Thursday, March 28, 2024
Homeஇலக்கியம்அபுனைவுசுமையற்ற தத்துவ தரிசனங்கள்

சுமையற்ற தத்துவ தரிசனங்கள்

  • வேல்கண்ணன்

(சாகிப்கிரானின் ‘அரோரா’ கவிதை தொகுப்பு குறித்து என் பார்வை))

எந்த அனுபவமும் கவிஞன் உள்ளில் ஒரு தாள லயத்தில்தான் இயங்குகிறது – விர்ஜீனியா உல்ஃப்

—–

ஆயிரம் மலர்களுள்ள தோட்டத்தில் அந்த வண்ணத்துப்பூச்சி எந்தப் பூவில் அமரும் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆயிரம் பூக்களிலும் அமரும் என்னும் பிதற்றலுக்கு ஒப்பானது நாம் படிக்கும் எல்லா கவிதைகளும் நம்மை ஏதோ செய்கின்றன என்பது. அவ்வண்ணமே ஆகியிருந்தால் ‘ரெண்டாயிரம் காலத்துக்கு  மேற்பட்டவைகளில்’ஏதேனும் சொச்சத்தை படித்திருந்தாலே நாம் சுக்கு நூறாகி போயிருப்போம். தனது 36வது  கவிதை தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் தேவதேவன் இப்படியாக சொல்லுகிறார், ‘எழுதத்துவங்கும் போதும், எழுதி முடித்த பிறகும் ஒரு வாசகனாக என் கவிதைகளை நானே எப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்’ என்கிறார். எனில் ஒரு வாசகன் தன்னை என்றுமே தேடல் உடையாவனாகவும் அதே சமயத்தில் தற்காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்தலும் மேம்படுத்தல் வழியாகவும் மட்டுமே படைப்பு மேம்படமுடியும் என்று உணர்கிறோம்.

அப்படியான வாசகர்களுக்கு புது எழுத்து வெளியீடாக கவிஞர் சாகிப்கிரானின் “அரோரா” கவிதை தொகுப்பு இருக்கிறது என்று சொல்லலாம். அனேகமாக  முதல் வாசிப்பில் இந்த தொகுப்பின்  கவிதைகள் நம்மை ஒன்றும் செய்யாதது போல பாவனை கொடுத்துவிடும் அபாயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.  அடுத்தடுத்த  வாசிப்பில் அல்லது நிதானித்து படிக்கும் வாசிப்பில் மேலே பறந்த வண்ணத்துப்பூச்சி ஆயிரம் பூக்களிலும் ஏன் உட்காரவில்லை என்றும் அப்படி அமர்ந்த பூவுக்கும் வண்ணத்துப் பூச்சிக்குமான இணைக்குமிழை எதுவென்றும் தேடும் மனம் வந்துவிடும் என்று நம்புகிறேன்.

ஒரு படைப்பில் ‘பேசாத தருணம்’ என்ற ‘இடைவெளி’ என்ற ‘மெளனம்’ மிக முக்கியமானது. என்னளவில் இந்த இடமே படைப்பு வேறு ஒரு வடிவம் பெற்று படைப்பு – படைப்பாளி என்ற இருபரிமாணத்தை விட்டு முப்பரிமாணத்தை (வாசக மனநிலையை) அடைகிறது. சாகிப் கிரான் இந்த மெளனத்தை கவிதையில் நிகழ்த்திய இடத்தை கண்டதலில் கிடைப்பதே ‘தரிசனமாகிறது’. இங்கே தரிசனம் என்ற சொல் தத்துவ தேடல் வழியாகவும் அன்றாட நடைமுறை வழமைகளின் வழியாகவும் தெளியும் மனப்போக்கு எனக் கொள்ளலாம்.

*

” மாநகரின் வீதி வழியே/ நாய் ஓடிக்கொண்டிருக்கிறது/ கொட்டி வழியும்/ மழையை மீண்டும் மீண்டும்/ சிலிர்த்தபடி விரைகிறது/ சாலை இருமருங்கிலும் ஆயிரம் கண்கள்./ இப்படித்தான் / மழையைக் கடந்துவிடும் போல.”

*

தொகுப்பில் வரும் இந்த கவிதையில் மழை பெய்யும் மாநகர வீதியின் வழியே ஓடும் நாய் ஒன்றின் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. இந்தக் காட்சி புகைப்படமாக, சித்திரமாக, ஓவியமாகவும் கொள்ளலாம். இவை எல்லாமும் இருக்கும் சாத்திய கூறுகள் கவிதையின் சிறப்பு. ‘ஓடி’ என்ற சொல்லே கவிதையின் – முன் வாசித்த வரிகள் தரும் காட்சியினை – போக்கினை மாற்றுகிறது. இதற்கு அதனிடையே நிலவும் பத்தி இடைவெளியும் பெரும் காரணமாக இருக்கிறது. இதே போன்று ‘தொட்டி’ என்ற கவிதையில் குப்பைத் தொட்டியிலிருந்து குதித்தோடும் நாயின் ஒடிந்த கால் தரும் காட்சியும் அதற்கு முன் தென்பட்ட அழுக்குப் பெண், மெளனக் காகம், ஜன்னலோர ஒருவன் தந்த காட்சியும் முற்றிலுமாக மாறி விடுகிறது;   ‘கொஞ்ச நேரம்’என்று முன்பத்தியின் தொடக்கமும் ‘அவ்வளவுதான்’ என்று பத்தி இடைவெளியுடன் வரும் கடைசி வரியும்  தான். 

மொழியின் வரலாற்றில் கவிதையின் வளர்ச்சியும் மாற்றமும் பெரும் பங்கு வகிக்கிறது. கவிதை மொழியின்றி அமையாது. அவ்வாறான மொழியை கவிஞன் கையாளும் போக்கினையே கவி மொழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தொகுப்பு கவிதையில்  சொற்சேர்க்கையும் வார்த்தைகளும் எந்தவொரு மயக்கத்தையும் மகிழ்வையும் தரக்கூடியது அல்ல. சொல்லப் போனால் ஒரு வித வறட்டு தன்மையுடன், தனது கவிமொழியை மனதுக்கு இணக்கமாக பேசும் பிரத்யோகமான மொழியாக செய்து இருக்கிறார் சாகிப்.

தொகுப்பிலுள்ள கவிதை தரும் தரிசனங்கள் நம்முடன் மெளனமாகவே உரையாடிக் கொண்டிருகின்றன. ‘அழகி’ என்ற கவிதையில் வரும் ‘அந்த மலரை பார்த்ததும் / பியானோ கட்டை ஒன்று இறங்குகிறது’ ஒற்றை கட்டை ஒலிக்கும் போது, அடுத்த வரியில் வருவது போல ஒற்றை ஸ்வரம் நீண்ட கானமாக ஒலிக்கும் இந்த ஸ்வரம் கேட்பது நின்ற பின்னும் மனதுக்குள் சில நொடிகள் உணர்வோம். அதன் பின்பும் அந்த ஒற்றைக் கட்டை, கேட்கும் திறனற்ற ஸ்வர அதிர்வுடன் தான் இருக்கும் என்பதையும் அறிவோம். இந்தப் புரிதலுடன் கவிதையில் வரும் அந்த மலரை நம்மை அணுக வைக்கிறது அவரின் வரிகள். அதற்கு பின்பான நோக்கலில் அம்மலர் அபூர்வ மலராக தரிசனம் தருகிறது.  

இதோ போல் ‘அன்பின் நிழல்’ கவிதையில் வரும் முதலில் குறிப்பிடப்படும் நீதிமன்றமும் மரம் சாய்ந்த பிறகு வரும் நீதிமன்றமும் வேறு வேறு என்பதை மறுவாசிப்பில் மட்டுமே அறிய முடியும். ‘எளிமை’ என்ற கவிதையில் தலைகீழாக நடக்கச் சொல்லி அதனை எளிதாக்க ஆயிரம் கால் ஜடை போட்டுக் கொள்ள சொல்வதில் தென்படும் அங்கதத்தை கண்டுகொண்டால் மட்டுமே  ‘எளிமை’ என்பது நடைமுறை சாத்தியமில்லை என்று அறிவோம்.

நிர்வாணமாக ஓர் உருவம் காற்றில் அலைந்தபடி எழுந்து  நிற்கிறது             

‘நிர்வாணம்’ என்ற கவிதையில் முதல் பாதியில் ‘இனிமே ஒன்றும் வேலைக்கு ஆகாது’என்ற மனநிலையில் தற்கொலை முடிவுடன் மலையுச்சிக்கு செல்லும் ஒருவனைப் பார்த்து  ‘(பூத்)தூவிக்கொண்டே உன்னை நோக்கி ஒரு மேகம் வருகிறது பார்’ என்று சொல்லும் பள்ளத்தாக்கையும்- {இங்கே கவனிக்க: மலையுச்சி, பள்ளத்தாக்கு என்று அடுத்தடுத்து இருப்பதையும் இரண்டுக்குமே மேகமும் நகர்ந்து செல்ல காற்றும் பொதுவாக இருப்பதை, ‘வாழக்கை என்றால் ஆயிரம் இருக்கும்’என்ற தொனியை தற்கொலைக்கு எதிரான கருத்துகளாக வைக்கிறார் கவிஞர்.} புறம் தள்ளுகிறான்.

 நான் மேலே சொன்ன இரண்டு வரிகள் கவிதையின் பின்னும் இறுதியாகவும் வருகிறது. இந்த வரிகளில் நமக்கு கிடைக்கும் புரிதலையும் முன் பாதியில் கிடைக்கும் புரிதலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்று எவ்வித கவிதை நியதியோ வாழ்வியில் நெறிமுறையோ இருப்பதில்லை. ஒன்றுக்கொன்று முரணானவைகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டுமே வெவ்வேறான உணர்வுகள். அந்த உணர்வுகளை நாம் எவ்வாறாக உள்வாங்கி கொள்கிறோம் என்பதே கவிதையின் வெளிப்பாடு. . நிர்வாணம் என்பது ஆடை துறப்பது அல்ல. அறவே உள்ளம் துறப்பது என்கிறது பெளத்தம்.அந்த வகையில் இங்கே ‘நிர்வாணம்’ என்ற தலைப்பை கணக்கில் கொண்டு, இரண்டையும் ஒருசேர வாசிக்கும் போது நமக்குள் கிடைக்கும் தரிசனமே முக்கியமானது.

இறைவனுக்கு இணை எதுவுமில்லை என்றும் ஒப்பிடுதலும் கூடாது என்று கூறுகிறது இஸ்லாம். இதனையே முன்னோர்கள், கடவுளை அறிந்தவர்கள் சொல்லமாட்டார்கள் என்றும் அப்படிச் சொல்பவர்கள் கடவுளை இன்னும் கண்டதில்லை என்பதையே இப்படி சொல்வார்கள்,  ‘கண்டவர் விண்டில்லை விண்டவர் கண்டில்லை. இங்கே கடவுளுக்கு இணையாக மரணத்தையும் சொல்லுகிறார் கவிஞர். கடவுள் என்னும் கருத்தியலை மறுத்தாலும் மரணத்தை மறுக்கவும் தவிர்க்கவும் முடியாமல் போகிறது அந்த (இரகசிய)கவிதையில் :

இறந்து போனவன் / அதி ரகசியமாக / அதை எழுதி / வைத்திருந்தான் / மற்றொரு இறப்பு வாசிக்க / சவத்தின் மெல்லிய / புன்னகை.

இறந்தால் மட்டுமே இந்த ‘இரகசிய கவிதை’புரியும் என்பதை சொல்லுகிறார் கவிஞர். 

‘ஒட்டவைத்தல்’ என்னும் கவிதையில் அதி நவீனம் செய்த வண்ணங்களின் அழகில் மகிழ்ந்து கிடைக்கும் ‘உம்மா’வை விருப்பத்துடன் ஒட்டிக் கொண்டாலும், அசலான வண்ணத்துப் பூச்சியிலிருந்து தாவி விட்டோம் என்பதை கவிஞர் சாகிப் கிரான் சு(ஒ)ட்டி காண்பிக்கிறார்.     

அன்றாட நிகழ் வடிவங்களில் உருக்கொள்ளும் இவரின் கவிதைகள் நிறைவுற்ற பின், அதனுடைய வெளிப்புற தோற்றத்திலிருந்து சற்றே விலகியும் உள்ளொளி காரண – காரியங்களின் தன்மை அகண்டும் அல்லது ஓர்மையற்று இருப்பதை ‘நிகழ்’ கவிதையில் கழைக்கூத்தாடி உருமியுள் மறைக்கும் சாட்டையிலும் ‘நிகர்’ கவிதையில் நேர்த்தியை கண்டபின் மலம் கழிக்க நினைக்கும் உள்மொட்டிலும் ‘திருவிழா’ கவிதையில் ஒரு கணத்தில் இருட்டுக்குள் இருள் மறைவதையும் அதன் சாட்சியாக முடிச்சு மரமொன்றும் ‘உருமாற்றத்தில்’ கண்டுகொள்ள தவறிய காஃப்கா வழியாக அறியலாம். மேலே சொன்ன இந்த கவிதைகள் வேறு பல புரிதலையும் உங்களுக்கு அளிக்கலாம்.

——

சாகிப்பின் ஒவ்வொரு கவிதையிலும் கிடைக்கும் அகபுற தரிசனங்களை அன்றாட நிகழ்விலிருந்து வெளிப்படும் அ-சாதாரணத்  தன்மையும் உள்/வெளி இணைக்கும் அரூப மொழியையும் வலிமையான, சுமையற்ற தத்துவ விசாரணைகளையும் ‘மேலுக்கு’ சொல்லாமல் முடிந்தவரை அவருடன் நம்மையும்  ‘முத்துக் குளிக்க’ வைக்கிறார். தொகுப்பில்  அவ்வப்போது வரும் நேரடியாக அல்லது முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளக் கூடிய  கவிதைகளான ‘புழுக்கள்’,’தொடுவானம்’,’சுவடற்று மறைதல்’, நிரந்தரமாக்குதல்’ போன்றவை தொடர்ந்து ‘அறிவு’ கொண்டு அணுகும்  அயர்ச்சியை போக்குகிறது.

மொத்தத்தில் ‘ஒரு கவித தொகுப்புல நாலு இல்ல அஞ்சு கவித(யார் சொன்ன கணக்கோ தெரியவில்லை) நல்ல இருந்தா போதும்’ என்று கணக்கியல் நிபுணர்களுக்கும் நம்புவர்களுக்கும் ‘அரோரா’ ஏமாற்றம் கொடுக்கும். படைப்புடன் பயணிக்கும் மனப்பக்குவத்தையும் கண்துடைப்பில்லாத வெளிச்சங்களையும் தேடிக்கண்டடைய விரும்பும் வாசகர்களுக்கு இந்த தொகுப்பு மிக இன்றியமைதாக அமையும்.

வெளியீடு : புது எழுத்து.

விலை : 100/-

—  வேல் கண்ணன் – திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular