லஷ்மி சரவணக்குமாரின் `வேட்டைக் குதிரை` சிறுகதைத் தொகுப்பு : காமத்தின் சுவிஷேசமும், விவசாயிகளின் மனுவும்

0

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

புத்தகக் கடைகளில் முதல் வரிசையிலும், சொந்தச் சேகரிப்புகளில் எளிதில் கண்ணில் படாத வண்ணம் பின்வரிசையிலும் வைக்கப்படும் புத்தகங்களின் வரிசையில் இடம்பெறுபவை லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள். அவருக்கு அருகிலே ஜி. நாகராஜனும், சாரு நிவேதாவும் இடம்பெறலாம். ஒளி குறைவான அந்தப் பின்வரிசையில் அவர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் சர்ச்சைகளில் முன்வரிசையிலிருக்கும் புத்தங்கங்கள் சற்றே தளர்ச்சியுற்று விழத் துவங்கலாம். 

அவருடைய சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான `போர்க்குதிரையை` வாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு வாசித்த அவருடைய சிறுகதைகளை, அகப்பரப்பு சிதைவுற்ற சமூகத்தின் ஓயாது அசையும் பிம்பச் சித்திரங்கள் எனலாம். 

தி.ஜானகிராமனுக்கும், லஷ்மி சரவணக்குமாரின் கதை உலகிலே பேசப்படும் காமத்திற்கு அடிப்படையான வேறுபாடு ஒன்றை முதலிலேயே புரிந்து கொள்வது நல்லது. தி.ஜா-வின் படைப்புகள் அழகியல் தளத்திலே நின்று காமத்தை அணுகத் தலைப்பட்டால் (பாலியல் விழைவின் இயல்பை அறிதலோடு சேர்த்து), லஷ்மியின் படைப்புகளிலே வெளிப்படும் காமம் சார்ந்த அத்தனைச் சித்திரங்களும் நுகர்வியப் பண்புகளைக் கொண்டவை. கடந்த நாற்பது ஆண்டுகளில் எல்லா உணர்வுகளும், இயல்புகளும் பண்ட நிலையை அடைந்து விட்டன. பண்டங்களை நுகர்வதில் இருக்கும் ஆற்றல் / ஆற்றலின்மையோடு மனித உடல்கள் எழுவதும் / வீழ்வதுமாக வினையாற்றுவதை லஷ்மியின் கதைகளில் வாசிக்கலாம்.

ஒரு கிகோலோவைப் பற்றின கதையான `ரகசியத்தின் அரூப நிழல்களை` ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இக்கதையில் வரும் வினோத் காமத்தின் சுவிஷேசத்தை உலகிற்க்கு அறிவிக்கும் அப்போஸ்தலராக இருக்கிறான். 

`அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்லகாமத்தின் சுவிசேஷத்தை.`

இதன் பொருள், காமம் ஒரு தனி உடலின் தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல், ஓர் அப்போஸ்தலரின் உபதேசங்களாக, காமத்தின் விவிலியத்தில் இடம்பெறும் பேரேக்கத்தைக் காண்கிறோம்.  இங்கே தவிர்க்க முடியாமல் ஓஷோ நினைவுக்கு வருகிறார்.

நுகர்வே இயல்பாகிவிட்ட உலகில், காம நுகர்வும் எல்லையற்றுப் போய் நாம் காமத்திற்கும், போர்னோகிராஃபிக்கும் அடிமைகள் ஆனவர்களைப் பார்க்கிறோம். திறன்பேசி வைத்திருக்கும் எவரொருவரும் போர்னோகிராஃபியை நுகர்வதிலிருந்து தப்பித்திருப்பார் என நம்புவது சந்தேகமே. ஆனால் நுகர்வியத்தின் விளைவுகளில் ஒன்றான சலிப்பு காமத்தோடு சேர்கிறது. இங்கே இயல்பான ஒரு செயல் சலிப்பை உண்டாக்கி விடுகிறது.  BDSM/MASOCHISM/SADISM எனக் காமத்தோடு வலியைக் கலந்து அடையக்கூடிய அடுத்தகட்டம் இந்தச் சலிப்பை சற்றேனும் விலக்குகிறது.

ஆங்கில தினசரி ஒன்றின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அர்ச்சனா, வதைபடுதலின் வழியாய் உடலைக் கொண்டாடும் புதிய உலகை கிகோலோவான வினோத்திற்கு அறிமுகப்படுத்துகிறாள்.

Abandonment எனும் இருத்தலியல் பதத்திற்குப் பொருள், வெளியிலிருந்து ஒரு மனிதனை பண்படுத்தும் ஏதொரு மூலகமும் இல்லையென்பதே.  தன்னை நெறிப்படுத்தும் மதமோ, இயற்கையோ, தத்துவமோ இல்லாது போனபின் ஒரு மனிதன் கைவிடப்பட்டவனாக உணர்கிறான். நுகர்விய வெள்ளமும் அவனைத் தள்ள, மூச்சு விடுவதற்கே சிரமப்படுபவனாக, தனது அகப்பரப்பையும் ஆக்கிரமித்திருக்கும் பிம்பங்களின் ஆயிரமாயிரம் கைகளில் சிக்குண்ட அவன், இம்மானுவேல் காண்ட் குறிப்பிடும் `வெளியிலிருந்து புகட்டப்படும் அற மதிப்பீடுகளை’ (heteronomous conception of values) நிராகரிக்கும் நிலையை அடைகிறான். 

இந்த அகப்பட்டுவிட்ட நிலையிலிருந்து லஷ்மியின் பாத்திரங்கள் தங்களது நிலையை கொண்டாட்டமாகப் பாவிக்கவும், தங்களது நுகர்விலே ஓர் ஆத்மீகத் தன்மையை உருவாக்கிக் கொண்டு, தங்களது இருப்பை அர்த்தபூர்வமாக மாற்ற முயல்வதின் விளைவாகவே, `ஏண்டா உறவு முறைகளைப் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க, எல்லாமே உடல்தானே` என மாலதி சொல்கிறாள்.  அவள் தன்னை ஒரு இன்செஸ்ட் என அறிமுகம் செய்து கொள்கிறாள்.  காமத்தில் பிரத்தியேக அடையாளங்கள் அட்டவணை இடப்படிருக்கின்றன. பண்டங்களைப் போல காமத்தின் அடையாளங்களும் தேர்வுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு கதையான `ஆதாமின் துரோகத்தில்` இருபால் ஈர்ப்புள்ள மதனைப் பார்க்கிறோம். அனைத்து அடையாளங்களுக்குள்ளும் மதிப்பீடுகள், கூச்ச உணர்வு இன்றி இயங்கும் சுதந்திரத்தை `ரகசியத்தின் அரூப நிழல்கள்` விவாதிக்கின்றன. இக்கதை வழமையான காமம் சார்ந்த அறக்கட்டுப்பாட்டிற்கும், தனிமனித சுயாட்சிக்கும் இடையிலான விவாதத்திற்கு அதிக இடமளிக்கிறது. மரபின் consequentialist பார்வையில் நின்று கட்டுப்படுத்தப்பட்ட விழைவிற்கும், அதற்கு எதிராக காமம் என்பது முற்றிலும் தனிமனித சுயாட்சிக்கு உட்பட்டது என்பதற்கும், இடையே லஷ்மி சரவணக்குமாரின் பெரும்பாலான கதைகள் `உறவுகளில் சுயாட்சி`-யையே (Autonomy in relationships) பேசுகின்றன.  கூடவே தாமஸ் நாஜெல் குறிப்பிடும், `bad sex is generally better than none at all, என்பதையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.  

மேற்சொன்ன கதை, போர்க்குதிரை, ஆதாமின் துரோகம் ஆகியவை நகரங்களில் நிகழ்பவை. இவற்றிற்கு நேரெதிராக `கம்பமத யானை`க் கதையில் ஜோதி, யானையின் தந்தங்களில் அமர்ந்து பெண் தெய்வச் சாயலை எட்டுகிறாள். ஆனால் கம்பமத யானையில், காமம் பிரதானமான பிரச்சனையாக இல்லை என்பதால், இக்கதையை நகரச் சித்திரங்களுக்கு நேரெதினாது என்று சொல்லவிட முடியாது. கம்பமத யானையில், காமம் நுகரப்படுவதில்லை, மாறாக, பிள்ளைப் பேற்றிற்கான வழியாகத்தான் பார்க்கப்படுகிறது. பெண், வெல்ல முடியாத தெய்வீக அமைப்பைப் பெற்றவள் என்கிற மரபார்ந்த ஓரிடத்தில் நின்று இக்கதை பேசுகிறது. பாலியல் வக்கிரம் என்பது இயந்திரமய உலகத்தின் பின்னான விளைவாகப் பார்க்கிறோம். வக்கிர உணர்வே நகரமயத்தின், பிம்பமயத்தின் பின்விளைவுகளாகவும் நாம் விளங்கிக் கொள்கிறோம். 

இத்தொகுப்பில் விவசாயமும், கிராமப்புற மக்களின் உடல் உழைப்பின் மீதான் பரிவும் பேசப்படுகின்றன.  தனிமனித வாழ்வின் அடிப்படைக் கட்டமைப்பு அவனுடைய அறமார்ந்த உறவுகள், மதிப்பீடுகள் எனக் கொண்டால், கிராமத்தின் அடைப்படைக் கட்டமைப்பு உழவு.  `ஆலமரத் துயில்` இந்தச் சிதைவைப் பேசும் மற்றொரு கதை.  பல நூற்றாண்டுகள் முட்டி மோதும் ஒரே நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இக்கதை மற்றுமொரு சாட்சி.  முழுக்க இயந்திரமயமாகும், தொழில் உற்பத்தி சார்ந்த ஒரு சமூகமாக மாறுதல் (எட்டுவழிச் சாலை, விவசாயச் சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு) என முற்றிலுமாக முதலாம் உலகப் பிரச்சனைகளுக்கே வெளியே இயங்கும் ஒரு சமூகத்தில் நாம் இறுகப் பிணைந்திருக்கிறோம். அறிவியல் மயமாதல், இயந்திர மயமாதல், தொழில்நுட்ப மயமாதல் என உருமாறி நிற்கும் உலகின் காதுகளில், இயற்கை, உழவு, கிராமச் சிதைவு என நாம் பழைய நூற்றாண்டு ஒன்றின் பிரச்சனையை வலுவாக ஒலிக்கிறோம். நமது சமூக அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமல்ல, நமது சமூகத்தின் மிகச்சிறந்த இலட்சிய அடையாளமாக உழவே வைக்கப்பட்டிருக்கிறது. `காணி நிலம் வேண்டுமென்றே` ஒரு நவீனக் கவிஞன் பாடுகிறான்.  உலகோ, சொகுசுக் கப்பல் பயணத்தைக் கனவு காண்கிறது அல்லது சொந்தமாக ஒரு yacht-ற்க்கு ஆசைப்படுகிறது. இந்த முரண்பாடு உண்டாக்கும் உறுத்தலால் லஷ்மி சரவணக்குமார் இந்த எல்லைக்கும் பயணமாகிறார். 

அவருடைய கதைகளில் உருவாகும் வெளிப்படையான இவ்விரண்டு வேறுபாடுகளை நாம் இக்காலத்தின் குரலாகக் கேட்கிறோம். இதன் தொடர்ச்சியாகவே, ஒரு நாட்டார் கதையைப் போன்றிருக்கும் `தடியன் சேகர்` கதையை அவரால் எழுத முடிகிறது.

ஆனால் லஷ்மி சரவணக்குமாரின் கதையாடல் பழையதாக மாறியிருக்கிறது. ஆசிரியரின் இடையீடாகச் சொல்லப்படும் அவதானிப்புகள் ஒவ்வொன்றும் மிகப் பழையவை மட்டுமல்ல, அலுப்பூட்டுபவையும் கூட.

`வழிகள் மனிதர்களுக்குப் பழக்கத்தின் நீட்சி’;

`காண முடியாத நிலங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை’;

தமிழ்ச் சூழலில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் `வான்காவின் ஓவியப் பெண்கள்`

`அஸ்தமனத்தின் மகோன்னதமான தருணங்கள்`

`தமிழ் சினிமாவில் ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கை என்பது தினமும் மாறக் கூடியது`

`…மலையேறுவதைக் கண்டு கல்லும் கண்ணீர் சிந்தும்`. 

லஷ்மி சரவணக்குமார் நிச்சயம் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.  ருட்யார்ட் கிப்ளிங்கின் Just So Stories புத்தகத்தை ஒருமுறை வாசிப்பதைப் பரிந்துரைக்கிறேன். 

`திருடனின் குறிப்பேடு` நாவலில் ழான் ஜெனே சொல்கிறார், `there is a close relationship between flowers and convicts.  The fragility and delicacy of the former are of the same nature as the brutal insentitivity of the latter`. லஷ்மி சரவணக் குமாரின் துணிச்சல் மிக்க, சமூகத் தணிக்கைக்கும், சுயத்தணிக்கைக்கும் உள்ளாகாத கதைகள் ழான் ஜெனேவின் மலர்களைப் போலவும், குற்றவாளிகளைப் போலவும் வெளிப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். ஜெனேவின் படைப்புகளுக்கும், லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகளுக்கும் இடையே பாரிய வேறுபாடாக நான் காண்பது, கவித்துவத்தின் நிழலிற்கும், தத்துவார்த்த வெளிச்சத்திற்குள்ளும் நுழைந்துவிடும் ஜெனேவைப் போலன்றி, தமிழ் பாப்புலர் எழுத்தாளர்களின் அரதப் பழையதான அவதானிப்புகள் எனும் தொந்தரவூட்டும் தெறிப்புகளின் பால் அதிகமாக பின்னவரின் கதையாடல் சாய்ந்து விடுவதே. உலகம் ஒன்றே ஆயினும் அதை விவரிப்பதில்தான் வேறுபாட்டின் அழகியல் உருவாகிறது. காமத்தின் சுவிஷேத்தை விவசாயி ஒருவரின் மனுவின் மொழியில் எழுத முனையக் கூடாதென்று எச்சரிக்கவும் விரும்புகிறேன்.

***

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
தமிழின் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ஒருவர். ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு தொகுப்புகளும் அவரது எதிர்கால எழுத்துகளின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துபவை. விரிவான வாசிப்பு, தத்துவப் பார்வை, சமூகப் பார்வை, விநோதப் புனைவில் ஈடுபாடு, அறிவியல் ஆர்வம், இசை என்று பல துறைகளின் விளைச்சலாக அவரது கதைகளைக் கூறலாம். (நன்றி தி இந்து) தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here