Friday, March 29, 2024
Homesliderஇலங்கையின் வதைமுகாம்கள்

இலங்கையின் வதைமுகாம்கள்

நர்மி

*

நாசிகளின் வதைமுகாமில் இருந்து மீண்டு வந்த ரெபெக்கா சி  இரண்டாயிரமாவது ஆண்டில் இப்படி சொல்லியிருந்தார்.

நான் விடுவிக்கப்பட்டவன், என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. ஆனால் உயிர் பிழைத்ததற்காக முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். ஆனால் இன்னொரு பக்கத்தில் இருந்து யோசிக்கும்போது எல்லோரையும் இழந்து நிற்கும் நான் எப்படி கடவுளுக்கு நன்றி செலுத்த முடியும். இந்நிலையில் நான் எவ்வளவு  தூரம் மகிழ்ச்சியாக இப்போது இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?”

எப்படிப்பட்ட கொடுமையான மனநிலையிது? இதை அம்மனிதனுக்கு எவ்வகையிலான விடுதலை என்று சொல்ல முடியும்? இது ஒரு வகையில் அம்மனிதன் உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதைகளாக மட்டும்தானே இருக்க முடியும். 2009 ஆம் ஆண்டில் 33 ஆண்டுகாலமாக நடைப்பெற்ற யுத்தம் முடிந்து விட்டதாக இலங்கையரசும், பெரும்பான்மை சிங்களக் குடிகளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார்கள். சிறுபான்மையினங்களுக்கு தீமை செய்யக்கூடிய பெரும்பான்மை மக்களைப் பிரதிபலிக்கும் ஜனநாயகம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு நிரூபித்திருந்தது. வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் சித்திரவதையின் வடுக்களை சுமந்து கொண்டு வாழும் வாழ்வானது எப்படிப்பட்ட சித்திரவதைகளை தாங்கியது, பிடிபட்ட அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது, எவ்வகையிலான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது, என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசப்போகின்றது.

மொட்டுக்களில் இருந்து பூவிதழ்கள் விரிவதைப்போல, வான் நோக்கி பறக்கின்ற பறவையின் சிறகசைவு போல விடுதலையுணர்வு என்பது ஒருவகை இயல்பான உணர்வுதானே, இயல்பானவொன்றை வலிந்து பெறுவதற்காக ஏன் உலகம் முழுவதும் இத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன, இவ்வளவு இரத்தங்கள் ஏன் இங்கு சிந்தப்படுகின்றன, சகல மனிதர்களும் சுதந்திர புருஷர்களாகவும், சமத்துவம் வாய்ந்த மக்களாகவுமே பிறக்கின்றனர் என்றெல்லாம்  சொல்லப்படுகின்றது. ஆனால் அதெல்லாம்  அபத்தமான பொய்கள் என்று யுத்தங்களும், அங்கு நடைபெறுகின்ற சித்திரவதைகளும் நிரூபித்து விடுகின்றன. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை தீவுக்கு 1948 இல் விடுதலை கிடைத்தது. ஆனால் இந்த நாட்டின் சிறுபான்மை குடிகள் மீது தசாப்தங்களாக தொடரும் மீட்சிபெற முடியாத அடக்குமுறையையும், அநீதியையும் பெரும்பான்மை அரசு செய்து கொண்டே இருக்கின்றது.

இந்தக் கட்டுரையை எழுத முயற்சித்தபோதும், அதற்கான தகவல்களை தேடிக்கொண்டிருந்தபோதும் கோனிலின் ஜி.ஃபீக்கின் மனநிலைதான் எனக்கும். (யூத இன அழிப்பு, வதைமுகாம்கள் குறித்தும் ஆய்வுகள் செய்தவர்) வதைமுகாம்கள், சித்திரவதைகள் பற்றி எழுதுவதும், தேடுவதும், ஆய்வுகள் செய்வதும் மிகுந்த மனச்சோர்வையும், அழுத்தத்தினையும் ஏற்படுத்தியது. இலங்கையில் யுத்த காலங்களில் வதைமுகாம்களில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அதில் இருந்து மீண்டெழுவதும், அதுபற்றி தெரியவருகிறவர்கள் அந்த சிந்தனையில் இருந்து மீண்டெழுவதும் மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் முடியாத காரியம் என நினைக்கின்றேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும், சித்திரவதையும் மனித உரிமை மீறல்களும் வரலாற்றில் இன்று நேற்று உருவாகியவை இல்லை.

வரலாற்றில் பிரிட்டனே உலக நாடுகளிற்கு முதன்முதல் உத்தியோகபூர்வமாக வதைமுகாம்களை அமைத்து மனிதர்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் முறையினையும், வதைமுகாம் என்ற சொல்லாடலையும் முதன்முதல் அறிமுகப்படுத்தியிருந்தது. 1899 இல் இருந்து 1902 வரையான காலத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போயர் போரின் போது வதை முகாம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. போயர் கொரில்லா பிரிவினரை அடக்குவதற்காக 45 தற்காலிக  சிறைகள் வதைமுகாம்களாக மாற்றப்பட்டு 42000 போயர்கள் அங்கு மரணமடைந்திருந்தனர். அதில் 25% பிரிட்டன் பகிரங்கமாகவே சித்திரவதை செய்து கொலை செய்திருந்தது.

இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவங்கள் தானே. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1948,1949 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பத்து லட்சம் அப்பாவி பெருந்தோட்ட தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. மேலும் தமிழர்களின் 2000 சதுரமைல் பிரதேசங்கள் அரசினால் கையகப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், 1956 தனிச்சிங்கள சட்டம், 1970 இல் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் எல்லாமே ஒரு இனத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் சட்ட ஏற்பாடுகளே.

1956, 1958, 1961, 1974, 1979, 1981, ஜுலை 1983 இல் தமிழர்களுக்கு எதிராக வெடித்த இனக்கலவரங்கள், கலகத்தில் ஈடுப்பட்டிருந்த சிங்களவர்களுக்கு வெளிப்படையாக தமிழர்களை சித்திரவதை, பழிவாங்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளிலும் , வீதிகளிலும் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள். அவர்களுடைய பெறுமதி வாய்ந்த சொத்துகள் அழிக்கப்பட்டன, திருடப்பட்டன. இந்த கறுப்பு ஜூலை ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களை அகதிகளாக்கியிருந்தது. இதுவரை வாழ்ந்த மலையகப் பிரதேசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை நோக்கி அவர்கள் செல்ல காரணமாகியது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நீடித்தபோது விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகியிருந்தது. அதன் பின்னர் அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கையரசிற்கும் இடையில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும், அதற்கு பின்னரும் குறிப்பாக தமிழ்மக்கள்  செறிந்து வாழ்கின்ற பகுதிகளாக இருந்த வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குற்றவியல் புலனாய்வு பிரிவினர்(CID) மக்களுடன் மக்களாக கலந்திருந்தனர். அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்கள், செய்ய இருந்தவர்கள் எனப் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டனர். மறுபுறம் அரசை விமர்சித்த, எதிர்த்து கேள்விகள் கேட்ட ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டார்கள், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள். யுத்தகாலத்தில் காணமல் போதல், வெள்ளை வேன் கடத்தல்கள் என்பன மிகச்சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருந்தன. விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் செய்தார்கள் அல்லது விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள், தற்கொலை தாக்குதலின்போது பிடிக்கப்பட்டவர்கள், யுத்தம் முடிவடைந்தபோது முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டவர்களே இலங்கை வதை முகாம்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் ஒவ்வொன்றும் சட்டத்திற்கு புறம்பானதாகவும், மனித உரிமைகளை கேள்விக்கு உட்படுத்துவதுமாக இருந்தது.

இலங்கையில் தடுப்பு முகாம்கள் பின்வரும் இடங்களில் அமைந்திருந்தன:

அச்சுவேலி – அச்செழு இராணுவ முகாம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஜோசப் இராணுவ முகாம், வவுனியா  குறிசுட்ட குளத்திற்கு அருகில் இருந்த ஒரு இராணுவ தளம், அருகில் இருந்த இன்னொரு கடற்படைத்தளம், தற்காலிக தடுப்பு நிலையங்களாக தொழிற்பட்ட புனர்வாழ்வு நிலையங்களான – செட்டிக்குளம் முகாம், வவுனியாவில் ஒரு முன்னைய தொழில்நுட்பக் கல்லூரி, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, பம்பைமடுக் கல்லூரி, வவுனியா பூந்தோட்ட முகாம், முன்னைய கல்வி நிறுவனம் , வவுனியா இராம நாதன் (மெனிக்பாம்) இரம்பை மகளிர் கல்லூரி, திருகோணமலை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, புதுக்கடை பொலிஸ் நிலையம், கொழும்பு, கல்முனை, கடவத்தை, பொலிஸ் நிலையம், கொழும்பு கல்முனை கடவத்தை பொலிஸ் நிலையம், கொழும்பு குற்றவியல் புலனாய்வு திணைக்கள நிலையம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயங்கரவாத புலனாய்வு திணைக்களம், பூசா தடுப்புமுகாம் (காலி).

இங்கிருந்துதான் பதைபதைக்கச்செய்யும் சித்திரவதை சம்பவங்கள் பற்றி அறியக்கிடைத்தது. மேற்கூறிய முகாம்களைத் தாண்டி வதை முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்த பலர் காட்டுப்பிரதேசம் ஒன்று பற்றி அடிக்கடி சொல்லியிருந்தனர். அப்படிப்பட்ட முகாம்கள் எக்காரணம் கொண்டும் இனம் கண்டுவிடக்கூடாது எனும் நோக்கில் கைதிகளின் கண்கள் கட்டப்பட்டு இருந்தன. பல மணிநேர பயணங்களின் பின் ஆண்களும், பெண்களுமாக பலர் அப்படிப்பட்ட காட்டுப்பகுதியில் அமைந்த முகாமிற்கு எடுத்துச்செல்லப்பட்டு இருக்கின்றனர். பெரும்பான்மை முன்னாள் போராளிகளுக்கு தமிழர்கள்  செறிவாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு, பரிட்சயமான இடங்கள். கொழும்பு, காலி, இரத்மலானைகூட கொஞ்சம் பரிட்சயமானவை. ஆனால் இவற்றுக்கு அப்பால் மிகக்கூடிய சித்திரவதைகளுக்கான தடங்கள் கிடைத்த அந்த காட்டுப்பகுதியில் அமைந்த வதைமுகாம் பற்றி எந்தவித சரியான தகவல்களும் தெரியாதவர்களாக கைதிகள் இருந்தார்கள்.

முதலில் அவர்களுக்கு முன்னால் முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த குற்ற வாக்குமூலங்கள், மற்றும் சில கோப்புகள் அவர்கள் கைவசம் இருந்திருக்கின்றன. விசாரணை மேற்கொள்கிறேன் எனும் பெயரில் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டவர்களாக, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்குமூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளைச் செய்தார்கள். இந்த சித்திரவதையின் பின்னணியில் மூன்று விடயங்கள் மிக அப்பட்டமாகவே தெரிந்தது. எல்.ரீ.ரீ இயக்கத்தின் கடற்புலிகள், அல்லது புலனாய்வு சேவை, போன்றவற்றுடன் தொடர்புபட்டிருந்த உயர்மட்ட சந்தேக நபர்களிடம் இருந்து அவர்கள் திட்டங்களின் உண்மையான தகவல்களை பெறுவது, (இயக்கத்தின் வலையமைப்பு, வெளிநாட்டு ஆதரவு, ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள்), பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வது, இனத்துவேசத்தை தீர்த்துக்கொள்வது.

புலனாய்வு திணைக்களத்தின் நான்காவது மாடி சித்திரவதைகளை நிகழ்த்துவதற்கு ஏற்ப உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அடிப்பதற்கான உலோகக்கம்பிகள், பொல்லுகள், நீரில் அமிழ்த்தி சித்திரவதை செய்வதற்கான தண்ணீர் பீப்பாய்கள், கைதிகளை தொங்கவிடும் கம்பங்கள் என எல்லாமே இருந்தது. அந்த அறை முழுவதும் இரத்தம் சிதறிக் கிடந்திருக்கிறது. சுவர்கள் முழுவதும் இரத்தக்கறைகள் படிந்து காணப்பட்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட தகவல்களையோ, அல்லது குற்ற வாக்குமூலத்தையோ பெறுவதற்காக சித்திரவதைப்படுத்தப்பட்ட கைதிகளின் நிலை கொடூரமாக இருந்தது. அனேகமான நேரங்களில் விசாரணைகளின்போது அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள், அவர்களுடைய கால்நகங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. ஊசிகளையும், குறடுகளையும் அதற்கு பயன்படுத்தி இருந்திருக்கின்றார்கள். நகத்தின் சதைக்கு இடையில் ஊசிகள் புகுத்தப்பட்டன. யோனி துவாரத்தில் மிளாகாய்த்தூள் தடவப்பட்டிருக்கிறது.

மூச்சுத் திணறித்துடிக்கும் அளவு நீரில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றார்கள். மின்சார வயர்கள் உடல் மீது வைத்து குறிப்பிட்ட நபர் மரணிக்கும் அளவு மின்சாரம் அவர்களது உடலில் பாய்ச்சப்பட்டிருந்தது. ஆண்குறிகளில் உலோக வயர்கள் திணித்தார்கள். பல சமயங்களில் இரத்தம் கசியும் வரை அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கால்பந்து போல கைதிகளை அவர்கள் தாக்கினார்கள். தலைகீழாக தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டனர். சிகரெட்டுகள், சூடாக்கப்பட்ட உருக்கு கம்பியில் உடல்களில் சூடு வைத்தார்கள். பல சமயங்களில் ஐஸ்கட்டிகள் மலத்துவாரத்தினுள் புகுத்தப்பட்டிருந்தது.

மிகவும் பயங்கரமான சித்திரவதையொன்றை ஐ.நா மனிதவுரிமை அறிக்கை விபரித்திருந்தது. பின்துவாரத்தில் குழாய் ஒன்று அனுப்பட்டிருக்கிறது. அந்த குழாயினுள் முட்கம்பிகள் இருந்தன. குழாய்கள் வெளியில் எடுத்ததும் கம்பி உடலுக்குள் இருந்திருக்கிறது. கடுமையான இரத்தப்போக்கையும்,தாங்கமுடியாத வலியினையும் அது உண்டாக்கக் கூடியதாய் இருந்திருக்கிறது. யோனியிலும், ஆண்களின் பின்துவாரத்தின் வழியாகவும் ஒரு வஸ்து சொருகப்பட்டிருக்கிறது. வெளியே எடுப்பதும் உள்ளே அனுப்புவதுமாக செய்யப்பட்ட அந்த சித்திரவதைகள் மரணவலியுடையதாக கைதிகளுக்கு இருந்தது.

பாலியல் ரீதியான சித்திரவதைகள் பிடிப்பட்ட கைதிகள் ஆண், பெண் என்ற வேறுப்பாடு இன்றி நடந்தது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இராணுவ சிப்பாய்கள் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆண் பாலுறுப்புகளை  கடுமையாக தாக்குவது, பிடித்து நசுக்குவது, கம்புகளை கொண்டு ஆண்குறிகளைத் தாக்குவது என்பவற்றை பரவலாக செய்தார்கள். கொழும்பில் உள்ள நாலாவது மாடியில் வைத்திருந்த ஆண்கள் ஓரினச்சேர்கைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்பட்டார்கள். இராணுவ சிப்பாய்கள் ஆண் கைதிகளை வாய்மூலமான பாலுறவுக்கு உட்படுத்திக்கொண்டே இருந்திருக்கின்றனர். விசாரணைகளின் போது நிர்வாணமாகவே கைதிகள் வைக்கப்பட்டார்கள். அப்படி நிர்வாணமான உடல்களை படம் பிடிப்பது, ஒளிப்பதிவு செய்வது அனேக சிப்பாய்களிடம் ஒரு நிரந்தர பழக்கமாகவே இருந்தது.

பெண்களின் மீதான பாலியல் சித்திரவதைகள், சித்திரவதையின் அடுத்த பரிணாமமாக இருந்தன. விசாரணை என்ற பெயரில் அவர்கள் நிர்வாணமாகவே இருக்க வைக்கப்பட்டனர். பாலியல் சித்திரவதைக்காக சில நுட்பங்களை அவர்கள் கையாண்டு இருந்தனர். பெற்றோல் வாசனையுடன் கூடிய ஒரு பிளாஸ்ரிக் பையை  அவர்கள் தலைக்கு மேலாய் போட்டனர். பின்னர் மூர்ச்சையாகி விழுந்த பின்பும் அப்பெண் கைதிகளை ஒருவர்பின்  ஒருவராக தொடர்ந்து வன்புணர்வு செய்யத்தொடங்குவர் அப்பெண்கள் மயக்கமடைந்து மீண்டும் மீண்டும் எழும்போதெல்லாம். தொடர்ச்சியான வன்புணர்வு அவர்களுக்கு தொடர்ச்சியான இரத்தப் போக்கை ஏற்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களே குறிப்பிட்ட முகாமுக்கு பாலியல் சித்திரவதை செய்ய பெண் கைதிகளை அழைத்துப்போனதை பார்த்திருந்தனர். சில பெண்களுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சுயநினைவுக்கு திரும்பிய போது தமது உடல்கள் முழுவதும் நகக்கீறல்களும், மார்பு பகுதியில் பற்களால் கடித்த தடங்களும் இருந்ததை பார்த்தார்கள். உடல் முழுவதும் சிகரெட்டால் சுடக்கூடப் பட்டிருந்தது.

ஒரு சிரேஷ்ட அதிகாரி நான்கு வருட தடுப்புக்காவலில் இருந்த பெண்கைதியை தொடர்ந்து நான்கு வருடமும் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தார். கட்டற்ற முறையற்ற பாலியல் நடத்தைகள், சித்திரவதைகள் கைதிகளை சுகயீனப்படுத்தி இருந்தது. பின்துவாரத்தில் இருந்து இரத்தம் நிறுத்தப்படாமல் வெளியேறிக்கொண்டு இருந்திருக்கிறது. இப்படி பாலியல் வன்புணர்வுக்கு தெரிவு செய்யும் பெண் கைதிகள் தொடர்பில் இராணுவத்திற்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் சிலர் இருந்திருக்கின்றனர். மனிக்முகாமில் இருந்து ஜோசப் முகாமிற்கு பெண்கள் அப்படி எடுத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். சிகரட்டுகளில் அந்தரங்க உறுப்புகள் சுடப்பட்டிருந்தன. பெண்களின் மார்பகம், யோனி என்பவற்றை, அவர்களை வன்புணர்வு செய்வதை படங்களாகவும், ஒளிப்பதிவாகவும் தமது கைத்தொலைப்பேசியில் அவர்கள் சேமித்து வைத்துக் கொண்டார்கள்.  கொடூரமான பாலியல் சித்திரவதை நடக்கவில்லையென இலங்கையரசு மறுத்திருந்தது. ஆனால் கொடூரமான பாலியல் சித்திரவதை நடந்தன என்பதை மருத்துவ அறிக்கைகள் சட்டபூர்வமாக நிரூபித்திருந்தன. இலங்கைக்கு வெளியில் எடுத்து செல்லப்பட்ட பல மருத்துவ சட்ட அறிக்கைகள் பாலியல் சித்திரவதை காரணமாக கைதிகள் தொடர்ச்சியான வலி, இரத்தப்போக்குக்கு உள்ளாகியதோடு, பாலியல் உறுப்பில் தேவையற்ற கம்பி, இரும்பு, குழாய் போன்ற வஸ்துக்களை இட்ட செயற்பாடானது அவர்களின் குடல் சிலநேரங்களில் வெளியே வரக்கூட காரணமாக இருந்திருக்கிறது.  கொடூர சித்திரவதையினால் சிறையிலேயே மரணமான சம்பவங்கள்கூட நிகழ்ந்தது.

முகாமில் இனத்துவேசத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில்  பொதுவாகவே அனைத்து கைதிகளும் எப்போதும் நடத்தப்பட்டனர். “தமிழ் நாய்கள்” , “தமிழ் பறையர்கள்”, இன்னும் சிங்கள மொழியில் வழமையில் உள்ள துர்வசனங்களை கைதிகளிடம் அடிக்கடி பேசினார்கள். கைதிகளை நிர்வாணமாக்கி விட்டு அவர்கள் மீது சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அவர்களின் சிறுநீரை அவர்களை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தார்கள். உணவுகள் தரையில் கொட்டப்பட்டு நாய் போல கைதிகளை நக்கிச் சாப்பிட சொன்னார்கள். கீழே இருந்த இரத்தக்கறைகளை நக்க வைத்தார்கள், இப்படி மனரீதியாக பலவீனப்பட்டு வாழ்வையே வெறுத்துப்போய் வலிய மரணங்களை தாமாகவே கெஞ்சிக் கேட்கிற அளவு அங்கு அவ்வளவும் நடந்தது.

இலங்கையில் நடந்த இந்த சித்திரவதைகள் எல்லாம் சட்ட ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்தவிதமான நீதி, நியாயங்களும் கிடைக்காமலேயே போய்விட்டது. யுத்தம் முடிவடைந்ததும் பலர் விடுதலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் சிறையிலேயே இருக்கின்றனர். பலர் யுத்தத்திலும், சித்திரவதையிலும் மரணித்துப் போனார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள், ஆனால் அந்த சித்திரவதையின் வடுக்கள் மனரீதியாக அவர்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருந்தது. தற்கொலை செய்துகொள்வதில் நாட்டம், மன அழுத்தம், உள்முகமான சிந்தனை, நித்திரையின்மை போன்றவற்றால் நிரந்தரமாகப் பீடிக்கப்பட்டார்கள்.  இந்த இடத்தில் பிரைமோ லெவியின் கதையை சொல்லி முடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பிரைமோ லெவி என்பவர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வாழும்காலம் வரை சுயசரிதை, நாவல், கவிதைகள், சிறுகதைகள், அறிவியல் புனைக்கதைகள் என்று எழுதிக்கொண்டே இருந்தவர். ஆனால் அவர் தனது 67 வது வயதில் இத்தாலியில் உள்ள டூரின் நகரில் உள்ள மூன்றடுக்கு மாடியின் வீட்டில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வெறும் பதினொறு மாதங்கள் மட்டும் போலந்தில் உள்ள ஆஷ்ட்விஸ் வதைமுகாமில் இருந்த அவரது சித்திரவதைக்கால நினைவுகளை அவரால் வாழும்வரை மறக்க முடியாமல் இருந்தது. அவர் வாழ்வதற்கு எவ்வளவோ முயற்சித்து  இருந்தும் கூட.  வதைமுகாமில் அவருக்கு இடப்பட்ட 174517 என்ற எண் அவரது மணிக்கட்டில்  பொறிக்கப்பட்டிருந்தது. நேரத்தை அவர் பார்ப்பதற்கு தனது மணிக்கட்டை திருப்பும் போதெல்லாம் அந்த சித்திரவதையை அவரால் மறக்க முடியாது இருந்தது. அது  உளவியல் ரீதியாக அவரை மிகவும் பலவீனப்படுத்தியிருந்தது. படித்த, இதர துறைகளில் ஈடுப்பாடு கொண்ட பிரைமோ லெவி  போன்றவர்களையே மீண்டு வரமுடியாத மனச்சிதைவை வதைமுகாமின் சித்திரவதைகள் ஏற்படுத்தியிருந்த போது, முறையான படிப்பறிவற்ற, போரும், வறுமையும், இனமுரண்பாடும், அடக்குமுறையும் மலிந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இலங்கை போன்ற ஒரு சமூகத்தில் உள்ள ஒரு நபரை வதைமுகாம்களின் சித்திரவதைகள் எந்தளவு மனச்சிதைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நீங்களே புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள்.

உசாத்துணை நூல்கள்:

  1. ஞானையா.டி. (2011) “சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்”, கோடம்பாக்கம் : அலைகள் வெளியீட்டகம் .
  2. தமிழினி, (2017) “ஒரு கூர்வாளின் நிழலில்”, நாகர்கோவில் 629001 : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்.
  3. மருதன், (2016) “ஹிட்லரின் வதை முகாம்கள்”, சென்னை – 600014 : கிழக்கு பதிப்பகம் .
  4. ராகவன்,பா. (2009) “பிரபாகரன் : வாழ்வும் மரணமும் “ , சென்னை – 600014 : கிழக்கு பதிப்பகம் .
  5. ஜோர்ஜ் ப்fரெக்ஸ், பார்ட் க்ளெம் ,( 2004) “பல்வகைமையினை கையாளுதல்; இலங்கையின் சமாதானமும் முரண்பாடும் பற்றிய சொல்லாடல், நாவின்ன , மஹரகம : தரஞ்ஜி பிரின்ட்ஸ் .
  6.  (2015)  “report of the OHCHR Investigation in Sri Lanka” , Human rights council.
  7. https : // www . hrw . Org / ta / world – report / 2016 /country – chapters / 286140.
  8. https : www. Google . Com / amp / s /www. bbc .com / tamil / amp / Sri – Lanka – 49098048

*

நர்மி என்கிற பெயரில் எழுதிவரும் இவருக்கு இதுவரை ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு பயணக்கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன

RELATED ARTICLES

1 COMMENT

  1. தொடர்ந்து வாசிக்கவே முடியவில்லை.சிரமபட்டு தான் வாசிக்க முடிந்தது.மனதை பதைபதைக்க செய்கிறது.மனம் அவ்வளவு பாரமாக ஆனதை உனர முடிகிறது.சில நேரங்களில் மனிதர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா என்று நினைக்கும்போது மனிதத்தின் மேல் உள்ள நம்பிக்கையே போய் விடுகிறது.அனைவரும் மற்றவரை கொடுமைபடுத்த வாய்ப்பை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறதோ என ஐயப்பட வைக்கிறது.சிறப்பான எழுத்துநடை நர்மி.உங்கள் கரங்களை பற்றிக் கொள்ள தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular