Friday, March 29, 2024
Homeகட்டுரைவரலாறுஅங்காளம் - முன்னோட்டம்

அங்காளம் – முன்னோட்டம்

கார்த்திக் புகழேந்தி

மரபுவழி வரலாறு vs மாற்று வரலாறு

ந்த இருதுருவ மனநிலையை எனக்குள் விதைத்த முன்னோடிகள் பலர். உதாரணமாக, இந்தியாவின் முதல் இரும்புப்பாதை… என்று கேள்வியை முடிக்கும் முன்பே, அது மும்பைக்கும் (போரிபந்தர்) தானேவுக்கும் இடையில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து மூன்றாம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினாறாம் நாளில் சாயங்காலம் மூன்று முப்பது மணிக்கு பதினாலு பெட்டிகளுடன் நானூறு பேருடன், இருபத்தோரு குண்டுகள் முழங்க முப்பத்து நான்கு கிலோ மீட்டருக்குப் பயணப்பட்டது என்று நம்முடைய மரபுவழி வரலாற்றுப் பக்கங்கள் நமக்கான பதில்களைத் விரைந்து தந்துவிடும்.

ஆனால், பழைய மதராசப்பட்டனத்திற்கு சாலைகள் உண்டாக்கத் தேவையான சரளைக் கற்களை செங்குன்றத்திலிருந்து கொண்டுவர, ஆறு கி.மீ நீளத்திற்கு தண்டவாளம் அமைத்து, ஐந்து பேர் பயணம் செய்யும் விதமாக, பனிரெண்டு மைல் வேகத்தில் இயங்கும் முதல் ரயிலை 1837ல் இருந்து இங்கே தமிழகத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு இயக்கி வந்ததும், 1835 அதே தண்டவாளத்தில் மாடுகளையும் குதிரைகளையும் கட்டி ரயில்பெட்டிகளை இழுத்துச் சென்று வெள்ளோட்டம் கண்டதும், அதற்கும் முன்பாக, 1831ல் காவேரிப்பட்டணத்தில் ஆரம்பித்து கரூர் வரைக்கும் 150 மைல்களுக்கு ரயில்பாதைத் திட்டம் முன்வைக்கப்பட்டதும் 1857ல் இங்கிலாந்தில் கிரேட் சதர்ன் ஆப் இந்தியா கம்பெனி உண்டாகும்முன், 1845ல் மதராஸ் ரயில்வே கம்பெனி இயங்கி வந்தது எனும் மாற்று வரலாற்றை நாம் கண்ணைக் கட்டிவிடப்பட்டக் காட்டுக்குள் நின்றுதான் தேடிக் கண்டடைய முடிகிறது.*

எனக்கு இந்த ஆட்டம் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எல்லாக் கதவுகளையும் தட்டித் திறந்து உள்ளே நுழைந்து, கட்டுக்களைக் கலைத்துப் போட்டு தேடி விளையாடுகிற கண்ணாமூச்சி ஆட்டம். அது தொல்லியல் மேடுகளானாலும் சரி, சங்கப் பாடல்களானாலும் சரி, நாட்டார்க் கதைகளானாலும் சரி, கலை, இலக்கியம், சமயம், மொழி, சமூகம், பண்பாடு, சாதியம், வழக்காறுகளெனத் தேடிப்பிடித்துத் தெரிந்துகொள்கிற, தெரிந்தபின் அவற்றின்மீது தெளிவினை ஏற்படுத்திக் கொள்கிற ஓர் மாற்று வரலாற்றுப் பார்வையாக இக்கட்டுரைத் தொடர் இருக்கும் என்று நம்புகிறேன்.

பிறகு, ஆதியிலே நம் மனிதமனம் மேற்கொண்டிருந்த வினைகளில் பலவும், நமது பழைய ஞாபகங்களாக, மரபின் தொடர்ச்சியாக, நினைவின் மிச்சங்களாக அவனால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. உண்மையைச் சொன்னால், தொன்மையான நம்முடைய பழக்கங்களின் மீதே இன்றைய ‘நவீன மனம்’ கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தினம் தினம் அது எதிர்கொள்ளும்/ செயல்படுத்தும் பல்வேறு அன்றாடங்களில், பொருட்களில், சொற்களில், விலங்குகளில், பறவைகளில் என பண்பாட்டின் நெடிய சங்கிலி ஒன்றை விடாமல் நம் கைகளில் பற்றியிருக்கிறோம். எத்தனையோ அழித்தொழிப்புகள், அதிகார மாற்றங்கள், இடப்பெயர்வுகள், போர்கள், சாவுகள், அடிமைத்தனம், மதத் தலையீடுகள் என யாவற்றையும் கடந்து, இம்மனித இனம் தன் ஆழ்மனத்துக்குள் தூக்கிச் சுமக்கும் பண்பாட்டுச் சுனையின் ஈரத்தை உள்ளங் கைகளில் அள்ளித் தெளிப்பதுபோல் இக்கட்டுரைகளின் வழி எனக்குள்ளே பல ஆசுவாசங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து இத்தொடரை என்னை எழுத வைத்துவிட்ட சாத்தியத்திற்காக ‘யாவரும்’ ஜீவகரிகாலன் அவர்களுக்கு மனமுவந்த நன்றி, பிறகு, இக்கட்டுகள் நிறைந்த இந்தக் கடுமையான காலத்தில் என் எழுத்து மனத்தைப் பத்தி விட்டுக் கொண்டே இருக்கிற எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு பேரன்பு.

-அன்புடன்
கார்த்திக் புகழேந்தி.

*Notes of Some Experiments Made by Captain a Cotton upon Mr Avery’s Steam Engine”-25’ January 1935 – Reports of The Corps of Engineers Madras Presidency Volume 1

பாகம் 1 : தீயின் விளைவாக (சொடுக்கவும்)

***

கார்த்திக் புகழேந்தி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular