Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்என் எழுத்தில் என் நிலம்…

என் எழுத்தில் என் நிலம்…

கார்த்திக் புகழேந்தி

றிஞர் தொ.ப தனது நேர்காணல் ஒன்றில் பண்பாடு குறித்த கேள்வியில், “பண்பாடு என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி, அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்களின் பல்வேறு வகையான கருவிகள், புழங்குப் பொருட்கள், இசை-கலை-இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு. அது நிலம் சார்ந்துதான் பிறக்க இயலும்.” என்று குறிப்பிட்டிருப்பார்.

நான் எனது எழுத்தில் என் நிலத்தைக் கையாள்வது என்பது எனது பண்பாட்டை கையாள்வதுதான். அடிப்படையில் அது சொந்த ஊர் சார்ந்த பெருமிதமாகப் புரிந்து கொள்ளப்படுவது ஒரு சிறு வாதைதான். அதுவும் திருநெல்வேலிக்காரன் பிரச்சனைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒருவகையில் முன்னோடிகள் நிறையபேரால் உண்டாக்கப்பட்ட, பழகிய தடத்தில் நடந்து வருகிறவன் என்ற ‘சேர்ப்பு’ ஒருவகையில் துலக்கம் என்றாலும் பலவகையில் துக்ககரமானது.

‘திருநெல்வேலிக்காரர்கள் இன்னும் எதை எழுதாமல் மிச்சம் வைத்திருக்கிறீர்கள்’ என்பது போன்ற ஒரு தொனியை நான் எழுதவந்த ஆரம்பத்திலேயே காதால் கேட்டுவிட்டேன். அப்போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். “எழுதி முடிக்கப்பட்ட நிலம் என்று இங்கு எதுவுமே இல்லை.”

தொ.ப குறிப்பிடுகிற பண்பாட்டின் அசைவு நிலம் சார்ந்து, அங்கு வாழும் மக்கள், மொழி, கலை, கருவிகள், பொருட்கள் என்கிற தொடர்ந்த வரிசைகளில் வெளிப்படுகிறபோதும், அவை யாருடைய வாய்மொழியாக, எவர் வாழ்வில் இருந்து, எந்தத் தரப்பின் கதையாடலாக உருமாற்றம் கொள்கிறது என்பதும் இங்கே பெறுமதி வாய்ந்தது. பண்பாடு என்பது மேலோட்டமான, பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை கொண்டதாகச் சுருங்கிவிடுமா என்ன? நிலக்கிழாரின் கதையும், நிலமற்ற, நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனின் கதையும் பண்பாட்டின் அசைவுக்குள் ஒன்றாகப் புழங்கிக்கொண்டு விட்டதா என்ன?

என் எழுத்தின் ஊற்று என் முந்தைய கதைசொல்லிகளிடமிருந்து துவங்குகிறது. அலைகுடி வாழ்வின் வேர்தொடர்ச்சியை மிச்சம் வைத்திருக்கும் கதைசொல்லி மரபில் உற்பத்தி ஆனதால், நிலத்தைத் தள்ளியிருந்து எழுதிப் பார்க்கிறேன். அகலாது அணுகாது தீக்காய்வார் போல, தள்ளி நின்று பார்க்கும்போது, ஊரின் அம்சம் சிலசமயம் வியப்பூட்டுகிறது. சிலசமயம் அச்சமூட்டுகிறது. அங்கிருந்தே நான் ஊரின் பெருமிதங்களை வாகைப்பூக்களாகச் சூடிக்கொள்வதில் இருந்து வெளியேறுகிறேன். கசடுகளை உள்ளபடி முன்வைக்கத் தொடங்குகிறேன்.

இது நாட்டாரியல் தந்த அனுபவம். கழனியூரன் சொல்லித்தந்த ‘பாடம்’. “மீனை வாங்க எதற்கு சந்தைக்குப் போகிறாய், தண்ணீருக்குள் இறங்கு” என்று என்னை இந்தப் பெருவெளிக்குள் தள்ளிவிட்டுப் போனவர் அவர். எனது சொந்த நிலம் சார்ந்து, காலந்தோறும் மாறிவரும் பண்பாட்டுக் கூறுகளையும் சமூக வரலாற்றையும் அறியவும், ஆராயவும், உருவாக்கவும், மீட்டுருவாக்கம் பண்ணவும் ’நாட்டாரியல்’ பண்பு தருகிற சுதந்திரத்தை வேறு எங்கும் நான் கண்டடையவில்லை. அதனால்தான் என்னால் ஒரே சமயத்தில் தொ.ப-வுக்கு மாணவனாகவும் கழனியூரனுக்கு ‘சிஷ்யப்புள்ள’யாகவும் இருக்க முடிந்தது.

இந்த மனோபாவம் நிலவெளியின் எல்லைகளைக் கடக்கச் செய்தது. ஊரை எழுதுவது என்பது பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, மூளிகுளம், புதுப்பேட்டை, தயாபரன் தெருக்கள் மட்டுமா? மேற்கு மலங்காட்டில் மேய்ச்சல் மாட்டைத் தொலைத்துவிட்டு, அதைத்தேடி அலையும் மோதலில் மக்களின் தெய்வமாகிப்போன “வெட்டும்பெருமாள்” எந்தப் படித்துறையில் முங்கிக் குளித்தான்? சிலோன் கொச்சிக்கடை சந்தைக்குத் தூத்துக்குடி வழியாக கருவாடு ஏற்றி அனுப்பி, வணிகம் பண்ணிய மைதீன் முதலாளியின் “வள்ளம்” எந்தக் கரையில் மூழ்கியது.

ஆரம்ப எழுத்துக்களில் நிலம் என்பது ஒரு மதிப்பீடாக எனக்குள் எழவில்லை. அதிதீவிரமாக நான் பிறந்து, வாழ்ந்த வட்டாரத்தில் புழங்கும் மொழியின் மீதே என் ‘ஆவலாதி’ சுழன்றது. அதை நானறிந்த மனிதர்கள் மேலான வாஞ்சை என்றே கற்பனை பண்ணிக்கொண்டேன். அவர்கள் வாய்மொழிச் சொற்களுக்குத் தரும் அதீத கவனம் என்றுகூடப் புரிந்துகொண்டேன். பிறகு சொற்களின் இடத்தைப் பொருட்களும் பொருள்களின் இடத்தை அனுபவங்களும் சூழ்ந்துகொண்டன. வெகுபிந்தியே இவை அனைத்தையும் அடக்கிய வாழ்வும் அதில் இடைப்படும் சிடுக்குகளும், வாய்க்கால் கரைக்கு இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் உள்ள நிலமும் வாழ்வும் மொழியும் வெவ்வேறானது என்னும் தெளிவையும் வெளிப்படுத்த முனைந்தேன்.

நான் இருகரைகளிலும் முங்கிக் குளித்த கதைசொல்லி. இப்போது என் எழுத்தில் நான் கையாள்கிற ‘நிலம்’ அந்த இரு கரைகளுக்குமான உரையாடலாக மாறியிருக்கிறது அல்லது உரையாடலுக்கு முன்பான மழையின் அறிகுறியாகவேணும் சூல் பிடித்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்த உருவகத்தை எனக்குள் நான் ஏற்படுத்திக்கொள்ள முன்னோடிகள், சகபாடிகள் பலர் எழுத்து, கலை, இலக்கியத்துறையின் வழி பங்களித்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில்தான் ஒரு சொல்லை-பொருளை-கேள்விகளை-மனநிலையை-வரலாற்றின் சம்பவங்களை-புனைவாகவும் அல்புனைவாகவும் நிலத்தின் ஊடாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுத்து மட்டுமல்ல எனது வாசிப்புமே கூட இப்போது இந்த ரீதியிலே திரும்பி இருக்கிறது. காலில் சேறும் புழுதியும் ஒட்டாத, நிலமில்லாத எந்த சொல்லும் எனக்கு ஈர்ப்பைத் தருவதில்லை. வற்றா நதி என்கிற முதல் தொகுப்பு எழுதிவந்த காலத்தில் எனக்குள் இருந்த நிலம் வெள்ளந்தியானது. ‘வெஞ்சினம்’ தொகுப்பில் அது கேள்விகளால் ஆனது. இந்த நிலத்தில்தான் கொன்றவனும் கொல்லப்பட்டவனும் தெய்வங்களாகிறார்கள். இந்த நிலத்திலே குடிப்பெருமைக்காகக் கொலையுண்டோர் தெய்வங்களாகி குலங்காக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்!

மூப்பு பழுக்கும் கிழவியால் தன் சொந்த குடிக்குள்ளேயும் அழித்தொழிப்பை நிகழ்த்த முடிகிறது. வாழ்க்கை சுடர்விடும் முன்னே அழிந்துபோனவள் தீப்பாய்ந்த அம்மனாக அருள் பாலிக்கிறாள். ‘பண்பாட்டு இழிவு’ எனக்கொள்ளப்பட வேண்டிய இந்த இறுக்கமான, பழங் கட்டுமானங்கள் கீழே தாழ்ந்து, ‘முன்னோர் மகத்துவமானவர்கள்’ எனும் அரசியலற்ற பார்வை நிலைபெறுவதும், வஞ்சிக்கப்பட்ட உயிர்களும் தெய்வங்களும் இன்று வேறொரு புறம் அரசியல் உள்நோக்கத்தோடு ‘காவி’ மயமாக்கப்படுவதும் கண்முன்னே என் நிலத்தில் நிகழ்கிற கூற்று. கூற்றே என்னுள் கதையாகிறது. என் நிலம் கதைகள் மலிந்த பாறைக்கொத்தளம். கொந்திப் புரட்டினால் பாம்பும் நெளிகிறது; ஊற்றும் சுரக்கிறது. இரண்டையும்தான் எதிர்கொள்ளணும்.

***

கார்த்திக் புகழேந்தி – எழுத்தாளர், கதை சொல்லி , நாட்டாரியல் ஆய்வாளர். பிறந்தது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “வெஞ்சினம்” வெளியாகியுள்ளது. தொடர்புக்கு: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular