Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்கலைச்செல்வி சிறுகதைகள்: மனித அறம் பேசும் கதைகள்

கலைச்செல்வி சிறுகதைகள்: மனித அறம் பேசும் கதைகள்

சுப்பிரமணி இரமேஷ்

லி’, ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது,’ ‘மாயநதி’, ‘கூடு’ என அடுத்தடுத்துச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாக்கிக் கொண்டவர் கலைச்செல்வி. எழுத முடியாமல் மனதில் அசைபோட மட்டுமே சாத்தியமுள்ள பெண்களின் அகப்பிரச்சினைகள் சார்ந்து படைப்பூக்கத்துடன் தொடர்ந்து எழுதி வருகிறார். திருச்சியில் வசித்துவரும் இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றுகிறார். பெண் எழுத்தாளர்களில் இரண்டு விஷயங்களில் இவரது எழுத்துகள் தனித்துவமானவை எனக் கருதுகிறேன். ஒன்று, இவரது புனைவுகளில் வெளிப்படும் அறச்சீற்றத்துடன் இழைந்த பகடி; மற்றொன்று சூழலியல் பிரச்சினைகள்.

இலக்கியப் பின்புலம் இல்லாமல் எழுத வந்தவர் கலைச்செல்வி. யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமாகத் தொடக்கத்தில் இவரது கதைகள் அமைந்திருந்தன. பின்னர் யதார்த்தத்தின்மீது மாயத்தைப் புகையாகக் கசியவிட்டுத் தனக்குத் தெரிந்த மொழியைத் தம் புனைவுகளில் முன்னும் பின்னுமாக ஊடாட விட்டார். பெரும்பாலும் இச்சமூகத்தின்மீது நிகழும் அறமின்மை இவரது கதைகளுக்குப் பின்புலமாக இருந்து வருகின்றன. குறிப்பாக நிலத்தின் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு இவரது புனைவுகள் கவனம் கொடுத்துள்ளன. இந்தப் புள்ளியில் இருந்துதான் கலைச்செல்வியின் பெரும்பான்மைக் கதைகள் உருப்பெறுகின்றன. இது குறித்து உரையாடுவது அவசியம்.

காந்தி என்கிற பிம்பமும் காந்தியம் என்கிற கோட்பாடும் படைப்பாளர்களுக்கு என்றுமே அட்சயப் பாத்திரங்கள். அந்தப் பாத்திரம் இவருக்கும் ஒரு கதையை நல்கியிருக்கிறது. தமிழகத்திலிருந்து காந்தியைப் பேசுபவர்களும் மேற்கு வங்கத்திலிருந்து காந்தியைப் பேசுபவர்களும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். தன்னை விமர்சிப்பவர்களுக்கும் காந்தியே தமது செயல்பாடுகளில் பல ஓட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு. அந்த ஓட்டைகளைச் சூட்சமப் பொருளாகப் பார்ப்பவர்கள் காந்தியவாதிகளாகவும் ஸ்தூலப் பொருளாக அணுகுபவர்கள் காந்தியத்திற்கு எதிரானவர்களாகவும் வரலாறு கட்டமைக்கிறது. காந்தியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் ஆண்கள் பலரும் திலகரின் மனநிலையுடனே பெண்களை நடத்துகிறார்கள். இவரது ‘தங்க நொடிகள்’ என்ற கதை இதுபோன்று பல்வேறு வாசிப்புகளைத் திறந்துவிடுகிறது.

ஆண்கள் பின்பற்றும் கொள்கையும் கோட்பாடும் பொதுவெளிக்குத்தாம்; அகத்தில் அதற்கு நேரெதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கலைச்செல்வியின் கதைகள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுகின்றன. ‘எதிர்வினை’ என்ற சிறுகதையும் ஆண்களின் இரட்டை மனப்பான்மையைப் பேசும் புனைவுதான். பொதுவுடைமைவாதிகள் மீது கடுமையான விமர்சனத்தை இக்கதை முன்வைக்கிறது. அதிகாரத்தைத் தங்களது பலமாகக் கருதும் ஆண்கள் அதனைத் தம் மனைவியர் மீதே அதிகமும் பயன்படுத்துகிறார்கள். இதில் கம்யூனிசம் பேசுபவர்களும் அடக்கம். இதுதான் இவர்களது உண்மை முகம். ஆண்கள் எந்நிலையிலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். வர்க்கச் சுரண்டலைப் பற்றியும் பாலின ஒடுக்குமுறையைப் பற்றியும் பொதுவில் சத்தமாகப் பேசும் இவர்கள்தாம் ‘பொட்டச்சிக்கு இதெல்லாம் வேண்டாத வேல…’ என்று வீட்டுக்குள் பேசுகிறார்கள். கணவன் இறந்தபிறகே தனக்கான வாழ்க்கையை வாழ நினைக்கிறாள் இக்கதையின் ராஜேஸ்வரி. தமிழ்ப் பண்பாட்டின்மீது இக்கதை நிகழ்த்திய குறுக்கீடு இதுதான்.

அப்பாவும் மோட்டார்பைக்கும்’ என்றொரு கதையும் கணவன் மீதான நுட்பமான விமர்சனம்தான். பெண்களின் காமம் சார்ந்த பிரச்சினைகளை நகரத்திலுள்ள பெண்கள் பேசுவதாகவே அதிகமும் எழுதப்படுகின்றன. இக்கதையின் களம் கிராமம். கணவனின் பலவீனத்தை மனைவி அவளுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் வெளிப்படுத்துகிறாள். கணவர் மோட்டார் பைக் ஒன்றைப் பராமரித்து வருகிறார். அவ்வளவாக ஓட்டத் தெரியாது. ஆண்கள் தங்கள் பலவீனத்தை மறைக்கப் பெண்கள்மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பார்கள். அது உளவியல் பிரச்சினை. அதனைத்தான் இவள் கணவனும் செய்கிறார். மோட்டார் பைக் ஓர் அலங்காரப் பொருள். ‘ஆமா… ஒத்தப்புள்ளைக்கே ஒங்கப்பாருக்கு எம்பாடு ஒம்பாடு ஆயிபோச்சு… எல்லாம் இந்த பைக்கு மாதிரிதான்…’ என்று மகனிடம் பகிரும் கடைசி வரியில்தான் கதையின் மையமே பிடிபடுகிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும் அப்பெண்ணின் இடத்திலிருந்து வாசிக்கும்போது எவ்வளவு பெரிய துயரத்திலிருந்து இவ்வரிகள் வெளிப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அவளது எதிர்வினை நொறுக்கிவிடுகிறது. யதார்த்தவாதக் கதைகளில் பிரச்சாரத் தொனி வெளிப்படாமல் எழுதுவதுதான் பெரும் சவால். கலைச்செல்வி இதனைப் பிரக்ஞையுடன் அணுகியிருக்கிறார்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் கணவனை இழந்துவிட்ட ஒரு பெண் தன் மகள் அவள் கணவனுடன் இருக்கும் ஓர் இரவில் தன் தாம்பத்திய வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கும் கதைதான், ‘இரவு.’ பதினேழு வருடத் துயரங்கள் அவள் நினைவை அலைக்கழிக்கின்றன. மகள், மருமகனுடன் தனித்திருக்கும் தருணங்களில் இவள் ஆற்றாமைக்குள் தள்ளப்படுகிறாள். இளம் விதவையரின் காமம் சார்ந்த துயரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த வகையில் இது குறிப்பிடத்தக்கக் கதை. மகளின் கூடலும் கூடல் சார்ந்த நகர்வுகளும் இவளுக்குள் எரிச்சலை உண்டாக்குகின்றன. அம்மா மகள்மீதே பொறாமை கொள்கிறாள். இந்த நுண்ணுணர்வுதான் கதைக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. சிறிய கதையாக இருந்தாலும் வாசகனுக்கு இக்கதை கடத்தும் ஒரு பெண்ணின் தாப நிலை கவனிக்கத் தகுந்தது.

முற்காலத்தில் பெண்கள் குழந்தை பெறுவதென்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று பெண்ணிற்கான முக்கியமான பேறுகளில் ஒன்று. இறைவனின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணிற்குக் குழந்தைப்பேறு வாய்க்கும் என்ற புனித நிலைக்குக் குழந்தை பெறுதல் நிகழ்வு இன்று மாற்றப்பட்டிருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு மாதவிடாய் தள்ளிப்போகாத ஒவ்வொரு மாதமும் கணவனும் அவன் குடும்பமும் உருவாக்கும் நெருக்கடியால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். கரு உருவாகும்போது பெண்கள் அடையும் மகிழ்ச்சியைவிட மன நெருக்கடிகளே அதிகம் என்பதையே ‘பிரசவ வெளி’ என்ற கதை பேசுகிறது. பெண்மையையும் ஆண்மையையும் நிரூபிக்கும் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக உறவுகளால் கொண்டாடப்படுகிறார்கள். இக்காலத்தில் குழந்தை உருவானதில் இருந்து பிறப்பது வரை பெண்கள் அடையும் அழுத்தங்கள் சொல்லித் தீராதவை. அன்றாடத்தின் ஒரு பகுதியாக இருந்த மக்கட்பேறு இன்று அரிய நிகழ்வாக மாறிப்போனதன் பின்னணி பற்றி உரையாட வேண்டும். இதன் ஒரு பகுதியையே கலைச்செல்வி இப்புனைவினூடாக எழுதியிருக்கிறார்.

இக்கதை இரண்டு இடத்தில் வாசிப்பவரின் கவனத்தைக் குவிக்கிறது. ஒன்று, ‘அப்டியே மருமகன் மாதிரியே இருக்குதுடீ புள்ள…’ என்று அவள் அம்மா கூறுகிறாள். அவள் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? தன் பெண்ணின் உடல் சார்ந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறாள். அதனால் அப்படிச் சொல்வதுதான் பாதுகாப்பானது. மருமகன் மாதிரி இல்லாவிட்டாலும் அவன் நம்பும்வரை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒழுக்கம் சார்ந்த உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றொன்று பிள்ளைபெறும் பெண்களின் அந்தரங்கம் குறித்துப் புனைவு பேசியிருப்பது. மறைத்து மறைத்து வைத்திருந்த பெண்களின் உடல் பிரசவத்தின்போது காட்சிப் பொருளாகி விடுகிறது. வீட்டில் நடக்கும் பிரசவத்தில் இப்பிரச்சினை இல்லை. ‘நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ’ என்று அம்மா நினைவுபடுத்தும் அளவுக்கு இக்கதையில் இடம்பெற்றுள்ள பெண் கூச்சமற்றுப் போகிறாள். கதையின் உள்ளடக்கம் வெகுசனத்தளத்தில் இருந்தாலும் குழந்தை பெறுவதிலுள்ள பெண்களின் உளவியல் பிரச்சினைகளை எழுதிய வகையில் பொருட்படுத்த வேண்டிய கதையாகிறது.

காட்டின்மீது அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நிகழ்த்தும் வன்முறையினூடாக அலைவுக் குடிகளாக மாறும் பழங்குடிகளின் துயரம் குறித்தும் வனவிலங்குகளின் அழிவு குறித்தும் கலைச்செல்வி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். புத்தகத்திற்கு இரண்டு மூன்று கதைகளாவது இயற்கை மீதான மனிதனின் சுரண்டலைப் பேசக் கூடியதாக இருக்கிறது.

காட்டாளர்களிடமே வனவிலங்கை வேட்டையாடித் தரும் பணியை ஒப்படைக்கும் அரசு அதிகாரிகளின் மீதான கோபம் ‘கூடு’ என்ற கதையாகியிருக்கிறது. அவர்களை எதிர்ப்பதினூடாக நிகழும் பின்விளைவுகள் அனைத்தையும் பூர்வகுடிகளே அறிவார்கள். காடுகள் மீதான சுரண்டலைப் பேசும் மற்றொரு கதை, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது.’ தனியார் நிறுவனங்கள் அரசைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் காடுகளின் கனிம வளங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. பெருமுதலாளிகளின் பல தொழிற்சாலைகள் காடுகளில்தாம் நடத்தப்படுகின்றன; காடுகளின் அமைதியை உடைத்துக் கொண்டும் அறுத்துக் கொண்டும் எந்திரத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பழங்குடியினரும் விலங்குகளும் தந்திரமாகக் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும் அதற்குப் பின்புள்ள அரசியலையும் ஒரு புலியைக்கொண்டு இப்புனைவில் எழுதியிருக்கிறார். இக்கதையில் சித்ரா என்பது ஒரு புலி. ஒவ்வொரு புலிவேட்டைக்குப் பின்பும் பூடகமான ஓர் இலாபக் கணக்கு நிச்சயம் இருக்கும் என்ற பதற்றத்தையும் இக்கதை உருவாக்குகிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் குளிர்பானத் தொழிற்சாலையின் வருகைக்குப் பின் தரங்குறைந்த சுற்றுச்சூழல் மாறுபாட்டைச் சொல்லும் கதை ‘ஆழம்’. விவசாயத்தின் வீழ்ச்சி, ஆழ்துளைக் கிணறுகள் உருவாவதன் பின்னணி, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்ட தன் குழந்தையை மீட்கப் போராடும் ஒரு பெண்ணின் துயரம் என விரிகிறது புனைவு. இப்பிரச்சினைகள் எல்லாவற்றுக்குக் பின்பும் இருப்பது ஒரு குளிர்பானத் தொழிற்சாலை. மயங்கிக் கிடக்கும் அக்குழந்தையின் தாய்க்கு அவள் நிலத்தின் நீரை உறிஞ்சித் தயாரித்த குளிர்பானத்தையே அதிகாரிகள் குடிக்கத் தருகிறார்கள். அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் கலைச்செல்வியின் கதைகள் சுட்டிக்கொண்டே இருக்கின்றன. இக்கதையிலும் அத்தன்மையைக் காணலாம். ‘அறம்’ திரைப்படம் இதே பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டதுதான்.

மூன்று மகன்களுடன் வாழ்ந்த ஒரு குடும்பம் ஊருக்குள் வந்த ஒரு தொழிற்சாலையின் காரணமாகச் சிதைவுக்குள்ளாவதைப் பேசும் கதை, ‘அவை ஊளையிடுகின்றன.’ தொழிற்சாலையின் வருகை மண்ணையும் நீரையும் விஷமாக மாற்றுகிறது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். நாய்கள் ஊளையிடுவது தொழிற்சாலையில் ஒலிக்கும் சங்குக்கான குறியீடு; அப சகுனம். எந்தப் பிரச்சினையிலும் பெண்களே அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இக்கதையும் ஓர் உதாரணம். இக்கதையைக் குறிப்பிட்ட ஒரு நிலத்திற்கானதாகக் கருத முடியாது. கலைச்செல்வி இதனைத் தன் பாணியாகவே கையாள்கிறார். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சத்தம் உடல் சார்ந்த பிரச்சினைகளுடன் மனப்பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எழுதி எழுதித்தான் இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் உள்நாட்டுப்போர் அவர்களைச் சொந்தப் புலத்திலிருந்து வெளியேற்றி அகதிகளாக்கி வருகிறது. ‘கனவு’ என்ற கதை இதன் தீவிரத்தைப் பேசியிருக்கிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களைக் குறித்த புனைவாக இதனைச் சுருக்க முடியாது. எங்கெல்லாம் சொந்த நிலத்தில் வாழமுடியாமல் வேற்றுப்புலத்திற்கு மக்கள் நகர்கிறார்களோ அவர்கள் அனைவருக்குமான துயரத்தை இக்கதை பேசுவதாக வாசிக்கலாம். 1980-களுக்கு முன்புவரை சொந்த நாட்டினராலேயே அகதிகளாக்கப்படுவோம்; வன்புணரப்படுவோம்; கொல்லப்படுவோம் என ஈழத்தைச் சார்ந்தவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்; ஆனால் நடந்தது. பல நாடுகளிலும் இப்பிரச்சினை இருக்கிறது. எந்நிலத்தில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தினரின் துயரங்களுடனும் பொருத்திப் பார்க்கும் வாசிப்பை இக்கதை வசப்படுத்தியிருக்கிறது.

குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டல்கள் பற்றிய கலைச்செல்வியின் கதைகளும் முக்கியமானவை. இளம்வயதில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு மனப்பிறழ்வுக்குள்ளான ஒருவனின் கதை, ‘மாயநதி.’ படைப்புத்தளத்தில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்குள்ளாவது குறித்தே அதிகமும் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்விஷயத்தில் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்தும் கவனப்படுத்தவேண்டி இருக்கிறது. கலைச்செல்வி இந்த இடத்தில் தனித்துத் தெரிகிறார். ‘பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை’ என்பதைத் தன் எழுத்தில் பின்பற்றி வருபவர் கலைச்செல்வி. அப்பா இறந்து போகிறார்; அம்மா வேலைக்குப் போகிறாள். மகனின் தனிமையைப் பயன்படுத்திக்கொள்கிறான் எதிர்வீட்டு இளைஞன். எதிர்க்கவும் முடியாமல் காட்டிக் கொடுக்கவும் இயலாமல் ஏற்படும் பதற்றம் நாளடைவில் மனநிலை பாதிப்பாக மாறுகிறது. அவனுக்குள் ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். இந்த மாய உலகம் புறச்சூழலுக்கு மனப்பிறழ்வாகத் தெரிகிறது. நகர வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் ஒன்று தனிமை. இந்தப் பிரச்சினையைச் சரியான தருணத்தில் கவனிக்கத் தவறும்போது அதன் முடிவு என்னவாக இருக்கும் என்ற எச்சரிக்கையும் புனைவுக்குள் உண்டு. எதார்த்தமும் மாயமும் கலக்குமிடம் வெளிப்படாமல் நகர்கிறது புனைவு.

பிரியாணி’ இவரது குறிப்பிடத்தக்கக் கதைகளுள் ஒன்று. அறிவுக் குறைபாடுள்ள ஒரு பெண்ணைப் பிரியாணி வாங்கிக் கொடுத்துச் சீரழித்த கதை. அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வந்தவனை அண்ணன் என்றே அழைக்கிறாள். அவளது அப்பாவித்தனத்தையும் வயிற்றுப் பசியையும் அவன் பயன்படுத்திக் கொள்கிறான். கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சி இல்லை; திரும்பத் திரும்பப் பிரியாணி ஆசையைக் காட்டி அவளிடம் எல்லை மீறுகிறான். இறுதியில் ஒரு கும்பலுடன் வருகிறான். உடலளவில் பருவம் எய்தியவளாக இருந்தாலும் மனதளவில் அவள் குழந்தை. இச்செயலும் ஒரு குழந்தைமீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வுதான். வந்தவன் ‘குடித்திருந்தான்’ என்ற தகவல் கதைக்குள் இடம்பெற்றுள்ளது. இது கதைக்குப் புறவயமானது; ஆண்களைக் காப்பாற்றும் செயல். நிதானம் தவறியதால்தான் அப்படி நடந்துகொண்டான் என்பதற்குக் கதையில் எவ்வித நியாயமும் செய்யப்படவில்லை. அவன் அடுத்தடுத்து வரும்போது இந்தக் குறிப்பு இல்லை. ‘முத்துபொம்மு’ என்ற கதையையும் இதனுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தில் கூட்டுப்பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட எட்டு வயதுச் சிறுமியை இக்கதை நினைவூட்டுகிறது. இக்கதையில் வரும் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அறத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வு அந்தப் பெண்ணைத் தெய்வமாகப் புனைந்திருக்கிறது. இக்கதையில் உருவாக்கும் நிலக்காட்சியையும் எந்த நிலத்தின் மலைப்பிரதேசங்களுக்கும் பொருத்தி வாசிக்கலாம்.

புத்தரின் தொன்மம் குறித்துச் ‘சவுந்தரி’, ‘ஓசை’ ஆகிய இரு கதைகளை எழுதியிருக்கிறார். முதல் கதை மறைமுகமாகவும் இரண்டாம் கதை நேரடியாகவும் புத்தரின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது. யசோதையின் பக்கம் நின்று சித்தார்த்தனின் நள்ளிரவு வெளியேற்றத்தைப் பார்க்கும்போது அவனது செயல் அறமற்றதாகவே தோன்றுகிறது. அரண்மனைக்குள் மிகப் பாதுகாப்பாக வளர்த்த சுத்தோதனரையும் யசோதை விமர்சிக்கிறாள். இல்லறத்தின் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகும் சித்தார்த்தன்கள் காலந்தோறும் உருவாகிக்கொண்டே தான் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் ‘சவுந்தரி’ கதைக்குள் இருக்கிறது. ‘நீரோசை’, ‘மாயக்கண்ணன்’ ஆகிய கதைகள் கங்கைக்கரையின் தொன்மத்தைத் தாங்கி நிற்பவை. அப்பா, அம்மா, தாய்மாமா என அடுத்தடுத்து அனைவரும் இறந்து போகிறார்கள். கங்கையின் கரையில் அவர்கள் தங்களை எரித்துக் கொள்வதின் மூலம் தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்கிறார்கள் என்பது ஒரு கற்பிதம். அம்மா மரணத்தின் ஈரம் காயும் முன்னே மறுமணம் செய்த அப்பாவையும் அக்காவின் இறப்பிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் அக்காவின் நினைவுகளில் வாழும் மாமாவையும் கங்கைக்கரை சமமாகக் கருதுமா? இக்கதைகளை வாசிப்பவர்கள்தாம் இவை உருவாக்கும் இடைவெளிகளை இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

வெகுசன இதழ்களிலும் இருண்மை நிறைந்த உருவகக் கதைகளைக் கலைச்செல்வி எழுதியிருக்கிறார். புனைவிலிருந்து கதையை வெளியேற்றும் உத்தியை சில கதைகளில் காணமுடிகிறது. சில கதைகள் கதையுடன் சேர்த்து வாசகனையும் வெளியேற்றி விடுகிறது.

எல்லாக் கதைகளிலும் அரசியலைப் போகிற போக்கில் சில வரிகளிலாவது உள்ளிறக்கியிருக்கிறார் கலைச்செல்வி. ‘நாங்கூட பாத்தாங்கிளாசு வரைக்கும் போனேன்… ஜாதி சர்டிட்டு இல்லாம பரிச்ச எழுத முடியில… அவர்கள் குடியிருப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாம். பிறகு நடைபாதைக்கு வந்து விட்டதாகச் சொன்னாள்’ (படித்துறை). இந்தக் கதை சாதியம் குறித்தோ அரச வன்முறை பற்றியோ நேரடியாகப் பேசும் கதையில்லை. இவர் பேசும் அரசியல் அனைத்தும் இலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் காய்களைப் போன்றவை. பூர்வக்குடிகளின் நிலத்தைப் பெரும் பணக்காரர்கள் தங்களின் ஓய்வுக்கான மாளிகைகளாக மாற்றிக் கொள்கிறார்கள். நிலம் பறிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையின் ஒழுங்கும் சிதைவுக்குள்ளாகிறது. இதுபோன்று புறப்பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறார்.

அன்னை’, ‘படித்துறை’ கதைகளில் வெளிப்படும் அரசியல் பெண்ணியம் சார்ந்தது. தங்கள் வீட்டுப் பெண்களின் திருமணங்களில்கூட ஆதாயம் தேடும் ஆண்களின் சுயநலத்தை எழுதியிருக்கிறார். சிலநேரங்களில் அம்மாவே அவளது இருப்பு சார்ந்து அவ்வீட்டு ஆண்களின் பக்கம் நிற்கவேண்டிய சூழலும் இக்கதைகளில் வெளிப்படுகிறது. இவ்விரு புனைவுகளில் வெளிப்படும் பெண்களின் துயரத்தை வாசகனால் எளிதாகக் கடக்க முடியாது. திருமணம் கைகூடாமல் முடிந்துபோகிற காதலின் வலியை இப்பெண்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள். எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தாம் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதேபோல் நாத்தனார்கள் குறித்துப் பல கதைகளில் எழுதியிருக்கிறார். இவர்களால் குடும்பத்திற்குள் நிகழும் இடையீடுகள் எவ்வாறு அந்தக் குடும்பத்தையே கலைத்துவிடுகின்றன என்ற பார்வை இக்கதைகளுக்குள் இருக்கிறது.

கலைச்செல்வி தம் புனைவுகளில் சொல்வதைவிடச் சொல்லாமல் மௌனம் காப்பதும் பிரதானமாக இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் இந்த மௌனம் ஓர் இருட்டைப் போல ஒளிந்திருக்கிறது. சில கதைகளில் ஒளிந்திருக்கும் இந்த அதீத மௌனம் வாசகனை வெறுமைக்குள்ளாக்கிவிடும் சாத்தியமும் இருக்கிறது. எந்த வரியிலும் கதையின் தடம் மாறக்கூடும் மொழிச் சிக்கனம் இவரது புனைவுகளில் கூடிவந்திருக்கிறது. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக் கொள்ளலாம். வெகுசன உள்ளடக்கமாக இருந்தாலும் தம் புனைவுத் திறனால் முக்கியமான ஒன்றாக மாற்றிக் காட்டுகிறார். சில கதைகளில் இது நிகழவில்லை. தொடக்க காலக் கதைகளில் ஒரு தெளிவான படிமமும் கதையும் இருந்தது. பிற்காலத்தில் எழுதிய கதைகளின் மீது ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தன்னையே அவர் கடந்திருக்கிறார். மொழியின் சிக்கனம் கதைகளின்மீது ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

***

சுப்பிரமணி இரமேஷ் – சென்னை இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரிகிறார். ’எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்‘, ‘தொடக்ககாலத் தமிழ் நாவல்கள்’, ‘தற்காலப் பெண் சிறுகதைகள்’ ஆகிய கட்டுரை நூல்களும், ’ஆண் காக்கை’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. மேலும், தமிழ் சிறுகதை வரலாறும் விமர்சனமும், கதைவெளிக் கதைஞர்கள், பெருமாள் முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகை நூல்களையும் தொகுப்பாசிரியராக வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular