விவசாயிகளோடு நுகர்வோரையும் சுரண்டும் சலுகை முதலியம்: ரத்தன் கஸ்னபிஸ்

0

புகழ்பெற்ற மார்க்சிய – பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார்

சுபோரஞ்சன் தாஸ்குப்தா

முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக் (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய – பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ் மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார்.

கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்லை?

கஸ்னபிஸ்: மேற்கு நாடுகளில் உள்ள முன்னேறிய முதலாளித்துவத்திற்கும் வளரும் நாடுகளில் உள்ள சலுகை முதலாளித்துவத்திற்கும் ஓர் அடிப்படையான பெரிய வேறுபாடு உள்ளது. விவசாயத்திற்கு மானியம் வழங்காமல் முதலாளித்துவம் உயிர்வாழ முடியாது என்பது முன்னேறிய முதலாளித்துவத்திற்கு நன்றாகவே தெரியும். வேளாண்மைத் துறை, அதன் உற்பத்தியின் தன்மை காரணமாக குறைந்த மூலதனச் செறிவுடையதாகத் தொடர்ந்து இருக்க வேண்டும். உண்மையில், வேறு துறைகளில் போடும் அதே அளவு முதலீட்டை வேளாண்மையில் போட்டால் அவற்றைவிடக் குறைந்த உபரியையே உருவாக்கும். எனவே வேளாண் துறையில் அதிகப்படியான இலாப விகிதத்தை உறுதி செய்யாவிட்டால் உங்களால் விவசாயத்தை நோக்கி மூலதனத்தை ஈர்க்க முடியாது.

இதனால்தான் ஒரு துறையிலிருந்து மற்றொன்றுக்கு சுதந்திரமாக மூலதனத்தை நகர்த்துவதற்கான ஏற்பாட்டுடன் கூடிய முதலாளித்துவ உற்பத்திக் கட்டமைப்பில் வேளாண்மைக்கு குறிப்பாக சோள உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் கடினமான உண்மை என்னவென்றால் நீங்கள் மானியம் வழங்கா விட்டால் மூலதனம் விவசாயத்தை விட்டு விலகிச் செல்லும்.

மறுபுறம் ஒரு மூடிய பொருளாதாரத்தில் சோளத்தின் விலை உயரும், ஊதியங்கள் அதிகரிக்கும். அந்தத் தொழிலில் இலாபம் குறையும். சுருக்கமாகச் சொன்னால் விவசாயத்திற்கு மானியம் வழங்காததன் மூலம் நீங்கள் உங்கள் தொழிலைக் கொல்லலாம். அதற்கொரு தீர்வாக சோளத்தை இறக்குமதி செய்யலாமே என்று பரிந்துரைக்கப்படலாம். ஆனால் எந்தவொரு முன்னேறிய நாடும் அவ்வாறு செய்வதை விவேகமானதாகக் கருதாது. ஏனெனில் அது உணவுப் பாதுகாப்பிற்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அதன் அரசியல் விலை மிகப் பெரியதாக இருக்கும். முன்னேறிய நாடுகளில் உள்ள முதலியம் இந்தத் தர்க்கத்தை அறிந்திருக்கிறது. எனவேதான் 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க விவசாயிகள் 22 பில்லியன் டாலருக்கும் மேலான அரசுப் பணம் பெற்றது எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 14 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த வேளாண் மானியம் இது. அதுவும் இந்தப் பணத்தைக் கட்டியது பெருநிறுவனத் துறை (the corporate sector).

ஆனாலும் தே.ஜ.கூ-வின் இந்தியாவில் விவசாயச் சீர்திருத்தப் பிரச்சினையை விவசாயத்துக்குத் தான் கட்டக் கடமைப்பட்ட கடனைச் செலுத்தாமலேயே அந்தத் துறையை அபகரிக்க விரும்பும் முதலியத்தின் மிகச்சிறிய பகுதி ஒன்றின் கண்ணோட்டத்தில் நின்று பார்த்து அதைத் தீர்த்து வைக்கும் ஓர் அரசியல் ஆட்சி முறை உருவாகியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முதலியத்தின் மிகச்சிறிய பகுதியினரின் நலனுக்காகத் தொண்டாற்றும் அரசியல் ஆட்சி வடிவமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவம் சலுகை முதலாளித்துவமாகும். இங்குதான் மேற்கில் உள்ள முன்னேறிய முதலாளித்துவத்திற்கும் இந்தியாவில் உள்ள சலுகை முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது.

இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் உள்ள சலுகை முதலாளித்துவம் ஆட்சியில் உள்ள அரசியல் அதிகாரத்துடன் ஒரு மென்மையான நிலையான உறவை நிறுவி அவர்கள் தம் பரஸ்பர நலனுக்காக இணைந்து செயல்படுகின்றனர். சலுகை முதலாளித்துவத்தின் இந்தச் சிறிய பிரிவு அரசியல் அதிகாரத்தை நிதியளித்து ஆதரிக்கிறது. அதற்குப் பதிலாக அரசியல் அதிகாரம் சட்டங்களையும் விதிகளையும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துக் கொடுக்கிறது.

கே: சலுகை முதலாளித்துவம் எவ்வாறு இயங்குகிறது – செயல்படுகிறது? அரிசி அல்லது கோதுமை என்று ஒரு குறிப்பிட்ட பொருளை – ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு பேசலாமா?

கஸ்னபிஸ்: சலுகை முதலியம் இரட்டைச் சுரண்டலைக் குறிவைக்கும். சலுகை முதலியம் உற்பத்தி செய்வோருக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாகவே செலுத்தும். சோளச் சந்தை இப்போது எந்தவொரு குறைந்தபட்ச ஆதரவு விலைக் கடமைகளும் இல்லாமல் முற்றுரிமையின் கீழ் (பல விற்பனையாளர்கள், ஒன்று அல்லது ஒருசில வாங்குபவர்கள் மட்டுமே) இருக்கும் என்பதால் இது நிகழ வாய்ப்புள்ளது. சுரண்டலின் முதல் அம்சம் இது – குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுப்பதன் மூலம் தயாரிப்பாளர்களைச் சுரண்டுவது. இன்னோர் அம்சம் என்னவென்றால், மண்டி (ஒழுங்குபடுத்தப்பட்ட மொத்தச் சந்தை) கொள்முதல் முதலில் குறைந்து பின்னர் இறுதியில் நின்றே போகும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது விநியோக முறைமை (PDS) பலவீனப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால் நுகர்வோர் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில் அரிசியும் கோதுமை மாவும் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் சந்தையில் வரும், ஒவ்வொன்றும் கூடுதலான விலைப்பட்டியைக் கொண்டிருக்கும். இதன் மூலம் இந்தியர்களில் ஒரு பகுதியினருக்கு உணவு பெறும் உரிமையே மறுக்கப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராத நடுத்தர வர்க்கம் அல்லது உயர் வகுப்பினரும் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில் இந்தச் சூழலில் சலுகை முதலியம் மிகைச் சுரண்டலுக்கான (super exploitation) ஒரு சந்தையைக் கண்டுபிடிக்கும்.

இந்தக் கொள்முதல் நடைமுறையில் இடைத்தரகர் அல்லது தரகர் அல்லது முகவர் ஆகியோர் நிச்சயம் இருக்கவே செய்வார்கள். தொலைதூர கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாற்றுக் கொள்முதல் பொறியமைப்பை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதால் சலுகை முதலாளித்துவம் அதைச் செய்ய வாய்ப்பே இல்லை. இடைத்தரகர்கள் பெறும் தரகு ஒட்டுமொத்தச் செலவில் சேர்க்கப்பட்டு அதுவும் வாங்குபவர்கள் மீதே திருப்பிவிடப்படும். கசப்பான நேர்மையோடு சொல்ல வேண்டும் என்றால் சலுகை முதலாளித்துவம் உருப்படியாக ஒன்றுமே செய்யாது.

கே: அப்படியானால் வெறுப்புக்கும் விமர்சனத்துக்கும் உரிய இந்த இடைத்தரகர்கள் இந்த வேளாண் சட்டங்களின் செயற்படுத்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்படுவார்கள் என்பதைத்தான் இது குறிக்கிறதா?

கஸ்னபிஸ்: ஆம். அவர்களுக்குப் புதிய மேலாடை கிடைக்கும். அவர்களின் புறத்தோற்றங்கள் மாறும். ஆனால் அவர்கள் பெரிய நிறுவனங்களை உண்மையான உற்பத்தியாளர்களோடு இணைப்பவர்களாக, பெரிய நிறுவனங்களின் இடைத்தரகர்களாக இருக்கவே செய்வார்கள் – சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

முன்னேறிய முதலாளித்துவமோ சலுகை முதலாளித்துவமோ, எந்த வகையான முதலாளித்துவமாக இருந்தாலும் அதனால் முகவர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது என்பதை நாம் இங்கு மிகத்தெளிவாகக் கூறியாக வேண்டும். எனவே வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தரகர்கள் மறைந்துவிடுவர் என்ற எண்ணம் ஒரு பகற்கனவைத் தவிர வேறில்லை.

கே: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிரந்தரச் சட்ட உத்தரவாதம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ முயற்சியை இந்த அரசாங்கம் வழங்கவில்லை. இதற்கு மாறாக, பெரியண்ணன்கள் – அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் – விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியே அவர்களின் வெண்ணெய் மலைகளையும் பாலாடைக்கட்டி மலைகளையும் உருவாக்குகிறார்கள். சில்லறை விற்பனையிலும் மொத்த விற்பனை அளவிலும் கூட வேளாண் பொருட்களின் விலைகள் முதலாளித்துவ அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், முன்னேறிய மேற்கு நாடுகளில் வேளாண் துறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்கள் முதலாளித்துவமாக்கல் கொள்கையைப் பின்பற்றவில்லை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொதுநல நடவடிக்கைகளையே (welfare measures) பின்பற்றுகிறார்கள்.

கஸ்னபிஸ்: முதலாளித்துவத்திற்கு மானியமளிக்கப்பட்ட விவசாயம் ஏன் அவசியம் என்பதை விளக்கினேன். முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அதற்கு ஒரு முக்கியமான பொதுநலப் பரிமாணத்தைச் சேர்த்துள்ளன என்பதையும் நான் சொல்ல வேண்டும். ஐரிஷ் பஞ்சத்தின் நாட்கள் எப்போதோ மலையேறிப் போய்விட்டன. ஆனால், அத்தகைய நடவடிக்கைகளும் முதலியத்துக்குத் தொண்டாற்றத்தான் செய்கின்றன. இது போன்ற பொதுநல நடவடிக்கைகளின் விளைவாக முதலியம் மொத்த உற்பத்தித்திறனுக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையிலான ஆரோக்கியமான பணியாளர்களைப் பெறுகிறது.

கே: முன்னேறிய, முதலாளித்துவ ‘முதல் உலகம்’ உணவுப் பாதுகாப்பின் முன் நிபந்தனைகளை மதச்சடங்கு போலப் பொறுப்பாக நிறைவேற்றுகிறது. முதல் உலகம் பணப்பயிர்களை வளர்ப்பதில் கண்மூடித்தனமாக விரைந்து இறங்குவதில்லை. இருப்பினும் இங்கோ, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே அடிப்படை உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த குறிப்புகள் விடப்படுகின்றன. அதாவது நம் “முதலாளித்துவ” அரசாங்கம் இந்தத் துறையில் கூட பெரியண்ணன்களின் கொள்கைகளைப் பின்பற்றவில்லையே. ஏன்?

கஸ்னபிஸ்: வேளாண் துறைக்கான மூன்று புதிய சட்டங்களில் ஒன்று ஒப்பந்த விவசாயத்திற்கான சட்ட ஏற்பாட்டை (legal provision for contract farming) உருவாக்குகிறது. ஒப்பந்த விவசாயத்தின் கீழ், உணவுப்பயிர் சாகுபடியின் கீழ் உள்ள பெரும் பகுதிகள் பணப்பயிர் நிலங்களாக மாற்றப்பட்டு அப்பொருட்கள் சர்வதேச சந்தையை, குறிப்பாக வெப்பமண்டலப் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் அதிகத் தேவை இருக்கும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சந்தைகளைக் குறிவைக்கும்.

இதன் விளைவாக ஸ்ட்ராபெர்ரிகளை ஏற்றுமதி செய்துகொண்டு ஆனால் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ள ‘புர்கினா ஃபாஸொ’வில் (சஹாராவடி ஆப்பிரிக்காவில் உள்ள நாடு) நடந்தது போல உணவுப் பாதுகாப்பின் நான்கு தூண்களான இருப்பு, கிடைப்பு, பயன்பாடு, நிலைப்பு (availability, access, utilisation and stability) ஆகியவை அச்சுறுத்தப்படும். முதலியத்தின் ஒரு சிறு பகுதிக்குத் தொண்டாற்றுவதையே தன் கடனாகச் சுருக்கிக் கொண்டுவிட்ட இந்தப் புதிய அரசியல் ஆட்சியின் கீழ் இந்தப் படுமோசமான சமனற்ற ஈடுகட்டல் அனுமதிக்கப்படுகிறது. முன்னேறிய நாடுகள் ஒருபோதும் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதில்லை. ஏனென்றால் முதலியத்தின் ஒரு சிறிய பிரிவினர் ஒருபோதும் ஒட்டுமொத்த முதலியத்தின் நலனை விலை கொடுத்துத் தன் நலனை மேம்படுத்திக்கொள்ள முடியாத வகையிலான ஓர் அமைப்பை அவர்கள் கவனமாக உருவாக்கியுள்ளனர்.

***

தொடர்புக்கு : [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here