ரா.த ஜீவித்தா கவிதைகள்

0

நகரும் மாலையின் சங்கீதம்

திரிந்தும் திரளாத வானம் சுவாசத்தை ஒதுக்கி ஆசுவாசங்கொள்கிறது
கருத்த மேகங்களின் புறமுதுகில்

மாறிமாறி அமர்ந்தும் தாய்மொழி கொண்டு அழைத்தும் உறங்கும்
தென்னங்கிளைகளை உசுப்புகிறது காகக் கூட்டம்

மதுக்கோப்பைகளை காலி செய்தவனின் மடியில் கிடந்த
மொழிப்பெயர்ப்பு கலவிப்புத்தகத்தில்
ஈஸ்மெண்ட் வண்ணத்தில் வரையப்பட்ட
ஈருடலின் நிர்வாண ஓவியங்கள்
மறுபக்கத்திடம் மறைவினை கொஞ்சியபடி

உறுதியான கொம்புகளால் பின்னிக்கொண்டு உச்சந்தலையினால்
ஒன்றையொன்று முட்டிமோதி விலக்குகிறது
கூரையில்லா கிடையில்
அடைப்பட்டிருக்கும் கிடாக்கள்

அவசர அவசரமாய் அத்தனையும் இயல்புக்குள் பெயல் கொள்கிறது
துளித்துளியாய் இறங்கும் மழையினோடு

சாரலின் ஈரத்தை எட்டி உதைத்தும், வளைந்தும் நெளிந்தும்
புறக்கணிக்கிறது
ஆசையோடு அடிவயிற்றில் சேய் தடவும் சாரலின் ஈரத்தை
பனிக்குடத்தில் மிதக்கும் சிசு.

***

பேருந்தின் உள் நுழையும் கீற்று

பின்னங்கழுத்தில் படிந்த முகப்பூச்சை நுனிவிரலில் உருட்டியபடி
வலப்பக்க சன்னலை வெறித்துக் கொண்டிருக்கிறது அவ்விழி

நிறுத்தத்திற்கு நிறுத்தம் அதிகரிக்கும்
மேற்பிடிக் கைகளின் கூட்டத்தில் நகர்ந்து, மறைபடுகிறது ஒளி

இடப்புறமும் முன்புறமும் தலைத்தூக்கித் திரும்பிப் பார்த்துவிட்டு
மீண்டும் ஒளிக்கீற்றினை அவதானித்து
வலப்பக்கமாய் சரிந்தபடி
தடவத் துவங்குகிறது முறுக்குச் சங்கிலியை

வெளிச்சத்தை மட்டுமே உணரும் விழிகளை ஏமாற்றிய
ஊழிற்கு வினையாய்
தன்மீது வீழும்
செங்கதிர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறது
எதிரொளியாய்
அத்தனை சாளரங்களும்.

***

பழைய பூக்களின் ஆன்மா

பூமியின் மார்பின்மீது மலரும்
பூக்களின் கால்களுக்கு
எப்போதும் தடம் மாறிப்
பறந்திடும் ஆவலுண்டு

சில வினாடிகளில் வளையும் பூக்களின் தண்டுகள் தன்
திசைகளில் வெளிச்சத்தை
தேடி அடைவதற்கு
என்பதெல்லாம் கட்டுக்கதைகளே

அவை சீரான மத்திம நிறத்தில் நேராக மலரும் சூழலை
கண்டடையவே எத்தனிக்கிறது.

காற்றின் வழி உள்நுழைந்து மகரந்தத்தின் வாசனையை
கலைக்கும் நேரங்களில்
தாமாகவே உதிர்த்துவிடுகின்றது
இழையெனும் இச்சைகளை

மேகங்களின் துளிகளில்
மீண்டும் துளிர்க்கும் பூக்களின் பழைய ஆன்மா
புன்னகைத்துக் கிடக்கிறது
ஒற்றை விண்மீனின் வழியாய்.

***

சிமிழில் அடைபட்ட சில சொற்கள்

மறைத்து வைத்தும், ஒளித்து வைத்தும் நிதம் நிதம்
தட்டுத்தடுமாறி தெளியச்செய்த
இவைக்கான அத்தனைக் காரணங்களையும் நிராகரித்துக்கொண்டு
கூட்டற்றவளாய் இப் பிரபஞ்சத்தோடு லயம்கொண்டுத் திரிகிறேன்.

நிகழ் காலத்தில் இல்லாததும், இறந்தகாலத்தில் போலியுமாய்
சுகித்துத் திரிந்த உன் ஞாபகங்களை அல்ல
ஞாபகத் தவறுகளை;
அளவுக்கு அதிகமாக கொதிக்கும் நீர் ஆவியாவது போல்
என் எண்ணங்களிலிருந்து விலக்கி வருகிறேன்.

மேலும், நான் கூடிய இப்பிரபஞ்சத்தில் தீராத நோவுகளுக்கு துணையாய்
குடியானவனின் கார்காலக் கொண்டாட்டங்களும்,
ஆழந்த உறக்கத்தினூடே அரிதாய் வரும் கனாவில்
வெளிர் மஞ்சள் நிற ஆடை அணிந்த
என் பால்ய தோழியும் முகத்தினோடும்
புத்துணர்ச்சிக் கொள்கிறேன்

வெட்டியப்பின் வெந்நீரூற்றப்பட்ட வேரினை மண்ணரித்தது போல்
மீண்டும் என்னில் துளிர்க்க சாத்தியமில்லாது சிதைந்து போனவனே நீ.
எனினும் சொற்களில் அடக்கவியலாத
இப்பெரும் களிப்பை தந்தது ஒருபோதும் நீயல்ல..!

தேக்கிவைக்கத்தவறி கொட்டிக் கவிழ்க்கப்பட்ட
வென் கோபங்களும் குரோதங்களே;
இதுவும் உனக்கென நினைப்பதிலிருந்து
சற்று விலகி நின்று பார்…

எளிதாய் அறிந்துகொள்வாய்,
இவ்வாழ்வில் அன்பென்பது அமிர்தமல்ல.
நேசிக்கபட்டவரின் வெறுப்பென்பது
வார்த்தைகளால் வதைத்து,
கோபங்களால் துன்புறுத்தி,
சாபங்களால் குத்திக்கிழிப்பதைக் காட்டிலும்…
அதிலிருந்து விலகி எங்கிருந்தேனும்
உன் குரூரக்கண்களில் எதிர்படும் நான்
முழு பிரஞ்சையோடு நீயற்ற வாழ்வும் நிலைதன்மை
கொண்டதை உணர்ந்து
என்னோடு உன்னையும் சேர்த்து சிரிக்கச் செய்வேனாக.

***

மோட்ச வாயிலின் மிதப்புநிலை

வார்த்தைகளை உலர்த்தி அந்தரத்தில் அசைகிறது
நகைப்பின் வழி ஊசல்.

எய்யப்படும் அம்புகளாய் தேகத்தை ஊடுருவி
வழிந்து வெளியேறுகிறது வெயில்.

தூசியினை துடைத்தெடுக்கும் தும்பிகளுக்கு
துணையாகிறது
விரலுரசி அவிழ்த்த கூந்தல்.

பெருவெளியில் பரவிக்கிடக்கும் ஒளி
லார்வாக்கள் உயிர்ப்பித்த சாம்பல் பாறையில்
செந்தனலாய் வியாபித்துள்ளது.

இச்சைகளோடு இமை திறப்போரை தடுத்து நிறுத்த
ஏவலோடு காவலாய் ஞமிலி.

கருத்த இரவு, கூரிய வாள், நாய்களை வேட்டையாடுபவன்
கட்டாயமாய் தேவைப்படுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் ஊசலின் கயிற்றை அறுத்து
அப்சரஸ்களின் ஏகாந்த வாழ்வியலை கட்டுடைத்து சிதைக்க.

ஆயினும் மோட்சம் பெறப்போவதை எண்ணி தாண்டவம் கொண்டு
குலுங்கி விரியும் நிலத்தில் புதைந்துகொண்டே இருக்கின்றனர்
ஒவ்வொரு வேட்டையாளனும்.

***

ரா.த.ஜீவித்தா
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here