Friday, March 29, 2024

தூரம்

கவிதைக்காரன் இளங்கோ

காலை வேளை அமைதியாக இருந்தது. வலப்பக்க சுவரில் ஜன்னல் வழியே நுழைந்த வெயில் கம்பியின் நிழல்கோடுகளை அனுமதித்து பரவியிருந்தது. சிறிய வீடு. இரண்டே அறைகள். இளங்குமரனின் மாமா எதிர் சுவரில் முதுகு சாய்த்து தரையில் உட்கார்ந்திருந்தார். ஊரிலிருந்து வந்திருந்தார். ஒரு கோரிக்கை வைத்திருந்தார். சண்முகம் அவரையே பார்த்தபடி பக்கவாட்டு ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். மின்விசிறிய காற்றில் அவருடைய வெண்ணிறச் சட்டையின் கழுத்துப்பட்டை நுனி மென்மையாக ஆடிக்கொண்டிருந்தது.

சண்முகத்தின் மனைவி கிருஷ்ணவேணி கையில் காபி டம்ளரை டபராவில் ஆற்றியபடி சமையலறை வாசலில் நின்றிருந்தாள்.

அவ்வமைதியைச் சரசரக்கச் செய்யும்படி இளங்குமரன் தன்னுடைய பள்ளிக்கூட பைக்குள் திணித்து வைத்திருந்த புத்தகங்களை விரல்முனைகள் ஓட்டி கடைசியாக ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான். கைகளை நுழைத்து தோள்வழியே முதுகில் இடம்பிடித்து கொள்ளும் முதுகுப்பை அது. பள்ளிக்கூடத்திற்கு சுமையோடு நடையாகவே நடந்துபோக ஏதுவாக இருக்கும். எழுந்து நின்று அதை வாகாக மாட்டிக்கொண்டான். அவன் காலில் அணிந்திருந்த கருப்பு நிறத்திலான சீருடைக்காலணியின் முனை புடைத்துக்கொண்டு பளபளத்தது. முடிச்சிடப்பட்டு தொங்கிய கழுத்துப்பட்டியில் இளநீலநிற குறுக்குப்பட்டைகள் வசீகரமாக இருந்தன. அதன் மத்தியில் பள்ளிக்கூடத்தின் இலச்சினை பொறித்த உலோகத்தகடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.

“போயிட்டு வர்றேன் மாமா”

“சரிங்க மருமகனே..”

“வரேன்ப்பா..”

“ரோட்ட பார்த்து நடந்து போப்பா.. ரயில்வே கேட்டை கிராஸ் பண்றப்ப பத்திரம். சொன்னத ஞாபகத்துல வச்சுக்கோ”

அம்மாவிடம் இரண்டு ரூபாயை வாங்கி கால்சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான். பட்பட்டென்று படியிறங்கிப்போகும் காலடிச் சத்தம் தேய்ந்து விலகியது.

“எல்லாமே ஒரு நேரங்காலம்தான் மச்சான். பாம்பேல என்ன ஒரு வாழ்க்கை! எப்படி இருந்தீங்க? நெனைச்சு பாக்கவே முடியல பாருங்க. ஒங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா.. அந்தக் கஷ்டம் என் தங்கச்சிக்கும்தானே. புள்ளைங்க எதிர்காலம்தானே நமக்கு முக்கியம். எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க. கடைய திறந்து அரைமணி நேரம் ஆச்சு. நான் போயாகணும். தீபாவளி சீசன் வேற. கடையாளுங்க எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க குளிச்சிட்டு சாப்பிட்டு பேசிக்கிட்டு இருங்க. ரெஸ்ட் எடுங்க. நான் மத்தியானமா வர்றேன்.”

“சரிங்க மாப்பிள”

“அப்போ சாப்பாட்ட கடைக்கு கொண்டுவர வேண்டாமா?”

மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். ஆமாம் என்பதாகத் தலையசைத்தார். அலமாரியிலிருந்து கைகடிகாரத்தை எடுத்துக் கட்டிக்கொண்டார். அவருடைய மச்சான் பழனி மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார். சண்முகம் வாசலைத் தாண்டும்போது இருவரையும் பொதுவாகப் பார்த்து சொன்னார்.

“வந்து பேசிக்கலாம்”

*

கிருஷ்ணவேணியின் உடன் பிறந்த அண்ணன் பழனி. அவர் கல்யாணம் கட்டியிருப்பது சண்முகத்தின் உடன் பிறந்த தங்கையான சிவசுந்தரியை. இரண்டு குடும்பங்களும் நெருங்கிய ரத்த உறவு. பழனி பம்பாயில் ஒரு பெரிய நூற்பு ஆலையில் நூல் சுற்றுப்பகுதிப் பிரிவில் தலைமை மேற்பார்வையாளராக வேலை பார்த்தவர். அவருக்கு ஆண் ஒன்று பெண் ஒன்றாக இரண்டு குழந்தைகள். தென்தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து பெயர்ந்த அக்குடும்பம் பம்பாயிலேயே வேர்பிடித்து கொஞ்சங்கொஞ்சமாக அடுத்தக் கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருந்தபோது தொழிற்சங்கப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட காலவரையற்ற தொழிற்சாலை முடக்கத்தில் நிரந்தரமாக வேலை போயிற்று. அவருக்கு மட்டுமல்ல, அதனை நம்பி குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்களும் திக்கற்று திகைத்து நிற்கும்படி ஆயிற்று.

சில மாதங்கள் அங்கேயே இருந்து தாக்குப்பிடித்துப் பார்த்த பல குடும்பங்கள் கையிருப்பு குறையக்குறைய தங்களின் சொந்த நிலத்திற்கே திரும்பிவிட்டார்கள்.

அதேபோல பழனியும் தம் குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் போய் சேர்ந்துவிட்டார். அது குலதெய்வமான சுடலையாண்டி சாமியின் வாக்குத்தத்தம் என முடிவுக்கும் வந்துவிட்டார். கடைசி சேமிப்பு காசில் சொந்தமாக சிறுதுண்டு விளைநிலம் ஒன்றை வாங்கி தாமே விவசாயத்திலும் இறங்கிவிட்டார். அது அன்றைய சூழ்நிலையின் துணிச்சலான முதலீடு. அதிலிருந்து முதல் போகம் மகசூலும் கண்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து முதல் லாபத்தின் அடையாளமாக இரண்டு கறவை மாடுகளும் நான்கு வரையாடுகளும் நிற்கின்றன. ஏற்கனவே பூட்டிக்கிடந்த சொந்தவீட்டின் புறவாசலுக்கு அடுத்திருந்த அரைசெண்ட் கூடுதல் இடத்தையும் புதிதாக கிரயம் செய்து அதில் புழங்கிக்கொள்ள ஏதுவாய் அந்நிலைத்தைப் பண்படுத்தப்படுத்தி அவற்றில் சிறுசிறு காய்கறி செடி வகைகளும் அடுத்திருந்த வயலைப் பிரித்து காட்டும்விதமாக மேடேற்றிக் கிடந்த அகன்ற கரையில் ஊன்றி நின்றிருந்த வலுவான வேப்பமரமும் அதனையடுத்து அதே வரிசையில் அருகருகே தாமே முளைத்து கிளைவிரித்திருந்த ஒடைமரங்களுமாக நிழல்பாவிக் கிடந்தது.

ஒடைமரத்தின் காலடியில் அடித்திருக்கும் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும் மேய்ச்சல் ஆடுகள் பழுத்த ஒடங்காயை சாவதானமாக மென்றுகொண்டு பொழுதன்றும் அசமந்தமாக நின்றது நின்றபடி இருக்கும். நாட்டுக்கோழிகளும் சிவந்த கொண்டைச் சேவல்களும் இடப்பக்கம் ஒதுக்கில் சேகரமாகிக் கிடக்கும் குப்பைக்குழிக்குள் இறங்கி அவற்றைக் கிண்டிக்கிளறி இரை உண்டு அவ்வப்போது குரல் எழுப்பி தம் இருப்பையும் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளும்.

பக்கத்திலிருந்த மனைக்கும் பழனி வீட்டுமனைக்கும் இடைவெட்டில் அமைந்த பொதுவழிப் பாதையின் முடிவில் அதே புறவாசலின் பிரிவில் ஊராட்சி மன்றம் போட்டுக்கொடுத்த பொது குடிதண்ணீர் அடிகுழாய் ஒன்றும் உண்டு. வட்டவடிவில் அகலமான சிமிண்ட் திண்டு ஒன்று செம்மண் தரையிலிருந்து அரையடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு அதனுள்ளேதான் நடுநாயகமாக அந்த அடிகுழாய் உட்கார்ந்திருந்தது. இரண்டடிக்கு நீண்டு உயர்ந்த உலோக உடலும் அதன் தலைப்பகுதியில் சப்பையாக சேர்த்துவைத்து அறைந்தது போன்ற மண்டையுமாக.. அதன் பின்மண்டையிலிருந்து வெளியே நீண்டிருக்கும் மூன்றடி நீள கைப்பிடியும் பார்ப்பதற்கு வேற்றுகிரகப் பிராணி போல ஓர் அப்பிராணித் தோற்றத்தை ஏற்படுத்தியது.

இருபத்திநாலு மணிநேரமும் அதில் தண்ணீர் வரத்து இருந்தது. ஒரே அமுக்கில் குபுகுபுவென்று தண்ணீர் பொங்கிக்கொண்டு அதன் வாயிலிருந்து வழியும். அவ்விடம் சிறுவர்களின் விளையாட்டுத் தளமாகவும் அந்த அடிகுழாய் சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாகவும் ஆகிப்போனது. கடும் வெயிலுக்கு ஈடாக எப்போதும் அவ்விடம் ஒரு குளிர்ச்சியை தக்க வைத்திருந்தது. அதனால் அருகில் நிற்கின்ற வேம்புக்கும் ஒடை மரங்களுக்கும் சிறு செடிகளுக்கும் எப்போதும் நல்ல செழிப்புத்தான். எந்தக் கோடையிலும் அவற்றின் தாகம் தீர்ந்திடாத நீர்வளம் அச்செம்மண்ணில் இருந்தது.

விஷயம் இதுதான்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பியிருந்தாலும் பழனிக்கு பழைய செல்வாக்கு குறைந்தபாடில்லை. ஏற்கனவே நல்ல மனிதர் என்று பெயர்பெற்ற பொறுப்பான ஒரு சம்சாரி அவர். அன்றைய பி.யூ.ஸி முடித்தவர். பண்பான ஆள். அதுவும் இப்படி பம்பாயில் ஒரு வாழ்க்கை வாழ்ந்து திரும்பியிருப்பது வேறுவிதமான மரியாதையாகவும் உயர்ந்திருந்தது. அதற்கு காரணம் வந்த வேகத்தில் விளைநிலம் ஒன்றை வாங்கி தானே களம் இறங்கி விவசாயத்தைத் தொடங்கியதுதான். கூடவே சொந்த வீட்டை மேம்படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் வீட்டின் அளவைப் பெரிது பண்ணிக்கொண்டது. மதிப்பும் மதிப்பீடுகளும் பொருளாதாரம் சார்ந்தவை என்றாலும் கூட.. அவற்றுக்கு ஓர் அர்த்தம் கிடைப்பது எப்போதென்றால் நாம் செய்கின்ற செயல்களை வைத்துதான் என்பதை பழனி நன்கு அறிந்து வைத்திருந்தார். தொழில் நிமித்தம் குடும்பத்தையும் தம்மோடு இழுத்துக்கொண்டு அலைய நேருகின்ற ஊர்சுற்றிகளின் அனுபவம் அது. அந்த வகையில் மெட்ராஸில் இருக்கும் தன்னுடைய தங்கை மாப்பிள்ளையான சண்முகம் அவருக்கு ஆகச் சிறந்த ஒரு முன்னோடி.

அதனாலேயே பெரும்பட்டணத்தைப் பார்த்த அனுபவசாலி என்கிற கூடுதல் அபிப்பிராயமும் பழனிக்கு சேர்ந்துகொண்டது. பம்பாயில் வேலைசெய்த நூற்பாலையின் தொழிற்சங்கம் சார்ந்த சாகசக் கதைகளை மாலை வேளைகளில் கடைத்தெருவில் சிகரெட் பிடித்தபடி சகாக்களிடம் மையக்கருத்தாக்கி அதில் இருந்த தம் சொந்த அரசியல் பார்வையையும் முன்வைத்து பேசுவதுவரை அவருக்கு என்று ஒரு மாற்றத்தையும் பொலிவையும் அச்சூழல் தந்திருந்தது.

அச்சமயத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்றத்தில் சுழற்சி முறை தேர்தல் வரவிருந்தது. ஏற்கனவே இருந்த ஐந்தாண்டுகள் முடிந்து அடுத்த ஐந்தாண்டுக்கான ஊராட்சிமன்றத் தேர்தல் அது. அந்த ஊரைப் பொருத்தவரையில் இதுநாள்வரை ஊராட்சி மன்றத்தலைவரும் உறுப்பினர்களும் மட்டுமேயிருந்து வேலைகள் நடந்துவந்த நிலையில், பழனி ஊர் திரும்பிய ராசியோ என்னவோ புதிதாக துணைத்தலைவர் பதவியும் இம்முறை போட்டிக்காக இணைக்கப்பட்டுள்ளது. மன்றத்தேவையைக் கருதி அது போனவருடமே கோரிக்கையில் வைக்கப்பட்டிருந்த ஓர் அம்சம்தான். கடந்த ஐந்து வருடங்களில் ஒதுக்கப்பட்ட நிதிக்குள் ஊரின் முக்கியமான அத்தியாவசியங்கள் திறம்பட நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருந்த நிர்வாகத் திறனையும் ஒட்டி, கடந்த அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி நாளில் கூட்டப்பட்டிருந்த நான்காவது கூட்டத்தில் இக்கோரிக்கையும் மாவட்ட ஆய்வாளர் முன்பு மனுவாக இணைத்துச் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேவேளை மன்றத்தின் தேர்தலும் பதவி பொறுப்பும் அரசாங்கம் சம்பந்தப்பட்டது என்றாலும் அது கட்சி அரசியலுக்கு கீழ் நேரடியாக வருவதில்லை. ஆனால் பதவியில் இருப்பவர்கள்மீது எப்போதுமே கட்சிக்காரர்களின் ஒரு கண் இருந்துவரும். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரிதான் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரிதான். ஊர் சேவைகளுக்கு தோதான ஆளைப் பற்றிய தகவல்கள் மட்டும் எப்போதுமே மேலிடத்திற்கு சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்துவிடும்.

ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவர் பதவி என்பது மன்றத்துக்குள் கூடிக்கொண்டே போகிற வேலைப்பளுவை சற்றுக் குறைத்துக்கொண்டு பிரித்தாள அத்தியாவசியமானதும்தான் என்பதை மன்ற உறுப்பினர்களும் உணர்ந்திருந்த வேளை பழனியின் மறுவருகை காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயிற்று. பதவி, பொறுப்பு என்று வரும்போது அதுமட்டுமே போதாது அல்லவா? அவருடைய நாணயமான குணமும் ஊர் மக்களுக்கு மத்தியில் இருந்த நற்பெயரும் நல்லது கெட்டதுகளுக்கு தயங்காமல் முன்வந்து நிற்கும் துணிவும் கூடுதல் காரணமாயிற்று. அதனை அவர் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். அவரைப் பொருத்தவரை அதுமட்டுமே காரணம் அல்ல.

அதாவது வருடாவருடம் ஊரில் நடக்கும் கோயில் கொடையில் அக்குடும்பத்திற்கு என்று ஒரு முக்கியத்துவம் காலாகாலமாக உள்ளது. அது ஓர் எழுதிவைக்கப்படாத சட்டமும் கூட. சுடலையாண்டி சாமியின் கோயிலுக்கு என்று நேர்ந்துவிடப்படுகிற கருப்பு கிடாய் பழனியின் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட சிவசுந்தரியின் பிறந்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிற உரிமைகளில் ஒன்று. அப்படி.. சிவசுந்தரியின் உடன்பிறந்த சகோதரனான சண்முகம் குடும்பத்தின் பெயர் சொல்லும்படியாக அவர்கள் வீட்டுக் கருப்புக்கிடாதான் சாமிக்கு முன்னுள்ள பிரதான பீடத்தில் முதன்மையாக பலியிட உரிமை உள்ள ஊர் கிடா. அந்தக் கிடா வெட்டை சாமி ஏற்றுக்கொண்ட பிறகே அடுத்தடுத்த கிடாக்கள் அங்கங்கேயே அவரவர் வசதிக்கேற்ப பலியிடப்படும். அக்குடும்பத்தின் ரத்தப்பந்தங்கள் ஊரில் இல்லாவிட்டாலும் ஆண்டாண்டு காலமாக எத்தனை தலைமுறை மாறினாலும் இந்த வழக்கம் மட்டும் மாறுவதில்லை. அதற்கான பணத்தை அனுப்பிவைத்து சாமிக்கு கிடா வாங்கிவிடப்பட்டு கோயில் நிர்வாகிகளின் மேற்பார்வையில் சம்பளத்திற்கு ஓர் ஊழியன் அமர்த்தப்பட்டு அந்தச் சாமிக்கிடா கவனமாக பரமாரிக்கப்படும். இப்போது பழனியின் குடும்பம் ஊர்திரும்பிய நிலையில் சாமிக்கான கருப்பு கிடாக்குட்டி அவருடைய வீட்டில் எப்போதோ வளரத் தொடங்கிவிட்டது.

இந்தக் கோயில் கொடையும் குடும்ப உரிமையும் ஊராட்சி மன்ற பொறுப்புகளும் எந்தெந்த புள்ளிகளில் இணைகின்ற வாய்ப்பைக் கொண்டுள்ளன என்கிற ஒரு கணக்கு அவரிடம் இருந்தது. மனதுக்குள் ரொம்ப காலமாகக் கிடக்கும் அந்த முக்கியமான விஷயத்தை அவர் தம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார். ஆனால் முன்னதாக குடும்பத்திற்குள்ளேயே ஒரு ரகசிய வெள்ளோட்டம் விட்டுப்பார்ப்பது அவசியம் என்று அவருக்குப் பட்டது. எதையும் பரீட்சித்து சோதிக்காமல் முடிவுகள் எடுக்கத் தோதுபட்டு வராது என்பதில் எப்போதும் தீர்மானமாக இருந்தார் பழனி.

பழனியைப் பொருத்தவரையில் துணைத்தலைவராகத் தேர்வாகிவிட்டால் பதவியில் உட்கார்ந்த வேகத்தில் இறங்கிச் சில ஊர் வேலைகளை துணிந்து செய்துவிட வேண்டும். அதற்கு சொந்தப்பணம் கையிலிருந்தால்தான் சரிப்பட்டுவரும். அலுவல் சார்ந்த முறையான வைப்பு, பற்று கணக்கெல்லாம் பின்னர் அதில் சமன் ஆகிவிடும். அதனால் பொருளாதார வலு ஒன்று தனிச்சேமிப்பில் இருப்பது அவசியம் என்பதை அறிந்து வைத்திருந்தார். ஆனால் தற்சமயம் கையிருப்பு போதுமானதாக இல்லை. அதனாலும் பழனிக்கு தன் வீட்டில் பலமான எதிர்ப்பு இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சிவசுந்தரி கரித்துக்கொட்டத் தொடங்கிவிட்டாள்.

“அத்தாம் பெரிய பட்டணத்துல நெலைச்சு நிக்க வக்கில்ல. மொத்தமா மூட்டைய கட்டிக்கிட்டு வந்து நிக்கறது காணலயாக்கும். பொட்டப்புள்ள இப்பத்தான் யென் இடுப்ப வுட்டே எறங்கியிருக்கு. இந்தாங்கறதுக்குள்ள ஊரு பய வேலைய எல்லாம் தல மேல தூக்கி வச்சிக்கிட்டு காடு கம்மான்னு திரியறதுக்கு அய்யா பிளானு போட்டாச்சி.. பாம்பேலயும் இதே கததான்.. பதவி பவுசு இல்லாட்டி குண்டி ஓரெடத்துல ஒக்காறாதோ.. சும்மா வுடமாட்டன் பாத்துக்கங்க.. மெட்ராஸூல இருக்கற எங்கண்ணனுக்கு லெட்டரு எழுதி போட்டாதேன் நீங்க ஒழுங்குபட்டு வருவீங்க”

“ஏய் யெதுக்கு இப்ப ச்சலம்புத?”

“ஆமா.. மறுவாட்டியும் இங்கன வந்து சாணிய மொழுவ வுட்டுட்டு.. பேச்சுக்கு ஒன்னுங் கொறச்ச இல்ல.. மட்டுமதியா கஞ்சிய குடிச்சுபுட்டு வயலுக்கு ஓடுங்க.. கையோட கறவைய அவுத்துக்கிட்டு மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போங்க.. அந்தி சாய ஏரியில எறக்கி குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்க.. மூத்தவன ஸ்கூலு வுட்டு வந்ததும் கூடமாட ஒத்தாசைக்கி அனுப்பி வக்குதேன். அவனும் இப்பயே எல்லாம் பழகிறட்டும். பெறவு.. நாளும் கெழமையும் சீரழிஞ்சு போச்சுன்னா கஷ்ட நஷ்டத்துக்கு உருப்படறதுக்கு ஒருவழியாச்சும் கெடக்கும். கையேந்தி திரிய வேணாம்லா.. எம்புள்ளைகள அப்புடி காண எனக்கு ஏலாது.. கட் அண்டு ரைட்டா சொல்லிப்புட்டேன்”

“யேய்.. செவசு அவம் படிக்கட்டும்டி.. மாடு மசுருன்னு சும்மா நச்சி நச்சின்னுங்க?”

“ஓமா.. நச்சிக்கறாங்க.. அப்டியே வுட்டா பொலி காளையா காடு மேடுன்னு டவுசர கிழிச்சிக்கிட்டு லொம்பப்பட்டு அலையறதுக்கு.. பெறவு.. பஜாரு பக்கம் போயி பழகிட்டானா.. சேக்காளிங்க கூட்டுல கெட்டழிஞ்சு போவ நான் வுடமாட்டேன்.. கருவேப்புல கணக்கா ஒத்த புள்ள என் மவன்.. நீங்க என்னமும் பண்ணித்தொலைங்க.. சாயந்தரம் காட்டுலருந்து வாரப்ப.. புள்ளைய வூட்டுல வுட்டுட்டு.. பெறவு உங்க சிநேகிதக்காரங்கள போயி கொஞ்சிக்கிறலாம். இது சுடலயாண்டி மேல ஆண”

‘ச்சு.. சாமிய வேற இழுப்பா’

தனக்குள் முனகிக்கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு புறவாசலுக்குப் போய்விட்டார். கருப்பு நிறத்தில் பருத்துப்போய் நன்றாகக் கொழுத்துக் கிடந்த சாமி கிடா அடிகுழாய்க்கு அருகே மணலில் சரிந்து படுத்துக்கொண்டு இவரையே பார்த்துக்கொண்டு இருந்தது.

பழனிக்கு வேறு ஒரு யோசனை வந்துவிட்டிருந்தது.

*

அந்த வாரக்கடைசியில் மாலையில் நெல்லை விரைவு ரயிலில் மெட்ராஸூக்கு வண்டி ஏறிவிட்டார். எந்த விவகாரமும் நேரில் உட்கார்ந்து பேசுவதைப்போல வராது என்பது அவருடைய அபிப்பிராயம். ஆனால் அவர் போய்சேரும் முன்னே சிவசுந்தரியின் இன்லாண்ட் கடிதம் ஒன்று சண்முகத்தின் கடை முகவரிக்கு சனிக்கிழமை மதியமே போய் சேர்ந்துவிட்டது. உடன் பிறந்த அண்ணனுக்கு தன் மனக்கஷ்டத்தையும் புலம்பலையும் அங்கலாய்ப்பையும் நுணுக்கி நுணுக்கி எழுதி தீர்த்துவிட்டிருந்தாள்.

சண்முகத்திற்கோ மச்சானின்மீது நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. பம்பாயில் பழனி தம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சில முயற்சிகள் பாழ்பட்டுப்போன நிலையில் ஒரு மனிதன் என்னென்ன அவதிகளுக்கு ஆளாகிறான் என்பதை ஏற்கனவே அவர் நன்கு உணர்ந்திருந்தார். பொதுவாகவே அனைத்து நல்லது கெட்டதுகளுக்கும் யோசனைகளுக்கும் அவர்களிடையே சுமூகமான கடிதப்போக்குவரத்து உண்டு. உறவுகளை ரத்தப்பந்தங்களை ஊர் சொந்தங்களை இணைத்துக் கொள்ளும் பாலமாக அக்கடிதங்கள் மட்டுமே எப்போதும் இருந்து வந்தன.

இந்த விஷயத்திலோ இரண்டு பக்கமும் சொந்தம் என்பதால் சற்று கூடுதல் நிதானத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் சண்முகத்திற்கு இருந்தது. அதுவேதான் பழனிக்கும்.

இரு பெண்களின் மனமும் மௌனமும் உரிமை என்கிற அளவுகோலுக்குள் பாதரசம் போல அங்குமிங்கும் சப்தமின்றி உருண்டு கொண்டிருந்தன. அதனை சண்முகமும் பழனியும் அறியாமல் இல்லை.

சண்முகம் மதிய சாப்பாட்டிற்கு வரும்முன்பே ஒரு குட்டி தூக்கத்தைப் போட்டு விடுவது என நினைத்துக் கொண்டார் பழனி.

*

ரயில்பாதையின் தடுப்புவாயில் அடைப்பட்டிருந்தது. தடுப்புவாயிலுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் வாகனங்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிரம்பி வழிந்தன. இரும்புக் குழாய்களை பாரம் ஏற்றிக்கொண்ட மாட்டுவண்டிகள் ஒன்றிரண்டு காத்திருந்தன. அதனை ஓட்டி வந்தவர்கள் கதையளந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த வண்டிமாடுகள் வாயில் நுரைத்தள்ள தம்மை சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு வால் சுழற்றியபடி நின்றிருந்தன. அவர்களைத் தவிர்த்து மற்ற எல்லா மனித முகத்திலும் காலைநேர அலுவலகத் தாமதத்தின் எரிச்சல் ஒன்று கறுத்துப்போய் இருண்டு கிடந்தது. சரக்கு ரயில்வண்டி ஒன்று ரொம்ப நேரமாக பச்சை அனுமதி கிடைக்காமல் குறுக்கே நின்று கொண்டிருந்தது.

வழக்கத்தின் வழக்கமாக ரயில்பாதையின் தடுப்புவாயிலுக்கு பக்கவாட்டில் இருசக்கர மிதிவண்டிகள் நுழையும் அளவுக்கான குறுகல் வழிக்குள் நுழைந்துவிட்ட இளங்குமரன் அகன்ற தண்டவாளங்களைத் தாண்டிச்சென்று கூட்டத்தோடு கூட்டமாக அந்த ரயில்வண்டி முன்பு வந்து நின்றுகொண்டான். அது அவன் முன்னே சிகப்புநிறச் சுவர்போல உயர்ந்து பிரம்மாண்டமாக இருந்தது. அவனைப்போலவே வேறுசில பள்ளிக்கூடப் பையன்களும் நின்றிருந்தான்கள். வேலைக்குப் போகின்ற சிலர் சைக்கிளுடன் நின்றிருந்தனர். மூதாட்டி ஒருத்தியின் தலையில் சுமையாக உட்கார்ந்திருந்த அகன்ற மூங்கில் கூடையில் வேர்க்கடலைகள் நிரம்பியிருந்தன. வெயில் ஏகத்திற்கு கசகசத்தது. சரக்கு ரயில்வண்டி கிழக்கு மேற்காக இருபக்கமும் நீண்டிருந்தது. அதன் தலையையும் காணவில்லை. வாலையும் காணவில்லை. அதுவோர் உலோக மலைப்பாம்பு.

சிலர் பெட்டிகளின் இணைப்பு இடைவெளிக்குள் தாவி ஏறி மறுபுறம் குதித்து ஓடினார்கள். இளங்குமரனுக்கு அவர்கள் எப்போதுமே சாகசக்காரர்களாகத் தென்பட்டார்கள். இன்னும் சிலர் ரயில்பெட்டியின் அடிப்பாகத்தின் கீழ்வழியே குனிந்து தவழ்ந்து மறுபுறம் போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஓர் உச்ச சாதனையாளர்கள். நாமும் ஏறிக்குதிப்பதா? அடியில் நுழைந்து வெளியேறுவதா? என எப்போதுமே குழம்பி நிற்பான் அவன். ஒவ்வொருமுறையும் அதை யோசிப்பான். ஆனால் பெரிய பெரிய இரும்புச் சக்கரங்களைப் பார்க்கப்பார்க்க அச்சமாக இருக்கும். கூடவே சேர்ந்துகொண்டு அப்பாவின் எச்சரிக்கைக்குரலும் மனதுக்குள் வந்துவிடும்.

இளங்குமரன் யோசித்தான். கதை சுத்தமாகக் கெட்டது. பள்ளிக்கூடத்திற்கு தாமதமாகிவிடும். எப்படியும் பிரதான வாயிலில் கறாராக நிற்க வைத்துவிடுவார்கள். அங்கே போய்ச்சேர்ந்துவிட்டால் பின்வாங்கி வேறு எங்கும் போகவும் முடியாது. வாயிற் காவலாளிதான் அதற்கு பொறுப்பு. சிலசமயம் உடனடியாக பிரம்படி அனுமதியோடு உள்ளே வகுப்பறை நோக்கி ஓடவேண்டும். பல சமயங்களில் அந்தப் பிரம்படியை வாங்கக்கூட கால்கடுக்கக் காத்திருக்க வேண்டும். அந்தப் பிரம்படியை உடற்பயிற்சி வாத்தியார் இன்பசேகரன்தான் வழங்குவார். ஆறடி உயரமுள்ள திடகாத்திரமான மனிதர் அவர். அவரைப் பார்த்தாலே எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும். வீட்டிற்கும் திரும்பிப்போக முடியாது. பழனி மாமா வேறு ஊரிலிருந்து வந்திருக்கிறார். இளங்குமரனுக்கு இப்போதே லேசாக வயிறு கலங்கத் தொடங்கியது.

திடீரென ரயில்வண்டி சிறிய குலுக்கலுடன் முன்னகர்ந்து சில அடிகள் போய் நின்றுவிட்டது. அப்போது அத்தனைப் பெட்டிகளின் இணைப்புகளும் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் ஒரு கிடுகிடுக்கும் உலோக ஒலியை எழுப்பின. அவ்வொலி கண்ணுக்குத் தெரியாத ரயில்வண்டியின் வால்பகுதியில் தொடங்கி அப்படியே ஒவ்வொரு பெட்டியாக கடந்துவந்து முதன்மை எந்திரப்பெட்டியை நோக்கிப் போயிற்று.

ஒவ்வொரு முறையும் நெஞ்சு அதிரும் வேகத்தில் அவ்வொலி அப்படிக் கடந்துபோகும்போது பயங்கர திகிலாக இருக்கும். அப்போது ஓவென மனிதக் கூக்குரல்கள் ஒருமித்து அலையென எழும். அவ்வேளை யாராவது பெட்டி இணைப்பின் இடைவெளிக்குள் ஏறி நின்றிருந்தால் அவர்கள் உஷாராகிக்கொள்ள வேண்டும் என்பதற்கான சமிக்ஞை அது. அதிலேயே பயத்தில் மாட்டிக்கொண்டு அப்படியே பல்லி மாதிரி உயிரைக் கையில் பிடித்தபடி அங்கேயே வேறுவழியின்றி ஒட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தம்வரை பயணித்த தீரர்கள் எல்லாம் உண்டு. பொதுவாக, சரக்கு ரயில்வண்டிகளின் அடுத்த நிறுத்தம் எது என்பதை ஆண்டவன்தான் அறிவான். கும்மிடிபூண்டி வரை போய் அங்கிருந்து பேருந்து பிடித்து வந்துசேர்ந்தவர்கள் கதை எல்லாம் உண்டு. இதை எல்லாம் கேட்டு வளர்கிறவன்தான் இளங்குமரன்.

அன்றைய தினமும் அப்படி ஒருவர் மாட்டிக்கொண்டார். நண்பர்களிடம் சொல்லுவதற்கு ஒரு சம்பவம் கிடைத்ததே என்று இளங்குமரன் நினைத்துக்கொண்டான். அந்த அண்ணன் பேந்தபேந்த முழித்தபடி அச்சத்துடன் எட்டிப்பார்த்தது தெரிந்தது. குலுங்கி நகரத்தொடங்கிய ரயில்வண்டி நிற்கவேயில்லை. அது மெல்ல வேகமெடுத்துவிட்டது.

இளங்குமரன் தன் கண்முன்னே கடந்துபோகின்ற பெட்டிகளை எண்ணிக்கொண்டிருந்தான். அவன் எண்ணியவரை மட்டுமே இருபத்தி நாலு பெட்டிகள். துறைமுகத்தில் இருந்து நிலக்கரித்துண்டங்களையும் துகள்களையும் டன் கணக்கில் சுமந்துபோகிறது இந்த ரயில்வண்டி. அதன் கடைசி பெட்டி விலகியபோது அவனும் அவனைப்போன்ற பிற பள்ளிக்கூட மாணவர்களும் அதிலிருந்த வெள்ளுடை மனிதருக்கு உற்சாகமாக கைக்காட்டினார்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி கையசைத்தார். அவருடைய மறுகையில் சுருட்டி வைக்கப்பட்ட சிகப்பு மற்றும் பச்சைக்கொடி இருந்தது.

“ஸார்..! ஒருத்தன் நடுவுல மாட்டிக்கிட்டான் ஸார்…”

யாரோ கத்தினார்கள். அது அவருக்குக் கேட்டதா என்று தெரியவில்லை. அந்தக் கடைசிப்பெட்டி ஒரு சிறிய அறை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் இளங்குமரனுக்கு அதில் பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

ரயில்பாதையின் தடுப்புவாயில் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் அந்த ரயில்வண்டி கடந்துபோனதும், அதுவரை துடிப்புடன் இரண்டு பக்கமும் தயாராக நின்றிருந்தவர்கள் போர் வீரர்களைப்போல எதிர்கொண்டார்கள். இளங்குமரனும் மற்ற சிறுவர்களும் லாகவமாக ஓரம் ஒதுங்கி தண்டவாளங்களுக்கு நடுவே குதித்து இறங்கி ஏறி வளைந்துபோய் சிதறிய கூட்டத்தை ஊடுருவி மறுபக்கத்தினை அடைந்து தடுப்புவாயிலுக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய வழிக்குள் நுழைந்து வெளியேறினார்கள். எல்லாமே தள்ளுமுள்ளுதான்.

அப்படிப் போராடி நடைபாதையில் நடக்க நடக்க.. வலதுபக்கம் ஸ்டான்லி மருத்துவமனையும் இடதுபக்கம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் அரண் அமைத்து வந்தன. இரண்டு கட்டிடங்களுக்கும் நடுவே இப்படி ஓர் அகன்ற பாதையும் அதன் நீட்சியாக ஒரு ரயில்பாதைக்குரிய தடுப்புவாயிலும் இருக்கின்றன. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் இப்பாதைத்தான் தெற்குதிசையில் இருக்கின்ற மெட்ராஸின் பிரபலமான பிராட்வேயையும் ரயில்பாதையின் தடுப்புவாயிலைத் தாண்டி வடக்குத்திசையில் இருக்கின்ற பழைய வண்ணாரப்பேட்டையையும் இணைக்கின்றது.

மருத்துவக்கல்லூரியின் மதில் சுவர் முடியுமிடத்தில் சிறிய கும்பல் ஒன்று குறுக்கில் வெட்டின முட்டை வடிவில் நின்றபடி எதையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதனைச் சமீபித்தபோது ஆர்வத்தோடு இளங்குமரனும் அதனுள் எட்டிப்பார்த்தான். பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை விடப்போவதாக சொல்லிக்கொண்டு ஒரு மோடிமஸ்தான் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். பெரிய தலைப்பாகை கட்டியிருந்தான். அந்தத் தலைப்பாகைக்குள் அவனுடைய தலை புதைந்ததைப்போலக் காணப்பட்டது. தன் கண்களைச் சுற்றி அடர்ந்த கண் மை பூசியிருந்தான். இடது கையில் துண்டுத்துண்டாக நிறைய கருப்புநிறக் கயிறுகளையும் சிகப்புநிறக் கயிறுகளையும் தொங்கவிட்டிருந்தான். விதவிதமான சிறிய கண்ணாடிக்குடுவைகளில் என்னென்னவோ மருந்துவகைகள் இருந்தன. சிலதில் சிகப்பு, பச்சைநிற எண்ணெய்கள், சிலதில் வேர்கள் என்று கலவையாக ஒரு கடையையும் பரப்பி விரித்திருந்தான்.

அவனுக்கு முன்பாக சற்றுதள்ளி தட்டையாக தட்டுவடிவில் இருந்த ஓர் அகன்ற மூங்கில் கூடை மூடப்பட்டு இருந்தது. அதன் மூடி லேசாக அவ்வப்போது அசைந்தபடியும் இருந்தது. எல்லோரின் பார்வையும் அதில்தான் ஊன்றியிருந்தது. மோடிமஸ்தான் தன்னருகே தரையில் ஒரு மகுடியைக் கிடத்தி வைத்திருந்தான். கீரிப்பிள்ளையை சுவரோடு புதைந்திருந்த ஒரு இரும்புக்கம்பியில் கயிறுகொண்டு கட்டிவைத்திருந்தான். அதுவோ கயிறின் நீளத்திற்கேற்ப வகுக்கப்பட்ட எல்கைக்குள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. கூட்டத்தைப் பார்த்து பதற்றமாகவே இருந்தது. இளங்குமரனுக்கு இதில் ஆர்வம் அதிகமாயிற்று. அவ்வப்போது அவனுடைய பார்வை மகுடியின்மீது நிலைத்துவிட்டு மூங்கில் தட்டிற்குத் திரும்பியபடி இருந்தது.

ஏதேதோ பேசிக்கொண்டே இருந்த அந்த மோடிமஸ்தான் திடீரென தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு சுற்றிலும் நின்றிருந்த எல்லோரையும் ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்தான். கூட்டத்தில் இளங்குமரனின் வயதையொத்த வேறுசில சிறுவர்களும் அச்சத்துடன் கைக்கட்டிக்கொண்டு சிலை போல ஆடாமல் அசையாமல் நின்றிருந்தான்கள். மோடிமஸ்தானுடைய பார்வை கூர்மையாக இருந்தது. அவன் இளங்குமரனை சற்றுநேரம் உற்றுப் பார்த்தவன் மெல்ல அவனை நோக்கி கைநீட்டிச் சொன்னான்.

“தம்பி.. நீ கெளம்பு..”

சொல்லிவைத்தது மாதிரி மற்ற எல்லோரும் இளங்குமரனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஸ்கூலு லேட்டு ஆச்சுங்க.. எப்படியும் உள்ள வுட மாட்டாங்க. நான் பாம்பு சண்ட பாத்துட்டு போறேனே”

“அதில்ல தம்பி.. நீ நிக்கக்கூடாது.. பாம்பு பேஜார் ஆவுது. ஒனக்கு புரியாது. கெளம்பு.. ஜல்தி ஜாவ்”

அங்கிருந்து நகர்ந்து போக மனமே இல்லாமல் அந்தக் கீரிப்பிள்ளையைப் பார்த்தபடியே கூட்டத்தைவிட்டு விலகி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தான்.

‘என்னை மட்டும் ஏன் அந்த ஆளு அனுப்புச்சாரு? வேற சின்ன பசங்கலாம் இருந்தானுங்களே?’

அவன் நினைப்பில் இன்பசேகரன் வாத்தியார் கையில் பிரம்புடன் வந்து நின்றார்.

*

“தொழிற்சாலை லாக்அவுட் முடிஞ்சுதுனா.. திருப்பி பாம்பே போற ஐடியா சுத்தமா இல்லையா மச்சான்?”

“ஆமா மாப்பிள.. எப்பயும் அடுத்தவனுக்கே வேலப் பாத்து பாத்து மனசு அத்துட்டு.. இங்கனயே காலத்த ஓட்டுறது நல்லதுன்னு ஒரு தீர்மானத்த பண்ணிபுட்டேன்”

“அவசரப்பட்டுட்டீங்களோன்னு நெனைக்கிறேன்.. சிட்டி வாழ்க்கையில நாளைக்கு பிள்ளைங்க எதிர்காலம் நல்லா இருக்குமே. நல்ல படிப்பு, பழக்க வழக்கம்னு கொஞ்சம் மாறிக்குவாங்களே..”

“கடன் வாங்குற நெலம வாறதுக்கு முங்கூட்டி கெளம்பிறணும்னு இருந்துச்சி பாத்துக்கோங்க. அது நல்லதுலா?”

சொல்லிவிட்டு சிறுபுன்னகை புரிந்தார். கிருஷ்ணவேணி பழனியின் தட்டில் மேலும் ஓர் அவித்த முட்டையை வைத்துவிட்டு சண்முகத்தின் தட்டிலிருந்த சுடுசாதத்தில் ரசத்தை ஊற்றினாள். பிறகு இருவரின் பேச்சையும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தாள்.

“இங்க மெட்ராஸ்ல எதுவும் ட்ரை பண்ணனும்னு தோனலையா? நான் ஹெல்ப் பண்றேன்”

“ஊஹூம்.. அப்படியொன்னும் தோனல மாப்பிள”

மீண்டும் சிறு அமைதி.

“ம்ம்.. சரிதான். ஒங்களுக்கு தெரியாத விபரமும் இல்ல.. எப்படியும் விவசாயத்துக்குள்ள கால வச்சாச்சு.. அது ஓகே.. ஆனா.. இந்த அரசியல் வேணுமா? சிவசு லெட்டர் எழுதிட்டாங்கறதுக்காக கேக்கல.. நம்ம குடும்பத்துக்கு அது ஒத்துவரும்னு எனக்கும் படல..”

“நான்.. எந்தக்கட்சிய சார்ந்தும் வேலபாக்க மாட்டேன்.. எனக்கு அதுல சுத்தமா நாட்டமில்ல. ஆனா ஊரோட நல்ல காரியங்கள கொஞ்சம் முன்னே நின்னு பாத்துக்கிட்டா எதிர்காலத்துக்கு ஒதவும். அதயே ஒரு பதவிய ஏத்துக்கிட்டு செஞ்சோம்னா.. நல்ல மதிப்பு பாத்துக்கோங்க.. ஆல்ரெடி.. வருஷா வருஷம் கொடைக்கி சொந்த ஊருல இல்லையேன்னு ஒரு ஏக்கமும் இருந்துச்சி.. வந்து சேர்ந்துடுன்னு சுடலையாண்டியே கெனாவுல வந்து கட்டள போட்டிருச்சி.. தட்ட முடியல.. நெலமையும் அந்த போக்குலதான கொண்டாந்து நிப்பாட்டியிருக்கு..”

“ஏண்ணே.! இதோ நாங்க இங்கேயே இல்லையா? பாசம் விட்டுப்போச்சா? இல்ல சாமி மேல மதிப்பு மாறிப்போச்சா? எல்லாத்துக்கும் மனசுதான் கராணம். நம்ம புள்ளைங்க எதிர்காலத்த மனசுல வச்சிதான் அத்தான் பேசுறாங்க”

பேச்சுக்கு நடுவே புகுந்து தன்னுடைய அபிப்பிராயத்தையும் உள்ளது உள்ளபடியே தன் அண்ணனிடம் சொன்னாள் கிருஷ்ணவேணி.

“அதில்லம்மா.. ஒங்க கத வேற”

“என்ன கத? எல்லாம் ஒன்னுதாண்ணே”

“சாமி வாக்கும்மா.. அதுமட்டுமில்ல.. சொந்த நெலத்துல விவசாயம் பாக்குதேனே.. இப்ப எனக்கு ஒரு நிம்மதி இருக்குலா.. அதுதான முக்கியம்?”

இதற்கு சண்முகத்தாலும் எதிர் பதில் ஒப்ப முடியவில்லை. உரையாடல் பட்டென்று நின்றுவிட்டது போல இருந்தது. இருவருமே சாப்பாட்டில் மும்முரம் காட்டினார்கள். முடிந்ததும் எழுந்து கை கழுவிவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். உணவுப் பாத்திரங்கள் அத்தனையும் சமையல்கட்டிற்குள் திரும்பியது. கிருஷ்ணவேணி சமையல் உள்ளில் உட்கார்ந்து தன் உணவை அங்கேயே சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து மீண்டும் தொடங்கிவிட்ட பேச்சில் கலந்துகொண்டாள்.

“சரியான பண முடை மாப்பிள.. இப்ப தந்து ஒதவுங்க. அடுத்த அறுப்புல திருப்பிருவேன். ஒங்க தங்கச்சியோட பயம் ஞாயமானதுதேன். ஆனா அவளுக்கு சொல்லிப் புரிய வைக்கறதுக்குள்ள உசுரு போயி உசுரு வருது. அதேன்.. ஒங்கள நேருல கண்டுக்கிட்டு விஷயத்த வெலாவாரியா பேசிரலாம்ன்னு கெளம்பி வந்துட்டேன். இந்த வாய்ப்பு இப்ப போச்சின்னா போனதுதான். மறுவாட்டி எப்பயும் வரவே வராது. இப்ப யூஸ் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு ஆளா ஊருக்குள்ள ஆயிறலாம்”

“ம்ம்.. ஆனா கொடைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அத எப்படி இதுல முடிச்சி போடுறீங்கன்னு புரியல மச்சான்”

“நம்ம குடும்பத்துக்குத் தான முத கெடா வெட்டு உரிமை.. மால மரியாதை.. எல்லாம்? எங்கயோ கெடந்துகிட்டு கணக்கு பண்ணி பணத்த அனுப்பி வுட்டுட்டு அவங்களா ஒரு கெடாவ வாங்கி வளத்து அத சாமிக்கு பலி குடுத்து படையல் போடுறதுக்கும்.. நாமளே இருந்துருந்து செய்யிறதுக்கும் உள்ள வித்தியாசந்தேன். அதுமட்டுமில்ல..”

சற்று நிதானித்துவிட்டு தொடர்ந்தார். குரலில் தயக்கம் இருந்தது.

“ஒங்க சொந்த ரத்த வழியில ஆரம்பிச்சது இந்த முறைப்பாடு.. அதுவும் ஒங்க முப்பாட்டனாரு.. அவுரு கையிலதான் சாமி வாக்கு நின்னுச்சி. இது ஊரு முழுக்க தெரியும். சாமியும் ரொம்ப துடி பாத்துக்கோங்க.. இந்த சமயம் மட்டுமாச்சும் நீங்க குடும்பத்தோட வந்தாவணும். ஒங்க கொள்கைய நான் மதிக்கிறேன். நம்ம பெரியாரு.. இல்லன்னு சொல்லுற சாமி கணக்கு வேற மாப்பிள.. இது வேற..”

சண்முகம் உதடு பிரியாமல் சிரித்தார். பழனிக்கு சண்முகத்தைப்பற்றி நன்றாகத் தெரியும். அவரை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்திவிட முடியாது. ரொம்பவே அழுத்தமான ஆள்.

“என்னையவே அரசியல் பேச வைக்கறீங்களோ மச்சான்?”

“இல்ல. நான் வாதம் பண்ணல. குடும்பம் தழைச்சி வேர் புடிக்கணுமேன்னு ஒரு நெஞ்சு தவிப்பு.. அம்புட்டுதான். ஒருவாட்டியாவது நம்ம மொத்த குடும்பமும் கோயில் கொடையில தாத்தன் முன்னாடி கும்புட்டு எழுந்தா நல்லதுதான..? அதும் இப்ப வாங்கின கருப்பு கெடா.. சுடலையாண்டி சாமி எங்கெனாவுல வந்து தெசை சொல்லி.. நானாவே அந்த தெசைவழிக்கி போயி வாங்கிட்டு வந்தது. அட..! நான் எங்க வாங்குனேன்? அந்தக் குட்டியாவே என்னைய பாத்து தாவியோடி பக்கத்துல வந்து நின்னதுலா.. தூக்கி சோதிச்சு பாத்தேன்.. ஒத்த வெள்ள முடியில்ல பாத்துக்கோங்க மாப்பிள.. சாமி வாக்கு கணக்குல அது அதிசயந்தான். யாரு எந்த தெசையில நின்னாலும் அவரு பார்வையில இருந்து எதுவுமே தப்ப முடியாதுல்லா.. அந்தக் கெடா என்னா வேகமாட்டு வளருது! இப்பவே என் இடுப்பு உசரத்த தொட்டுருச்சே.. நாளு ஆக ஆக அதும் மொகம் பாக்கணுமே.. யய்யா.. கெடா மொகமாவே இல்ல.. படர்ந்து விரிஞ்சி தாடிலாம் காடா வளந்துபோயி மனுஷன் மொகம் கணக்காலா இருக்கு.. ஊரு வீதியெல்லாம் சுத்தி சுத்தி வந்துகிட்டு கெடக்கு.. எங்கன போனாலும் நல்ல தீனி போடுதாவ.. பச்ச எலதழையா கொட்டுது.. இன்னொன்னுஞ் சொல்லணும் ஒப்புக்குன்னா ஒடங்காயி.. ஒன்னு தொடலயே.. மேய்ச்சல் ஆடுகதான் அதையெல்லாம் அசைபோடுதுக.. இது சீண்ட கூட கெடையாது.. இந்த சாமி கெடா தூக்கிட்டு வந்த குட்டிலருந்தே என்னைய கட்டிப்போட வுடலயே.. கயித்த அத்துகிட்டு.. பாஞ்சிருச்சி.. ஒரே வீராப்புதான்.. அப்போவே புரிஞ்சு போச்சு.. இது வேற யாரோ நம்மகிட்ட திரும்பி வந்த கணக்கு.. செவசுவும் அதையே சொன்னா.. அந்த ஒரு விஷயத்துல எங்களுக்குள்ள அப்படியொரு ஒத்தும”

“அதையெல்லாம் முன்னையே எழுதி இருந்தீங்களே”

ஆமாம் என்பதாக தலையை ஆட்டிக்கொண்டார் பழனி. சண்முகம் மனைவியைப் பார்த்தார்.

“நீ என்னம்மா சொல்லுற?”

“கொடைக்கி தான? போயிட்டு வரணும்னுதான் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருக்கு. ஆனா நீங்களும் கூட நிக்கணும். எங்கள மட்டும் ரயிலு ஏத்தி அனுப்பறதா இருந்தா வேணாம்”

சண்முகம் தன் மோவாயைத் தடவிக்கொண்டார்.

“சரி.. அதுக்கு நாளு இருக்கு. பாத்துக்கலாம்”

இதைப் பொதுவாகச் சொன்னார். மேற்கொண்டு முக்கிய விவகாரத்தைப் பற்றி பழனியாகவே தொடரட்டும் எனக் காத்திருந்தார்.

“பாருங்க மாப்பிள.. நான் எம்மனசுல உள்ளத தெளிவாவே சொல்லிடுதேன். ஊருக்குள்ள சரள கல்லு பரப்பி சாலையை அகலப்படுத்தறது. புது பாதைய உருவாக்குறது. சின்னதா பஸ் ஸ்டாப்பு ஒன்னு கட்டிவுட்டு முறை பண்ணுறது. நீர் நிலைக்கு பாசனத்துக்கு ஏரி கம்மாவ தூர் எடுக்கறது. தனி கக்கூஸூ லைனு போடறதுக்கு கழிவுக்குழாய் பதிச்சு மொத்தமா ஒரு எடத்துல எறக்கிவுட்டு.. அதையே உரக்கம்பெனிக்கு திருப்பி வுடுறதுக்கு வண்டி ஏற்பாடு, ஆள் யோசனை போக்குவரத்துன்னு கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சம்னா.. ஒரு திருப்தி இருக்கும்.. இதக் கேளுங்க மொதல்ல.. சுடலையாண்டி கோயிலு தலமுறை தலமுறையா கூரை இல்லாம மொட்டையாவே கெடக்கு.. காலத்துக்கும் அந்த ஒத்த பனைதான் அடையாளம்னு இனியும் இருக்கக்கூடாதுலா? ஒரு கூரைய இழுத்து நீட்டி கட்டுறதுக்கு பணம் வசூல் பண்ணனும்.. அத நான் பாத்துக்கிடுவேன்.. எம்பொறுப்பு.. அறநிலையத்துக்குமே எழுதியும் கேக்கலாம். மொற இருக்கு.. அதுக்குன்னு செல வழிக.. நீக்குப்போக்கு எல்லாம் எனக்கு கொஞ்சம் தெரியும். இம்புட்டுக்கும் தொணைத் தலைவர் பதவி நல்ல ஒத்தாசையாட்டு இருக்கும். இல்லன்னா வெறும் தர்ம கணக்கு மட்டுந்தேன் மிஞ்சும்.. ஆல்ரெடி.. இருந்த செல்வாக்கும் அங்கனேயே இருக்குதுங்க மாப்பிள.. எனக்கே அது ஆச்சரியந்தேன் பாத்துக்கோங்க. அத வீணடிச்சுற வேணாம்னு மனசுல கெதி கெடக்கு. எல்லாஞ்சரியா வரும்ன்னும் ஒரு நம்பிக்கையும் இருக்கு”

“இதத்தான் மாற்றம்னு லெட்டர்ல எழுதி இருந்தீங்களா?”

“அத நான் அப்படித்தான் பாக்குதேன். காலையில ஒன்னு சொன்னீங்க பாருங்க.. எல்லாம் நேரங்காலந்தான்னு.. அத சரிங்குதேன்.. ஆனா.. செவசுக்கு அதெல்லாம் மனசுக்கு ஆவல.. அவளோட வெம்பாடு புரியது.. நெலமைய ஒத்துக்கிட்டு ஏத்துக்குற மனப்பக்குவம் இன்னும் வந்து சேரல..”

“ரொம்பவே பயப்படுறா.. அது நார்மல் தான மச்சான்?”

“சரி.. நீங்க என்ன சொல்லுதீங்க?”

சண்முகம் இன்னொருமுறை மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். பழனியிடம் திரும்பி தலையை மையமாக அசைத்துக்கொண்டார்.

“சரி.. ஒங்க விருப்பம். நான் பணத்த ஏற்பாடு பண்ணுறேன். பதவி, பொறுப்பு எல்லாம் ஓகேதான். கட்சி அரசியலுக்கு உள்ள மாட்டிக்காதீங்க. அது ஆள முழுங்கிடும். ஊருக்காக பண்ணுற காரியங்கள ரெண்டாவதா வச்சுக்கங்க. குடும்பத்த முக்கியமா பாருங்க. ஒன்னு தப்பினாலும் எல்லாமே தப்பாவும்.. எப்பவும் மாதிரி லெட்டர்ல அபிப்பிராயம் கேட்டுக்கங்க.. கலந்துக்கங்க.. அது மாறிடாம பாத்துக்கோங்க”

உற்சாகத்தில் எட்டி அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கினார் பழனி. அதில் வலுவும் ஆனந்தமும் ஒருசேர இருந்தது.

“செவசுகிட்ட நான் பேசுறேன். பதில் லெட்டர் எழுதி உங்க கையிலேயே குடுத்து வுடுறேன். கொஞ்சம் தாம்தூம்ன்னு சத்தம் போடத்தான் செய்வா.. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ஒங்கள நாங்க புரிஞ்சுக்கிட்டோம்”

பழனியின் முகத்தில் சிரிப்பு முழுமையாக மலர்ந்தது.

“அப்போ.. நான் இன்னைக்கே பொறப்படுதேன்..”

“இருந்து போவலாமே..?”

“இல்லல்ல.. ரொம்ப தாமசம் பண்ணிறக்கூடாதுலா..”

*

எழும்பூர் ரயில் நிலையம். சண்முகம், பழனி இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். கிருஷ்ணவேணி வந்திருக்கவில்லை. இளங்குமரன் நிலையத்தைச் சுற்றி தன் பார்வையை விரட்டி அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி அருகில் நின்று கொண்டிருந்தான். அங்குமிங்கும் குடும்பம் குடும்பமாக ஆட்கள் சிதறலாக நின்றுகொண்டிருந்தார்கள். கனமான அகன்ற இரும்பு தள்ளுவண்டிகளில் சதுரவடிவில் இறுக்கிக்கட்டப்பட்ட மூட்டைகளாக ஏதேதோ சரக்குகள் போயின.. வந்தன. ஒலிபெருக்கியில் பயண நேர அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன. அவை உற்றுக்கேட்டால் மட்டுமே புரியும் வண்ணம் நிலையம் முழுவதும் பிரம்மாண்டமாக எதிரொலித்தன.

நடைபாதைகளில் சுமைக்கூலிகள் பரபரப்பாக இருந்தார்கள். பயணிகளின் பயணச்சுமைகளை ரயிலுக்குள் ஏற்றி உரிய இருக்கைகளில் இறக்கி வைத்துவிட்டு கூலியைப் பெற்றுக்கொண்டார்கள். சிலர் குரலை உயர்த்தி பேரம்பேசி அடம்பிடித்தார்கள். கசகசவென்று மனிதச் சந்தடி இருந்துகொண்டே இருக்கிற அவ்விடத்தில் ஓர் ஈரப்பதம் காற்றில் கனம் கூட்டியிருந்தது. அதற்கொரு மணம் இருந்தது. அதில் உழைப்பின் உப்புவியர்வை வீச்சம் கலந்திருந்தது.

உறவுகளை மட்டுமல்ல உணர்ச்சிகளையும் சுமந்து திரியும் இந்த ரயில்வண்டி அதிசயமான ஒரு கண்டுபிடிப்புதான் என்பதை இளங்குமரன் இன்னும் வளரவளரத் தெரிந்துகொள்வானாக இருக்கும்.

அவனைப் பொருத்தவரை பள்ளிக்கூடம் போகும்போது வழிமறித்து குறுக்கே நின்றுகொள்ளும் சரக்கு ரயில்வண்டிக்கும் இந்த ரயில்வண்டிக்குமான வித்தியாசம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினான். அப்பாவிடம் கேட்கலாம். அதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுப்பார். அது என்னவாக இருக்கும் என்றும் யோசித்தான்.

“அப்பா.. ஒன் பாத்ரூம் போவணும்”

“வாங்க மருமகனே..”

பழனி அவனை வண்டிக்குள் தூக்கிவிட்டார். பின்னாலேயே அவரும் ஏறிக்கொண்டார். அவன் குழப்பமாக அப்பாவைப் பார்த்தான். அவர் சிரித்தபடியே தலையை அசைத்தார். பழனி, பக்கவாட்டில் இருந்த கழிவறைக் கதவை அவனுக்குத் திறந்துவிட்டார். கதவு மூடிக்கொண்டது. அச்சத்துடனே சிறுநீர் கழித்தான். அங்கே இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒருமுறை தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். பள்ளிக்கூடத்தில் இருக்கும் குடிநீர் குழாயைப் போன்றே அங்கே ஒரு தண்ணீர் குழாய் இருந்தது. அந்தக்குழாய் அவனுடைய சிறிய விரல்களுக்கு பயன்படுத்த இறுக்கமாக இருந்தது. அதிலிருந்து வெளியேறிய தண்ணீர், நூலென மெலிந்துபோய் வடிந்தது. அப்போது திடீரென்று வண்டி அசைந்தது போல இருக்கவே.. பதற்றத்துடன் கதவைத் திறந்து வெளிப்பட்டான்.

மாமா தயாராக ஒரு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். அவனை வாசல்வரைக்கும் நடத்திப்போய் தூக்கி கீழே நடைமேடையில் மெதுவாக இறக்கிவிட்டார். வண்டி பலத்த ஒலி எழுப்பி ஜிவுக் என்று நகர்ந்தது. மிகச்சரியாக இருந்தது. அவனுடைய இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அச்சத்தோடு அப்பாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.

“நல்லா படிங்க மருமகனே.. ஊருக்கு போயி லெட்டர் போடுதேன்”

இளங்குமரன் கையை ஆட்டி டாட்டா காட்டக்காட்ட அவனுடைய மாமாவும் கையசைத்தபடியே புள்ளியாகி விலகிப்போனார். ரயில்வண்டியின் பின்பக்கத்தில் பெரிய அளவில் ஒரு பெருக்கல் குறி போடப்பட்டிருந்தது. ‘சரக்கு வண்டியில்’ இருப்பதைப் போல் கடைசியில் அறை உள்ள ஒரு பெட்டி இதில் இல்லாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“ஏன்ப்பா.. அந்த எக்ஸ் போட்டுருக்காங்க?”

“அதுதான் கடைசி.. அதுக்கப்புறம் வேற ரயில்பொட்டி இல்லைங்கறதுக்கான அடையாளம் அது”

அவனுடைய மனம் சமாதானம் ஆகவில்லை. அது அவனுடைய முகத்தில் தேங்கி இருந்தது.

சண்முகம் இளங்குமரனின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்து போகவேண்டிய இடத்தின் அடையாளம் சொல்லி ஒரு ஆட்டோ பிடித்தார். க்ளிங் என்ற சத்தத்துடன் கட்டணக் கருவியை மடக்கிவிட்டுக்கொண்டு போய்சேர வேண்டிய தூரக்கணக்கையும் பயணத்துக்குரிய கட்டணக் கணக்கையும் தொடங்கியபடி ஆட்டோ கிளம்பியது.

“மாமா காலையில ரொம்ப சோகமா இருந்தாரு. ஆனா.. இப்போ சந்தோஷமா போறாரு. என்னப்பா டிஃபரன்ஸூ?”

“காலையில நீ ஸ்கூலுக்கு போவும்போது ரொம்ப வெயிலா இருந்துச்சி. இப்ப ஸ்கூல்ல இருந்து திரும்பி வந்தப்ப வெயிலு போயிருச்சி.. ஆனா இன்னும் வெளிச்சம் போகலல்ல.. அந்த மாதிரி டிஃபரன்ஸ் தான் இதுவும்”

அந்த பதில் அவனுக்குப் புரிந்தது போலத்தான் இருந்தது. யோசிக்க அவகாசம் தேவைப்பட்டது. அவனை அவர் அப்படி பழக்கியிருந்தார். அவன் மௌனமாக வெளியே வேடிக்கைப் பார்த்தான். இடதுபக்கம் தண்டவாளங்களை பார்வையிலிருந்து கீழே தள்ளிவிட்டு மேலே மேம்பாலத்தில் ஆட்டோ ஏறிக்கொண்டிருந்தது. அவை ரயில்பெட்டிகள் இல்லாத காலியான தண்டவாளங்கள்.

“அப்பா.. லாஸ்ட் வீக் மாதிரியே இன்னைக்கும் ஸ்கூலுக்கு லேட் ஆயிருச்சி. இந்த மந்த்ல இது மூனாவது வாட்டிப்பா. இந்தவாட்டி பி.டி மாஸ்டர்கிட்ட பட்டக்ஸ்ல அடிவாங்குனேன். கூட்ஸ் ட்ரெயின் நடுவுல நின்னுருச்சி.. அதான் ரீசன். இத சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க”

“நீதான் ரிக்-ஷா வேண்டாம்னுட்ட.. அதுலனா.. ராயபுரம் ப்ரிட்ஜ் வழியா சீக்கிரமா டைமுக்கு போயிடுவ. சொன்னா கேக்க மாட்டேங்கற.. அடம் புடிக்குற”

“அப்டிலாம் இல்லப்பா..”

இளங்குமரன் அந்தப் பேச்சை மேற்கொண்டு வளர்க்காமல் சாதுர்யமாக துண்டித்துக்கொள்ள தெரிந்து வைத்திருந்தான்.

“அவ்ளோ தானா? வேற இருக்கா?”

“இன்னொன்னும் இருக்குப்பா..”

சண்முகம் அவனைத் திரும்பி பக்கவாட்டில் பார்த்தார். அதில் சொல்லு என்பதாக ஒரு பார்வை இருந்தது.

“ஸ்டான்லி ஹாஸ்பிடலுக்கு எதிரே ரோட்டோரமா பாம்புக்கும் கீரிப்புள்ளைக்கும் சண்டை விட்டுக்கிட்டு இருந்தாங்க. அங்க போயி எட்டிப்பாத்தேன்ப்பா. என்னைய மட்டும் போவச் சொல்லிட்டாரு அந்த ஆளு. அது ஏன்ப்பா?”

“அங்கெல்லாம் நின்னு வேடிக்கப் பாக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல குமரா? அப்படியெல்லாம் கூட்டமா வித்த காட்டுற எடத்துல நிக்கக்கூடாது”

“நான் பாம்பு சண்ட பாக்கணும்னு நெனைச்சேன்ப்பா..”

“இத நீ ஸ்கூல்லருந்து வந்தவுடனே சொல்லல? இப்ப எதுக்கு சொல்லுற?”

“மாமா இருக்கும்போது சொல்லுறதுக்கு பயமா இருந்துச்சிப்பா”

“உனக்குத்தான் உங்க மாமாவ புடிக்குமே.. அப்புறம் என்ன பயம்?”

“புடிக்கும். ஆனா வெக்கமா இருந்துச்சிப்பா”

“பயமா? வெக்கமா? கரெக்டா சொல்லு குமரா”

“தெரியலப்பா”

ஆட்டோக்காரர் திரும்பிப் பார்த்து இளங்குமரனிடம் கேட்டார்.

“இன்னா தம்பி படிக்குற?”

“சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்குறேன் ஆட்டோக்காரர்”

“ஸார்.. நீங்க இன்னா வேல ஸார் பாக்குறீங்கோ?”

“டைலரா இருக்கேன். கட வச்சிருக்கேன். எதுக்குப்பா கேக்குற?”

“ல்ல.. ஸார். எக்மோர்தான் எனக்கு சவாரி ஸ்டாண்டு.. வூடு எல்ஃபண்ட் கேட்ல தான் இருக்குது. எனக்கும் ஒரு பையன் கீறான் ஸார். செகண்ட் கிளாஸ் படிக்குறான். நான் எவ்ளோ சவாரி இட்னு போயிருக்கன் வந்துக்கறன்..! நீங்க.. யாரோ சொந்தக்காரங்கள ட்ரெயின் ஏத்தி வுட்டு வர்றீங்கன்னு தெரிது. ஆனா.. இவ்ளோ ஜாலியா ஃபிரண்டு மாரி பேசிக்குனு வர்ற அப்பா புள்ளய மொத தாட்டி பாக்குறன் ஸார்.. சின்ன பையன்னு நெனைக்காம… பொறுமையா அவனுக்கு ஒரு பதில் சொல்லிக்கினே வர்றீங்களே ஸார். இன்னிக்கு புதுசா ஒன்னு கத்துக்கிட்டேன் ஸார்..”

சண்முகம் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார்.

“ஒங்க கட எங்க ஸார் இருக்குது?”

“எங்கள டிராப் பண்ணப் போறல்ல.. அதே ஏரியாத்தான்.. சின்ன மார்க்கெட் ரோட்ல இருக்கு”

“கட பேரு ஸார்?”

சண்முகம் தன் கடையின் பெயரைச் சொன்னார்.

“எம்.ஸி ரோடுக்கா வரும்போது.. கட்டாயம் ஒங்க கடக்கி வந்துர்றேன் ஸார்”

“வாப்பா.. ஒன் பையனையும் கூட்டிக்கிட்டு வா”

“டாங்ஸ் ஸார்”

ஆட்டோ தங்கசாலை மணிக்கூண்டிலிருந்து வளைந்து இடப்பக்கம் மூலக்கொத்தளம் மேம்பாலத்தை நோக்கி முறுக்கிக்கொண்டு திரும்பி ஏறியது. இடப்பக்கம் இருந்த கிருஷ்ணா திரையரங்கத்தில் ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேரக்காட்சிக்காக சொற்ப ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். வலப்பக்கம் இருந்த வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் மக்களால் பரபரப்பாக இருந்தது. நிறைய பேருந்துகள் நின்றிருந்தன. அவற்றில் ஆட்கள் அடைப்பட்டிருந்தார்கள். வானம் தன் ஒய்யாரத்தை கொஞ்சங்கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தது. கடைகளில், தள்ளுவண்டி வியாபாரங்களில், சாலையில் ஓடும் வண்டி வாகனங்களில் என, யாவற்றிலும் முகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நகரத்தின் முகத்தில் ஜிகினா கூடிவிட்டிருந்தது.

மேம்பாலத்தின் உச்சியிலிருந்து ஆட்டோ இறங்குமுகமாக ‘பென்ஸில் ஃபேக்டரி’ பேருந்து நிறுத்தம் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தபோது சண்முகத்தின் பார்வைக்கு பாலத்தின் கீழே மேற்கு நோக்கி இரண்டிரண்டு ஆரஞ்சு நிறக்கோடுகளாக வானின் மிச்ச வெளிச்சம் ஒளிர நீளநீளமாகக் கிடக்கும் இரும்புத் தண்டவாளங்கள் புலப்பட்டன. அந்திவானில் இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தைக் கலந்து கரைத்து ஊற்றிவைத்தது போல இருந்தது. அதையேதான் இளங்குமரனும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தான்.

“அப்பா..!”

“நல்லாருக்குல்ல?”

“அதில்லப்பா.. இன்னொன்னு கேக்கணும்”

“இன்னும் எத்தன தான் வச்சிருக்க குமரா?”

“இந்த ஒன்னு மட்டும்தான்ப்பா”

அப்போது ஒரு மின்சார ரயில்வண்டி அப்பாதையில் சப்தமெழுப்பியபடி பாம்பைப்போல வளைந்து ஊர்ந்து போனது..

“இந்த ட்ரெயின் எங்கேப்பா போவும்?”

அதற்கு ஆட்டோக்காரர் பதில் சொன்னார்.

“இது திருவொத்தியூர் ரூட்ல அப்டியே கும்மிடிபூண்டிக்கே பூடும் தம்பி”

“ரொம்ப தூரமா ஆட்டோக்காரர்?”

“ஆமா.. தம்பி”

“தேங்ஸ்”

அவர் ஸ்டியரிங்கை உறுதியாக பற்றியபடி இறக்கம் நோக்கி விரையும் ஆட்டோவின் வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டார். அவரின் தலை இடவலமாக அசைந்துகொண்டதில் ஓர் உற்சாகம் தென்பட்டது.

“நீ கேக்க வந்தத கேளு குமரா”

“இன்னைக்கு கூட்ஸ் ட்ரெயின்ல.. பொட்டிக்கு நடுவுல ஏறி அந்தப்பக்கம் இறங்கறதுக்கு ஒரு அண்ணன் ட்ரை பண்ணப்போ.. திடீர்னு ட்ரெயின் கெளம்பிருச்சி.. அவரு அப்படியே அந்த ட்ரெயின்லயே போயிட்டாருப்பா.. அதுவும் கும்மிடிபூண்டி தான் போவும்னு பேசிக்கிட்டாங்க..”

“இதுக்குத்தான் அந்த மாதிரியெல்லாம் நீ ட்ரை பண்ணிடக்கூடாதுன்னு ஒன்கிட்ட ஒவ்வொருவாட்டியும் அப்பா சொல்லுறேன்.. உனக்கது புரியுதா?”

“புரியுதுப்பா.. எனக்கெல்லாம் பயம். நான் ட்ரை பண்ண மாட்டேன்”

சண்முகம் அவனுடைய தோளில் கைப்போட்டுக்கொண்டார். இளங்குமரன் தொடர்ந்தான்.

“இப்போ.. மாமாவ ட்ரெயின் ஏத்தி விட்டோம்லப்பா.. அவரு ஊருக்கு போறதுக்கும்.. அந்த அண்ணன் கூட்ஸ் வண்டிலயே மாட்டிக்கிட்டு ஒரு ஊருக்கு போறதுக்கும் என்னப்பா டிஃபரன்ஸூ? அந்த அண்ணாவ அவங்க வீட்டுல தேடுவாங்கல்லப்பா?”

ஆட்டோக்காரர் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த வட்டக் கண்ணாடியை லேசாகத் திருப்பி ஒழுங்கமைத்து அதன்வழியே இளங்குமரனைப் பார்த்து சிரித்தார். அதை அவன் கவனிக்கவில்லை. சண்முகம் சற்றுநேரம் தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தான். ஏதோ யோசனையோடு வெளியே பார்த்தபடியே அவனுக்குப் பதில் சொன்னார்.

“ஒரு அஞ்சு அடி தூரத்தை நின்னு தாண்டி போறதுக்கு பொறுமை இல்லாத அந்தப்பையன் எதோ ஒரு சரக்கு ட்ரெயின்ல மாட்டிக்கிட்டு எங்கயோ ஒரு ஊருக்கு ரொம்ப தூரம் போயிட்டான்.. அவன் கணக்கு தப்பாயிருச்சி. ஆனா அறுநூறு கிலோமீட்டரு தொலைவுல இருந்து ஒரு வேலையா வந்துட்டு திரும்பிபோற ஒன் மாமாவுக்கு.. இது எத்தன நாளு பயணம்? என்ன விஷயத்துக்கான பயணம்? அந்தப் பயணம் எவ்வளவு தூரம்? அதுக்கு எவ்வளவு நேரம்னு ஒரு கணக்கு இருக்குது குமரா.. ஆனா.. அது அவரோட கணக்கு.. அப்படிதான் பயணத்துக்கு ஏத்த மாதிரி.. பயணத்தோட அர்த்தமும் மாறிடும்.. இதுல அதான் டிஃபரன்ஸ்”

“ஓஹோ..! அப்போ அந்த அண்ணன்?”

“அது காலையில நடந்தது தான?”

“ஆமா”

“அவரோட வீட்டுக்கு அவரு எப்பயோ திரும்பி போயிருப்பாரு”

“அப்டீனா.. அடுத்தவாட்டி அவரு ஏறிக்குதிக்க மாட்டாருலப்பா?”

“அது தெரியல குமரா. மனுசங்க எப்போ என்ன யோசிப்பாங்க.. என்ன மாதிரி கணக்குப் போடுவாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது”

மேம்பாலத்தின் இறக்கத்தில் வலப்புறம் இருந்த வட்டவடிவ கருஞ்ஜல்லி நடைபாதைத் திடலை ஒட்டியணைத்தபடி சீரான ஒரு வேகத்தில் ஆட்டோ வளைந்து திரும்பியபோது வானம் சட்டென்று தன் வெளிச்சத்தை முழுமையாக இழந்துவிட்டு கருநீலத்தை பூசிக்கொண்டது.

***
கவிதைக்காரன் இளங்கோ – கணையாழியின் துணையாசிரியராகவும் யாவரும் பதிப்பகத்தில் Content Editor-ஆகவும் பணி புரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் என இரு சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி இரவு, கோமாளிகளின் நரகம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும் திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular