Friday, March 29, 2024
Homesliderஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு - பகுதி 4

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – பகுதி 4

முந்தைய பகுதிகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

உருவக அரங்கம் – ‘Image Theatre’ – பல தளங்களில் கையாளக்கூடிய வடிவம்!

-ரூபன் சிவராஜா

செவிமடுப்பதோடு மட்டுமல்லாமல், பார்க்கும் திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.. உலகப்பார்வையைப் பிரதிபலிக்கும் உருவங்களை நாம் உருவகப்படுத்துவது எதிர்காலத்தை ஊடுருவுவதற்கான சிறந்த வழியாகும்’Augusto Boal

Augusto Boal உருவாக்கி வளர்த்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின்’ மற்றொரு வடிவக்கூறு ‘உருவக அரங்கு – Image Theater’.

பரந்த வெளிப்பாட்டு வெளி

உருவக அரங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முதன்மை வடிவக்கூறுகளில் ஒன்று. ஒரு பேசுபொருளுக்குரிய சொற்கள் தீர்ந்துபோகும்போது அல்லது புதிய சிந்தனைக்கான சொற்கள் அகப்படாமல் பழக்கப்பட்ட சடங்குபூர்வமான வட்டத்திற்குள் நின்று சிந்திக்கின்ற நிலையை மாற்றுவதற்கு உருவக அரங்கினை Boal உகந்த வழியாகக் கருதினார். அந்த உத்தி புதிய வெளிப்பாட்டு வடிவங்களைத் திறக்கக்கூடியது. உருவக அரங்கின் வெளிப்பாட்டு வெளியும், வாய்ப்பும் பரந்துபட்டது. எழுத்தறிவற்ற ஒருவருக்கும், மொழியியல் அறிஞர் ஒருவருக்கும் சம அளவு வெளிப்பாட்டு வாய்ப்பு இந்த அரங்கச் செயற்பாட்டு வடிவத்திற்குள் உள்ளது.

அரங்க வெளிப்பாடுகளில் அசைவுகள் மட்டுமல்ல, உறைநிலை என்பதுகூட வீரியமாக வெளிப்படக் கூடியது. ஒத்திசைவான ஒளி மற்றும் இசையின் துணையுடன் உறைநிலைக் காட்சிகளை அழகாகவும் அர்த்தபூர்வமாகவும் உருவகிக்க முடியும். உடல்மொழி, முகபாவனை, ஒருமித்த திசை நோக்கிய பார்வை இதற்கு முக்கியமானவை. குறியீடுகளைக் கொண்ட உறைநிலை மற்றும் அசையும் உருவகங்கள் மூலம் நிகழ்த்தப்படும் இவ்வரங்கில் ஆற்றுகையாளர்களின் உடல்மொழியும் உடல்கள் மூலம் உருவகப்படுத்தப்படும் காட்சிபூர்வ வடிவங்களும் முதன்மையானவை.

வாய்மொழி உரையாடலுக்கு மாற்றான அரங்கு

குறித்த ஒரு சிக்கல், பிரச்சனை, முரண்பாடு சவால் சார்ந்து நிலவும் சூழலையும், அதற்கான தீர்வு நோக்கி உரையாடவும், சிந்திக்கவும் உகந்த அரங்கியல் வெளிபாட்டு உத்திகளை அது கொண்டுள்ளது. வாய்மொழி உரையாடலுடனான அரங்க வெளிப்பாட்டிற்கு மாற்றான ஒரு உத்தியும் வடிவமுமாகும்.

இந்த அரங்கு வெளிப்பாட்டு வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் துல்லியத்தன்மையைக் கோருகின்றது. கவர்ச்சிகரமான, கோசத்தனமான அல்லது மழுப்பல்தனமான சொற்களுக்குள் பார்வையாளர்கள் உணர்வு மயக்கத்திற்கு உள்ளாகுவதற்கு உருவக அரங்கில் வாய்ப்பில்லை. அது நேரடியானதும், துல்லியமானதுமான அர்த்த வெளிப்பாட்டினை நிர்ப்பந்திக்கும் வடிவம். உதாரணமாக விடுதலை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், இனவாதம் போன்ற சமூக அரசியல் சார்ந்த சொற்களின் அர்த்தத்தை சொற்களால் வலியுறுத்துவதற்கும், உருவக அரங்கிற்கூடாக வெளிப்படுத்துவதற்கும் துல்லியமான வேறுபாடுகள் உள்ளன. சொல்லின், கருப்பொருளின், கருத்தியலின் சாரத்தை நுணுகியறிதல், சொற்களின் மெய்யான அர்த்தங்களைப் பகுத்தறிதலுக்கும் அவை சார்ந்த மாற்றங்கள் பற்றிய உரையாடலுக்கும் உருவக அரங்கு உகந்த வாய்ப்பினையும் வெளியினையும் கொண்டுள்ளது.

உடல்களால் உருவகப்படுத்தல்

உடல்களால் உருவகங்களைக் காட்சிப்படுத்துதல் இதன் அடிப்படை உத்தி. அந்தக் காட்சிப்படுத்தலில் ஒடுக்குமுறை சார்ந்த பேசுபொருள் பிரதிபலிப்பதாக அமையும். நடிகர்களின் குழுநிலைப் பங்கேற்பு மூலம் உறைநிலை உருவம் (Freeze Images) அல்லது சிலைகள் (Statues) காட்சிப்படுத்தலுக்கு உட்படும். குறிப்பிட்ட ஒரு பேசுபொருள், ஒரு முரண்பாட்டு அல்லது அநீதிச் சூழல், அல்லது ஒரு நிலைமை உருவகப்படுத்தப்படும்.

ஆற்றுகையாளர்கள் அல்லது பங்குபெறுவோர் தமதும் மற்றவர்களினதும் உடலை/உடல்களைக கொண்டு உருவகத்தை/உருவகங்களை அமைப்பர். அரங்கின் நெறியாளர் (Joker) உருவகங்கள் எந்தக்கட்டத்தில் உறைநிலையிலும், எந்தக்கட்டத்தில் அசைநிலையிலும் இருக்கவேண்டுமென்பதை உறுதிசெய்வார்.

இதில் முக்கிய அம்சம் ஆற்றுகையாளர்கள் வாய்மொழி உரையாடல்களைத் தவிர்ப்பதாகும். ஆரம்பநிலையில் செயற்கைத்தனமாகத் தோன்றினாலும் போகப்போக உருவக அரங்கம் வாய்மொழி உரையாடலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொடர்பாடல் கலை வடிவம் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வர். ஏனைய அரங்குகளுக்கு விதிவிலக்காக ஜோக்கர் உருவக அரங்கின் ஒவ்வொரு படிநிலைகளையும் அறிமுகம் செய்தல் நிகழும். எடுத்துக்காட்டாக ஜோக்கர் ஒரு பேசுபொருளைப் பரிந்துரைக்கலாம். ஆற்றுகையாளர்கள் முன்மொழியப்பட்ட அப்பேசுபொருள் குறித்த தமது புரிதலை தமது உடல் /உடல்கள் மூலம் உருவகித்து நிகழ்த்திக் காட்டுவர்.

ஆரம்பநிலையில் உருவகங்கள் ஒடுக்குமுறையின் சமகால நிலையைப் பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டு படிப்படியாக மாற்றமடைந்து விரும்புகின்ற மாற்றத்தின் இறுதிநிலை/இலக்கு நிலை உருவகம், அதாவது (Ideal image) நிகழ்த்திக்காட்டப்படும்.

வாய்மொழிச் சொற்களினூடாக ஒரு முரண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்துதென்பது சமயங்களில் சம்மந்தப்பட்டவர்களைச் சீண்டி ஆத்திரமூட்டக் கூடும். எனவே முரண்பாட்டுச் சூழல் பற்றிய சுமூகமான உரையாடலை ஏற்படுத்துவதற்கு இவ்வகை உருவக அரங்க முயற்சிகள் பயனுள்ளவையாகக் கருதப்படுகிறது.

பல்தளங்களில் கையாளக்கூடிய கலை வடிவம்!

ஒடுக்குமுறைக்கெதிரான அரங்கப் பேசுபொருளுக்கு வெளியிலும் இதனைப் பயன்படுத்த முடியும். கலை, இலக்கிய, சமூக ஊடக மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடியது. அதன் பயன்பாடுகள் கலை வெளிப்பாட்டினூடான சமூக மாற்றம் என்பதற்கு அப்பாலும் பல்வேறு சமூக ஆய்வுகள், கல்வியியல் ஆய்வுகள், மானிடவியல், நிறுவன மேம்பாடுகள் சார்ந்த ஆய்வுகளுக்கான துணைக்கருவியாகவும் கையாளத்தக்கவை. கற்பித்தல் சார்ந்த இடங்களில் தெளிவூட்டலுக்குரிய, விவாதங்களுக்கு வழிகோலும் கருவியாக இதன் பயன்பாடு பெருவாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஒரு நாவலையோ, சிறுகதையையோ வாசித்த பின்னர், அதன் மூலப்பாத்திரத்தைச் சித்தரிப்பதற்குக்கூட இந்த உருவக அரங்க முறைமையினைக் கைக்கொள்ள முடியும். மனித உறவுகளுக்கிடையிலான, குடும்ப, சமூக சூழ்நிலைகளின் பேசுபொருள் உருவக அரங்கிற்குக் கூடுதல் பொருத்தமுடையது.

***

தொடரும்..
ரூபன் சிவராஜா..

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

RELATED ARTICLES

1 COMMENT

  1. Very useful session.thank you so much.image theatre sammanthama innum melathika thagaval thevaii.plz support me.image theatre மூலமாக மக்கள் மத்தியில் அனைத்து தகவல்களும் சென்றடைந்ததா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular