ரொபெர்த்தோ பொலான்யோ கவிதைகள்

2

தமிழில் : சரோ லாமா

1]


கழுத்தில் கத்தி வைத்து
அந்த இளைஞன் உறுமுகிறான்
உன்னிடமிருக்கும்
எல்லாவற்றையும் எனக்கு கொடு
எல்லாவற்றையும் எனக்கு கொடு
இல்லையெனில் நான் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்
என்றபோதும்
அவனது கேசத்தின் வழியே நிலா சுடர்கிறது.

***

2] மரங்கள்

நான் எழுதும்போது
மரங்கள் என்னை அமைதியாக கவனிக்கின்றன
மரத்தின் உச்சி
பறவைகள், எலிகள், பாம்புகள், புழுக்கள் என
பல்லுயிரிகளால் நிறைந்திருக்கிறது
ஆனால் என் மூளையோ பயங்கள்
மற்றும் முறைப்படுத்தப்படாத திட்டங்களால் நிறைந்திருக்கிறது

***

3]


இந்த ஆயிரம் வருடங்களில் எதுவும் மாறிவிடவில்லை
அவையெல்லாமும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்டுவிட்டன.
மக்கள் சரியாக எழுதப்படாத வாக்கியங்களை வாசிக்கிறார்கள்
தொலைந்துவிட்ட பெண்ணை தேடுகிறார்கள்.
துண்டாடப்பட்டு அசைவின்மையில் கிடக்கும் குழந்தைகள்
உங்கள் பிரகாசமற்ற பச்சை நிறக் கண்கள் என எதுவும்
ஒரு போதும் உயிர்த்திருக்கப் போவதில்லை
அது ஒரு கிரேக்க துன்பவியல் நாடகத்தைப் போல
இன்னும் சரியாக சொல்லப்போனால்
இதெல்லாமும்
மழைக்கால கடற்கரையைப்போல
இன்னொரு அதிசயமாய்
இன்னொரு உதாசீனமாய்.

***

4]


விதவைகளைப்பற்றி
கைவிடப்பட்டவர்களைப்பற்றி
அநாதரவான முதியவர்களைப்பற்றி
ஊனமுற்றவர்களைப்பற்றி
மனம் பேதலித்தவர்களைப்பற்றி எழுதுங்கள்.
உலகை அசைத்து நகர்த்தும்
மகத்தான போர்கள் மற்றும்
மகத்தான வணிக தந்திரங்களுக்குப் பின்னால்
அவர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் கடன் வாங்கி
வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு
நமது நகரங்களின்,
நமது விளையாட்டுகளின்,
நமது பாடல்களின் மீது படிந்துவிட்ட
சிவப்புக் கறையை படித்துக்கொண்டு
அவர்கள் இருக்கிறார்கள்.

***

5] இடைவேளை

என்னை நம்புங்கள், நான் அறையின் மையப் பகுதியில் அமர்ந்திருக்கிறேன்
மழைக்காக காத்திருக்கிறேன். நான் தனித்திருக்கிறேன்.
எனது கவிதையை எழுதி முடித்தேனா இல்லையா என்பது பற்றி கவலையில்லை
நான் மழைக்காக காத்திருக்கிறேன்.
காபி அருந்திக்கொண்டு முற்றத்துக்கு வெளியே நீளும் அழகான நிலக்காட்சிகளை
சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
கொடிக்கயிற்றில் துணிகள் அசையாமல் கிடக்கின்றன
அங்கே காற்றின் இருப்பு துளியும் உணரப்படவில்லை
சற்று தொலைவில்
குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக அமர்ந்து காபி குடித்தவாறு பார்த்துக்கொண்டிருக்கும்
வண்ணத்தொலைக்காட்சியின் சத்தம் சன்னமாக கேட்கிறது.
என்னை நம்புங்கள், மஞ்சள் நிற மேசைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன
புறநகருக்கு வெளியே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிட வேலைகள்
நடந்து கொண்டிருக்கின்றன
கட்டிடத்தின் உச்சியில் பதினாறு வயது சிறுவன்
சிவப்பு செங்கற்களை அடுக்கிவைத்துக் கொண்டே
எந்திரத்தின் அசைவுகளை சிந்தித்துக் கொண்டிருக்கிறான்
அவனுடைய அந்த நேரத்துக்கான மிகப் பரந்த வெறுமையான வானம்
அந்திக் காற்றோடு விளையாடிக் கொண்டிருக்கிறது
அவன் தன் எண்ணங்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்
தனது எண்ணங்களோடும் உறைந்த காட்சிப் படிமங்களோடும்
விளையாடிக்கொண்டிருக்கிறான்.
ஒருவித செயலற்ற தன்மை ஊடுருவும் பனியைப்போல
அவனது கண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
என்னை நம்புங்கள், அங்கே அருகாமையில் சூழ இருந்தது அன்பு அல்ல
ஆனால் களவாடப்பட்ட அழகான முடிந்துபோன வைகறை மட்டும்தான்.

***

6]


சில நேரங்களில் நான் கற்பனை செய்திருக்கிறேன்
குறைந்த ஒளியுள்ள அறை ஒன்றை
ஒரு சிறிய அடுப்பு
ஆரஞ்சு பழங்களின் வாசனையோடிருக்கும்
ஒரு சிவப்பு நிற திரைச்சீலை
வசிப்பிட தளத்தின் மேல் ஒரு பெரிய அகலமான மெத்தை
தழும்புகள் நிறைந்த நீண்ட கால்களுடைய ஒரு பெண்
முகம் தாழ்த்திய கண்கள் மூடிய அந்தப் பெண்ணை
முடி அதிகம் வளர்ந்த பையன் ஒருவன் பின்கழுத்தில் முத்தமிடுகிறான்
அவனது விறைப்பான ஆண்மை அவளது பின்புறத்தை தழுவிக்கிடந்தது
மேலும் இருவரும் காமத்தின் விறைப்போடு முயக்கத்தில் கிடக்கிறார்கள்
மிக அருமையான நறுமணம் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது
அவன் தலையிலும் மூக்கிலும் மலர்கள் அலங்காரம்
காதலர்களின் நிலவில் அவர்கள் ஓர் அற்புதமென
நான் மேலும் சில காட்சிகளை கற்பனை செய்துகொள்கிறேன்.

***

தமிழாக்கம் : சரோ லாமா

2 COMMENTS

 1. ..”இல்லையெனில் நான் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்
  என்றபோதும்
  அவனது கேசத்தின் வழியே நிலா சுடர்கிறது.” கவிதையின் ஒளிக்கீற்று இது தான்.
  ..”நமது நகரங்களின்,
  நமது விளையாட்டுகளின்,
  நமது பாடல்களின் மீது படிந்துவிட்ட
  சிவப்புக் கறையை படித்துக்கொண்டு
  அவர்கள் இருக்கிறார்கள்.” மேலும்,
  ..”என்னை நம்புங்கள், அங்கே அருகாமையில் சூழ இருந்தது அன்பு அல்ல
  ஆனால் களவாடப்பட்ட அழகான முடிந்துபோன வைகறை மட்டும்தான்.”
  கவிதையின் மிகச்சிறிய ஆனால் அற்புதக் கணத்தை இவை தான் திறந்து வைக்கின்றன. அது தான் உங்களை அதன் வெளியில் பயணப்பட வைக்கிறது.
  வாழ்த்துக்கள் – சரோலாமா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here