லஷ்மி சரவணகுமார் சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள்

0

ஜெயந்தி சங்கர்

சில மாதங்களுக்கு முன்னர் ‘மாயா’ இலக்கியவட்டம் சார்பில் பேசுவதற்காக என்னை அழைத்தார் அமைப்பின் தலைவர் ரமா சுரேஷ். ஆறாண்டுகளாக எழுதுவது ஆங்கிலத்தில் என்றானபிறகு நான் தமிழில் வாசிப்பது குறைந்து கிட்டத்தட்ட இல்லாமலே போனது என நான் மிகத் தயங்கியதை எளிதில் புறந்தள்ளிவிட்டு படிக்கச் சொல்லி லஷ்மி சரவணகுமார் எழுதிய பத்து கதைகளைக் கொடுத்தார். அதில் உள்ள பெண் பாத்திரங்களைக் குறித்துப் பேசுமாறும் வேண்டினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வாசித்ததால் ஏற்பட்டதொரு வித்தியாசமானதோர் உணர்வோடுதான் வாசிக்கவே தொடங்கினேன். 

உண்மையில், எந்த முன்முடிவும் இல்லாமலே கதைகளுக்குள் போனேன் என்று முதலில் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், கதாசிரியரை முன்னரே அறிவேன் என்றாலும் அவரது ஆக்கங்களை ஆங்காங்கே முன்பெப்போதோ உதிரியாக வாசித்திருந்தேன் என்றாலும், ஒட்டுமொத்தமாக, ஒரு நாவலாக வாசித்திருக்கவில்லை.

ஒன்றிரண்டு கதைகளை வாசிக்கையிலேயே அவை என்னை நிமிர்ந்து உட்கார வைத்தன என்பதை முதலில் உணர்ந்தேன். முகத்தில் அறைவதைப் போல அவற்றில் ஒழுகிய எதார்த்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதோ பார், இப்படி ஓர் உலகமும் இருக்கிறது, இப்படியான பெண்களும் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு கதையிலும்  பொங்கி வழிந்த கசக்கும் உண்மைகள் அடுத்துவந்த சிலநாட்களுக்கு என் உறக்கத்தைப் பிடுங்கின. அக்கதைகளிலிருந்து வெளியேற எனக்கு நாட்கள் பல ஆனது. ‘எப்படி இவரால் இதுபோல பெண் பாத்திரங்களைத் திரட்டி உருட்டி செதுக்கிவிட முடிகிறது?’ என்ற கேள்வி தொடர்ந்து எனக்குள் சுழன்றது. 

’முகமற்றவள்’ கதையின் முக்கிய கதாபாத்திரமான மாலதி அந்தத் தெரு ஆண்களாலும் விடலைகளாலும் சதா துன்புறுத்தப்பட்டும், ஏளனப்படுத்தப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வருகிறாள். காரணமே இல்லாமல், பெண் என்ற ஒரே காரணத்துக்காக மாலதி நடத்தப்படும் விதம் பல பெண்களைப் பிரதிநிதித்துதான் புனையப்பட்டுள்ளது. அவள் மனத்தைக் காணத்தவறிய தெருக்காரர்களுக்கு அவள் அவ்விடம் விட்டு வேறு இடத்துக்குக் குடி போனதும் அவள் முகமும் மறந்து போகிறது. ஒருதடவை இளைஞர் குழாம் செய்துவிடுவோம் என்று மிரட்டியதிலிருந்தே அவளுக்குக் கிடைக்கும் யோசனையை இறுதியில் சடாரென்று செயல்படுத்துவது மிரட்டலாய் வெளிப்பட்டிருக்கிறது. 

சமீபத்தில் நான் கண்டதொரு திரைப்படத்தின் பகுதியை நினைவு படுத்திய ஒரு கதையும் இதில் உண்டு. அதை வாசித்ததுமே அந்தத் திரைக்கதையில் கிளை எனக்கு நினைவுக்கு வந்தது ஆச்சரியம்தான். எது முதலில் வந்தது என்பதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குள் என் மனம் செல்லவில்லை. உண்மையில், படைப்பூக்கச் சிந்தனைகளில் சிலவேளைகளில் ஏற்படக்கூடிய தற்செயலான ஒற்றுமைகளாக நான் சிலவற்றை வாசித்ததும் கண்டதுமுண்டு. 

யாரையுமே சடாரென்று உலுக்கிவிடக்கூடிய கருவைக் கொண்டதான ‘பிங்கி’ கதை சற்றே நீண்டதாகத் தோன்றினாலும், மையக்கதாபாத்திரத்தை திடமாக, உறுதியாக வடித்து நிறுத்துவதற்கு அது தேவைப்பட்டிருக்கலாம் என்று புரிந்தது. இறுதியில் நடக்கும் சம்பவத்துக்கும், உளவியலுக்கும் வாசகரை இட்டுச் செல்லும் அழகிய கடல் பின்புலமும் நவீன சுதந்திர சிந்தனை கொண்ட பெண்மொழியுமாக பின்னணி அழுந்தவே விழுந்திருக்கின்றன. இறுதியில் உதறிக்கொண்டு எழும் பிங்கி  என்ற அந்தப் பெண் யோசிப்பது அசலாய் ஒரு பெண்ணால் மட்டுமே யோசிக்க முடியக் கூடியது. 

ஓர் ஆணால் எந்த அளவுக்கு பெண் மனதைப் புரிந்துகொள்ள முடியும்? தேய்ந்து போன கேள்வியாக இல்லை நான் இதனை இங்கே முன்வைப்பது. கதையில் வரும் பெண் பாத்திரத்தை உணரமுடிவதாக எத்தனை ஆண் கதாசிரியர்களால் படைத்துவிட முடிகிறது? பெண்ணுடைய உளச்சிக்கல்களை, குமுறல்களை, சதா அச்சுறுத்தலாய் முன்நிற்கும் சமூகத்துடனான போராட்டத்தை எத்தனை ஆண் எழுத்தாளர்களால் எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது? 

நான் நிறையவே வாசிப்பவள். நேரடி ஆங்கில ஆக்கங்கள் மட்டுமின்றி பிறமொழி ஆக்கங்களை ஆங்கில மொழிபெயர்ப்புகளாகவும் தமிழிலும் ஏராளமான கதாசிரியர்களுடைய ஆக்கங்களை வாசித்தவள் என்ற அளவில் லஷ்மி சரவணகுமார் உருவாக்கியுள்ள விளிம்புநிலைப் பெண்களைப் போன்ற கதாபாத்திரங்களை கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற அரிய சில படைப்புகளில் மட்டுமே ரத்தமும் சதையுமாக, சமூகத்தோடு சதா போராடுபவளாக நாம் உணரலாம். ஆண் பெண்ணை சக மனுஷியாக உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். லஷ்மி சரவணகுமாரின் கதைகளை வாசித்து முடித்ததுமே, முக்கியமாக எனக்குள் தோன்றியதோர் உணர்வு இதுவாகவே இருந்தது.   

அலங்காரங்களில்லாமல் அவலங்களைச் சொல்கிறார். அதே நேரத்தில் உண்மையான கதைகளையும் பாத்திரங்களையும் வடித்துவிட முடிகிற லஷ்மி சரவணகுமார் பெண்களை உற்று கவனிப்பதோடு அவர்களின் வலிகளை, துயர்களை, கொண்டாட்டங்களை, கொடுமைகளைத் தனதாக்கி உணர்கிறார் என்பது கதைகளில் நான் உணர்ந்து கொண்டேன். இல்லாவிட்டால், இவ்வளவு அழுத்தமாக வாசகரை உணர வைத்துவிட முடியாது. பாத்திரமாய்  வடிக்க முடியாது போனாலும்  இப்படி பெண்ணை கவனிக்க, உணர முடிந்த இது போன்ற ஆண்கள் நம் சமூகத்தில் இன்னும் இன்னும் நிறைய பேர் இருந்தால் எவ்வளவு அழகான உலகமாக இது மாறிவிடும் என்றெல்லாம் தோன்றாமல் இல்லை.

***

ஜெயந்தி சங்கர், மதுரையில் பிறந்தவர். தற்பொது சிங்கப்பூரில் இருக்கிறார். 1995 ஆம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் எழுதி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இவரது பல நூல்கள் பல விருதுகள் பெற்றுள்ளன.

இவரது வலைப்பூ : http://jeyanthisankar.blogspot.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here