Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்கவிஞர் தேவசீமாவின் "வைன் என்பது குறியீடல்ல" எனும் தொகுப்பிற்கான வாசிப்புரை

கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” எனும் தொகுப்பிற்கான வாசிப்புரை

யவனிகா ஸ்ரீராம்

“அழகானதாய் இரண்டு இருந்தன
தொலைந்துவிட்டது ஒன்று
அச்சு அசலாய்
மற்றொன்று செய்து வாங்கினேன்
சாவிக்கரனிடம்
போலிச்சாவி என அதற்குப் பெயர் சூட்டுகிறார்கள்
அதுவும் திறக்கும்
அதே உண்மையை
போலிச்சாவியல்ல
இன்னொரு சாவி என்றே சொல்லுங்கள்
இன்னொருகாதல் என்பதைப்போல.”

சின்ன அதிர்வுதான் இதில் நடுக்கமோ இடிபாடுகளோ ஏதொன்றும் இல்லை. தேவசீமா தனது கவிதைகளை சன சமூகத்திற்கிடையே நடைபாதைகளில் நழுவவிட்டுப் போகிறாரா அல்லது அது கைதவறி விழுந்து விடுகிறாதாவென்று தெரியவில்லை. அவ்வளவு சுயேட்சையும் தன்னியல்பும் மிக்கவையாக இருக்கின்றன. அதிகம் பேசும் உபன்யாசங்களுக்கு எதிராக ஒருதுண்டுச்சீட்டில் “போதும் நிறுத்துங்கள்” என எழுதி அனுப்புவது போலுள்ள கவிதைகள்.

மனிதர்கள் வாழ்வார்கள் அவரவர் கதியில் இடத்தில், சூழலில் அங்கே நானாவித வெளிப்பாடுகள்; அசிங்கம், அவலம், தூய்மை, புனிதம் எனத்தொடரும் இருத்தல்கள் மத, குடும்ப, நட்பு வகையினங்கள்; உரையாடல்கள் அனைத்திலும் கூர்ந்த செவித்திறம் உடைய இக்கவிஞருக்கு இறுதியில் புன்னகையே மிஞ்சுகிறது.

வாழ வழி இருக்கிறதோ இல்லையோ உலகம் விதிகளையும் விமர்சனங்களையும் மட்டுமே முன்னேற்பாடாய்க் கொண்டு வெகுகாலம் ஒரு கண்காணிப்பு வளையத்திற்குள் நம்மை வைத்திருக்கிறது என்பதன் மீதான பகடி கவிஞரிடம் மெல்லிய வெறுப்புடன் மட்டுமில்லாமல் ஆளுமையாய் இருப்பதன் அவசியத்தை வலிமையாக்கி நிகழ்வதாய்ச் சொல்லலாம்.

நம்மை அருகே வைத்திருக்கிறாரா தூரப்படுத்தி இருக்கிறாரா எனும் சம்சயங்களை உண்டாக்கும் கவிதைகள்.

“ஒரு கொடுக்கோ
கொஞ்சம் விஷமோ
கொடுத்திருக்கலாம் கடவுள்
தொடுமுன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்கள்”

இந்தத் தொடுதல் என்பது தலைக்குள் கூரிய அலகுள்ள பறவை நுழைந்து குரல்வளை இறங்கி இதயத்தின் புழுக்களைக் கொத்தி இரையெடுப்பது போல ஏன் மாறிவிடுகிறது? அப்பறவை கைகளில் வந்து மெதுவாக அமர்ந்து நமது மூக்கில் ஏன் முத்தமிடுவதில்லை?

இந்தச் சமூகம் தொடும் அனைத்திலும் வன்முறையும் அச்சமும் ஒடுக்கமும் அவசரங்களும் கூச்சமும் எமாற்றமும் துரோகங்களும் ஏன் நீரற்றுப்போன வண்டலாய் படிகின்றன. எதுமாதிரியான காலத்தின் பிரதிநிதிகள் நாம்.?

இறையச்சமா இயற்கையின் மீதான புரிந்துணர்வா என்பதைக் கற்கிறோமா. ஒருபக்கம் காடுகள் அழிகின்றன. மறுபக்கம் கடல் மட்டம் உயர்கிறது. செய்திகள் பலவும் நெருக்கி அடித்து வந்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வு கைமீகிறது. சுயநலமோ, பொதுநலமோ எப்படியேனும் நம்கைகளில் ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. கண்ணீரோ குருதியோ
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கவிதைகட்கு என்ன நேர்கிறது? அந்தத் துண்டுத்தாள்களில்!

கவிதைகளை எப்படியும் கடந்துதான் போகிறோம். சுவரொட்டிகள் விளம்பரங்கள் ஒளிரும் மின்பேனர்களைக் காட்டிலும் அவை நம்மை ஈர்ப்பதில்லை.

ஒரு துடிக்கும் இதயம் சாலையின் நடுவே கிடந்தால் திடுக்கிட்டுப்போகும் உலகத்திற்கு ஏதுவாகக் கிடத்த வேண்டியதிருக்கிறது கவிதையை!

“அதோ ஒருகல்
யுகம்யுகமாய் நதிக்கரையில்
அவ்வப்போது நீருடன் சல்லாபித்த ஒன்று
கல்லினுள் நீரின் சலனங்கள்
நீரிலும் கல்லினது
பாசிபடர்ந்தாலும் கல் அதுவே
வற்றிச்சுருங்கினாலும் நதியே
பாசி என்பதோர் படிமம்”

இங்கு தேவசீமாவின் கவிதை விலக்கிக் காட்டப்பட்டுள்ள முறையில் ட்ரான்ஸ்ப்ரஸியாகவும் மற்றும் இருத்தலியல் கடந்த சுயத்தை மறுத்து அபௌதீக நிலையை அடைகிறது. இந்த ஒப்புதலின் கீழ் விகாசங் கொள்ளும் நாட்பட்ட அடிமனம் நம்மிடம் கைமாற்றப்பட்டு விடுகிறது. நல்லகவிதைகள் அப்படிச் செய்துவிடுகின்றன. அபூர்வமாக நிகழ்ந்த கவிதை இது.

அத்துடன் “நீங்கள்” என விளித்துக்கூறும் இத்தொகுப்பின் முதல் கவிதையைக் காணலாம்

“இதோ ஒரு தேனீர்ப்பையின்
உதவிகொண்டு
பீங்கான் கோப்பையின்
சுடுதண்ணீரையோ அன்றி
தேனீர்ப்பையையோ சுவையூட்ட
முயற்சி செய்கிறீர்கள்
பையை நீங்கள் பருக முடியாதாகையால்
நீங்கள் சுடுநீரையே
சுவையூட்ட முயல்வதாக ஒருமுடிவிற்கு வரலாம்.”

தேனீருக்கு என டீ பென்ஞ்சுகளை குவளையில் இட்டு ஆட்டும் செயல் எதன் குறியீடு என்பதை விளக்க ஒரு போத்தல் ஒயின் கட்டாயம் தேவைப்பட்டு விடுகிறது கவிஞரே.

“பூனைக்குட்டிகளைப் பிரசவிக்கத் தயாராகும் வீடுகளில்” இருந்துதான் அகத்தையும் புறத்தையும் இக்கவிதைகளாக வாசிக்கிறோம். பலநினைவு மறதிகள் பல புத்துணர்ச்சிகள் பல உரையாடல்கள் நேரங்கழியும் தெருக்காட்சிகளுக்கிடையேதான் நம் பயணங்கள். விமர்சிக்கவும் விமர்சிக்கப்படவும்தான் பழகி விட்டோம்.

ஒயின் என்பது குறியீடல்ல என்ற இத்தொகுப்பின் கடைசிக்கவிதை

நிரந்தரமாய் மூடிக்கொண்ட ஆதிக்குகை எனும் தலைப்பில்

“வெளிவரும் முன் செய்தழித்த பிறாண்டல்களில்
உருவான ஓவியம் என்னென்ன என
எட்டிப்பார்த்தல் எங்ஙனம் அறிகிலேன்
கருவறை சுவர்களில்”

என்று நிறைவெய்துகிறது.

கருவறைச்சுவர்களில் வரைந்த ஓவியங்கள்

அவை வெளிவந்த வண்ணங்கள்
ஆதிக்குகை

கர்ம வினைகள் என்ற ஒரு சொல்லாட்சி அனைத்தையும் பற்றிப்பீடித்திருக்கிறது. கருந்துளையில் எத்தனை துவங்கங்களும் முடிவும்? இன்மையும் பெருக்கமும்? மாறி மாறி நிகழும் இயக்கம்! ஆனால் வெளிவந்த எதுவும் அறியுமா கருப்பையின் கீறல்களை, வடுக்களை. அதையும் கவிஞர் ஓவியமாகவே காணமுயல்கிறார். நிலைப்படுத்தப்பட்ட தாய்மை, பெண்மை, தியாகம் இரண்டாம்பட்சம் போன்றவை தகர்க்கப்படுகின்றன. தனி உயிரி எனும் மனுஷி இங்கு தர்க்கத்திற்கு அப்பால் எதிர் நிற்கிறார். பெண்வழிப் பரிமாணங்கள் ஏதேனும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன அந்த வகையில் காதலின், காமத்தின் மன உயரங்கள் இக்கவிதைகளில் பேதமற்றுப் பரிந்துரைக்கப்படுகின்றன.

எழுதியவரின் கைகளில் இருந்தா வாசிக்கிறோம்.

ஆம்

தேவசீமாவின் கவிதைகள் சுயம் மற்றும் மற்றமை மீது நிலவியும் நழுவியும் செல்லும் பண்பைக் கொண்டிருக்கின்றன.

தீர்க்கமான முடிவுகள் சில அதன் வன்மத்தில் இளகவும் ஆன ஒரு எதிர்மறை நேசமும் தென்படுகிறது.

இயங்கு விசையா? இயக்கு விசையா? அறம் ஒளிந்து விளையாடும் இக்கவிதைகள் பேசும் மொழி அருகிருப்பதா, அந்நியமானதா என்பதுடன் உறவு கொண்டுள்ளன.

சில கவிதைகள் இக்காலத்திய புதுமைப் பிரச்சனையைக் கையாண்டுள்ளன. இன்னும் சில ப்ரத்யேகச் சொல்லாடல்களைக் கொண்டு வாசகரைக் கவனப்படுத்த இயலாமல் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றன என்றாலும் “மூன்று சட்டைகளால் ஆனது என் பாதை” எனும் கவிஞர் இத்தொகுப்பின் மூலம் இடம், காலம், இருத்தல் எனும் அபத்தங்களுக்குள் ஊடுருவி இருக்கிறார். அவரது பகடியும் வன்மமும் சற்றே நம்மைச் சமன்குலையச் செய்கிறது. இன்னும் உள்ளே சலனமுறும் மொழியின் ஆற்றல் லாவாவைப்போல இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவார் எனும் வகையில் தேவசீமா நம்பிக்கை தரும் ஒரு படைப்பாளி! மேலும் ஒரு ஆண் என்ற எல்லைக்கு வரம்பிட்டே இவ்வாசிப்புரையை முன்வைக்கிறேன். இக்கவிதைகளில் ஊடாடி இருக்கும் சில ரகசியங்களை மதிக்கிறேன்!

இன்னும் சில கவிதைகள்

சமரனின் யட்சி, பொத்தான்கள் குறுக்கிடும் வாழ்க்கை, சுயம், சூளையில் சுட்ட கற்கள், மணிப்பூரகம் என்பது நீலமாணிக்கம், கண்ணாடிசில்லு போன்றவை தெளிவான சொல்முறையைக் கொண்டுள்ளன. அடித்தள மக்களின் குறிப்பாக உழைக்கும் பெண்களின் விளிம்பு வாழ்நிலைகள் மீதான சித்திரங்களை கவிஞர் இடப்படுத்தி உள்ளார். தமிழ் வாழ்வின் கலாச்சார மாற்றங்கள் பற்றிய அவதானிப்பும் இருக்கிறது.

இயற்கையுனான தனது தேர்வும் தன்னிலையும் கலந்த இக்கவிதைகளை முன்வைப்பதன் மூலம் அரசியலும் கலையுமாகி நிற்கும் அவர் மென்மேலும் எழுதிச் சிறக்க வாழ்த்துகள்.

வைன் என்பது குறியீடல்ல
கவிதைகள்
தேவசீமா
தேநீர் பதிப்பகம் (100 ரூபாய்)

****

யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மத்தியத்தர போலி கவித்துவத்திற்கு எதிரான அறம் சார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள தமிழின் முக்கியமான கவிஞர். மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular