Friday, March 29, 2024
Homesliderஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு! தோற்றமும் வடிவமும் வளர்ச்சியும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு! தோற்றமும் வடிவமும் வளர்ச்சியும்

ரூபன் சிவராஜா

மக்கள் அரங்கு –  Forum Theatre

பிரேசில் நாட்டு அரங்கியல் அறிஞர் Augusto Boalஇன் சிந்தனையில் தோன்றி வளர்ந்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கியல் – Theatre of the oppressed’ வடிவமானது பல்பரிமாணக் கூறுகளைக் கொண்டுள்ளது. மக்கள் அரங்கு (‘Forum theatre), கட்புலனாகா அரங்கு(Invisible theatre), உருவக அரங்கு/படிம அரங்கு(Image Theatre), வானவில் அரங்கு (Rainbow of Desire), சட்டவாக்க அரங்கம் (Legislative theatre) ஆகிய அரங்கியல் வடிவக் கூறுகளையும் கொண்டுள்ளது. Augusto Boalஇன் சிந்தனை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்க வடிவங்களின் தோற்றம், பின்னணி, வளர்ச்சி, அரங்க வடிவங்கள், அவற்றின் உட்கூறுகள், நிகழ்த்துகை-ஆற்றுகை முறைமைகள், பேசுபெருள் பற்றிய கட்டுரைத்தொடராக இது அமைகின்றது.

அகஸ்டோ போல்ன் – oppressed theatre

Forum Theatre எனும் மூலவடிவம் பற்றியும், அதன் தோற்றம், அதனைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்த் அரங்கவியலாளர் Augusto Boal  இன் சிந்தனை குறித்தும் பதிவு செய்ய முனைகிறது தொடரின் முதற்கட்டுரை. ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் மற்றைய வடிவக்கூறுகளைத் தனித்தனியாக இனிவரும் கட்டுரைகள் பேசவுள்ளன.

01 . மக்கள் அரங்கு –  Forum Theatre

Forum Theatre – இதற்கான சிந்தனையும் செயல்வடிவமும் Augusto Boal அவர்களிடமிருந்து உருவான ஒரு அரங்கியல் வடிவம். ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம்’ என்ற ஒரு இயக்கமாக 1970-களில் இந்த அரங்கியல் வடிவம் தோன்றியது. Forum என்ற லத்தீன் மூலச்சொல்லின் பொருள் ‘மக்கள் கூடும் இடம்’. நவீன சொல்லாடல் அர்த்தத்தில் ஒரு பிரச்சினையை முன்வைத்து, விவாதித்து ஆராயும் இடத்தைக் குறிக்கின்றது. இத்தகையை அர்த்தத்திலேயே Forum theathre-ன் பயன்பாட்டினை நோக்க முடியும்.

அடிப்படையில் Forum theathre-இன் மூலவடிவம் முற்கூட்டியே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டு நிகழ்த்தப்படுவதில்லை. அது பார்வையாளர்களின் பங்கேற்புடன் அரங்கத்தில் உருவாக்கப்படுவது. அதனுடைய மைய அம்சம் ஒரு பிரச்சினையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வது. தீர்வுகளைப் பரீட்சித்துப் பார்ப்பது. முயற்சித்துப் பார்ப்பது. விவாதங்களும், பரீட்சித்துப் பார்த்தல் செயற்பாடுகளும் நாடக மொழி, நாடகப் படைப்பாக்க அழகியல் உத்திகளுடனான காட்சிப்படுத்தல் ஊடாக நிகழ்த்தப்படும்.

மக்கள் சமூகம் தமது உலகத்தை நேர்மறையான மாற்றத்திற்கு உட்படுத்துவதற்குரிய தீர்வைக் கண்டடையும் முயற்சிக்கு இந்த வடிவம் பொருத்தமானதாக நோக்கப்படுகின்றது. நுணுக்கமான கூறுகளைக் கொண்டதொரு வடிவம். நாடகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கதைக்களம் ஒடுக்குமுறை சார்ந்த பேசுபொருளைக் கொண்டிருக்கும். சமூக வாழ்வியல், சமகால அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கும். கதை நகர்வு ஒரு முரண்பாட்டின் உச்சத்திற்கு, சர்ச்சைக்குரிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தப்படும். அதிலிருந்து பார்வையாளர்களின் பங்குபற்றலுடன் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும். பல்வேறு சாத்தியமான தீர்வுகள் நிகழ்த்திப் பார்க்கப்படும்.

**

பிரேசில் நாட்டின் ரியோ நகரத்தின் Arena Theatre இல் அரங்கியல்துறை இயக்குனராக கடமையாற்றிய Boal 1950களிலும் 1960களிலும் Arena Theatreஇற்குரிய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டார். அரங்குகளைத் தாண்டி, தெருக்களில் நாடகங்களை நடாத்தினார். அவர் பிரேசில் தொழிற்கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கின்றார். தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களிலும், வறிய மக்கள் கூடும் இடங்களிலும் திறந்தவெளி அரங்கங்களை முன்னெடுத்தார் என அறியக் கிடைக்கின்றது. உழைக்கும் மக்கள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பொருட்டே அவர் அரங்கவியல் கலையைக் கையாண்டார்.

அவரின் அரங்கம் பற்றிய பார்வை ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கமென்ற இயக்கமாகத் தோன்றி வளர்ந்தமைக்கு வலுவான அரசியல் காரணிகள் உள்ளன. 1964 முதல் 1985 வரை இராணுவ ஆட்சியின் கீழ் பிரேசில் இருந்தது. 1960களில் பிரேசிலிலும் ஏனைய தென் அமெரிக்க நாடுகளிலும்; மோசமான அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சி நிலவியது. இராணுவ ஆட்சியில் பிரேசில் மோசமானதொரு சமூக அரசியல் சூழலுக்குள் இருந்ததால்,  ஒடுக்குமுறைகளும், கருத்துச்சுதந்திர மறுப்பும், கடும் கண்காணிப்புகளும் நிலவியது. எனவே இந்த அரசியல் சமூகப் புறநிலைகளே Forum Theatre தோற்றுவிக்கப்பட்டமைக்கான அடித்தளம்.

Augusto Boal இன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம், இராணுவ ஆட்சி பீடத்தின் கண்களை உறுத்தியதொன்றும் ஆச்சரியமானதல்ல. 1971இல் அவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நான்குமாத சிறைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது. அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலப்பெயர்வு வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் தனது தாயகம் திரும்பினார். இவ்வாறாக 15 ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அவர் அங்கிருந்த காலப்பகுதிகளிலும் Forum Theatre-ஐ வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அர்ஜென்டீனாவில் வசித்த காலத்தில் தென் அமெரிக்க நாடுகளான பெரூ, எக்குவாடோர் ஆகிய நாடுகளுக்கப் பயணமாகி வறிய சிறுசிறு சமூகங்களை நோக்கிய அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். உள்நாட்டுப் போர், அரசாங்கங்களின் அக்கறையின்மை, குறைபாடுகள், சமூக வாழ்வியல் பிரச்சினைகளை அரங்க நிகழ்வுகள் ஊடாகக் கையாண்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முனைந்தார். ஒடுக்கப்பட்டவர்களாலேயே ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய முடியுமென்ற (Only the oppressed are able to free the oppressed) கருத்தினை அவர் வலுவாகக் கொண்டிருந்தார்.

இராணுவ ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் 1986-லேயே மீண்டும் சொந்த நாடு திரும்பினார். நாடு திரும்பியதை அடுத்த ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கத்திற்குரிய மையத்தினை (Center for the Theatre of the Oppressed ) நிறுவினார். அதனூடாகக் குடியுரிமை, சமூக கலாச்சார மற்றும் வேறுவகை ஒடுக்குமுறைகள் சார்ந்த பிரச்சினைகளை அரங்க மொழி மூலம் அணுகினார். 1970களில் பிரேசிலிலும் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அது பரவியது. நாடக அரங்கினை சமூக அரசியல் மாற்றத்திற்குத் தூண்டும் ஒரு உத்தியாக கையாள Boal நினைத்தார். அவருடைய இந்த அரஙகச் செயற்பாடுகளின் விளைவாகக் குற்ற நடவடிக்கைகளால் பாதிககப்பட்டவர்கள் மற்றும் சாட்சியம் வழங்குவோருக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சட்டம் பிரேசிலில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

எல்லோரும் நாடகத்தில் நடிக்கலாம்  – நடிகர்களாலும் நடிக்க முடியும்’

நாடகத்தை எல்லா இடத்திலும் நடத்தலாம் – நாடக அரங்கத்திலும் அதனை நடத்தலாம் ’

என்ற அவருடைய கூற்று நாடக அரங்கத்திற்குரிய சட்டகங்களையும் கட்டுகளையும் அவிழ்த்து எவ்வாறு அதனை வெவ்வேறு பரிமாணத்தில் நிகழ்த்தலாம் என்பதையும், பார்வையாளர்கள் நாடக அரங்கின் அங்கமாக மாறுவதன் சாத்தியப்பாடுகளையும் வலியுறுத்துகின்றது.

**

நோர்வே தமிழர்கள் மத்தியில் அண்மைக் காலமாக Forum Theatreஐ முன்னெடுக்கும் செயற்பாட்டில் கலாநிதி சர்வேந்திரா அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில வருடங்களாக Forum Theatre அரங்கங்களை, அதன் மூல வடிவத்திலிருந்து சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி அவர் நெறிப்படுத்தி வருகின்றார். அவர் நாடக அரங்கியல் துறைகளில் நீண்டகால செயற்பாட்டு மற்றும் படைப்பாக அனுபவத்தினைக் கொண்டிருப்பவர். 80-களின் நடுப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக கலாச்சாரக்குழுவின் கலை முயற்சிகளிலும், பின்னர் புலம்பெயர் சூழலிலும் பல்வேறு நாடகங்களையும் அரங்க நிகழ்வுகளையும் நெறிப்படுத்திய அனுபவம் அவருக்குண்டு.

Boal அறிமுகப்படுத்திய Forum Theatre-னை மாற்றங்களுக்கு உட்படுத்தி பின்பற்றுபவர்கள் (பல்வேறு நாடுகளில்) நாடகத்தின் சில பகுதிகளை முன்கூட்டியே எழுத்துருவாக்கி, ஒத்திகை பார்த்து ஆற்றுகை செய்கின்ற நடைமுறையும் உள்ளது. சர்வேந்திரா நெறிப்படுத்துகின்ற அரங்குகளும் அப்படியான ஒரு மாற்றங்களுக்குட்பட்ட வடிவமாகவே மேடையேற்றப்பட்டு வருகின்றன. வடிவம் சார்ந்தும் எடுத்துக்கொண்ட கதைக்களம் சார்ந்தும் பலரினது கவனத்தை அந்த அரங்குகள் பெற்றிருந்தன. நாடகத்திற்குரிய காட்சிப்பூர்வ அழகியலையும், Forum Theatre-ற்குரிய தன்மைகளையும் அவற்றில் காண முடிகின்றது. நாடகம் ஒரு சர்ச்சைக்குரிய இடத்தில் நிறுத்தப்பட்டு பார்வையாளர்களின் பங்கேற்புடன் கருத்தியல் உரையாடலாகத் தொடர்வதென்பது சர்வேந்திரா நெறிப்படுத்தும் மக்கள் அரங்கின் உத்தியாகும்.

**

சோக்கிரட்டீஸ் கையாண்ட விவாதங்களுக்கூடான கற்பித்தல் முறைமையினை அரங்கவியல் அணுகுமுறையாக Boal பின்பற்றினார் என்று கூறப்படுகின்றது. கேள்விகளை எழுப்புவதன் மூலம் சிந்தனையைத் தூண்டி மெய்யியல் சார்ந்த கருத்தியல் விவாதங்களை முன்னெடுத்தார். அதனையொத்த வகையில், பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி, அவர்களின் வாழ்பனுவங்களை நாடக அரங்க மொழியில் வெளிப்படுத்துகின்ற முறைமையை அறிமுகப்படுத்தினார். அதாவது முதலில் கேள்விகளை, பிரச்சினைகளின் மூலத்தை பார்வையாளர்கள் மத்தியில் முன்வைப்பதன் மூலமும், பின்னர் நாடக அரங்கியல் மொழியை அவர்களிடம் கையளிப்பதன் மூலமும் அரங்கு நிகழ்த்தப்படுகிறது.

இந்த வடிவம் ஒரு முழுமையான நாடகத்தைப் பார்க்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்காது. காட்சி நகர்வில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பங்கேற்பினைக் கோரிநிற்கும். சமூகத்தில் எரியும் பிரச்சினையொன்றை இது கையிலெடுத்து, அரங்காற்றுகையாளர்களுடன் (நடிகர்கள்) பார்வையாளர்களை இணைத்து நிகழ்த்தப்படும். அதாவது பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமிடையிலான இடைவெளிகள் கணிசமாகக் குறைக்கப்படும். இருதரப்பும் இணைந்து (interact) செயற்படும் களமாக அரங்கு மாற்றப்படும். இங்கு மேடை மட்டும் ஆற்றுகைக்குரிய மையமாக இருக்காது. பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளும் ஆற்றுகைக்குரிய அரங்கமாக இருக்கும். சமூகத்திலும் வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றத்தை நோக்காகக்கொண்டு, அந்த மாற்றம் கோரிநிற்கின்ற சாத்தியமான தீர்வுக்குரிய கருத்தியல் விவாதங்களை அரங்காற்றுகை மூலம் கண்டடைவது Forum Theatre -ன் முதன்மை இலக்கு.

ஒருவழித் தொடர்பாடலாக இல்லாமல் இருவழி உரையாடற்சிந்தனையின் வெளிப்பாடாகவும் இதனைக் கொள்ளமுடியும். இதில் அதிகாரம் முழுவதும் பார்வையாளர்களிடம் கையளிக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்கள். நாளாந்த வாழ்வில் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான அரங்கமென்பதால் இது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கமாக வடிவம் பெற்றது.

வழமையான நாடக அரங்க வடிவங்கள் ஏலவே திட்டமிட்ட எழுத்துருவுடன் காட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்படும். இந்த தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்ட அரங்க வெளிப்பாட்டு வடிவமும் அணுகுமுறையும் அதிகாரத்திற்குச் சேவை செய்கின்றது என்ற கருத்தினை Boal கொண்டிருந்தார்.  அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அதனை மேலும் இறுக்கமாகப் பேணுவதற்கும், அதிகாரத்தைக் கையிலெடுக்க விரும்புபவர்கள் அதனை நோக்கிய தமது நலன்களுக்கான கருவியாக-பிரச்சார ஊடகமாக இதனைப் பயன்படுத்தும் சூழல் நிலவுகின்றதென்பது அவரது நிலைப்பாடு. அந்தச் சூழலை உடைத்து அதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் அரங்க மொழியினையும் களத்தினையும் கையளிக்கும் ஒரு வடிவமாக இதனை வடிவமைத்து வளர்த்தெடுத்தார்.

**

யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் அரங்க செயற்பாட்டில் நிபுணத்துவ ஆளுமையும் செயற்பாட்டு நீட்சியும் கொண்டவர் கலாநிதி சிதம்பரநாதன். அவரது நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தின் செயற்பாடுகளையும் இதனைத்தழுவிய அல்லது இதன் தன்மைகள் சிலவற்றை உள்ளடக்கிய வடிவமாக வகைப்படுத்த முடியும் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தொடர்ச்சியான பல அரங்கச் செயற்பாடுகள், அமர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

சமூகத்தின் இளைய தலைமுறையின், மாணவர்கள், பெண்கள், போரின் பாதிப்புகளுக்குள்ளான மக்களை மையப்படுத்தி பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் செயற்படுகின்றது. அவர்களின் ஆளுமைத்திறன் ஆற்றல்களை வெளிக்கொணருவது, படைப்பாற்றலுக்குரிய உந்துதலை வழங்குவது, சிந்திக்கத் தூண்டுவது, கலைகளின் ஊடாக தன்னாற்றல் மேம்பாட்டுக்குரியதும், சமூக மாற்றத்திற்குமுரிய விளைவுகளைத் தேடுவது என்ற அளவில் இதன் இயங்குதேவை அமைகின்றது. சமூக மாற்றத்திற்கான அரங்கப்பணி என்றே பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தினை உருவாக்கிச் செயற்படுபவர்களும் கூறுகின்றனர். எனவே அளவுகோல்களிலும் உட்கூறுகளிலும் வேறுபட்டாலும் Boal-ன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கிற்கும் பண்பாட்டு மலர்ச்சிக்கூட அரங்கப்பணிகளுக்கும் அடிப்படை நோக்கத்திலும் வடிவத்திலும் ஒத்த தன்மைகள் உள்ளன.

போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்ச் சமூகத்தின் சமூக, பண்பாட்டு வாழ்வியல், அரசியல் மீட்டுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் இத்தகைய மையங்களுக்கூடாகப் பிரக்ஞைபூர்வமாக முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமானதாகும். தாயகப்பகுதிகளில் சமூக பண்பாட்டுச் சிதைவுகள் அதிகம் இடம்பெற்றுவருகின்ற புறநிலையில் இவ்வாறான செயற்பாடுகளும் அவற்றுக்கான பலமானதும் சுதந்திரமான பண்பாட்டு அமைப்புகள் அவசியப்படுகின்றன. பண்பாட்டுத்தளத்தில் ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்படவும் ஆரோக்கியமான விழுமியங்களுடனான ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவும் இவ்வகை அமைப்புகள் உகந்தவை. மக்களின் பிரச்சினைகளை மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து, கலைகளின் ஊடாக வெளிப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளை பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் முன்னெடுக்கின்றது. அதன் வகிபாகம் கலைகளின் ஊடான மானிட சமூக மேம்பாடு என்பதற்கு அப்பால் எமக்கான சமூக நிறுவனங்களை வளர்த்தெடுப்பதென்ற அடிப்படையிலும் அதன் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது.

**

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட –  கட்டமைக்கப்பட்ட நாடக அரங்க வெளிப்பாட்டு வடிவம் அதன் பேசுபொருளைப் பொருத்தமான தீர்வினை நோக்கி வளர்த்தெடுப்பதற்குத் தடையாக இருக்கும் என்பது Boal-ன் கருத்து. பார்வையாளர்களான சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் உள்ளார்ந்து அணுகுவதற்கு Forum Theatre  வழிவகுக்கின்றது. வேறு பரிமாணத்தில் அரங்க வெளிப்பாட்டினை முன்னெடுப்பதற்கும், புதிய மாற்றம் நோக்கிய அணுகுமுறைகளைக் கண்டடைவதற்கும் இது வழிகோலக்கூடியது. இந்த வடிவத்தில் படைப்பாக்கத்திற்குரிய கற்பனைகளுடன், கலைத்துவ நுணுக்கங்களுடன், நாடகத்திற்குரிய காட்சியின்பத்தைக் கொடுக்கும் அதேவேளை சமூக வாழ்வியல் பிரதிபலிப்பு காத்திரமானதாக அதில் இருக்கும். எனவே தேடலும் சமூகப் பார்வையும் பிரக்ஞைபூர்வமான ஈடுபாடும், கலைத்துவ ஆளுமையும், நடிப்பாற்றலும் செயல்முனைப்பும் இதில் ஈடுபடும் நடிகர்களுக்கு அவசியமாகின்றது.

மக்கள் சமூகம் கூட்டாக இணைந்து செயற்படுதல், ஜனநாயகத் தன்மையுடன் சமூக மாற்றத்திற்கான கலையை முன்னெடுத்தல் என்ற இரண்டு பரிமாணங்கள் இந்த வடிவத்திற்குள் உள்ளடங்கியுள்ளன. பிரச்சனையின் மூலத்தை ஆராய்தல், அதனை நாடக அரங்கமாக முன்வைத்தல், விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுதல், வெவ்வேறு தீர்வுகளைப் பரீட்சித்துப் பார்த்தல், சாத்தியமான தீர்வினைக் கூட்டாகக் கண்டடைதல் என்பதாக அதன் உட்கூறுகளை வகுக்கலாம்.

இன்னொரு வகையில் சொல்வதானால் மக்கள் தமது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை சார்ந்த நிலைமைகளை எதிர்த்து வெளிவருவது தொடர்பானது. இதில் Actors,  Spect-Actors, Audience என  Forum Theatreஇன் பங்காளர்கள் வகைப்படுகின்றனர். Spect – Actors எனப்படுவோர் பார்வையாளர்கலிருந்து நாடக அரங்கினை அவதானிப்பவர்களாக அல்லது பாத்திரமாக மாறி நாடக அரங்கில் செயற்படுபவராகவும் இருக்க முடியும். அவர்கள் சுயமான கருத்துகள், அனுபவங்களை நடிப்பு வழியாக வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடனான சிந்தனைக்கு (Critical thinking) வழிகோருபவர்களாகவும் இருப்பர். நாடக அரங்கத்தை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மேற்கொண்டு நகர்த்துவதற்கான காட்சிகளை பார்வையாளர்கள் தமது கருத்தாக முன்வைக்க முடியும். அவர்கள் முன்வைக்கும் காட்சிகளை நடிகர்கள் உள்வாங்கி காட்சியை விரித்துச் செல்வர். அல்லது பார்வையாளர்களே பாத்திரமாக மாறி காட்சிக்குரிய நடிப்பினை-நிகழ்த்திக் காட்டலை முன்னெடுப்பர்.

புலம்பெயர் சூழலில் எமது சமூகத்தில் நிலவுகின்ற அக முரண்பாடுகள் பலவும் பேசாப்பொருளாகப் ‘பேணப்படுகின்றன’. வழமையான கலைகளினூடாக அவற்றைப் பேசுதல் சுலபமல்ல. பிரச்சாரமென்ற நிலைக்குச் சென்றுவிடக்கூடும். எனவே Forum Theatre எனும் இந்த வடிவம் இவ்வாறான அகமுரண்பாடுகளையும், சென்சிற்றீவாக(Sensitive) அணுகவேண்டிய சமூகப் பிரச்சினைகளையும் பொதுத்தளத்தில் விவாதப்பொருள் ஆக்குவதற்கும், சமூகமாக இணைந்து சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் உகந்ததாக அமையும்.

இதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று சமூகப்பிரச்சினைகள் குறித்த விவாதங்களை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்தல் மூலம் மாற்றங்களுக்கு வழிகோலுதல். மற்றையது அருகிவரும் அரங்கியல் கலையை புதியதொரு பரிமாணத்தில் உயிர்ப்போடு வைத்துப்பேணுதல், வளர்த்தெடுத்தல் என்பதாகும்.

(தொடரும்)

உசாத்துணை நூல்:

 The Theatre of the Oppressed – Boal’s methods and practice> Arne Engelstad 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular