Thursday, March 28, 2024
Homeஇலக்கியம்ஒளபத்யம்

ஒளபத்யம்

மயிலன் ஜி சின்னப்பன்

1

ஆரதியின் முகத்தில் நாளுக்கு நாள் கூடிவரும் சஞ்சலக் கீற்றுகள். அவற்றையவள் மறைக்க முயலாமலில்லை. மீறி வெளிப்பட்டுவிடத்தான் செய்கிறது அகம் – தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாத தற்கவசம், தோல்வியுற்று உடையும்போது உண்டாகும் மனவழுத்தம் – அதுதான் வாதை.  கண்கள் எங்கு மேய்ந்தாலும் காதுகளைக் கூர்த்தீட்டி இந்திராம்மாள் இருக்கும் பக்கமாக வைக்கச் சொல்கிறது பாழாய்ப்போன மனம். செவியுறும் ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான பூரண அர்த்தத்துடன் உள்ளெடுத்து விதைத்துக்கொண்டாள்.

இந்திராம்மாளின் பெருகிய கண்கள் பேரக்குழந்தையின் விலா எலும்புகளில் பதிந்திருந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவை துருத்திக்கொண்டு வெளியே தெரிவது அவளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. தன் குலவாரிசுக்கு ஏன் இந்தச் சாபக்கேடு என்ற பொருமல். பால்பவுடரைக் கலக்கினால் கிடைக்கும் வெண்ணிற திரவத்தை நிந்தித்தாள். இதெல்லாம் தன் பூர்வபிறப்பின் பாவமா என்று வாய்விட்டு சொன்னாள். புட்டியில் கவிழ்த்து மூடும்போது சிந்தியவற்றை, சிறு வெண்துணியால் துடைத்து வீசும்போது அவளது உடல்மொழியில் அத்தனை வெறுப்பு.

குழந்தையின் கண்களுக்கு முன் மட்டும் தன் முகத்தை இந்திரம்மாள் தணிய வைத்துக்கொண்டாள். புட்டி பாலின் மணம் அறியாத குழந்தை மடியில் கிடந்து பேதலித்தது. ஒருவாறு அதனைப் பிடித்து, தலையை நிதானப்படுத்தி, வாயில் திணித்த போது, சப்புக்கொட்டுவதற்கு முன்பே மடமடவென கசிந்த பாலில் அந்த பிஞ்சிற்கு புரைக்கேறியது. ஆரதி அதற்கும் அசையவேயில்லை.

நாடக பாவத்தோடு இந்திராம்மாள் குழந்தையைத் தோளில் சாய்த்தபடி, முதுகில் தட்டிக்கொடுத்து ஆற்றுப்படுத்தினாள் – தொடர் கொஞ்சல்கள் – நடுநடுவே ஆரதியை நோக்கிய நைச்சியமான கணைகள்.

பால் சுரக்காமல் போவது இந்த தலைமுறைப் பெண்களிடம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டதாக முந்தைய தினம் ஆலோசித்த மருத்துவர் சொன்னபோது இந்திராம்மாள் ஒரு பெருமூச்சுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கூடுமானவரை பவுடர் எதையும் பயன்படுத்த வேண்டாமென்றும், பாலூட்டும் தாயைச் சுற்றியிருப்பவர்கள் போதுமான அளவிற்கு மனதளவில் அவளை ஊக்குவிக்க வேண்டுமென்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், இந்திராம்மாள் ரோரோரோவென குழந்தையிடம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆரதி முகத்தில் எந்த ரேகைகளும் ஓடவில்லை. தாய்க்கு தன்னம்பிக்கை கூடிவரும் போது குழந்தை தன்னிச்சையாக தசை போட்டுவிடும் என்று அந்த மருத்துவர் சொல்வதை இருவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தோஷ் மட்டுமேனும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்ததே, அவருக்குப் போதுமாக இருந்தது. வெளியே வந்த வேகத்தில் நேரடியாகப் போய் இரண்டு பால்பவுடர் டின்களை இந்திராம்மாள் வாங்குவதை ஒன்றும் செய்யமுடியாத தோரணையில் சந்தோஷ் உணர்வற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் ஆரதி அவனைக் கடந்துபோய் காரில் ஏறியிருந்தாள்.

குழந்தை மெல்ல மெல்ல புட்டியிலிருந்த பாலைக் குடித்து முடித்தது. ங்க்ர்ர்ர் என்றோர் ஏப்பம் நிசப்தமான அந்த வீட்டில் தனித்து ஒலித்தது. இந்த இரண்டு வாரங்களாக, இந்திராம்மாள் குழந்தையை முழுக்கவே தன்னகத்தில் வைத்துக்கொண்டு உரிமை பாராட்டுவது ஆரதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதை வலிந்துப்போய் எதிர்க்கவும் முடியவில்லை. குழந்தை கண்ணயர்ந்த பின்னரும் இந்திராம்மாளின் கொஞ்சல் தொடர்ந்து கொண்டிருந்தது; ஆரதி ஒருமாதிரி நிதானமிழக்க ஆரம்பித்தாள். அத்தனை வெக்கை இல்லையெனினும் வியர்த்துக் கொட்டியது.

மெல்ல அங்கிருந்து விலகி பால்கனியில் போய் நின்று கொண்டாள். எத்தனை நேரம் அங்கு நின்றாள் என்ற பிரக்ஞையே இல்லை – குறிப்பற்ற மனவோட்டங்கள் – பேறுகாலத்தின் தொடர்ச்சியான வெறுமை இன்னும் அந்த முகத்திலிருந்து அகலவில்லை. சந்தோஷ் எப்போது வந்து அவளுடன் இணைந்து கொண்டான் என்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அவளது எண்ணவோட்டங்களை அறிந்து கொண்டு அதே அலைவரிசையிலேயே தானும் யோசிப்பதைப் போன்ற தணிவு அவன் முகத்தில் இருந்தது. அவளை மீட்கத் துடிக்கும் தவிப்பாக இல்லாமல், ஆத்மார்த்தமான அணுகலாகத் தெரிந்தது.

விட்டேத்தியாக இருவரும் அந்த பதினெட்டாவது மாடியின் விளிம்பிலிருந்து பொழுது அஸ்தமிப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மெல்லிய இருள் கூடி வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிடிமான சுவற்றின் மீதிருந்த அவளது கரத்தை ஆதரவாகப் பற்றி, சில நிமிடங்கள் நின்றபோது, அவளுக்கும் அவன் அப்படியே எதுவும் பேசாமல் இருந்தால் தேவலாம் என்றுதான் இருந்தது. அதனாலேயே அவனது பார்வையைத் தவிர்த்து திரும்பி நின்று கொண்டாள். பின்னாலிருந்து மெல்லிய குரலில், தான் ஒரு ரகசியத்தை அவளிடம் சொல்ல வேண்டுமென்று அவன் கிசுகிசுத்தான்.

திரும்பிப் பார்த்த போது அவனது விழிகளிலிருந்த கூர்மை அவளை மறுபேச்சு எதுவுமின்றி இசையச் செய்தது. அதைத் தெரிந்துகொண்ட பின்னர் அவள் உட்படுத்தப்பட்டிருக்கும் பழிச்சொல்லெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகி அவளைப் பீடித்திருக்கும் குற்றவுணர்ச்சி வெகுவாகக் குறையுமென்று அவளது கண்களை இன்னும் நெருங்கிப் பார்த்தான். அவள் இமைக்காமல் நின்றாள். அதோடு தனக்கும் ஒரு பாரத்தை இறக்கி வைத்ததன் வலு கிடைக்கும் என்று வேறெங்கேயோ பார்த்து சொன்னான். அதற்குள் அவள் முழுமையாகத் தயாராகியிருந்தாள்.

2

கடற்கரையை ஒட்டிய அந்த சாலையில் நண்பர்கள் ஐவரும் காற்றின் விசைக்கெதிராக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். உடம்பில் ஏறிப்போயிருந்த மதுவிற்கு, கடலே பழுப்புநிற திரவமாகத்தான் தெரிந்தது. சொல்லப்போனால் ஊரே மந்தாரமாகத்தான் இருந்தது. இயல்பிலேயே எல்லோரும் ஒரு ராக் இசைக்கான நடன அசைவுடன் திரிந்து கொண்டிருந்தார்கள்.

சனிக்கிழமை பின்மாலைப் பொழுதிற்கான மின்னும் டிஸ்கோ விளக்குகள், கையில் மதுவுடன் இளைஞர்கள், உயர் ரக சுருட்டுகளை சுவாசிக்கும் வெளிநாட்டவர்கள் என அந்த அடைசலான வீதி திருவிழா கோலத்தில் திணறியது. இரவு கேளிக்கை கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு சிட்டைகள் சகிதம் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தார்கள். மரியாதைக்குரியர்வளாக தெரிந்தவர்களும்கூட அதுவொரு சம்பிரதாயம் போல மாய்ந்து மாய்ந்து போய் அந்தச் சிட்டைகளைக் கைப்பற்றியபடி இருந்தார்கள்.

இவர்களின் பக்கமாக வந்த சிப்பந்தி ஒருவன், கையிலிருந்த ஜிகினா சிட்டைகளை நீட்டி, தனிநபர் நுழைவுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றும் ஒரு ஜோடிக்கு இரண்டாயிரத்து ஐநூறு மட்டுமென்றும், இயன்றவரை மதுவருந்திக்கொள்ளலாம் என்றும் பரபரப்பான உரத்த குரலில் சொன்னான். விற்பனையின் முடிவிலிருப்பதைப் போல இவர்களை நெருக்கி  அவசரப்படுத்தினான். இவர்கள் முகத்தை முகம் பார்த்துக்கொண்டிருக்க, தேவை அறிந்தவனைப் போல, ஜோடிக்கு சுற்றுலா வந்த பெண்கள் அரங்க நுழைவாயிலேயே கிடைப்பார்கள் என்றும் உடனடியாகக் கண்ணடித்தான்.

இலவசமாக உள்ளே நுழைய அந்த பெண்களுக்கு கசக்கப் போகிறதா என்ன? என்று தூண்டிலை நீட்டிப் போட்டான். நண்பர்களில் ஒருவன், அப்படி ஒரு பெண்ணுக்கு தண்டம் அழுவதில் தனக்கென்ன அனுகூலம் என்று அவனிடமே கேட்கப் போக, புரியாத மொழியில் ஒரு வசையை மொழிந்தவன், ‘அதெல்லாம் உன்னுடைய சாமர்த்தியம்’ என்று சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டான்.

விசாரித்த நண்பன் ஆலோசிப்பதைப் போல மற்றவர்களைப் பார்த்ததும், சந்தோஷும் இன்னொருவனும் இரு வேறு காரணங்களுக்காக பின்வாங்கினர் – அறிமுகமற்றவர்களுடன் தன்னால் சகஜமாக முடியாதென சந்தோஷும், தான் ஏற்கனவே மதுவில் அன்றைய நாளுக்கான தெவிட்டு நிலையைத் தாண்டி விட்டதாகவும் அதற்காக இன்னொரு முறை அவ்வளவு செலவு செய்ய தான் தயாரில்லை என்று மற்றவனும்.

எஞ்சிய மூவரும் மூன்று ‘ஜோடி’ சிட்டைகளைப் பற்றிக்கொண்டு பிரிந்துவிட, இவர்கள் மட்டும் கடற்கரையை நோக்கி முன்னேறினார்கள்

‘நீ சொல்லிய காரணம் நிஜமா சந்தோஷ்?’

‘முற்றிலுமாக’

‘நான் அவ்வளவு உண்மையாகச் சொல்லவில்லை. எனக்கு நிச்சயமற்ற ஒன்றிற்காக செலவு செய்ய விருப்பமில்லை. அந்த பெண்களைத்தான் சொல்கிறேன்.’

‘அதில் நிச்சயமற்றதென்று எதைக் குறிப்பிடுகிறாய்?’

‘அவர்கள் என்னுடன்தான் நேரம் செலவிட வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை அல்லவா?’

‘ஆம். அவர்கள் பரத்தைகளா என்ன?’

‘மிகச்சரி. அதைத்தான் சொல்கிறேன். உள்ளே சென்றப்பின்னர் அவள் தன்போக்கில் போய்விட்டால், எதிர்ப்பார்ப்பு பூர்த்தியடையாத அழுத்தம் இந்த சிறப்பான நாளினை சோக கதியில் முடித்துவிடும்’

‘ஆம்.. இதுவொரு மிகச்சிறப்பான நாள்தான்’

‘ஆனால் இந்த நாள் இன்னும் முடிந்துவிடவில்லை’

‘மேலும் சிறப்பாக்க திட்டங்கள் வைத்திருக்கிறாயா?’

‘கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக்கொள்’ – அதிராமல் சிரித்தான்

‘என்னவென்று சொல்’

‘உனக்கு விருப்பமிருக்குமா தெரியவில்லை. ஆனால் எனக்கு துணையாகவேனும் வர நீ சம்மதிக்க வேண்டும்’

‘சரி போகலாம்’

‘எங்கேயென்று கேட்கவில்லையே?’

‘விருப்பமின்றியும் வரவேண்டும் என்ற நண்பனின் ஆணைக்குப் பின் அந்த கேள்வியில் எதுவும் நியாயம் இல்லை’

இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அதே விழாக்கோல வீதியைக் கடந்து ஒருமுறை வலதாகவும், இருமுறை இடதாகவும் திரும்பி ஒரு சந்திற்குள் அந்த நண்பனுடன் சந்தோஷும் போனான். போய் நின்று அலைபேசியில் யாரையோ அழைத்து வழியை நண்பன் உறுதிப்படுத்திக்கொண்டதும் இருவரும் மேலும் நடந்தார்கள்.

‘நீ செல்லும் இடத்தைப் பார்த்தால் வேசிகள் இருக்கும் வீதி போலத்தான் இருக்கிறது’

‘உன்னைக் கட்டாயப்படுத்தி அங்கெல்லாம் அழைத்துச் செல்லும் அளவிற்கு நான் மோசமானவன் இல்லை என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நம்பிக்கையோடு வா..’

‘அது சரி.’

‘நீ கேட்காமலே கூட சொல்லி விடுவதுதான் சரியென்று எனக்கும் படுகிறது. இதுவுமொரு கேளிக்கை விடுதிதான். ஆனால் பெண்கள் அங்கேயே இருப்பார்கள். அங்கிருக்கும் நேரம்வரை எல்லை மீறாமல், நாம் அவர்களோடு மது அருந்தலாம், நடனமாடலாம்.’

‘எனவே இது உனக்கு ஓர் உத்தரவாதமான கேளிக்கையாகப்படுகிறது.’

‘மிகச்சரி. கொடுக்கும் பணத்திற்கு எனக்கு சரியான பதிலீடு இருக்க வேண்டும்’

‘ஆனால் நீதான் போதுமான அளவிற்கு மதுவருந்தி விட்டாயே?’

‘ஆம். எனக்கு இங்கு மது முக்கியமல்ல.’

‘இதற்கு ஏன் நீ நேரடியாக ஒரு விலைமகளிடம் செல்லக்கூடாது?’

‘இல்லை. எனக்கு அது அவசியமில்லை. அறச்சிந்தனை என்றெல்லாம் நினைத்து விடாதே. விருப்பம் சார்ந்த ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்’

‘அறம், அறமற்றது என்றெல்லாம் பேசும் ஸ்தலத்தில் நாம் நின்று கொண்டிருக்கவில்லை. ஒரு விதத்தில் எனக்கு இதுவொரு மட்டமான சிற்றின்பம் என்று தோன்றுகிறது. கோபித்துக்கொள்ளாதே’

‘அப்படியென்றால் உடலுறவை நீ பேரின்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?’

‘இல்லையா?’ (இந்த இடத்தை விவரிக்கும்போது சந்தோஷ் ஆரதியின் கண்களை சந்திக்கவே இல்லை)

‘கொஞ்சம் பெரிய சிற்றின்பம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.’

சந்தோஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மற்றவன் சொன்னதை அவன் அங்கீகரித்தும் விடவில்லை. எந்த குறுகுறுப்பும் இல்லாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

நீண்ட அந்த சந்து வளைந்து முடியுமிடத்தில் மற்றொரு பிரதான சாலை. அந்த சாலையிலிருந்த எந்தவித அலங்காரமோ நவீனத்தின் சாயலோ அற்ற முகப்பைக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திற்குள் சந்தோஷை அவன் அழைத்துச் சென்றான்.

இருண்ட முன்பகுதியைத் தாண்டும் வரை அந்த இடத்தில் ஒரு கேளிக்கை விடுதி இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இருப்பதாகத் தெரியவில்லை. கருங்கல் நடைப்பாதையில் யோசனையுடன் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, சற்று தூரத்தில் மெல்ல அதிரும் இசை கேட்பதாகப் பட்டது. திடீரென அவர்களுக்கு மிக அருகில் ஒரு கதவைத் திறந்துகொண்டு அலைபேசியில் பேசியபடி ஒருவன் வெளியே வந்தான். அந்த இசையின் முழு விஸ்தீரணமும் அப்போதுதான் இடியைப் போல முழங்கியது. மென்மையான இருளின் ஊடாக லேசர் விளக்குகள் மெல்ல இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தன.

நண்பன், பதிவு செய்யும் மேசையின் பக்கம் போகும்போது சந்தோஷும் பின்தொடர்ந்தான். நுழைவுக்கு எழுநூறு ரூபாய் என்றும் அதற்கு ஒரு கோப்பை பியர் இனாம் என்றும் அங்கிருந்தவன் சொன்னான். நண்பன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

‘பெண்கள்?’

‘மது மேசைக்கு அருகில் இருப்பார்கள். நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று சொல்லிக்கொண்டே இருவர் கைகளிலும் நுழைவுக்கான முத்திரையை வைத்தான்.

அந்த நெரிசலான இடத்திற்குள் ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் உத்தேசமாக மனிதர்களைப் போலவும் பல உருவங்கள் ஆடிக் கொண்டிருந்தன. ஸ்பரிசங்கள் துச்சமாகத் தெரிந்தன. நெருங்க நெருங்க ஒலிஒளிகள் அத்துமீறிக் கொண்டிருந்தன. டிஸ்கோ புகையும், சிகரெட் புகையும் பார்வையை நையாண்டி செய்தன.

மது விநியோகிக்கும் மேசை ஓரோரத்தில் தொகுப்பு விளக்குகளுடன் மின்னியது. கோப்பையைப் பற்றிய வேகத்தில் நண்பன் ஒரு பெண்ணைத் தேர்வு செய்தான். மாநிறத்தில், அளவான ஒப்பனையில், ரொம்பவே அளவான ஆடையில் அவள் தேர்விற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தாள். அந்த கணத்தில் அவளை ஒரு வேசியாகவும் யோசித்துப் பார்க்க முடிந்தது.

சந்தோஷ் பாவனையற்று நிற்க, அங்கிருந்தவர்களில் ஒருத்தி அவளாகவே வந்து இவன் கையைப் பிடித்து அந்த கூட்டத்திற்குள் அழைத்து சென்றாள். சந்தோஷுக்கு துளியும் பிடிக்காத வடகிழக்கு மாகாணத்து முகம். திகட்டக்கூடிய அளவிற்கு உதட்டுச்சாயம் அவளது பிடிமானத்திலிருந்து அவனை விலகச் செய்தது. எதிரில் நின்றுகொண்டு அவனது தோள்களைப் பற்றியபடி மிதமான நடன அசைவுகளை அவள் செய்து கொண்டிருந்தது ரொம்பவே ஆபாசமாகப் பட்டது. ஒலிப்பெருக்கிகளின் அதிர்வுகளை அப்படியே தன் அங்கங்களில் கிடத்திக் கொண்டவளாக வெட்டி வெட்டி வளைந்தாள்.

சிறிய மார்பகங்களுக்கான தாழ்வுணர்ச்சியால் அவள் அதிகம் குனிந்து பிளவை முக்கியப்படுத்துவதாக அவனுக்கு தோன்றுவதற்கும், அந்த இசை முடிவுற்று அவள் முன்னேறி வந்து அவன் மீது உரசுவதற்கும் சரியாக இருந்தது. மெல்ல விலகி, கையிலிருந்த பியரை உறிஞ்சிய போது அதுவும் அதீத நீர்மத்தன்மையுடன் எந்தவொரு சொரசொரப்பும் இல்லாமலிருக்க, ஒரே வினாடியில் அந்த ஒட்டுமொத்த இடமும் அவனுக்கு போலியாகத் தெரிய ஆரம்பித்தது.

சட்டென பூரணமாக அங்கிருந்து விடுபட்டதைப் போல அவனுக்கு தோன்றியது. இவனுக்கு துணையாக வந்தவளும் மீண்டும் போய் அந்த மதுமேசைக்கு அருகிலிருக்கும் பெண்களுடன் சேர்ந்து கொண்டாள்.

தனித்துப்போய் சுவற்றில் சாய்ந்தபடி அந்த இடத்தின் நிகழ்வுகளை நோட்டமிடுவதைப் போல் நின்றான். அங்கிருந்த இருளுக்கு அவன் கண்கள் அதற்குள் பழகியிருந்தது. இடமிருந்து வலமாக அந்தக் கூத்தை அளப்பதைப் போல பார்க்க ஆரம்பித்தான்.

கடைக்கோடியில் இசைத்தட்டுகளும், கணிப்பொறியுமாக ஒருவன் | சற்று தொலைவில் சீருடை அணியாத கண்காணிப்பு தடியன் ஒருவன் | பருத்த உடலுடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆசாமி பதின்ம வயதினளைப் போல தோன்றக்கூடிய ஒருத்தியை உடலோடு அணைத்தபடி, அவள் விலக விலக மேலும் மேலும் இறுக்கிப் பிடிக்கிறான். என்றோ நேஷனல் ஜியோகிராஃபியில் பார்த்த சிறுத்தையின் பிடியில் சிக்கி தப்பித்து, மீண்டும் சிக்கி, மீண்டும் தப்பித்து குரல்வளையில் கடிபடும் சிறு மான்குட்டியைப் போல அவள் தெரிகிறாள் | அலுவலகப் பணியிலிருந்து நேரடியாக வந்தவனைப் போல மிக நாகரிகமாக உடையணிந்த ஒருவனின் கழுத்துப் பட்டையை பிடித்து இழுத்தவாறு ஒருத்தி நடந்து கொண்டிருக்கிறாள். அவளது சேவகனைப் போல அவன் பின்னாலேயே போய் கொண்டிருப்பது, ஒட்டுமொத்த ஆணினத்தையே சபிக்கும் காட்சியாக தெரிகிறது | இரு கைகளிலும் மதுக் கோப்பைகளுடன் ஒருவன் இரண்டு பெண்களுடன் உரசிக் கொண்டிருக்கிறான். கோப்பைக்கு ஒருத்தி என்ற நிர்வாக ஒழுங்குமுறையாக அது இருக்க வேண்டும். ஆட்டத்தின் போது மது சிந்துவதை அவன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை | நாற்பது வயது நெருங்கியவளாக தெரிந்த ஒருத்தியைக் கட்டியணைத்தபடி கல்லூரி மாணவன் ஒருவன் ஆடும்போது நடன அசைவின் சாயலையொத்த பாணியில் அவளைச் சுழலச்செய்து பிடிப்பதைப் போல அவளது பிருஷ்டங்களை அழுத்திப் பற்றுகிறான் | முத்தமிட முயற்சிக்கும் ஒருவனிடமிருந்து சாதுர்யமாக விலகி ஆடுகிறாள் ஒருத்தி. ஏமாற்றத்தில் சீண்டப்பட்டவன் தோள்ப்பட்டையில் தெரியும் அவளது உள்ளாடைப் பட்டியை ஒருமுறை இழுத்து விடுகிறான். உடனே இந்த மூலையில் இருக்கும் சீருடை அணிந்த பாதுகாவலன் அவனை எச்சரிக்கிறான். சிறிய சலசலப்பிற்கு பின் மீண்டும் அதே பெண், அவனுடன் அதே நாடக நெருக்கத்துடன் ஆடுகிறாள் | மதுமேசைக்கு அருகில் நண்பன் தான் தேர்ந்தெடுத்த பெண்ணுடன் பேசியபடி அசைகிறான். அந்த அசைவுகள் நண்பனென்ற ஸ்தானத்திலிருந்து ஓர் அவமான எண்ணத்தைக் கொடுக்கிறது.

இவையனைத்திற்கும் நடுவே,

குறுக்கும் நெடுக்குமாக ஒருவன் கூட்டத்திற்குள் புகுந்து வருகிறான். மிகத் தந்திரமாக ஒவ்வொரு முறையும் ஏதோ செய்துவிட்டு வருகிறான். உன்னிப்பாக கவனிக்கும்போது, ஆடிக்கொண்டிருக்கும் பெண்ணின் இடது கரத்தை அவன் பிடித்துவிட்டு வந்துவிடுவது தெரிகிறது.

அந்தப் பெண் சட்டென தன் இணையை மது மேசையை நோக்கி அழைத்து செல்கிறாள். அங்கு அவன் மீண்டும் மது வாங்க நிர்பந்திக்கப்படுகிறான். கோப்பையில் மது இருப்பதாக அவன் காட்டினாலும், தனக்கு வேண்டுமென்று சொல்கிறாள். பியர் ஒரு கோப்பை ஐநூறு ரூபாய் என்கிறது விலைப்பட்டியல். அவன் யோசிக்காமல் வாங்க முனையும்போது, ஒரு சிறிய கண்ணாடிக்கூம்பில் இருக்கும் காக்டெயில் வேண்டுமென்கிறாள் – ஆயிரம் ரூபாய். அவன் சற்று யோசிக்கும்போது தன்னை அணைத்திருக்கும் அவனது கரத்தை அவளே இழுத்து தன் மார்பின் மீது வைத்து சலுகையை நீட்டிக்கிறாள். வணிகம் முடிகிறது. ஒரே மிடறில் அந்தக் கூம்பினைப் பருகிவிட்டு அவனோடு கூட்டத்திற்குள் நுழைகிறாள். குறுக்கே நடக்கும் ஆசாமி அடுத்த பெண்ணை உசுப்பிவிட்டு வருகிறான். அடுத்த வணிகம். அந்த அமைப்பில் ஒருவன் அதிகம் செலவு செய்யச் செய்ய அவனுக்கு கூடுதல் உடல் சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த இடத்தைப் பற்றி ஏற்கனவே விஷய ஞானம் உள்ளவர்கள் ‘அவள்’கள் அப்படி இழுக்கும்போது கூடுமானவரை மதுமேசை பக்கம் நகராமல் காலத்தைக் கடத்துகிறார்கள். நகரவே செய்யாதவர்களிடமும் மேற்கொண்டு மது வாங்க மறுப்பவர்களிடமும் செல்லமாக கோபித்துக்கொண்டு அந்த பெண்கள் விலகி வந்து தேர்வுப்பட்டியலில் நின்று கொள்கிறார்கள். அதே ஆண்கள் மீண்டும் அவர்களிடம் வந்து கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்க லஜ்ஜையாக இருக்கிறது.  

அந்த மொத்த கூடாரத்தின் இயங்குமுறை புரிந்ததும் சந்தோஷுக்கு அந்த இடத்தில் நிற்கவே அருவருப்பாக இருந்தது. கையிலிருந்த அந்த நீர்த்துப்போன மதுவை சுவரோடு சேர்த்து கவிழ்த்துவிட்டு, பாக்கெட்டுக்குள் இருக்கும் பாங்கு உருண்டையை எடுத்து வாய்க்குள் போட்டான். கன்னம் சில்லிட்டு வாயோரத்தில் வியர்க்க ஆரம்பித்த நேரத்தில் மீண்டும் அந்த கூட்டத்தைப் பார்த்தான். மனித-மிருக புணர்வு காட்சியைப் பார்ப்பது போல உடம்பெல்லாம் கூசியது. சில இணைகளில் பெண்கள் மிருகமாகவும், சிலதில் ஆண்கள் மிருகமாகவும். ஆடிக்கொண்டிருக்கும் நண்பன் ஒரு சிறிய காண்டாமிருகமாகத் தெரிந்தான்.

வெண்குதிரையாக தெரிந்த பெண்ணை ஒருவன் மிக மோசமாக கையாண்டு கொண்டிருந்தான். அருகிலிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு சந்தோஷ் தன் நண்பனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டால் போதுமென்ற உணர்வு ஒரு வெறியாக மாறிக்கொண்டிருந்தது வரை தெளிவாக நினைவிலிருக்கிறது.

அடுத்த நாள் காலை அறையில் கண்விழித்தபோது, நண்பர்கள் மெத்தையில் அமர்ந்தபடி சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் குழப்பம் ஆரம்பித்தது. கட்டிலில் அமர்ந்தபடி சந்தோஷ் முந்தைய இரவை நினைவுகூர முயன்றான். கேட்டதற்கு, அவனைக் கடற்கரையிலிருந்து கண்டுபிடித்து கொண்டுவந்து அறையில் சேர்த்ததாக நண்பன் சொன்னான். அந்த கூடாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவன் புறப்பட்டு வந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

நிகழ்ந்தவை ஏதோ புகைத்திரளாக நினைவில் இருக்கிறது. யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்துக்கொண்டிருந்தது. ஓர் அகலமான கண்ணாடி கோப்பையில் ஸ்காட்ச்சை நிரப்பி துளியும் நீர் விடாமல் அப்படியே விழுங்கிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மேல் உணவு மண்டலம் மொத்தமாக பற்றியெரிந்தது. சட்டென நினைவிற்கு வர தன்னுடைய கால்சராய் பாக்கெட்டிற்குள் இருந்த சிறிய ஸ்விஸ் கத்தியைத் துழாவினான். காணவில்லை. கடலில் அதை வீசியெறிந்ததாக ஏதோ நினைவு வருகிறது. அந்த கடற்கரையிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பித்திருந்தது. ஆம். அதுவரை அது மிகச்சிறப்பான நாளாகத்தான் இருந்தது.

அதிலிருந்து ஆரம்பித்து அந்த கூடாரத்து காட்சிகள் வரை நிகழ்ந்ததை நிமிடத்தில் மீட்டுவிட்டு, அதற்கு பின்னான சம்பவங்களை மனம் தேட ஆரம்பித்தது.

புறப்பட நினைத்த நொடியில் திடீரென அந்த கூடாரத்தில் தமிழ் பாடலொன்று ஒலிக்கப்பட்டதாக நினைவிற்கு வருகிறது. ஓரிரு தமிழர்கள் அந்த கூட்டத்தில் இருந்திருக்கலாம்; அவர்களின் விண்ணப்பமாக இருக்கவேண்டும். ஆனால் அந்தப் பாடல் அந்த அரங்கத்திற்கு பொருத்தமற்ற காதல் பாடலாக இருந்ததே? அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதுதான் நிஜமாக அங்கு ஒலிக்கப்பட்டதா?

நாற்காலியில் அமர்ந்திருக்கும் இவனருகே வந்து, தலையை யாரோ கோதுவதைப் போல தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது, பின்னாலிருக்கும் ஒளியின் விளைவால் கண்ணுக்கு முன்னிருக்கும் பெண்ணின் முகம் சில்ஹவுட்டாக தெரிந்ததாக நினைவிற்கு வருகிறது. மிக பரிட்சையமான வடிவம். எங்கிருந்தோ வந்த லேசர் ஒளிக்கீற்று அவளது முகத்தைக் கடக்கும்போது அவனுக்கு பிடிபட்டது. பழைய காதலியின் முகம்.

அவள், அந்த ஐம்பது வயது குண்டனுடன் ஆடிக்கொண்டிருந்தவள் வெள்ளி வண்ண உடையை அணிந்திருக்கிறாள். ஆட வருகிறாயா என்று அழைக்கிறாள். இவன் மறுத்ததும் இன்னொருவனுடன் போய் ஆடுகிறாள். இவனைப் பார்த்தபடியே அவனுடன் ரொம்பவே நெருங்குகிறாள். அப்போது ஓர் ஏளனப் புன்னகை. முன்னே சென்று அவளது கழுத்தை நெரிக்கவேண்டும் போலிருக்கிறது. அவனது முகமும் நினைவிற்கு வருகிறது. ஃபேஸ்புக்கில் பார்த்த அவளது கணவனின் முகம். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்முகம் ஒரு கோவேறு கழுதையைப் போல மாறுகிறது.

இவள் ஆடிக்கொண்டிருக்கும்போது இன்னொருவன் அவளைத் தன்னுடன் ஆட இழுக்கிறான். அவன் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருக்கிறான். ஆம் அதே உடைதான். கோவேறு கழுதையுடன் சண்டை மூள்கிறது. நடுவிலிருந்த பெண் உள்ளே நுழைந்து சந்தோஷைத் தள்ளி விடுகிறாள். பரிதாபமாக கீழே விழுபவனின் ஆண்குறியை நோக்கி மிதித்துவிடுவதைப் போல தன் பாதத்தை உயர்த்துகிறாள். சுற்றியிருப்பவர்கள் கைக்கொட்டிச் சிரிக்கிறார்கள். அதற்குள் பாதுகாவலர்கள் வந்து கீழே கிடந்தவனைத் தூக்கி வெளியே கொண்டுபோய் வீசிவிட்டு வந்துவிட்டார்கள். இவை அத்தனையையும் நாற்காலியிலிருந்து பார்க்கும் சந்தோஷுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

மீண்டும் அந்த பெண் அந்த கோவேறு கழுதையைப் புணர்வதைப் போல இவனுக்கு தெரிகிறது. அதை வெறித்துப் பார்த்தபடி இவன் அந்த கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான். அந்த வெள்ளிநிற உடையணிந்தவளை நினைவிலிருந்து கூர்ந்து பார்க்கும்போது, காதலியின் சுவடு வழியாக இன்னொரு முகமும் தெரிகிறது.  

‘நான் வெளியே வந்ததை நீ கவனிக்கவில்லையா?’

‘இல்லை. இறுதிப்பாடல் ஒலிக்கப்பட்டபோது நீ அமர்ந்திருந்த நாற்காலி காலியாக இருப்பதை பார்த்தேன்.’

‘அது தமிழ் பாடலா?’

‘இல்லையே..’

‘வேறெதுவும் தமிழ் பாடல் ஒலிக்கப்பட்டதா?’

‘நடுவில் ஒன்றிரண்டு.. அதுவும் அரைகுறையாக.. ’

மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு என்ன செய்தோம் என்று யோசிக்க யோசிக்க நினைவடுக்குகள் இன்னும் சிடுக்காக இருந்தது.

பிரதான சாலையிலிருந்து அந்த சந்துக்குள் நுழையும் வளைவின் அருகே இருக்கும் ஏதோவொரு மறைவில் நின்றபடி தான் அந்த நுழைவாயிலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது ஞாபத்திற்கு வருகிறது. காதில் அலைபேசியுடன் நண்பன் வெளியேறுவது தெரிகிறது. ஆம். தனக்கான அழைப்புதான்.

அலைபேசியை எடுத்து சரி பார்த்தான். மிகச் சரியாக இரவு 11.13க்கு அழைப்பு.

‘நீ என்னை அழைத்த போது நான் என்ன சொன்னேன்’

‘கடற்கரைக்கு போய்க்கொண்டிருப்பதாக.. நீயே அறைக்கு வந்து விடுவதாகவும் சொன்னாய்.’

இப்போது நினைவில் அந்த கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தான் அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்ததாகப் படுகிறது. அவள் வெளியே வந்தாள். உடன் இரண்டு வேறு பெண்கள். அதே சந்திற்குள்தான் நுழைந்தார்கள். மெல்ல அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தான். சில திருப்பங்கள் தாண்டி ஒருத்தி கழன்று கொண்டாள். சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள். கொஞ்சம் தூரம் சென்றதும், இருள். அடர் இருள்.

இரு பெண்களுக்கு பின்னால் அந்த சாமத்தில் அந்தக் குறுகிய சந்தினில் நடந்து செல்வதற்கான யாதொரு அச்சமும் அவனிடம் இல்லை. அத்தனை தீர்மானம். ஓரிடத்தில் அவர்கள் நின்று இவனைத் திரும்பிப் பார்த்தபோது எந்த அதிர்ச்சியும் காட்டாமல் தொடர்ந்து நடக்கிறான். அவர்களும் சமாதானப்பட்டவர்களாக முன்னேறிச் செல்கிறார்கள். இன்னொருத்தியும் மற்றொரு வளைவில் விலகிக்கொள்ள உற்சாகமாகி கிட்டத்தட்ட நடையை ஓட்டமாக்கி அவளுக்கு மிகஅருகில் போய் பின்தொடர்கிறான்.

குறியை நோக்கி உயர்ந்த வெள்ளிப்பாதணிகள் அந்த இரவொளியில் மினுமினுக்கின்றன. ஒரு பாழடைந்த நினைவுச்சின்னம் போலிருந்த வீட்டின் அருகே வந்தபோது அது மிகவும் தோதான இடமாகப்பட, சட்டென்று அவளது வாயைப் பொத்தி அந்த இடிபாடுகளான வீட்டிற்குள் தள்ளியதாக நினைவுவர திடுக்கிட்டுப் போனான்.

‘நீ எத்தனை மணிக்கு என்னைக் கடற்கரையில் மீண்டும் வந்து அழைத்து வந்தாய்?’

‘அதிகாலை மூன்று மணி பக்கமாக..’

இன்னொரு சிகரெட் பற்ற வைக்கப்பட்டது. மேற்கொண்டு யோசிக்க வேண்டாமென தோன்றும் எண்ணத்தை எதிர் திசையிலிருந்து மோதும் குறுகுறுப்பு சுக்குநூறாக்கியது. மீறிச்செல்லும் அறிவை இழுத்துக் கட்ட முடியவில்லை. நிச்சயமாக தான் ஒரு குற்றச்செயலைப் புரிந்திருப்பதை நோக்கி செல்லும் அந்த நினைவை எவ்வளவு போராடியும் தடுத்துவிட முடியவில்லை.

அந்த சிதிலமடைந்த வீடு. மேற்கூரைகள் இல்லாமல் கொடிகள் வளர்ந்து உள்ளே தொங்கிக் கொண்டிருக்கின்றன. தள்ளிய வேகத்தில் வீட்டிற்குள்ளிருந்த இரும்பு தூணில் போய் அவளது தலை மோதப்படுவதாக நினைவு வந்ததும், சந்தோஷ் வியர்த்தெழுந்து மாற்றி யோசிக்க முயற்சித்தான். எத்தனை முறை யோசித்தும் அதே காட்சிதான். திரும்பத் திரும்ப காட்சியிலிருந்த அந்த வீட்டின் நுணுக்கங்கள் இன்னும் தெளிவாகிக் கொண்டே வந்தது. சிற்ப வேலைகள் தாங்கிய சுவர்கள். கனமான தூண்கள். தூசு நாற்றம். முகத்தின் அருகே வந்து மோதாமல் கடந்த வௌவால். சிறுகற்களும் மரச்செதில்களுமாக மறைந்து கிடக்கும் தரை. அதன் மையத்தில் நினைவிழந்து கிடக்கும் அந்த பெண். இறந்துவிட்டாளா? அவளது பசுமரத்தைப் போன்ற வெண்ணிற கெண்டைக்காலில் தசை துடிக்கிறது. அந்த மின்னும் காலணி. மூர்க்கமாக அந்தக்கணுவில் மிதித்தப்படி, தன் பாக்கெட்டிலிருந்த கத்தியை வைத்து அவளது கழுத்தில் ஆழமான சிவப்பு கோடொன்றை வரைகிறான். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி ரொம்பவே சொகுசாக செத்துப்போகிறாள்.

வெளிறிப்போய் நண்பனை ஏறிட்டான்.

‘மீண்டும் அந்த விடுதிக்கு இன்றிரவு போகலாமா?’

‘நீ நேற்றே எதிலும் பங்கேற்கவில்லையே? அதோடு அந்த இடம் அத்தனை சிறப்பானதாகவும் இல்லை. எனக்குமே ரொம்பவும் சோர்வளிப்பதாக இருந்தது’

‘இல்லை. நேற்று கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததைப் போலிருந்தது.’

‘அப்படியானால் இன்று இன்னொரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். அங்கே செல்வோம்’

‘இல்லை. அங்கேயே போகலாம். அங்கேதான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்’

‘நீயென்ன கொலையா செய்யப் போகிறாய்?’ நண்பன் வாய்விட்டு சிரித்தான். மேற்கொண்டு சந்தோஷ் எதுவும் பேசவில்லை. குடலுக்குள் போன திரவத்தின் எரிச்சலை நண்பன் சுண்டிவிட்டதைப் போல இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்த நினைவு வர, அந்த கொலை அத்தனை தத்ரூபமாக அவனுக்கு காட்சியானது. அதே தரையைப் பெயர்த்து அந்த சடலத்தைப் புதைப்பதாக தெரிவது அந்த தத்ரூபத்தின் கற்பனை நீட்சியோ என்று அவனுக்குப் பட்டது. ஆனால் அந்த இடத்திலிருந்து நிலவை அண்ணாந்து பார்த்ததாக தெளிவான நினைவொன்று வருகிறது.

வரப்போகும் அடுத்தடுத்த எதிர்வினைகளைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான். செய்தித்தாள்களில் எந்த செய்தியும் வரவில்லை. காட்சி ஊடகத்திலும் அது குறித்து ஒரு வரியும் இல்லை. ஆனால், நிச்சயம் மேற்கொண்டு மறுமுனையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

புகை வரும் அளவிற்கு வெந்நீரைத் திறந்துவிட்டுக் கொண்டு குளியலறையில் போய் நின்றான். உடலெங்கும் கொதிநிலையிலிருக்கும் சின்ன சின்ன ஊசிகளால் குத்துவதைப் போல இருந்தது இதமாகப்பட்டது. அதையே கையில் குவித்து பருகவும் செய்தான். அதீத க்ளோரின் கலவையிலிருந்த நீர் மிக எளிதாக வாந்தியெடுக்க வைத்தது. அந்த ஒரு வினாடியில் தன்னை முழுமையாக குற்றமற்றவனாக உணர்ந்தான்.

அதை உறுதி செய்துவிடும் தவிப்பு அதிகமானதும், நண்பகலின் உச்சிவெயிலில், சாலையிலிறங்கி நேராக கடற்கரையை நோக்கி நடந்தான். முந்தைய இரவு கேளிக்கையின் எந்தவொரு மிச்சமும் அந்த வீதியில் இல்லை. அந்த மாகாணத்து சுற்றுலா துறையின் துரிதத்தை அந்தக் குறைந்த கணத்தில் அவனால் வியக்கவெல்லாம் முடியவில்லை. கடற்கரைக்கு வந்ததும், முந்தைய தினம் நடந்து சென்ற வழிகளை மனதில் கோடுகளாகக் கிழித்துக்கொண்டு அங்கிருந்த நடக்க ஆரம்பித்தான். சந்துகள் – வளைவுகள் – நின்று அலைபேசிய இடம் – இன்னொரு சந்து – இறுதி வளைவு – பிரதான சாலை – பிசிறில்லாத மன வரைப்படம், துல்லியமாக அந்த இடத்திற்கு அழைத்து வந்தது.

அந்த விடுதியின் முகப்பு பூட்டிக்கிடந்தது. அந்த நுழைவாயிலின் அமைப்பு இந்த பகல் வெளிச்சத்தில் ஒழுக்கமாகவும் பதவிசாகவும் இருப்பது ஏதோவொரு விதத்தில் அவனைப் பகடி செய்வதாகத் தெரிந்தது. விரைவாக நகரும் மக்களுக்கு நடுவில், ஓரிடத்தில் நின்றபடி அந்த கட்டடத்தைப் பார்ப்பது வேண்டாத சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் என்பதால் நடந்தபடி இருந்தான். தான் வெளியேறி வந்ததும் பதுங்கியிருந்ததாக நினைவிலிருந்த மறைவைத் தேட முனைகையில், குறிப்பிட்டு அவ்விடத்தை இனங்காண முடியவில்லை. குத்துமதிப்பாக நினைவிலிருந்த வளைவை நெருங்கிப்போய் பார்க்கும்போது அது அத்தனை மறைவான இடமாகத் தெரியவில்லை. கடந்து செல்லும் எவரும் ஒளிந்து கொண்டிருந்த தன்னைப் பார்த்திருக்கக்கூடும் என்று தோன்றியது.

இவ்வளவு அசிரத்தையாகத்தான் தன் நகர்வுகள் இருந்திருக்கின்றன என்று தோன்றியபோது, அச்சவுணர்வு இன்னும் அதிகமாக மூண்டது. ஒருவேளை முந்தைய இரவு, விளக்குகளற்ற அந்த இடம் மறைவதற்கு உகந்ததாகவே இருந்திருக்கும் என்று அவனே ஆறுதல் பட்டுக்கொண்டான். அந்த இடத்திலிருந்து அன்று மூன்று பெண்கள் நடந்த திசையை நினைவில் மீட்டு, அதன் போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட அந்த சிமெண்ட் தெருவில் இடைவெட்டாக பல சந்துகள் பிரிந்தபடி இருந்தன. எந்த இடத்தில் முதலாவது பெண் பிரிந்தாள் என்று புரியவில்லை. போதையின் பிடியில் கடந்திருந்த தூரத்தை இப்போது அறுதியிட முடியவில்லை. சற்று தூரம் நடந்துப்போய்விட்டு, திரும்பி அதே வழியாக வந்து இன்னொரு சந்துக்குள் நுழைந்து, மீண்டு வந்து, மற்றொன்று மற்றொன்றென நுழைந்து பார்த்துவிட்டு வரும்போது இளநீர் விற்பனையாளன் ஒருவன் ‘முகவரி எதுவும் மறந்துவிட்டீர்களா?’ என்று உதவும் குரலில் முன்வந்தான். தான் நோட்டமிடப்படுவதாகவும், தானே தன்னை சரணடைய ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் சந்தோஷுக்கு உதறல் எடுத்தது.

அந்த இடத்தைவிட்டு புறப்பட்டால் போதுமென விடைப்பெற்று ஓட்டமாய் நடக்க ஆரம்பித்தான். நடக்க நடக்க அந்த சிதிலமடைந்த பழைய வீடு இன்னும் முழுமையாக அவனது நினைவினில் உருவங்கொண்டது. பின்னாலிருந்து யாரோ விரட்டிக்கொண்டு வருவதைப் போலத் தோன்ற நடை இடறியது.

அறையை அடைந்து நண்பர்களைப் பார்த்ததும், வாழ்வில் கண்டிராத பாதுகாப்புணர்வை அடைந்ததைப் போலிருந்தது. அதே நேரம் அவர்களது நிம்மதியான விடுமுறை மனநிலை வெறுப்பூட்டுவதாக இருந்தது. மீண்டும் செய்தி ஊடகங்களைப் பார்க்க ஆரம்பித்தான். இன்னும் சற்று நேரத்தில், இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஊர்சுற்றிப் பார்க்கலாம் என்று அவர்கள் சொன்னபோது, இவன் நிதானமிழந்தான். எப்படி அவர்களால் இத்தனை பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்ள முடிகிறது என்று பதற்றமடைந்தான்.

அவர்கள் வேடிக்கையாக இவனைத் திரும்பி பார்க்க, வேண்டுமென்றே அவர்கள் தன்னை சீண்டிப் பார்ப்பதாக அவனுக்கு தோன்றியதும், கோபம்கொண்டு கத்த ஆரம்பித்தான். ஒன்றும் புரியாத அவர்கள், அவனை வேண்டுமானால் அறையிலேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்கள். வெடித்து அழுதுவிடுவான் போலிருந்தது. அவர்களோடு தானும் வருவதாக அவன் சொன்னதும், அவர்கள் இவனைப் புதிராகப் பார்த்தார்கள்.

இருசக்கர வாகனம் சென்ற வீதியிலெல்லாம் அந்த சிதிலமடைந்த வீட்டையே தேடிக்கொண்டு வந்தான். நகரத்தை விட்டு பத்து மைல்கள் தாண்டி வந்துவிட்ட பின்னரும் அவனது தேடல் நிற்கவில்லை. பேசாமலே வந்து கொண்டிருக்கும் இவனது சுபாவத்தை அந்த நேரத்து கொண்டாட்டங்களுக்கு நடுவிலும் அவர்கள் கவனிக்காமல் இல்லை. எதையோ உள்ளுக்குள் போட்டு அளவிற்கு மீறி குழப்பிக்கொண்டிருக்கிறான் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

‘என்னதான் உன் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது?’ – அறைக்கு வந்ததும் விசாரணை துவங்கியது.

‘எதுவும் இல்லை’

‘ஏன் பேயடித்ததைப்போல இருக்கிறாய்?’

‘இல்லை. நான் நலமாக இருப்பதாகவே நம்புகிறேன்’

‘நீ இன்று காலையிலிருந்து ஒரு மனம் பிறழ்ந்தவன் போல நடந்துகொள்கிறாய்’

‘மதுவின் வினையாக இருக்கலாம். என்னை இப்படி கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்’

‘மதியம் எங்கு சென்று வந்தாய்?’

‘கடற்கரைக்கு’

‘என்ன காரணமாக?’

‘குறிப்பிட்டு எதுவுமில்லை. ரொம்பவே வேண்டி கேட்கிறேன். அருள்கூர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்’

‘இல்லை. இத்தனை வினோதமாக நீ நடந்து கொள்பவன் இல்லை. இன்று காலையிலிருந்துதான் குறிப்பிட்ட இந்த மாற்றம். இரவும் போய் அந்த வெறிச்சோடிய கடற்கரையில் உறங்கிக் கிடக்கிறாய். உன்னை எழுப்பவே முடியாமல் நாங்கள் போராடியபோது, அங்கு போலீஸ்காரர்களெல்லாம் வந்து விட்டார்கள்’

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தான்

‘வந்து என்ன கேட்டார்கள்?’

‘சம்பிரதாய விசாரணைதான். எந்த ஊர், எந்த விடுதியில் தங்கியிருக்கிறோம், எத்தனை நாட்களாக, அடையாள அட்டை.. இதெல்லாம்தான்’

‘அவர்கள் அவற்றைக் குறித்துவைத்துக் கொண்டார்களா?’

‘அப்படி நினைவில்லை’

‘சரியாக யோசித்து சொல்’

‘இல்லை. குறித்துக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறோம்’

‘பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதே.. சரியாக நினைவுப்படுத்தி சொல் மடையனே..’ – கத்த ஆரம்பித்தான்

‘எதற்காக அதெல்லாம்? குறித்துக் கொண்டால்தான் என்ன? நாமென்ன கொலையா செய்து விட்டோம்?’

மேற்கொண்டு சந்தோஷ் எதுவுமே பேசவில்லை. எல்லை மீறி தன்னைப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருப்பதாகவோ அளவிற்கு அதிகமாக தான் கற்பனை செய்துகொள்வதாகவோ அவனுக்கு தோன்றியது. நிகழ்ந்தவை உண்மையே என்றாலும் பதற்றமேதான் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறது என்று தெளிவாக அவனுக்கு புரிந்தது. அந்த குற்றம் உண்மையாகவே நடந்திருந்தாலும், எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் நிகழ்ந்துவிட்ட அதில், துளியும் பிழை இருந்திருக்காதென்று திடீரென ஓர் அசம்மந்தமான நம்பிக்கை அவனைத் தேற்றியது. அச்சத்தின் உச்சத்தில் அந்த மிகை உணர்வே ஒன்றுமேயில்லாமல் போகும் முரணியக்கத்தின் விந்தையை ரசிக்க ஆரம்பித்தான்.

அதே அகலமான கோப்பையில், எஞ்சியிருந்த ஸ்காட்ச்சை நிரப்பி, இம்முறை இரண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு நிதானமாகப் பருகினான். அதுவரையிலிருந்த பதற்றத்தைவிட, அவனது இந்த நிதானம்தான் மற்றவர்களை அப்போது அச்சப்படுத்துவதாக இருந்தது. சற்றே பேதலித்து நிற்கும் அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘cheers’

3

‘அதன் பிறகு என்ன நடந்தது?’ – ஆரதி முடிவைத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள்.

‘மேற்கொண்டு அதை வலிந்து தேடுவதை அந்த இடத்திலேயே நான் நிறுத்தி விட்டேன். அவ்வாறொன்று நிகழ்ந்திருந்தாலும், யோசித்து ஓடிப்போய் அழிக்க எந்த தடயமும் எனக்கு தோன்றவில்லை. வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டேன். மேற்கொண்டு நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் நான் செய்தித்தாள்களைக் கூட சீந்தவில்லை. ஊருக்கு திரும்பும்போது எல்லைக் காவலர்கள் மது வாங்கிக்கொண்டு செல்கிறோமா என்று பரிசோதனையிட வாகனத்தை நிறுத்தியபோது, சர்வநிச்சயமாக சொல்கிறேன், நான் துளிகூட பதற்றமடையவில்லை’ – ஆரதி தன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது – ‘இவையெல்லாம் நிகழ்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. என் மனசாட்சியைத் தவிர வேறெந்த சாட்சியும் இதற்கு மிச்சமில்லை’ சிறிது இடைவெளி விட்டு, ‘இப்போது நீயும்’ என்றான்

நீண்ட அமைதிக்கு பின்னர், ‘அந்த இரவில் நிஜமாகவே என்னதான் நடந்தது?’ என்றாள்

‘என் நினைவிலிருக்கும்படி அத்தனையையும் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இவ்வளவுதான் எனக்கும் தெரியும்’

ஆரதி அவனையே குழப்பமாகப் பார்த்தபடி நின்றாள்

4

‘அன்று மடிக்கணினியில் எதேச்சையாக வெளிப்பட்ட உன்னுடைய பழைய புகைப்படத்தை அவள் நிச்சயம் கவனித்து விட்டாள் என்றுதான் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த உறுத்தலின் வெப்பத்தில் தூபம் போடுவது போல, அவள் மேற்கொண்டு அதைப்பற்றி எதுவுமே கேட்காமலிருப்பதைத்தான், என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சமீப நாட்களில் அவள் ரொம்பவே அழுத்தத்திலிருப்பது இதனால்தானோ என்று எனக்கு தோன்றுகிறது. ஏதோவொரு விதத்தில், ஓர் அதிர்ச்சியின் நடுவில் உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுவது எனக்கு சரியென்று பட்டது. கடந்த காலத்தின் நிஜத்தைவிட அதை நான் மறைத்து வைப்பதுதான் அவளை நோகடிக்கும். சரிதானே?’

‘முன்னாள் காதலி என்று நீ சொன்னதை அவள் அத்தனை பொருட்படுத்தியிருக்கமாட்டாள் என்று நினைக்கிறாயா?’ – மதுமிதா சந்தோஷிடம் கேலியாக கேட்டாள்

‘என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். கண்டிப்பாக இல்லை. அதோடு நான் உன்னை என்னுடைய வெறுப்பிற்குரிய ஒரு பிம்பமாகத்தான் காட்டியிருக்கிறேன்.  

மறுமுனையிலிருந்து சிரிப்பொலி கேட்கும்போது சந்தோஷுக்கு கோபம் ஊறியது.

‘அவளது முகத்தை நான் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் மதுமிதா. என்னால் சரியாகச் சொல்லிவிட முடியும். அவளது சிந்தனைகளில் இரண்டே கேள்விகள்தான் மிச்சமிருந்தன – கொலை நிஜமாகவே நடந்ததா? அல்லது அது என் போதையின் விளைவான உளச்சிக்கலின் தோற்றப்பிழையா? – இவை மட்டும்தான்’

இன்னும் பலமான சிரிப்பொலி.

‘அவமதிக்கும் இந்த சிரிப்பை தயவு செய்து உடனடியாக நிறுத்து.’

‘சரி அன்பு காதலரே.. நிறுத்திவிட்டேன்’

‘பரிகசிப்பதையும்..’

‘சரி நிறுத்தி விட்டேன். ஆனால் உன் மனைவி இப்போது என்ன யோசித்துக் கொண்டிருப்பாள் என்று நான் சொல்லவா?’

‘சொல்’

‘அன்றைய மடிக்கணினி புகைப்படம் முன்னாள் காதலிதானா? ஏன் அதை ரகசியப்படுத்தி இன்னும் ஒளித்து வைத்திருக்கிறான்? அவளது நினைவுகள் போதையின் கற்பனையிலேனும் ஒரு கொலை செய்யுமளவிற்கு இவனைத் தூண்டுகிறதா? இன்னொருவனுடன் அவள் உரசும்போது, அவன் அவளது கணவனாகவே தெரியும்போதும் இவனுக்கு காமம் கொப்பளிக்கிறதா? அப்படியெனில் அந்த முன்னாள் காதலியை இவன் நிச்சயமாக புணர்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த கேளிக்கை விடுதி பெண்ணை இவன் புணர முயற்சித்திருப்பானா? மேலும்…’

‘உன் அபத்தக் கற்பனைகளை நிறுத்து மதுமிதா.’

‘நீ ஒரு போதும் ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ள துளியளவும் முயற்சிக்கப்போவதில்லை சந்தோஷ்’

‘மிக்க நன்றி என் முன்னாள் காதலியே’

5

அடுத்த நாள் காலையில் ஆரதியின் முகம், குழந்தை பிறந்ததற்கு பின்னர் முதன்முறையாக மிகத்தெளிவாக இருப்பதாகப் பட்டது. உணவு மேசையிலிருந்து தேநீர் அருந்தியபடி அவளை சந்தோஷ் கவனித்துக் கொண்டிருந்தான். மதுமிதா சொன்ன ஏதேனும் ஐயத்திற்கான அட்சரங்கள் ஆரதியின் முகத்தில் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். முன்னெப்போதையும் விட மிகுந்த உற்சாகமானவளாக அவள் தெரிந்தாள். தன் கணக்குகள் நேர்க்கோட்டில் விழுவதை எண்ணி சற்று பெருமிதப்பட்டான்.

மதுமிதாவின் கற்பனைகளை எண்ணி சந்தோஷுக்கு இப்போது சிரிப்பு வந்தது. எல்லா பெண்களும் அவளைப் போலவே சிந்திப்பார்கள் என்ற அவளது எண்ணத்தைத் தனக்குள்ளேயே கேலி செய்தான். முன்னறையில் அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் இந்திராம்மாளை நோக்கி தேநீர் குவளையோடு நகர்ந்தான். ஆரதியின் தெளிந்த தோற்றத்தைக் கண்டு தனக்கு பரிசுத்தமான காதலொன்று உள்ளுக்குள் ஊற்றெடுப்பதைப் போல அவனுக்கு தோன்றியது. அவள் மீதான தன் பொறுப்புணர்வு திடீரென அதிகரித்து விட்டதைப் போல இருந்தது. மதுமிதாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் வந்து நெகிழச்செய்ய, குழந்தையைக் கையில் ஏந்தினான். இந்திராம்மாள் பரவசமானாள்.

‘அப்படியே என் மகனைப் போன்ற நெற்றி, அதே சிறிய மூக்கு, அதே கூர்மையான கண்கள்… என் குல சாமி…’ என்று வழக்கமான தன் கொஞ்சல்களை முன்னைவிட சத்தமாக கூவினாள். இந்த வார்த்தைகள் இப்போது ஆரதிக்கு எந்த குற்றவுணர்ச்சியையும் கொடுக்கவில்லை. மெல்லிய புன்னகையுடன் பால்கனியில் நின்றபடி தேநீரைப் பருகிக்கொண்டிருந்தாள்.

-முற்றும்-

மயிலன் ஜி சின்னப்பன் – பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இவர், திருச்சியில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் இவரது நாவல் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வெளியாகியுள்ளது. இவரது மின்னஞ்சல் முகவரி – [email protected]

RELATED ARTICLES

3 COMMENTS

  1. கிறிஸ்டோபர் நோலன் படம் பார்த்தது போன்ற உணர்வு. எடை கூடிய கதை. கதை முழுவதுமே எண்ண ஓட்டங்களின் பிரதியாக இருப்பதால் வாசிப்பில் நிதானத்தைக் கோருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular