Friday, March 29, 2024
Homesliderதிரை

திரை

இதயா ஏசுராஜ்

1

யற்காட்டிலிருந்து அவசர அவசரமாகத் திரும்பியவன், விஜயாவைப் புடவை மாற்றிக்கொண்டு உடனே புறப்படுமாறுச் சொன்னதும், சினிமாவுக்குதான் என்று தெரிந்து விட்டது. எந்த தியேட்டரில் அவனது வீரத்தலைவரின் எந்த படம் போட்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அதான் காலையிலிருந்துத் தலைகீழாக ஆடிக்கொண்டிருந்தானா என நினைத்தாள்.

கல்யாணமான இந்த மூன்று மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீரத்தலைவரின் படங்களை அவனுடன் பார்த்திருந்தாள். ஒவ்வொரு முறையும் அவஸ்தையோடு நெளிந்து இருக்கையில் உட்கார பிடிக்காமல் சிறுநீர் வருகிறது என அடிக்கடி எழுந்துச் சென்று விடுவாள். எந்த காட்சியையும் தவற விடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருப்பவன் தலையை மட்டும் அசைத்து அனுமதித்தவாறு இருப்பான்.

தான் உயிருக்கும் மேலாக மதிக்கும் வீரத்தலைவரின் திரைப்படத்தை, வாழ்நாளில் எப்பொழுதும் பார்க்கப் போவதில்லை என்று அவள் அவளைப் போலவே முதல் திலகத்தின் ரசிகையான இன்னொரு தோழியிடம் செய்து கொடுத்திருந்த சத்தியத்தை தர்மசங்கடத்துடன் மீறிக்கொண்டிருக்கிறாள் என்னும் உண்மையை நீலமேகம் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அவள் முதல் திலகத்தின் தீவிர ரசிகையாக இருப்பாள் என்று அவன் கற்பனைச் செய்தும் பார்த்ததில்லை என்பதால் இப்பேரிடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கலக்கமுற்றான். கல்யாணத்துக்கு முன்பு இதைப் பற்றி எப்படி யோசிக்காமல் போனோம் என்று வருந்தினான். தான் நினைத்த மாதிரி படித்த பெண்ணாகவும், செக்கச் செவேலென்று அழகுடனும் இருந்ததால் அவளைப் பார்த்தவுடன் சம்மதம் சொல்லி விட்டான். ஆனால் இப்படி கொள்கை ரீதியாக எதிரி முகாமைச் சேர்ந்தவளாக இருப்பாள் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திடவில்லை. இதை தற்செயலாகவே அவன் கண்டுபிடித்தான்.

ஒரு நாள் அவள் ஏரிக்கு குளிக்கச் சென்றிருக்கும் போது பீரோவுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தவன், அவளது திருமணப் பட்டுப் புடவையின் உள்ளே எதுவோ துருத்திக் கொண்டிருப்பது போல் கண்ணில் படவே அதை வெளியில் எடுத்தான். இரண்டு குயர் அளவுக்கு மிக பெரிதான நோட்டு புத்தகம் அது. அதன் முதல் பக்கத்தில் சொப்பன மாளிகை திரைப்படத்தில் முதல் திலகம் ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டிருக்கும் அழகிய வண்ணப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே ‘என் இதய தெய்வதுக்கு காணிக்கை’ என்று எழுதப்பட்டு அவளுடைய பெயரும் இருந்தது. அதிர்ந்து போனவனாகப் பக்கங்களை புரட்டினான். ஜெயசக்தி முதற்கொண்டு தற்போது வெளியான செல்லப்பா வரையிலானத் திரைப்படங்களின் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்திலான காட்சி படங்கள் ஒட்டப்பட்டு சின்னச் சின்ன கவிதைகளில் முதல் திலகத்தின் புகழுரைகள் எழுதப்பட்டிருந்தன. ஸ்தம்பித்துப் போனவன், கடுங்கோபத்துடன் அந்நோட்டை கையில் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்று சுடுநீர் போடுவதற்காக இருந்த அடுப்பில் போட்டுவிட்டு அருகிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை உள்ளே கவிழ்த்து தீக்குச்சியைக் கொளுத்தி போட்டான். நெருப்பில் நோட்டிலிருந்த படங்களெல்லாம் திகுதிகுவெனப் பற்றி எரித்தன. அப்பொழுதான் அவன் மனம் மெல்ல மெல்ல ஆசுவாசம் அடைந்தது.

ஏரியில் இருந்து திரும்பியவள், உள்ளறைக்குச் சென்று துணிமாற்றிக் கொண்டு ஈர ஆடைகளை காயப்போடுவதற்காக கொல்லைப் பக்கம் சென்றாள். வேலியின் ஓரமாக பூவரசம் மரத்துக்கும் புங்கை மரத்துக்குமாகக் கட்டப்பட்டிருந்த நீண்ட நைலான் கயிற்றில் ஒவ்வொரு ஆடையாகப் போட்டுக் கொண்டிருந்தவள் தொடர்ந்து காகிதங்கள் கருகும் வாடையைப் பெரிதாக எடுத்து கொள்ளாமல் எல்லா துணிகளையும் காயப் போட்டுவிட்டு கைகளை புடவைத் தலைப்பில் துடைத்தபடியே பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழையச் செய்கையில் அவளது கால்களில் அது தட்டுப்பட்டது. எரிந்தும் பாதி எரியாததுமான இணைந்த நான்கைந்து காகிதங்களின் சுருள். பதற்றத்துடன் குனிந்து எடுத்தாள். எப்பொழுதோ வந்தாள் திரைப்படத்தில் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து கைகளை மட்டும் வெளியே நீட்டும் நாயகனின் தோற்றம். அவன் முகத்தை காணவே இல்லை. எதிரே பெட்டியுடன் நாயகியின் உருவம். பார்த்தவுடன் அது தன்னுடையதுதான் என்று தெரிய ஓடிசென்று அணைந்து போயிருந்த அடுப்பை பார்த்தாள். உள்ளே கத்தைக் கத்தையாக கருகியத் தாள்கள். வெளியேயும் அவை இரைந்து இங்குமங்குமாக காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

தன் உயிர் முடிச்சைப் பற்றி யாரோ பலமாக இழுத்தது போல வலியில் துடித்து போனாள். அவளுக்கு நினைவுத் தெரிந்த நாளாக சேகரித்து வைத்திருந்த படங்கள் அவை. தனிதனியாக இருந்தால் தொலைந்துப் போய்விடும் என்று நோட்டில் ஒட்டி தொகுப்பாக ஆக்கியிருந்தாள். தன்னை விட்டு எப்பொழுதும் பிரியாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தது இப்படி முற்றிலுமாக அழிந்து போயிருப்பதைக் காணும்போது மரணமே சம்பவித்ததாக உணர்ந்து பெரும் அழுகையோடு தரையில் உட்கார்ந்து விட்டாள்.

ஏதோ வேலையாக வெளியே வந்த அவளுடைய மாமியார் இவள் அழுவதைப் பார்த்ததும் துணுக்குற்றவளாக அருகே வந்து “என்னடி ஆச்சு” எனக்கேட்டாள். வாய் பேச முடியாமல் கைகளில் அள்ளி வைத்திருக்கும் காகிதங்களையும் அடுப்பையும் சுட்டிக்காட்டி யாரென்று சைகையால் வினவினாள். இதற்கு அந்தம்மாவால் பதிலேதும் சொல்லத் தெரியவில்லை.

பாத்திரங்களை அள்ளிப்போட்டு கழுவுவதற்காகப் புழக்கடையில் உட்கார்ந்திருந்த வேலைக்காரி சரோஜாவுக்கு இவள் அழுவதற்கான காரணம் புரிந்தது. ஆனாலும் நிலைமையின் தீவிரம் உணர்ந்திட முடியாது குழப்பத்துடன் இவளிடம் வந்து, “சின்னையாதான் ஏதோவொரு நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அடுப்பில் போட்டு எரித்தார்” என்றாள்.

திக்கென்று ஆனது இவளுக்கு. தன் தலைவன் மீது அவன் எந்தளவுக்கு பைத்தியமாக இருக்கிறானோ அந்தளவுக்கு அவனது எதிராளி மீதும் அதிக குரோதம் கொண்டவனாக இருக்கிறான் என்பது அவளுக்கு தெரியும். அவளிடமே அவளது முதல் திலகத்தைப் பற்றி பலநேரம் கேவலமாகவும் ஆபாசமாகவும் நையாண்டிச் செய்திருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் ரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கேறும். நறநறவென்று பற்களைக் கடித்தப்படி தன் கோபத்தை சிரமத்துடன் விழுங்கியிருக்கிறாள்.

அவனுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்திருந்தது இப்பொழுது தெரிந்துவிட்டது. இதனால் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று நன்குணர்ந்தாள். அதே நேரம், அவனுக்கு அவனுடைய தலைவன் பெரிது என்றால், எனக்கு என்னுடைய திலகம் பெரிது. என்னுடைய இத்தனை வருட உழைப்பை நிமிடத்தில் சிதைத்துவிட்ட அவனை எப்படி எதிர்கொள்வது என ஆத்திரத்துடன் யோசித்தாள்.

எழுந்து ஆவேசமாக நடந்தாள். அவ்வீட்டின் அகன்ற மிக பெரிய வெளிவாசல் திண்ணையின் ஒரு பகுதியில் நீலமேகம் குத்துகாலிட்டு அமர்ந்து தன்னருகே குவிந்திருந்த வைகோல் கட்டுகளிலிருந்து கையளவாக அள்ளி அள்ளி லாவகமாகத் தொடுத்து கொண்டிருக்க, அவனுக்கெதிரில் பண்ணைக்காரன் சாமூண்டி கையில் கோல் கொண்டு பிரியாக முறுக்கிக்கொண்டிருந்தான்.

கோபாவேசமாக வந்து நிற்கும் அவளைப் பார்த்தும் பார்க்காததுப் போல செய்யும் வேலையில் தீவிரமாக இருக்கிறவன் மாதிரிக் காட்டிக்கொண்டிருக்க, “என்ன காரியம் செய்திருக்கீங்க, நீங்க” உஷ்ணக்குரலில் அவள் கத்தினாள். அலட்சியமாகத் தலை நிமிர்ந்து என்ன என்கிறது போல் அவளைப் பார்த்தான்.

“இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு” சொல்லும் போதே அவள் உடைந்து விட்டாள். “மனுஷனுக்கு ரசன இருக்க வேண்டியதுதான். ஆனா அது வெறியா மாறிடக் கூடாது”

“நீ பண்ணுனது மட்டும் ஒழுங்கா? முத்தம் கித்தமுன்னு கவித எழுதியிருக்க. குடும்ப பொண்ணுங்க செய்ற காரியமா இது”
அவள் வாயடைத்துப் போனாள். “அவரு நட்சத்திரம். அத ரசிக்கிறது தப்பா”
“நட்சத்திரமா இருந்தாலும் அந்தாளு ஒரு ஆம்பளதானே”
அவனது வக்ரமானப் பேச்சு அதிர வைத்தது.

இதற்கு சூடாக ஏதேனும் பதிலடி கொடுக்க வேணும் என நினைத்தாள். “ஒங்காளு பேத்தி வயசுள்ளப் பொண்ணுங்களக் கட்டிப்பிடிச்சு நடிக்கிறாரே அதவிட அசிங்கத்தையா நா பண்ணிட்டேன்” இதைக் கேட்டதும் அவன் முகம் சிவந்தது. உடல் பதற சுற்றும் முற்றும் பார்த்தான். சாமுண்டி ஆவென்று வாய் பிளந்தபடி இவர்களைப் பார்த்து கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டு செங்கமலமும், கதிர்வேலுவும் வாசலில் நின்று இங்கே கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் போவோர் வருவோரில் சிலரும் வேடிக்கைப் பார்க்க அவனுக்கு அவமானமாக இருந்தது. தரதரவென்று அவள் கையைப் பிடித்து உள்ளறைக்கு இழுத்து போனான். அவனது மனகொதிப்பு அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மேலும் சீண்ட நினைத்தாள்.

“உம்தலைவரு ஏதோவொரு இந்திப் படத்தப் பாத்திட்டு அம்மாதிரி தலப்பா, தார்பாய்ச்சி வேட்டி, கையில கம்புமா வராரே, பாக்க வேடிக்கயா இல்ல, குடுகுடுப்புக் காரன் போல” அவள் சத்தமாக சிரித்தாள்.

அவன் மேலும் கோபமானான்.

“உங்க நடிகருக்கு டான்ஸ் சுட்டுப்போட்டாலும் வராது. ஸ்லோமிஸன் மாதிரி காலத் தூக்கித் தூக்கி நடந்து வரதுக்கு பேரு டான்ஸா”

“இதோ பாருங்க.அவருக்கு டான்ஸ் வராதுன்னு மட்டும் சொல்லாதிங்க. அருள் விளையாடல் படத்தில ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாரே. அது ஒன்னுப் போதுமே. அதுமாதிரி ஒங்க மனுஷனால ஆட முடியுமா”

“கடலுடன் நதியும் சேர்ந்து…” பாட்ட நீ பார்த்ததில்லையடி. என்ன டான்ஸ். தலைவர் பின்னி எடுத்திருப்பாரு”

“ஆமா, டான்ஸ் ஆடி நாட்டியப்பேரொளியையேத் தோக்கடிச்ச ஆளில்லையா அவரு. பாவம் அந்தம்மா ரொம்ப நொந்துப் போயிருப்பாங்க”

“அடியே, ஒங்காளு பாடலும் நடனமும் படத்தில ஆடின டான்ஸ நான் பாக்கலைன்னு நினச்சியா. அதுக்கு பேரு பரதநாட்டியமா. ஜனங்களெல்லாம் கொல்லுன்னு சிரிச்சுட்டாங்க”

“அந்த டான்ஸோட மகிமையப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். டான்ஸ் ஆடி முடிச்சதும் உடம்பு முழுசும் அதிர அதிர அப்படியே நிப்பாரு. அப்ப அவரோட பாதங்கள் ரெண்டும் தரையில இருக்குதா இல்ல அந்தரத்தில தத்தளிக்குதான்னு பிரமிப்பு உண்டாகும். இதே மாதிரியான அற்புதத்த தன்னோட வயசான காலத்துல இப்ப கூட என் ஆசை ராணியே படத்தில பண்ணியிருப்பாரு”

“ஓவர் ஆக்டிங் தாங்க முடியலேன்னு அவரோட ரசிகர்களே எரிச்சலடையுறது தெரியுமா உனக்கு”

“அவரு நாடகத்துறையிலே இருந்து வந்ததாலே கடைசி ஆடியன்ஸுக்கும் தன்னோட நடிப்புத் தெரியிற மாதிரி செய்கிறாரு. இது மிகை நடிப்பில்ல,யதார்த்தம்”

“அரசியலில் உங்க ஆளோட ஜம்பம் பலிக்கல பாத்தியா. இந்த அவமானம் தேவையா. அதுக்கெல்லாம் முகராசி வேணும்”

“எங்க திலகம் கடைசிவரைக்கும் நடிக்கணும்தான் பிரியப்பட்டாரு. அவருக்கு பதவி மேலே ஆசையிருந்திருந்தா, பெரும்தலைவர் மரணத்துக்கு பிறகு தான் உச்சத்திலே இருந்தபோதே அந்த வாய்ப்ப பயன் படுத்திருப்பாரு”

“எங்க மகராசன் கொடுக்க கொடுக்கச் சிவந்த கரங்களுக்குச் சொந்தகாரர். ஆனா உங்க திலகம் எச்சிக் கையாலக்கூட காக்கா ஓடாதவரு”
“நிறுத்துங்க. எல்லா அறிஞ்சது மாதிரி பேசாதீங்க. வெளியேத் தெரியாம அவரு செஞ்ச தர்மங்களுக்குக் கணக்கே இல்ல. பாரதிதாசன் அவரோட கொடைத் தன்மையப் பத்தி பாட்டே எழுதியிருக்காரு. முடிஞ்சா படிச்சு பாருங்க. அதுபோகட்டும். துயரங்கிறது ஒரு கலை. சோகமான காட்சியில எங்க திலகம் அழுகையக்கூட ரசிச்ச பரவசப்பட வைப்பாரு. ஆனா ஒங்க தலைவர அழச்சொன்னா மூஞ்சிய மூடிக்கிறாரு”

“இதோ பாரு. சனங்கள அழவைக்கிறதா முக்கியம். அவனவன் குடும்ப கவலைய மறக்க சினிமாவுக்கு வராங்க. அங்க அழுவாச்சி தேவையா. எங்தலைவரோட பாட்டும், கத்தி வீச்சும் போதுமே. மனசெல்லாம் குளிர்ந்து போகும்”

வெறுப்பும், கசப்புணர்ச்சியுமாகத் தெறித்து விழுந்த சொற்கள் அவ்வறையை நிரப்பி மூச்சுமுட்ட வைத்தன. நீண்ட தர்க்கங்கள் விவாதங்கள் முடிவற்று நிண்டு கொண்டிருக்க அவனது அப்பாவும் அம்மாவும் அறைக்குள் வந்தார்கள். என்னச் சொல்லி அவர்களது சண்டையை நிறுத்துவது என்று தெரியாமல் தந்தை தடுமாறிக் கொண்டிருக்க, “அடியே பேச்ச நிறுத்துடீ” என சத்தமிட்டு அவன் தாயார் அவர்களைக் கலைத்தார்.

“பொம்பள புள்ளயா நீ. அவனுக்குச் சமமா வாயாடிகிட்டு இருக்கியே. யம்மாடி… இப்படியொரு ராங்குக்காரிய ஏன்வயசுக்குப் பாத்ததே இல்லை” முகத்தை அஷ்டகோணலாக்கி அங்கலாயித்தாள்.

தாய் தன் பக்கம் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனது வீராப்பு மேலும் அதிகரித்தது.

மாமியாரின் குணம் அறிந்ததே. பாசமாக இருப்பது போல மற்றவர்களின் முன்னே நடந்து கொள்வாள். ஆனால் தனிமையில் இருக்கும் போது அவளுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷ ஊசிகளாகவே இறங்கும். அவளைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கும் வழிகளை இவள் கண்டறிந்து வைத்திருந்தாள். இருந்தபோதிலும் இதுதான் சமயமென்று தன் மகனோடுச் சேர்ந்து கொண்டு தன்னை மட்டம் தட்டித் தூற்றும் பேச்சைப் பொறுக்க முடியவில்லை.

“ஓ.. அம்மாவும் புள்ளையும் ஒன்னாச் சேர்ந்தாச்சா. இனிமே எனக்கு எங்கே ஞாயம் கிடைக்கப் போவுது” சத்தமாக முணுமுணுத்தாள்.
“என்னடி, நியாயம் அநியாயமூன்னு கதவிடுற. நீ ஒழுங்கமா நடந்துகிட்டா நாங்க ஏன் குற சொல்றோம்”

“அப்படி ஒழுக்கம் கெட்டு என்ன பண்ணிட்டேன்”

“அதான் பாத்தேனே. ஆல்பம் பூராவும் அன்பு முத்தம் ஆசை முத்தமுன்னு உருகி உருகி எழுதியிருந்தியே. ச்சீ… வெட்கம் கெட்டவளே”

“டேய், இந்த சிறுக்கியப் பத்தி சாதாரணமா நெனச்சிடாதே. நீ இல்லாத நேரத்திலே ரூமு கதவச் சாத்திகிட்டு டேப்ரிகார்டல பாட்டப் போட்டுகிட்டு அதோட சேர்ந்துப் பாடுறதும், கை காலத் தூக்கித் தூக்கி ஆடுறதுமா என்னவெல்லாம் பண்ணுவா தெரியுமா. சொல்லவே நா கூசுது”
மாமியாக்காரி இப்படி சொன்னதும் விதிர்விதித்துப் போனாள். தனது அந்தரங்கம் இவ்வாறு பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதால் மிதமிஞ்சிய சினமுண்டானது.

“பாத்திங்களா உங்க அம்மா வேலய. ரூமுக்குள்ளே திருட்டுத் தனமா எட்டிப் பாத்திருக்காங்க. இத மட்டும்தா பார்த்தாங்களா இல்ல வேற எதஎதப் பார்த்தாங்களோ”

கசப்போடு அவள் சொல்ல, அவன் ரௌத்திரமானான்.

“ஏண்டி எங்க அம்மாவப் பத்தியே அசிங்கமா பேசுறியா”

அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து வேகமாக தள்ளிவிட, மேஜையின் விளிம்பில் தலைமோதி ஆ….வென்ற அலறலுடன் அவள் கீழே சாய்ந்தாள். ரத்தம் பெருக்கெடுத்து மூர்ச்சையாகிப் போனாள்.

2

நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு அவள் அன்றுதான் தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தாள். தலையில் தையல்கள் போடப்பட்டிருந்தன. ரத்தம் நிறைய சேதாரமானதால் அவளது அண்ணனும் அவனுடைய நண்பர்கள் இரண்டு பேரும் ரத்தம் கொடுத்திருந்தார்கள். மிகவும் பலகீனமாக இருந்தாள். உடம்பு மட்டுமல்ல மனமும் சோர்ந்து போயிருந்தது.

மருத்துவ மனையில் இருந்தபோதும், இப்பொழுது வீடு திரும்பியிருக்கும் நிலையிலும் அவளுடைய புகுந்த வீட்டு ஜனங்கள் ஒருவரும் வந்து பார்க்கவே இல்லை. “என்ன திமிர் அவர்களுக்கு, கேட்க ஆளில்லை என்று நினைத்தார்களா, அவர்களை என்ன செய்கிறேன் பார்” என்று அண்ணன் குதித்து கொண்டிருந்தான். அப்பாதான் அவனைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.

அவளுடைய மாமனார் நல்லவர்தான். ஆனாலும் பொண்டாட்டியின் வார்த்தைக்கு அடங்கி இருப்பவர். இவள் அடிபட்டு விழுந்தபோது அவர்தான் ஆம்லன்ஸுக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். மனைவி, மகனுக்கு பயந்து பேசாமலிருந்திருக்கக்கூடும்.

விஜயாவின் அப்பா முதல் திலகத்தின் தீவிர ரசிகர். ஏன் பக்தர் என்றே சொல்லலாம். திலகத்தின் தலைமையில், அவர் தாலி எடுத்து கொடுக்க, ஒரு திரைப்படத்தின் படபிடிப்பின் இடையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அக்கல்யாணம் நடந்தது. இவளுக்கும் இவளுடைய அண்ணனுக்கும் பெயர் சூட்டியதும் முதல் திலகம்தான். இவளுடைய தந்தைக்கு ரசனையைக் கடந்து வேறொருத் திறமையும் இருந்தது. முதல் திலகத்தின் குரலையும், உடல் மொழியையும் தத்ரூபமாகப் பிரதியெடுப்பதில் வல்லவராக இருந்தார். சாப்பாட்டு ராமன் படத்தில் இடம்பெறும், “தேவகி, மலையுச்சியில ஒரு மலரைப் பார்த்தேன்” அப்படியிங்கிற வசனத்தை அவர் பேசும் போது கேட்பவர் கிரங்கிப் போவார்கள். “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான், அவள் ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், லதா..என் காதல் தேவதை காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தைப் பார்” இப்படியாக அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கம் கைதட்டி ஆர்பாட்டம் செய்யும். நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தூர்தர்ஷனிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

ஒரு நடிகரை தன் வாழ்வின் பக்கங்களோடு இணைத்து கொண்டு ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதனுடன் தொடர்புடைய திரைப்படக் காட்சிகளை நினைவு கூர்ந்து இவ்வாறாகவே தொடர்ந்து பயணிக்கும் பக்குவப்பட்ட மனநிலையை அவள் தந்தைப் பெற்றிருந்தார். அவர் கனவுகளின் மிச்சமாகவும், அவரின் தொடர்ச்சியாகவும் அவளும் அவள் அண்ணனும் இருந்தனர்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்கொண்டு கல்லூரிக்குச் செல்லாமல் கிடைத்த நல்லதொரு வேலையை இறுகப்பற்றிக் கொண்டு குடும்ப பாரத்தைச் சுமக்க தந்தையோடு தோள் கொடுக்கத் துவங்கி விட்டான் அவளுடைய அண்ணன். தமிழில் வெளிவரும் அனைத்து சினிமா பத்திரிக்கைகளையும் வாங்கி வாசிப்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். அதிலும் குறிப்பாக முதல் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த சின்ன அருணாசலம் நடத்திய ‘முதல் திலகம் ரசிகன்’ என்ற பத்திரிக்கையென்றால் அவனுக்கு உயிர். மாதந்தோறும் வந்து கொண்டிருந்த அவ்விதழில் முதல் திலகத்தின் புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், அவரது நேர்காணல்கள், அவரைப்பற்றிய மற்றவர்களின் அபிப்ராயங்கள், என ஏராளமான தகவல்கள் அடங்கியிருக்கும். பல முறை வாசித்து அவன் பாதுகாக்கும் பொக்கிஷம் அவைகள்.

அவள் இப்படியானப் பத்திரிக்கைகளின் வாயிலாகவே தன் ஒப்பற்ற ஆல்பத்தைத் தயார் செய்திருந்தாள். இதற்காக ஒரு புத்தகத்தின் இரண்டு மூன்று பிரதிகள் வாங்குவதுமுண்டு. மேலும் ஜோன் என்கிற சிநேகிதியும் அவளுக்கு இவ்விசயத்தில் பெரிதும் உதவியிருக்கிறாள். அவளுடைய மாமா பழையப் புத்தகக்கடை வைத்திருந்தார். அவரிடம் சொல்லி வைத்திருந்து இவளுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்று கொடுத்திருக்கிறாள்.

ஆல்பத்துக்காக கிழித்தவைப் போக நிறைய புத்தகங்கள் இப்பொழுதும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தது.

கஸ்தூரி என்ற அவளின் இன்னொரு தோழியும் மிக முக்கியமானவள். அவள் இவளைப் போலவே முதல் திலகத்தின் பரம ரசிகை. அவளும்,இவளும் முதல் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்களது ஊரைச் சுற்றிலும் அக்கம் பக்கத்து கிராமங்களில் நான்கு தியேட்டர்கள் இருந்தன. இவர்கள் பெண்கள் என்பதால் தனித்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், இரண்டு குடும்பத்தினரும் இணைந்து சினிமாவுக்குச் சென்றுவரும் வழக்கமிருந்தது. ஒரு குடும்பம் தனியேச் செல்லும் போது அதில் இன்னொருத்தி இணைந்து கொள்ள தடையேதுமில்லை. இப்படி சாதகமானச் சூழ்நிலை உண்டென்றாலும் பள்ளியைக் கட்டடித்துவிட்டு படம் பார்க்க செல்வது அவர்கள் இருவருக்கும் சுவாரசியமான அனுபவமாகும். யாருடைய தலையிடும் இல்லாமல் சுதந்திரமாக சினிமாவைக் கண்டு களிக்கும் அப்பொழுதுகள் மித மிஞ்சிய சந்தோஷத்தையளித்தன. என்ன… ஊர்க்காரர்கள் எவரேனும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சமட்டும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும். பனிரெண்டாம் வகுப்பை முடிந்ததும் அவ்விருவருக்குமான அத்தகைய வாய்ப்பு கிடைக்காமல் போனதில் பெரும் வருத்தமுண்டு. அதன் பிறகான இந்த நான்கு வருடங்களில் அவர்கள் நிறைய முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் முதல் திலகத்தின் மீது கொண்ட அதீத விருப்பத்தினால், அவருக்குப் போட்டியாளரான வீரத்தலைவரின் திரைப்படத்தை தங்கள் வாழ்நாளில் எத்தகையச் சூழ்நிலையின் போதும் பார்க்கவேக் கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டார்கள்.

3

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மீது லேசான மழைதூறல் விழுவது போல, விஜயா தரையில் விழுந்து நெற்றியில் குருதி வழிய அலறுகிற காட்சி அவனது மணக்கண்ணில் அடிக்கடித் தோன்றி நெஞ்சில் பொங்கி தழும்பும் சீற்றத்தை ஒரளவேனும் தணிக்கப் பார்த்தது. அகம்பாவம் பிடித்தவள், சொல்பேச்சு கேளாதவள், பிடிவாதக்காரி… ஒழிந்து தொலையட்டும் என்று மனதில் சலனம் உண்டாகும் போதெல்லாம் வாய்விட்டு சத்தமாகச் சொல்லிக்கொண்டான். அவனது துவேசத்தை இன்னும் ஊதிப் பெரிது படுத்தும் விதமாக அவன் தாய் விஜயா பற்றி சாடும் வசைச் சொற்கள் அனுதினமும் அவ்வீட்டில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அச்சொற்கள் அவனுக்குள் ஊடுருவி மெல்ல தலைதூக்கும் குற்றவுணர்ச்சியையும் கீழ்சாய்த்து விட்டு உன் செயலில் யாதொரு தவறும் இல்லை என்று பிரகடனப்படுத்த முயற்சித்தன. ஆனாலும் ஒரு நாளின் ஏதாவது ஒரு கணத்தில் தாளமுடியாத வெறுமையை அவன் உணந்தான்.

சிறிதும் எதிர்பார்த்திடாத அச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதான தன் இல்லற வாழ்வின் பொழுதுகளை நினைவிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட தீர்மானித்திருந்தான். அது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்ததும் பேரச்சம் உண்டானது. கவலை தோய்ந்த முகத்தோடு பலகீனமடைந்தவனாக தனது அன்றாடச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போனான். எங்கும் செல்லாமல் பிரக்ஞையற்று அறைக்குள் முடங்கிக் கிடக்கும் அவனது இப்போக்கு அவன் தாய்க்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருபோதும் இவ்வாறு நடந்து கொள்ளாதவனின் இப்போதைய நிலைக்கான காரணம் மனைவியின் பிரிவே என்று அவளுக்குத் தெளிவாகவே தெரிந்தது. இதுவே அவள் கோபத்தை பன்மடங்காக்கியது. நீலமேகத்தின் அறை கதவைச் சத்தமாக திறந்து உள்ளே போனாள்.

“ஏண்டா நேத்து வந்தவளுக்காக இப்படி உருகிக்கிடக்கிறது பைத்தியகாரத்தனமா ஒனக்கு தோணலையா”
ஆத்திரத்தோடு நிற்பவளை அவன் நிதானமாக ஏறிட்டான். கருணையற்ற அவள் முகத்தை மேலும் காணச்சகியாதவனாகத் தலைகவிழ்ந்தான்.
அவள் அவனருகே அமர்ந்து அவன் தலைகேசத்தை கோதிவிட்டவாறு சொன்னாள்.

“ராசா மனச அலையவிடாதே. இவ போனா போறா. ஒலகத்திலே வேற பொண்ணே இல்லையா என்ன. நா ஒனக்கு செவப்பா தக்காளிப் பளமாட்டம் ஒரு பொண்ணப் பாத்து கெட்டி வைக்கிறேன்” அவள் அப்படி சொன்னதும் சடாரென எழுந்து நின்றான்.

“பேசாம இருக்க மாட்டியா நீ, ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து அடிச்சு அனுப்பியாச்சு, இப்ப இன்னொருத்தியைத் தேடுறியா… ச்சீ எந்திரிச்சு வெளியே போ”

கொந்தளிப்போடு வந்து விழுந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் எழுந்து அவனை முறைத்தவாறு வெளியேறினாள்.

அக்கா, தங்கை என அவன் பெண்களோடு பிறந்தவன் தான். பெண்கள் இருக்கும் வீட்டில் மென்மையும், கனிவும் நிறைந்திருக்கும் (அவன் அம்மா இதற்கு விதிவிலக்கு). சகோதரிகள் இருவரும் அம்மாவைப் போல் அல்லாமல் அப்பாவைக் கொண்டிருந்ததால் அவன் மீது பிரியமாகவே இருந்தார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகான வெற்றிடத்தைத் தன்னுடைய சிறந்த நடத்தையால் விஜயா நிரப்பியிருந்தாள் என்பதில் இம்மியளவும் சந்தேகத்துக்கு இடமில்லை. மல்லிகைப் பூவின் மணமும், கண்ணாடி வளையல்களின் உரசலோசையும், கால் கொலுசின் ரீங்காரமுமாக நாள் முழுவதும் அவளது நடமாட்டம் அவ்வீட்டை ஆக்கிரமித்திருந்தது. “சரிங்க அத்தை… சரிங்க அத்தை” என்ற சொற்களை மீறி அவளுடைய பேச்சொலியை அவன் கேட்டதே இல்லை. இரவின் தனிமையில் கூட அவள் அதிகம் பேசியதில்லை. அவளுடைய செயல் எதுவும் இதுவரை அவனை சங்கடப்படுத்தியதற்கான சான்றுமில்லை.

அவளின் அணுக்கமான பணிவிடைகளால் அவன் தன்னை சுகவாசியாக உணர்ந்திருந்தான். காலையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீட்டை விட்டு வயற்காட்டுக்கு புறப்படுகையில் புத்துணர்ச்சி பெற்றவனாகவே இருப்பான். எத்தகைய கடுமையானச் சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிக்கும் ஆற்றல் தனக்கு ஏற்பட்டு இருப்பதாக நம்பினான். இப்படியாக அவள் வரவுக்குப் பிறகு தன் வாழ்க்கை ஒளி மிகுந்ததாக ஆகியிருக்கிறது என்று மகிழ்ந்திருக்கும் நிலையில் திடுமென நிகழ்ந்துவிட்ட அந்த துர்சம்பவத்தை அவனால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அவள் தன்னையோ தன் செயலையோ குறைகூறி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தன் உயிரே அவரென்று எண்ணியிருக்கும் வீரத்தலைவரைப் பற்றி எவ்வளவு கேவலமாக பேசி விட்டாள். இப்படி நடந்து கொள்ள இதுவரை யாரும் துணிந்ததே இல்லை. கசப்பை விழுங்க முடியாமல் பதற்றம் அதிகரித்தது.

அவன் ஆறாம் வகுப்பு படிக்கையில் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த மாமா முறையுடைய தூரத்து சொந்தக்காரர் ஒருவர் அவனை அவ்வூரிலுள்ள டூரிங் தியேட்டருக்கு அழைத்து சென்றார். விக்ரமாதித்த மகாராஜா என்ற வீரத்தலைவரின் படமது. அப்படம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மெய் மறக்க வைத்தது. பலவித மாறுவேடங்களில் வந்து சாகசங்கள் செய்வதும், மின்னலென வாளைச் சுழற்றி சண்டைப் போடுவதும், கதாநாயகியுடன் காதல் புரிவதும் அவனை வெகுவாக கவர்ந்தன. அன்றிலிருந்து வீரத்தலைவரை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. பிறகு, அவருடைய திரைப்படம் வருகிறபோது தன்னை அழைத்துப் போகுமாறு அவன் தன் வீட்டாரை நச்சரிக்க ஆரம்பித்தான். சில நேரங்களில் அழைத்துப் போனார்கள். அதைவிட, சின்னப் பயலுக்குச் சினிமா என்ன வேண்டிக்கிடக்கு என்று கண்டிப்புடன் கூட்டிப்போகாத நாட்களே அதிகம். இதற்காக வருத்தமுற்ற அவன், தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கான உபாயத்தை வெகு விரைவிலே கண்டறிந்து கொண்டான்.

அவனது வீட்டு வளாகத்துக்குள்ளேயே அவன் தாத்தாவின் வசிப்பிடம் இருந்தது. தோட்டத்தின் ஒரு பகுதியில் காணப்பட்ட அந்த இல்லத்துக்கு அவன் அதிகம் சென்றதில்லை. பாசத்தோடு அவர் அவனை நெருங்கும் போதெல்லாம் அவன் பயத்துடன் விலகிச் செல்பவனாகவே இருந்தான். தாத்தா என்றாலே அச்சமூட்டும் அவரது தோற்றம் அவனை கதிகலங்க வைக்கும். இடதுபுறத்தில் நீளமானத் தழும்புடன் கூடிய அகோரமான அவர் முகத்தைக் கண்டு நிறைய முறை அவன் அலறித் துடித்திருக்கிறான்.

தாத்தா அவரது சிறுவயதில் யாருக்கும் அடங்காதச் சண்டியராக இருந்திருக்கிறார். ஊரே அவரைக் கண்டு அஞ்சி நடுங்குமாம். ஒருமுறை சந்தையில் நடந்த தகராறில் எதிராளி அவரது முகத்தில் கத்தியை வைத்து விட்டான். கோபத்தில் இவர் அவனது ஒரு கையை எடுத்து விட்டார். இதனால் சில ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட தாத்தா பின்னாளில் மனம் திருந்தி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு எளிய வசதியோடு இந்த சிறிய இல்லத்தில் வசித்து வருகிறார்.

“தாத்தாவிடம் கொடுத்து வா” என்று அவனது அம்மா ஏதாவது பலகாரங்களைத் தந்துவிடும் போது அவன் பயந்தவாறே அவருடைய இருப்பிடத்துக்குச் செல்வான். அவன் போகும் பெரும்பான்மையான வேளைகளில் அவர் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தலைதூக்கி விட்டத்தையோ, சுவரில் மாட்டியிருக்கும் தினசரி காலண்டரையோ, மேஜை மின்விசிறியையோ வெறித்து பார்த்தவாறு கையில் வைத்திருக்கும் கண்ணாடிக் குப்பியிலுள்ள சாராயத்தை தேநீர் அருந்தும் நிதானத்தோடு மிடறு மிடறாகக் குடித்து கொண்டிருப்பார். அச்சாராய வாடை அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதனால் அவன் மேலும் அச்சம் கொண்டு வாசல் படியைக் கடந்து உள்ளே நுழையாமல் அங்கேயே நின்ற வண்ணம் தாத்தா என கம்மியக் குரலில் விளிப்பான். தலை நிமிர்ந்து பார்ப்பவர் கைநீட்டி அவனை உள்ளே வருமாறு அழைப்பார். அவன் தயங்கி தயங்கி செல்லும்போது பலகாரத்தட்டை வாங்கி வைத்துக் கொண்டு அவனை அனுப்பிவிடாமல் இழுத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். அங்கிருந்து உடனே வெளியேறி வந்து விட வேண்டும் என்றே அவன் துடியாய் துடிப்பான். அவனது அவஸ்தையை உணர்ந்து கொள்ளாமல் இப்ப என்ன படிக்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் அவன் அங்கு செல்லும்போது தவறாமல் கேட்கும் அதே கேள்வியை அப்பொழுதுதான் முதல் முதலாக கேட்பதுப் போலவே வினவுவார். அவன் தான் படிக்கும் வகுப்பைச் சொல்வான். அதன் பிறகு ஆலோசனைச் சொல்லும் விதமாய், “எதற்கும் பயப்படக்கூடாது. தாத்தாவைப் போல எப்பொழுதும் தைரியமாக இருக்கணும்” என்பார். போதை ஏற ஏற அவருடைய சொற்கள் தொடர்பின்றித் துண்டு துண்டாகவும், உளறலாகவும் வந்து விழும். நிதானம் இழந்து அவர் படுக்கையில் விழும் தருணத்துக்காகவே காத்திருப்பவன் அவ்வாறு நிகழ்ந்ததும் அவரிடமிருந்து தன் கையை உதறிக் கொண்டு எழுந்தோடி வந்து விடுவான். பீதியும் அருவருப்புமாக தாத்தாவை உணர்ந்திருந்தவன் ஒரு கட்டத்தில் அவரை அடிக்கடிச் சென்று சந்திக்கிறவனாகவும், அவருடன் நீண்ட நேரம் உரையாடுகிறவனாகவும் ஆகி இருந்தான். இந்த மாற்றம் விட்டாருக்கு வியப்பைத் தந்தது. “தாத்தா அப்படி என்னடா சொக்குப்பொடி போட்டார்” என்றாள் அம்மா. “நிறைய கதைகள் சொல்கிறார். கேட்டுக் கொண்டே இருக்க ஆசையாய் இருக்கிறது” என்று துணிந்து பொய்யுரைத்தான்.

பகலிலே மட்டும் சென்று கொண்டிருந்தவன் இரவிலும் அவரைக் காணச் சென்றதோடு தாத்தாவுடன் படுத்துக் கொள்கிறேன் என அடிக்கடி அங்கு தங்கவும் செய்தான். மது அருந்தியதன் காரணமாக தாத்தா இரவில் சீக்கிரமாகவே உறங்கி விடுகிறவராக இருந்தார். அவர் கட்டிலிலும் அவன் தரையிலுமாக படுத்துக் கொள்வார்கள். தாத்தா தூங்கியதும் ஒன்பதரை மணிக்குப் பிறகு, ஒரு ஆள் படுத்திருப்பதைப் போல் பாயில் தலையணைகளை வைத்து மேலே போர்வையைப் போர்த்திவிட்டு எச்சரிக்கையுடன் அவன் பின் வாசல் வழியாக வெளியேறி விடுவான். இருளான அரவமற்ற அத்தெருவைக் கடந்து போவதற்கு அச்சமாக இருந்தாலும் சினிமாவின் மோகம் அவனை தைரியமூட்டி வழி நடத்தியது. உள்ளூர் டென்ட் கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் பார்ப்பது அவனுக்கு திகிலான அனுபவமாக இருந்தது.

திரைப்படத்துக்கானக் காசை அவன் தாத்தாவின் சேமிப்பிலிருந்தே கைப்பற்றிக் கொண்டான். பெஞ்சுக்கும் தரை டிக்கட்டுக்கும் இடையேயானக் கட்டைச் சுவருக்கு கீழே மறைவாக உட்கார்ந்து கொள்வது அவனுக்கு பாதுகாப்பையளித்தது. வீரத்தலைவரின் அதிகத் திரைப்படங்களைக் காண வேண்டும் என்பதால் அருகாமையிலுள்ள பல ஊர்களுக்கும் அவன் சென்று வந்தான். இதற்காக சில நண்பர்களையும் தன்னோடுச் சேர்த்து கொண்டான். என்ன.. அவர்களுக்கான டிக்கெட் செலவையும் இவனை ஏற்க வேண்டியிருந்தது. அதைப் பற்றி அவன் கவலை கொள்ளவுமில்லை. நண்பர்களின் சைக்கிளில் தொற்றிக்கொண்டு வீரத் தலைவரின் திரைப்படம் எங்கெல்லாம் ஓடுகிறதோ அங்கெல்லாம் பயணித்து வந்தான். பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கவும் செய்தான்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் மீசை முளைத்து வாலிபனாகி விட்டதால் அவனைக் கண்டிப்பதை விட்டார்கள் நிறுத்தி கொண்டார்கள். இது பெரும் மகிழ்ச்சியையும் விடுதலையுணர்வையும் கொடுத்தது.
அவன் ஊரில் பத்தாவது வரையிலுமே இருந்ததால் மேலே படிக்க ஏழு மைல் கடந்து பூவாளூருக்கு செல்ல வேண்டியிருந்தது. சினிமாவுக்காக ஊர் ஊராக சுற்றியவனுக்கு பதினோராவது வகுப்பு படிப்பதில் சிறிதும் நாட்டமில்லை. வேலைக்குப் போக வேண்டிய அவசியமின்றி ஏராளமான நிலமும், ஐஸ்வரியமும் நிறைந்திருந்ததால் அவன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கிவிட்டான். சின்ன வயதில் இருந்து வயல்காடுகளுக்கு சென்று கொண்டிருந்ததால் அவ்வேலைகள் எளிதாக இருந்ததோடு மனதுக்கும் நிறைவளித்தன.

அவன் தன்னைப் போன்ற வீரத்தலைவரின் தீவிர ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டான். அவர்களுடன் கலந்துரையாடி அவ்வூரில் வீரத்தலைவரின் ரசிகர் மன்றம் ஒன்றை நிறுவினான். சூடோடு சூடாக அவரது உரிமைக்குயில் திரைப்படத்தை அவ்வூரின் ஸ்ரீஅம்பாள் தியேட்டருக்கு கொண்டு வரச் செய்தான். அந்நாள் மிக பொன்னானது. வீரத்தலைவரின் 40 அடி உயர கட்டவுட் வைக்கப்பட்டு அதற்கு பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது. தியேட்டரைச் சுற்றிலும் வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டன. சினிமா பார்க்க வரும் அனைவருக்கும் லட்டு கொடுக்கப்பட்டது. படத்தில் தலைவர் தோன்றியதும் சூடம் ஏற்றி வணங்கினார்கள். திரையைச் சுற்றிலும் சீரியல் லைட் போடப்பட்டு ஜெகஜோதியாக ஜொலித்தது. தங்கள் வாழ்நாளில் இப்படியொரு கொண்டாட்டத்தைக் கண்டதில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்றுவரையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருமுறை பிரச்சாரத்துக்காக வீரத்தலைவர் அவ்வூரின் வழியே சென்றபோது அங்கு சிறிது நேரம் இருந்து உரையாற்றினார். அப்பொழுது அவர் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் அவருக்கு இவனை அறிமுகப்படுத்தி இவனது தீவிர நடவடிக்கையை எடுத்துரைத்தார். தலைவர் உள்ளம் மகிழ்ந்து இவன் தோள் மீது கைபோட்டு இயல்பாக உரையாட அத்தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த அரிய அற்புத நிழல்படம் பெரிது படுத்தப்பட்டு இவனது வீட்டின் வரவேற்பறையில் இன்றளவும் காட்சியளிக்கிறது.

4

மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருகிறபோதுதான் லால்குடி பூங்காவனம் திரையரங்கில் கூண்டு புறா திரைப்படம் போட்டிருக்கும் போஸ்டரைப் பார்த்தான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுவெளியீடாக இப்படம் வருகிறது. பெரும்பாலும் வீரத்தலைவரின் அனைத்துப் படங்களையும் கண்டிருந்த அவன் இப்படத்தை மட்டும் இதுவரை பார்த்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு உரக்கம்பனி விஷயமாக தஞ்சாவூர் சென்றிருந்த வேளையில் கமலா தியேட்டரில் இப்படம் போடப்பட்டிருந்ததைப் பார்த்தான். போன காரியம் சீக்கிரமாக முடிந்து விட்டபோதிலும் படம் பார்ப்பதற்கான அவகாசம் தாராளமாக இருந்த நிலையில் தியேட்டருக்கு வெளியே நெடும் பொழுது அமைதியாக நின்றிருந்தான். ஜனங்கள் வரத்துவங்கியிருந்தார்கள். டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆட்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று டிக்கட் கவுண்டர் மூடும் வரையிலும் அவன் அங்கேயே நின்றிருந்தான். மனதுக்குள் போகலாமா வேண்டாமா என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. முதல் திலகத்தின் படத்தைப் பார்க்கவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவனுக்கு இது சோதனையான கட்டம் தான். உடன் அவனுடைய தலைவரும் நடித்திருந்தாலும் இப்படத்தைப் பற்றி வெளியில் கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வருகிற வீரத்தலைவர் பின் சிறைக்குச் சென்று விடுவாராம். படத்தின் இறுதியில்தான் மறுபடியும் தோன்றுவாராம். இடையில் முதல் திலகத்தின் ஆளுமையே படம் முழுவதும் என்பதால் எதற்காக இந்த விஷப்பரிட்சை என்று அவன் அன்றைக்கு அப்படத்தை பார்க்காமலே திரும்பி விட்டான். மறுபடியும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அன்றைக்கு இருந்ததைவிட இன்று மனதளவில் ஏற்பட்டிருந்த மாற்றம் அவனை படம் காண தியேட்டருக்கு உந்தி தள்ளியது.

அந்திமப் பொழுது. தனது டிவிஎஸ் 50 ஐ பாஸ் வைத்துவிட்டு திரையரங்க முகப்பிலிருந்தப் போஸ்டர்களைக் கவனிக்கலானான். வீரத்தலைவரும் முதல் திலகமும் தோளில் கைப்போட்டபடி சிரித்தவாறிருந்தார்கள். அந்தப் பதாகைக்கு தியேட்டர் சார்பாக சிறிய மாலையேப் போடப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டரின் வலது பக்கமுள்ள வீரத்தலைவரின் போஸ்டருக்கும் இடது பக்கமுள்ள முதல் திலகத்தின் போஸ்டருக்கும் உயரமும் அடர்த்தியுமான பெரிய பெரிய மலர் மாலைகள் அவரவர் ரசிகர்களின் மூலமாகப் போடப்பட்டிருந்தன. இரண்டின் முன்பாகவும் அந்தந்த ரசிகர்கள் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் குழுமியிருந்தார்கள். போட்டியின் காரணமாக சண்டைகள் மூளும் என்ற நினைப்போடு சில போலீஸ்காரர்களும் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். மேலும் எப்பொழுதும் இல்லாத வகையில் தியேட்டர் ஊழியர்கள் பலரும் கூட்டத்தோடு கலந்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லோரையும் பார்வையாலே மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

வீரத்தலைவரின் ரசிகர் கூட்டத்தில் சுற்று வட்டாரத்திலிருக்கிற நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் பலரை இவனுக்கு முன்பே நன்கு தெரியும். இம்மாதிரியானச் சூழ்நிலையில் அவ்வகையானோரிடம் சென்று களிப்புடன் உரையாடுவது அவனுக்கு விருப்பமானதாகும். ஆனால் இப்பொழுதோ கேளிக்கைக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் நெஞ்சில் இடமேதும் இல்லாதச் சூழலில் வெறுமனே அவர்களை வேடிக்கைப் பார்த்தாவாறிருந்தான். நாழியாகிவிட்டது, டிக்கெட் எடுத்து உள்ளே போகலாம் என அவன் அங்கிருந்து நகர முற்படுகையில் அவன் பெயரைச் சொல்லி அழைத்தவாறே சீனிவாசன் வந்தான். அவன் முன்னால் நண்பனும் இந்நாள் எதிரியுமாவான். அருகில் வந்து இவனது கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டான். “உன்னோட பேசி நீண்ட நாளாச்சு நண்பா” என்றான். இவன் வறட்சியான புன்னகையோடு பதிலளித்தான். “நாட்களல்ல மூன்று வருடங்களாகிறது” அவன் கலக்கமடைந்து விட்டான் என்பதை சட்டென்று சோகத்தால் சூழப்பட்ட அவன் முகம் வெளிகாட்டியது. “உண்மைதான் நண்பா. சின்ன வயசிலிருந்து இணைப்பிரியாம வாழ்ந்திட்டு ஒரு அற்ப விஷயத்துக்காக மல்லுக்கட்டினத நினைச்சா அபத்தமா இருக்கு. நா அன்னைக்கு அப்படி பேசியிருக்கக்கூடாது. உன் கோபத்தைத் தூண்டி மூர்க்கமா நடந்துகிட்டது பைத்தியகாரத்தனம். என்னைய மன்னிச்சிடுடா. பழசயெல்லாம் மறந்திடுவோம். இப்ப விரிவா பேச நேரமில்ல. கூட்டாளிக காத்திருக்காங்க. நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்” அவன் அவசரமாகச் சொல்லிவிட்டு முதல் திலகத்தின் ரசிகர்கள் திரண்டிருக்கும் இடம் நோக்கி போய்விட்டான்.

இவன் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று சோபா வரிசையில் உட்கார்ந்தான். படம் இன்னும் துவங்கி இருக்க வில்லை. சினிவாசன் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள் வந்தான். மற்ற கூட்டாளிகள் போலல்ல அவன். தனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்து அவனோடு பழக்கம். அப்படிப்பட்ட ஆழமான நட்பில் பிளவுண்ட நாளினை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. ஐந்து வருடங்களுக்கு முன்பான அன்றைய நாளுக்கு மனம் விரைந்து சென்றது. முதல் திலகத்தின் எங்கிருந்தோ வருகிறாள் திரைப்படத்தை அவன் பார்த்திடச் சென்றிருந்தான் என்பதை அறிந்ததும் இவன் கடும் கோபம் கொண்டான். கூடவே இருந்து கொண்டு இப்படி குள்ளநரித்தனம் பண்ணுகிறானே என்று ஆவேசம் உண்டானது. வேறு வழியில்லாமல் தந்தையும் தாயுடனும் செல்ல வேண்டியதாயிற்று என்று அவன் எவ்வளவோ எடுத்துரைத்தும் இவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வசை சொற்களால் மனதை புண்ணாக்கும் வகையில் ஆக்ரோஷமாகக் கத்தித் தீர்த்தான். ஒரு நிலையில் இதனை மேலும் பொறுத்துகொள்ள மாட்டாமல் சீனி கொதிப்படைந்தான்.

“எனக்கு வீரத்தலைவரும் வேண்டாம். அவரோட படங்களும் வேண்டாம். அவரின் அடிமைகளோட இனியும் நட்பும் வேண்டாம். முதல் திலகத்தின் படம் எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது தெரியுமா. இப்படியான மகிழ்ச்சியை உன்னோட தலைவரின் படம் ஒரு நாளும் தரவே முடியாது. அவர கட்டிக்கிட்டு நீயே அழு”

“என்னடா சொல்றே. அந்த மனுசன பூஜிக்கவே ஆரம்பிச்சிட்டியா. இதுதானா உன்னோட மனவுறுதி”

“நீ எது வேணா சொல்லிக்க. இனிமே திலகத்த ஆராதிக்கிறது மட்டுமல்லாம ஊருக்கே இதைச் சொல்லி எனக்கான கூட்டத்தை அதிகரிக்க போறேன். இது மட்டும் இல்லாம உம் தலைவர அசிங்கப்படுத்தி உங்கள தலைக்குனிய வைக்கப் போறேன்”

அவனது பேச்சு வெறியேற்றியது. ஆத்திரத்தோடு அவனை ஓங்கியடித்தான். இவன் அடிப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் அவன் நிலைகுலைந்து போனான். மறுகணம் கண்கள் சிவப்பேற அவன் இவனை அடித்தான். எல்லோரும் வந்து போகிற அங்காடித் தெருவில் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டபடி சண்டை போட்டார்கள்.

வேடிக்கைப் பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சிலர் ஓடிவந்து அவர்களைப் பிரித்து விட்டார்கள். அவனைக் கொன்று விட வேண்டும் என்று இவனுக்கு கடும்கோபம் உண்டானது. இதற்காக மடத்தனமாக சில திட்டங்களையும் இவன் நினைத்திருந்தான். மறைத்து வைத்திருக்கும் கத்தியோடுத் திரிந்தான். எதிர்எதிரே சந்தித்தபோது கடைசி நொடியில் மனம் பின்வாங்கியது. அது கோழைத்தனமல்ல வேறு ஏதோவொன்று என்றளவில் உணரமுடிந்தது. பிறகு பார்க்கும் வேளைகளில் இருவரும் முகம் திருப்பிச் செல்வதே வழக்கமானது.

அவன் இப்பொழுது வந்து பேசியதும் தான் ஏன் கோபப்படவில்லை என்று அதிசயித்தான். அத்தோடு இயல்பாக பேசவும் தன்னால் எப்படி முடிந்தது என்று நினைத்தான்.

நெஞ்சுக்குள் குறுகுறுவென்று ஏதோ வருடுவது போல் உணர்ச்சியலை எழும்ப உடன் அமர்ந்திருப்பவர்களின் பக்கம் பார்வையை நகர்த்தினான்.
அவனது இருக்கைக்கு ஏழெட்டு இருக்கைகள் கடந்து விஜயா இருப்பதை பார்த்தான். அருகில் அவள் அண்ணன் தெரிந்தான். இவன் நன்கு சாய்ந்தமர்ந்து தன்னை மறைத்து கொள்ள எத்தனித்தான். ஆனாலும் அவள் தன்னைக் கண்டுகொண்டாள் என அறியமுடிந்தது. விளக்கு அணைந்து இருள் பரவியதும் புரொஜெக்டர் ரூமிலிருந்து ஒளிபாய்ந்து வெண்திரையில் விழ படம் துவங்கியது. திரைக்காட்சியில் மனம் லயிக்கவில்லை. நெஞ்சம் தடதடத்துக் கொண்டிருக்க அமைதி இழந்தவனாக எழுந்து வெளியே வந்து தேநீர் அருந்தினான். சிறுநீர் கழித்து விட்டு எந்தவித அவசரமுமின்றி நடந்து சென்று இருக்கையில் உட்கார்ந்தான். இடைவெளிக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இடைவேளை விட்டபோது அண்ணனும் தங்கையுமாக எழுந்து போனார்கள். சிறிது நேரத்தில் அவள் வந்து உட்கார்ந்துவிட அவளது அண்ணன் தின்பண்டங்கள் வாங்கி வந்தான். சாதாரணமாகத் திரும்புவது போல் திரும்பி அவள் தன்னைப் பார்க்கிற மாதிரி தெரிந்தது. ஆனாலும் அது உறுதிதானா என்ற சந்தேகமும் உண்டானது. அவளுக்கும் தனக்குமான இந்த இடைவெளி எப்பொழுதும் நிரந்தரமாகி விடுமோ என அச்சமுற்றான்.

படம் முடிந்து வெளியே வருகையில் சற்றுத் தொலைவில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் நடந்து கொண்டிருந்த இரண்டு மனிதர்கள் சத்தமாக படத்தை விமர்சனம் செய்தவாறு சென்றது தெளிவாக காதில் விழுந்தது.

“படத்தோட இயக்குனருக்கு அறிவே இல்லப்பா. ரெண்டு பேருக்கும் இது ஆரம்பகால படமா இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. அத மனசில வச்சுக்கிட்டு ஒரு நல்ல கதையா தேடியிருக்க வேணாமா. கதையிலும் திரைக்கதையிலும் அக்கற எடுத்துகிட்டுப் பண்ணியிருந்தா இந்த படம் சரித்திரத்தில மிக முக்கியமான படமா அமைஞ்சிருக்கும். மனுஷன் கோட்டை விட்டுட்டான்” உரையாடியப்படியே அவர்கள் சென்று மறைந்து போனார்கள். அவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்படுகையில் கவனித்தான். முன்னே விரையும் அவளது அண்ணன் வாகனத்தில் இருந்த அவள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் திரும்பி இவனைப் பார்த்தாள். மெல்லியச் சிரிப்பொன்றை உதிர்ப்பதுப் போலவும் தெரிந்தது. ஜிவ்வென்று இதயத்தில் உற்சாகம் பீறிட்டது.

5

தொலைக்காட்சியில் சனிக்கிழமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. வஹிதா ரஹ்மான் ஆடுகளைஓட்டியபடி பாடிக்கொண்டிருந்தார். அந்நேரம் கதவு தட்டப்பட விஜயாவின் அப்பா எழுந்து சென்று திறந்தார். வெளியே இவன் நின்றிருப்பதைக் கண்டதும் ஒரு கணம் தாமதித்து பின் முகமலர்ச்சியோடு “வாங்க மாப்பிள்ளை” என்றார். விஜயா நிமிர்ந்து பார்த்தாள். இவன் நிச்சயம் வருவான் என்று அவளுக்கு நன்கு தெரிந்திருந்த போதிலும் பரபரப்பு காட்டாமலும் அதேநேரம் வரவேற்கும் சம்பிரதாய முறையில் எதுவும் கூறாமலும் வெறுமனே எழுந்து நின்று பார்த்தாள். யார் வந்திருக்கிறார்கள் என்ற நினைப்போடு தன்னறையில் இருந்து வெளியே வந்த அவளுடைய அண்ணன் இவனைக் கண்டதும் முகம் இறுகி கடுகடுப்பானான். கையை நீட்டி கோபமாக எதையோச் சொல்ல முற்பட அவனப்பா கண்களாலையே அமைதியாக இரு என்று சமிக்ஞைக் காட்ட வெறுப்புற்றவனாக விருட்டென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.

இவன் கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியை டீப்பாயின் மீது வைத்து விட்டு அமர்ந்தான். தொலைக்காட்சியின் சத்தத்தை முற்றிலுமாக குறைத்து விட்டு நாற்காலியில் சௌகரியமாகச் சாய்ந்துகொண்டாள் விஜயா.

இவன் அட்டைப்பெட்டியைப் பிரித்து அதனுள்ளிருந்து விலையுயர்ந்த வெளிநாட்டு டேப் ரெக்கார்டரை எடுத்து வெளியே வைத்தான். மேலும் பெட்டியின் உள்ளிருந்து கை நிறைய கேசட்டுகளை அள்ளியெடுத்து வைத்தான்.

சிவந்த பூமி, வைர சுரங்கம், அன்னை வீடு, இவனே மனிதன், கடவுள் மகன், ஒன்பது ராத்திரி, தவப்புத்திரன் என்று நிறைய படங்களின் பாடல்களும் வசனங்களும் அடங்கிய தொகுப்புகளாக அவைகள் இருந்தன. தன் கண்களால் நம்ப முடியாத விநோதம் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை அவள் ஆச்சரியத்துடன் கவனித்தாள். அந்தக் கேசட்டுகளை அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதன் முகப்புத் தெரிகிறது மாதிரி அவன் எடுத்து வைக்கிறபோது அதில் அசூயை இல்லாதிருப்பதைக் கவனித்தாள்.

“நண்பனொருத்தன் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தான். உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று அவள் கேட்காமலே தான் எதற்காக வந்தேனென்று அவன் சொல்லி முடித்தான்.

அறைக்குள் இருந்தாலும் கூடத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அவளண்ணன் இனியும் பொறுக்க முடியாது என்பதுபோல் சினத்துடன் வெளியே வந்தான்.

“டேய் ஒனக்கு மானம் ரோஷமெல்லாம் கிடையாதா. அவள அடிச்சு விரட்டிட்டு இப்ப பள்ளக்காட்டிட்டு வந்து நிக்கிறியே. உன்னுடைய நாடகத்தை நம்ப நாங்க யாரும் தயாரா இல்லை. உம் மூஞ்சியப் பார்க்கவே வெறுப்பா இருக்கு. நீயெல்லாம் ஒரு மனுஷனா. வெளியே போடா”

அப்பா தடுத்தும் கேளாமல் இவன் சட்டைக் காலரைப் பற்றி வெளியேத் தள்ள முயன்றான். விஜயா இடையில் புகுந்து அண்ணனிடமிருந்தை அவனை விலக்கி விட்டாள். பின் தீர்க்கமாக இவனிடம் சொன்னாள்.
“நீங்க கொண்டு வந்ததையெல்லாம் எடுத்துக்கிட்டு உடனே புறப்படுங்க” இதைக்கேட்டு இவன் தளர்ந்து போனான். கண்ணீர் முட்டியது. பரிதாபத்தோடு அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவள் தன் பேச்சின் தொடர்ச்சியாக “நானும் புடவை மாத்திட்டு வரேன்” என்றாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று முதலில் விளங்காமல் பின் புரிந்து கொண்டதும் சந்தோசத்தில் முகம் பிரகாசமடைந்தது.

அவனது வண்டியின் பின்புறம் ஏறிக்கொள்ளும் நேரத்தில் ரகசிய தொனியில் கேட்டாள். “மாரிஸ் தியேட்டர்ல உலகம் சுற்றும் நாயகன் போட்டிருக்காங்கலாமே நாளைக்கு மேட்னி போகலாமா”

***

இதயா ஏசுராஜ் – திருச்சியில் வசித்து வருகிறார். “வருகைக்கான ஆயத்தங்கள்”, “இருளின் நிழல்”, “பயணிகள் உலவும் காகிதக் காடு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். மேலும் இவர் ‘இல்லம் சொர்க்கமாக’, ‘மனிதனின் தேடலும், மகத்தான வெற்றியும்’, ‘உலக மாமேதை அண்ணல் அம்பேத்கர்’, ‘மேஜிக் செய்வது எப்படி?’, ‘நிகரில்லா தலைவன் சே குவேரா’, ‘சர்வாதிகாரி ஹிட்லர்’, ‘அறிஞர் அண்ணா, கடையேழு வள்ளல்கள்’, ‘தமிழ் சினிமாவின் வரலாறு’என 12 நூல்கள் எழுதியுள்ளார்

RELATED ARTICLES

2 COMMENTS

  1. இதயா இயேசு ராஜ் அவர்கள் ஒரு கதை சொல்லி போல கதையை நகர்த்தி இருப்பது கதைக்கான பலம் என்று நினைக்கிறேன் அருமையாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்!

  2. அருமையான சிறுகதை. என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தது. நடிகர்கள் மீது கொண்ட வெறியில் நண்பர்களோடு சண்டையிட்டு பிரிந்து இருக்கிறேன். இதில் கணவன் மனைவி என்ற முடிச்சு நன்று. இதயா sir க்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular