவழிச் சாலையில் விரைந்துகொண்டிருந்த வாகனங்களை வெறித்த கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சவுந்தர் இரண்டு பேருக்கும் டீ க்ளாஸ்களை கொண்டுவந்து கொடுத்தான். இருவரும் தங்கள் மௌனத்தைக் கலைக்காமலேயே டீயைக் குடித்து முடித்தார்கள்.

தன் தோளில் கிடந்த துண்டை உதறி, முகம் துடைத்து, மீண்டும் தோளில் போட்டுகொண்ட வைரவேல் மெதுவாக எழுந்தார். பிரபாவும் எழுந்தான். அவனிடம் விடைபெறுவதுபோலத் தலையசைத்துவிட்டு விலகி நடந்தவர் திடீரென்று திரும்பி பிரபாவின் அருகில் நெருங்கி வந்து “ஒரு நிமிசம்” என்றார்.

பிரபா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“தயாவ மடில அள்ளிப் போட்டுக்கிட்டு ‘கண்ண முழிச்சுப் பாருடா’ ன்னு நீ அழுதியாமே, நெசந்தானா?” என்றார்.

பிரபா பதிலேதும் சொல்லவில்லை.

“அவன் உன் மடிலதான் செத்துப்போனான்னு சொன்னாங்க, அவன் சாகறதுக்கு முன்னாடி கடைசியா உங்கிட்ட எதாவது சொன்னானாய்யா?” என்று கேட்டார். பிரபாவின் கண்களை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவரது கண்களிரண்டும் எதையோ எதிர்பார்த்து அலைபாய்ந்தபடியிருந்தன.

“இல்ல, அவன் கழுத்துல பாதி வரைக்கும்…” என்று ஆரம்பித்த பிரபா திடீரெனத் தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். அவனை நெருங்கி, அவன் கைகளைப் பற்றிக்கொண்ட வைரவேல், அவனைத் தன் தோளின்மீது சாய்த்து “சரி, சரி… வேண்டாம், வேண்டாம்” என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்லியபடி அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார்.

சில நொடிகள் அமைதியாக இருந்த சவுந்தர் மெல்ல நகர்ந்து வந்து பிரபாவின் தோள்களில் கைவைத்து “சரி, சரி விடு பிரபா, அழாத” என்றான்.

`*****
இளங்கோவன் முத்தையா, இவர் மதுரையில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். மின்னிதழ்களில் அவரது கதைகள் அவ்வப்போது வெளிவருகின்றன. சமூக ஊடகங்களில் இவரது கட்டுரைகளுக்கு மிகப்பெரிய கவனம் இருக்கிறது. விரைவில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. சாதாரணமா ஆரம்பிச்சு நடுவுல ஒரு மாதிரி படபடப்பா ஆகி கடைசியில கண்கலங்க வச்சுடுச்சு…. ??????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular