Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ரகசிய அந்தரங்கம் அல்லது அந்தரங்க ரகசியம்.

ரகசிய அந்தரங்கம் அல்லது அந்தரங்க ரகசியம்.

தாமரை பாரதி


1.
பறிப்பவர் யாருமற்று
பறித்துச் சூடுவார் யாருமற்று
சரம் சரமாக பூத்துக்கிடக்கின்றன
ரகசியங்கள்

2.
ரகசியங்களைச் சூடும் ஊரில்
கதவுகள் மூடிக்கொள்ளும்போது
அந்தர வெளியில்
மிதக்கத்தொடங்குகின்றன
அந்தரங்கங்கள்

3.
ஒரே சமயத்தில்
சுண்டப்படும்
இரண்டு நாணயங்களும்
ரகசியம் கருதி
அந்தரத்திலேயே நிற்க
விழப்போவது
பூ பூவா,பூ தலையா,
தலை தலையா,தலை பூவா
ஒருபோதும் அறிய முடியவில்லை
ரகசியத்தை

4.
நான் இல்லாத போது
வீட்டுக்கு வரும் போது
வெளியில் பூத்திருக்கும்
ரோஜாக்களிடம் சொல்லுங்கள்
வருகையின் ரகசியத்தை
ரோஜாக்கள் கசிய விடுவது
வாசத்தைத்தானே.

5.
திரி எரிந்து முடிந்து
வெடிக்கும் தருணம்
அறியாதது போலவே
ரகசியம் வெளிப்படும் நேரமும்
ரகசியமானதுதான்.

6.
பாதையின் எல்லா சந்திப்புகளும்
விலகி
ஒரே நேர்க் கோட்டில்
உள்ளது போல
புதிர்த்தன்மையுடன் நகர்வதுதான்
பாதையின் பேருண்மை.

7.
வெளிச்சமிலா குகைகளில்
நேராகப் பறக்கும்
வௌவால்களைப் போல்தான்
காற்றிலாடுகின்றன
சொற்களுக்கான ரகசியங்கள்

8.
மூன்றாவதாக ஒருவருக்குத்
தெரிந்துவிடாதபடிக்கு
விரிந்த விரல்களுக்கிடையில்
மலர்ந்து கிடக்கும்
நீல மலர்களாகப் பொத்திப் பொத்திப்
பாதுகாக்கப்படுகின்றன

2.
கனவு முளைக்கும் மரம்
———————————
கனவின் இருகரங்களில்
இருந்து பிதுங்கி வெளியேறிய
வேர்முட்டொன்றிலிருந்து
வெளியேறும் ஒரேபுழு
தன் அபரிமித வளர்ச்சியில்
கிளைகளாய் பிரிந்து
பெருவிருட்சமென நீள்கிறது,

மனமோ
பால்யத்தில் விதையோடு
விழுங்கிய பழமொன்றைக்
கரதலம் கொள்கிறது.

நனவின் காலமிகுதலில்
என்றோ தவறிய
வேம்பின் முத்தொன்று
அப்பா மரமென
பிணக்குழி மேடு

மர கந்தம் அறிந்தவனின்
அமர உளிகளில்
மகரந்தத்தை தூவிச்செல்கின்றன
பெருங்காமக்காட்டின்
சிறுமலர்கள்

சூலிலைச் சூலகத்துள்
புகுந்த காலவேரென
கிளைத்துக்கொண்டேயிருக்கின்றன
தாப நதியின் கால்கள்.

3
.பறந்து செல்ல முடியாதவர்கள்

கணப்பொழுதும் பிரிவதில்லை
அந்த பதின்மூன்று இணை காதல் பறவைகள்
தராளாமாகப் பறந்து விளையாடுவதற்கான
கூண்டுதான் அது

எல்லோருக்கும் போலவே
எல்லோரையும் போலவே
உணவும் நீரும் வேளா வேளை
வந்து போகும் பகலிரவாக.

கூண்டுக் கதவு திறந்து மூடி
வெளியே சென்றுவரும்
நானும் ஒரு பறவையே

வழியனுப்பும் பறவைகளுக்கு
கையசைப்பை மட்டும் பதிலாக்குகிறேன்

பெருந்தொற்றுகால ஊரடங்கில்
இந்த நகரத்தின் எல்லா வாயில்களும்
அடைபடக் கூடுமென்ற நல்லெண்ணத்தில்
நான் மட்டுமே வெளியேற நேரிடுகிறபோது

பறவைகள் குறித்த கவலை கொண்ட
நீங்கள் வீடு வர நேர்ந்தால்
யாருமற்ற வீட்டின் பறவைகளின் ஒலிகள்
பலவித அழுகுரலாகத்தான் இருக்க முடியும்

தங்கள் அழுகையை நிறுத்த வேண்டுமெனில்
யாராவது அந்த கூண்டின்
கதவுகளை மட்டும் சற்றுத் திறந்து விடுங்கள்

பறக்கத் தெரிந்தன பறக்கட்டும்
நடக்கத் தெரிந்தன நடக்கட்டும்

ஏதும் தெரியாத குஞ்சுகளும் முட்டைகளும்
கணப்பொழுதும் பிரியாது அப்படியே கிடக்க..

தாமரைபாரதி

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular