லதா அருணாச்சலம் – நேர்காணல்

2

கேள்விகள் – அகரமுதல்வன்

சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன் – லதா அருணாச்சலம்

நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த நைஜீரிய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” தமிழ்வாசகப் பரப்பில் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது சிறப்பான மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் உங்களின் மொழிபெயர்ப்புக் கோட்பாடு என்ன ?

தீக்கொன்றை மலரும் பருவம் மொழிபெயர்ப்பு நூல் பரவலான வாசகப் பரப்பைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கவிதைகளும் பத்திகளும் எழுதிக் கொண்டிருந்த போது சில சிறுகதைகளைத்  தற்செயலாக மொழிபெயர்ப்பு செய்து பார்த்த பின் எனக்கு இயல்பான ஆர்வமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. பின் எழுத்து பிரசுரம் இந்த நல்வாய்ப்பை வழங்கினார்கள். ஆரம்பகாலத் தயக்கங்கள் வடிந்தபின்  நைஜீரிய நாட்டுப் புத்தகம் என்பதால் அதனுடன் என்னால் எந்தவிதச் சிக்கல்களுமின்றி ஒன்ற முடிந்தது. அதன் கதை மாந்தர்கள் நான் பழகியவர்கள் போலவும் கதைக்களம் என்முன்  சித்திரமாகவும் தன்னிச்சையாக விரிந்தன. அதனால் இதனை மொழிபெயர்ப்பு என்பதையும் கடந்து மூலக்கதையையும் கலாச்சாரத்தையும் நமது மொழிக்குக் கடத்துவது போலவே உணர்ந்தேன். ஆனால் எப்போதுமே இதுபோன்ற சாதகமான சூழல் அமையாது. எந்த மூலக்கதையை மொழி பெயர்க்கிறோமோ அதன் களம், சமூகக் கலாச்சாரப் பின்னணி மற்றும், மூலப்படைப்பின் ஆசிரியர் பிரதியை எவ்வாறு அணுகியிருக்கிறார் என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்வது அவசியம். ஒரு சிறுகதையை மொழிபெயர்ப்பதென்றாலும் கூட அந்த உழைப்பை அது கோருகிறது. நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றம் என்னும் Literal Translation இல்லாமல், மூலப்படைப்பின் மையக் கருவையும் அதன் ஆன்மாவையும் சிதைக்காமல் ஆற்றல் மிகு மொழிபெயர்ப்பாக (Dynamic translation) இருக்க வேண்டும் என்பதையே பல மொழிபெயர்ப்பாளர்களும் கடைபிடிக்கிறார்கள். நானும் அவ்வாறே செய்கிறேன். ஆனால் இப்படிச் செய்கையில் படைப்பின் பூர்வ நிலத்தன்மை, படைப்பாளரின் மொழிப்புலமை, அவர் உவமைகளைக் கையாளும் விதம், ஆழ்மன உணர்வுகளை தனது வலிமையான வரிகளால் விவரிப்பது போன்ற மூலப்பிரதியின் அடையாளங்களை அதிகம் மாற்றாமலும் அதேவேளை வாசிப்பவர்களுக்குக் கனமான வார்த்தைகளின் சுமையை ஏற்றி அகராதி போலக் கையில் தராமலும் இடைப்பட்ட ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதில் நான் கவனம் கொள்கிறேன். மொழிபெயர்ப்பை நோக்கி வாசகர்களை ஈர்க்க வேண்டியதும், வாசிக்கையில் எதன் பொருட்டும் அயற்சி ஏற்பட்டு பிரதியிலிருந்து விலகாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்வதிலுமே மொழிபெயர்ப்பாளரின் திறனும் அதற்கு அவர் தேர்வு கொள்ளும் மொழியும் உள்ளது என்பதை நம்புகிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்புத்தளத்தில்  ஐரோப்பிய இலக்கியங்கள் தான் இன்றும்  பெருமளவில் ஆதிக்கம்  செலுத்துகின்றன. ஒப்பீட்டளவில் ஆப்பிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவது மிகமிக குறைவு. சமகால ஆப்பிரிக்க இலக்கியத்தில் நைஜீரிய படைப்புக்களின் பங்களிப்பு  குறித்து கூறுங்களேன்?

பிற நாட்டுப் படைப்புகளின் மொழிபெயர்ப்பை ஒப்பீடு செய்கையில் ஆப்பிரிக்க இலக்கியங்கள் மிகக்குறைவான அளவே மொழிபெயர்க்கப்படுகின்றது என்பது உண்மைதான். குறைவு என்பதை விட சொற்பமான எண்ணிக்கை என்றே சொல்லாம். ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்திலும், சில நூல்கள் அந்தந்த நாட்டுப் பிரதான மொழியிலும் எழுதப்படுகின்றன. சில நூல்கள், காலனியாதிக்கத்தின் விளைவாக பிரெஞ்சு மொழியிலும் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலக இலக்கிய அரங்கிலும் நைஜீரியாவின் பல படைப்பாளர்களின் புத்தகங்கள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை எனக் கூறப்படுபவர் சீனுவா அச்பே அவர்களின்  Things fall apart என்னும் நாவல் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நைஜீரிய புனைவிலக்கியத்தின் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் தொல்குடி மரபுகள், காலனி ஆதிக்கத்தின் வரவால் மாறிப்போன வாழ்வு முறைகள் பற்றி இவர் எழுதியது ஆப்பிரிக்க இலக்கியத்தில் இன்றுவரை உயரத்தில் இருக்கிறது. வோலே சோயின்கா எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், செயற்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்தவர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற கறுப்பின எழுத்தாளர் இவர் ஒருவரே. இவர் தனது படைப்புகளை நைஜீரியாவுடையது மட்டுமன்றி, ஆப்பிரிக்காவிற்குமான பொதுக்குரலாக முன்வைக்கிறார். ஆப்பிரிக்காவின் அரசியல், சமூகச் சிக்கல்களைத் தன் புத்தகங்களில் பிரதிபலிக்கிறார். மற்றும் இன்று உலகளவில் பேசப்படும் நைஜீரிய எழுத்தாளர் சிமாமந்தா அடிச்சி. இனப்பாகுபாடு பற்றியும், பெண்ணியத்தின் புத்திளம் கருத்தாகவும் ஒலிக்கும் இவரது காத்திரம் மிகுந்த எழுத்துகள் இன்றைய நவீன இலக்கிய உலகத்தையே இவர் புறம் திரும்பப் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல, பென் ஓக்ரி மிகச்சிறந்த கவிஞர் மற்றும் புனைவெழுத்தாளர்.  நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் பற்றிய நேரடிப் பார்வையாக இவர் எழுதிய புத்தகம் மிகவும் முக்கியமானது. புக்கர் பரிசு பெற்றவர். இவர்களுடன் தேஜு கோலே, ஹெலோன் ஹபீலா, அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் அக்வைக்கே எமெஸி ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களது கதைக்களம் நைஜீரியாவாக இருப்பினும் அதன் அரசியல் களம், சமூக அவலங்கள், பொருளாதார வீழ்ச்சி, இனக்கலவரம், உள்நாட்டுப் போர், பெண்களின் துயர வாழ்வு, காலனியாதிக்கத்தின் விளைவுகள், சிதைந்து போன தொல்குடி மரபுகள், அடிமை வாழ்வின் துயரம் ஆகிய ஆப்பிரிக்காவின் பொதுப் பிரச்சினைகளையே பேசுகின்றன. இவையெல்லாம் ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு நைஜீரியா அளித்த கொடை எனலாம்.  

தீவிர வாசிப்புடைய உங்களுக்கு சொந்த புனைவுகளை வெளியிடும் ஆவல் இல்லையா?

வாசிப்பிலிருந்து முற்றும் விலகியிருந்த புலம்பெயர் வாழ்க்கையிலிருந்தும், பணிச்சூழலிலிருந்தும்  மீண்டும் தாயகம் திரும்பியதும் வாசிப்பே எனது முதல் ஆவலாக இருந்தது. இன்றும் தீவிர வாசிப்பு என்னும் தளத்திற்குள் நான் செல்லவில்லையென்றே கருதுகிறேன். இங்கு வந்தபின், பத்திரிகைகளிலும், முகநூலிலும் பத்திகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதி வந்தேன். இப்போது மொழிபெயர்ப்பு செய்கிறேன். அது நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நிச்சயமாக சொந்தப் புனைவை நோக்கி நகர்வேன். இதுவரை திட்டமிடாமலேயேதான்  எதுவும் நிகழ்கிறது. அதனால்  சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன்.

நைஜீரியாவிற்கு பணிநிமித்தம் புலம்பெயர்ந்திருக்கிறவர் நீங்கள். அந்த நிலத்தில் எப்போதும் ஒருவித பதற்றம் நிலைத்திருக்கும். பல்வேறு அரசியல் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தவண்ணமிருக்கும். இப்படியான சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஆம், நாங்கள் இங்கு புலம்பெயர்ந்த கால கட்டத்தில் நாட்டில் மிகவும் பதட்டமான சூழல் நிலவியது. மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சிறையிலடைத்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கையிலெடுத்திருந்த காலம். நாடெங்கும் வேலை நிறுத்தமும், கண்டனப் போராட்டங்களும், அதை ஒடுக்கும் பொருட்டு மக்களைச்  சிறையிலடைப்பது, புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, பல எழுத்தாளர்களை, அரசியல் செயல்பாட்டாளர்களை நாடு கடத்துவது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலம். ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் வீடு புகுந்து  திருடும் அச்சமான சூழ்நிலையும் இருந்தது. அதை நாங்களே எதிர்கொள்ள நேர்ந்தது.  மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருந்தது. இத்தகைய காலகட்டத்தில் பொருளீட்டும் பொருட்டும் தேவைகளின் பொருட்டும் விளையும் நிர்ப்பந்தங்கள் மட்டுமே நாங்கள் சூழலை எதிர்கொள்வதற்கான காரணம் என்று சொல்ல முடியாது. நிறைவான பணி அனுபவமும், இம்மக்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கையும், மரியாதையும் கூட காரணங்களாக அமைந்தன. இங்கு வாழ வந்தபிறகு அந்தந்த நாட்டின் அருமைகளோடு அதன் சில சிறுமைகளையும் எந்த மதிப்பீடுகளுமின்றி ஏற்றுக்கொள்ள மனம் பக்குவமடைகிறது. நாட்டில் ஜனநாயக ஆட்சி மலருகையில் நாங்களும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொண்டோம். கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைகையில் நாட்டின் வளர்ச்சி மீது கவலையுறுகிறோம்.  உண்மையில் சில வருடங்கள் இங்கு கழித்த பின்  இந்நாட்டின் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வாழப் பழகுகிறோம். இரவில் அதிகம் வெளியில் செல்லாமல் இருத்தல், வீட்டைப் பூட்டிப் பாதுகாப்புடன் இருப்பது போன்ற முன்னேற்பாடுகளுடன் இருப்போம். ஆனால், நாட்டின் மீதும், மக்களின் மீதும் ஒரு பற்றுதல் மனநிலை ஏற்பட்டவுடன் அந்த சூழலில் இயைந்து வாழத் துணிவும், சாதுர்யமும் தன்னிச்சையாக ஏற்பட்டு விடுகின்றன. தவிர்க்க இயலாத நிர்பந்தங்கள், பொறுப்புகள், அல்லது பணி நிறைவு இருந்தாலொழிய இங்குள்ள புலம்பெயர் மக்கள் நாட்டைவிட்டுச் செல்வதில்லை. இப்போது நிலைமை ஓரளவு சீராக உள்ளதென்பதையும் குறிப்பிட வேண்டும். மற்றும் தற்காலச் சூழலில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் எந்த இன்மையையும் நிறைவேற்றுவதாகவும் உள்ளது.

சிமாந்தோ எங்கோசி அடிச்சி போன்ற வியப்புக்குரிய எழுத்தாளுமைகளின் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் எண்ணம் உண்டா? 

சிமாமந்தா அடிச்சி வியப்புக்குரிய ஆளுமை என்பதில் ஐயமே இல்லை. புனைவு மட்டுமன்றி, கட்டுரைகள், பெண்ணியப் பார்வை பற்றிய புதுமையான கருத்துகள் கொண்ட அபுனைவு நூல், சிறந்த பேச்சாளர், செயல்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இன்று உலகளவில் தனக்கெனவும், நைஜீரிய இலக்கியத்துக்கெனவும் மிக அழுத்தமான இடத்தைப் பெற்றவர். குறிப்பாக  இன்றைய தலைமுறையையும், கீழை நாட்டு மக்களையும் நைஜீரிய இலக்கியத்தை நோக்கி வரவழைத்தவர். அவருடைய சிறுகதைத் தொகுப்பும், நாவல் ஒன்றும் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வாய்ப்பு கிடைத்தால்  அவரது மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் ஆவல் நிச்சயமாக உள்ளது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ஆனால், நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய மற்ற எழுத்தாளர்களின் நூல்களும் ஆப்பிரிக்க இலக்கியத்தில் உள்ளனர் எனக் கூறவும் விழைகிறேன்.

நீங்கள் கூறுவது போல சிமாந்தோ எடிச்சியை விடவும் அவதானிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களாக யாரை குறிப்பிடுவீர்கள்? அவர்கள் எந்த வகையில் முக்கியமானவர்கள்?

சிமாமந்தா அடிச்சியை விடவும் என ஒப்பு நோக்க வேண்டாம். அவருடன் மற்றவர்களும் பேசப்பட வேண்டுமென்று சொல்கிறேன்.  மூத்த இலக்கிய ஆளுமைகளான சீணுவா அச்பே, வோலே சோயின்கா, மற்றும் சம காலத்தில் சகாரா துணை கண்டத்தின் பல எழுத்தாளர்கள் நாம் அறியப்பட வேண்டியவர்கள். உள்நாட்டுப்போரின் அவலங்களைத் தனது புத்தகங்களில் தொடர்ந்து எழுதி வரும் பென் ஓக்ரி இவர்களில் முக்கியமானவர். பின்-நவீனத்துவ எழுத்து வகைமையிலேயே இவரது பிரதிகள் இருப்பினும் அவற்றில்  மாயத்தன்மை, தொன்மச் சம்பிரதாயங்கள், மற்றும் ஆவியுலகச் சித்தரிப்புகளை இணைத்து எழுதுவதால் இவரது படைப்புகள் சற்றே மாறுபட்ட வாசிப்பனுபவத்தை அளிக்கும்.  செஃபி ஆட்டா, ஹெலோன் ஹபீலா, அக்வைக்கா எமிஸி, அபூபக்கர் ஆடம் இப்ராஹிம், தேஜு கோலே, சிக்கோஸி ஒபியோமா , ஃபெமி ஒஸோஃஃபிஸோன் , நேடி ஒகொரஃபோர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களின் புத்தகங்கள் புக்கர் பரிசுகளின் குறுகிய பட்டியலுக்குள் இடம்பெற்றவைகளாகவும், சர்வதேச அளவில் சிறந்த ஆப்பிரிக்க நூலுக்கான பரிசையும் பெற்றவைகளாகவும் உள்ளன. இவர்களில் பெரும்பாலோனோர் நைஜீரியாவுக்கு வெளியே இருந்துதான் எழுதுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இவர்கள் அறியப்பட்ட அளவு கீழை நாடுகளில் அறியப்படவில்லை என்பது எனது கருத்து. இதில் நான் நைஜீரியாவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆப்பிரிக்க இலக்கியத்தைப் பற்றியும் சொல்கிறேன்.

பொதுவாக புலம்பெயர்வு என்பது ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு ஒரு கொடையென நம்புகிறேன். பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து எழுதுகிறவர்கள் அல்லவா, அவர்களின் எழுத்துலகம் தாயகத்தின் நினைவுகளை மட்டும்தான் பேசுகின்றனவா?

புலம்பெயர்வு என்பது முதலில் கல்வியின் பொருட்டே பெரும்பாலும் நிகழ்ந்தன. சில எழுத்தாளர்கள், குறிப்பாக, அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு நீங்கியிருந்த வோலே சோயின்கா புலம்பெயர் வாழ்வில் தன் படைப்பூக்க மனநிலை அமையவில்லை எனக் கூறுவார். தற்போது அவர் நைஜீரியாவில் வசிக்கிறார். பியாஃப்ரா உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் வீழ்ந்த பொருளாதார நிலையும், சீரழிவுற்ற உட்கட்டமைப்பும், நிர்வாகக்கேடுகளும் இளைய தலைமுறையினரிடையே எதிர்காலத்தைப் பற்றிய நம்பகத்தன்மையைக் குலைத்தது. கல்வி சார்ந்தும், கலைப்புலத்திலிருந்தும் எழுபதுகளுக்குப் பின்னரே அதிகமானோர் நாட்டை விட்டு நீங்கினர் எனக் கூறலாம். அயல்நாட்டிலிருந்து எழுதுபவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி தாயகத்தின் நிலையை மிகவும் அப்பட்டமாகத் தங்கள் படைப்புகளில் வெளிக்கொண்டு வருகின்றனர். பழமைவாதம் மலிந்த மதச்சூழலில், ஆளும் அரசியலமைப்பில் எழுத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகிறது. அதனால் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு அது ஒரு சாதகமான சூழலைத் தருகிறது என்பதை மறுக்க முடியாது. தாயகத்தின் நினைவுகளை மட்டும் அவர்கள் எழுதுவதில்லை. புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும், கலாச்சாரச் சிக்கல்களையும், அங்கும் இனப்பிரிவினையால் நேரும் துயரங்களையும் எழுதுகிறார்கள். சிமாமந்தா தனது அமெரிக்கானா என்னும் புத்தகத்தில் கறுப்பர்களுக்கு நேரும் இன்னல்களைப் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எவ்வாறு இனப்பாகுபாட்டுக்கு உள்ளாகிறார்கள் என்பதை மிக விரிவாக எழுதியிருப்பார். மேலும், அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்காகத் தாயகத்தில் கோடைக்கால எழுத்துப் பட்டறை நடத்துகிறார்கள். இது அவர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாகவும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையாகவும் அவர்களிடையே உள்ளது.

இன்றைக்கு தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்தமிழ் இலக்கியம் போர் – அழிவு – யுத்த வன்முறை – மானுட அவலம் போன்றவற்றை முன்வைக்கிறது. அது தமிழ் இலக்கிய வெளியில் புதியது. அதுபோன்ற ஒரு சூழல் நைஜீரியாவில் இருக்கிறது. அது இலக்கியத்தில் பிரதிபலிக்கிறதா?

நிச்சயமாக.. பிரித்தானிய காலனி ஆட்சி முறை, பின் காலனியத்துவம், போருக்குப் பின் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, வறுமை, பன்னாட்டு நிறுவனங்களால் ஆற்றங்கரைகளில் உருவாக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளால் அழிந்து போன வாழ்வாதரம், சூழல் கேடு, ஊழல், நாட்டின் வளர்ச்சியில் நாட்டமில்லாத அரசியல் தலைவர்கள், தொலைநோக்குப் பார்வையற்ற இளம் தலைமுறையினர், ஆயுதக் கலாச்சாரம், மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகள், ஆள் கடத்தல், விபச்சாரம், புறக்கணிக்கப்பட்ட பெண் இனம், ஒடுக்கப்பட்ட தனி மனித சுதந்திரம், இவை யாவும் ஒரு மூன்றாம் தர உலக நாட்டின் அவலங்கள்  தானே.. அவற்றைத்தான் இன்றைய இலக்கியங்களில் நவீன இலக்கியத்தின் பேசுபொருளாக முன் வைக்கின்றனர். நைஜீரிய இலக்கியங்கள் பெரும்பாலும் வாழ்வியலையும், அரசியல் சூழலையும், புலம்பெயர் வாழ்வின் சாதக, பாதகங்களையுமே அதிகம் ஆய்வு செய்கின்றன. சில நூல்கள் நாட்டின் உட்சிக்கல்களையும், அதன் பல்வேறு விளைவுகளையும் பேசுவதால் இலக்கியத்தன்மையிலிருந்து சற்றே நீங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால் அது நாடகீயமாக இல்லாமல் அங்கு நடக்கும் உண்மையான நிகழ்வுகளையும், மக்களின் உணர்வுகளையும்  மேற்பூச்சுகள் ஏதுமின்றி உலகுக்கு அறியத்தருகின்றன என்பதே  பொருத்தமானதாக இருக்கும். நல்ல மொழிப்புலமை கொண்டவர்களாக இருப்பதும், எங்கு வசித்தாலும் தங்கள் மரபில் தொடர்பு துண்டித்துக் கொள்ளாமலும் இருப்பதால் இவர்கள் எழுத்தில் மண்வாசம் இருந்து கொண்டே இருக்கும். 

நிறைய சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறீர்கள், அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

சிறுகதைகள் எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான வடிவம். சொல்லப் போனால் மொழிபெயர்ப்பை சிறுகதைகளில்தான் தான் துவங்கினேன். இப்போது அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.  அதிலும் சமகால ஆப்பிரிக்கச் சிறுகதைகளுக்கும் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளுக்கும் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. வாசகர்களின், நண்பர்களின் உற்சாகமான சொற்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட மிகுந்த ஊக்கம் அளிக்கின்றன.

தொடர்ச்சியாக வாசிப்பில் இயங்கி வருபவர் நீங்கள், சமீபத்தில் வாசித்த நூல்களில் குறிப்ப்பிடத்தகுந்தவையாக கருதுவது?

கடந்த ஏழு மாதங்களாக நைஜீரியாவில் இருப்பதால், வாங்கி அடுக்கி வைத்த புத்தகங்கள் சென்னையில் அப்படியே உள்ளன. ஆனால் இந்தக் கொரோனா அடைவுக் காலத்தில் இணைய இதழ்களில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுடன் கிண்டிலில் கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் ஆப்பிரிக்க இலக்கியம் தமிழ் மற்றும்  உலகச் சிறுகதைகளையும் வாசிக்கிறேன். அண்மையில், நீண்ட காத்திருப்பிற்குப் பின் கிண்டிலில் வாசித்த ஆரோக்கிய நிகேதனம், கூகி வா தியாங்கோவின் Grains of Wheat, சிமாமந்தாவின் Americanah, டோனி மாரிசனின் ”sula‘ ஆகியவை நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன.

நீங்கள் அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பது உங்கள் மொழிபெயர்ப்பு செயற்பாட்டிற்கு உதவியாக இருக்கிறதா?

கவிதைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்கும். எனது ரசனை சார்ந்த உணர்வுகளின் மற்றும்  மொழியின் அழகியல் குறித்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துடனேயே உடலாடும் நதி என்னும் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அதுவும் எழுத்துப் பிரசுரமாக வெளியானது. எனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்த எனது பதிப்பாளர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் இருவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கவிதை மொழியின் தாக்கம் எனது மொழிபெயர்ப்பு நடையில் இருப்பதாகக் கூறுவார்கள். அது இதுவரை சாதகமாகவே உள்ளது என நம்புகிறேன்.

***

  • லதா அருணாச்சலம் – சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது வசிப்பது நைஜீரியாவில். இவரது முதல் நூல் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பு (எழுத்து பிரசுரம்), இரண்டாவது நூல்(மொழிபெயர்ப்பு) தீக்கொன்றை மலரும் பருவம் (எழுத்து பிரசுரம்). பல்வேறு இணைய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகியுள்ளன

2 COMMENTS

  1. அருமையான நேர்காணல்!.,
    ஆப்பிரிக்க இலக்கியங்கள், அவை குறித்த தகவல்கள்., இலக்கிய உலகிற்கு இன்றியமையாதவை.
    பூமிப்பந்தின் தென் கோளப்பகுதியில் அமைந்ததாலோ என்னவோ, ஈழ நிகழ்வுகளும்., ஆப்பிரிக்க நிகழ்வுகளும், ஒப்புமை காண்கின்றன போலும்..!!

  2. மொழி பெயர்ப்பு என்றாலும் மிகச்சிறந்த பணியின்மூலம் ஒரு நாட்டின் அடிமைத்தனத்தை கேளிக்கையை உலகுக்கு அம்பலப்படுத்தியதில் அரும்பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here