லட்சுமி

0

கு.ஜெயபிரகாஷ்

யார் அவர்?

வெண்ணிற குல்லா, சாம்பல் நிற தாடி, முண்டா பனியன், லுங்கியை முட்டிக்கு மேல் தூக்கிக்கட்டி ஒருகையில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்துக்கொண்டே குனிந்து நடக்கும் அவரின் தோரணையைப் பார்க்க பயமாக இருக்கிறது.

இந்த இருட்டில் விழும் டார்ச் லைட்டின் ஒளி மனதில் அமானுஷ்ய உணர்வை எழுப்புகிறது.  பகலில் வானில் எழும் வானவில்லைப்போல இந்த டார்ச் லைட்டின் ஒளியும் இருட்டில் தனித்து மிளிருகிறது. ஆனால் இரவின் மௌனத் திரையைக் கிழிக்கும் தவளைகளின் சத்தமும் தெரு நாய்களின் சத்தமும் பயத்தை இரட்டிப்பாக்குகிறது. இருட்டின் அடர்த்திக்குள்ளும் பனிப்பொழிவின் குளுமைக்குள்ளும் சிக்காமல் மெதுவாக நடப்பதைப் பார்க்கையில் ஏதோ அசம்பாவிதத்தை நிகழ்த்தப் போகிறாரா? என்று தோன்றுகிறது. மென்பனி என்னை நடுங்கச் செய்கிறது. ஆனால் அவர் முட்டிக்கு மேலே லுங்கியைக் கட்டிக்கொண்டு எந்த நடுக்கமும் இல்லாமல் பவ்யமாய் தவழ்ந்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் அவரை இங்கே பார்த்ததில்லை ஆனால் எங்கோ பார்த்த மாதிரியான ஒரு எண்ணமும் உள்ளுக்குள் எழுகிறது. 

“யார் அவர்?”

எதற்கு இந்த இரவில் இங்கே வந்திருக்கிறார். திருட்டுத்தனமான பார்வையும் யார்கண்ணிலும் சிக்கிவிடக்கூடாது என்கின்ற தொனியிலும் இருக்கிறது அவருடைய நடை.  

“யாருங்க நீங்க?” 

“இந்த நேரத்தில் இங்க என்ன வேலை உங்களுக்கு?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒருவித பயமும் பதட்டமும் இந்தக் குளிரோடு சேர்த்து என்னை அழுத்தியதில் பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தேன். குளிருக்கு இதமாக இருந்தது. மெல்ல இழுத்து புகையை என்னுள் பயணிக்க விட்டதில், என் பதட்டமும் பயமும் கொஞ்சம் கொஞ்சமாக புகையாக வெளிவந்தது. 

என்ன பண்ணிடுவான் அவன் என்னை? 

எப்படியும் அந்த ஆளுக்கு அம்பது வயசுக்கு மேல இருக்கும், அந்த கிழவனால என்ன பண்ணிட முடியும்.?  அப்படியே ஏதாவது பண்ணாலும் சத்தம் போட்டுக் கத்தினா எல்லாரும் வந்துடுவாங்க இதுதான் நம்ப தெருவாச்சே! எதற்கும் கையில் ஒரு கட்டைய எடுத்துக்கலாம் என்று யோசித்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டை வந்தடைந்தேன்.

பனி படர்ந்த வீதியில் சோடியம் விளக்கின் ஒளி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்ததில் எத்திசையிலும் அந்த பாய் அங்கேயில்லை.

ஒருவேளை நான் வருவதை அந்த ஆள் பார்த்து பயந்து ஓடிவிட்டானா? இருந்தாலும் இருக்கும் என்கின்ற எண்ணத்தின் மிதப்பில் இன்னுமொரு சிகிரெட்டை பற்றவைத்து இழுக்கத் தூண்டியது.

உடலை உறையவைக்கும் குளிரில் இதமாக ஒலித்தது “மியாவ்” என்ற ஒரு பூனையின் சத்தம். அதன் கண்கள் மட்டும் தூரத்தில் மின்னிக் கொண்டிருந்தது. சத்தம் கேட்ட அடுத்த கணம் என் காலுக்குப் பின்புறத்தில் இருந்து சீறிப்பாய்ந்த நாய்கள் ஒரு எல்லைக்குள் நின்று குலைக்கத் தொடங்கின. சிறிது நேரம் குலைத்து ஓய்ந்த நாய்கள் காரின் அடியில் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டன.

1

ஞாயிறுகள் மட்டும் எப்போதும் 11 மணிக்குதான் விடிகிறது. பல நாட்கள் காலை உணவை விடுத்து நேரடியாக மதியவுணவை சாப்பிடுவது இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் தான்.  பிரியாணியைச் சாப்பிட்டால் தான் இந்த ஞாயித்துகிழமைக்கான மரியாதையே! அதிலும் “ஜலால் பாய்” கடையில் கிடைக்கும் பிரியாணி சாப்பிட்டால் அந்த நாள் புனிதமடைந்துவிடும். 11 மணியில் இருந்து 1 மணி வரையில் தான் அங்கு கிடைக்கும். வாரத்தில் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையின் மதியம் கூட்டம் ஜெகஜோதியாகவே இருக்கும்.  அந்தநேரம் அப்பகுதியில் டிராஃபிக்கும் அதிகமாக இருக்கும். உள்ளே புகுந்து ஒரு பொட்டலத்தை வாங்கி வந்துவிட்டால் சாதனைதான்.  பிரியாணியின் வாசனையை நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறி வயிறு தவம் கிடக்கிறது. 

கரீமைப் பிடித்தால் ஜலால் கடையில் சுலபமாக பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிடலாம். அவனுடைய மாமா அந்த கடையில் தான் வேலை செய்கிறார். முதலில் அவனைப் பார்க்க வேண்டும். 

கரீமின் வீடு என் வீடு இருக்கும் தெருவிற்கு பக்கத்துத் தெருவில் இருக்கிறது. அத்தெருவில் பாதிக்குமேல் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். தெருவின் துவக்கமே ஆடு மாடுகளை வெட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். ஒருபக்கம் ஆட்டின் தோலும் மாட்டின் தோலும் உப்பில் ஊறியிருக்கும் அவற்றை வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பார்கள். இருபதிற்கும் மேற்பட்ட பிரியாணிக் கடைகள் அருகருகே இருந்தும் கூட்டம் குறையாமல் இருக்கும். கவிச்சி வாசனையும் பிரியாணி மசாலா வாசனையும் கலந்த வாசம் நம்மை இழுக்கும். மறுபக்கம் முகம் சுளிக்கவும் செய்யும்.  ஐயோ ஆடுகள் எல்லாம் பாவம் இப்படி வெட்டித் தொங்க விட்டு இருக்காங்களேனு மனம் பதைப்பதைக்க கடந்தால் தொடர் பிரியாணிக் கடைகளின் வாசனை அந்த எண்ணத்தை மடைதிருப்பும். 

மசாலாக்கள் தடவிய கோழியும் ஆட்டின் உடலும் கடைகளின் முன்னே காட்சிப்படுத்தியிருப்பார்கள். 

“கொன்னா பாவம் தின்னா போச்சுனு” சின்ன வயசுல என் தாத்தா சொல்லி கவிச்சியாக் கொடுத்து வளத்தாருனு என் அம்மா அடிக்கடி சொல்லும். 

ஞாயித்துக்கிழமை பிரியாணி சாப்பிட என்ன என்னலாம் செய்ய வேண்டியதா இருக்கு என்று யோசித்துக் கொண்டே கரீம் வீட்டை நெருங்கியாச்சி. அதே சாம்பல் நிறத் தாடியும். வெள்ளை குல்லாவும் அணிந்திருந்த பாய் என் கண்ணில் பட்டார்.  பகலின் வெளிச்சத்தில் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது விரிந்த கண்ணும் அடர்ந்த தாடியுமாய் பார்க்க பயமாக இருந்தது. பாய்ங்க எல்லாம் மோசம். எல்லா விஜயகாந்த் படத்திலயும் அவங்க தான் வெடிகுண்டு வச்சி கொல பண்ணுவாங்க. ஆடுமாடு எல்லாம் அவங்க தான் வெட்டறாங்க. அதிலும் அந்த தாடி, குல்லா, கைலியோட இருக்கறவங்கள பாத்தாவே பயமா இருக்கும். இந்த பாயும் அப்படிதானா ஐயோ இந்த தெருவில் கரீமை தவிர யாரும் எனக்கு தெரியாது. பயம் உடல் முழுக்கப் பரவியது. ஆனால் கரீமும் அவங்க ஆளுதான் என்று எண்ணி பதட்டம் அதிகமானது. அவரின் கண்கள் என்னையே பார்த்திருந்தது என்னை நோக்கி நடந்து வந்தார். எனக்குள் பயம் இன்னும் அதிகமானது. கரீமை பார்க்காமலே அங்கிருந்து வந்துவிட்டேன். 

2

ஒரு பிரியாணிக்காக உயிரை விட்டிருப்பேன் இன்று. இருந்தும் பிரியாணியை சாப்பிடாமல் இல்லை. சேகர் அண்ணன் கடையில் வாங்கிய பிரியாணியில் இன்றைய ஞாயித்துக்கிழமை போச்சு. என்னதான் சொல்லு பாயிங்க செய்யற பிரியாணியே தனி டேஸ்ட்டுதான். அந்த பாய் ஏன் என்னை அப்படி முறைத்தார். ஒருவேளை நேத்து நைட்டு நான் கட்டை எடுத்துக் கொண்டு வந்ததை பார்த்திருப்பாரோ?  அவர் எதுக்கு இங்க வந்தார். பாம் எதும் வச்சி இருப்பாரா!

நிமிடத்திற்கு நிமிடம் என்னுடைய கற்பனையால் என் பதட்டமும் அதிகமாகின. 

3

சிகரெட்டின் புகை பனியில் கலக்காமல் தனித்து அலைந்து கொண்டிருந்தது. மணி 9 ஆகிறது. இன்னமும் எந்த பாமும் வெடிக்கல. அப்படின்னா அந்த பாய் வச்ச பாம் வேலை செய்யல. இல்ல பனியில் ஈரமாகி வெடிக்காம போய்ட்டிருக்கும். இன்னைக்கு நைட்டு கட்டாயம் வந்து என்ன ஆச்சுனு பாப்பாரு அந்தாளு என்று மனம் அதீதமாய் யோசித்துக் கொண்டிருந்த நேரம். டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு “லட்சுமி” “லட்சுமி” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

நான் நினைச்சது சரியாகிடிச்சு. இன்னைக்கு ஒரு கை பாத்துடணும். அந்த ஆள் முதலில் என்ன பண்றானு பாத்துட்டு கையும் களவுமா பிடிச்சிடுவோம் என்று நினைத்துக் கொண்டு ஜன்னலின் வழியே பார்த்தேன்.

4

ஒரு கையில் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு “லட்சுமி” “லட்சுமி” என்று சொல்லித் தலையை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஒவ்வொரு இடத்திலும்.

தைரியத்தை வரவழைக்க சிகரெட்டை பற்றவைத்து நாலு இழு இழுத்துவிட்டு கையில் ஒரு தடியுடன் கம்பிகளினால் ஆன கேட்டின் உள்பக்கம் நின்று.  

“யாருங்க நீங்க.. இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க?” 

என்று கம்பீரமாக குரல் எழுப்பினேன். குரல் வலுவாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம் முழுவதுமாக ஒட்டிக் கொண்டிருந்தது. பதில் சொல்வதற்காக கேட்டை நோக்கி வந்ததைப் பார்க்க பயமும் பதட்டமும் அதிகரித்தது. 

“கேக்கறேன் இல்ல.. பதில் சொல்லுங்க” 

என்று குரலை உயர்த்தினேன். 

“அது ஒன்னுமில்ல தம்பி” என்று இழுத்தார்… 

நான் மீண்டும் குரலை உயர்த்தினேன்…

தம்பி…  நான் ஒரு பூனை வளக்கறேன். அது நைட் ஆனா வெளிய வந்துடுது. எங்கனா நாய்கிட்ட மாட்டி செத்துடுமோனு பயம். அதான்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கருப்பு பூனை அவரின் காலை வந்து தழுவிக் கொண்டது. லட்சுமி என்று சொல்லி தலையை வருடி பூனையைக் கையில் தூக்கிகொண்டு “நேத்து கரீம் வீட்டுகிட்ட உங்கள பாக்கும் போதே சொல்ல வந்தேன் தம்பி. நீங்க ஏதோ அவசரமா போய்ட்டீங்க” என்று சொல்லி மெலிதாகச் சிரித்து நடந்தார். பூனையின் கண்கள் மட்டும் இருட்டில் மின்னிக் கொண்டிருந்தது.

***

கு.ஜெயபிரகாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here