சமயவேல் கவிதைகள்

0

புளிப்பு இசை

தொலைவில் ஒலிக்கும்
அதிகாலை நாகஸ்வர மேளம்
திடீரென ஒரு புளிப்புக் காற்றைக் கொண்டு வருகிறது.
எவ்வளவு காலப் புளிப்பு

அயர்ச்சியூட்டும் சில
திருமண மண்டபங்கள்
சில தூக்கமிலாக் கண்கள்
சில பதைபதைப்புகள்
சில கூச்சல்கள்
நூற்றுக்கணக்கான முகமூடிகள்

அன்றாடத்தின் ஆண்முகங்கள்
அலுங்காத பெண்முகங்கள்

காலத்தால் சபிக்கப்பட்ட
துர்பாக்கியம்
இந்த அதிகாலை.

***

பார்வதி அடிக்கடி தனக்குள் மூழ்கிப் போகிறாள்

பிரார்த்தனை செய்வது போல
அரைக்கண் மூடி நிற்கையில்
அவள் அவளாக இருக்கும் தேக்குமர அழகைக் காண
அங்கே ஒருவரும் இல்லை.

தற்கணத்தை விழுங்கி விட்டதால்
எக்காலத்தில் அவள் உலவுகிறாள் என்பதை
அறியவியலா சோபையில்
உறைந்து போகிறது
மெழுகுமுகம்

நினைவுகள்
ஞாபகங்கள்
எல்லாம் புதையுண்ட மண்மேட்டில் மலர்களைத் தூவுகிறாள்
அடைபட்டுப் போன சகல திசைகளிலும்
மஞ்சள் அரிசி விதைக்கிறாள்

எதிர் காலத்தில்
ஒரு நொடி கூட இவளுக்குத் தேவை இல்லை
என்பதில்
அது ஒரு செய்தியாகக் கூடாது என்பதில்
செய்தியை வாசித்தவர்களின்
சொற்கள்
காற்றை நச்சுப்படுத்தக் கூடாது
என்பதில்
அவள் உறுதியாக இருக்கிறாள்.

இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போகும் வரத்தை
யாரிடம்
வாங்க வேண்டும்?

ஒவ்வொரு கணமும் மறைந்து கொண்டிருக்கும்
அவளே பார்வதி.

***

1+1+1+1+….= 0

ஒவ்வொன்றிற்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
அதன் துயர இசை
தங்கமீன்கள் ஒவ்வொன்றாக இறந்து கொண்டிருக்கின்றன

ஒவ்வொன்றின் பின்னாலும்
ஒளிந்திருக்கிறது
அதன் அழிவு
ஒரு காரணமும் இல்லாமல்
சட்டெனப் பட்டுப்போனது பக்கத்து வீட்டுப் புன்னை மரம்.

நாம் ஆசை ஆசையாய் வளர்த்த
மஞ்சள் கிளிகளை
வீடு புகுந்து தூக்கிப் போயின
வெருகுப் பூனைகள்.

விடைபெறுதல் என்பது அவ்வளவு சுலபம் அல்ல
ஆனால் அவர்கள் எல்லாருமே
நமக்கு விடை கொடுத்து அனுப்ப
ரோஜாப்பூ மாலைகளோடு காத்திருக்கிறார்கள்.

கூட்டம் கூட்டமாக
ஒழுங்கு வரிசைகளில்
பறந்து கொண்டிருக்கும் கொக்குகள்
கூச்சலிடும் குழந்தைகளின் நகங்களில்
வெள்ளை போடும்
பேரதிசயம்
இன்றும் நிகழாமல் இல்லை.

***

உரு அழி

அறைக்கு வெளியே
மொட்டை மாடியில் அம்மாவாசை வெயிலில்
பாத்தி பாத்தியாக உளுந்து காய்கிறது‌.
பக்கத்தில் போய் பார்த்தால்
அவை உளுந்து இல்லை.
எல்லாமே காரீய எழுத்துருக்கள்.

கழுவக் கழுவக் காயாத கருப்பு
எழுத்துக்களை
அள்ளிக் கூட்டி என் அறை வாசலில் குவித்திருக்கிறாள்
கபிலர் அச்சகத்தில்
அச்சுக் கோர்க்கும் மலர்.

ஒருமுறை ய எழுத்துருவைக் காணோம் என்று
ய வரும் இடங்களில் எல்லாம்
மு வைத்திருந்தாள்.
பிழைதிருத்திக்கும் வேலை வேண்டாமா என்று கேட்டுவிட்டு
கண்ணைச் சிமிட்டினாள்.

மாலையில் அவள் பேருந்தில் ஏறுகையில்
என்னைப் பார்த்து அசைத்த உள்ளங்கையில்
பால்பென்னால் வரைந்த
ஒரு பெரிய மு இருந்தது.

முதல் முறையாக அவளை முத்தமிட்ட ஒரு நாள்
அவள் கணினிக்காரியாக மாறிப் போனாள்
இப்போது தனது பெயர்
குலாபி என்கிறாள்.
ஓ ரங்கசாடி…குலாபி…
என்று பாடவும் செய்கிறாள்.

குலாபியின் திருமண நாளில்
மொட்டை மாடியில் இருந்த எனது அறையில்
காரீய எழுத்துக்களைக் கொட்டினார்கள்
அறை நிரம்பி வாசலுக்கும் வெளியே சரிந்தன.

நான் எங்கே போனேன்?
இப்போது குலாபியின் கணினிக்குள்
திறக்க இயலாக் கோப்பாக
உரு அழியக் காத்திருக்கிறேன்
ஓ ரங்கசாடி…குலாபி…

***

ஞாபகங்களின் வரைபடத்திலோ எத்தனையோ முடுக்குகள்

கூகுள் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த காரை
ஓட்டுநர்
திடீரென ஒரு சிறிய சாலையில் திருப்பினார்.
பக்கத்தில் இருந்தவர் ‘தம்பி என்ன ஆச்சு’ என்று பதறினார்.

“ஒன்றுமில்லை கொஞ்சம் பொறுமையாக இருக்கமுடியுமா…”
என்று கூறிவிட்டு காரை
மேலும் ஒரு சிறிய தெருவில் திருப்பினான்.
வலதுபுறம் ஒரு முடுக்கு பிரியும் சந்தியில்
காரை நிறுத்தி என்ஜினை ஆஃப் செய்தான்.

பின்னால் இருந்த நண்பனிடம், அந்த இரண்டாவது வீடு தான் என்றான்.
இருவரும் வேகவேகமாக கார்க்கண்ணாடிகளை இறக்கினார்கள்.

அங்கே அந்த இரண்டாவது வீட்டில் ஒரு பெரிய கேட் இருந்தது.
ஒருவருமில்லாத முற்றத்தில் வெள்ளை வெளிச்சம்
மிதந்தது.
அந்த வெறும் முற்றத்திலிருந்து
ஒரு பூனை கூட நிற்காத அந்தப் பெரிய கேட்டில் இருந்து
ஒரு ஏகாந்தம் காரை நோக்கி வந்தது.

ஓட்டுநருக்கு மட்டும் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
சட்டென என்ஜின் முடுக்கப்பட்டு
கனவேகம் எடுத்த கார்
மீண்டும் சர்வதேச வரைபடத்தில் ஓடத் தொடங்கியது.

ஞாபகங்களின் வரைபடத்திலோ
எத்தனையோ முடுக்குகள்
எத்தனையோ தெருமுனைகள்.


ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here